கருப்பு நிறமும் சிறார் கதைகளும்

ச.முத்துக்குமாரி

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் நேர்காணல் ஒன்றை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. முகமது அலி சிறுவயதில் தன் அம்மாவிடம் சில கேள்விகள் கேட்டாராம்.

“ஏன் இயேசு வெள்ளை நிறத்தில் நீல நிறக் கண்களுடன் இருக்கிறார்? ஏன் இறுதி விருந்து ஓவியத்தில் எல்லாரும் வெள்ளையாக இருக்கிறார்கள்? ஏன் தேவதைகளும் மேரியும் வெள்ளையாக இருக்கிறார்கள்?”

‘Tarzan’ கதையில் வரும் டார்ஜன் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறார்? அதில் அவர்தான் காடுகளின் ராஜா. பல நூற்றாண்டுகளாக வாழும் ஆப்பிரிக்கர்கள் காட்டு விலங்குகளிடம் பேச மாட்டார்கள். ஆனால், எங்கிருந்தோ வந்த டார்ஜன் விலங்குகளிடம் பேசுகிறாரே, எப்படி?”

அமெரிக்காவில் எட்கர் ரைஸ் பர்ரோஃஸ் (Edgar Rice Burroughs) எழுதிய ‘Tarzan’ மிகப் பிரபலமான புத்தகம். கற்பனை கதாபாத்திரமான டார்ஜன் குழந்தைகளுக்கு ஏற்ற வடிவத்தில் படமாக, புத்தகமாக, நகைச்சுவை கீற்றுகளாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கறுப்பினத்தவரான முகமது அலி டார்ஜன் குறித்து எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை. ஒரு புத்தகத்தை யாராக இருந்து எழுதுகிறோம் என்பது மிக முக்கியம்.

அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை கொண்டாடிய டார்ஜன் புத்தகத்தை முகமது அலியால் ஏற்க முடியவில்லை. ஏனெனில், அது வெள்ளையர்களுக்காக வெள்ளையரால் அவர்களின் ஆதிக்க உணர்வை விதந்தோத எழுதப்பட்ட புத்தகம். அதை அங்கு அடிமையாக நடத்தப்பட்ட கறுப்பினத்தவரால் ஏற்க முடியவில்லை. எந்த ஒரு கதையும் புத்தகமும் பல்வேறு கோணத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு எழுதும் புத்தகங்களில் இன்னும் அதீத கவனம் எடுக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், இன்னும் நம் தமிழ்ச் சூழலில் சிறார் இலக்கியங்கள் வாசிக்கப்படுவதே இல்லை. அப்படியே வாசித்தாலும் தான் நம்பும் கருத்தியல் இருந்தால் மட்டுமே அதைக் கொண்டாடும் மனப்போக்கு இருக்கிறது. கொண்டாடப்படும் என்கிற நம்பிக்கையில் புரிதல் இல்லாமல் கதைகளில் கருத்துகள் திணிக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. கருப்பு நிறத்தை வைத்துத் தமிழில் எழுதப்பட்ட சிறார் கதைகளைத் தேடித்தேடி வாசித்தபோது, அதிர்ச்சியாக இருந்தது.

பொதுவாக, இந்தக் கதைகளில் ஒரு கருப்பு நிறக் குழந்தையை அதன் நிறத்தை வைத்து யாராவது கேலி, கிண்டல் செய்வார்கள்; அவமானப்படுத்துவார்கள். அந்தக் குழந்தை வருத்தப்படும். யாராவது ஆறுதல் சொல்லி திறமையை வளர்த்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்குவார்கள். அந்தக் குழந்தையும் திறமையை வளர்த்துக்கொண்டு வெற்றி பெறும். கேலி செய்தவர் மனம் மாறி பாராட்டுவார். இம்மாதிரியான (stereotype) சிறார் கதைகளே தமிழில் எழுதப்படுகின்றன.

இதுபோன்ற கதைகளில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் இடம்பெறுவதன் கலாச்சார அரசியலையும் கவனிக்க வேண்டும். குழந்தை கதாபாத்திரம் இல்லையெனில் பறவைகளில் காக்கையை எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலான கதைகளில் கருப்பாக இருப்பது குறித்து காகம் வருந்துவதும், புது நிறம் தேடி அலைவதும், பின்பு அதன் குணத்தின் சிறப்பம்சம் பற்றி வேறொரு பறவை அல்லது விலங்கு பேசியதும் காகம் மனம் மாறி தன் நிறத்தை ஏற்றுக்கொள்வதாகக் கதை முடிகிறது. கருப்பாக இருக்கிறேன் என்று காகம் எப்போது வருத்தப்பட்டது? ஏன் வருத்தப்பட வேண்டும்? ஏன் பச்சையாக இருக்கிறேன் எனக் கிளி வருத்தப்படுவதாக நாம் கதைகள் எழுதுவதில்லை. மனிதர்களின் கருப்பு மீதான ஒவ்வாமையை, நிறப்பாகுபாட்டை ஏன் விலங்குகள் / பறவைகளுக்கு ஏற்ற வேண்டும்?

கருப்பு நிறக் குழந்தை தன் நிறம் குறித்து வருத்தப்படுவதாக நாம் ஏன் முதலில் நினைக்கிறோம்? நிறப்பாகுபாடும், அதனால் எதிர்கொள்ளும் அவமானங்களும் நாம் திணித்த விஷம் அல்லவா? “காக்கா மாதிரி இருக்கான்டா”, “அண்டங்காக்கா கலரு” எனச் சர்வ சாதாரணமாகப் பெரியவர்கள் பேசுவதைக் கேட்டுக் குழந்தைகள் வளர்கிறார்கள். கருப்பு நிறத்தைக் குறையாக, ஏளனமான ஒன்றாக நம்புகிறார்கள். கதைகளிலும் கருப்பு நிறக் குழந்தைகள் வருத்தப்படுவதாகவே எழுதும்போது குழந்தைகள் இன்னும் உள் ஒடுங்குவார்களே. சரி, இதுவரை வருத்தப்படாத ஒரு கருப்பு நிறக் குழந்தை இதுபோன்ற கதைகளை வாசித்தால் எப்படி எடுத்துக்கொள்ளும்? “கருப்பாக இருப்பது ஒருகுறை போல” என நினைக்க வாய்ப்பிருக்கிறது அல்லவா? அதற்காக, தன் நிறத்தை மாற்றிக்கொள்ளவும், வெள்ளையாக இருந்திருக்கலாம் எனவும் ஏங்காதா? ஏற்கெனவே கருப்பு நிறத்தால் வருத்தப்படும் குழந்தைகள் இம்மாதிரியான கதைகளைப் படித்தால், அவர்கள் மனநிலை என்னவாகும்? திறமையாக இருந்தால்தான் இந்தச் சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பும். கருப்பாக இருக்கிறோம் எனத் தாழ்வு மனப்பான்மைக்குள் விழும்.

Illustration : Rafael lopez

சரி, அப்போது திறன் கண்டறியப்படாத குழந்தையின் நிலை? திறமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கருப்பாக இருக்கும் குழந்தையைச் சமூகம் சமமாக நடத்த வேண்டும் அல்லவா? நிறப்பாகுபாடு காட்டுவது எப்படிச் சரியாகும்? நிறத்தில் உயர்வு தாழ்வு பார்க்கும் அற்பகுணம் சமூகத்தினுடையது. அது எப்படிக் கருப்பு நிறக் குழந்தைகளின் தவறாக மாறும்? ஒரு வெள்ளை நிறக் குழந்தைக்கு எந்தத் திறனும் தேவையில்லை. நிறத்தின் காரணமாகச் சமூக அங்கீகாரம் ஏற்கெனவே உண்டு என்பதை மறைமுகமாகச் சொல்கிறோம்.

சமீபத்தில் பார்த்த ஒரு காணொலியில், மூன்று வயது கருப்பு நிறப் பெண் குழந்தை தான் அழகாக இல்லை; கருப்பாக இருப்பதாக அம்மாவிடம் சொல்லி அழுகிறாள். உண்மையில் எத்தகைய தாழ்வு மனப்பான்மையை நிறத்தின் மூலம் நம் குழந்தைகளுக்கு உருவாக்குகிறோம்! இதை நுட்பமாக ஆய்வு செய்யத் தொடங்கினால் அதிர்ச்சியே மிஞ்சுகிறது. இன்றும் வகுப்பறைகளில் கருப்பு நிற மாணவர்கள் மறைமுகமாக ஒதுக்கப்படுகிறார்கள். படிப்பு இல்லாமல் சின்னச் சின்ன திறன்கள் இருந்தும் கருப்பாக இருப்பதாலேயே எந்தப் பாராட்டும் இல்லாமல், வெளிச்சம் படாமல் போகிறார்கள்.

அப்படியென்றால் நிறப்பாகுபாடு பற்றி கதை எழுத வேண்டாமா எனக் கேட்கலாம். எழுத வேண்டும். ஆனால், நாம் எழுதும் கதைகள் நிறப்பாகுபாடுகளைக் கொண்டுள்ள சமூகத்தை நோக்கிக் கேள்வி கேட்க வேண்டும். தன் நிறம் குறித்த பெருமித உணர்வைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். நம்பிக்கையுடன் தன்னை நேசிக்கக் கற்றுத்தர வேண்டும்.

கருப்பு நிறத்தைக் கொண்டாடும் புத்தகங்கள்

ஆப்பிரிக்க – அமெரிக்க எழுத்தாளர்கள் கருப்பு நிறக் குழந்தைகளுக்காகவே கதைகள் எழுதுகிறார்கள். அட்டைப்படத்தில் கருப்பு நிறக் குழந்தைகள் அழகாகச் சிரிக்கிறார்கள். ஆப்பிரிக்க – அமெரிக்க எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை பிப்ரவரி மாதம் முழுவதும் வாசிக்கும் விதமாக Black History Month நடக்கிறது.

பல நூற்றாண்டுகளாகக் கருப்பு நிறம் சார்ந்த அடக்குமுறையைச் சந்தித்த ஆப்பிரிக்க – அமெரிக்க எழுத்தாளர்கள் நிறம் சார்ந்து அடுத்த தலைமுறை குழந்தைகளிடம் புத்தகங்கள் வழி எப்படிப் பேசுகிறார்கள் எனத் தேடியபோது, ‘The skin you live in’ என்ற புத்தகம் கண்ணில்பட்டது. மைக்கேல் டய்லர் குழந்தைகள் பாடுவதற்கேற்ப மிக எளிய மொழியில் எழுதியுள்ளார். கருப்பு நிறத்தைப் புத்தகம் கொண்டாடுகிறது. குழந்தைகள் விரும்பும் கருப்பு நிறத்தில் இருக்கும் சாக்லேட், கோக்கோ, காபி என எல்லா உணவுப் பொருட்களையும் உதாரணப்படுத்திச் சொல்கிறார். “இந்த அழகான கருப்புத் தோலுக்குள்தான் ‘நான்’ இருக்கிறேன்” எனத் தன்னைக் கொண்டாடச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.

அதேபோல மேத்யூ ஏ.செர்ரி எழுதிய ‘Hair Love’ புத்தகம், ஒரு கறுப்பின அப்பா – மகள் இடையிலான உறவைச் சொல்லும் கதை.

ஜூரி என்ற பெண் குழந்தை காலையில் எழுந்து வேக வேகமாகக் கிளம்புகிறாள். அவளின் அம்மாவை மருத்துவமனையிலிருந்து அழைத்து வரும் நாள் அன்று. அவளுக்கு அவளது சுருள் சுருளான முடியை ரொம்பப் பிடிக்கும். முடியைப் பின்னிப் போட்டால் இளவரசி போல உணர்வாள். இரண்டு பக்கமும் முடியைச் சடை போட்டுக்கொண்டால், சாகச வீராங்கனை போல நினைத்துக்கொள்வாள். ஆனால், அன்று முடியைச் சீவ வேண்டும். காணொலி மூலம் அவளே சீவ முயற்சிக்கிறாள், முடியவில்லை. அப்பாவை உதவிக்கு அழைக்கிறாள். அவரும் ஜூரி தலைமுடியைச் சீவி அலங்கரிக்க முடியாமல் தடுமாறுகிறார். ஒரு தொப்பி தந்து அணிந்துகொள்ளச் சொல்கிறார். ஜூரி வருத்தத்துடன் பார்க்க, அவள் அப்பா காணொலி பார்த்து அவளுக்குப் பிடித்த அலங்காரத்தைச் செய்துவிடுகிறார்.

அதில் ஜூரி அழகாக மிளிர்கிறாள். இருவரும் அம்மாவை அழைத்துவர மருத்துவமனை செல்கிறார்கள். இக்கதை வழி கறுப்பினத்தவர்களின் சுருள் சுருளான முடியைப் பராமரிப்பதில் இருக்கும் சிக்கல்களை உணரும் அதே நேரத்தில், சிறுமி தன் தலைமுடியைக் கொண்டாடுவது போல கதை முழுவதும் வரும்.

ஆப்பிரிக்க மக்களைப் பொறுத்தவரை தலைமுடி என்பது அவர்களுக்குத் தலைகிரீடம் போல. இக்கதையை வாசிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அது ஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. தங்கள் தலைமுடி குறித்துப் பெருமிதமாக உணர வைக்கிறது. அதை விட்டுவிட்டு, இந்தத் திறமை இருந்தால் உன் தலைமுடியை ஏற்பார்கள் என்றோ, உன் முடியை நேசிக்கப் பழக வேண்டும் என்றோ வீண் அறிவுரைகள் அள்ளித் தெளிக்கும் கதைகளை ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் எழுதுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இக்கதையை வாசித்துப் பல கறுப்பினப் பெண்கள் ரொம்பவே நெகிழ்ந்தும் மகிழ்ச்சியாகவும் தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எழுதப்படும் கதைகள் அவர்களைப் பலப்படுத்த வேண்டும்; சமூகம் ஏற்றி வைத்திருக்கும் கசடுகள், அறியாமை, பிற்போக்குத்தனமான பார்வைகளை உடைத்தெறிந்து வரச் சொல்ல வேண்டும்.

கருப்பு நிறத்தைத் தாழ்த்திப் பார்ப்பது பார்ப்பனிய மனநிலை அல்லவா? உழைக்கும் வர்க்கத்தின் நிறத்தை அசிங்கமானதாக எழுதுவது நாம் சிந்தனையில் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. இத்தகைய கதைகள் ஏற்கெனவே இங்கே இருக்கும் தவறான பார்வையை வலுப்படுத்துகிறது. மேலும், இதை வாசிக்கும் குழந்தைகளின் மனநிலையை உணர்ந்து செயல்படாததும் கவலை அளிக்கிறது.

வழக்கத்திலிருந்து மாறுதல் (Breaking the stereotype):

இருப்பதிலேயே மிக மிகச் சவாலானது குழந்தைகளுக்குக் கதை எழுதுவதுதான். குழந்தைகளிடம் எதைக் கொடுக்கிறோம், அதை எப்படி அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பதில் அதீத கவனமும் பொறுப்பும் நமக்குத் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு எழுதப்படும் கதைகளில், சமூகத்தில் நிலவும் தவறான கற்பிதத்தைத் தேர்ந்தெடுத்து உடைக்க வேண்டும் என விரும்பினால் மாற்றி யோசிக்க வேண்டும். சமூகத்தின் கருப்பு நிற ஒவ்வாமையை எதிர்த்துக் கதைகள் எழுத வேண்டிய தேவை உள்ளது. தவிர நாம் எழுதும் கதைகள் வழி கறுப்பினக் குழந்தைகளுக்கு நம் கருணையையும், அறிவுரையையும், சமாதானத்தையும் சொல்லத் தேவையில்லை.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!