நிக்கி ரோசா
நீ ஒரு கறுப்பர் எனில்
சிறுவயது நினைவுகள் என்பது எப்போதுமே
ஒரு சல்லை.
கழிப்பறையற்ற கட்டடங்களில்
வாழ்ந்ததை நினைவில் கொள்வாய்.
நீ ஒரு மதிக்கத்தக்க இடத்திற்கோ அல்லது மாபெரும்
கலைஞனாகவோ ஆகிவிட்டால்
உனக்கே உனக்கென
உன் அம்மா இருந்ததையும்
அதனால் நீ பெற்ற சந்தோசத்தையும்
சிகாகோ மக்கள் கறி வறுக்கும் அந்தப் பெரிய பார்பிக்யூ தொட்டியில்
நீ குளித்தபோது அடைந்த ஆசுவாசத்தையும்
இவர்கள் ஒருபோதும்
பேசவே மாட்டார்கள்.
எப்படியோ வீட்டின் நினைவுகளைப் பற்றிப் பேசினாலும்,
குடும்பமாய் ஹாலிடேல் பற்றிப் பேசும்போது
நீ அவர்களை எவ்வளவு புரிந்துகொண்டாய்
என்பது போதாமல் இருந்தாலும்
அது என்றுமே நினைவில் இருக்கும்.
உங்கள் சுயசரிதையை எழுதுவோர்
அப்பா நிலத்தையெல்லாம் விற்றபோது அடைந்த துயரத்தை
என்றுமே புரிந்துகொள்ளவே முடியாது
மனக்கோட்டை எல்லாம் மணல்கோட்டையாய் தகர்கின்றன.
ஏழ்மையாய் இருந்தாலும், வறுமையை
ஒரு பொருட்டாய் நீங்கள் கருதவில்லை.
சண்டையிட்டுக்கொண்டாலும், சாராயம் குடிக்கும் அப்பா பெரும் பிரச்சினையே இல்லை
ஏனெனில், அனைவரும் ஒன்றாய் இருக்கிறார்கள்
நீயும் உனது தங்கையும் சந்தோசமாய்
பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள்
நத்தாரும்* நன்றாகத்தான் இருக்கிறது.
எனக்குச் சர்வ நிச்சயமாய் தெரியும்,
எந்த வெள்ளையனுக்கும் என்னைப் பற்றி
எழுதத் தெரியாது
அவனுக்கு அவசியமும் இல்லை.
ஏனெனில், அவர்கள் ஒருபோதும்
அறிந்திருக்க மாட்டார்கள் – கறுப்பர்களுக்கு
அன்போடு இருப்பதே அனைத்தையும் பெற்றிருப்பது என்பதை.
அவர்கள்,
எப்போதும் எனது சிறுவயதின் சிரமங்களை மட்டுமே பேசுவார்கள்
ஆனால், புரிந்துகொள்ளவே மாட்டார்கள்
எத்தனை பூரிப்பான புன்னகைகள்
எனக்கே எனக்கானதென்பதை.
*கிறிஸ்துமஸ்
m
இயக்கவிதிகள்
(ஹார்லம் அதிசயத்திற்காக)
அறிவியல் நமக்குச் சொல்வதாவது,
ஒருகிலோ தங்கமும் ஒருகிலோ மாவும் ஒரே எடைதான்
ஆனால், அதன் இயல்பு நிலையில் இரண்டையும்
ஏதோவோர் உயரத்திலிருந்து வீசினால்,
ஒன்று தரை தட்டும் மற்றொன்று பரந்தோடிவிடும்.
இயக்க விதிகள் நமக்குச் சொல்வதாவது,
தவறான திசையில் செல்லும் ஒரு பொருளை விடவும்
இயக்கமற்றுக் கிடக்கும் ஒரு பொருளைச் சரியான திசையில் உந்துவதே கடினம்.
இயக்கம் ஆற்றலாகும் – இயங்காமை – அக்கறையின்மை.
அக்கறையின்மை துரோகத்திற்குச் சமம்.
துரோகம் – வன்முறை.
வன்முறை ஆற்றலாய் இருப்பதே அதன் அறம்.
இயக்க விதிகள் நமக்குச் சொல்வதாவது
கறுப்பின மக்கள் குழம்பிக்கிடப்பது
கறுப்பாய் இருப்பதால் மட்டுமன்றி
மாறாகச் சக்தியற்றுக் கிடப்பதால்தான்
நாம் சப்பையாக்கப்படுகிறோம் என்பதாலும்தான்.
மனிதன் மட்டும்தான் தன் உதடுகளால் சிரிக்கிறான்
என்று சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மையில், நம் உள்ளொலியைப் பிரதிபலிப்பது என்னவோ
நம் விழிகள்தான்
காதலின் சிக்கல் நாம்
என்ன உணர்கிறோம் என்பதால் அல்ல
நாம் எதை உணர வேண்டும் என்று ஊட்டப்பட்டிருக்கிறோம் என்பதால்தான்.
தம்பட்டம் அடிப்பது மட்டுமே தலையாயது அல்ல,
அதுபோல கவர்ந்திழுப்பது மட்டுமே
காமமும் அல்ல / காதலும் அல்ல.
என்னிடம் வரம் என்று ஒன்று இருந்தால்,
அண்டத்தின் அறிவனைத்தையும் அடைய வேண்டுவேன்.
கறுப்பு அழகுதான் என்கிறார் பேராசிரியர் மிச்சேவ்
ஆனால் ஆறிவே ஆற்றல். எந்தவொரு கவர்ச்சியான பொருளும்
வாங்கப்படுகிறது விக்கப்படுகிறது –
ஒதுக்கப்படும்
எந்தவொரு பொருளும் மதிப்பிழக்கிறது.
இதில் பக்கச்சார்பு என்பது
மனிதனின் இயல்புக்கு எதிரானது
வெள்ளையே கறுப்பை, நன்மையே தீமையை வரையறுக்கும் என்றால்
பின் ஆண் பெண்ணையும் அல்லது
பெண் (அறிவியல் பூர்வமாக) ஆணையும் வரையறுப்பார்கள்.
இனிப்புதான் கசப்பின் நேரெதிர்
என்றால்,
வெப்பம் குளிரின்மை என்றால்,
காதல்தான் வலி நிவாரணி
அழகெனப்படுவது காணும் கண்களில்தான்.
சில சமயம் உன்னை நான் தொட, பதிலுக்கு நீயும் என்னைத் தொட வேண்டும்.
ஆனால், நான் உனை இறுக்குகிறேன் என்று நீயும், நீயெனைத் தட்டிவிடுகிறாயென நானும் நினைக்கிறோம்.
ம்ம்… அம்மா எப்போதும் சொல்லுவாள்
உன்னைப் போன்ற
ஆண்களிடமிருந்து சற்று விலகியே இருக்க வேண்டும் என்று.
என் காதல் கயவனே!
இந்த உலகைக் கவர சாலைக்குச் செல்கிறேன்
சிவப்புச் சாயத்தை எனது இதழ்களில் பூசிக்கொண்டும்
கண்களில் கவசத்தோடும் கவனமாய்ச் செல்கிறேன்
ஆனால், நீயோ உன் சக ஆண்களோடு சேர்ந்து கைக்கொட்டிச் சிரித்து
பென்ச்சைத் தேய்த்துக்கொண்டிருக்கிறாய்.
ஏனெனில், உனக்குத் தெரியும்
குண்டியை நகட்டாமல் குந்திக் கிடந்தால்
இயக்கவிதிகள் இயக்கத்திலேயே இருக்கும் என்பது.
நிக்கி ஜியோவானி: புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கக் கவிஞர். கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் உட்பட பல நூல்களை வெளியிட்டுள்ளார். இனம் – சமூகப் பிரச்சினைகள் முதல் சிறுவர் இலக்கியம் வரை பல்வேறு தளங்களில் பங்களித்துள்ளார். லாங்ஸ்டன் ஹியூஸ் பதக்கம், ழிகிகிசிறி இமேஜ் விருது உட்பட பல உயரிய விருதுகளை வென்றுள்ளார். ‘தி நிக்கி ஜியோவானி பொயட்ரி கலெக்ஷன்’ (The Nikki Giovanni Poetry Collection) என்ற தொகுப்புக்காக 2004ஆம் ஆண்டு கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
l keerthivasan1209@gmail.com





