சில புத்தகங்கள் புதிய தகவல்களைக் கொடுக்கின்றன; சில புத்தகங்கள் நாம் வந்தடைந்த சில முடிவுகளுக்கான நியாயப்பாடுகளை முன்வைக்கின்றன; சில புத்தகங்கள் சமூகம் குறித்த ஆசிரியருடைய முன்தீர்மானங்களை – இந்த முன்தீர்மானங்கள் எப்படி அவரிடம் வந்துசேர்ந்தன என்பது குறித்துச் சிந்திக்காமல் – நிலைநிறுத்த முயல்கின்றன. ஆனால், வெகுசில புத்தகங்களே நம்முடைய சிந்தனைப் பரப்பை விரிவுபடுத்துகின்றன; நமக்குப் புதிய மொழியை உருவாக்கிக் கொடுக்கின்றன. அப்படியானதொரு புத்தகம் டி.தருமராஜின் ‘ஜல்லிக்கட்டு’. தமிழகத்தில் மிக உன்னதமாகக் கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம், காளைகள் மீதான தமிழ் மக்களின் பண்பாட்டு உரிமைக்கும், விலங்கு ஆர்வலர்களின், அரசின் சட்டரீதியான உரிமைக்கும் இடையேயான போராட்டமாக அப்போது புரிந்துகொள்ளப்பட்டது. இந்தச் சட்டகத்துக்குள்ளிருந்து இந்தப் போராட்டத்தைப் புரிந்துகொண்டவர்களுள் நானும் ஒருவன். ஆனால், தருமராஜின் இந்தப் புத்தகம் இதை முற்றிலுமாகக் கலைத்துப் போடுகிறது. ஜல்லிக்கட்டு என்ற பண்பாட்டு நிகழ்வை முற்றிலும் வேறான சட்டகத்திலிருந்து பார்க்க நம்மைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், நம் சமூகத்தில் காணப்படும் பல்வேறு விஷயங்களை வேறாக அணுக வேண்டிய அவசியத்தையும் நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது.
‘ஜல்லிக்கட்டு’ என்ற முப்பட்டகத்தின் ஊடாகத் தமிழ்ச் சமூகத்தின் ஒருவிதமான சுயவரையறையைத் துருவியகழ்கிறார் தருமராஜ். தனிநபர்கள் எப்படித் தங்களுக்கான சுயவரையறையைக் கொண்டிருக்கிறார்களோ, அதுபோலவே சமூகம், குழுமம், குடும்பம், மதம், சாதி, இனம் போன்ற மொத்தங்களும் அவற்றுக்கான சுயவரையறைகளைக் கொண்டிருக்கின்றன. இப்படியான மொத்தங்களின் சுயவரையறையானது தனிநபர்களின் சுயவரையறைகளால் மட்டுப்பட்டதாக இல்லை. இந்தச் சுயவரையறைகள் தமக்கென்று தனித்த இருப்பு கொண்டிருக்கின்றன. ஆக, ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகத் தன்னிச்சையாகத் திரண்டெழுந்தது பல தனிநபர்களின் தொகுப்பாக இல்லாமல், மொத்தம் தன்னளவில் திரண்டெழுந்த போராட்டமாக வெளிப்படுகிறது. இந்த மொத்தத்தைக் கிளர்ந்தெழுவதற்குத் தூண்டியது எது? வேறு பல சமூகப் பிரச்சினைகளுக்குத் (நீட் தேர்வு, ஆணவக் கொலைகள் போன்று) தன்னிச்சையாகத் திரண்டெழாத இந்த மொத்தம் ஏன் ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி திரண்டெழுந்தது? தருமராஜ் இந்தப் புத்தகத்தில் இதற்கான விடையைத் தேடி அலைகிறார். தமிழ் மரபு இலக்கியங்களிலும் நவீன மேற்கத்தியக் கோட்பாடுகளிலும் ஆழமான புரிதல் கொண்டிருக்கும் இவர், இவ்விரண்டையும் சமைத்து, தமிழ்ச் சமூகம் குறித்த புதிய அனுபவத்தை நமக்குப் படைக்கிறார். இந்தப் புத்தகத்தின் பரப்பு மிக விரிந்தது என்பதால், நான் ஒருசில விஷயங்களோடு மட்டுப்படுத்திக்கொள்கிறேன்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





