நலமா உந்தன் நெஞ்சம்
எனது மோசமான நாட்களில்
பூங்கா மேசைகள் மீதும்
கம்பி எண்ணியபோதும்
வேசிகளோடு வாழ்ந்தபோதும்
எனக்குள் ஏதோ ஒரு அமைதி இருந்தது –
அதை சந்தோசம் என்றெல்லாம்
சொல்லிவிட மாட்டேன் –
அது, என்ன நடந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் இருந்த ஆழ்மனதின்
அமைதி
தொழிற்சாலைகள் ஆகட்டும்
பெண்களோடு உறவு முறிந்த தருணங்கள் ஆகட்டும்
இவற்றை எதிர்கொள்ள
அந்த ஆழ்மனதின் அமைதி
உதவியது.
அதே அமைதிதான்
போரின்போதும்
போதையின்போதும்
மூத்திரச் சந்து சண்டைகளின்போதும்
மருத்துவமனையில் கிடந்தபோதும்
என்னை மீட்டெடுத்தது.
பெயர் தெரியா ஊரின்
பாழடைந்த விடுதி அறையில் விழித்து
காலரைத் தூக்கிவிடுதல்-
நிச்சயமாக இது அசாதாரணமான
மனநிலைதான்
அப்படியே சாலையைக் கடந்து
ஒரு பழைய பார்பரின்
உடைந்த கண்ணாடி முன் நின்று
காண்கிறேன் என்னை, கேவலமாய்,
எதுவுமே நடக்காதது போல் சிரித்துக்கொண்டு.
ம்ம் இறுதியில் எது முக்கியம் என்றால்
நெருப்பினில் நீந்தும் நெஞ்சம்
கொண்டாயா என்பதுதான்.
m
நீலநிறப்பட்சி
நெஞ்சுக்குள் இருக்கும் நீலநிறப்பட்சி
வெளிவரத் துடிக்கிறது
ஆனால் என்னை மீறி அவன் வெளிவருவது
அவ்வளவு எளிதல்ல
அங்கேயே இரு, யாரும் உன்னைப் பார்த்துவிட அனுமதியேன் என்று சொல்லிவிடுவேன்.
நெஞ்சுக்குள் இருக்கும் நீலநிறப்பட்சி
வெளிவரத் துடிக்கிறது
ஆனால் அவன்மீது விஸ்கியை ஊற்றி,
சிகரெட் புகையை உள்ளிழுத்து விடுவேன்
வேசிகளும், கள்ளுக்கடைக்காரர்களும்
மளிகைக் கடைக்காரர்களும்
அவன் இருப்பை
அறிந்ததே இல்லை.
நெஞ்சுக்குள் இருக்கும் நீலநிறப்பட்சி
வெளிவரத் துடிக்கிறது
ஆனால் என்னை மீறி அவன் வெளிவருவது
அவ்வளவு எளிதல்ல
அவனிடம் கடிந்துகொள்வேன்
மறைந்துகொள்,
என்னை மடையனாக்கப் பார்க்கிறாயா நீ?
எனது பணிகளைப் பாழாக்க வேண்டுமா உனக்கு?
ஐரோப்பாவில் எனது புத்தக விற்பனையைச்
சீர்குலைக்க வேண்டுமா என்ன?
நெஞ்சுக்குள் இருக்கும் நீலநிறப்பட்சி
வெளிவரத் துடிக்கிறது,
ஆனால் நான் மிகவும் தந்திரமானவன், அவனைச் சில சமயங்களில் இரவில் மட்டுமே
வெளியே விடுவேன்
எல்லோரும் உறங்கிய பின்னர்.
உனது இருப்பை நான் அறிவேன், எனவே
கவலை கொள்ளாதே என்று
ஆறுதலாய்ச் சொல்வேன்.
மீண்டும் வந்த வழியே அனுப்பி வைப்பேன் அவனை
ஆனால் இப்போது சிறிதாய் நெஞ்சுக்குள் நச்சரிக்கிறான்
இப்படித்தான் எங்கள் இரகசிய ஒப்பந்தத்தோடு
நாங்கள் இணைந்தே உறங்குவோம்
இது போதும்
ஒரு ஆணை அழ வைக்க, ஆனால் நான்
அழ மாட்டேன்,
நீங்க எப்டி?
m
ஆக, எழுத்தாளர் ஆவணுமா உனக்கு?
எல்லாத்தையும் தாண்டி வார்த்தைகள் வெடித்துக்கொண்டு
வரவில்லை எனில் அதைச் செய்யாதே..
