பிறர் தலித்துகளையும், தலித்துகள் பிறரையும் எழுதுவதைத் தலித்துகளிலும் பிறரிலும் ஏற்க மறுக்கும் ஜாதி மனோபாவம் முன்னெப்போதைவிடவும் தற்காலத்தில் தலைவிரித்தாடுகிறது. தலித்துகளைப் பிறரிலிருந்தோ, பிறரைத் தலித்துகளிலிருந்தோ பிரிக்க இயலாத நிலையில் சமூகச் சிக்கல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவ்வுகில் எங்கு எவை நிகழ்ந்தாலும் அவை தலித்துகளிடமும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது நிகழும் அமெரிக்கா – ஈரான் போர் பிறரை மட்டுமன்றி தலித்துகளையும் பாதிப்பதை மறுக்க முடியாது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தபோது எம்.சி.ராஜாவும், மீனாம்பாள் சிவராஜும் ‘யுத்த சஞ்சிகை’யில் 1943ஜனவரி, 1944ஜூலை மாதங்களில் அப்போர்களைக் குறித்துக் கட்டுரைகள் எழுதினர். ஆதிதிராவிடர் விடுதலை இயக்கத்தில் முனைப்புடன் செயல்பட்ட இந்த ஆளுமைகள், உலகப் போர் ஆதிதிராவிடர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சாதக, பாதகங்களையும், போர்க் காலத்தில் பொது மக்கள் எவ்வாறு அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் எழுதினர். இக்கட்டுரைகளைச் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் கண்டெடுத்து வாசித்தேன். இவை தற்காலத்துக்கும் பொருத்தமானவே என்பதால் மறு ஆக்கம் செய்யப்படுகின்றன.
m
தாழ்த்தப்பட்டோர் அடைந்த ஏமாற்றம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொறுப்புகள் நான்கு வகை விடுதலைகளும் வேண்டும்
(எழுதியவர்: தேசியப் போர்முனை பகுதி அமைப்பாளர் ராவ்பகதூர் எம்.சி.ராஜா, எம்.எல்.ஏ.)

ஜவஹர் – காந்தி வேற்றுமை
யுத்தப் பிரச்சினையைக் குறித்து ஜவஹர்லாலுக்கும் காந்தியாருக்கும் ஏற்பட்ட வேற்றுமையைப் பொதுவாக ஜனங்கள் கவனித்திருப்பார்கள். யுத்தம் சம்பந்தமாகக் காங்கிரஸ் என்ன முறையைக் கைக்கொள்ள வேண்டுமென்று விவாதித்தார்கள். அப்போது ஜவஹர்லாலின் எண்ணமெல்லாம் நேச நாடுகள் வெற்றி பெற வேண்டுமென்பதிலேயே பதிந்திருந்தது; ஆனால், காந்தியாரின் எண்ணமெல்லாம் ஜப்பானியர்கள் இந்தியாவிற்கு வந்து வசப்படுத்திக்கொள்ளுவதிலேயே இருந்தது. அது ஜப்பானியரால் கடுமையான ஆபத்து ஏற்படக்கூடிய காலம். அப்போது காங்கிரஸ் கைக்கொள்ள வேண்டிய முறையொன்றை காந்தியார் வகுத்தார். அதுதான் “எதிரியோடு பலாத்கார மற்ற முறையில் ஒத்துழையாதிருப்பது” என்பது. இது தற்போதுள்ள அரசாங்கத்திடம் சமாதானமாகவும் நேசமாகவும் இருப்பதாகத் தோன்றும். ஆனால், இதன் உள் அர்த்தம் என்னவென்றால், ஜப்பானியர்கள் இந்தியாவில் வந்து இறங்குவார்கள் என்பதுதான். ஜவஹர்லால் எந்த விஷயத்தைக் குறித்தும் நேர்மையான முறையில் ஆலோசித்துக் கொண்டிருந்தவர். ஆகையால், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகள் சேர்ந்துள்ள நேச தேசங்கள் முடிவில் வெற்றி பெறும் என்பது பற்றி அவருக்குச் சந்தேகமே கிடையாது. அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாட்டின் நிலைமையும் மிகவும் ஆபத்தாயிருந்தது.
எப்பொழுதும் ஆசையினின்றுதான் எண்ணம் பிறக்கிறது. காந்தியாரின் எண்ணம் என்ன தெரியுமா?
“ஜப்பானியர்கள் இந்தியாவிற்கு வரும்போதும் நான் போப் கிரிகரி போல அவர்களுக்கு எதிரில் போகச் சந்தர்ப்பங் கிடைக்கும். நம்மைத் தாக்க வருகிறவர்களைத் தலைவாசலிலேயே சந்திப்பேன். சமாதான முறையைக் கொண்டே வெல்ல வேண்டும் என்னும் எனக்கினிமையான மந்திரத்தை அவர்களுக்கு ஓதுவேன். போராட வேண்டாமென்று நான் அவர்களை வேண்டிக்கொள்ளுவேன். சமாதானமாகவே நாட்டை வசப்படுத்திக்கொள்ளும்படி அனுமதிப்பேன். அவர்களுடைய அனுமதியின்பேரில் நானும் காங்கிரசும் நாட்டை ஆள அனுமதிக்க வேண்டுமென்று கோருவேன்.”
