மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

29

ருள் பிரிவதற்குக் கொஞ்ச நேரமே இருந்தது. திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டது. செங்கம் செல்வதற்காக வண்டியில் ஏறியிருந்த நான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டேன். வண்டி நகரத்திற்குள் ஊர்ந்து செல்லத் தொடங்கியது. அரைத் தூக்கத்தில் வெளியே பார்த்தேன். வண்டி திருவூடல் தெருவிற்குள் சென்றுகொண்டிருந்தது. திடீரென என் பார்வையில் ‘நத்த மன்னர் மடம்’ என்ற பெயர்ப்பலகை தென்பட்டது. சுதாரிப்பதற்குள் வண்டி நகர்ந்துவிட்டது. ஒரு கணம் துணுக்குற்றேன். சிறுவயதிலிருந்து சுற்றித்திரிந்த நகரத்தில் நாம் எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கும் ஓர் அடையாளம் இருந்திருக்கிறது என்பதே காரணம். அதேவேளையில் அவசரத்தில் பார்த்த பெயர் என்பதால் ஒரு சந்தேகமும் இருந்தது. பிறகு, பகலில் சென்று பார்த்தபோது அங்குக் கிடைத்த தகவல்கள் வேறு தளங்களை நோக்கி இழுத்துச் சென்றன.

பர்வத குலம்

திருவண்ணாமலையில் பல சாதியினருக்கும் மடங்களும் மண்டபங்களும் இருக்கின்றன. அவற்றுள் பார்க்கவ குலம் என்கிற சாதிக்கான மடமே பார்க்கவகுல நத்த மன்னர் மடம் என்றழைக்கப்படுகிறது. மடத்திற்கு வெளியே இப்பெயரே பொறிக்கப்பட்டுள்ளது. பர்வத ராஜ குலத்தினரே பார்க்கவ குலம் என்கிற பெயரில் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். பகுதிக்கேற்பவும் காலத்திற்கேற்பவும் இவர்களின் பெயர்களில் மாற்றங்கள் இருக்கின்றன. சில பகுதிகளில் பெரும் சாதிப் பெயர்களில் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். உடையார், மூப்பனார், நயினார் என்கிற பெயர்களைப் பகுதிக்கேற்பச் சூடியிருக்கின்றனர். ஏற்கெனவே இதே பெயர்களில் வேறு சாதிகள் இருக்கும் பட்சத்தில் வேறொரு பெயரைப் பழைய பெயரோடு சேர்த்து வழங்கிக்கொள்கின்றனர். பார்க்கவ குலம் என்று அடையாளப்படுத்திக்கொண்டாலும் மடத்திற்குள் இருக்கும் சற்றே பழைய பெயர்ப் பலகையில் ‘பற்வத ராஜ அம்சம்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பர்வத ராஜ குலத்தினர் தங்களை உடையார் என்றும் வழங்கிக்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஆங்காங்கு சிறிய எண்ணிக்கையில் வாழும் இவர்கள், இதன் மூலம் பிற பகுதிகளில் வாழும் உடையார்களோடு இணைந்து அடையாளம் பேணுகின்றனர்.

பர்வத ராஜ குலத்தினர் உள்நாட்டுப் பகுதியில் வாழ்ந்த மீனவ சமுதாயமாக அறியப்படுகின்றனர். எண்ணிக்கையளவில் சிறிய வகுப்பினர். அந்த வகையில் மீனவர் சமுதாயத்தின் குறிப்பிடத்தக்கப் பிரிவாகக் கருதப்படும் செம்படவர் என்ற பெயரால் அறியப்பட்டிருக்கின்றனர். படவர் என்பது படகு என்பதிலிருந்து வந்ததாகக் கருதுவர். செம்படவர், சிவன் படவர், குகன் வெள்ளாளர், நாட்டார் என்றெல்லாம் அழைக்கப்பட்டுவந்தாலும் பல்வேறு சாதிகளும் தங்களுக்கெனப் பொதுவாகச் சூடிக்கொள்வதைப் போல பர்வத குலம் அல்லது பார்க்கவ குலம் என்ற பெயரால் தற்காலத்தில் வெளிப்படுகின்றனர். திருவண்ணாமலையில் நாட்டார் என்ற பெயரில் அறியப்படுகின்றனர். திருவண்ணாமலை சிவன் படத் தெருவில் இருக்கிறது. அத்தெரு கருவாட்டு விற்பனைக்குப் பெயர் பெற்றது. செம்படவர் மீன் பிடித்தவர்கள் என்பதன் தொடர்ச்சியாய்க் காய்ந்த மீன் விற்பனை வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோயில் சார்ந்த சிறு வணிகங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

நத்த மன்னர்கள் – மலையமான்கள்

பர்வத ராஜ குலத்தினர் திருவண்ணாமலையில் பண்பாட்டு ரீதியாக முக்கிய உரிமை பெற்றிருக்கின்றனர். அதாவது, திருவண்ணாமலை மலையில் கார்த்திகை தீப நாளில் ஏற்றப்படும் மகாதீபத்தை ஏற்றும் உரிமை பெற்றிருக்கின்றனர். இதேபோல சிதம்பரம் நடராசர் கோயில் தேரோட்டத்திலும் சிறப்புப் பங்களிப்பு பெற்றவர்களாக இருக்கின்றனர். திருவண்ணாமலையில் நத்த மன்னர் மரபினர் என்று கூறிக்கொள்கின்றனர். மற்றபடி நத்த மன்னர் பற்றிய பிம்பமோ, கதையோ, உரிமைக் கோரலோ தற்காலத்தில் அவர்களிடம் இல்லை. திருவண்ணாமலை தவிர்த்த மற்ற பகுதிகளில் தங்களைப் பார்க்கவ குலமாகவோ, உடையாராகவோ சொல்லிக்கொள்பவர்களிடமும் இத்தகையா பற்றிய உரிமைக் கோரல் இல்லை. நத்த என்பது நந்த என்பதோடு தொடர்புடைய சொல் என்ற வகையில் அப்பெயரை மன்னராகக் கூறுகிற மரபை இவர்களிடம் காண்கிறோம். மடத்திலிருந்த ஒருவர் நத்த மன்னன் என்ற பெயரைத் திருக்கோவிலூரில் ஆண்ட மலையமான் என்பதோடு சேர்த்துக் கூறினார். “ஏற்கெனவே கேட்டு வந்தவற்றைச் சொல்கிறேனே ஒழிய மற்ற தகவல்கள் எனக்குத் தெரியாது” என்றும் அவர் கூறினார். மலை என்பதற்கான வடமொழிப் பெயரே பர்வதம். பர்வத குலம் என்று அதனடிப்படையிலேயே வந்திருக்கிறது. மலையமான் மரபினர் என்ற முறையில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலின் பூசக உரிமையையும் பெற்றிருந்தனர்.

இதன் மூலம் ஏற்கெனவே அவ்வை, அதியமான், கபிலர், பாரி ஆகியோரின் கதைகள் நிலவும் திருக்கோவிலூரோடு மலையமான் என்ற பெயரும் இணைகிறது. இக்கதைகள் யாவும் பிற்காலத்தில் உருவானவையே. ஆனால், இவர்கள் அனைவரின் பெயர்களும் சங்கப் பாடல்களில் இடம்பெற்றிருப்பதோடு இப்பிற்கால கதைகளுக்கான மூலங்கள் சிலவற்றையும் சங்கப் பாடல்கள் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இங்கு கூறப்படும் மலையமான் பிற்காலத்தவராகத் தெரிந்தாலும், மலையமான் திருமுடிக்காரி என்ற பெயரில் சங்க நூல்களில் குறிக்கப்படுகிறார். அங்கு மலையமான் என்பது சேர நாட்டுக் குறுநில வம்சத்தில் ஒன்றாக இருக்கிறது. வெவ்வேறு காலங்களில் இதே பெயரில் மன்னர் மரபினர் இருந்திருக்கின்றனர். அவர்கள் பிற்காலத்தில் சோழர்களோடு உறவு ஏற்படுத்திக்கொண்டவர்களாக இருக்கின்றனர். அப்படி உறவை ஏற்படுத்திக்கொண்டவன் இப்பெயரைக் கொண்ட நத்தம் பகுதியை ஆண்ட குறுநில மன்னன் என்றும் கூறுகின்றனர். இதன்படிதான் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் மலையமான் சோழ மரபினரோடு இணைத்துக் காட்டப்படுகிறார். சங்க நூல்கள் வழியாக அறியப்படும் மலையமான் எப்பகுதியை ஆண்டாரெனத் துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், பிற்கால மலையமான்கள் திருக்கோவிலூர் பகுதியை ஆண்டதாகத் தெரிகிறது. இவர்களின் தலைநகரம் மலாடு. பாரி மகளிர் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதான கதை உலவுகிறது. மலையமான் மரபு நெடுங்காலம் நிலவிவந்தவை என்பது மட்டுமல்ல பிற்காலத்தில் மலைமான், சுருதிமான், நத்தமான் என்ற மூன்று பிரிவினராகவும் இருந்துள்ளனர். மான், மன் என்பவை மன்னரைக் குறிக்கும் சுருக்கச் சொற்களாகும். திருக்கோவிலூரில் மலையமான் மரபினர் இருக்க, திருவண்ணாமலை பகுதியில் நத்தமான் மரபினர் இருந்துள்ளனர்.

மலையமானின் திருக்கோவிலூரில்தான் கபிலக்கல் இருக்கிறது. மலையமான் பாரியின் மகளை மணக்கிறான். அதியமானைச் சத்திய புத்திரராகக் குறிப்பிடும் ஜம்பைக் கல்வெட்டும் இங்குதான் இருக்கிறது. இதன்படி மலையமான், பாரி, அதியமான் ஆகிய மன்னர்களின் நினைவுகளும் அவ்வை, கபிலர் ஆகிய புலவர்களின் நினைவுகளும் இருக்கின்றன. நத்தமான்களின் நாட்டிற்கு வடமேற்கே செங்கண்மாத்து வேள் நன்னன் நினைவுகள் இருக்கின்றன. திருக்கோவிலூருக்கு மேற்கே அதியமான் ஆண்ட பகுதிகள் இருக்கின்றன. மொத்தத்தில் இந்த நிலப்பகுதிகள் காடு, மலை என்று இருக்கின்றன. இந்தக் காட்டில் ஆநிரைக்கான பூசல் நடந்திருப்பது குறித்து நடுகற்கள் கிடைக்கின்றன. திருக்கோவிலூர் காட்டின் தொடர்ச்சியில் சாத்தனூர் காட்டில் வேடியப்பன் நடுகல் நிற்கிறது. சாத்தனூருக்கு மேற்கே ஆண்டிப்பட்டியில் உள்ள நத்தமேட்டில் ஓடுகளும் எலும்புகளும் செங்கற்களும் விரவிக் கிடக்கின்றன. மேட்டில் கற்கள் வட்டமாக வைக்கப்பட்ட இடத்தில் கூத்தாண்ட வேடியப்பன் வணங்கப்படுகிறார். வேடியப்பன் என்பது நடுகல் தெய்வத்திற்கு வைக்கப்பட்ட பெயர். புழக்கம் கருதி நீத்து வழிபாடு பெற்றவருக்கு அப்பெயரை வைத்திருக்கின்றனர். மேட்டிற்கு அருகிலுள்ள மண்ணாண்டிப்பட்டியில் பெருங்கற்காலச் சின்னங்கள் இருக்கின்றன. ஆண்டிப்பட்டியில் நடந்த அகழ்வாய்வு மூலம் இவற்றைச் சங்க காலம் என்று கணித்துள்ளனர். இது வணிகப் பெருவழிப்பாதையாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு திருக்கோவிலூர் பகுதி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆண்டிப்பட்டியில் சங்ககால செப்புக் காசுகள் கிடைத்தன. அதனை உள்ளூர் மக்கள் ஒட்டை காலணா என்று குறிப்பிடுகின்றனர். மலையமான்களும் காசுகள் வெளியிட்டிருக்கின்றனர். நந்தனும் காசு வெளியிட்டுள்ளான்.

மலையரசர்களும் எயினர்களும்

மலையமான் மீதான உரிமைக் கோரலைச் சங்க இலக்கிய மலையமான் வரை நீட்டிச் சொல்ல விரும்புகின்றனர் இன்றைய பர்வத ராஜ குலத்தினர். சாதிகளாக இறுக்கம் அடையாத பண்டை காலத்தின் பல்வேறு குழுக்களின் பெயர்களில் ஒன்றாக இப்பெயர் இருந்ததையே பார்க்க முடிகிறது. சங்கப் பாடல்களில் எயினர்கள் குறிப்பிடப்படுகின்றனர். பல இடங்களில் பரவி வாழ்ந்திருந்தாலும் மலையே இவர்களின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. இதன்படி அவர்கள் வேட்டைச் சமூகத்தவர். மலையில் வாழ்ந்த வீரமிக்க வேட்டைக்குடி என்ற முறையில் பின்னாட்களின் மறவர், மலையர்கள் ஆகியோர் இம்மரபோடு சேர்த்து அறியப்படுகின்றனர். அதேவேளையில் இவர்களின் தொடர்ச்சியைப் பறையர்களோடு வைத்து விளக்கும் மரபும் இருக்கிறது. 1901இல் சென்னை மாகாண குடிமதிப்புக் கணக்கின்போது குடிமதிப்பு ஆணையர் பிரான்ஸிஸ் தம் முன்னுரையில், “பறையர் வகுப்பு பழக்க வழக்கங்களில், பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட விவசாய சமூகமான அதை, பொத்தாம் பொதுவான வகைப்பாட்டுக்குள் அடக்குவது அவசரப்பட்ட முடிவாகவே இருக்கும்” என்று கூறிவிட்டு, தொல்குடியான  எயினர்களோடு ஒப்ப வைத்து விளக்கியுள்ளார். எயினர்கள் பிற மக்கள் குழுவிடமிருந்து வேறுபட்டவர்களாகவும், கிராமங்களில் வாழாமல் தமக்கெனக் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்களாகவும் குறிக்கப்படுகின்றனர் என்று கூறிவிட்டு இவர்கள் பறையர் சமூகத்தினரின் முன்னோர்களாக இருந்திருக்கலாம் என்று கணிக்கிறார். எயினர்கள் பாலையில் வாழ்ந்தவர்கள் என்ற முறையில் வறண்ட நிலையை மனதில் வைத்துப் பறையர்களோடு ஒப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், இக்கூற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியதாகிறது. சங்கப் பாடல்களில் பாலையைக் கடந்து பரந்திருந்த குழுவாகவே தெரிகிறது. எயினி ஆதன் என்ற பெயரைப் பார்க்கிறோம். “ஆஅய் எயினன்” (அகம் 181) என்று பாடலடிகளில் குறிப்பிடப்படுவதன் மூலம் ஆய் மரபிலும் ஊடாடியிருப்பதைப் பார்க்கிறோம். எயினர்கள் அரசர்களாக மட்டுமல்லாது புலவர்களாகவும் விளங்கியுள்ளனர். கோபால் செட்டியார் தன்னுடைய ‘ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்’ நூலில் பறையர் இனம் எயினர்களிலிருந்து மருவியது என்கிறார். எயினர்கள் பூர்வீக பல்லவ, சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், பறையர்கள் என்பது அவர்களையே குறிக்கும் என்றும் கூறுகிறார். பர்வத ராஜ குலம் மலையர் குல ஆதியரசன் என்ற வகையில் சங்க இலக்கியத்திற்குச் செல்வது போல மலை என்பதை வைத்தே பறையர்களையும் குறிப்பிடும் போக்கு இருக்கிறது. டாக்டர் ஒப்பார்ட் துரை ‘சமஸ்கிருத பகரியா’ என்ற வார்த்தையிலிருந்து பறையன் என்ற பதம் உண்டானதாகக் கூறுகிறார். பகரியா என்பதற்கு மலைநாடு என்று பொருள்.

சிரமண மரபு

அதேபோல திருக்கோவிலூர் வட்டாரத்தின் மலையமான் அடையாளங்களைச் சைவ – வைணவ மரபோடு மட்டும் சேர்த்துக் கூறப்படுகிறது. உண்மையில் இப்பகுதியில் பௌத்த – ஜைன மரபுகள் செல்வாக்கோடு இருந்தன. அவற்றை உள்வாங்கியே மற்ற மரபுகள் வளர்ந்தன. வீராட்டானம் என்ற மரபு பௌத்தத்தினுடையது. திருக்கோவிலூர் வீரட்டானமுடைய தெய்வத்திற்கு நிலதானம் செய்யப்பட்ட சாசனத்தில் ‘பள்ளிச் சந்தமாகிய இயக்கிப்பட்டி’ என்று குறிக்கப்படுகிறது. அதேபோல அகத்தீஸ்வரம் கோயில் நிலத்தைக் குறிக்கும் சாசனம் ஒன்று ‘கிளவிகுழி பள்ளிச்சந்தம்’ என்றும் குறிக்கிறது. இரண்டும் சிரமண மரபுகளுக்கு அளிக்கப்பட்ட தானத்தைக் குறிக்கின்றன. திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள திருவதிகை, தியாகனூர், உலகிய நல்லூர், சின்ன சேலம் ஆகிய ஊர்களில் புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. வட இந்திய நந்தர்களின் பாடலிபுரம் போலவே தமிழகத்திலும் பாணாஸ் டிரம் என்னும் பண்ருட்டி தமிழக நன்னன் ஆண்ட பகுதியாக இருக்க வேண்டுமென கா.அப்பாதுரை கருதுகிறார். பாதிரி, பாதிரா, பாதிரிப்புலியூர் போன்ற ஊர்கள் இப்பகுதிகளில் இருப்பதை இப்போதும் பார்க்கலாம். ஜம்பையில் ஒரு புத்தர் சிலை இருந்து காணாமல் போயிருக்கிறது. ஜம்பையில் ஓடும் தென்பெண்ணை ஆற்றுக்குத் தென்கரையில் ஆதி திருவரங்கம் இருக்கிறது. இங்கு பௌத்தக் கட்டடக் கலையோடு கூடிய கோயில் இருக்கிறது. சாத்தனூர் என்ற பெயரில் சாத்தன், ஆண்டிப்பட்டி என்ற பெயரிலுள்ள ஆண்டியும் (துறவி) சிரமண மரபுக்கு உரிமையுடையன. மயிலை சீனி.வேங்கடசாமி “திருக்கோயிலூர் பெருமாள் கோயிலிலுள்ள கொடிமரம் சமணருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறது. இது ஆதியில் சமணர் கோயிலாக இருந்திருக்கக் கூடும் என்று ஐயுறுகின்றார். இங்கு அரசாண்ட அரசர்களில் பலர் சமணர்களாக இருந்தனர் என்பதும் கருதத்தக்கது” என்கிறார். திருக்கோயிலூரைச் சுற்றியுள்ள செஞ்சி, திருநாதர்க்குன்று, விழுப்புரம், எண்ணாயிரம் போன்ற சமண மலைகள் குறிப்பிடத்தக்கவை. கார்த்திகை தீபம் என்பது முழுக்க முழுக்க சிரமண மரபு சார்ந்தது. திருவண்ணாமலை தீபம் என்பது சமணத்திலிருந்து சைவம் எடுத்துக்கொண்ட விழா. அதில் நத்த மன்னர் மரபினர் உரிமை பூண்டிருப்பது அர்த்தமுடைய தொடர்பாகவே இருக்கிறது. திருவண்ணாமலை மலையுச்சியில் தீபம் ஏற்றும் இடத்தில் பாதச் சிற்பம் இருக்கிறது. சமணக் குகைகள் கொண்ட மலைகளில் இத்தகைய பாதங்கள் இருக்கும். அப்பாதங்களுக்கு அருகிலேயே தீபங்கள் ஏற்றுவர். திருவண்ணாமலை அருகிலுள்ள போளூர் திருமலை மலை, பொன்னூர் மலை ஆகியவை இதற்கான உதாரணங்களாக உள்ளன. இந்தப் பாத வழிபாடு பின்னர் வைணவத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், திருவண்ணாமலை மலையில் மட்டும் இது சிவனுக்கானதாகச் சொல்லப்படுகிறது. இந்த முரணே திருவண்ணாமலை தீபம் சைவத்துடையது அல்ல என்பதைச் சொல்லிவிடுகிறது.

மயிலை சீனி.வேங்கடசாமி “விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சோழவாண்டிபுரத்தில் (சோழன் + ஆண்டி + புரம்) உள்ள ஆண்டிமலையில் 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள மற்றொரு சாசனம், சித்தவடவன் என்பவர் பாணப்பாடி என்னும் ஊரை இங்குள்ள பிண்டி கடவுளுக்கும் (அருகன்) மாதவருக்கும் தானம் செய்ததைக் கூறுகிறது. சித்தவடவன், வேலி கொங்கராயர் புத்தடிகள் என்று பெயர் பெறுவார். கோவல் நாட்டரசனான சித்தவடவன் என்னும் சேதி அரசனும் மலைய குலோத்பவன் என்று கூறப்படுபவனும் இவரே என்பர். அன்றியும் இவர், சேதி நாட்டு ஓரி குடும்பத்தவர் என்றும், பாரி குடும்பத்தில் பெண் கொண்டவர் என்றும் கூறப்படுகிறார். ராஷ்டிரகூட அரசன் கன்னர தேவர் காலத்தில் (கி.பி. 10ஆம் நூற்றாண்டு) இவ்வரசனுக்குக் கீழ்பட்டு திருக்கோவிலூரை அரசாண்ட மலாட அரசன் சத்திநாதன் என்றும் சித்தவடவன் எனப் பெயருள்ள நரசிம்மவர்மன்தான் இவன் என்றும் சிலர் கருதுகின்றனர்” என்கிறார். அயோத்திதாசர் நந்த மன்னனைப் பௌத்த அரசனாகக் கூறினார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. கார்த்திகை தீபத்தைப் பௌத்த விழாவாகக் கூறி அது பௌத்த அரசனின் முயற்சியால் உருவானதாகக் கூறியதையும் பார்க்கிறோம். அந்தப் பௌத்த அரசன் ஆண்ட ஊரின் பெயரை அவர் மலாடபுரம் என்றும் கூறினார். மலையமான்களின் தலைநகரம் மலாடு என்கிற மலாடபுரம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த மலையமான் வழிவந்தவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் நத்த மன்னர் மரபினரே இன்றும் கார்த்திகை தீபம் உரிமையைத் தக்க வைத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆங்குல மன்னர்களில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நந்தன் என்னும் பெயரில் சில மன்னர்கள் இருந்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை ஆய் மன்னர்களுக்கு நந்தன் என்ற பெயரும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. நாயக்கர் ஆட்சியில் விளாரியில் இருந்த நந்தன் கோட்டை அழிக்கப்பட்டிருக்கிறது.

ஆயர் மரபு

நந்தன், நந்த என்ற பெயரை மற்ற சாதிகளின் தொடர்பிலும் பார்க்கிறோம். குறிப்பாக, கோனார்கள்/ இடையர்கள்/ ஆயர்கள்/ யாதவர்கள் என்றழைக்கப்படும் சமூகத்தவர் வணங்கும் தெய்வப் பெயர்களிலும் புராணக் கதைகளிலும் இப்பெயர் பலமாக ஊடாடுகிறது. இதற்குப் பல தளங்களிலிருந்து மூலங்கள் கிடைக்கின்றன. தஞ்சை கல்வெட்டுகள் நந்தன் என்ற பெயரில் இடையனைக் குறிக்கின்றன. இதற்குச் சான்றாக திருமங்கை சேரி நந்தன் கதை இருக்கிறது. இந்த மன்னன் வெள்ளை ஆடுகளையும் மாடுகளையும் விரும்பி வளர்த்தார். இதை முல்லை நிலமாகிய ஏழில் மலை பாரத்தில் வாழ்ந்த நன்னனிடமும் காண்கிறோம். சங்கப் பாடல்களில் சாதி இருந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், பிற்காலத்திற்கான வேரைச் சங்க குறிப்புகளிலிருந்து எடுத்து நீட்டித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பிற்கால ஔவை பாடலொன்று ‘மெய்வந்த கோவலர்ஞ்’ என்று தொடங்குகிறது. அதில் “தெய்வம் பிறந்த குலங்காணும் நந்தன் திருக்குலமே” என்று பாடுகிறார். ஆயர்களின் உள்ளூர் மரபு வைதீக புராண மரபுகளில் வரும் கண்ணனோடு இணைக்கப்பட்டது. உள்ளூர் மரபு புராணத்தையும், புராணக் கதை உள்ளூர் மரபையும் வளப்படுத்தி தங்களைப் பெருமரபு ஆக்கிக்கொண்டன. இதுவே இன்றைய வைணவ சமயமாக இயங்குகிறது. இதுவல்லாமல் வைணவ மரபு பலவிதங்களில் பௌத்தத்தின் நகலாக உருவெடுத்து தனி மரபாக நிலை நிறுத்திக்கொண்டது. நந்தன் என்கிற பெயரைப் பௌத்தத்தில் பார்க்கிறோம். பின்னால் அப்பெயரை வைணவக் கதைகளில் சந்திக்கிறோம். கிருஷ்ணரின் வளர்ப்புப் பெற்றோர்களாக நந்தன், யசோதை ஆகிய பெயர்களைக் காண்கிறோம். அதேபோல மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று அழைக்கப்படுவோரில் நந்தன் என்பவனும் இருக்கிறான்.

இதன் தொடர்ச்சியாக நந்தகோபாலன், நந்தகோபன் போன்ற பெயர்களைக் காண்கிறோம். இவர் ஆடு, மாடுகள் செறிந்த கோகுலத்தின் செழிப்பான மன்னன். இனக்குழு சமூகத்தின் தொடர்பில் இந்தச் சித்திரத்தைப் பார்க்கலாம். ஆடு மாடுகளைப் பழக்கி மேய்க்கவும், அவற்றைப் பொருளாகக் கருதி கவரவும் – மீட்கவும் செய்த இனக்குழு வாழ்வின் தொடர்பிலிருந்து இந்தத் தொன்மம் உருவாகியிருக்கலாம். மேய்ச்சலுக்குரிய நிலமாக அமைந்த முல்லையில் ஆநிரைக்கான பூசல் நடந்திருக்கின்றன. அக்காலத்தில் வழிநடத்தி – சண்டையிட்டு மடிந்தவர்கள் வழிபாட்டுக்குரியவர்களாக மாற்றப்பட்டனர். பெரும்பாலான நடுகற்கள் அவர்களுக்கே எழுப்பப்பட்டுள்ளன. இத்தகைய இனக்குழு வாழ்வின் தலைவர்கள் மன்னர்களாகக் கருதப்பட்டனர். மடிந்த பின்னர் தெய்வமாக்கப்பட்டனர். இம்மரபு புராணிகக் கதைக்கும் முன்னோடியாக இருந்திருக்கலாம். சங்கப் பாடல்களில் நன்னன் மரபு இதற்கு நெருக்கமாக இருக்கிறது. ஜைன மரபில் காளை (ரிஷபம்) முக்கிய இடம்பெறுகிறது. முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதரின் குறியீடு காளை. இது பழங்குடி மரபு தொடர்பின் எச்சமாக இருக்கலாம். நன்னன் கதை புழங்கும் முல்லை நிலமான செங்கத்தில் ரிஷபரேஷ்வர் என்ற பெயரில் ஆதிநாதர் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நந்தகோபன் என்ற பெயர் புத்தருக்கும் உண்டு. நந்தன் என்கிற தொடர்பில் நந்தகோபன் இருப்பதைப் போல, நாதன் என்ற பெயரும் இருக்கிறது. நந்தனும் நாதனும் மாற்றி மாற்றி வழங்கப்படும் இடங்களும் இருக்கின்றன. கும்பகோணம் அருகே நாதன் கோயில் இருக்கிறது. இங்குள்ள கடவுளை ஜெகந்நாத பெருமாள் என்றழைக்கின்றனர். அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் நந்தன் கோயில் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெவ்வேறு குழுத் தொடர்பில் இடம்பெறும் நந்தன் பெயர் அல்லது அதைப் போலச் செய்யும் பெயர்கள் எப்போதிலிருந்து சாதியோடு தொடர்புப்படுத்தப்பட்டன, அதிலும் கீழ்நிலையாக்கப்பட்ட பறையர் என்னும் பெயரோடு தொடர்புப்படுத்தப்பட்டன என்னும் கேள்விகள் முக்கியமானவை. நந்தன், நாதன் போன்ற பெயர்களில் அழைக்கப்படும் கோயில்களில் பாணாழ்வார் போன்ற தலித் அடியார் கதைகள் வழங்கப்படுகின்றன. மாடு வளர்த்த, மாடு மேய்த்த மரபு பிற்காலத்தில் சாதி முறை இறுக்கமாக்கப்பட்டபோது பண்ணையில் மாடு மேய்த்த, அவற்றைப் பராமரித்த மரபாகக் கதைவழி கீழிறக்கப்பட்டிருக்கலாம். அதேபோல மாட்டைத் தின்பவர்களாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கலாம். பின்னர் அதன் தோலால் இசைக்கருவி செய்து வாசித்தவர்களாகவும் யோசிக்கப்பட்டிருக்கலாம். மேலும், நந்தன் தோல் காசு வெளியிட்டான் என்பதையும் இத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.

முத்தரையர்

முத்தரையர் மரபுக்கும் பறையர் மரபுக்குமிடையேயான தொடர்பினைக் காட்டும் சான்றுகளும் உண்டு. தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்த முக்கியமான சிற்றரச மரபு முத்தரையர்களுடையது. சிற்றரச மரபுக்கேயுரிய பழங்குடிவழி எச்சங்களைக் கொண்ட சமூகம் இது. சாதிகள் இறுக்கம் பெறாத முன்பு, பின்னாட்களில் சாதிகளாக மாறிய குழுக்களோடு இவர்களின் அடையாளம் ஊடாடியிருக்கிறது. முத்தரையர் என்பதை மூத்த + அரைசர், மூத்த + அரையர் என்றெல்லாம் பிரிக்கலாம். இப்பெயரே இவர்களின் பழைமையைக் காட்டுகிறது. இவர்கள் களப்பிரர்களின் படைத்தளபதிகளாக அறியப்படுகின்றனர். களப்பிரர் மறைந்து முத்தரையர் என்ற புதிய கிளை உருவாகி, சோழ நாட்டின் சில பகுதிகளில் ஆட்சி செய்தனர் என்கிறார் மு.அருணாச்சலம். கி.பி. 7,8ஆம் நூற்றாண்டுகளில் இன்றைய திருக்கோவலூராக இருக்கலாம் என்று கருதப்படுகிற மேற்கோவலூர் பகுதிகளை ஆண்ட வாணர் குல அரசனின் பெயர் வாணகோ முத்தரைசர். இதன்படி வாணர் குலத்தினருக்கும் முத்தரையர் குலத்தினருக்கும் இடையேயான ஊடாட்டத்தைப் பார்க்கிறோம். தொடர்ந்து மலையமான் நந்தர்கள், முத்தரையர்கள் இடையேயான தொடர்பையும் யோசிக்க முடிகிறது. பிடாரி வழிபாடு பலராலும் பின்பற்றப்படுகிறது. காலப்போக்கில் பல பிடாரி அம்மன்கள் மாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மீது கலந்தன. தஞ்சை வல்லத்தில் ஏகாலி அதாவது, நந்தனின் தாய் பெயரில் இன்று ஏகவீரி என்னும் பெயரில் முத்தரையர்கள் வழிபடுகின்றனர். ஏகாலி என்பது துணி வெளுப்போரைக் குறிப்பிடும் சாதிப் பெயராகவும் இருக்கிறது. ஏகாத்தம்மன் வழிபாட்டு மரபிலிருந்து வந்த பெயராகவும் இது இருக்கலாம். ஏகாத்தம்மன் பிடாரியேயாகும். சென்னை பகுதியில் பிடாரி திருவிழாக்களில் மாரிக்குத் தாலிக் கூரை சார்த்தி மரியாதை பெறுபவர்களாகப் பறையர்கள் இருப்பதாக அபிதான சிந்தாமணி கூறுகிறது. திருப்பெரும்புதூர் வட்டம் நந்திமேடு என்ற இடத்தில் பிடாரி வள்ளியம்மன் கோயில் இன்றைக்கும் இருக்கிறது. இவ்வாறு முத்தரையர் பறையர் ஊடாட்டத்தின் வழியாக நந்தன் பற்றிய சிறு சித்திரம் கிடைக்கிறது.

சிறு குழுக்கள்

நந்தனை முடிவெட்டும் குலமாகக் கூறும் கதையும் இருக்கிறது. வடபுலத்தின் நந்த வம்சக் கதையில் முடிவெட்டுபவராக இருந்து அரசராக மாறுபவருக்குப் பிறப்பவனே நந்தன். அபிதான சிந்தாமணி நந்தன் பற்றிக் குறிப்பிடும்போது “மகாநந்திக்குச் சூத்திரப் பெண்ணிடம் உதித்துப் பிறகு மகாபத்மன் என்கிற பெயரை அடைந்து சத்திரியரை நாசஞ்செய்தவன். மகத தேசாதிபதி இவனுக்குச் சுமாலி முதலிய எட்டுக் குமாரர்” (ப.92) என்கிறது. இதுவும் வட பகுதி நந்தன் பற்றிய சித்திரிப்பிலிருந்து உருவான பதிவேயாகும்.

அதேபோல சக்கிலியர் என்கிற அருந்ததியரோடு இணைக்கும் குறிப்புகளும் உண்டு. மிக அரிதாக நந்தனை அருந்ததியர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கேரளா ஏழில் மலை அருகிலுள்ள பாரம் என்ற ஊரில் கோட்டப்பாறா என்ற சிறு மேட்டிடம் உள்ளது. இங்கு வழங்கப்படும் செவிவழிச் செய்திகளை பி.எல்.சாமி கூறுகிறார். அதில் மடிகர் என்ற சாதியினர் கோட்டை கட்டி வாழ்ந்தனர் என்றும், அவர்களில் ஓர் அரசன் நன்னன் என்றும், அவன் தோலில் நாணயங்கள் செய்து வெளியிட்டான் என்றும் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். அந்த மடிகர்கள் இன்று தோல் தொழில் செய்யும் சாதியாகக் கருதப்படுகின்றனர். நன்னன் பறம்பில் சாணைக்கல் செய்த காரோடர்களே, பிற்காலத்தில் பறம்பர் என்றழைக்கப்பட்டதாக பி.எல்.சாமி கணிக்கிறார். காரோடன்மார்கள் சாணைக்கல் தொழிலை விட்டுவிட்டு, தோல் உறை தைக்கும் உறைகாரர் ஆனார்கள் என்று கூறிவிட்டு இவர்களே பிற்காலத்தில் மடிகர்கள் ஆக்கப்பட்டிருக்கலாம் என்கிறார். இந்த மடிகர்கள் தோல் தொழில் சார்ந்து அருந்ததியர்களோடு ஒப்ப வைத்துப் பார்க்கப்படுகின்றனர். பறையர் சாதியினரோடு அருந்ததியர்களுக்கு இருக்கும் பொதுத்தன்மை கருதி அடையாளங்களை இருவரிடையே மாற்றி மாற்றி வழங்குவதுண்டு. ரேணுகாம்பாள் கதையில் ரேணுகாம்பாள் தலை வெட்டப்பட்டு மீண்டும் ஒட்டப்படும் உடல் பறையருடையது என்று பல வடிவங்களில் கூறப்பட்டிருக்க, சில வடிவங்களில் அருந்ததியர் – வண்ணார் வகுப்பைச் சேர்ந்த பெண்ணுடையதாகக் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இதே கதையின் ஆந்திரப் பகுதி வடிவங்களில் ஒட்டப்படும் உடல் அருந்ததியர் அல்லது மாதிகாவுடையது என்று நேரடியாகச் சொல்லப்படுகிறது.

II

இவ்விடத்தில் சாதிகளின் உருவாக்கம் பற்றிச் சில கருத்துகளைத் தொகுத்துக்கொள்ளலாம். சாதியின் உருவாக்கம் பற்றிப் பல கோட்பாடுகள் இருக்கின்றன. அவை விவாதத்திற்குரியவை. ஆரம்பத்தில் பல குழுக்கள் இருந்திருக்கின்றன. இவற்றை நாம் இனக்குழுக்கள் என்கிறோம். இவற்றில் தங்களுக்கிடையே தொடர்புடைய குழுக்களும், தொடர்பில் இல்லாத குழுக்களும் இருந்தன. இவற்றிடையே சில பொதுத்தன்மைகளும் தனித்தன்மைகளும் தேவைக்கேற்ப இருந்திருக்கலாம். அவை திட்டமிட்டும் திட்டமிடாமலும் உருவாகியிருக்கலாம். எப்படியிருப்பினும் அவை இன்றைய சாதிகள் போல் இறுக்கமாக இருந்திருக்கவில்லை என்பது உண்மை. சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் மெல்ல மெல்ல உருப்பெற்று, பின்னர் திட்டவட்டமான நிலையை அவை அடைந்திருக்க வேண்டும். இவ்வாறான நீண்ட பயணத்தில் ஆரம்பத்திலிருந்து வந்த குழுக்கள் சாதிகளாக வளர்ச்சி பெற்றிருக்கலாம் அல்லது இன்னொன்றோடு கலந்து புதியவற்றின் / பெரியவற்றின் அடையாளத்தை ஏற்றிருக்கலாம். சில குழுக்கள் மறைந்திருக்கலாம். பல சேர்ந்து ஒன்றாகியிருப்பதைப் போல, ஒன்று பலவாகவும் மாறியிருக்கின்றன. சாதிகளுக்குக் கிடைக்கும் அனுகூலங்கள் இவற்றைத் தீர்மானித்திருக்கின்றன. சாதிமுறை கட்டுத்திட்டமான பின்னர் அதனைப் பார்த்தவர்கள் தனிக்குழுக்களாக மாறிக்கொள்ளவே விரும்பியிருக்கின்றனர். அதேபோல சாதிகளுக்குச் சூட்டிக்கொள்ளப்படும் பெயர்கள் சார்ந்தும் நலன்கள் இருந்திருக்கின்றன. ஒரு பெயரில் அதுவரை அறியப்படாத சாதிகள், புதியதொரு பெயரைச் சூட்டிக்கொண்டு அதன்படி சமூகத் தகுதியை மாற்றிக்கொண்டிருக்கின்றன. சாதியமைப்பு உருவானபோது சாதிகள் எவ்வாறு இருந்தனவோ அப்படியே இருப்பதில்லை. சாதியை நடைமுறைதான் தீர்மானிக்கிறது. அது மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இந்தப் பின்னணியிலிருந்து நந்தன் என்ற பெயர் பல குழுக்களுக்கும் ஆகி வந்ததைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியிருக்கிறது (நன்னன் – நந்தன்). இதற்குச் சமயங்களும் காரணமாகியிருக்கின்றன. அரசின் ஆதரவைப் பெற புதிதான குழு அரச மரபைக் குறிக்கும் பெயரைச் சூடிக்கொள்கிறது. நாளடைவில் புதிய குழு பழைய குழுவோடு சேர்த்து அறியப்படுகிறது.

வரலாற்றில் காணப்படும் ஒரு பெயரை இன்றைய நிலையை மனதில் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட சாதியின் இருத்தலாக மட்டும் கருதிவிடுகிறோம். உண்மையில், அப்பெயருக்கு அன்றைய நிலையில் என்ன அர்த்தம் என்பதை நாம் அறியோம். இன்றைய சாதியைச் சேர்த்து அன்றைய நிலையில் குறிப்பிட்ட பொதுப்பெயராக இருக்கலாம் அல்லது அன்றைக்கு ஒரு பெயரில் குறிப்பிடப்பட்டுப் பல்வேறு காரணங்களால் இன்றைக்கு வேறு பெயருக்கும் மாறியிருக்கலாம். ஒரு பெரிய குழுவிற்குள் அடங்கியுள்ள சிறிய குழுவின் பெயர் கிடைக்கப்பட்டு, அதுவே மொத்தக் குழுவின் பெயராக மாறிப்போயிருக்கலாம். இவ்வாறெல்லாம் நடந்திருப்பதற்கான எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன என்பதை வரலாற்று அனுபவங்களும் சான்றுகளும் காட்டுகின்றன. 19ஆம் நூற்றாண்டுத் தொடங்கி நடந்துவரும் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புகளிலும் சாதிவாரி கணக்கெடுப்புகளிலும் நடக்கும் மாற்றங்களைப் பார்த்தாலே வரலாறு முழுவதும் என்ன நடந்திருக்க முடியும் என்று யூகித்துக்கொள்ளலாம். பல்வேறு பிரிவுகள் ஒன்றாகிப் புதிய பெயருக்கு மாறி அதுவே வேறொரு சாதியாகிவிட்டிருக்கின்றன. இன்றைக்கும் சிறு சிறு சாதிகள் எண்ணிக்கை பெரும்பான்மைக்காகப் பெருஞ்சாதி ஒன்றோடு ஏதேனும் தொடர்பைக் காட்டிச் சேர்ந்துகொள்வதைப் பார்க்கிறோம். ஏதேனும் தொடர்பு காட்டுவதென்றால் எந்தச் சாதியிலிருந்தும் ஏதாவதொரு தொடர்பைக் கண்டு சொல்லிவிடலாம். ஆனால், தொடர்பு இருப்பதால் மட்டுமே சேர்வதில்லை. எந்தச் சாதியோடு சேர்ந்தால் லாபம் என்பதைப் பார்த்து அதற்கேற்ற தொடர்பைக் கண்டுபிடித்துச் சேர்கிறார்கள். யாருமே தலித் சாதிகளோடு சேர விரும்புவதில்லை என்பதைப் பார்த்தாலே இதைப் புரிந்துகொண்டுவிட முடியும். தலித் சாதிகள் மீது பொதுச் சமூகம் காட்டும் புறக்கணிப்பும் இழிவும் அவர்களோடு யாரையும் சேரவிடுவதில்லை. காட்டிலிருந்து சமவெளிக்கு வந்து வாழப் பழகும் ஒரு பழங்குடி குழு, சமவெளியிலிருக்கும் அதிகார சாதியோடு சேர்ந்துகொள்ளுமே ஒழிய, தலித் சாதியோடு சேராது.

பழமொழிகள்

சாதிகள் பற்றிப் பல பழமொழிகள் சமூகத்தில் உலவுகின்றன. அவை சாதியை / சாதிகளைப் பெருமையாகவோ, சிறுமையாகவோ சொல்வதாக இருக்கும். சாதி பழமொழிகள் பெரும்பாலும் இடத்திற்கேற்ப, வழங்குகிற சாதிக்கேற்ப மாறும். ஒரு பழமொழியை வழங்கும் சாதி, அதில் தன்னைப் பெருமையாகவும் எதிரிலிருக்கும் சாதியை இழிவாகவோ / கேலியாகவோ சொல்லும். அதே பழமொழியை எதிரிலிருக்கும் சாதி அப்படியே மாற்றி வழங்கிக்கொள்ளும். அந்த வகையில் சில சாதி பழமொழிகளில் சாதிகளின் தோற்றக் கதைகள் சொல்லப்படும். அவற்றில் எந்தச் சாதி மூத்தது என்பதைக் கூறும் பழமொழிகள் இருப்பதை அறிவோம். அந்தப் பழமொழிகளில் மூப்பு மட்டுமல்ல, இன்னொரு முக்கியமான விசயமும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு சாதியிலிருந்து மற்றொரு சாதி பிரிந்து வளர்ந்தது என்பதைக் கூறும் பழமொழிகள் இருக்கின்றன. பழமொழிகளை வழக்காறு என்று கொண்டால் அவற்றில் புலப்படும் இத்தகவலை வரலாற்றின் எச்சமாக எடுத்துக்கொள்ளலாம். சாதிகள் உருவாக்கத்திற்குப் பலவிதங்களில் காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய நாம், அவற்றில் ஒன்றாக ஒரு மூலத்திலிருந்து கிளைத்த சாதிகள் என்ற கருத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். “நாலாந் தலைமுறையைப் பார், நாவிதனும் சித்தப்பன் ஆவான்” என்கிறது ஒரு பழமொழி. சாதியின் மாறிவரும் தன்மையை இப்பழமொழி காட்டுகிறது. “தோண்டிக் கள்ளைத் தொடர்ந்து குடித்தால் பாண்டியன் மகனும் பறையன் ஆவான்” என்கிறது மற்றொரு பழமொழி.

இதன்படி பார்த்தால் சாதிகளுக்கிடையே கலப்பும் மாற்றமும் பெயர்ச் சூடலும் நடந்துவந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. நந்தன் என்ற பெயர் பல மரபுகளிலும் வழங்கப்பட்டிருக்கலாம். பிறகு, அது ஏதேனும் மரபைப் பற்றிக்கொண்டு வளர்ந்து வந்திருக்கலாம். இதனை நந்தன் பெயரைக் கொண்டிருக்கும் சாதிகளின் பின்புலத்தில் வைத்துத் தேடும்போதே தெரிந்துகொள்ள முடியும். அதற்கான வெளிப்படையான சான்றுகள் நம்மிடம் இல்லை. மலையமான் மரபில் பர்வத ராஜ குலம் போன்ற சாதியின் தொடர்ச்சியைக் காணும் அதே வேளையில், வேறு சாதி தொடர்பையும் பார்க்கிறோம். மலையமான் மரபுகளில் ஒன்றான சுருதிமான் மரபைக் குறிக்கும் பட்டங்களின் பெயர்களில் அரையன், விழுப்பறையன், பேரரையன் போன்றவற்றைப் பார்க்கிறோம். விழுப்பறையன் என்பதைப் பறையர்கள் உரிமை கோருகின்றனர். இதன்படி ஒரு மரபிலிருந்து பல பிரிவுகள் உருவாகும்போது இடத்திற்கேற்ப ஒரு பிரிவு ஒரு சாதியாகவும், மற்றொரு பிரிவு மற்றொரு சாதியாகவும் கூட மாறியிருக்கின்றன என்பதை யூகிக்க முடிகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ராஜேந்திர சோழன் ‘சோழ விழுப்பறையன்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல குறிப்பிட்ட பிரிவின் பெயர் பல சாதிகளிலும் இருந்திருக்கின்றன. அதாவது, பல சாதிகளிலும் மூப்பர்கள் இருந்திருக்கிறார்கள்.

மற்றொரு தகவலையும் இங்கு பார்க்க வேண்டியிருக்கிறது. மூல சாதியைக் குறிப்பிடும் பழமொழிகளில் பறையர் சாதியின் பெயர் பெருமளவு இடம்பெற்றிருக்கிறது. “பாப்பானுக்கு மூப்பான் பறையன்” என்ற பழமொழியை நாமறிவோம். “பறை முத்தி பள்ளு ஆச்சு, பள்ளு முத்தி பள்ளியாச்சு, பள்ளி முத்தி முதலியாச்சு” என்றொரு பழமொழியும் கூறப்படுவதுண்டு. இந்தப் பழமொழியை ஒவ்வொரு சாதியும் தங்களை முன்னே வைத்து மாற்றி வழங்கிக்கொள்ளும். ஆனால், ஏதோவொரு வகையில் பறை என்பதற்கு மூலத் தகுதி தரப்படும். பறையன் என்பதை இன்றைய பொருளில் அல்லாமல் விரித்து ஆராய வேண்டும். வெவ்வேறு மரபுகளில் பறையர் என்பதை முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ கொண்ட பெயர்கள் இருக்கின்றன. அதேபோல பறையர் மரபுகளில் வெவ்வேறு பெயர்கள் ஊடாடியிருப்பதையும் பார்க்கலாம். கொங்கு வெள்ளாள காமிண்ட பறையர் என்ற பிரிவைக் காட்டும் கல்வெட்டு இருப்பது இதற்கான சான்றாகும். நந்தன் பெயரின் ஊடாட்டத்தை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ளலாம்.

இடங்கை – வலங்கை பிரிவுகள்

இன்னும் ஆழமான புரிதலுக்கு தென்னிந்தியப் பகுதிகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் நிலவி மறைந்த இடங்கை வலங்கை சாதிப் பிரிவுகள் பற்றிய தரவுகள் தேவைப்படுகின்றன. எந்தப் பிரிவில் இடம்பெறுகிறது என்பதற்கேற்ப சாதிகளுக்கு உரிமைகள் தரப்பட்டிருக்கின்றன. ஒரு பெயரில் அறியப்படும் சாதி ஒரு பகுதியில் பெற்றிருந்த பட்டங்களை, உரிமைகளை மற்றொரு பகுதியில் அல்லது மற்றொரு காலத்தில் பெற்றிருக்கவில்லை. இந்தவகையில் பட்டங்களும் (அதுவே பெயர்களாக) உரிமைகளும் மாறியிருக்கின்றன. வெவ்வேறு பகுதிகளிலிருந்த மாறுபட்ட சாதிகள் ஒரே உரிமையை அடைந்திருந்தன. இந்தப் பட்டங்களும் சாதிகளும் ஒரே சாதிக்குரியதாக உறைந்துவிட்ட காலத்திற்கு முந்தைய சான்றுகள் கிடைத்தால்தான் இதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். தற்போதிருக்கும் பிரதி வழிப்பட்ட சாதி முறை படிநிலை வரிசையில் அமைந்திருக்கிறது. ஆனால், இடங்கை வலங்கை சாதி முறை கிடைமட்ட அளவில் இருந்திருக்கிறது. உண்மையில் நந்தன் உள்ளிட்ட பல மரபுகளைப் புரிந்துகொள்ள இவ்விரண்டு சாதி முறைகளைக் குறித்த உண்மைகள் கிடைத்தால்தான் சாத்தியமாகும். சாதிகள், நந்தன் பற்றிய பிற்கால கதைகளை இடங்கை – வலங்கை பின்புலத்தைப் பிரித்துவிட்டுப் புரிந்துகொள்ள முடியாது.

சாதி மீறிய மணவுறவுகள்

பிற்கால நந்த மன்னன் கதைகளில் பல பொதுத்தன்மைகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது சாதி மீறிய மணவுறவும், அவ்வாறு பிறந்தோர் மீதான சமூகக் கண்ணோட்டமும். வேதநாயக சாஸ்திரியால் கி.பி. 1798ஐ ஒட்டிய ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட வலங்கை சரித்திரத்தில் சொல்லப்படும் நந்தன் கதையில் இரண்டு முறை சாதிய மீறல் காணப்படுகிறது. முதலாவதாக, தியாகச் சாம்பானுடைய மகளுக்கும் சோழ ராஜாவுக்கும் திருமணம் நடக்கிறது. இதில் தியாகச் சாம்பான் பறையர் குலம் என்பதால் அவன் மகளும் அந்தக் குலமாகவே அறியப்படுகிறாள். அவளைச் சோழ மன்னன் மணம் புரிந்தான் என்பதால் அது சாதி மீறிய உறவாகிறது. இந்த ஒவ்வாமை அவர்களுக்கு மகனாகப் பிறக்கும் நந்தன் மீதும் நீடிக்கிறது. எனவே, அவனை மன்னனின் வாரிசாக ஏற்க முடியாத நிலை இருந்துவருகிறது. ஆனால், அமைச்சர்களின் ஆலோசனைகளையும் மீறி நந்தனுக்கு மன்னனாக முடிசூட்டிவிடுகிறான் சோழன். சோழனின் இறப்பிற்குப் பிறகு ஆட்சி புரிந்து வரும்போது தன்மீதான ஒவ்வாமையைக் களைவதற்கு ஏற்ப சாதிக்கொரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறான். இது இரண்டாவது மீறல். அவ்வாறு செய்வதன் மூலம் எல்லோருடனும் ஒன்றாவதோடு எல்லாச் சாதியினருக்கும் உறவினராகி விட முடியும் என்று யோசிக்கிறான். பொதுவாக, மன்னர்கள் பல குலங்களிலிருந்து திருமண உறவுகளை மேற்கொண்டு வாரிசுகளைப் பெற்றெடுத்து வந்திருக்கிறார்கள் என்றாலும், நந்தனுடைய பிறப்பிலேயே பிரச்சினை இருந்துவருவது இதற்குத் தடையாக இருக்கிறது. நாயக்கர் காலத்தில் நடந்த சாதியாணவக் கொலைகளே கதைப்பாடல்களாக மாற்றப்பட்டிருந்த காலமும் இதுவே. சாதி இழிவுகள் இறுக்கமாக மாறத் தொடங்கிய காலத்தின் வெளிப்பாடுகள் என இவற்றைக் கொள்ளலாம். இந்தச் சிக்கலுக்குள் சிக்கியவர்கள் அதிலிருந்து மீள விரும்பியிருக்கிறார்கள் என்பதையே நந்தனின் விருப்பம் காட்டுகிறது. எல்லாச் சாதிகளின் அங்கீகாரத்தையும் பெறுவதன் மூலம் அதிலிருந்து மீள முடியுமென அவர் கருதியிருக்கிறார்.

முதலில் வெள்ளாளர் பெண்ணை மணமுடித்தால் மற்ற சாதியார் தடையில்லாமல் பெண் கொடுப்பார்கள் என்று கருதிய நந்தன் வெள்ளாளர் குலத்தில் பெண் கேட்டான். சமூகத்தில் வெள்ளாளர்கள் பெற்றிருந்த தகுதியை இது காட்டுகிறது. மன்னனுக்குப் பெண் கொடுக்காவிட்டால் பிரச்சினை, கொடுத்தாலும் அவமானம் என்று கருதிய வெள்ளாளர்கள் ஒரு தந்திரத்தை மனதில் எண்ணிக்கொண்டு மணம் செய்து தர ஒப்பினார்கள். நந்தன் தன் சாதியார்களோடு சேர்ந்து வந்து வெற்றிலை பாக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்கள். இதற்கிடையில் கம்மாளர்களின் உதவியைப் பெற்று பொறிப் பந்தல் அமைத்து நந்தனைக் கொன்றார்கள். ஆனால், கம்மாளர்கள் செய்த உதவியை வெள்ளாளர்கள் மறந்தார்கள். இந்தக் கதை முழுக்க முழுக்க இடங்கை – வலங்கை பின்புலத்தில் பிறந்த கதையாகும். அவற்றில் சாதிகள் பெற்ற நிலைப்பேறலை, பூசலைப் பரவலாக அறிகிறோம். இதே கதை நாஞ்சில் நாட்டிலும் இருந்தது. நாஞ்சில் வள்ளுவன் நாஞ்சில் நாட்டில் குடியேறிய வெள்ளாளர்களிடம் பெண் கேட்டான். அதற்கு வெள்ளாளர்கள் சூழ்ச்சி செய்து கொன்றுவிட்டனர் என்ற கதை நிலவுகிறது. சங்கப் பாடல்களில் நாஞ்சில் வள்ளுவன் என்ற பெயர் இடம்பெறுகிறது என்றாலும் பிற்கால பின்புலத்தில் வள்ளுவன் என்பது பறையர் வகுப்பில் இடம்பெறும் ஒரு பிரிவாகும். இதன்படி நந்தன் என்ற பெயர் இங்கு வள்ளுவன் என்று மாறியிருக்கிறது. நந்திராசா கதையும் நந்தன் கதை போலவே இருக்கிறது. மன்னன் ஒருவனின் மனைவிக்கு ஏழு மகன்கள். வைப்பாட்டிக்கு ஒரே மகன். அவன் பெயர் நந்தி. மனைவியின் பிள்ளைகளை மன்னன் ஆக்காமல் வைப்பாட்டிக்கு அளித்த உறுதிமொழியின்படி நந்தியை மன்னனாக்குகிறான் தந்தை. தந்தை இறந்து போன பின்னால் ஏழு மகன்களில் ஆறு பேரைக் கொன்றுவிடுகிறான் நந்தி. ஏழாமவன் ஒடி ஒளிந்துகொண்டு பழி வாங்கும் நேரத்திற்காகக் காத்திருக்கத் தொடங்குகிறான். கவியால் அறம் பாடும் திறனை வளர்த்துக்கொள்கிறான். நந்தி, பாடல்களுக்கு மயங்குவான் என்பதை வைத்துப் பாடல்களை இயற்றி, தேவரடியார் ஒருவர் மூலம் நந்தியைக் கேட்க வைக்கிறான். பாடல்களில் மயங்கும் நந்தி நூறாவது பாடலுக்காகக் காத்திருக்கிறான். அப்பாடல் கேட்க வேண்டுமானால் ஒரு பந்தலின் கீழிருந்து அக்னியெறியும் கட்டையில் படுக்க வேண்டுமென்றனர். அதைப் போல் செய்து பாட்டைக் கேட்டு இறந்து போகிறான் நந்தி.

இந்தக் கதைகளில் சில பொதுத்தன்மைகள் இருக்கின்றன. இந்த எல்லா வடிவங்களிலும் கொல்லப்படுவது தொடர்ந்து இடம்பெறுகிறது. அந்தக் கொலைகளில் குறிப்பிட்ட தொழிற்நுட்பம் இயங்குகிறது. இடங்கை – வலங்கை புராணக் கதைகளில் பிரதானமாக இடம்பெறும் சாதிகளில் ஒன்று கம்மாளர். நந்தன் கதைகளில் பறையர்களுக்கு எதிராகவும், வெள்ளாளர்களுக்கு ஆதரவாகவும் கம்மாளர்கள் செயல்பட்டுள்ளனர். நந்தன் கதையை ஒட்டி சோழப் பகுதிகளில் ‘பொறியைத் தட்டுடா புத்திக் கெட்ட ஆசாரி’ (கம்மாளர்களில் ஒரு பிரிவினர்) என்ற வழக்கு செல்வாக்கு பெற்றது. இதுவே, நாஞ்சில் பகுதியில் பொறியைத் தட்டுடா புத்தியுள்ள ஆசாரி என்றிருந்தது. பறையர் வலங்கைப் பிரிவில் இருந்தனர். கம்மாளர்கள் இடங்கை பிரிவில் இருந்தனர். நந்தன் கதையில் எதிரும் புதிருமாகத் தென்படும் இச்சாதியினர், இடங்கை வலங்கை பிரிவுகளிலும் எதிரும் புதிருமாக இருந்தனர். எனவே, நந்தன் கதையில் தென்படும் மோதலை இடங்கை – வலங்கை பிரிவின் எதிரொலியாகவும் கருதலாம். அதேபோல இவ்விரு பிரிவினர்களுக்கான மோதலில் பறையர் மீதான எதிர்ப்பு அழுத்தம் பெற்றிருப்பதை நந்தன் கதையின் உள்ளடக்கமும் பரவலாக்கமும் உணர்த்துகின்றன. இக்கதைகள் நிலவிய காலகட்டத்திலேயே பார்ப்பாரையும் பறையரையும் எதிரிடையாக வைத்துக் கதைகளும் பாடல்களும் (கபிலரகவல், பாய்ச்சலூர் பதிகம், சித்தர் பாடல்கள்) பிறந்தன என்பதையும் இவற்றோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். மேலும், இப்பாடல்களில் பறையர்களுக்கு எதிராகப் பார்ப்பார் சொல்லப்பட்ட இக்கதைகளில் வேளாளர் சொல்லப்படுவது கவனிக்கத்தக்க நிலையில், அதேபோல பாடல்களில் வராத கம்மாளர்கள் இக்கதைகளில் வருகிறார்கள். கம்மாளர்கள் பிராமணர்களோடு பூணூல் அணியும் உரிமைக்காகப் பூசலிட்டவர்கள். பறையர்களில் பூசகப் பிரிவினர் பூணூல் அணிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கம்மாளர்கள் பறையர்களுக்கு எதிரிடையாக நிற்க இதுவும் காரணமா என்றும் பார்க்க வேண்டும். மொத்தத்தில் இடங்கை – வலங்கை பூசலின் காலத்தில் பறையர்கள் மீதான சாதிய இறுக்கத்திற்காக நந்தன் கதை பயன்படுத்தப்பட்டதா என்கிற திசையிலும் இதனை ஆராய வேண்டும். பொய்ப் பந்தல், கன்னம் வைத்தல் போன்ற தொழிற்நுட்பங்கள் மூலம் நந்தனை நெருக்குவதைப் பார்க்கும்போது கைவினைப் பிரிவினர் தங்களுடைய எதிர் பிரிவினர் மீது தொடுத்த விரோதமாகவும் இதனைப் பார்க்கலாம். இந்தச் சாவுகள் சதி செய்யாமல் நடக்கவில்லை. இந்தச் சதி என்பதன் பொருளையும் பார்க்க வேண்டும்.

தொடரும்…

l stalinrajangam@gmail.com

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger