பெருங்காவியம்

கிரிசாந்

“மேகங்களால மண்ணுக்கு வர முடியாது எண்டு சொல்லுறது ஒரு நம்பிக்கை. ஆனா மண் மலையென முளைச்சு மேகங்களைப் போய்த் தொட முடியுமெண்டது கவிதை. பறந்துகொண்டிருக்கிற ஒண்டை இங்க இருந்து போய்த் தொட முடியும். ஆனா நான் ஏன் அதைச் செய்ய வேணும்?” என்றேன்.

ஏழு மின்மினிப் பூச்சிகளும் சிறகடித்து பச்சைப் பொட்டுகள் ஒளிர முகம் போல எழுந்து என் நிலைக் கண்ணாடியில் ஒரு முகம் போல ஆகின. அது ஒரு பெண் முகம்.

“உன்னைப் போல ஒருத்தி இந்த மண்ணில் ஆயிரமாண்டுகள் பிறக்கவில்லை முத்தே, நீயேன் உன் உயிரை மாய்த்துக்கொள்ள விழைகிறாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்றாள் அவள்.

“ஏன்?”

“இந்தப் பட்டினத்தில் ஆயிரமாயிரமாண்டுகளாக நிகழ்ந்துகொண்டிருக்கும் காலச்சுழலை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போதுதான் முதல் முறையாக அது தன் பெருங்கனவுக்காகக் குடிகளைத் திரட்டிக்கொண்டு குருதி சிந்தத் தலைப்பட்டுள்ளது. உன் கனவுப் பட்டினத்தை உன் சொற்கள் பாடின அல்லவா?”

“ஓம். நான் அதை எல்லாத்துக்கும் மேலா நினைச்சன். என்னை விடப் பெரிசெண்டு நினைச்சன். ஆனா அது ரத்தம் குடிக்கிற பேய். சின்னப் பிள்ளையின்ர தலையக் கேக்கிற வேள்வி. இத என்னால பாக்கவே முடியேல்ல. இத்தினை உயிரக் குடுத்து நாங்கள் அடையப் போற விடுதலைக்கு என்ன பொருளிருக்கும். நீயே சொல்லு. மனுசர் இல்லாத பட்டினத்தில பேயளுக்கா நாங்கள் விடுதலை வாங்கிக் குடுக்கிற?”

அவர்கள் சிரிக்குமொலி வெள்ளம் பொங்கிச் சிரிப்பது போலிருந்தது. கண்களென அமைந்திருந்த இரண்டு பூச்சிகள் என் மேலே பறந்துகொண்டு என்னைப் பார்த்தன.

“அனைத்துக்கும் ஒரு ஊழிருக்கிறது பொன்னே, நீயே அதன் முதல் தீர்க்கதரிசி. உன் தீர்க்கதரிசனம் நிச்சயம் இந்த மண்ணில் பலிக்கும்”

“நானாஞ்? நான் என்ன சொன்னேன்?” எனப் பதறியது நாக்கு.

“இந்தப் போர் குருதிச் சேற்றில் சென்று முடியுமென்பதை நீ உன் கனவுகளில் கண்டாய் அல்லவா? இளம் பிள்ளைகளும் பெண்டிரும் மூத்தோரும் குருதி கொப்பளிக்கக் கிடப்பதை உன் கனவுகள் உனக்குக் காட்டின இல்லையா?”

“ஓம்”

“அதுதான் நிகழப் போகிறது. உன் சொற்களில் எழுந்த ஆவேசம் அந்தக் கனவுகள் கொடுத்ததுதான். உன் கனவுகள் பலிக்கப் போகின்றன”

“இல்ல.. அப்பிடி ஆகவே கூடாது. அய்யோ.. எத்தினை பெரிய மனுசச் சாவுகளை நான் கண்டன். வாழ்க்கையள் எல்லாம் சிதறி முடிவேயில்லாமல் இரத்தம் கடலாகி.. அய்யோ.. நினைச்சுப் பாக்கவே முடியேல்ல.. ஆனா அது எதுவும் இப்ப தொடங்கேல்ல.. ஆனா அப்பிடியே உண்மை மாதிரிக் கனவுகள்..  வேண்டாம்ஞ் நான் சாகேல்ல.. நடு ரோட்டில போய் நிண்டு கத்திறன்.. இதை நிப்பாட்டுங்கோ எண்டு விசரி மாதிரிச் சட்டையக் கிழிச்சு அம்மணமா நிண்டெண்டாலும் கத்திறன்ஞ் எழுதிறன்.. ஆயிரமாயிரம் சொல்லில அதை நான் எழுதிறன்ஞ் விளங்கப்படுத்திறன்.. கெஞ்சுறன்.. மண்டாடுறன்.. யுத்தம் வேண்டாம்.. அது எங்கட பிள்ளையளின்ர ரத்தத்துக்குதான் வந்திருக்கு” நாக்குத் தழுதழுத்து, கண்ணீர் தொண்டையை எரித்துக்கொண்டு மூக்கில் பொரிந்து கண்ணால் வழியத் தொடங்கியது. ஒரு மின்மினி எழுந்து பறந்து வந்து என் தோளில் அமர்ந்து கொண்டது.

