இனி பிறந்தநாட்கள் இல்லை
அம்மா சொன்னாள்,
கடைக்குள் குடையைத் திறக்காதே.
அங்குள்ள ஸ்பகெட்டி சாஸ் ஜாடிகள்
உன் தலை மீது விழுந்து நீ இறக்கக்கூடும்
பிறகு இன்றிரவு பார்ட்டிக்கோ
அல்லது
நாளை பௌலிங் ஏலிக்கோ உன்னால் போகமுடியாது
சோடாவோடும் கேக்கோடும்
உன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக,
தேநீரோடும் பிஸ்கட்களோடும்
நாங்கள் உன் நினைவுதினங்களை அனுசரிக்க வேண்டியதிருக்கும்.
நானும் உன் தந்தையும்
இனிமேல் ஸ்பகெட்டி சாப்பிட முடியாது,
ஏனென்றால் மரினரா சாஸ்
எங்களுக்கு உன்னை நினைவுபடுத்தும்.
m
என் இறந்த தங்க மீன்
செல்ல பிராணியாக
எனக்கொரு முதலை வேண்டுமென ஆசைப்பட்டேன்.
ஆனால் என் பெற்றோர்
எனக்கு ஒரு தங்க மீனை வாங்கித் தந்தனர்.
அது இறந்தபோது
என் அம்மா அதைக் கழிப்பறையில் ஃப்ளஷ் செய்தாள்.
முற்றத்தில் புதைத்தால்
அதை பூனை தோண்டி எடுத்து தின்றுவிடும் என்றாள்.
அடக்கம் செய்த பத்தே நிமிடங்களில்
கழிவறையைப் பயன்படுத்தியதற்காக
என் தந்தை மீது நான் கோபமாக இருந்தேன்.
ஒரு உயிரின் மீது அவருக்கு மதிப்பேயில்லை.
m
அவசர நிலைமை
அம்மா சொன்னாள்,
உன் நீல நிற உள்ளாடையைத் தூக்கி எறிந்துவிட்டேன்.
அதில் ஒரு ஓட்டை இருந்தது.
அது என்னைப் பிரதிபலிக்கிறது.
அது என்னை மோசமாகக் காட்டுகிறது.
எப்போதும் என் மகன்
அதை அணிந்து பிடிபட்டுவிடக் கூடாது.
யாரும் அதைப் பார்க்க முடியாது
என்று எனக்குத் தெரியும்.
ஆனால் உன்னால் உறுதியாக சொல்ல முடியாது.
ஒரு பேச்சுக்கு,
நீயுன் காலை உடைத்துக்கொள்கிறாய்.
அவசர அவசரமாய் நீ ஆஸ்பத்திரிக்குப் போகிறாய்.
நர்ஸ் உன் பேண்ட்டை கழற்றுகிறாள்.
அவள் அதைப் பார்ப்பாள்.
மருத்துவர் ஒரு கட்டுக் கூட போடமாட்டார்,
ஏனென்றால் நீ
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று நினைப்பார்.
நான் உன்னை வளர்த்தது
என்னைச் சங்கடப்படுத்துவதற்காக இல்லை.
நீ குழந்தையாக இருந்தபோது
நான் உனக்குப் பெண் ஆடையை அணிவித்தேன்.
உன் முகத்தில் சுருள் முடிகள் தொங்கிக் கொண்டிருந்தன.
நீ பார்க்க பிரமாதமாக இருந்தாய்.
ஆனால் நேர்மையாகச் சொல்லவேண்டுமெனில்
நீ இப்போது அழகாக இல்லை.
உனக்கு ரொம்பவும் வயதாகிவிட்டது,
இனி எதிலிருந்தும் தப்ப முடியாது.
m
நாயின் மனம்
அவள் சொன்னாள்,
நான் இவ்வளவு காலமாக உன்னுடன் இருப்பதற்கு
ஒரே காரணம்,
நான் உன்னைவிட்டுப் பிரிந்தால் – அது
அன்றாட நடைபயிற்சிக்கும் சாப்பாட்டுக்கும்
உன்னைச் சார்ந்தே வளர்ந்த
என் நாயைக் காயப்படுத்தும்.
அதேசமயம்
எனக்கென நீ ஒன்றுமே செய்யவில்லை
அதிர்ஷ்டவசமாக
என்னாலேயே நடக்கவும் சாப்பிடவும் முடிந்தது
உன்னை இழப்பது
எனக்குக் கடினமாகத்தான் இருக்கும்,
ஆனால் நிச்சயமாக நான் செய்வேன்
ஏனெனில்
ஒவ்வொருமுறையும்
நான் எனது நாய் குரைப்பைக் கேட்கிறேன்.
அது உன்னையே கேட்கிறது.
m
பிரிவது கடினமானது
“நமக்குள் ஒத்துப்போகக்கூடிய
பொதுவான விஷயம் எதுவுமே இல்லை.
இருவரும் முற்றிலும் வேறானவர்கள்.
நாம் ஒன்றாக இருப்பதில் அர்த்தமில்லை” என்றேன்
ஆனால் அவள்
என் கால்சராய் வழியாக
என் குறியைத் தேய்க்க ஆரம்பித்தாள்
சட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது
நாங்கள் இருவரும் விரும்பிய இந்திய உணவு.
l
அமெரிக்கக் கவிஞர் ஹல் சிரோவிட்ஸ் 1940இல் பிறந்தார். இவரது கவிதைகள் உலகம் முழுக்க 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த 5 கவிதைகளும் இவரது ‘அம்மா சொன்னாள்’ (Mother Said) என்கிற நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.