மருந்து வாசனை

பிரேம்

1

1999ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் பங்கேற்கும்  கட்சியாக மாறியதும் மலர்மன்னன் அதிலிருந்து தனித்துப் போனான். அதற்கான காரணத்தை அவன் தலைமையிடம் விளக்கிச் சொன்னபோது “உங்கள் உணர்வுக்கு நாம் மதிப்பளிக்கிறோம், ஆனால் காலத்தின் தேவையைக் கணக்கில் கொண்டு சில மாற்றங்களைச் செய்தாக வேண்டியிருக்கிறது. பெரும் மாற்றங்கள் தனிமனித உணர்வுகளுக்கு எதிரானதாக அமையக்கூடும். தோழரின் முடிவு மாறும்போது இயக்கத்திற்கு உங்கள் பணி தேவைப்படும்.” என்ற பதிலைப் பெற்றுக் கனத்த இதயத்துடன் வெளியேறினான்.

அதற்குப் பிறகு செய்வற்கு எதுவும் அற்று இடம்பெயர்ந்து அலையத் தொடங்கியிருந்தான் மலர். ஆனாலும் கட்சியின் செயல்பாடுகளையும் தலைமையின் குரலையும் தினம் தொடர்வதை இவனால் தவிர்க்க முடியவில்லை. தான் எடுத்த முடிவு சரியா தவறா என்ற சந்தேகம் சில நாட்களுக்குப் பின் ஏற்படத் தொடங்கியிருந்தாலும் தன் முடிவை மாற்ற முடியாத ஒரு நிலையில் சிக்கிக்கொண்டதாக மலர் உணர்ந்தான். தன்னுடைய தோழன் திருமாறனைச் சந்திக்கும் சமயங்களில் இவனுக்குக் குற்ற உணர்ச்சி  ஏற்படத் தொடங்கியிருந்தது.

பாதியில் விட்டு வந்த ஆய்வுப் படிப்பைத் தொடரலாம் என்ற எண்ணம் வந்தபோது அதிலிருந்த சிக்கல்கள் இவனுக்கு மன உளைச்சளைத் தந்தன. மேற்படிப்புக் காலத்தில் தன்னை ஒதுக்கி வைத்திருந்த துறையில் மீண்டும் நுழைவதற்கு இவனது சுயமரியாதை இடம் தரவில்லை.

மலர் அங்கிருந்து வெளியேறக் காரணமாக அமைந்த விடுதிப் போராட்டம் பற்றிய விசாரணை இன்னும் முற்றுப் பெறாமல் இருப்பதை நண்பர்கள் வழி அறிந்தபோது, இனி அதனைத் தொடர்வது இயலாத ஒன்று என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

விடுதியில் இடம் கிடைக்காமல் தொடக்கத்தில் தன் தோழன் திருமாறனுடைய அறையில் தற்காலிகமாகத் தங்க நேர்ந்தபோது, எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கெனத் தனியிடமும் மெஸ்லில் தனி நேரமும் ஒதுக்கப்பட்டிருப்பதை அறிந்துகொண்டு முதல் வேலையாகத் தன் நண்பர்களை இணைத்து ஒரு போராட்டத்தைத் தொடங்கினான். அப்போதுதான் அமைப்பாக இருப்பதன் தேவையை  மலர் புரிந்துகொண்டான்.

போராட்டத்தின் தொடக்கமாக அம்பேத்கர் பிறந்தநாளை முதன்முறையாக விடுதியில் கொண்டாடவும் அதே நாளில் ஒரு கருத்தரங்கு நடத்தவும் ஏற்பாட்டைச் செய்தபோது நிகழ்ச்சிக்கான இடம் மறுக்கப்பட்டது. ஆனாலும் திறந்தவெளியில் அதை நடத்தியதுடன் மறுநாளே நிர்வாகத்திடம் சாதியடிப்படையிலான வன்கொடுமை நடப்பதை விளக்கி ஆதாரத்துடன் ஒரு முறையீட்டுக் கடிதத்தையும் அளித்தான். “இதுவரைக்கும் எனக்கு இப்படித் தோணலையே மலர்.”  திருமாறன் மலரிடம் குறைபட்டுக்கொண்டான்.

வன்கொடுமை நடக்கிறதா என அறிய ஒரு விசாரணைக் கமிட்டி அமைப்பதாக உறுதியளித்த நிர்வாகம், அனுமதியின்றி கெஸ்டாகத் தங்கியிருந்த மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுத்தபோது மலர்தான் முதலில் பாதிக்கப்பட்டான். வேறு கட்சிகளைச் சேர்ந்த கும்பல்கள் மாணவர்கள் என்ற பெயரில் விடுதியில் கேளிக்கைகளை நடத்திக்கொண்டிருக்க, திருவின் அடுத்த வருட ஹாஸ்டல் அட்மிஷன் தொடருவதும் மறுக்கப்பட்டது.

விசாரணை முடியும் வரை ஹாஸ்டலில் இடமில்லை என்ற நிலையில் இருவரும் உறங்க இடமில்லாமல் தவித்தபோது அம்பேத்கர் ஆய்வு வட்டத்தில் சேர்ந்திருந்த  ஆசிரியர் ஒருவரின் வீட்டில் தற்காலிகமாகத் தங்க மலர் ஏற்பாடு செய்துகொண்டான். அதுவும் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கவில்லை.

நிர்வாகம் அந்த ஆசிரியரை விசாரணைக் கமிட்டியிலிருந்து நீக்கி அவர் மீது கிடப்பிலிருந்த பழைய குற்றச்சாட்டு ஒன்றை மீண்டும் விசாரிக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அது அவரின் நிம்மதியைப் பறித்தது. அவருடைய மனைவிக்கு இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டபோதுதான் அடைக்கலம் கேட்டுத் தொந்தரவு கொடுத்ததற்காக இருவரும் வருத்தப்பட்டார்கள்.

தொலைத்தூரக் கிராமத்தில் நீண்டகாலக் காத்திருப்பிற்குப் பின் கிடைத்த தன் கணவரின் வேலையில் சிக்கல் ஏற்பட்டால் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்பதை எண்ணி அஞ்சிய அவர் அதனைச் சொல்ல முடியாத மனத்துயரத்தைப் பதுக்கி வைத்து நோயின் வசப்பட்டதை அறிந்ததும் அங்கிருந்து வெளியேறி வேறு இடம் தேடினார்கள்.

விசாரணைக் கமிட்டி, அமைதியாகயிருந்த ஹாஸ்டலில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் அவர்களுக்கு இனி விடுதியில் இடம் அளிக்கக் கூடாது என்ற உத்தரவையும் போட்டது.   அவர்களுடன் இணைந்து செயல்பட்ட மாணவர்கள் மன்னிப்புக் கடிதம் அளித்து ஹாஸ்டலில் தொடரலாமென்று முதற்கட்ட எச்சரிக்கையுடன் உத்தரவும் பிறப்பித்தது.

கமிட்டியிலிருந்த ஒரு ஆசிரியர் வெளியே வந்து இவர்களிடம் “உங்களுக்குப் புத்தி மாறவே மாறாது, நீங்களெல்லாம் படித்து என்ன செய்யப் போறீங்க! இனி ரிசர்ச், டீச்சிங்க் என்பதையெல்லாம் மறந்துவிட்டு மாடு மேய்க்கப் போங்க” என்று மிரட்டியதும் மலரின் கை தன்னை அறியாமல் அவர் கன்னத்தில் பதிய ஆசிரியரின் காதிலிருந்து ரத்தம் வழிந்தது.

திருவை அதிலிருந்து விலக்கிவிட்டு, பிரச்சினைக்குப் பொறுப்பேற்று சஸ்பென்ஷன் ஆர்டர் பெற்ற மலர், பல்கலைக்கழகத் தோழர்களைத் தனியே சந்தித்து அமைப்பு ஒன்றைத் தொடங்க முயற்சித்துக்கொண்டிருந்தபோது திருமாறனை நூலகத்திற்குள் வைத்து ஒரு கும்பல் தாக்கியது. மலருக்கான எச்சரிக்கையாக அது இருந்தாலும் திருவின் தலையில் போடப்பட்ட நீண்ட தையல் அவனை அச்சுறுத்திவிட்டது. இரண்டு மாதங்கள் கழித்து நடமாடத் தொடங்கியிருந்த திருவின் பேச்சும் நடவடிக்கைகளும் மாறியிருந்தன, அத்துடன் ஒருவித மறதியும் அவனைப் படுத்தியெடுத்தது.

மிக நேர்த்தியாய் அழகான உடையும் ஷூவும் அணிந்து எப்பொழுதும் லைப்ரரியே கதியாய் கிடக்கும் திரு, வாராத தலையும் அழுக்குமாய் என்ன பேசுவதென்று தெரியாமல் மலரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.  ஏதாவது பேசினால் தலையைப் பிடித்துக்கொண்டு “என் வீடு எங்க இருக்கு, நீயும் வீட்டுக்குப் போய் அமைதியா இரு மலர்” என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். ஒரே புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதை அப்படியே ஒரு பெரிய நோட்டில் எழுதிக்கொண்டிருந்தான். எத்தனை முறை பார்த்து எழுதினாலும் அதனைத் திரும்பப் படிக்க முடியவில்லை என்று அழத் தொடங்கிவிடுவான். அந்த நிலையில் அங்கிருக்க முடியாத திருவை வீட்டில் விட்டு வர கிராமத்திற்குச் சென்றபோது அவனுடைய அம்மாவும் அப்பாவும் என்ன நடந்ததென்று தெரியாமல் பரிதவித்தனர்.

ஒரு காணி நிலத்துடன் வறுமையில்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த அவர்களின் சிறிய வீடு தோட்டத்துடன் அழகாக இருந்தது. வீட்டிற்கு வந்ததும் ஒருநாள் முழுக்கச் சாப்பிடாமல் தூங்கிக்கொண்டிருந்த திருமாறன் மறுநாள் தோட்டத்தில் இருந்த இரண்டு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு மேய்த்து வருவதாகக் ஆற்றுப்பக்கம் கிளம்பியபோது மலர் கதறி அழுதபடி கீழே உட்கார்ந்துவிட்டான்.

அவனுடைய அப்பா “பரவாயில்லைத் தம்பி, கொஞ்சம் நாள் வீட்டில் இருந்தால் சரியாகிவிடுவான் என் கொழந்த. அப்ப மறுபடி வந்து அழைச்சிப் போ, அவனுக்கு நீதான் இருக்க.” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.  வழியனுப்ப வந்த திருமாறன் “இனிமே லைப்ரரி பக்கம் போகாதே மலரு.” என்றதும் மலர் நெஞ்சு வலியுடன் புறப்பட்டு வந்தான்.

புறப்படும் முன் “அப்பா சில நாளில் திரும்ப வந்து திருவை அழைத்துப் போய் டிரீட்மெண்ட் தர ஏற்பாடு செய்றேன்.” என்று அவரை ஆறுதல் படுத்தினான். “ராசா எங்கொழந்தைக்கு என்னதான் ஆச்சி? தலையில இருக்கிற தழும்பப் பாத்தா பயமா இருக்கு சாமி” என்று அம்மா கையைப் பிடித்துக்கொண்டு கண் கலங்கியபோது மலரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. “அம்மா ஒரு சின்ன ஆக்ஸிடன்ட், சீக்கிரம் குணமாகிவிடும், நான் மறுபடி வந்து மாறனைக் கூட்டிப் போவேன்.” என்றான்.

திருமாறன் இவனுடைய கையில் வட்டமான சின்ன ஒரு பொட்டலத்தைத் தந்து “இதை வித்யா கிட்ட கொடுத்துடு, அவளையும் லைப்ரரி பக்கம் போக வேணாம்னு சொல்லு.” என்றான். பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்காமல் வாங்கிப் பையில் வைத்துக்கொண்டு திரும்பி வந்த மலர்மன்னன், முதல் வேலையாக திருமாறனைத் தாக்கியவர்களை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஒரு செயல் திட்டத்தை உருவாக்கிக்கொண்டான்.

சில நாட்களுக்குப் பின் நாளுக்கு ஒருவர் வீதம் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்ட ஐந்து பேருக்கும் ஒரே மாதிரி வலது கை எலும்பு முறிந்திருப்பதைப் பார்த்து ஹாஸ்டல் மாணவர்கள் மிரண்டிருந்தனர். மாணவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் பேசிய மலர்மன்னன் “ஹாஸ்டல் மாணவர்களுக்குப் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது, முன்பு திருமாறன் இப்போது இந்த ஐந்து பேர். இதனைத் தடுத்தே ஆக வேண்டும். அதற்கு மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று உருக்கமாகப் பேசினான்.

இரவு பியர் விருந்து தந்த அவனுடைய தோழர்களிடமிருந்து விடை பெற்றபோது “நமக்கு முகம் இல்லை என்பவர்களுக்கு முகத்தை மறைத்தே பதில் சொல்லுவோம்” என்றவன் அந்நிகழ்வுக்குப் பிறகு பல்கலைக்கழகம் பக்கம் போகாமல் இருந்துவிட்டான்.

2

அதிகம் படிப்பதற்கு ஏற்றபடி டியூஷன் சென்டர் ஒன்றைத் தன் நண்பர்களுடன் உருவாக்கி அதற்கு அடுத்து என்ன செய்வதென்ற குழப்பத்தில் இருந்தபோதுதான் தோழர்களுடன் அந்தப் பேரணியில் கலந்துகொண்டான் மலர்மன்னன். நள்ளிரவு வரை கலையாமல் இருந்த அந்தப் பெருங்கூட்டத்தைக் கண்டு மிரண்டுபோன இவனுக்கு இன்னும் ஒரு வியப்பு காத்திருந்தது. பறையொலி முழங்க காரில் வந்து இறங்கித் தலையைச் சீப்பால் வாரிச் சரிசெய்துகொண்டு அவர் மேடையேறியபோது எழுந்த பெருமுழக்கம் அவனுக்குப் புதிதாக இருந்தது.

மேடையில் ஏறி கைகளை அசைத்ததும் எழுந்த மக்களின் பேரொலியும் அவனுடைய மனதில் கவிந்திருந்த இருண்ட மௌனத்தைக் கலைத்து இன்னோர் உலகத்தை அறிமுகப்படுத்தியது. அதுவரை தன் தோழர்கள் சொல்லக் கேட்டிருந்த நிகழ்வை இவன் நேரில் காண்கிறான்.

மைக் முன் நின்று அவர் கையை உயர்த்திக் காட்டியதும் மெல்ல மெல்ல அமைதி கவிந்தது. “என் உயிரினும் மேலான விடுதலைச் சிறுத்தைகளே” என்ற உச்சரிப்பைத் தொடர்ந்து எழுந்த மக்களின் மகிழ்வொலி இதுவரைச் சிதறிக் கிடந்த தன் மக்கள் திரண்டுவிட்டார்கள் என்பதை மலருக்கு உணர்த்தியது. அன்று பெற்ற அந்த உணர்வும் தெம்பும் மலரை அழைத்துச் சென்ற இடங்கள் அதிகம்.

சில மாதங்களில் மலர் மேடையேறி பேசவும், தனியே கூட்டங்களும் வகுப்புகளும் நடத்தவும் தொடங்கியபோது இனி தன்னுடைய வாழ்க்கை இதுதான் என்ற உறுதியில் ஒரு தெளிவை அடைந்தான். தனக்குள் இருந்த அச்சமும் திகைப்பும் தனியே புலம்பும் நோயும் விலகியது குறித்து வியப்படைந்தான்.

திருமாறனை மீண்டும் சந்திக்கச் சென்ற மலர்மன்னனுக்கு அவனுடைய மாறிய நடத்தைகள் கவலையளித்தாலும் தன்னிடம் அவன் காட்டிய அன்பு நெகிழ்வளித்தது. “நீ இன்னும் உயிரோட இருக்கறது பெரிய ஆறுதலா இருக்கு மலரு, நான்தான் கொஞ்சம் நோயாளியா ஆயிட்டம் போல. தலையில இருக்கிற இந்தத் தழும்பு வேற, பூரான் மாதிரி ராத்திரியில நெளியுதுப்பா.” திருவின் குரலில் இருந்த குழந்தைத்தனம் மலரைத் துயரப்படுத்தியது. இதற்கெல்லாம் தான்தான் காரணமோ என்ற குற்றவுணர்வு அவனுக்குள் உருவாகித் துளைத்தது.

கனத்த மனதுடன் “வா திரு, கொஞ்ச நாள் செல ஊர்களுக்குப் போய் வரலாம்” என்ற மலரிடம் “இப்போ என்ன நம்பி நாலு மாடுங்க இருக்கு, நான் இல்லாம அதுங்க ஏங்கிடும்” என்றான் திரு. அவனுடைய அம்மா கண்ணீரைத் துடைத்தபடி “கொழந்த நீ போய் வாப்பா, அம்மா கொஞ்சநாள் பாத்துக்கிறேன்.” என்றதும் சமாதானமாகி “செல்லங்களா அண்ணன் கொஞ்ச நாள் வெளிய போய் வரேன், அம்மா சொல்றபடி நடக்கணும்.” ஒவ்வொரு மாட்டையும் தடவிக் கொடுத்துவிட்டு மலருடன் புறப்பட்டான். அவனுடைய செயலும் பேச்சும் மலரின் நெஞ்சை அறுத்தன.

போகும் வழியில் “நான் தந்த பொட்டலத்த வித்யாகிட்ட கொடுத்தியா மலரு?” திரு கேட்டபோதுதான் அவன் தந்த பொட்டலம் இன்னும் தன் பெட்டியிலேயே இருப்பது நினைவுக்கு வந்தது. “திரு மன்னிச்சுடுப்பா, கொடுக்க மறந்தே போயிட்டேன். அப்ப இருந்த பிரச்சினையில சந்திக்க நேரமே கிடைக்கல” திருவின் பின்கழுத்தைத் தொட்டு மலர் தன் வருத்தத்தை வெளிப்படுத்தினான்.