“இல்லை மணியே, உன்னால் அது முடியாது. இங்கிருக்கும் எவராலும் முடியாது. யுத்தத்தில் முதற் பலி உங்கள் தலைகளே. உங்கள் சொற்களையே வேறு எதை விடவும் அவர்கள் அஞ்சுவார்கள். தீர்க்கதரிசியின் சொற்கள் நிறைவேறினால்தான் மெய். உன்னுடைய கடன் முடிந்தது. நீ இனி உன் சொற்களின் மூல அமைதிக்குத் திரும்பலாம்”

“இல்ல.. ஒரு வழியாவது இருக்கும்.. சில காதுகளாவது கேட்கும்.. சிலருக்காவது விளங்கும்..”

“மெய்தான். ஆனால் பயனில்லை. நாங்கள் பார்த்துவிட்டோம். உன்னைப் போலவே.

இந்தப் பட்டினத்தில்தான் நாங்கள் ஏழு பேரும் சகோதரிகளாகப் பிறந்தோம்.

நாங்கள் எழுவரும் ஏழு பருவங்களில் மண் புகுந்தோம். அக்காலத்தில் பெரும் போர்களில்லை. நாங்கள் பிறந்தபோது குடிகள் இதை விட எளியவர்கள். அன்றாடம் பணி செய்து, காற்றுக்கும் மழைக்கும் நோய்க்கும் அஞ்சி வாழ்ந்தார்கள். கிழங்குகளையும் கனிகளையும் கஞ்சியையும் உண்டனர். வணிகர்கள் பொருட்களைக் கைமாற்றும் ஒரு அங்காடிதான் இந்த நிலம். கொஞ்சம் கொஞ்சமாக உழுது, பயிரிட்டு, பண்டங்கள் மாற்றி, தெய்வங்களை நட்டுத் தொழுது வாழ்ந்த சிறு குடி. கலங்கள் கரை சேர்ந்து புதியவர்கள் வந்தும் சென்றும் கொண்டிருப்பார்கள்.

நாங்கள் ஏழு பேரும் ஏழு நாச்சியார்கள் என அழைக்கப்பட்டோம். ஏழு கிராமங்களை ஆண்டோம். எங்களது தந்தை அப்போது இந்தப் பட்டினத்தில் முதல் முறையாகக் குடிகளை ஒருக்கி ஒரு படையை உண்டாக்கினார். வேளாண் பெருக்கினார். தொலை தேசங்களிலிருந்து ஆ கொணர்வித்துப் பட்டிகள் புரந்தார். இங்கு எல்லாமே அப்போது மண்ணாலானவை. மண்பட்டினங்கள். குடிசைகளே எங்கள் வீடுகள். அரண்மனையில் கற்களைக் கொண்டு சுவர்களை எழுப்பினோம். நீதியை ஓலையில் எழுதினோம். முறைமைகளைப் பழக்கினோம். குடிகள் மெல்ல மெல்ல அரசுக்குப் பழகினார்கள்.

ஏழு பேரும் ஏழு கிராமங்களையும் புரந்தோம். தென்னிந்தியாவின் சிற்றரசர்களுடன் மணம் புரிவதன் மூலம் அரசைப் பலப்படுத்தத் தந்தை விழைந்தார். எங்கள் ஏழு கணவர்களும் சொல்லி வைத்தது போலத் துட்டர்கள்.

கிராமத்தில் பெண்களை அள்ளி வந்தனர். உறவு கொண்டனர். கசக்கி வீசினர். என் தந்தை கலங்கினார். நோயுற்று மாண்டார். அதன் பிறகு சிம்மாசனச் சண்டை வலுத்தது. ஏழு பேரும் போரிட்டார்கள். போரென்றால் நீ இப்போது பார்ப்பதும் கேள்விப்படுவதும் போன்ற பெரும் போர்களல்ல. நஞ்சு கொடுத்துக் கொல்வது, பாம்பைத் தீண்டவிடுவது, மறைந்திருந்து தாக்குவது, துயிலில் பாறையால் தலையைப் பிளப்பது என்று நினைக்கவே இன்று அஞ்சும் கொலைகள். ஏழாவதாக எஞ்சியவனை நாங்கள் ஏழு பேரும் எங்கள் வாளால் வெட்டிக் கொன்றோம். அவன் குருதியைச் சிம்மாசனத்திலிருந்து துடைத்துவிட்டு எழுவருமாக அமர்ந்தோம்.

எம் வாழ்நாளை குடிகளுக்கும் மகவுகளுக்கும் அளித்து நோன்பு நோற்றோம். நெடுங்காலம் எங்கள் அரசு குறையின்றி அமைந்தது. பின்னர் மூத்தவளிலிருந்து இளையவள் வரை ஒவ்வொருவராக மண் நீத்தோம். ஆனால், நாங்கள் மண்ணை விட்டு அகன்று விண்ணேக முடியவில்லை. எங்களுக்குள் தணியாத கனவொன்று எரிந்துகொண்டிருந்தது. ஏழு பேரும் ஏழு புழுக்களாகத் தாமரையொன்றில் பிறந்து கண் விழித்த போதும் அந்தத் தீ எங்களில் இருந்தது. ஏழு பன்றிகளாகத் தொழுவத்தில் பிறந்தபோதும் இருந்தது. ஏழு ஏழு மிருகங்களாகவும் பறவைகளாகவும் பூச்சிகளாகவும் பிறந்து கொண்டேயிருந்தோம். இந்த நிலத்தில் தணியாத எங்கள் கனவைக் காணக் காத்திருந்தோம். அதுவே எங்கள் மோட்சம் என அறிந்துகொண்டோம். கைகளில் தண்டம் ஏந்திய இளைய துறவியொருத்தன் எங்களைக் கண்டு சொன்னான், முந்நூறு ஆண்டுகளில் எங்கள் கனவு பலிக்கும் என்றான். அவனது சொல்லே எங்களது தீயை மேலும் பெருக்கியது. குன்றாது நாங்கள் எங்கள் கனவைக் குழந்தைகளின் கனவில் நட்டு வளர்ந்தோம். நாங்களே உனது கனவிலும் வந்தோம். உன் சொற்களில் எரிந்த தீ எங்களது நெடுங்காலத் தவம்” என்றாள் அவள்.

“என்ன சொல்லுறியள். நான் நம்ப மாட்டன். இங்க நடக்கிற, நடந்த எல்லாமும் ஒரு கனவுக்கா..? ஒரு தேசத்துக்கா..? இல்ல.. இதை நான் நம்ப மாட்டன்.. எல்லாம் எண்டைக்கோ எழுதி வைச்சதெண்டால் வாழ்க்கைக்கு என்ன மதிப்பு? உயிருக்கு என்ன மதிப்பு?”

காற்றில் இனிய சோகம் படிந்திருக்க அவள் சொன்னாள்.

“நாங்களும் அதைத்தான் பிறவிகள்தோறும் பிறந்து மடிந்து மீண்டும் பிறந்து கேட்டுக்கொண்டேயிருந்தோம். ஆனால் அது அப்படித்தான் ஒவ்வொரு முறையும் எங்களை மீறி நிகழ்ந்தது. ஊழின் தறியை நெய்யும் கரங்களின் நடனம் அலகிலாதது. அதை அறியவே முடியாது. ஆனால் அதை நீ உணரலாம். நீ உணர்ந்தாய். நாங்கள் அதை அறிவோம்.

நீ பிறந்து தவழ்ந்து உடல் பிரட்டியபோது நாங்கள் உன்னுடனே இருந்தோம். நடைபழகு வண்டியில் கால் வைத்தபோது மகிழ்ந்து கூச்சலிட்டோம். நீ துவிச்சக்கரங்கள் பூட்டிய வாகனத்தில் கெந்தியேறியபோது உன்னைச் சுற்றி வண்ணத்துப்பூச்சிகளாக மிதந்தோம். நீ கவிதை பயின்ற போது உன் நுனிவிரல் அசைவைக் கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தோம். நீ காதலில் தித்திக்கையில் நாங்களே உன் மீது அவிழ்ந்து கொட்டிய சரக்கொன்றைகள்.

எங்களுக்குப் பல்லாயிரம் மகள்கள். ஒவ்வொரு கருப்பைக்கும் நாங்களே காவலிருந்தோம். ஓரோர் அடியாக அவர்களது முழு வாழ்வையும் நாங்களே வாழ்ந்தோம். நாங்களே காதலித்தோம், கலவி கொண்டோம், கருவில் ஒளியெனப் புத்துயிர் கண்டோம், போரிடக் கற்பித்தோம், எங்கள் வாளைச் சுழற்ற கனவில் பயிற்றுவித்தோம், நூல் பயில வைத்தோம், காவியங்கள் புகட்டினோம், மோத உந்தினோம், வெல்லச் செய்தோம், மடியக் கண்டு நொந்து அழுதோம். ஆனால் முடிவேயில்லாமல் சுழன்று கொண்டிருந்த வாழ்க்கையின் நெறிகளை அப்பால் நின்றும் பார்த்தோம். அது எளிய நடனம் போலத் தோன்றும். மெல்ல அடியெடுத்துச் சபை நுழையும் மடந்தை போல. பிறகு அது உக்கிரத்தை அடைந்து உச்சம் பெறும், அங்கிருந்து வீழ்ந்து அடங்கி மீண்டும் தாளமின்மைக்குத் திரும்பும். அதை நீ என்ன சொல்வாய்! அதுவே இதன் தர்மம். முற்றாடல்.

நீயும் முழுவதும் வாழ்ந்தாய். உன் ஒவ்வொரு குருதித் துளியும் துடிக்கத் துடிக்க நீ மானுடரை நேசித்தாய். அவர்களின் விடுதலைக்கென உன் நெஞ்சை எரித்துச் சொல்லை ஆக்கினாய். கனிந்தாய், அவர்களின் கீழ்மைகள் கண்டு துக்கித்தாய், அவர்களின் மேன்மைகள் கண்டு விகசித்தாய். நீ உன் கருப்பையை நெஞ்சில் ஏந்தியவள். உனது கனவே இங்குப் பலிக்கும்.

நீ ஒரு முதற் சொல். பல்லாயிரம், பலகோடி வாழ்வுகள் கொப்பளிக்கும் இந்தப் பேராற்றில் நீயொரு துளி. நாங்களும் அவ்வாறே. இது அனைத்தும் யாரோ ஒரு கை எழுதப் போகும் பெருங்காவியத்தின் வரிகள். நானும் நீயும் அந்தக் கையின் பாத்திரங்கள். இப்பொழுதுதான் இந்த நிலம் குடிகளின் கனவினால் திரண்டு உக்கிரமாகியிருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளின் கனவு அது. ஆனால் கனவுகளோ தேசங்களோ பொருட்டில்லாத ஒரு கை உன்னையும் என்னையும் எழுதக் காத்திருக்கிறது. அதில் சென்று பாத்திரங்களாக நின்று எழவே நாங்கள் பிறந்து அலைய ஊழ் கொண்டிருக்கிறோம்”

அதிர்ந்தேன். நெஞ்சம் உடைவது போல வலி பெருகியது.

“என்ன? கதையா? வெறும் கதைக்காகவா அனைத்தும்? இத்தனை ரத்தமும் சிந்தப் போவது கதைக்காகவா?”

“இல்லை. காவியம். பெருங்காவியம்”

“உங்களுக்கு இரக்கமே இல்லையா? இது எல்லாம் யாரோ எழுதப்போகும் பெருங்காவியத்திற்கா? என்ன ஒரு முட்டாள்தனம். நீங்கள் சொல்வது எல்லாம் பொய். அப்படி இருக்கவே முடியாது. ஒருக்காலும் இருக்காது. அது எத்தனை பெரிய காவியமாக இருந்தாலும், இது எல்லாம் அதற்கு ஈடு வைக்கக் கூடியதா? அத்தனை பிள்ளைகளின் தலைக்குருதி கொடுத்து ஒரு காவியத்தினால் என்ன பயன்? விடுதலையின் பொருள் வெறும் கதைதானா! வெறும் கதைதானா?” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே ஆக்ரோஷமானேன். உடல் நடுங்கிக் கண்ணீர் கொப்பளித்தது. கைகள் முறுக்கிக் கொண்டு இறுகின. நிலைக் கண்ணாடியிலிருந்து அவர்கள் எழுந்து பறந்தார்கள். சிறகசைத்தபடி ஒளிப்பெருக்காகினர். எழுவரும் என் முன்னே தோன்றினர்.

மூதாதையெனச் சடையுரித் தோற்றமும் தீர்க்கமான நோக்கும் கொண்ட கனிந்த முகமுள்ள அஞ்ஞை முதலாமவள். கருப்பையின் இருட்டெனக் காக்கும் ஓர்மத்துடன் இருளே முகமான ரூபதை இரண்டாமவள். முழுதும் ஒளியென்றாகி இனிய நறுமணமும் பேரழகும் கொண்ட சீதளை மூன்றாமவள். உக்கிரமே அழகென்றாகி நெருப்பின் தீச்சுடர்கள் மூசியெரியும் சினமே முகமான உக்கிரை நான்காமவள். கனவும் பித்தும் ஒன்றை இன்னொன்று கவ்வ வேட்கை ததும்பக் காமம் நுரைக்கும் முகம் கொண்ட தாபதை ஐந்தாமவள். தாயின் பெருங்கருணையுடன் மார்புகள் பாலூற கண்ணீரின் ஒளிமுகம் கொண்ட கனிஞ்ஞை ஆறாமவள். எதிலும் நோக்கிலாத அனைத்திலும் உள்ளூறிப் பெருகும் இன்னதென்றில்லாத உவகை கொண்ட அருளலே முகமான உதி ஏழாமவள்.

Illustration : artist Matt Manley

நான் கட்டிலில் இருந்து எழுந்துகொண்டேன். என் கைகள் கூப்பவென எழுந்தெழுந்து அடங்கின. அவர்களின்  பெயர்கள் நான் எப்போதும் அறிந்தவை. அவர்களின் ஒவ்வொரு முகமும் நான் நெடுங்காலம் அறிந்தவை. என் காலத்திற்கும் அப்பால் நீண்டு பல்லாயிரமாண்டுகளாக நான் அறிந்தவை. நிலை கொள்ளாத பேரழகு என் முன்னால் ததும்பி நிறைந்து ஒளிச்சுழல்களாகியது. நான் விம்மினேன், கரைந்தேன். அவர்களின் எல்லா முகங்களும் ஒரு கணத்தில் ஒன்றேயாகின. அது என் முகம். என் கனவுகளில் நான் காணும் என் அந்தரங்க முகம். அவர்களது முகங்கள் அவர்களின் உச்ச கணத்தில் பெருகிக்கொண்டேயிருந்தன.

மூத்தவள் என்னைப் பார்த்தாள். அருகில் நெருங்கி என் கன்னத்தைத் தொட்டாள். குளிர்ந்த விரல்களில் நான் பல்லாயிரம் ஆண்டுகளைப் பார்த்தேன்.

புல்லாகவும் பூடாகவும் புழுவாகவும் மரங்களாகவும் பல்மிருகங்களாகவும் பறவைகளாகவும் பாம்புகளாகவும் வல்லசுரராகவும் முனிவராகவும் தேவராகவும் இந்த நிலத்திலேயே நான் பிறந்துகொண்டிருந்தேன். நானே இங்குப் பிறந்த அனைத்திலும் இருந்தேன். இப்பிறப்பை மீண்டும் கண்டு வாழ்ந்தேன். ஒருகணத்தில் அனைத்தும் மின்னற் சுடராகித் தோன்றி அழிந்தன. பல்லாயிரம் வாழ்வு வாழ்ந்த களைப்புடன் கட்டிலில் விழுந்தேன்.

இரண்டாமவள் என் தலைமாட்டில் அமர்ந்து கூந்தலைக் கோதி நெற்றியில் வருடினாள்.

இருட்டு எங்கிலும் நானே இருந்தேன். யானைகளின் துதிக்கைகளில் நுண்ணுணர்வாய் இருந்தேன். வண்ணத்துப் பூச்சிகளில் உணர்கொம்பாய் இருந்தேன். அலைகளை இருட்டில் மீட்டினேன். மரங்களில் தூங்கினேன். கனவுகளில் ஒளி கொண்டேன். வாழ்க்கையை ஆற்றும் நீரென்றாகி ஒவ்வொருவரின் நெஞ்சிலும் கவசமாய் இருந்தேன். கருப்பை இருட்டின் ஒளியின்மையின் பாதுகாப்பாய் இருந்தேன். அறிய முடியாமையில் திளைத்து நீந்தினேன். அங்கு எதுவுமின்மையில் இருந்தேன். அங்கிருந்து செல்ல மனமின்றி இருந்தேன். அனைத்துக் கருப்பையிலும் நான் இருந்தேன். நித்திய துயிலில் நிர்மலமான புன்னகையுடன் இருந்தேன். விழித்து அவளைப் பார்த்தேன். புன்னகையுடன் என் கூந்தலை அளாவிக்கொண்டிருந்தாள்.

மூன்றாமவள் என் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தெய்வாம்சம் கொண்ட புன்னகை.

அதில் நான் பேரழகென மண்ணில் நிகழ்ந்த அனைத்தையும் பார்த்தேன். குழந்தையின் கண்களில் வியக்கும் தீவிரத்தைப் பார்த்தேன். காதலில் ததும்பும் இருவரின் நோக்கில் இழையாய் ஓடும் அரூபத்தைப் பார்த்தேன். அதன் நடனத்தில் லயித்தேன். இசையில் மூழ்கினேன். பரவசத்தில் திகைத்தேன். நெஞ்சின் அடியில் கரும்பின் தித்திப்பென ஊறும் கனவுகளைப் பார்த்தேன். அன்னையரின் கண்களில் மகவுகளைப் பார்த்தேன். மலர்களை நோக்கி உளம் மலரும் இளம் விழிகளைப் பார்த்தேன். காற்றை, தென்றலை, வாடையை, கொண்டலை, புயலை அளைந்தேன். பல்லாயிரம் உதயங்களையும் அஸ்தமனங்களையும் பார்த்தேன். பெருமழையில் ஆடும் மரங்களையும் கற்சிலைகள் போலமர்ந்திருக்கும் மலைகளையும் பார்த்தேன். மேகங்களின் சூலைப் பார்த்தேன். மின்னற் கொடிகள் அவிழ்வதைப் பார்த்தேன். நிர்மலமான ஆகாயத்தில் நட்சத்திரங்களென மாறி மண்ணைப் பார்த்தேன். மண்ணில் பெருகும் ஆறும் நதியும் கடலும் பார்த்தேன். கடலென மல்லார்ந்து ஆகாயத்தையும் அதற்கு அப்பால் விரிந்திருக்கும் அண்டங்களையும் பார்த்தேன். திகட்டத் திகட்ட முடிவில்லாமல் சொரியும் பேரழகென்றேயான அனைத்தும் என்னைப் பார்த்தன. நான் கரைந்து இல்லாமலானேன். உவகையில் கூவினேன். ஓசையெனக் குழலில் நுழைந்து ஊஞ்சலிலென ஆடினேன். ஒரு அந்தத்திற்கும் மறு அந்தத்திற்கும் திசைகளே இன்றி அலைந்தேன். அவள் புன்னகை ததும்ப என் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான்காமவள் என்னை நெருங்கியபோது தீயில் ஒரு நெளிவென என்னை உணர்ந்தேன். அலையடிக்கும் தீப்பெருக்கு என் உள்ளே விரிந்தது. இரத்தம் கொப்பளித்து நரம்புகள் பின்னிக்கொள்ள கொதிக்கத் தொடங்கினேன். அவள் என்னை நெருப்பின் கண்களால் பார்த்தாள்.

பூமியில் எங்கும் படிந்திருக்கும் குரூரத்தைப் பார்த்தேன்.  சாவுகளின் விளிம்பில் கதறும் உயிர்களைப் பார்த்தேன். ஒன்றுக்கொன்று உயிர் கொடுப்பதை. ஒன்று இன்னொன்றின் உயிரை மாய்ப்பதை. தற்செயலில் அழிவதை. தன் செயலில் அழிவதை. அழிவை நோக்கிப் பேரார்வம் கொண்ட விழிகளுடன் நீந்திச் செல்வதை. வஞ்சம் கொண்டு உயிர் நீட்டிப்பதை. சினம் கொண்டு உருக்குலைவதை. எஞ்சிய நஞ்சில் பிடித்திருப்பதை. சூதை, பொறாமையை, பெருமையை, பாவத்தை.. பார்த்தேன். மனிதரில் எரியும் தீயதின் விழைவைப் பார்த்துக் கெக்கலித்து உடல் விம்மி நடுங்கியது.

அஞ்சியோடும் மானை விரட்டும் புலியைக் கண்டேன். அதை வேட்டையிட்டுக் கொன்று தன் குட்டிகளுக்குத் தின்னக்கொடுக்கும் அன்னை புலியைப் பார்த்தேன். இறந்த அன்னைக்கெனக் காத்திருக்கும் குட்டி மான்களின் மருளும் கண்களைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினேன்.

கொடுகலவி புரிந்தவன் திரும்பிச் செல்வதைப் பார்த்தேன். உடல் நெளியப் பற்றைக்குள் கிடந்த அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தேன். அவள் கைவிடப்பட்டு ஓவென்று கதறுமொலி என் செவிப்பறைகளை மோத விம்மினேன். அவன் திரும்பிச் சென்று தன் மகளை முத்தமிட்டுச் சிரிப்பதைப் பார்த்து நடுங்கினேன். தன் தாயின் கைகளை நீவி விடுவதைப் பார்த்து அருவருத்தேன். என் உடல் புழுவென நெளிய ஓங்காளித்தேன்.

சகோதரனை நோக்கி துப்பாக்கியை நீட்டிச் சுடுபவனைப் பார்த்தேன். அவன் கண்களிலிருந்த மிருகத்தைப் பார்த்து விதிர்விதிர்த்தேன். சாகும் பொழுது அவன் சகோதரனின் விழிகளில் தெரிந்த கண்ணீரைச் சுவைத்தேன். கரிப்பின் கொடுசுவை.

உடல் வேக நின்று பொருதிய வீரன் தன் கைகளாலேயே எதிரே நின்றவனைக் கொன்றான். அவனுடலைக் கைகளால் பற்றியிழுத்து அவனுடலில் எஞ்சிய ஆயுதங்களை எடுத்து தன் நண்பனைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்தேன். இறந்து கிடந்தவனின் முகத்தில் மொய்த்த இலையான்களைப் பார்த்தேன். அவனது மனைவி குளித்துவிட்டு கூந்தலைக் கூட முழுதாய் துடைக்காமல் நீல அல்லி மலர்களைப் பறிப்பதைப் பார்த்தேன். எந்த நடுக்கமுமில்லாமல் அவள் தண்டுகளை முறித்தபோது நான் அதில் ஒரு புழுவாய் இருந்தேன். அவனது பிள்ளை தோன்றியிருந்த கருப்பையின் இருட்டைப் பார்த்து விம்மினேன்.

போதும் போதுமெனத் தலையை ஆட்டி மறுத்தேன். உக்கிரை என்னிலிருந்து நீங்கி அப்பால் நின்றாள்.

எவ்வளவு நேரம் அப்படியே கிடந்து அயர்ந்தேன் எனத் தெரியவில்லை. உடலிலிருந்து கொதிப்பு நழுவிக் குளிரத் தொடங்கியது. இமை மடல்களுக்குள் ஐந்தாமவள் தோன்றினாள். தாபமே விழிகளென்றானவள்.

பல்கோடி உயிர்களும் புணர்ந்து களிக்கையில் நான் அவைகளாய் இருந்தேன். உயிரும் உயிரும் தம்மை மறந்து உச்சத்தில் நின்று திகைத்தன. ஒரு கணத்தில் அவை இல்லாமல் ஆயின. மேனிகளில் நறுமணம் பரவியது. வியர்வையின் கடலில் முக்குளித்து நீந்தினேன். உடல்கள்.. உடல்கள்.. பல்லாயிரம் உடல்கள்.. பாம்புகள் பறவைகள் மனிதர்கள்.. லட்சோபலட்சம் மனித உடல்கள் புணர்களியில் ஆடும் பெருங்கடலைப் பார்த்தேன். அதில் நீந்தினேன். உடல்களினால் ஆன கடல்.

முலைகளும் உதடுகளும் பொருதி உறிஞ்சின. இதழ்களும் இதழ்களும் பருகித் தீராது சுவைத்துக்கொண்டன. நாவுகளின் புரளலோசை நெஞ்சை நனைத்துக் கூசியது. தீண்டலே ஆன ஆடல். தோலின் பரிமளம். ஒளி. சுவை. என் நாவு அனைத்தையும் அறிந்தது. என் கண்கள் அனைத்தையும் பார்த்தன. என் தேகம் அனைத்தையும் உணர்ந்தது.

புணர்ச்சியின் உச்சத்தில் விம்மும் குரலொலிகள்.. தவித்திருக்கையில் நினைவின் நெருப்பு.. தழுவிக் கொள்கையில் உடைத்துக் கடிக்கும் வேகம்… பிரிகையில் ததும்பும் நீர்மல் விழிகள்.. ஒடுங்கி அடங்கிய உடல்களில் மூச்சு.. அனைத்தையும் பார்த்தேன்.. அனைத்துமாய் நெளிந்தேன்.. அனைத்துமாய் அடங்கினேன்.. அனைத்துமாய் காத்திருந்தேன்.

மீண்டும் உடல் சோரப் படுத்திருந்தேன். என் கால்களில் நெட்டி இழுக்கும் குளிரான விரல்களை உணர்ந்தேன்.

கண்களை அருட்டித் திறந்தேன். ஆறாமவள் காலடியில் அமர்ந்திருந்தாள். அன்னையே ஆன முகம்.

அணைத்துக்கொண்டு உயிர் காக்கும் சூடு கொண்ட பார்வையால் என்னைப் பார்த்தாள்.

இவை அனைத்தும் அவளில் பிறந்தவை எனப் பார்த்தேன். அத்தனை வேட்கையும் பித்தும் கனவும் சினமும் குரூரமும் தாபமும் விரகமும் காமமும்.. ஆக்குவதும் காப்பதும் அழிப்பதும் மறைப்பதும் அருள்வதும்.. இனிப்பதும் புளிப்பதும் உவர்ப்பதும் கார்ப்பதும் கசப்பதும் துவர்ப்பதும்.. மேலானதும் கீழானதும்.. இருட்டும் ஒளியும்.. ஒளிக்கீற்றும் வானவில்லும்.. ஓசையும் அமைதியும்.. புன்னகையும் அழுகையும்.. சினமும் சாந்தமும்.. வக்கிரமும் கருணையும்.. வெறுப்பும் அன்பும்.. எரிச்சலும் கனிவும்.. பொறாமையும் பொறையும்.. வஞ்சமும் மீட்பும்.. திருட்டும் கொடையும்.. சூழ்ச்சியும் பரிவும்.. தந்திரமும் விவேகமும்.. செல்வமும் கல்வியும்.. வீரமும் வேட்கையும்.. தாகமும் தணிவும்.. தளர்ச்சியும் ஊக்கமும்..

எண்ணுக்கணக்கற்ற அனைத்தும் அவளையன்றிப் பிறிது எதிலும் பிறக்கவில்லை என்பதைப் பார்த்தேன். அவள் முலைகள் பாலூறிப் பாலூறிப் பெருகிச் சிந்தி மலைகளையும் கடல்களையும் பாலைவனங்களையும் நிறைத்து ஓடுவதைப் பார்த்தேன். குருதியே பாலாகும் சுனையூற்றில் நான் வாய் வைத்து உறிஞ்சினேன். உடல் பொலிந்து சதையூறி வந்தேன்.

அறுவரும் என் கையருகும் தலைமாட்டும் கால்மாட்டுமென இருந்தனர். கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்தேன்.

ஏழாமவள் என்னைப் பார்த்தாள். ஓடிச்சென்று அணைத்துக்கொண்டேன். விம்மிப் பெருக்காகி அவள் மார்பில் என் கண்ணீர்த் துளிகள் சிந்தி நனைந்தன. ஓடையாகி அவள் குளிர்ந்தாள். என் முகத்தை தன் இருகைகளால் அள்ளிக்கொண்டாள். ‘என்னடி வேணும் என் பட்டுக்கு’ எனும் அருளலின் நோக்கே விழியென்றானவள்.

“அம்மா.. எல்லாம் எதற்காக? எல்லாம் எதற்காக.. வெறும் கதையா நானும்.. வெறும் கதைதானா அத்தனையும்.. வானிலிருந்து மின்னும் விண்மீன்களாகி தாயகத்தைப் பார்ப்பேன் என்பது கதையில் ஒரு வரிதானா!” தேம்பித் தேம்பி அழுதேன். உடலில் எடையே இருக்கவில்லை. காற்றைப் போலானேன்.

அவள் சொன்னாள், “ஆம் மகளே, அது அப்படித்தான். நீயும் உன்னோடு இந்த விடுதலைத் தீயில் எரியப் போகும் பல்லாயிரம் உயிர்களும் சென்றமையப் போவது மனிதர்கள் உண்டாக்கும் அற்ப தேசத்தில் அல்ல. அமையப் போவது பெருங்காவியத்தில். அதை எழுதும் கைகளை அது அடையவில்லை என்றால் மட்டுமே அவை அனைத்தும் பொருளற்றவை. அகுதிலால், அனைத்தும் அதனதன் உச்சத்தில் திகழ்ந்து கனவைப் பொருளுள்ளதாக்கும்.

பெருங்காவியமென்றால் அனைத்தையும் தொட்டுச் சென்று ஆழம் அறியும் பெருந்தவம். அறம், பொருள், இன்பம், வீடு என நான்கும் அங்கு வரலாற்றிலும் தத்துவத்திலும் வைத்து நோக்கப்படும். சமரசமின்றி எரியும் பெருந்தீயின்றி ஒருவர் அதனைத் தொட முடியாது.

நாங்கள் எழுவரும் ஆயிரமாயிரமாண்டுகளாகக் காத்திருப்பது அந்தத் தவத்தைக் காணவே. அது கோரும் அனைத்தும் பலி மட்டுமே. பெருங்காவியத்தை எழுதுபவர் அடையப் போவது பெருந்தனிமையும் பெருந்துக்கமுமே. மகத்தான தனிமை கொண்ட வாழ்வே பெருங்காவியத்தினை இயற்ற முடியும்.

அத்தனை மானுட மேன்மையும் கீழ்மையும் அவரையும் தீண்டும். அவர் அது அனைத்துமாகி வாழ்ந்து மீள வேண்டும்.

கருணையே இல்லாத வாள் போன்றது பெருங்காவியம். ஒரு பண்பாட்டின் அத்தனை ஆழங்களையும் தொட்டூருடுவி அதன் நுண்மையும் பேரியற்கையும் வெளிப்பட வேண்டும். மானுடர் அழியலாம் பெருங்காவியம் அழியாது. பெருங்காவியத்தின் இலக்கணம் அது. அது மட்டும் எஞ்சும். அங்கிருந்து அனைத்தும் அதனதன் இயற்கையை மீறி வாழ்வு கொள்ளும். மீண்டும் அனைவரும் பிறந்து நிலை கொள்வர்.

அனைத்தும் அதன் தட்டில் வைக்கப்படும். எடைக்கெடை அனைத்தும் ஈயப்படும். கொடையென்றால் கொடை. குருதியென்றால் குருதி.

தன் சொந்தக் குருதியைச் சிந்தாமல் முளைக்க முடியாத விதை போன்றது பெருங்காவியம். அது இம்முறை சிந்தப்படும். பெருங்காவியம் நிகழும்.

அதில் அமரத் தகுதி கொண்ட வாழ்க்கைகள் மட்டுமே காலப் பெருவெள்ளத்தில் பொருளுள்ளவை. நீ அப்படியொன்றை வாழ்ந்தாய். நீ அதன் முதற்சொல். உன்னிலிருந்து அந்தக் கனவு கைகளைக் கண்டடையும். அது உன்னை வணங்கியே தன் முதல் வரியை எழுதும். ஆகவே அழாதே மகளே. நீ இப்போது கண்டவை அனைத்தும் காட்சிச் சித்திரங்கள். அவை முழுவாழ்க்கையாலும் அள்ளி முடிக்கப்பட முடியாதவை. ஆகவே அமைதிகொள்” என்றாள்.

என் தோள்களிலும் தலையிலுமென எழுவரும் தொட்டனர். சாந்தமான நதியொன்று அணைத்துக்கொள்வதைப் போல. பிறகு துடிதுடிக்கும் பச்சையொளி என் கண்முன்னே தோன்றியது. ஏழு மின்மினியொளிகளென அவர்கள் தோன்றி நிலைக் கண்ணாடியில் ஒட்டிக்கொண்டனர்.

இருள் மூடியிருந்த அறையில் பச்சையொளியில் நான் மேசையைத் திறந்து என் கவிதைகளை எடுத்தேன். அறையின் மூலையில் குவிந்த தாள்களையும் எடுத்து ஒன்றாக்கினேன். தீப்பெட்டியை உரசினேன். சிறிய கருமுனை உரசி தீச்சுடர் விழித்தது. என் கவிதைகளை அந்த நெருப்பில் எரித்தேன். அவை புகை மணத்துடன் அறையை நிரப்பின. ஜன்னலைத் திறந்தேன். புகை நதியென வளைந்து பெருக்காகி விரிந்து ஆகாயத்தை நோக்கி நீண்டது. அதில் நீந்திச் செல்வது போல ஏழு மின்மினிகளும் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று மறைந்தன. நான் தலையணைக்கு அடியில் வைத்திருந்த நித்திரைக் குளுசைப் போத்தலை எடுத்தேன். ஒன்றன் பின் ஒன்றாக முழுப்போத்தலும் முடியும் வரை விழுங்கினேன். செம்பிலிருந்த தண்ணீரைக் குடித்தேன். நரம்புகள் நடுங்கி அதிர்வது தெரிந்தது. இரத்தம் குழம்பித் தேங்கியது போல மூளை அணைந்துகொண்டு வந்தது. அமைதியாகப் படுத்தேன். போர்வையை இழுத்துக் கழுத்துவரை விட்டுக் கொண்டு இமைகளை மூடினேன்.

l kirishanth300@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger