உல்குலானுக்கு முடிவு இல்லை பிர்சாவுக்குச் சாவு இல்லை

சாந்தி சண்முகம்

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த முதல் ஆதிக்குடியான பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை ‘காட்டில் உரிமை’ எனும் தலைப்பில் மிகவும் சுவாரசியமான நாவலாக்கியிருக்கிறார் மகாசுவேதா தேவி. இது சாகித்திய அகாதெமி விருதுபெற்ற வங்க நாவல். பிர்சாவின் பிறப்பு 1875இல் ராஞ்சியின் லோகர்தகா எனும் சிறிய மலைக்கிராமத்தில் நிகழ்ந்தது. பிர்சாவின் பிறந்தநாளான நவம்பர் 15 அன்று இன்றைய ஜார்கண்ட் மாநிலம் உருவானது. பிர்சா முண்டா விமான நிலையம், பிர்சா பல்கலைக்கழகம் என பிர்சாவின் வரலாறு ராஞ்சி முழுவதும் பிரபலமானது.

பிரிட்டிஷ் கொடுங்கோலர்களால் விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்த பிர்சா, காலராவால் மாண்டுவிட்டதாக வெளியாகும் அறிக்கை அங்கே பெரும் பதற்றத்தை உருவாக்குகிறது. 25 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த பிர்சாவின் மரணத்திலிருந்து இந்த நாவல் துவங்குகிறது. இது நாயக பிம்பத்தை முன்வைத்திருப்பதால் வழக்கமான நாவல் வடிவத்தில் இருந்து பெரிதும் மாறுபடுகிறது. விவரணைகள் அதிகமின்றிச் சம்பவங்களும் காட்சிகளும் நிறைந்த சுவாரசியம் குன்றாத படைப்பு.

பிர்சாவின் முன்னோர்களான சொட்டியாவும் நாகுவும் புலி, பன்றி, கரடி முதலான விலங்குகளும், பூவரசு, குறிஞ்சி, தேவதாரு மாதிரியான மரங்களும் நிறைந்த அடர்ந்த காட்டு நிலத்தை வெட்டிப் பண்படுத்தி விவசாயம் செய்தார்கள். அதன் காரணமாகவே அந்நிலம் சோட்டா நாக்பூர் என அழைக்கப்பட்டது. அப்போது எல்லாம் எளிமையாக இருந்தது. அவர்கள் காடுகளில் வேட்டையாடுவார்கள். மாடு மேய்ப்பார்கள். வயல் வெளிகளில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடித் திரிவார்கள். அவர்கள் தங்களுக்கென முண்டாக் குடியிருப்புகளை உருவாக்கினார்கள். அதைக் ‘கூட்காட்டிக் கிராமங்கள்’ என அழைத்தனர். அங்கு மக்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் தலைமுறைகளை வளர்த்தெடுத்து அந்தக் காட்டின் உரிமையாளர்களாக இருந்தனர்.

அவர்கள் சிங்போங்கா என்ற ஆதி தெய்வத்தை வழிபட்டனர். ஆதியில் ஒருநாள் அத்தெய்வம் செங்கெல்தா எனும் நெருப்பு மழையைப் பொழிந்தது. பூமியை நெருப்பு சூழ்ந்தது. அந்நெருப்பில் எல்லா மனிதர்களும் எரிந்து சாம்பலாயினர். அங்கிருந்த நண்டுக்குழியில் ஒரு முண்டா இளைஞனும் யுவதியும் மட்டும் பிழைத்திருந்தனர். அவர்கள் மூலமாக மனித இனம் மீண்டும் தழைக்கப்போவதாக சிங்போங்கா வானத்திலிருந்து அறிவித்தார். அவர் மழையைப் பொழிய வைத்துப் பூமியைக் குளிரச் செய்தார். அவர்கள் நண்டுக்குழியில் இருந்து வெளியே வந்தபோது காடு, மலை, மிருகம், புழு, பூச்சி, காய், பழம் என்று பூமி மீண்டும் புதியதாய்ப் பிறந்திருந்தது.