“தரலியா மலரு, அதுவும் நல்லதுதான். இப்போ அதைத் தராமல் இருந்ததுதான் நல்லது. பின்னால தேவை வரும்போது தரலாம்.  அதுக்கு உன்ன ரொம்பப் புடிக்கும், எப்பவும் உன்னப் பத்திதான் பேசும். என்னப் பாக்க ஹாஸ்பிட்டல் வந்தப்போ கூட உன்னப் பத்திதான் பேசிச்சி. நீதான் என்ன தூக்கிக்கிட்டு கேட் வரைக்கும் ஓடிவந்து ஆட்டோ பிடிச்சி ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டி வந்ததைச் சொல்லிச்சி.” திரு பேசப் பேச மலருக்குக் கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. திருவின் இப்போதைய நிலைமை வித்யாவுக்குத் தெரியாமலே இருக்கட்டும் என முடிவு செய்துகொண்டான்.

3

திருவுடன் தொடங்கிய பயணம் மலருக்குப் புதிய நம்பிக்கையை அளித்தது. சற்று குழந்தைத்தனமாய் பேசினாலும் புதிய நிகழ்வுகளை உள்வாங்கிக்கொண்டான் திரு. மலர் பேசும் சிறிய கூட்டங்களில் அவனும் மேடையின் ஒரு பக்கமாக உட்கார்ந்து கவனித்ததுடன், அம்பேத்கர் படத்தைத் தன் சட்டைப் பையில் வெளியே தெரிவது போல வைத்துக்கொள்ளத் தொடங்கினான். “படிக்கிறது சிக்கலா இருக்கு மலரு, நீயே எல்லாத்தையும் சொல்லு. அப்பத்தான் எனக்குப் புரியுது” என்றபோதுதான் திருவிற்கு ஏற்பட்டுள்ள உளச்சிதைவின் தீவிரம் மலருக்குள் தீயைக் கொட்டியது.

திருவைச் சிலகாலம் தன்னுடனே வைத்துக்கொள்வதுதான் நல்லது என்று முடிவுக்கு வந்தான். மலர் பேசுவதையெல்லாம் அப்படியே நினைவில் வைத்துச் சொல்லும் திருவுக்கு, முன்பு ஓயாமல் படித்தவை நினைவில் இல்லை, அல்லது அவற்றைப் பேசுவதில் அவனுக்கு விருப்பமில்லை என்பதை மலரால் நம்ப முடியவில்லை.

தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதன்முறையாக தலைவரிடம் திருவை அறிமுகப்படுத்தியபோது அவருடைய கையைப் பற்றி முத்தமாகக் கொடுத்துக்கொண்டே இருந்தான் திரு.  “சரி திரு, தலைவர் மேடை செல்ல வேணும், பிறகு பார்க்கலாம். தலைவர் இங்கேதான் இருப்பார்.” என்று சொல்ல, “தலைவர் சொல்லட்டும் மலர். அவரு என்னோட தெய்வம், அவரு சொல்லட்டும்.” திரு தலைவரின் கையை விடாமல் பற்றிக்கொண்டான்.

மலருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தலைவர் மலரிடம் “தோழர் என்னோட இருக்கட்டும் பரவாயில்லை, நீங்க வாங்க தோழர்” என்று கையைப் பற்றிக்கொண்டு மேடையேறினார். திரு அவருடைய நாற்காலிக்குப் பின் கையைக் கட்டிக்கொண்டு நின்றான். தலைவர் அவனை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். அனைவருக்கும் அது ஆச்சரியத்தை அளித்தது. தலைவரின் கையைப் பற்றியபடி அமர்ந்திருந்தவனின் காதில் தலைவர் ஏதோ சொல்லி நிகழ்ச்சி அமைப்பாளரை அழைத்து அவரிடமும் எதோ  சொன்னார்.

சில நிமிடங்களில் மைக் முன் நின்ற திருமாறன் “நம்முடைய தலைவர் எனக்களித்துள்ள இந்த வாய்ப்புக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். அம்பேத்கருக்கு அடுத்து நம்முடைய மக்களின் விடுதலைக்காக தன்னையே அளித்துள்ள தலைவரை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அண்ணல் அம்பேத்கருடன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டவர். நமது விடுதலைக்காகவே வாழ்ந்த தலைவர்கள்ஞ்” திரு பேசப் பேச மலருக்குக் கண்கள் கலங்கின. பத்து நிமிடம்தான் பேசினான், மனதை உருக்கும் பேச்சு. பேசி முடித்துத் தலைவரிடம் சென்று அவருடைய கைப்பற்றிக் குலுக்கிவிட்டுப் பின்வரிசையில் போய் உட்கார்ந்துகொண்டான்.  மலரால் அதை நம்ப முடியவில்லை.

தனியே இருக்கும்போது தொலைவில் எதையோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் திரு, மேடையில் ஏறிவிட்டால் இருபது நிமிஷங்கள் மிகத் தெளிவாக உணர்ச்சி பொங்கப் பேசுவதைப் பழக்கமாக்கிக்கொண்டான். ஒவ்வொரு முறையும் “என்ன மலரு நான் தப்பா எதுவும் பேசிடலயே?” என்பான்.  மலர் அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு “திரு, எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்குப்பா. ரொம்ப செறிவா பேசின” என்பான்.

திருவிடம் ஒரு புதிய பழக்கம் ஏற்பட்டிருந்தது. அவ்வப்போது மலரிடம் சொல்லிக்கொள்ளாமல் திருச்சிகோ மதுரைக்கோ சென்று தலைவரைச் சந்தித்து வருவான்.  சிலமுறைகள் தொலைவில் இருந்து பேச்சைக் கேட்டதைப் பற்றி இரண்டு மூன்று நாட்கள் பேசிக்கொண்டிருப்பான். அது அவனுடைய புதிய வாழ்க்கையாக மாறியிருந்தது. திருவை முன்பு அறியாதவர்களுக்கு அவனிடம் எந்தச் சிக்கலும் இருப்பதாகத் தோன்றாது என்ற நிலை திருவிடம் ஏற்பட்டிருந்தது.

இயக்கம் தேர்தல் கட்சியாக மாறியதால் வெளியேறப் போவதாக திருவிடம்தான் மலர்மன்னன் முதலில் சொன்னான். “இயக்கமோ கட்சியோ, எனக்குத் தலைவர் சொன்னால் போதும். உனக்குச் சரின்னா அதுபடிச் செய்யி. ஆனா நீ திரும்பி வந்தா நான் சந்தோஷப்படுவேன்” திருவின் பேச்சு உண்மையில் மலரைக் கொஞ்சம் குறுக வைத்தது. ஆனாலும் இவன் இயக்கமாக இல்லாத கட்சியிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முடிவெடுத்தான்.

4

விலகிய பிறகு ஏற்பட்ட தனிமை இவனைச் சில மாதங்கள் முடக்கிப் போட்டது. இயக்கத்திலிருந்தபோது நடந்த போராட்டங்களால் தனது பெயர் சில வழக்குகளில் இடம்பெற்றிருப்பதை அதுவரை பெருமையாக உணர்ந்தவனுக்கு அவற்றை மறைத்துக்கொண்டு உலவ வேண்டிய நிலை உருவாகியதை எண்ணி மலர் குறுகிப்போனான். எதிர்த் தாக்குதல்களில் முன்னே நின்று தன்னைவிட அதிக வழக்குகளில் சிக்கியிருந்த தோழர்கள் அச்சமற்று கட்சியில் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது தனது எதிர்காலமே இருண்ட அறைக்குள் சிக்கியது போல் மனஉளைச்சலுக்கு உள்ளாகி வீட்டையும் ஊரையும் விட்டுப் பதுங்கி அலையத் தொடங்கினான் மலர். திருவைப் பார்ப்பதற்கும் அவனுக்குத் தெம்பில்லாமல் போனது.

சிலமுறைகள் திருவே வந்து மலரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனான்.  இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் திரு கட்சி வேலைக்குக் செல்வதைப் பழக்கமாக்கிக்கொண்டான். அப்போதெல்லாம் மலர்மன்னன் தொண்டை அடைத்துக்கொள்வது போன்று உணர்ந்தான்.

மலருடன் இருக்கும் நாட்களில் திரு கட்சி பற்றியோ அவனுடைய பணிகள் பற்றியோ பேசுவது இல்லை என்பது மலருக்கு மேலும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சமயத்தில்தான் பெங்களூருவில் இருந்த தோழி வித்யாவிடமிருந்து மலருக்கு ஒரு மெயில் வந்தது. திருவுடன் இருந்தபோது வித்யாவுடன் அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது.

திருமாறன் பெரும்பாலான நேரங்கள் நூலகத்தில் இருந்ததால் வித்யாவுடன் அதிக நேரத்தைச் செலவிடவும் பேசவும் ஒரு சூழ்நிலை மலருக்கு ஏற்பட்டிருந்தது. மலர் அங்கிருந்த சில மாதங்களில் இவனுடைய வேலைத் திட்டங்களும் செயல்பாடுகளும் வித்யாவிடம் தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு நெருக்கத்தை வளர்த்திருந்தது. தன்னுடைய சாதி பற்றிய குற்றவுணர்வுடன் அவள் மலரிடமும் திருவிடமும் அன்பும் இரக்கமும் காட்டுவதாக மலருக்குச் சில முறைகள் தோன்றியிருக்கிறது.

மலர் படிப்பைவிட்டுச் செல்லப் போவதாக பேசிக்கொண்டிருந்த நாட்களில் “மலர் உங்களுக்குதான் ரிசர்வேஷன்ற அட்வாண்டேஜ் இருக்கே, படிச்சா வேலை சீக்கிரம் கிடைக்கும். எங்கள மாதிரி கஷ்டப்பட வேண்டியதில்லையே. கண்டினியூ பன்னு” என்று அக்கரையோடு சொன்னபோது மலர் தன் தாடியை அழுத்தித் தேய்த்துக்கொண்டான். இன்னொருமுறை “எங்க பசங்க இன்னும் திருந்தல மலர், அவனுவகிட்ட பேசினா இன்னும் ரெண்டு நூற்றாண்டு பின்னாலதான் இருக்கிறதா தோணுது. நேத்து ஒரு டின்னர். அதுல ஒருத்தன் கேக்கிறான், ‘நீ அவங்ககூட பீஃப் சாப்பிடுவியா’ன்னு, நான் சொன்னேன் ‘எனக்குப் பழக்கமில்ல, அதனால சாப்பிட முடியாது. ஆனால் அவங்க சாப்பிடறத நாம ஏன் தடுக்கனும்?’ அதெல்லாம் அவனுவளுக்குப் புரியாது மலர்.”

வித்யா அன்று தம்மிடமிருந்து தூரமாகிப் போனதாக மலரும் திருவும் உணர்ந்தார்கள். ஆனால், திருவுடைய அறைக்கு வரும்போது மலரிடம் அவள் காட்டிய நெருக்கம் திருவுக்கு முதலில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. திரு இவனிடம் “வித்யாவுக்கு உன்ன பிடிச்சிருக்காம் மலர். உன்னோட வாழ முடிஞ்சா நல்லா இருக்கும், ஆனா சூழ்நிலை எப்படி ஆகுமோ தெரியலன்னு அது சொல்லிச்சி மலர். அது முன்னெல்லாம் இப்படிச் சொன்னதில்ல தெரியுமா?”

“அதுகெல்லாம் நமக்கு நேரமில்ல திரு. நம்ம சிவக்குமரனுக்கு என்ன ஆச்சி தெரியுமில்ல, ஸ்கூல்ல ஆரம்பிச்சி அதுவே வாழ்க்கைன்னு மாறி அடியும் உதையும் போலீசுமா தொடர்ந்து, அவன் இப்ப குடிகாரனா மாறி, ரெண்டு பேரும் பிரிஞ்சிதான் இருக்கிறாங்க.” திருவின் முகம் மாறிவிட்டது.

“அவன் தொட்ட சாதி அப்படி, ஆனா வித்யா வேற இல்லயா.” மலர் திருவைப் பரிதாபமாகப் பார்த்தான்.

திரு ஹாஸ்பிட்டலிலிருந்து திரும்பி வந்த பின் வித்யா அவர்களைப் பொது இடங்களில் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டது அடிக்கடி மலருக்கு நினைவுக்கு வரும். அப்போதிருந்த அரசியல் நிலைகள் அவர்களையும் அவளிடமிருந்து விலக்கி வைத்திருந்தது. ஆனால், அவ்வப்போது வரும் அன்பான மெயில்கள் இவனுக்குள் ஒரு நெகிழ்வை உருவாக்கும்.

இவன் செயல்பட ஏதுமின்றித் திகைத்து நின்றபோது ஏதாவது ஒரு வேலை இருந்தால் அதிலிருந்து விடுபடலாம் என்று தோன்றியது. அந்தச் சமயத்தில்தான் வித்யாவின் புதிய மெயில் வந்து மலரிடம் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. அறிவின் விரிவுகளையும் நட்பின் இதத்தையும் அவளிடமிருந்து அறிந்துகொண்ட இவன், மனித உடலின் மென்மை பற்றியும் முதன்முதலில் அவளிடமிருந்துதான் அறிந்துகொண்டான்.  “நீ ரொம்ப பயப்படற மலர், சும்மா தொடறதாலயும் இதமா அணைச்சிக்கிறதாலயும் நீ ஒன்னும் கன்சீவாகி டாக்டர்கிட்ட போகிற நெலமையெல்லாம் வந்துடாது.” குறும்பாகச் சொல்லியபடி அவன் மீது சாய்ந்துகொண்ட அவளை நிறைய வருஷங்களுக்குப் பின் மீண்டும் சந்திப்பது நல்லதில்லை என்று தோன்றினாலும் தயங்கித் தயங்கி ஒரு மெயிலை வித்யாவிற்கு அனுப்பி வைத்தான். உடனே கிளம்பி பெங்களூரு வரும்படி வித்யாவிடமிருந்து செய்தி வந்திருந்தது.

வித்யா எப்போதோ தன் ஆய்வுப் படிப்பை முடித்துவிட்டு களப்பணிச் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருந்தாள். டில்லியில் பிறந்து வளர்ந்து அதே நிறுவனத்தில் வேறு பிரிவில் வேலை செய்துவந்த சந்திரன் ராமானுஜனைத் தன் வீட்டாரின் விருப்பத்தால் திருமணம் செய்துகொண்டு சமூகவியல் ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள். இந்தியாவின் பல நகரங்களுக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய பொறுப்புகள் அவளுக்கு அளிக்கப்பட்டிருந்தன.

இரண்டே நாட்களில் மலர்மன்னன் தமிழக எல்லைக் கிராமங்களில் களப்பணி செய்து தகவல் சேகரிக்கும் பிரிவில் பணியமர்த்தப்பட்டபோது அவனால் அதை நம்பவே முடியவில்லை. முதல் மாதச் சம்பளம் வாங்கியபோது நீண்ட நாட்களுக்குப் பிறகு பியர் சாப்பிட வேண்டுமென்ற ஆசை அவனுக்கு வந்தது. அன்று மாலை வெளியே செல்ல திட்டமிட்டிருந்தவனை “மலர் முதல் மாசம் சேலரி, டிரீட் இல்லையா? ஹாஸ்டலில் நாம மூணுபேரும் சாப்பிட்டது. எத்தனை வருஷமாச்சி, இன்னிக்கு நாம சாப்பிடறோம்” என்று சொல்லி அதிர்ச்சியடைய வைத்தாள் வித்யா.

“எனக்கு இங்க பழக்கமில்லை. எந்த ரெஸ்டாரண்ட், நீதான் சொல்லனும்.” என்றான். “மலர் ரெஸ்டாரெண்டெல்லாம் வேணாம். ஏழு மணிக்கு எங்க ஃபிளாட்டுக்கு வந்துடு. வில் ஹாவ் டின்னர் வித் டிரிங்க்ஸ். சந்திரனும் இருப்பான்.” மலருக்கு அது இன்னும் ஓர் அதிர்ச்சி. ஆனால், சரியாக ஏழு மணிக்கு வித்யாவின் ஃபிளாட்டில் இருந்தான் மலர்.

அன்று இரவு கொஞ்சம் அதிகமா மது அருந்திவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. காலையில் வித்யாதான் காப்பியுடன் வந்து எழுப்பினாள். “என்ன மலர் முழிக்கிற, இது நம்ப பிளாட்தான். இங்கயே தூங்கிட்ட. ரொம்ப நாளாயிடுச்சியில்ல, அதன் கொஞ்சம் இம்பேலன்ஸ்.” அவன் போர்வையை இழுத்துப்பிடித்து உட்கார்ந்து அவளைப் பார்த்து விழித்தபோது புன்னகைத்தபடி “பயப்படாத, உன் வாழ்க்கையை யாரும் நாசம் பன்னிடல. பத்திரமாதான் இருக்கிற.” என்றாள்.

அடுத்த நாள்தான் அவனுக்கு அந்த வேலையைப் பற்றி ராமானுஜன் சொன்னான். டில்லி செல்ல வேண்டும். அங்கே தரப்படும் சில ஃபீல்ட் ஒர்க்குகள முடிக்கணும். இரண்டு மூன்று மாதங்கள்கூட ஆகலாம். டெல்லி கிளம்புவதற்கு முதல் நாள் வித்யா மலரைச் சந்திக்க அவனுடைய அறைக்கு வந்திருந்தாள்.

“இத திரு உங்கிட்ட தரச் சொல்லி ரொம்ப வருஷமாயிடுச்சி. இப்போ இத தர்றது சரியான்னு தெரியல. ஆனா தராமலும் இருக்க முடியல.” தன்  டிராவல் பேக்கிலிருந்த பொட்டலத்தை எடுத்து அவள் முன் வைத்தான். பச்சை நிறத்தாளில் வட்டமாக மடிக்கப்பட்ட ஒரு பாக்கெட் அது. கொஞ்சம் பழசாகியிருந்தது. “மலர் நீயே திருவப் பத்தி பேசுவன்னு எதிர்பார்த்தேன், நீயும் பேசல நானும் கேக்கல. அது பத்தி எதுவும் பேசாம இருக்கிறதுதான் நல்லதுன்னு நானும் விட்டுட்டேன். திருவ நீ அழைச்சிக்கிட்டு போனப்போ நான் வந்து பாக்கல, ஹாஸ்பிட்டல்லயே அதோட நிலைமை தெரிஞ்சி போச்சி. என்ன செய்யறது. அது இல்லாம உங்கூடவும் பழக முடியல, ரொம்ப நாள் கழிச்சி திரு கட்சியில இருக்கிறது தெரிஞ்சி ஒரு லெட்டர் போட்டேன். ஆனா ஒரேவரியில், ‘தோழர் இப்போ படிக்கிற எழுதுகிற நிலையில் இல்லை என்பதை இந்த முகவரிக்குத் தெரிவிக்கச் சொன்னார்’ அப்படின்னு ஒரு லெட்டர் மட்டும் வந்தது.

மலர் நீயும் வேற ஒரு மனிதனாதான் மாறியிருக்க. இது இப்படித்தான் போகும். சந்திரனுக்கு நம்ப மூணு பேரோட பிரண்ட்ஷிப் தெரியும். அத சொல்லித்தான் உனக்கு இந்தப் புராஜக்ட்ல வேல வாங்கினேன். உன்னோட டிக்னிட்டிக்கு இது குறைவுதான். ஆனா எனக்கு வேற வழியில்ல.” வித்யா அங்கிருந்து போகும்வரை பாக்கெட்டைப் பிரித்துப் பார்க்கவில்லை. அவள் அதைப் பிரிக்காமலேயே வைத்திருப்பாள் என்றுதான் மலருக்குத் தோன்றியது.

5

மலர்மன்னன் கர்நாடகா எக்ஸ்பிரஸில் நியூடெல்லி ஸ்டேஷன் வந்து சேர்ந்தபோது விடியற்காலை நேரமாக இருந்திருக்கலாம், டெல்லியின் பனி மூட்டம் வெளிச்சத்தைத் திரைக்குள் பதுக்கியிருந்தது. மக்கள் கூட்டம், இரைச்சல், ஒலிபெருக்கி ஓசைகள், அறிவிப்புகள், மனிதர்கள் எதிரும் புதிருமாகச் சுமைகளுடன் ஓடுதல், பிளாட்பார்ம்களில் குவிந்து கிடந்த மூட்டைகள், பெட்டிகள், இயந்திரப் பாகங்கள் எல்லாம் பனிமூட்டத்திற்குள் மூழ்கி நிஜமா கனவா என்ற குழப்பத்தை ஏற்படுத்தின. அது ஓர் இரும்புக்காடுதான். நடைபாலங்களில் மனிதர்கள் எதிலிருந்தோ தப்பி வேறு எதிலோ அடைபட விரையும் வெள்ளமெனப் பாய்ந்துகொண்டிருந்தனர்.

கையிலிருந்த ரெக்ஸின் பையில் இரண்டு மூன்று சட்டைகள் ஒரு ஜீன்ஸ் என அதிக எடையற்றச் சுமை.

முதன்முறைதான் என்றாலும் அவனுக்கு அதிக பதற்றம் இல்லை. சந்திரனின் நண்பன் ராஜன் சொல்லியிருந்த தூணைக் கண்டுபிடித்து நின்றுகொண்டான். ராஜன் வர நேரமெடுத்தாலும் பரவாயில்லை என்ற நினைவுடன் பனியை ரசித்தபடி நீண்டநாள்களுக்குப் பிறகு புகையின் சுவையில் லயித்திருந்தான்.

டில்லி மிகவும் பழகிய இடம்தான், ஆனால் இதுவரை பார்க்காத இடம். அவனுக்கான தற்காலிகமான ஒரு டில்லிக்கு ராஜன்தான் அவனை அழைத்துச் செல்ல வேண்டும். அவன் வராவிட்டால் மொழி தெரியாத இடத்தில் என்ன செய்வது? மொழி தெரியாவிட்டால்தான் என்ன? “கையேந்தி நிற்கப் பழகிக்கொண்டால் மொழியோ விழியோ எதுவும் தேவையில்லை. கையேந்த மறுத்ததால்தான் என்னுடைய ஊரில்கூட வாழ முடியவில்லை. எனக்குத் தாய் நாடும் இல்லை, அதேபோல தாய்மொழியும் இல்லைதானே” மலர்மன்னன் இதுபோன்ற தன் மன ஓட்டத்தை அடக்கிக்கொள்ள முயற்சித்தான். ஆனால் ராஜன் வரும்வரை மன ஓட்டத்தை நிறுத்த முடியாது.

மலர்மன்னன் தங்க வேண்டிய இடத்திற்கு ராஜன்தான் அழைத்துப் போவான் என சந்திரன் ராமானுஜன் சொல்லியிருந்தான். எல்லா விவரங்களும் அவனுடைய கையேட்டில் இருந்தன. ஆனால் ராஜன் வந்தால்தான் பெரிய சிக்கல் இல்லாமல் இருக்கும். அதனால் காத்திருக்கத்தான் வேண்டும்.

ஒரு மணிநேரம் கடந்துவிட்டது. இனியும் காத்திருப்பது நல்லதல்ல. மலர் தொலைபேசியில் அழைத்தபோது ராஜன் “வந்துட்டீங்களாஞ் எனக்கு ஒரு எமர்ஜென்ஸி மீட்டிங். வெளிய ஒருநாள் தங்கிக்குங்க, நாளை காலை வந்து அழைச்சிக்கிறேன்.” மலருக்கு அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதுகூட நல்லதுதான், பாரம் குறைந்து இலகுவானான்.

வேறு கேட் வழி வெளியே வந்தால் பாகர்கஞ்ச். மிக மிகப் பழக்கமான இடம், படங்கள் வழிதான். நீண்ட கடைத்தெரு, மனதைக் கொள்ளை கொள்ளும் நிதானமான கூட்டமும் நெரிசலும். எல்லா இடங்களும் கடைகள், அவற்றிற்கு மேல் தங்கும் விடுதிகள். தனக்கான டில்லியைக் கண்டுபிடித்த பின் மனம் லேசானது. சிறிய விடுதி, சிறிய அறை, ஆனால் குளிருக்கு இதமான இடம். குளிக்க ஒரு வாளி வெந்நீர். உடைமாற்றியவுடன் திருவின் ஞாபகம் வந்தது. அவனை அழைத்துப் பேசலாம் எனத் தோன்றியது. ஆனால், மனம் தடுத்தது. ஒரு பகல் ஒரு இரவு, அதற்குள் இந்தப் பகுதியைச் சுற்றி வந்தால் காலம் கடந்துவிடும்.

Illustration : Calvin Sprague

6

காலம் கடந்துதான் போனது. அன்று மறுநாள் தொடங்கிய வேலை மாதக் கணக்கில் தொடர்ந்தது. சத்தீஷ்கர் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ முகாமுக்கு டில்லியிலிருந்து மருந்துகளையும் மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்லும் பணிதான் அவனுக்குத் தரப்பட்டது. வனங்களுக்கருகில் வாழ்ந்த கோண்ட், முண்டா மக்களின் அன்பில் நனைந்த மலருக்கு அந்த வேலை மிகவும் பிடித்திருந்தது. இவன் டில்லியிலிருந்து வேனில் அந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போது இவனது குழுவைக் காவல்துறையோ, படையினரோ மறிப்பதில்லை.

மருத்துவ உதவி மக்களிடம் அரசின் மீது சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. மலருக்கோ அந்தப் பகுதி மக்களின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. சில சமயங்களில் மிகப்பழைமையான ஆயுதங்களை ஏந்திய பெண் பிள்ளைகளையும் ஆண்பிள்ளைகளையும் இவன் சந்திப்பதுண்டு. அவர்களும் மருத்துவச் சிகிச்சைக்காக அந்த முகாம்களுக்கு வந்து போனார்கள். மொழியின் தேவையை இவன் அப்போதுதான் உணரத் தொடங்கினான்.

முகாமில் இருந்த இரண்டு மருத்துவர்களும் மூன்று உதவியாளர்களும் சில தகவல்களைச் சொன்னாலும் அவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பதுதான் நல்லது என்பதை இவனுக்குப் புரிய வைத்திருந்தார்கள். அதையும் மீறி கொஞ்சம் இங்கிலீஷ் பேசக் கற்றிருந்த இரண்டு இளைஞர்கள் இவன் அதுவரை அறியாத பல தகவல்களை மெல்லச் சொல்லித் தந்தார்கள். அவற்றை மூளைக்குள் வாங்கி தூக்கமற்றுப் போவதைத் தவிர்க்க வேண்டும் என இவன் முடிவு செய்துகொண்டான். ஆனால், இவனுடைய மனம் கட்டுப்பட்டாலும் உறக்கங்கள் கட்டுப்படுவதாக இல்லை.

இவனுடைய மூளைக்குள் புதிதாக அங்கு வரத் தொடங்கிய இயந்திர ஊர்திகளின் ஓசை நுழைந்து மேலும் உறக்கத்தைக் கெடுத்தது. அங்கு என்ன நடக்க உள்ளது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், முள்வேலிகள் அங்கங்கே நீண்டு சென்றன. அப்பகுதியில் நடந்த ஒரு கலைவிழாவில் காடும் மலைகளும் அழிந்து மக்கள் வெளியேறி அலையப் போவதை விளக்கும் நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அங்கு நடக்க இருப்பதை உரையாடல்கள் இல்லாமலேயே இவனுக்கு அது புரிய வைத்தது.

அடுத்தமுறை டில்லி வந்தபோது சுபாஷ் ராஜனிடம் அது பற்றிக் கேட்டான். “நம்முடைய வேலை மருத்துவ உதவி மட்டுமே, அதுவும் அனுமதி உள்ளவரை மட்டும்தான்” என்றான். ராஜனை இவனுடைய பயணங்களுக்கு நடுவில் சந்திப்பதே அரிதாக இருந்தது. அனைத்தும் தொலைபேசி வழியும், அவனுடைய உதவியாளர்கள் வழியும் நடந்தன.

ஒரு வாரம் டில்லியில் தங்க நேர்ந்தபோது மருத்துவ முகாம் இனி இயங்க முடியாது என்ற அறிவிப்பை ராஜன் தெரிவித்தான். அதற்கான காரணம் தனக்கும் தெரியாது என்று சொல்லிவிட்டான். அங்கிருந்த ஐந்து பேரையும் உடனே கிளம்பி வரச் சொல்லி தகவல் அனுப்பினான்.

ஆனால், ஒரு பெண் மருத்துவரும் ஒரு ஆண் உதவியாளரும் மக்களுக்கு மருத்துவ உதவிகள் அவசியம் தேவையென்பதால் தாங்கள் வர முடியாது எனத் தெரிவித்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டனர். சுபாஷ் ராஜனின் நிறுவனம் ‘அவர்களுக்கு இனி தாங்கள் பொறுப்பில்லை’ என அறிவித்துவிட்டு அதனை அரசுக்கும் தெரிவித்துவிட்டது. மலர் இனி டில்லியில் தங்கியிருந்து சத்தீஷ்கரில் தனது பணிகள் பற்றிய முழு அறிக்கையை அளித்துவிட்டு அடுத்த புராஜக்டுக்குச் செல்ல வேண்டும் என்ற தகவல் தரப்பட்டது. அங்குள்ள கிராமங்கள், மக்கள் பற்றிய கேள்விப் பகுதிகள் அதில் அதிகம் இருந்தன.

7

மலர்மன்னன் தனியே தங்காமல் ஒரு பேராசிரியரின் வீட்டில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய குடும்பம் மகாராஷ்டிராவில் இருந்ததால் அவர் தனியாக டில்லியில் வசித்துவந்தார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவர் நாக்பூர் பகுதியில் இருந்த தன் வீட்டுக்குச் சென்று வருவதுண்டு. அவருடைய வீட்டுக்கு மலர் முதன்முறை சென்றபோதே, முன்னறையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த அம்பேத்கர், மார்க்ஸ் இணைந்த படத்தைப் பார்த்துத் தனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்வை அடக்க முயன்றான்.

அன்று மாலை பேராசிரியர் தான் மகாராஷ்டிர லிங்காதர் வகுப்பைச் சார்ந்தவர் என்றும் பள்ளிக் காலத்திலிருந்து அம்பேத்கர் இயக்கத்தில் செயல்பட்டுவருவதையும் தயக்கமின்றிப் பெருமையுடன் இவனிடம் சொன்னார். மலர் தயங்கியபடி தன் அரசியல் சார்பையும் வகுப்பையும் சொல்ல, அதனால்தான் இவனை நண்பர்கள் தன்னுடன் தங்க வைத்திருக்கிறார்கள் என்று கூறி மலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார் பேராசிரியர்.  “அவர்களுடைய அரசியல் அப்படித்தான், அதைத் தெரிந்துகொண்டுதான் நாம் செயல்பட வேண்டியிருக்கிறது” என அவர் விளக்கியிருந்தாலும் அவன் உறக்கமின்றித்  தவித்தான்.

அவருடைய சமையலும் அன்பும் மலருக்குத் திருமாறனின் அம்மாவை நினைவுபடுத்தின. அவர் பேசப் பேசத் தலைவரின் நினைவை இவனுக்குள் நிறைத்து மனதைக் கனக்க வைத்தன. இவன் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து திருமாறனுடனே இருந்து அவன் சொல்லும் வேலைகளைச் செய்துகொண்டு இருந்துவிடலாமா என யோசித்தான். ஆனால், திடீரெனக் கிளம்பிப் போய்விட முடியாது எனவும் நினைத்துக்கொண்டான்.

பேராசிரியர் நந்திகர் லிங்காதர் ஏற்பாடு செய்த சிறிய கூட்டங்களில் கலந்துகொண்டது இவனுக்கு ஆறுதலாக அமைந்தது. அவருக்கு இவனுடைய சமையல் பிடித்துப் போன பின் இன்னும் ஆறுதலாக இருந்தது.

ஒருநாள் மலரிடம் “நீ என் நூலகத்தைப் பயன்படுத்தத் தயங்குகிறாய், அதை நான் பார்த்தேன். இனி அது உனக்காகத் திறந்தே இருக்கும்” என்றார். அன்று மலருக்குப் புதிய உலகம் ஒன்று புரியத் தொடங்கியது. அவர் இல்லாத நேரங்களில் புத்தகங்கள். மாலையில் அவருடனான உரையாடல்கள். இவனுக்குள்ளே மாற்றங்கள் தொடங்கின. வடஇந்தியச் சாதிகளின் வடிவம் இவனை அச்சம் கொள்ள வைத்தது.

“மலர்மன்னன் நீங்கள் கட்சியிலேயே இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அது இன்றைய தேவை. எனக்கு அப்படி ஒரு முழுநேர வாய்ப்பு இல்லை. உங்களுக்கு இருந்திருக்கிறது. ஆனால்ஞ்” அவர் ஒருமுறை சொன்னபோது இவன் மிகுந்த துயரமடைந்தான். அந்தத் துயரத்தை அதிகமாக்கிய இன்னொரு நிகழ்ச்சி அப்போது நடந்தது.

சத்தீஷ்கர் வனப்பகுதியில் இருந்த இரண்டு மருத்துவப் பணியாளர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. பேராசிரியர் நந்திகர் அன்று மாலை துயரத்துடன் “அவர்கள் இருவரும் என்னுடைய முன்னாள் தோழர்கள், அவர்களின் அரசியலில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், அவர்களின் சேவை மிக அர்ப்பணிப்பு நிறைந்தது. அதனால்தான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்துவந்தேன். நண்பர்களிடமிருந்தும் நிதி திரட்டி அளித்திருக்கிறேன். மருத்துவ முகாம் அனுமதி மறுக்கப்பட்ட பிறகு நேரடியாக உதவி செய்ய முடியவில்லை. வனத்தில் இருப்பவர்களின் வலி நம்மால் கற்பனை செய்ய முடியாதது. இப்போது இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் வேறு. ஆனால், ஆயுதங்களை வைத்துத் தற்போது ஒன்றும் செய்ய முடியாது என்று தோன்றுகிறது மலர்.”  மலருக்கு மருத்துவப் பணியாளர்கள் இரண்டு பேருடனும் நல்ல நட்பு இருந்தது. அவர்கள் இருக்குமிடம் தெரியாது என்பதை நினைக்க நினைக்க மனம் நடுங்கியது.

“இப்போது இருவரையும் மீட்க வேண்டும். அவர்களுக்குக் குடும்பமும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களை நினைத்தால் நெஞ்சு கனக்கிறது.” புலம்பியபடி பேராசிரியர் உறக்கமின்றி உலவிக்கொண்டிருந்தார்.

மறுநாள் மலருக்கு நிறுவன அலுவலகத்திற்கு வரும்படி தகவல் வந்தது. இவன் போனபோது ஆலோசனைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. இவனுக்கு அளிக்கப்பட்ட உத்தரவு இதுதான். “தற்போதுள்ள நிலையில் பல முடிவுகள் கடுமையாக இருக்கும். ஒரு வேட்டை தொடங்கவுள்ளது. நம்முடைய நிறுவனம் மருத்துவ முகாமுக்கு மருந்துகள் கொண்டு செல்லும் உதவி மட்டுமே செய்துவந்துள்ளது. அதற்கு நிதி உதவி செய்தவர்கள், மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு அளித்துவிட்டு நமது உண்மைத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.”

மலர் அதைக் கேட்டு அதில் தன்னுடைய பங்கு என்ன என விளக்கும்படிக் கேட்டான். “இதுவரை செய்த பணிகள் பயணங்கள் பற்றிய முழு அறிக்கையையும் உடனே ஒப்படைக்க வேண்டும். சில நாட்கள் நிறுவன விடுதியில் தங்கி வேலைகளை முடிக்க வேண்டும். அதற்குப் பிறகு புராஜெக்டில் இருந்து நீங்கி தமிழ்நாட்டுக்குச் சென்று சில மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அடுத்த தகவல் வரும்வரை பெங்களூருவில் சந்திரனைச் சந்திப்பதையும் தவிர்க்க வேண்டும்.”

தில்லி விட்டுச் செல்வதை பேராசிரியரிடம் சொல்ல முயற்சித்த மலர்மன்னனுக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவருடைய எண்ணுக்கு இணைப்பு கிடைக்கவில்லை.  ஒருநாள் அனுமதியின்றி அவருடைய வீட்டுக்குச் சென்றபோது அது பூட்டிக் கிடந்தது. கேட்டுக்கு உள்ளே நியூஸ் பேப்பர்கள் சில பிரிக்கப்படாமல் கிடந்தன. அவருடைய கல்லூரியில் விசாரித்தபோது, ‘விடுமுறை எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் துறைக்கும் வரவில்லை’ என்ற தகவல் கிடைத்தது. மலருக்கு முதன்முறையாக இதில் உள்ள பேராபத்து விளங்கியது.

சுபாஷ் ராஜனிடம் மெதுவாக இதைப் பற்றிப் பேச்சுக் கொடுக்க. “லிங்காதர் சாருக்கு நிறுவனத்துடன் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. இரண்டு முறை மருத்துவக்குழு பற்றிய ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். என்னுடைய நண்பர் வழி அவர் தனியாக தங்கியிருப்பது தெரியவந்து அவரிடம் உதவி கேட்க, உனக்குத் தங்குமிடம் தர உடனே ஒப்புக்கொண்டார், அவ்வளவுதான். உனக்கும்கூட அவரைப் பற்றி எதுவும் தெரியாதுதானே?” ராஜனின் குரல் மாறியிருந்தது. பேராசிரியர் வழிதான் நிதியுதவிகள் கிடைத்துவந்தன என்பதைப் பற்றி ராஜன் எதுவும் குறிப்பிடவில்லை.

8

மறுநாளே மலருக்கு ரயில் டிக்கெட் காத்திருந்தது. ரயில் நிலையத்திற்கு வந்து ரயிலில் ஏற்றிவிட்டுச் சென்ற உதவியாளர் “தொலைபேசியில் ராஜனைத் தவிர யாருடனும் பேசக்கூடாது. தமிழ்நாடு சென்ற பின் வேறு எண் வாங்கிக்கொள்ள வேண்டும்.” ஓர் எச்சரிக்கை போலச் சொன்னார்.

ஒரு குளிர்காலத்தில் டில்லி சென்று இறங்கியவன் கடுங்கோடைக் காலத்தில் அங்கிருந்து புறப்பட்டான். வழிநெடுக பேராசிரியர் நந்திகர் பற்றிய நினைவு அவனுக்குள் குடைந்துகொண்டிருந்தது. தன் குறிப்பேட்டில் இருந்த அவருடைய குடும்பத்தின் முகவரியை எடுத்துப் பார்த்துக்கொண்டான். ரயில் மகாராஷ்டிராவுக்குள் நுழைந்ததும் இறங்கி அந்த முகவரிக்குச் சென்று பார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற, நாக்பூர் சந்திப்பில் இறங்கிவிட முடிவு செய்தான்.

நாக்பூர் ஸ்டேஷனில் மெபைலை ஆப் செய்துவிட்டு அங்கிருந்து நூறு கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்த சிறிய நகரத்திற்குச் சென்றவனுக்கு முகவரியைக் கண்டுபிடிப்பது கடினமாக இல்லை.

மாலைவரை காத்திருந்து வீடு வந்து சேர்ந்த பேராசிரியரின் துணைவியாரைச் சந்தித்தான். அவர் பக்கத்து கிராமம் ஒன்றின் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்துவருவது அப்போதுதான் இவனுக்குத் தெரிந்தது. “பேராசிரியர் இந்த முகவரி தந்தார், நாக்பூர் வந்தேன். அதுதான் பார்த்துப் போகலாம் என்று” சொன்னவுடன் “கொஞ்சம் இப்படி உட்காருங்கள்” என்று சொல்லி உள்ளே சென்று செம்பில் மோர் எடுத்து வந்து தந்தார்.

அதைக் குடித்து முடித்தவுடன் “சார் எப்படியிருக்கிறார்? அடுத்த மாதம்தான் வரமுடியும் என்று சொல்லியிருந்தார். அஞ்சாறு நாட்களாக போன் இல்லை. அவர் அப்படித்தான், இன்றோ நாளையோ கூப்பிடுவார்.” என்று சொல்லிவிட்டு “நீங்கள் தங்கிவிட்டுத்தானே போவீர்கள். நான் போய் குழந்தைகளை அழைத்து வருகிறேன். நீங்கள் இருங்கள். பத்து நிமிஷத்தில் திரும்பிவிடுவேன்.” பேராசிரியருக்கு நடந்த எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதை அறிந்த மலர் உறைந்து போய் உட்கார்ந்திருந்தான். என்ன பேசுவதென்று தெரியவில்லை.

“இல்லைங்க மேடம், இரவு வண்டிக்கு இப்போதே புறப்பட வேண்டும். காலையில் புறப்பட்டு மதியமே வந்துவிட்டேன். உங்க நேரம் தெரியாது மன்னியுங்கள். உடனே புறப்பட வேண்டும்.”

அவர் சற்றே வருத்தத்துடன் “உங்க நேரப்படிச் செய்யுங்கள். சாரைப் பார்த்தால் இந்தமுறை அதிக நாள் தங்கும்படி நான் சொன்னதாகச் சொல்லுங்கள். தோழர்கள் சொன்னால்தான் அவர் கேட்பார்.” மலர் அங்கிருந்து புறப்பட்டு எந்தத் திசை என்று தெரியாமலேயே பஸ் ஒன்றைப் பிடித்து அங்குமிங்கும் கடந்து மறுநாள் காலை நாக்பூர் வந்து சேர்ந்தான். அவனுடைய கைவிரல்களின் நடுக்கம் இன்னும் குறையவில்லை. அடிக்கடி கழிவறை போக வேண்டியிருந்தது.

9

ஊர் வந்து சேர்ந்த மலர் நேராகத் திருவிடம் போனான். அங்கிருந்த நாட்களைக் காய்ச்சல் இருமல் மருந்துகளுடன் கழித்தான். இத்தனை நாள் எங்கிருந்தான் என்பதைத் திருவிடம் சொல்லாமலேயே ஒருநாள் பெங்களூரு புறப்பட்டுச் சென்றவன் வித்யாவின் ஃபிளாட்டுக்கு நேராகப் போய் அழைப்பு மணியை அழுத்தினான்.

ராமானுஜம் மலரை எதிர்ப்பார்க்கவில்லை. வித்யா யார் என்றபடி வெளியே வந்தவள் “மலர் வா, எப்ப வந்த? ஒரு தகவலும் இல்ல, வா உள்ள” என்று இவன் கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றாள்.

சந்திரன் ராமானுஜன் “வித்யா மீட்டிங்குக்கு லேட்டாயிடுச்சில்ல, சாயங்காலம் வரச் சொல்லலாமே” என்றவுடன் “நான்சென்ஸ், மலரைப் பார்த்து எத்தன மாசமாவுது. எங்கோ அனுப்பிவிட்டு என்ன நடந்ததுன்னு தெரியாமலேயே இருந்திருக்கேன். மீட்டிங் எல்லாம் இருக்கட்டும், நீ மட்டும் போய் வா. எனக்கு ரிப்போர்ட் வந்தா போதும்.”

“இல்ல வித்யா” என்று தயங்கியவனிடம் “சொல்றது புரியலையா? நீ போ” அவள் குரலில் கடுமை ஏறியிருந்தது. “சரி அப்ப மலர்மன்னனும் நம்பகூட வரட்டும். திரும்பி வரும்போது ஒன்னா வந்துடலாம்.” ராமானுஜன் குரல் மெலிதாக ஒலித்தது. “சந்திரன், நான் மலரோட பேசி ஒன் இயருக்கு மேல ஆவுது, நாங்க பேசனும். நீ போ, புரியுதா?” வித்யாவின் குரல் வேறு மாதிரி இருந்தது.

ராமனுஜன் வேறு வழியின்றி வெளியே போனான். சில நிமிடங்களில் வந்து காலிங் பெல்லை அடித்து “கார் கீயை மறந்திட்டேன்” என்றான். வித்யா உள்ளே தேடிப் பார்த்து “இங்க இல்லையே” என்றாள். “எங்க போச்சி” என்று தன் லேப்டாப் பையில் தேடி “தேர் இட்ஸ், சாரி” என்றபடி திரும்பிச் சென்றான்.

“மலர் எனக்கு ஒரு மெயில், ஒரு லெட்டர் போட உனக்கு நேரமில்லையா? எங்க போன நீ? என்ன புராஜெக்ட் அது. சந்திரன கேட்டா அது ராஜனுக்குக்குதான் தெரியும்றான், ராஜனைக் கேட்டா நீ ஏதோ இண்டிபெண்டன்ட் புராஜெக்டல இருக்கிறதா சொல்றான். நீ எங்கப்பா போன?” வித்யாவின் கண்களில் ஈரம் தென்பட்டது.

“சரி சாப்பிடலாம் பிறகு பேசலாம்,” வித்யா இவனைச் சமையறைக்குள் இழுத்துப் போனாள். முட்டையை எடுத்துக் கொடுத்து “கலக்கிக் கொடு” என்று திரும்பியவள் திடுக்கிட்டு “என்ன ஆச்சி மலர்ஞ் என்ன இது, ஏன்டா? இதுவரைக்கும் நீ அழுது பாத்ததில்லையேடா!” மலர் வெளியே வந்து வாஷ் பேசினில் முகத்தைக் கழுவி கைக்குட்டையால் துடைத்துத் திரும்பியபோது “மலர் என்ன ஆச்சி” என்ற பதற்றத்துடன் இவனை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தாள்.

மூடிய கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை நிறுத்த முடியாமல் மலர் திணறியபோது முதுகை தேய்த்துக் கொடுத்தபடி “சொன்னாதானே தெரியும், சொல்லு,. அழுகை எதுக்கும் தீர்வில்லைன்னு நீதானே சொல்லுவ. சொல்லுடா என்ன ஆச்சி, எனக்கும் அழுகையா வருது. பிளீஸ்”

மலரின் ஒரு கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக்கொண்ட அவளிடம் பேச ஆரம்பித்தான். “நான் போய் இறங்கியப்போ டெல்லியில் பனி மூட்டம்ஞ். நாக்பூரில் நான் இறங்கியப்போ கடுமையான வெய்யில்” சொல்லி முடித்தபோது வித்யாவின் கைகள் அவன் விரல்களை வலிக்கும் அளவுக்கு இறுக்கிப் பிடித்திருந்தன.

10

மலரும் வித்யாவும் டெல்லி அடைந்து பேராசிரியரின் வீட்டுக்குச் சென்று அக்கம் பக்கத்து வீடுகளில் கெஞ்சிக் கேட்டபோது வித்யாவின் ஹிந்திக்காக சில விவரங்களைச் சொன்னார்கள். “அப்போது மணி பின்னிரவு மூணு இருக்கும். ஒரு வேன் வந்து நின்றது. நாங்கள் சன்னல் வழி பார்த்தபோது புரபஸரை இரண்டு பக்கமும் பிடித்து அதில் ஏற்றினார்கள். சில அட்டைப் பெட்டிகளையும் எடுத்துப் போனார்கள். என்னவென்றே தெரியவில்லை. நாங்கள் மறுநாள் அசோசியேஷன் வழியாகப் போலீஸில் கம்ப்ளைண்டு தரப் போனபோது ‘அவர் சிலருக்குச் சட்டத்துக்கு மாறா அடைக்கலம் தந்திருக்கிறார். பண உதவியும் செய்திருக்கிறார். அவருக்கு உதவி செய்ய யார் வந்தாலும் அவர்களையும் விசாரணைக்காக அழைத்துச் செல்வோம்.’ என்றார்கள். யாரிடமும் எந்தத் தகவலும் சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தி அனுப்பினார்கள். இதுபற்றி நீங்களும் வெளியே சொல்ல வேண்டாம். அவருடைய குடும்பத்துக்கும் இது தெரியாது என்றுதான் நினைக்கிறோம். விடுமுறையில் அவர்களை அவர் அழைத்து வருவார். இந்தமுறை அவர்கள் என்ன செய்வார்கள்? நல்ல குடும்பம், என்ன செய்வது?” வித்யா கீழ் உதட்டைக் கடித்தபடி “உடனே நாம இங்கிருந்து போகனும். நீ இங்க வந்தது ராஜனுக்குத் தெரியக்கூடாது.” என்றாள்.

வித்யாவும் மலரும் நாக்பூர் வந்து பேராசிரியரின் வீட்டை அடைந்தபோது மாலை நேரம். வீட்டில் மங்கலான வெளிச்சம். பேராசிரியரின் துணைவியார் மலரைப் பார்த்தவுடன் “வாங்க நீங்க மறுபடி வந்தது பெரிய ஆறுதல். டில்லிக்குப் போனீங்களா? சார் என்ன சொன்னார், இவங்க உங்க தோழியா? வாங்க” படபடவென அவர் பேசி நிறுத்தியபோது உள்ளே இருந்து ஒரு ஆண்பிள்ளை, பத்து வயதிருக்கலாம், வெளியே வந்து “வாங்க காம்ரேட்” என்று புன்னகைத்தான். “போய் அக்காவ அழைச்சி வா சித்தார்த்.” சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த பதிமூணு பதிநாலு வயதான பெண் பிள்ளை கையில் புத்தகத்துடன் “வணக்கம் காம்ரேட்” என்றாள். வித்யா மலருடைய கையைக் பிடித்துக்கொண்டு நாற்காலியை விட்டிறங்கி தரையில் உட்கார்ந்து தளர்ந்து போய் சுவரில் சாய்ந்துகொண்டாள்.

தண்ணீர் எடுத்து வந்த ஆண்குழந்தை “என்னக்கா” என்றபடி முதுகைத் தடவிக் கொடுத்தான். வித்யாவும் மலரும் எதுவும் பேசவில்லை. “நீங்க ஏதும் பீல்ட் ஒர்க்குக்கு வந்திருந்தா தயங்காம சொல்லலாம். காம்ரேட் சொல்லியிருக்காரு, இதுபோல யார் வந்தாலும் எத்தனை நாள் தங்கினாலும் கவனிக்கணும்னு” வித்யா மலரைப் பார்த்தாள். மலர் “நாங்க நாளை காலை கிளம்பணும்” என்றான். “கொஞ்ச நேரம் இருங்க, சாப்பாடு ஆயிடும். சாப்பிடலாம்” காம்ரேட் உள்ளே சென்றார்.

மகனும் மகளும் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். “அப்பா இந்தமுறை வெக்கேஷனுக்கு எங்களை வந்து அழைச்சிக்கிட்டுப் போகலை, சத்தீஷ்கர் போகணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு, அங்கதான் போயிருக்கணும்.” மகன் சொன்னான். மகளும் “அப்பா எப்பவும் இப்படித்தான், என்ன செய்யறதுஞ்” என்றாள்.

சாப்பிட உள்ளே போனபோது அம்பேத்கர், புத்தர் படங்கள் பெரிதாக இருந்தன. மகன் சொன்னாள் “பாபா என்னோடது. புத்தா அக்காவோடது.”

“அப்ப அம்மாவுக்கு?”

“உள்ள இருக்கு, அது மார்க்ஸ்.”

ரொட்டி தொண்டையில் அடைத்துக்கொள்ள மூச்சுத் திணறிய வித்யா கழுத்தைப் பிடித்துக்கொண்டாள். மகன் தண்ணீர் கொடுத்தான். சக்கர நாற்காலியில் இருந்த பெண் தலையைத் தடவிவிட்டாள்.

இரவு வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த வித்யா கேட்டபோது காம்ரேட் சொன்னார் “அம்ருதா பதினொரு வயசு வரைக்கும் ஓடி விளையாடிய குழந்தைதான். ஒரு போராட்டத்திற்காக மும்பை போய் பேரணியில் கலந்துகொண்டோம், அறிவிப்பு இல்லாமல் தடியடி, கண்ணீர் புகை. கூட்டத்தில் சிக்கிக்கொண்டு திணறியவளின் கால்கள் இரண்டிலும் ரத்தம். ஹாஸ்பிட்டலில் மூணு மாதம் சிகிச்சை நடந்தும் கால்கள் செயலிழந்து போய்விட்டன. இன்னும் சில வருஷம் கழித்து ஆபரேஷன் முயற்சி  செய்யனும். ஆனா, தர்ட்டி பெர்ஸன்ட் பாசிபிலிடிதான்னு டாக்டர்கள் சொன்னாங்க. எங்காவது அப்ரோட் கூட்டிப் போனா அதிக வாய்ப்பிருக்கு.”

இரவு வித்யாவும் மலரும் தூங்கவில்லை. “மலர், புரபஸர் சத்திஷ்கர் போயிருக்கிறதாவே இவங்களுக்கு இருக்கட்டும். நீ என்ன சொல்ற?”

“வேற என்ன செய்யறது வித்யா?”

வித்யா லெதர் கேசைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள். அதற்குள் திரு கொடுத்துவிட்ட பாக்கெட் இருந்தது.

“இன்னுமா பிரிக்கல வித்யா?” மலர் கேட்டதற்கு “என்னவோ பிரிக்கத் தோணல. நீயும் இருக்கும்போது பிரிக்கலாம்ணு தோணுச்சி”

“இப்பவாவது பிரிச்சிப் பாரு. ஏதோ நகைன்னுதான் சொன்னான்.”

“எனக்குத்தான் நகை பிடிக்காதுன்னு அவனுக்குத் தெரியுமே”

“இருக்கட்டும் பிரியேன்”

“நீயே பிரிப்பா”

மலர் அதைக் கவனமாகப் பிரித்தான். இருவரின் முகமும் தழுதழுத்துக் கலங்கியது.

“திருவ போய்ப் பார்த்தா இன்னும் சில மாசத்தில தோழரைக் கண்டுபிடித்து வெளிய கொண்டு வந்துடலாம் இல்லையா” ஒரே சமயத்தில் அதைச் சொன்னபோது வித்யாவும் மலரும் ஒருவர் முகத்தை ஒருவர் உற்றுப் பார்த்துக்கொண்டனர்.

தமிழ்நாடு வந்து சேரும்வரை இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வழிநெடுக பலமுறைகள் வித்யா அதைப் பிரித்துப் பிரித்துப் பார்த்துக்கொண்டே வந்தாள். அது அவளுக்குக்கானது இல்லை எனப் புரிந்தது. என்றாவது ஒருநாள் அவளுடைய மகளுக்குக் கொடுப்பதற்கானதோ எனத் தோன்றியது. பச்சைத்தாள், உள்ளே ஒரு மஞ்சள் தாள், அதற்குள் ஒருவயது குழந்தை அணிவதற்கான ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசுகள்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!