மனசுலயும், மண்டைலயும்,
வாயிலயும் வயித்துலயும் இருந்து
தானா வரவில்லை எனில் அதைச் செய்யாதே…
கணினி திரைய வெறுமனே பாத்துக்கிட்டு,
இல்லனா பேப்பர் பேனாவைக் கைல வச்சிக்கிட்டு
மூளையப் பிழிஞ்சு வார்த்தைய உரிஞ்சணும் என்றால் அதைச் செய்யாதே
பணத்துக்காகவும், பேர் புகழுக்காகவும்
பண்றனா
பண்ணாத.
பொண்ணுங்களோட படுக்கறதுக்குன்னா பண்ணாத.
திருப்பித் திருப்பித் திருத்தித் திருத்தி
எழுத வேண்டும் எனில் அதைச் செய்யாதே.
எழுதணும் என்று நினைத்தாலே சலிப்பா இருக்கா
எழுதாத.
அவுங்கள மாரி எழுதணும், இவுங்கள மாரி எழுதணும் என்று நினைத்தால்
அந்த எண்ணத்தை மொத்தமாகத் தலைமுழுகிவிடு.
உன்னிலிருந்து ஒளிக்கீற்று பாய்ந்தோடிவர காத்திருக்க வேண்டுமெனில்
எந்தச் சலனமும் அற்றுக் காத்திரு.
அது நடக்கலையா, விட்டுட்டு
வேற வேலையப் பாரு.
உன் பொண்டாட்டி கிட்டயோ, இல்ல புருசன் கிட்டயோ, இல்ல காதலன் கிட்டயோ,
இல்ல காதலி கிட்டயோ, இல்ல அப்பன் ஆத்தா கிட்டயோ, இல்ல யாரா வேனா இருக்கட்டும்
அவுங்க கிட்ட மொதல்ல ஒருவாட்டி படிச்சுக் காட்டணும் என்று நினைத்தால்
நீ தயாராக இல்லை.
பல எழுத்தாளர்கள் போல் இராதே,
தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும்
பல்லாயிரக்கணக்கான மானுட பதர்கள் போலும் இராதே,
சும்மா பாசாங்கு காட்டிட்டு, மதமதனு இருந்துகிட்டு
மட்டுப்படுத்தப்பட்ட நார்சிசத்தால் நாசமா போய்டாத.
உன்னைப் போன்றோரால்தான் உலக புத்தகங்கள்
புழுபூத்துக் கிடக்கிறது.
அதுக்கு உணவளிக்காதே.
அதை மட்டும் செஞ்சிடாத.
ஆன்மாவின் ஆழத்திலிருந்து ஆர்ப்பரித்துக்கொண்டு வரவில்லை எனில்,
சும்மா இருப்பது பைத்தியம் பிடிக்க வைக்கல,
தற்கொலை இல்லனா கொலை பண்ண தூண்டல
அப்டின்னா அதைப் பண்ணாத.
உன்னில் இருக்கும் சூரியன்
அடிவயிற்றை ஆட்கொள்ளும் வரை
அதைச் செய்யாதே.
நேரம் வரும்போது,
நீ ரட்சிக்கப்பட்டவனாய் இருந்தால்
அது தானாக நிகழும்
அதுவே அதை நிகழ்த்திக்கொண்டே இருக்கும்,
ஒன்னு நீ செத்துருவ
இல்லனா உனக்குள்ள அது செத்துடும்.
வேற வழியே இல்ல
வேற வழி இருந்ததா சரித்திரமே இல்ல.
எல்லோரும் இருந்தும் யாரும் இல்லை
எலும்பு, அதுக்கு மேல கொஞ்சம் சத
அதுக்குள்ள ஒரு மூளைய வச்சிட்டு
அதுகூட
சில சமயம் மனசும்,
பொண்ணுங்க, பூஜாடிகளைச் சுவரில் அடித்து உடைக்கிறாளுங்க
ஆம்பளைங்க, அதீதமாகக் குடிக்கிறானுங்க
யாருமே அவருக்கானவர்களை
அடைவதில்லை
ஆனால்
கட்டிலில் ஏறியும் இறங்கியும்
தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
சதை எலும்பைச் சூழ்ந்துள்ளது
சதை சதைக்கு மேலாய் எதையோ தேடுகிறது.
ஆனால், வாய்ப்பே இல்ல:
எல்லாருக்கும் ஒரே விதிதான்.
யாருமே அவருக்கானவர்களை
அடையப்போவதே இல்லை.
குப்பைத்தொட்டிகள் நிறைகின்றன
சாக்கடைகள் நிறைகின்றன
பைத்தியக்கார விடுதிகள் நிறைகின்றன
ஆஸ்பத்திரிகள் நிறைகின்றன
சுடுகாடுகள் நிறைகின்றன
வேறெதுவும் நிறைவதேயில்லை.
] keerthivasan1209@gmail.com