இந்த எண்ணங்களிலும் ஆசைகளிலும் மண் விழுந்தது. சமீபகாலத்திலும் நிகழ்ந்த சம்பவங்களையும் யுத்த முன்னேற்றத்தையும் சீர்தூக்கிப் பார்க்கிறவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். வெற்றி பெற வேண்டுமென்பது பற்றி, நாம் கொண்டிருப்பது ஆசை, நம்பிக்கை மட்டுமல்ல; உறுதி கொண்டிருக்கிறோம். இந்த உறுதிக்குத் தகுந்த ஆதாரங்கள் உண்டு. இதற்குத் தேசியப் போர்முனை இயக்கத்தின் வேலையும் ஒரு காரணந்தான்.
நாம் வெற்றி பெற வேண்டுமானால், பெரிதும் முயல வேண்டுமென்றும், ஏராளமான தியாகங்கள் செய்ய வேண்டுமென்றும், அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெட்தும் பிரிட்டிஷ் முதல்மந்திரி சர்ச்சிலும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. என்றாலும் நாம் வெற்றி பெறுவது மட்டும் உறுதி. இருள் நீங்கிவிட்டது. வெற்றிச் சூரியன் தோன்றிவிட்டான்.
இந்தப் பரந்த உலகத்தில் யுத்தத்தின் போக்கு இப்படியிருக்கிறது; ஆனால் இந்தியாவில் நிலைமை எப்படியிருக்கிறது? நேச நாட்டுப் படைகள் இங்கே வந்துவிட்டன. அவசியமானால், தரையிலும் போராடத் தயாராகயிருக்கின்றன. வெளி நாட்டார் இந்தியாவைத் தாக்கி அக்கிரமங்கள் செய்யாதபடி இவை தடுக்கக் கூடியவை. இந் நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொருட்டு இராணுவத்தார் என்னென்ன ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று நாம் தகுந்தபடி உணர்ந்து கொள்ளுவதில்லை. இந்த இராணுவத்தில் இந்தியர்களும் இந்தியரல்லாதவர்களும் இருக்கிறார்கள். இந்தியப் படையினர் மத்திய கிழக்கிலும் வடாப்பிரிக்காவிலும், பிரிட்டிஷ் படைகளும் அமெரிக்கப் படைகளும் இந்தியாவிலும் பல வகைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் இந்தியப் படைகள் செய்துகொண்டுவரும் வேலைகள் அனைவருக்கும் தெரியும். இந்த யுத்த சரித்திரத்திலேயே இது ஒரு மிகச் சிறந்த பகுதியாக விளங்கும். பிரிட்டிஷ் படைகளும் இந்தியப் படைகளும் இந்தியாவில் என்ன செய்கின்றனவென்று இப்போது வெகுவாகத் தெரியாது. அவர்களுடைய வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அவற்றை வெளியிடாதிருப்பது நல்லதுதான். இவர்கள் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு, அவர்கள் இங்கே வேலையற்றுப் போய் வந்திருக்கவில்லை யென்றும், அவர்கள் மிகுந்த பலமுள்ளவர்கள் என்றும், அவர்களால் நமக்குப் பாதுகாப்பு அதிகம் என்றும், அவர்களால் ஊக்கமும் உறுதியும் நமக்கு உண்டாகின்றன வென்றும் தெரிந்துகொள்ளுவோம். ஆபத்திற்குதவுகிறவர்கள் தான் உண்மையான நண்பர்கள்.
மேன்மை தங்கிய லின்வித்கோ பிரபுவும், ஜெனரல் வேவலும் இந் நாட்டு விஷயங்களுக்குத் தலைவர்களாக இருக்கும் பாக்கியம் நமக்கு வாய்த்திருக்கிறது. ஒவ்வொரு நிமிஷமும் நடைபெறும் சம்பவங்களை இவ்விருவரும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். சிவில் இராணுவம் பொருளாதாரம், கைத்தொழில், அரசியல் நிர்வாகம் முதலிய இலாக்காக்களுக்குக் கட்டகளைகள் பிறப்பிக்கின்றார்கள். யுத்தத்தில் வெற்றி பெறவும், கட்டுப்பாடான சமாதானத்தை நிலைநாட்டவும் இந்த இலாக்காக்கள் பெரிதும் உதவும். நம் மாகாணத்திலும் மேன்மை தங்கிய சர் ஆர்தர் ஹோப் துரையவர்களைக் கவர்னராக அடையும் பாக்கியம் பெற்றிருக்கிறோம். இவருடைய ஆலோசகர்கள் விஷயஞானம் மிகவும் உடையவர்கள். இவர்களுடைய உதவியைக் கொண்டு அவர் சட்டத்தையும் சமாதானத்தையும் நிலைநாட்டிக்கொண்டு வருகிறார். அன்றியும் எல்லா வகை யுத்த வேலைகளிலும் பொது ஜனங்களின் கூட்டுறவையும் ஆதரவையும் திரட்டி, யுத்தத்தில் வெற்றி பெற வேண்டுமென்னும் எண்ணம் பொதுவாக ஜனங்கள் மனதில் வேரூன்றும்படி, ஏற்பாடுகள் செய்துவருகிறார்.
இந்த யுத்தத்தில் வெற்றி பெற வேண்டிச் செய்யப்படும் எல்லா வேலைகளாலும், இந்நாடிலுள்ள எல்லா இனத்தவர்களுக்கும் என்ன பலனுண்டு? தகுந்த ஆலோசனையின் பேரில்தான் பல இனத்தவர்கள் என்று சொல்லுகிறேன். ஏனென்றால், பல இனங்களையும் ஒரே இனம் என்று கூறுவதால் பலனில்லை. இங்கே இல்லாத ஒற்றுமை, இருப்பதாகத் தப்பெண்ணங் கொண்டதனால், பெருந்தீமைகள் நிகழ்ந்துவிட்டன. பல இனத்தவர்களுக்குள்ளும் ஒரே வகை இயல்புகள் இருக்கின்றன வென்னும் காரணம் பற்றி, முழு ஒற்றுமை ஏற்பட்டுவிட்டதாகக் கூறமுடியாது. வேற்றுமைகளையும் நாம் கவனிக்க வேண்டும். இவை முக்கியமானவை. எந்த விஷயத்தைக் குறித்தும் இவை முடிவு செய்யத்தக்கவை. பொருளாதாரத் துறையில் இது மிகவும் முக்கியம். எல்லோருக்கும் ஒரே வயிறுதான் இருக்கிறது என்று பொருள் கொள்ளலாமா? ஒருவர் சாப்பிட்டால் மற்றவர்களுடைய பசியெல்லாம் நீங்கிவிடுமா? இப்போது நம் நாட்டிற்குத் தேவை ஒற்றுமையல்ல; ஆனால் இசைந்த வாழ்வுதான். பொதுமக்களுக்கு நன்மை தரத்தக்க முறையில், இந்நாட்டை ஆட்சிபுரிந்து வந்தவர்களிடமிருந்து ஆதிக்கத்தைப் பிடுங்கிக்கொள்ளும் பொருட்டு, ஒற்றுமை ஏற்பட்டுவிட்டதாக மேல்வாரியாக வாதிக்கலாம். இப்போது நமக்கு என்ன வேண்டுமென்றால், பல இனத்தவர்களுக்குள்ளாகவும் இசைந்த வாழ்வுதான் வேண்டும்.
இதனால், அவர்களுக்குள் கூட்டுறவு உண்டாகும். அவர்கள் பொது நோக்கங்கள் ஈடேறும். ஆதிக்கத்தைப் பகிர்ந்துகொள்ளுவதில், எல்லோருக்கும் நீதியும் நியாயமும் வழங்கப்படும். அப்போதுதான் எல்லா இனத்தவர்களுக்குள்ளும் இசைந்த கூட்டுறவு ஏற்படும். இந்தக் கூட்டுறவு ஏற்பட்டு நெடு நாட்களுக்குப் பிறகுதான் அரசியல் ஒற்றுமை ஏற்படக்கூடும்.
நாட்டின் எதிர்காலம்
இந்தச் சமயத்தில் இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி, இங்குள்ள ஆலோசனைக்காரர்களின் மனதைக் கிளறிக் கொண்டிருக்கும் பிரசினையொன்றுண்டு. இந்தியாவில் தம் ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க பிரிட்டிஷார் விரும்புகிறார்களா என்பதுதான் அந்தப் பிரச்சினை. இதை விட்டுக்கொடுக்கத் தாம் விரும்புவது மட்டுமன்றி, ஆவலாகவுமிருப்பதாக அவர்கள் பலமுறை கூறியிருக்கிறார்கள். அரசியல் பல்லவியைப் பாட வேண்டுமென்று நினைக்கிறவர்கள்தான், இந்த வார்த்தைகளை நம்பாதது போலப் பாசாங்கு செய்கிறார்கள். பலவீனமான இனத்தவர்களின் நன்மைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆதிக்கத்திலுள்ளவர்களுக்கு உண்டு. இந்தப் பொறுப்பையும் அரசாங்கத்தார் கைவிட்டுவிடுவார்களா? ஆதிக்கம் மிகுந்தவர்களின் இஷ்டப்படி எல்லாம் நடக்கும்படி ஆதிக்கமற்றவர்களை ஒப்புக்கொடுத்து விடுவார்களா? இப்போது இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்டவர்களின் உள்ளங்களில் உண்மையானதோர் அச்சம் தோன்றியிருக்கிறது. அதாவது, நாம் வெற்றி பெறும்போது- வெற்றியடைவது உறுதி- இதுவரை பல கஷ்டங்களுக்கிடையே பிரிட்டிஷ் அரசாங்கத்தார் நேர்மையாகவும் கருணையோடும் நடந்துகொண்டது போலவே, இனியும், தாழ்த்தப்பட்டவர்களிடம் நடந்துகொள்ளுவார்களா? இனி ஏற்படக்கூடிய தேர்தல் பொதுத்தொகுதியில் ஜாதி இந்துக்களல்லவா பெரும்பான்மையோர். இதுவரை எங்கள் அனுபவத்திலிருந்து, பிரிட்டிஷாரின் மேற்பார்வையும் ஆதிக்கமும் இல்லையானால், இந்தத் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களை ஜாதி இந்துக்கள் வெகுவாக அலட்சியம் செய்வார்கள் என்பது உறுதி. இன்னும் பல வகைக் கட்டுப்பாடுகளுக்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாக்குகிறார்கள். இவை ஜாதி இந்துக்களின் சார்பாக காந்தியார் வகுத்த முறைகள். இந்த முறைகளின்படி தம்முடன் சேர்த்துக்கொள்வது போல் சேர்த்து, எங்களுக்குள்ள அரசியல் சுயேச்சையைப் பறிமுதல் செய்துவிடுகிறார்கள். அரசியல் சுயேச்சையைக் கொண்டுதான், அறிவு முன்னேற்றமடையும். சமுதாய உணர்வு உண்டாகும். பொருள் நிலையும் பெருகும். பண்டைக் கால பண்ணைக்காரன் இன்று சமூக அடிமையாயிருக்கிறான். இனி அறிவுத் துறையிலும், அரசியல் துறையிலும் கொடுமைக்கு ஆளாக நேரலாம். பல ஊழி காலமாக நாம் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டுத் தலை தூக்க உதவியது, பிரிட்டிஷ் அரசாங்கமல்லவா? அவர்கள் ஜனநாயக உணர்ச்சியுடையவர்கள். நீதியும் நேர்மையும் கொண்டவர்கள். பொருளாதாரங் காரணமாகவும் அரசியல் காரணமாகவும் இவர்கள் தம் உணர்ச்சிப்படி நடந்துகொள்ள ஒட்டாதபடி தடைகள் ஏற்பட்டன. என்றாலும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்குத் தம்மால் இயன்றவரை உதவினார்கள். இனி ஏற்படப்போகும் அரசியல் அமைப்புப் போராட்ட நிர்ப்பந்த காலத்திலுங் கூட, இந்த இனத்தவர்களின் நன்மைகளைத் தியாகஞ் செய்துவிடமாட்டார்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன். தம் ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல்தான், தாழ்த்தப்பட்டவர்களிடம் அரசாங்கத்தார் கவலையும் அனுதாபமும் காட்டுகிறார்கள் என்று சொல்வது எளிது. இப்படி அந்த அரசியல் கட்சிகள் சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், ஆதிக்கத்தைக் கைப்பற்ற வேண்டுமென்னும் பேராசைதான். ஆனால், அதற்கேற்றபடி, எளிய இனத்தவர்களிடம் நீதியோடும் நேர்மையோடும் நடந்துகொள்ள வேண்டுமென்னும் உண்மையான உணர்ச்சி அவர்களிடம் இல்லை.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நிலை
இந்தச் சமயத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் நிலை என்ன? இந்த இனத்தவர்கள் பொதுமக்களின் பெரும் பகுதியினர். அவர்களுடைய எதிர்கால வாழ்வு அஞ்சத்தக்கதாகவுமில்லை; சிறப்பானதாகவும் தோன்றவில்லை. நாட்டின் யதேச்சைப் பற்றி, மற்ற இனத்தவர்களின் கோரிக்கைகள் பற்றி, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போக்கு எதுவோ, அதையொட்டித்தான் எல்லாம் அமையும். பரிபூரண சுயாட்சி வழங்குவதாக அரசாங்கத்தார் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். இந்த நாட்டு நிர்வாகம் பற்றி தமக்குள்ள எல்லா ஆதிக்கத்தையும் பொறுப்பையும் விட்டுக்கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். சிறுபான்மை வகுப்பினரில் அநேகரும், தாழ்த்தப்பட்டவர்களும் சம்மதித்தால் மட்டுந்தான், தமக்குள்ள ஆதிக்கத்தை மாற்றித் தரக்கூடுமென்று வற்புறுத்துகிறார்கள். இதுவும் நம் அதிர்ஷ்டந்தான்.
இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதுபற்றி பொது ஜனங்களின் கருத்தைச் சிருஷ்டிக்கிறார்கள். அதுவும், மகாகெட்டிக்காரத்தனமாகவும் பெரும் பொருளுதவியைக் கொண்டும், வாயில்லாப் பூச்சிகளாகவும், நசுக்கப்பட்ட இனத்தவர்களாகவும் உள்ளவர்கள் மீது நெடு நாட்களாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டு வந்தவர்கள்தான் இப்படிச் சிருஷ்டிக்கிறவர்கள். இப்படிச் சிருஷ்டிக்கப்பட்ட பொதுஜனக் கருத்துக்கு மாறாகத் தாம் விதிக்கும் நிபந்தனையை, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் வற்புறுத்துவார்களா என்பதுதான் கேள்வி. இங்கிலாந்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் மட்டுமன்றி உலகத்தின் மற்றெல்லாப் பாகங்களிலுமிருந்தும், அமெரிக்காவிலும் சீனாவிலுமிருந்துங் கூட பிரிட்டிஷ் அரசாங்கத்தார் மீது ஒரு குறை கூறுகிறார்கள். அதாவது, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் கூறும் வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் அவர்களுக்கில்லையென்றும், ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க அவர்கள் விரும்பவில்லையென்றும் குறை கூறுகிறார்கள். இதனால், அரசாங்கத்தார் தடுமாற்றமடைவார்களா? நெடுநாட்களாக அடிமைத்தனத்திற்கு ஆளாகியிருந்தவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுவார்களா?
இரண்டு ஆபத்துகள்
தாழ்த்தப்பட்டவர்கள் தலைக்கு மேலே இரண்டு ஆபத்துக்கள் இருக்கின்றன. இவ்விரண்டும் இரண்டு வகை அறியாமையினால் உண்டானவை. ஒன்று மேல் நாடுகளிலுள்ள நல்லெண்ணமுள்ள லட்சிய வாதிகளின் அறியாமையால் ஏற்படுகிறது. மற்றொன்று, ஜாதிக் கட்டுப்பாட்டிற்கும், புரோஹிதக் கட்டுப்பாட்டிற்கும் உள்ளாகியிருக்கும் இந்நாட்டவர்களின் அறியாமையால் ஏற்படுவது. இவர்கள்தான் பொதுத் தேர்தல்களில் இந்துக்கள் என்னும் பெரும்பான்மையோராயிருக்கிறவர்கள். மக்களைப் பலபல வகுப்பினராகப் பிரித்து வைப்பதற்காக மட்டும் சாதி வேற்றுமை முளைக்கவில்லை. ஒவ்வொரு சாதிக்கும் தனி பழக்கவழக்கமும், மூட நம்பிக்கையும் அரண்களாக அமைந்திருக்கின்றன. ஜாதி உயர்வுதாழ்விற்கு ஏற்றபடி கட்டுப்பாடுகளும் உயர்ந்துகொண்டே போகும். இதன் பயனாக, தாம் மற்றவர்களை விட வேறுபட்டவர்கள் என்னும் தனித் தன்மை அவர்களுடைய உள்ளத்தே உண்டாகிறது. ஆகவே அளவு கடந்த பாரபட்சமும், நியாயமற்ற மனக் கசப்பும் உண்டாக இடமுண்டாகிறது. இந்தக் காரணத்தால்தான், தாழ்த்தப்பட்டவர்கள் பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். இந்தியாவைப் பற்றி நல்லெண்ணமுடையவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இந்தியாவைக் குறித்து விஷய ஞானம் போதாது. அவர்கள் இந்தியாவிற்கு நன்மை செய்ய விரும்புவார்களானால், ஒரு காரியம் செய்ய வேண்டும். எந்தவிதத் தொடர்புமில்லாத, திறமை வாய்ந்த சமூதாய அறிஞர்கள் அடங்கிய தூதுக் கோஷ்டியொன்றை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும். இவர்கள், இந்திய மக்களின் சமுதாய நிலை, உறவு முதலியவற்றைக் குறித்து விசாரணை செய்ய வேண்டும். அரசியல் துறையில் செய்யப்படும் செயல்களும் தீர்மானங்களும் இவற்றையொட்டித்தான் நடைபெறுகின்றன. இப்படிப்பட்ட ஒரு தூதுக் கோஷ்டியை அமெரிக்க ஜனத் தலைவர் ரூஸ்வெல்ட் இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும். இந்தத் தூதுக் கோஷ்டியினர் போதுமான காலம் இந்திய மக்களிடையே பழக வேண்டும். இன்று இந்திய மக்கள் உள்ள சமுதாய நிலையை உணர்ந்துகொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் என்னென்ன செய்யக் கூடாதென்று தடுக்கப்பட்டிருக்கிறார்களென்றும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்டதோர் தூதுக் கோஷ்டியை அவர்கள் அனுப்புவாரானால், அனேக தலைமுறைகளுக்கு நிலைத்திருக்கக் கூடிய சமுதியா அமைப்பிற்கும் அரசியல் அமைப்பிற்கும் முதன் முதல் அவர் விதை விதைத்தவராவார்.
சர்ச்சில் சொன்னது என்ன?
சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சிலும், ரூஸ்வெல்டும் அத்லாண்டிக் மகா சமுத்திரத்தில் ஒரு இடத்தில் சந்தித்துப் பேசினார்கள். அதன் பிறகு சர்ச்சில் ஒரு செய்தி விடுத்தார். ஹிட்லர் ஆதிக்கத்திற்குள்ளான ஐரோப்பிய நாடுகளில் மக்கள் படும் கஷ்டங்களைக் குறித்துத் தெரிவித்தார். அப்போது அவர் கீழ்க்கண்டவாறு கூறினார்:-
“குகை இருண்டு நீளமானாதாக விருக்கலாம்; ஆனால் முடிவில் வெளிச்சம் இருக்கிறது.”
அது போலவே, இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்டவர்களுங்கூட நீண்ட இருண்ட குகை வழியாகத்தான், தம் வாழ்நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் அங்கங்கே இந்தக் குகைக்குச் சில திறப்புக்கள் இருக்கின்றன. உதாரணமாக, புத்தர், அசோகர், இராமானுஜர், ராஜாராம் மோகன் ராய், கேசவ சந்திர சென், ரெனடே, டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் காலத்திலும், மாண்டேகு சேம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகுந்தான், தாழ்த்தப்பட்டவர்களின் நீண்ட இருண்ட வாழ்க்கையில், வான ஒளி வீசியது. 1935-ஆம் வருஷத்திய சீர்திருத்தத்தின்படி இவர்களுக்குத் தேர்தலில் தனித்தொகுதி ஏற்பட்டபோது, இவர்களைச் சூழ்ந்திருந்த இருள் சற்று நீங்கியது போலத் தோன்றியது. இந்தச் சமயத்தில்தான் புனா ஒப்பந்தம் ஏற்பட்டது. இது பற்றி அவர்கள் கொஞ்சமும் சந்தேகம் கொள்ளாதபடி சம்மதித்தனர். இது காரணமாக அவர்கள் அரசியல் சிறையில் அடைபட்டனர். அதிலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. இப்போது இவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, இந்த யுத்தத்தில் நேச நாட்டினர் வெற்றி பெறுவார்கள். அப்போது நிலைமை மாறும். பல நூற்றாண்டுகளாகத் தாம் இருந்துவந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்சிப் பெறக்கூடும். சமூதாயத் துறையிலும் அரசியல் துறையிலும் தம்மை இன்னும் அடிமைப்படுத்தியே வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறவர்களின் முயற்சிகள் கவிழும். அப்போது விடுதலை உத்வேகம் கிளம்பும். இதன் பயனாக சுயேச்சை தானாகவே உண்டாகும்.
சுயேச்சை யாருக்கு?
தேசியக் கூட்டத்தினருக்கு மட்டுந்தான் சுயேச்சை வேண்டுமென்று கோருகிறார்களே யொழிய, ஒரு இனத்தார் மற்றொரு இனத்தாரோடு பழகும்போது இவர்கள் சுயேச்சை வழங்க மறுக்கிறார்கள். ஒரு இனத்தார் மற்ற இனத்தாருக்கு சுயேச்சை வழங்க வேண்டும் என்று நினைப்பது கூடக் கிடையாது. இந்தச் சுயேச்சையின் பயனாகப் பல இனத்தவர்களுக்குள்ளும் கூட்டுறவு ஏற்படும். ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவரை அடிமைப்படுத்தி வைப்பதும் எளியவரை வலியவர்கள் அடக்கியாளுவதும், இதனால் நீங்கும். தாழ்த்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவரை இது முழுதும் உண்மை. சென்னை மாகாணத்தின் படைகளுக்குப் பெரும்பாலும் சிப்பாய்களைக் கொடுத்து உதவியது தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள்தான். இவர்கள் மத்திய கிழக்கிலும் வடாப்பிரிக்காவிலும் தம் சிறந்த சேவகத்தினால் சிறந்த புகழ் பெற்றிருக்கிறார்கள். விடுதலையை முன்னிட்டும் நியாயத்தை நிலைநாட்டவும், தம் உயிரையுங் கொடுக்கத் துணிந்து போர் முனைக்குத் தாம் போகும்போது, தம் இனத்தவர்கள் இருந்த அதே பரிதாபகரமான நிலையிலேயே இருப்பதை, அவர்கள் போர் முனையிலிருந்து திரும்பி வந்த பிறகும் காணுவார்களானால், அவர்கள் மனம் என்ன பாடுபடும்!
அரசியல்வாதிகளின் மனப்படியே எல்லாம் நடப்பதானால், படையினருக்கு அரசியலில் இடமே கிடையாது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார், தம் ஆதிக்கத்தை ஒப்புக்கொடுக்கும் முன்பு, அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்று உண்டு. அதாவது, அக்கிரமாக்கார எதிரிகளிடமிருந்து இந்த நாட்டை மீட்டவர்களான தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பலரையும், இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு ஏதோ நாட்டிற்குத் தாம் பிரமாதமாகத் தொண்டு செய்துவிட்டதாக வாய்ச் சவடால் வீசும் குறும்பர்களின் ஏதேச்சதிகாரத்திற்கு, உள்ளாகக் கூடாது. அட்லான்டிக் பிரகடனத்தில் குறிக்கப்பட்டுள்ள நான்கு வகை விடுதலைகளும் யுத்தத்தின் ஒருகட்டத்தில் தொகுக்கப்பட்டவையானாலும், எல்லா நாட்டவருக்கும் எல்லா இனத்தவருக்கும் இது பொருந்த வேண்டுமென்னும் நோக்கத்தோடுதான் தொகுக்கப்பட்டது. இது பற்றிச் சந்தேகமே கிடையாது. இந்த விடுதலைகள் சில நாடுகளின் அரசியல் துறைக்கு மட்டுமன்றி, எல்லா நாடுகளின் சமுதாயத் துறைக்கும் பொருந்தியதாக அமைய வேண்டும்.
வறுமை, அச்சம், ஆதிக்கம், மத இழிவு ஆகியவற்றிலிருந்து தாழ்த்தப்பட்டவர்கள் விடுதலைப் பெற வேண்டும். இந்திய மக்களின் சமுதிய சமுதாய வாழ்வில் இந்நான்கு வகை விடுதலைகளும் கைகூட வேண்டுமென்பதுதான் என் மனமார்ந்த கோரிக்கை.
யுத்த சஞ்சிகை, 01 ஜனவரி 1943, பக். 3-5
m
பிரயாணத்தைக் குறைத்தல் அவசியம் யுத்த உதவியில் பெண்கள் பங்கு பஞ்சத்தைப் போக்க வழி
(எழுதியவர்: ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ்)

நாம் செய்ய வேண்டிய உதவிகள் எவை
ஆகவே, இப்போரில் நாம் வெற்றியடைய வீரர்கள் முக்கியமாகையால் வீரர்களைத் திரட்டுதல் அனாவசிமான செலவுகளை நீக்கி, யுத்தத்தில் காயமடைந்துள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை அனுப்பி வைக்கும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் யுத்த நிதிக்கும் பொருளுதவி செய்தல் தேவைக்கு மிஞ்சிய உணவுப் பொருள்களைச் சேமித்த வைக்காமலிருத்தல், பொய் வதந்திகளை நம்பாமலிருத்தல், அவைகளைப் பரவ வொட்டாமல் தடுத்தல் முதலியனவாம். மேலும் எளிதாக எல்லோரும் செய்யக்கூடியது அவசியமற்ற காரியங்களுக்கு வெளியூர் பிரயாணம் செய்யாமலிருத்தல். இம்முறைகளை நாம் கைக் கொள்வோமானால் சீக்கிரமாக வெற்றி பெறுவதற்கு உதவி செய்தவர்களாவோம். யுத்த காரியங்களுக்கு நம்மால் ஏற்படும் அசௌரியங்கள் எவை என்பதை நாம் கவனிக்க வேண்டியது நம் முக்கியக் கடமை. நம் நேச நாடுகள் வெற்றியடையே வேண்டும். நமது நாடு செழிப்பாக வாழ வேண்டுமென்று விரும்பினால் நாம் செய்யக்கூடிய முக்கிய உதவி ரயில் பிரயாணத்தை இந்த யுத்தக் காலத்தில் ஒதுக்கித்தள்ள வேண்டியதுதான். யுத்தத்தை மும்மரமாக நடத்துவதற்கு இரும்பும் மரமும் அவசியம். இவற்றால் செய்யப்படும் பலவிதமான வண்டிகளில் ரயில் வண்டியும் ஒன்று. இன்றைய தினம், நம் நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் வண்டிகளில் பெரும்பாகம் பல யுத்த அரங்கங்களுக்குத் துருப்புகளையும் ஆயுதங்களையும் பல உணவுப் பொருள்களையும் தூக்கிச் சென்ற வண்ணமிருக்கின்றன. ஆகவே, நம் நாட்டில் பொது மக்களின் உபயோகத்திற் கென்று இருந்த ரயில் வண்டிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
நிலக்கரிப் பஞ்சம்
அவ்வாறு குறைந்திருக்கும் ரயில் வண்டிகளுங்கூட, அடிக்கடி ஓட முடியாதவாறு சில தடுக்க முடியாத இடையூறுகளும் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது நிலக்கரிப் பஞ்சம். அவ்வாறு இருந்தும், எண்ணற்ற துருப்புகளை நாலா பக்கங்களிலிருந்து இந்தியாவின் பாதுகாப்புக்காக ஏற்றிச் செல்லும் ரயில் வண்டிகள் இரவும் பகலும் ஓயாமல் ஓடிக்கொண்டே யிருக்கின்றன.
உணவுப் பஞ்சம்
அதோடு தற்போது ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அரிசி, மற்றுமுள்ள உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லவும் விறகு மரம் முதலியவைகளை இதர இடங்களிலிருந்து வேண்டிய இடங்களுக்குக் கொண்டு செல்லவும் தற்போதுள்ள இரயில் வண்டிகள் போதுமானதாயில்லை. நெருக்கடியான இந்நேரத்தில் எதையும் சிந்தித்துப் பாராமல் முக்கியமற்ற காரியங்களுக்கு எல்லாம் ரயில் பிரயாணம் செய்கிறோம்.
ரயில் பிரயாணத்தின் தொல்லை
இம்மாதிரியான பிரயாணத்தினால் ஏற்படும் கஷ்டங்களோ அநேகம். பணத்தைக் கொடுத்து டிக்கெட் வாங்கியும் உட்கார இடமில்லாமல் ஜன நெருக்கத்தில் அகப்பட்டுக்கொண்டு மனிதர்கள் மேல் பெட்டியும், பேழையுமாகச் சகிக்க முடியாத கஷ்டத்தோடு குறித்த இடம்போய்ச் சேருவதற்குள் தலை தப்பியது தம்பிரான் புண்ணிய மென்றாகிவிடுகின்றது. இவ்வளவு சிரமத்தோடும் படாதபாடு பட்டுக்கொண்டும் சில ஜனங்கள் ஏன் பிரயாணம் செய்கின்றார்கள் என்று கவனித்தால், இவர்களின் அறியாமைக்கும், சிரமத்திற்கும் துக்கப்பட வேண்டியிருக்கிறது. இவ்வளவு சிரமத்தையும் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு பிரயாணம் செய்யும் ஜனங்களில் பெரும்பாலோர் போகும் முக்கிய காரியம் என்னவென்று விசாரித்தால், தன் சுற்றத்தாரின் பிள்ளைகளுக்குக் காதுகுத்தல், கோயிலில் திருவிழா, கோயிலுக்குக் குழந்தைக்கு முடியெடுப்பதாகப் பிரார்த்தனை, உறவினருக்கு நோய், நிச்சயதார்த்தம், விடுமுறைக்கு வேடிக்கையாக வெளியூர்பார்க்கப் போதல் போன்ற பதிலையே எதிர்ப்பார்க்கலாம். பணக்காரர்களாகவோ அல்லது உத்தியோகஸ்தர்களாகவோ இருப்பவர் கோடை விடுமுறைக்கோ அல்லது வேறு வேலையாகவோ வெளியூர் போக நேரிட்டால் அவர் தம் மனைவி, மக்களோடல்லமால் தம் பெட்டிகள் படுக்கைகளோடும் பல வேலையாட்களையும் இங்கிருந்தே அழைத்துச் செல்வது வழக்கம்.
பெட்ரோல் பஞ்சம்
யுத்தத்தினால் பெட்ரோல் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் இந்நாளில், பெட்ரோல் கஷ்டமறியாமல் மோட்டார்களைக் கேளிக்கைக்காகவும் பல தூர இடங்களுக்கு அனாவசியமாகச் செல்வதினாலும் பெட்ரோலும் வீணாகச் செலவழிக்கப்படுகின்றன. இம்மாதிரியான விஷயங்களில் குறிப்பாகப் பெண் மக்கள்தான் கூடுமானவரை முயற்சி செய்து முக்கியமற்ற காரியங்களை விலக்க வேண்டும். தேருக்குப் போவதோ, திருவிழா பார்க்கப் போவதோ சிறு காரியங்களுக்கெல்லாம் வெளியூர் போக வேண்டுமென்று ஆண் மக்களை வற்புறுத்திப் பணத்தையும் விரயமாக்கிச் சொல்லொண்ணாக் கஷ்டத்தோடும் ரயில் பிராயணம் செய்யத் துண்டுபவர்கள் பெரும்பாலும் பெண்களே. ஒரு காரியத்திற்குக் கட்டாயம் போய்த்தான் ஆகவேண்டுமென்று தாயாரோ மனைவியோ உபத்திரவம் செய்தால், அச்சங்கடத்தினின்றும் எந்த ஆண் மகனால்தான் மீள முடியும்? ஆகவே, பெண் மக்கள்தான் இவ்விஷயத்தில் சிரத்தை எடுத்துக் கூடுமானவரை அனாவசியப் பிரயாணங்களைத் தவிர்க்க வேண்டும். அம்மாதிரி நாம் செய்வதினால்,
யுத்தத்திற்கு நாம் எவ்வாறு உதவி செய்தவர்களாவோம்?
நாம் எவ்வளவு குறைவாகப் பிரயாணம் செய்கிறமோ, அவ்வளவுக்கு ரயிலில்போதுமான இட வசதியிருக்கும். இப்படி ஏற்படும் இட வசதியை, யுத்த சம்பந்தமான முக்கிய வேலையில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தம் சுற்றத்தாரைவிட்டு நீங்கிப் போருக்குச் செல்லும் வீரர்களை ஏற்றிச் செல்லவும் போரினின்றும் தம் மனைவி, மக்கள், சுற்றத்தாரைக் காண பல நாட்கள் கழித்துத் திரும்பும் வீரர்களை அவரவர்கள் ஊருக்குக் கொண்டு சேர்க்கவும் உணவுப் பஞ்சத்தினால் பீடிக்கப்படும் மாகாணங்களுக்கு உணவுப்பொருட்களைக் கொண்டு செல்லவும் அயல் மாகாணங்களிலிருந்து நமக்கு வேண்டிய பொருட்களை இங்குச் சீக்கிரமே கொண்டு வந்து சேர்க்கவும், யுத்தத்தில் போர் புரியும் வீரர்களுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் நாம் ரயில் வசதி செய்து கொடுத்தவர்களாவோம். பெட்ரோலும் யுத்தத்திற்குப் பல வழிகளிலும் முக்கியமாக இருப்பதால், நாம் நம்மால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு மோட்டார் பிரயாணத்தைக் குறைக்க வேண்டும். ஆகையால் நேசநாடுகள் வெற்றிபெற்று நாமும் சுகமாக வாழவேண்டுமென்று விரும்பினால்,
நம்மாலான உதவி
கூடுமான வரையில் ரயில் பிரயாணத்தைக் குறைத்தல், மோட்டார் பிரயாணத்தையும் குறைத்தல், தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தினால் நாம் பிரயாணம் செய்ய வேண்டிவரினும் தம்மோடு தம் வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு போகாமலிருத்தல் போன்றவைகளே. ஒவ்வொரு உத்தியோகஸ்தரும், பணக்காரரும் ஒவ்வொரு வேலைக்காரனை விட்டுச் சென்றாலும் தினம் சுமார் பல நூறு பேர்கள் பிரயாணம் குறையலாம். இந்நூற்றுக் கணக்கானவர்களில் பயணம் தினம் குறைந்தால் அதனால் ரயில் வண்டிகளில் பல்வேறு இதர காரியங்களுக்கு இட வசதி ஏற்படலாம். யுத்தத்திற்கு அவசியமான காரியமாகச் செல்லும் வீரர்களோ அல்லது தளவாடங்களோ ஏற்றிச் செல்லப்படலாம். ஆகவே, இம்மாதிரியான அனாவசியமான பிரயாணங்களைக் குறைப்பதினால் நாம் அரசாங்கத்தாருக்கும் யுத்தத்திற்கும் பெருத்த உதவி செய்வார்களாவோம். நாம் செய்யும் உதவியினால், இன்னும் அநேக வீரர்களும், யுத்த தளவாடங்களும் உணவுப் பொருள்களும் ஏற்றிச் செல்ல அனுகூலமேற்படுவதனால் நேசநாட்டினருக்கு வெற்றியும் ஏற்படும். ஆகவே, சகோதரிகள் யாவரும் ஒரே மனதாக இக்காரியத்தில் சிரத்தையாக இருத்தல் அவசியம்.
யுத்த சஞ்சிகை, 07 ஜூலை 1944, பக். 5 – 6.
l ko.ragupathi@gmail.com




