ஈரப்பதமற்ற வானத்தின் மீதான
பாலை நிலத்துச் சிறுவனின் அழுகை
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இன்னும் காதுகளில்,
எல்லாமே
நெருக்கத்தில் பார்க்க முடிகிறது
நெருக்கத்தில் கேட்க முடிகிறது
நெருக்கத்தில் உணர முடிகிறது.
எல்லா உணர்ச்சிகளும் நொடிப்பொழுதாகும்
தருணங்களில்
இப்பொழுது
உயிர்களைக் கொன்று
வேடிக்கை காட்டுகிறார்கள்.
l
குண்டு வீழ்த்திய
இடிந்த கட்டடக் குவியலில்
யாரை முகர்ந்து தேடிக்கொண்டிருக்கிறது
தப்பிய நாய்?
l
நண்பர்களே கவனியுங்கள்…
உங்களை அமைதியாக இருக்கச் சொல்லப்படும் சொற்களை நான்
அறவே வெறுக்கிறேன்.
வீட்டின் முதியோர்கள் தஸ்பீஹ் எண்ணிக்கொண்டிருந்த
ஒளித்துலங்கும் நேரத்தில்,
வேட்டைத் துப்பாக்கி ஓர் உயிரின் இதயத்தை நோக்கிக் குறிவைத்த பிறகு
நீங்கள் குரல் எழுப்பியே தீர வேண்டும்.
ஓர் உயிர் விழும்போது
அத்தனை பறவைகளும் வெகுண்டெழுந்து எதிர்ப்பாக
மரத்திலிருந்து விண்ணில் சிறகசைத்துப் பறக்குமே, அதுபோல…
அதிகாலை உதயத்தின் ஒளி போய்ச் சேர முடியாத
இருள் பகுதிகளைத் தொடும் பாங்கிசை போல…
உங்கள் அதிரும் குரலினால் அதைச் செய்யுங்கள்.
l
அண்ணாந்து பார்க்காதவனுக்கு ஏது நட்சத்திரம்?
பகல் மேகங்களை யார் கண்டது?
புல்வெளியில் மல்லாந்து வானம் பார்க்கும்
ஒரு கணத்திற்காகக் காத்திருக்கிறது மனம்.
மழைக்கன்றி அண்ணாந்து பார்ப்பதில்லை நிலம்.
பிரிதொரு தேசம்போல நெருப்பும் சாம்பலும்
கூரைகளின் மேல் உதிர்வதில்லை.
மரணத்தின் ‘சிறப்புச் சத்தங்கள்’ இங்கு ஒலிக்கவில்லை.
பனி அடர்ந்த தெருக்களில்
இன்னமும் சுவர்க்கோழிகள்தான் பாடிக்கொண்டிருக்கின்றன.
வேவு பார்க்கும் உடலில்லாத் தலைகள்
வீடுகளுக்கு மேல் வட்டமிடும் சாபம் இங்கு நிகழவில்லை.
பதுங்கு குழிகளின் ஈரமும் பயமும் இன்னும் அண்டவில்லை.
போர் விமானம் கண்டு நடுங்கும் சிறுவர்கள் எங்களிடம் இல்லை.
விமானச் சத்தத்தில் அடுக்களைக்கு ஓடி
அம்மாவின் கால்களைக் கட்டிக்கொள்ளும் பிஞ்சுகளும் இங்கில்லை.
நாளை என்ற கவலைக்கு மேல்
அறையின் எல்லைக்குள் மின்விசிறிச் சத்தத்தில்
எப்படியோ கனிந்துவிடுகிறது தூக்கம்.
l
எவ்வளவு நடுக்கம், எவ்வளவு பயம்,
எவ்வளவு குளிர், எவ்வளவு சுமை,
எவ்வளவு கண்ணீர், எவ்வளவு தூக்கம்,
எவ்வளவு பாதுகாப்பின்மை…
நடுநிசி நிலவொளியில்,
அடர் இருள் பாலையின்
உதிரும் மணல் காற்றில் அலைந்து,
இரவோடு இரவாக விரையும் போர் விமானங்களுக்குத் தப்பி,
பாங்கிசைக்கக் காத்திருக்கும் இந்நகருக்குள் வந்திருக்கிறான் அவன்.
ஏதோ ஒரு வீட்டின் அழைப்பு மணியை
அழுத்தத் தயங்கி நின்றுகொண்டிருக்கும் அந்தச் சிறுவனுக்கு,
அவனருகே துணையிருக்க –
அவ்வீட்டின் கதவை அல்லாஹ் நாட வேண்டும்.
(இயக்குநர், திரைக்கதையாசிரியர் நசீம் அஹ்மத்பூர் அவர்களுக்குச் சமர்ப்பணம்)
] seenuramasamy1975@gmail.com