உலகின் பெரும்பாலான கடவுள் நம்பிக்கைகளில் சொல்லப்பட்ட அதே மாதிரியான கதைகளில்தான் முண்டாக்களும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களின் வழித்தோன்றலான சுகானா முண்டாவுக்கும், கர்மி முண்டாவுக்கும் பிறந்த குழந்தைதான் பிர்சா முண்டா. ஆனால், சுகானாவின் காலத்தில் காட்டின் உரிமை அவர்களிடத்தில் இல்லாதிருந்தது. அவர்களின் கூட்காட்டிக் கிராமங்களெல்லாம் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் நசிந்துவிட்டன. அவர்கள் கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

அவர்கள் முண்டாரி மொழி பேசுபவர்களாகவும், சிங்போங்கா தெய்வத்தை வழிபடுபவர்களாகவும், காட்டோ எனும் ஒருவகை தானியத்தை மட்டுமே உண்பவர்களாகவும், இடுப்புக்குக் கீழே ஒரு துண்டு துணியை உடுத்தும் அளவுக்குச் சொந்த நிலத்திலேயே ஒடுக்கப்பட்டனர். காட்டின் உரிமைகள் மறுக்கப்பட்டு, காட்டோவுடன் சேர்த்துச் சமைக்க ஒருபிடி உப்புக் கூட கிடைக்கப்பெறாதவர்களாக வீழ்ந்தனர்.

1893 – 94 ஆண்டுகளில் பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்ட நிலப் பிரபு சட்டம்தான் அவர்களை அவர்கள் நிலங்களிலேயே பண்ணையடிமைகளாக மாற்றியது. அவர்கள் நிலத்திற்கான வரியைச் செலுத்த வேண்டுமென ஆணை வந்ததும், படிப்பறிவற்ற அவர்களிடம் வட்டிக்குப் பணத்தைக் கொடுத்த லேவாதேவிக்காரர்களும் ஜமீன்தார்களும் படிப்படியாக அவர்கள் நிலங்களை அபகரித்துவிட்டனர். நிலமெங்கும் அநீதியின் கரிய நிழல் படியத் துவங்கியது.

பிர்சா சிறுவயதில் மாடுகளை மேய்த்துக்கொண்டும் குழலூதிக்கொண்டும் காடுகளில் திரிகிறார். தங்கள் இனமக்களின் துன்பங்களைப் போக்கக் கல்வி கற்க வேண்டுமென ஜெர்மன் மிஷன் பள்ளியில் சேருகிறார். காட்டோவுக்குச் சேர்த்துக்கொள்ள மூட்டை மூட்டையாக உப்பைக் கொண்டுவருவேன் என அவனது தாய் கர்மியிடமும் நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டு பள்ளிக்கூடம் செல்கிறார். சிறுவயது முதலே தங்கள் இனம் படும் துயரத்தைப் பார்த்துவந்த பிர்ஸாவுக்குள் ஒரு தீக்கங்கு உலைந்துகொண்டே இருந்தது.

மிஷனரிகள் வழியாக மதமாற்றம் அடைந்தாலும் அது விடுதலைக்கு வித்திடவில்லை என்பதை நாளடைவில் பிர்சா உணர ஆரம்பித்தார். கல்வி கற்ற பல முண்டாக்கள் கூட காலனியாதிக்கத்தின் அடிவருடிகளாக மாறிவிடும் நிலைமை இருப்பதாலும், கல்வி மட்டுமே அவர்களின் விடுதலைக்குப் பயன்படாது என்று நினைத்தும் அதிலிருந்து வெளியேறி கிராமத்திற்கே வந்துவிடுகிறார். வைணவத் துறவியிடம் சேர்ந்து பூநூல் போட்டுக்கொண்டபோதும் அவர் மனம் அமைதியுறவில்லை.

அநீதி தலைதூக்கும்போது பகவான் தோன்றுவார் என்று கதைகளில் கேட்டிருந்த பிர்சா, ஒருகட்டத்தில் தன்னைத் தானே ‘தர்த்தி ஆபா’ எனும் பகவானாக அறிவித்துக்கொண்டார். அவரின் போதனைகளைக் கேட்கக் கிராமங்கள்தோறும் மக்கள் குவிந்தனர். அவர்கள் எல்லோரும் ‘பிர்ஸாயித்துகள்’ ஆனார்கள். அவர்கள் அனைவரிடமும் புரட்சியை உண்டாக்கக் கூடிய வலிமை இருப்பதைக் கண்டு பிர்சா கலகம் செய்ய நினைக்கிறார். அதற்கு ‘உல்குலான் புரட்சி’ எனப் பெயரிடுகிறார்.

அவர்களின் முன்னோரான தானி முண்டா, சிறுவயதிலிருந்தே பிர்சாவுக்குள்ளிருந்த பகவானை அடையாளம் கண்டுகொண்டிருந்தார். தானி முண்டா பல கலகங்களைக் கண்டவர். அவர் சாந்தலர்கள் செய்த ‘ஹூல்’ கலகத்தை அறிந்திருந்தார். சர்தார்கள் செய்த ‘முல்க்கி லடாயி’ கலகத்தை அறிந்திருந்தார். இப்போது பிர்சா முண்டா அறிவித்திருப்பது ‘உல்குலான்’. இது நடக்க வேண்டுமென்றுதான் தானி முண்டா பல ஆண்டுகளாக உயிரோடு இருந்திருக்கிறார். எட்டிக்காயின் நச்சு எளிதில் ஆளைக் கொல்லும் விசயத்தைத் தானி முண்டா அனைவருக்கும் அறிவித்தார். பிர்ஸாயித்துகள் காடுகள் முழுவதும் உள்ள எட்டி மரத்தை வெட்டிச் சாய்த்து விசம் தோய்ந்த வில் அம்புகளை உருவாக்கினார்கள்.

அவர்கள் துரைமார்களை எதிர்க்க வேண்டியதாய் இருந்தது. லேவாதேவிக்காரர்களையும் (Moneylender) எதிர்க்க வேண்டியதாயிருந்தது. அவர்களோடு சேர்ந்து திக்குகளையும் சர்க்காரையும் எதிர்க்க வேண்டியதாய் இருந்தது. முண்டாக்களுக்குள்ளேயே சர்க்காரின் அடிமையாய் மாறிப்போனவர்களையும் எதிர்க்க வேண்டியிருந்தது. இவை எல்லாவற்றிற்கும் அவர்களிடம் இருந்த ஒரே ஆயுதம் அடிமைத்தனத்திற்கு எதிரான உரிமைக்குரலும், ஆயிரக்கணக்கில் அவர்களே தயாரித்த வில் அம்புகளும் மட்டுமே. துப்பாக்கிகளின் முனையில் வில் அம்புகள் தோற்றுப் போகும் என்று அவர்கள் அஞ்சவில்லை. 1895இல் முண்டா கலகம் ஆரம்பமானது. சுமார் ஏழாயிரத்துக்கும் மேலான பிர்ஸாயித்துகள் பிர்சாவின் தலைமையின் கீழ் புரட்சிக்களத்தில் நின்றனர். அவர்களின் கலகம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது.

1899ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று பிர்ஸாயித்துகள் மிக முக்கியமான கலகத்தை ஆரம்பித்தனர். கத்தோலிக்க நிறுவனங்கள் மீதும் அவர்கள் அம்பெய்தினார்கள். அதில் மிக முக்கியமானது, குன்ட்டி காவல் நிலையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அதில் ஒரு காவலதிகாரி மாண்டுவிடுகிறார். அதன் பிறகு முண்டாக்களின் கலகத்தை ஒட்டுமொத்தமாக முடக்க பிரிட்டிஷ் ஆதிக்க வர்க்கம் இராணுவத்தினரையும் களத்தில் இறக்கிவிடுகிறது. பிர்ஸாயித்துகளாகத் தங்களை அறிவித்துக்கொண்ட முண்டாக்கள் மிகப்பெரும் யுத்தத்தை டோம்பாரி மலைப்பகுதியில் நிகழ்த்தத் திட்டமிடுகின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்கள் பிர்சாவோடு இணைந்து போர் செய்கிறார்கள். மலைப் பள்ளத்தாக்குகளில் பதுங்கியிருந்து கொரில்லா தாக்குதல் நிகழ்த்துகிறார்கள். துப்பாக்கிகளின் முன்பு அம்புகள் தோற்றுப்போகும் என்று அறிந்துதான் தாக்குதல் நிகழ்த்துகிறார்கள். ஏனெனில், போரில் வெற்றி பெற்றவர்கள் ஆவணங்களின் வழியே அறியப்பெறுவார்கள். ஆனால், தோல்வியுற்றவர்களோ மக்களின் ரத்தத்திலும், பசியிலும், வறுமையிலும் அறியப்படுவார்கள் என்பதை முண்டாக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்கள் உயிரைத் துறக்கவும் அஞ்சுவதில்லை. டோம்பாரிப் படுகொலைக் களத்தில் பிர்சா உயிர் பிழைக்கிறார். ஆனாலும் 1900இல் கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாகப் பல மாதச் சித்ரவதைக்குப் பிறகு ஜூன் 9 அன்று காலராவால் இறந்துவிட்டதாக ஆவணங்களில் பதியப்படுகிறார். பிர்சாவின் மரணத்தில் வெளிப்பட்டது துயரங்கள் அல்ல. மாறாக அது நினைவுறுத்துவது முண்டாக்களின் பாடல்கள். அம்மணமான முண்டா சிறுவனின் வெளுத்த தோல். உப்புச் சப்பற்ற காட்டோக் கஞ்சி. கர்ப்பத்தையும், தலைக்கு மேல் நெல் மூட்டைகளையும் ஒருங்கே சுமந்து செல்லும் முண்டா பெண்ணொருத்தி. உல்குலானுக்கு முடிவில்லை. பிர்சாவுக்குச் சாவில்லை.

] shanregal@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger