கழிவறைக்குள்ளேயே அடைந்து கிடந்த அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். அவனைத் தவிர உயிருள்ள வேறெதுவுமேயின்றி வீடு உறைந்துபோயிருந்தது. பண்டபாத்திரம் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தின் மீதும் வெறுமை மண்டியிருந்தது. சன்னல் விளிம்பில் பறவைகளுக்கென்று கிண்ணத்தில் ஊற்றி வைத்திருந்த தண்ணீர் வீணே வெயிலில் சுண்டிக்கொண்டிருந்தது. வேறெவருடைய வீட்டுக்கோ பதுங்க வந்தவன் போல வீடெங்கும் தயங்கித் தயங்கிப் பார்த்து முடித்தான். அவனது குடும்பத்தார் அனைவருமே வெளியேறிப் போய்விட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் அவன் அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்று ஒவ்வொருவரையும் உறவுமுறை சொல்லியும் பெயரிட்டும் அழைத்துப் பார்த்தான். ஒருவரும் வரப்போவதில்லை என்பதும் தெரிந்ததுதான். இருந்தாலும் ‘நீ கூப்பிட்டதும் வந்துடலாம்னுதான் காத்திருந்தேன்’ என்று சொல்லிக்கொண்டு எங்கிருந்தாவது யாரேனும் ஒருவராவது வந்துவிடமாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பு அவனை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. இது தினமும் அவனே நடத்தி அவனே பார்த்துக்கொள்ளும் நாடகம்.
வீட்டைவிட்டு வெளியே வந்தான். அவன் வாசலுக்கு வந்ததுமே வாலையாட்டிக் கொண்டு ஓடிவந்து கும்மாளமாகத் தாவியேறிக் கொஞ்சுகின்ற மணியைக்கூடக் காணவில்லை. ஒருவருமற்றுப் புழுதியும் அடங்கிக் கிடந்த அத்தெருவில் வீடுகள் கேட்பாரற்றுத் திறந்துகிடந்தன. திரும்ப வரப்போவதேயில்லை என்றான பிறகு பூட்டு எதற்கென அவதியவதியாகக் கிளம்பிப் போயிருக்கிறார்கள்போல. வீட்டோர மரத்தடிகளில் ஆடுகளுக்குக் கட்டியிருந்த வேப்பங்குழைகள் காய்ந்து சருகாகி உதிர்ந்து கிடந்தன. அப்படியே தெருவிலிறங்கி காளியாயி கோயில் வரை போனான். கோயிலுக்குக் கிழக்கே இருந்த ஊரின் மற்ற தெருக்களும் இதே ரீதியில் கிடந்ததைப் பார்த்ததும் அவனது துக்கம் பெருகியது. பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த ஊரைவிட்டு மொத்தப் பேரும் வெளியேறிப் போவதற்குத் தான் காரணமாகிப் போனது குறித்து அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பஞ்சம் பிழைக்கச் சுத்துப்பக்க ஊர்களெல்லாம் காலி செய்துகொண்டு பட்டணங்களுக்கு ஓடிய கொடுங்காலத்திலும்கூட முருங்கைக்கீரையை அவித்துத் தின்றுகொண்டு இங்கேயே பிடிவாதமாக இருந்த இந்த ஊர்மக்கள் இப்போது வெளியேறிப் போயிருக்கிறார்கள். பஞ்சத்தைவிடவும் கொடிய வாதையை அவர்களுக்குத் தான் கொடுத்துவிட்டதாக எண்ணியெண்ணி மருகி அழுதான். தன் அழுகையால் திரும்பக் கூட்டிவந்துவிட முடியாத தொலைவுக்கு ஊராட்கள் போய்விட்டார்களா? ஊருக்காக ஒருவன் அழியலாம் என்கிற கருத்து தன் விசயத்தில் எதிர்மறையாகிப் பொய்த்துப் போய்விட்டதே; எவரொருவரும் அழிந்திடாத நிலைதானே சரி என்று இந்நாட்களில் தான் வந்தடைந்த முடிவைத் தனக்குள் சொல்லித் தலையாட்டி ஆமோதித்தான்.
அவனது யோசனையின் பெரும்பகுதியைத் தற்கொலை எண்ணம் ஆக்கிரமித்திருந்தது. ஒருவேளை தான் தற்கொலை செய்துகொண்டால், பிரச்சனை தீர்ந்தது என்று ஊரார் திரும்பி வந்து அவரவர் பிழைப்பைப் பார்த்துக்கொள்வார்கள் அல்லவா? ஆனால், அப்படித் தற்கொலை செய்துகொண்டாலும் அந்தச் செய்தியை ஊராரிடம் போய்ச் சொல்ல யாருமற்ற பாழ்வெளியாய் இருக்கிறதே ஊர்? வீட்டுக்குத் திரும்பி என்ன செய்யப் போகிறோம் என்று ரெட்டைப் புளியமரத்தடியில் குந்தினான். அவனும் அவனது நண்பர்களும் வழக்கமாகக் கூடும் அந்த இடத்தில் இப்போது ஈயெறும்புகூட இல்லை. அவர்களுடன் கழித்த பொழுதுகளெல்லாம் அலையலையாக அவனுக்குள் எழுந்து இனம் புரியாத உணர்வுக்குள் அமிழ்த்தி வெளியே தூக்கி வீசின. பாவம், எங்கே எப்படியிருக்கிறார்களோ! ஒரு வார்த்தைகூடச் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறிப் போய்விட்ட அவர்களை நினைத்து வருந்துவது அவசியமா என்று தோன்றியது அவனுக்கு. தன்னைவிட்டு ஊரே கிளம்பி ஓடியபோது அவனுங்க மட்டும் என்ன செய்திருக்கமுடியும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட சமாதானம் நீண்டநேரம் நீடிக்காமல் அவனை அலைக்கழித்தது. அவனது மனவோட்டத்தின் சித்திரத்தை வரைவதுபோல ஓட்டுச்சில்லால் தரையில் தாறுமாறாக எதையெதையோ கிறுக்கிக் கிறுக்கி அழித்துக்கொண்டிருந்தான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then