நான் நடுவானில் இருக்கிறேன்
வளிமண்டல அடுக்குகளின் இடைவெளியில்
இவற்றின் பெயர்கள் எனக்குத் தெரியும்தானே
இவை ஸ்ட்ராட்டோஸ்பியரும் மீசோஸ்பியரும்தானே?
இந்த வெளிகளுக்கு இடையில்
சுவாசிக்க முடியாதபடி காற்றின் அடர்த்தி குறைந்திருக்கிறது
சூரிய ஒளி தகிக்கிறது
எல்லாம் காய்ந்து எரிகின்றன
கருகிய பிரெட் துண்டு
தின்ன முடியாதபடி பொடியாகி வீழ்வதுபோல
அந்த மெசேஜ்களை அனுப்புவதற்கான தைரியம்போல
சரியான வெண்ணெய், இறைச்சிக்கேற்ற சீஸ்,
உரையாடல்கள் இல்லாத காலை உணவு
திரையிலிருந்து எழுத்தெழுத்தாய் அழித்து
அழைக்காமல் தடுத்துக்கொள்கிறேன்
சுவாசமில்லை
அசைவில்லை
இருப்பை இப்படித்தான் அறியமுடியும்
உடல்செயல்பாடுகளை நிறுத்தினால்
சட்டென்று ஒரு விழிப்புணர்வு
உடல் இதோ என்று
அதன் இல்லாமையைக் கூர்ந்து கவனிக்கும்
படுக்கையின் கசங்காத பாதி
பயன்படுத்தாமல் காய்ந்திருக்கும் டூத்பிரஷ்
தூக்கத்தின் திரை மறைத்த கண் வழித் தெரியும் மகிழ்ச்சி
இல்லாது இனி தனித்துத் தூங்குதல்
திரையிலிருந்து எழுத்தெழுத்தாய் அழித்து
அழைக்காமல் தடுத்துக்கொள்கிறேன்
இந்த மேகம் கரைந்த பின்
நினைவுகள் அழிந்த பின்
உடல் வீழும்
வீழ்ந்துகொண்டே
அசையும்
விழுவது
மீண்டும் வாழ்வது
போல் தோன்றும்
அதனால்தான் நான் பிஸியாக இருக்கிறேன்
கீழே சென்றுகொண்டிருக்கிறேன்.