மாய்தல்

அனார்

நிமிடங்களுக்கும்​ யுகங்களுக்கும்​ இடையே​
வழிபாடு தொடங்கும்போது​
ரூபமாகவும்​ அரூபமாகவும்​
நெருப்பு எரியட்டும்​

தணல்களை​
ஊதி ஊதிப் பெருக்கிட​
இரை தேடும்​
தீப் பிழம்புகள்​
என் உள்ளங்கையில் இருந்தே​
பிறக்கின்றன​
காற்றைப் பற்றிப் பிடித்தெரியும்​
புல் குருத்துகள்​
வாதையின் உருக்கம் கொள்கின்றன​

கனியாப் பருவங்களின்​
புலர்வை​
மந்தாரமாய்த் தவித்த​
சருமத்தின் கொய்யா வாசனையை​
படையல் இடுவேன்​

அந்நரம்புகளில்​
திரவம் உறிஞ்சும்​
இலை மூடிய​
பச்சைப்புழுவின் தியானத்தில்​
ஊற்று வெளிப்படாப் பாறைகள்​
வெடித்துப் பிளக்கின்றன.

m

நாளையைச் சூழ்ந்திருக்கும்​
அடுக்குச் சுழல்கள்​
அவற்றினுடைய​
வடிவப் பாங்கான பயணத்தின் மேட்டிலும்​
பள்ளத்திலும் கவிந்திருக்கின்றன​

நேற்றின் அடியில்​
புதைத்தவற்றின்​
ஒன்றிலும் துடிப்பில்லை​

சுருள் விரிந்து நகரும்​
மேகங்கள் நிறைந்த​
புலரொளிக் காலமாக உருவாகினேன்.​

புதிய கூவல்களினால்​
தீயொளி மூட்டும்​
பறவைகள்​
புகல்தேடும் திசைகளுக்கு​
விரைந்து வருகின்றன​

வெற்று நிச்சலனம்​
விழுங்கிய நாடித்துடிப்புகளின் ஓசை​
சுவனப் பனியோடுகளில் எதிரொலிக்கிறது.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!