“மேய எம்மோம் எடங் கெடந்தாலும், இண்டு இடுக்குல பூந்துதான் மேயிவீங்க. கட்டுன ரெண்டாம் நாளே ஒடஞ்ச செவுத்து மேல ஏறி நிக்கிறியே… தவறி கீழ வுழுந்து காலு கீலு ஒடஞ்சா என்ன செய்யிறது. ஒன்னாட்டம்தான அதுவோளும், கும்பலா மேயிது பாரு. நீ ஏன் எப்ப பாத்தாலும் கால தூக்குறதயே பொழப்பா வச்சிருக்க. ஒருநாள் இல்ல ஒருநாள் ஒங் கால ஒடச்சி முழுங்கி பொலாச்சி வச்சி கட்றேன் இரு” எனப் புலம்பிக்கொண்டே வந்தான் காளி.
இவ்வளவு நிதியில் இவரால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் என்கிற பலகை தாங்கிய ஏரியின் தடுப்புகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடந்தன. எஞ்சிய சுவற்றின் மீதேறி, ஏரியின் தென்கோடி மூலையில் பலவாண்டுகளாய் நிற்கும் புளியமரத்தின் தாழ்ந்த கிளையின் நுனிக் கொழுந்தை, இரண்டு கால்களைத் தூக்கியும், இரண்டு கால்களை ஊன்றியும் லாவிப் பிடித்து மென்றுகொண்டிருந்தது ஒரு ஆடு. சற்றுத் தள்ளி ஆறுமுகக் கள்ளியின் ஒவ்வொரு முள் வரிசைக்கும் இடைப்பட்ட வெற்றிடத்தைச் சாமர்த்தியமாகக் கடித்துத் தின்றுகொண்டிருந்தன சில ஆடுகள். ஒரு கொரா குட்டி மட்டும், தாயாட்டின் பால் மடியைச் சுழன்று சுழன்று முட்டிக்கொண்டிருந்தது. எந்த இடரும் யாருக்கும் தராமல், இரை தேடுவதையே தன் முழுமூச்சாய் எண்ணிப் பரபரவென மேயும் இவ்வாடுகளின் மேய்ப்பன்தான் காளி என்கிற காளிதாஸ்.
வரும் வழியில் பறித்த ஆறுமுகக் கள்ளிப் பூவைக் கையில் வைத்திருந்தான். காக்கி கால்சட்டை, மேல் சட்டை அணியாமல் மேலே எப்போதும் ஒரு துண்டைப் போட்டிருப்பான். தோளில் கிடந்த அலக்குக் கழியைப் புளியமத்தில் சாய்த்து வைத்துவிட்டு, ஆடுகளை ஒன்றாகச் சேர்க்கக் குரல் எழுப்பினான். இவன் கையில் வைத்திருந்த பூவைப் பார்த்த ஆடுகள் ஓடி வந்தன. பூவைப் புளியமரப் பொந்தில் செருகிவிட்டு, கிழக்கே அவுரிதொட்டிக்கு ஆடுகளை ஓட்டினான்.
மழைக்காலங்களில், எங்கே எங்கள் ஓடுதளமென நெளியும் சிறு வாய்க்கால்களின் நீர், பெருமணல்களை நீக்கிவிட்டுச் சிறு மணல்களை அங்கங்கு தேக்கி வைத்துவிட்டுச் சிறிது நாள்களிலேயே காய்ந்துவிடும். அச்சிறுமணல் வாய்க்கால் வழியாக, ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன ஆடுகள்.
பிஞ்சாகவும்; இளசாகவும்; பதமாகவுமெனக் காய்த்துப் பெருந்தோப்பாக நிற்கும் பனைமரங்கள். கிழவனின் கை, கால்களைப் போல் தோல் ஒட்டிய எலும்புகள் கணக்காய் பரவி நிற்கும் துரிஞ்சி. நிழலையும் வெக்கையையும் ஒருங்கே தரும் கருவேலம். வாது கருப்பும் பாப்பாத்தி அம்மனும் வீற்றிருக்கும் கிளுவ மரம். இவற்றைக் கடந்துதான் அவுரிதொட்டிக்குச் செல்ல வேண்டும்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





