பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அசாத்தியமான நிகழ்வு அரங்கேறியது. வாரத்தின் ஆறு நாட்களும் அந்த நகரம் வணிகம், மதம், அதிகாரம் ஆகிய மொழிகளில் மட்டுமே பேசியது. ஏழாம் நாளில் முற்றிலும் மாறி, இசைத் தாளங்களின் மொழியில் பேசியது. கறுப்பினத்தவர்கள் அனைவரும் நியூ ஆர்லியன்ஸ் நகரின் எல்லையிலிருந்த “காங்கோ சதுக்கம்” என்று அழைக்கப்பட்ட திறந்தவெளியில் ஒன்றுகூடினர். அமெரிக்காவின் தென்பகுதி முழுவதும் தடைசெய்யப்பட்டிருந்த முரசுகள், லூசியானாவில் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் பொதுவெளியில் ஒன்றுகூட அனுமதித்த பிரெஞ்சு – ஸ்பானிய காலனித்துவச் சட்டத்தின் கீழ், சில மணிநேரங்களுக்கு மட்டும் இங்கே ஒலிக்க அனுமதிக்கப்பட்டன. வாரம் முழுதும் பருத்தி வயல்களிலும் கரும்புத் தோட்டங்களிலும் குனிந்து உழைத்த உடல்கள் நிமிர்ந்து நடனமாடின. கீழ்ப்படிதலுக்காகத் தாழ்த்தப்பட்டிருந்த குரல்கள், இசையின் மூலம் அந்தச் சதுக்கத்தை மாற்றியமைத்தன. மேற்கு ஆப்பிரிக்காவின் தாளங்களுக்குப் பெண்களும் ஆண்களும் சன்னதம் கொண்டு ஆடினர். காங்கோ சதுக்கம் என்ற ஒன்று தேவைப்பட்டதற்குக் காரணமான அந்த வரலாற்று வடு மிக ஆழமானது.
அடிமை வணிகம் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக யோருபா, அகான், வோலோஃப், காங்கோ, இக்போ எனப் பத்துக்கும் மேற்பட்ட தனித்துவமான ஆப்பிரிக்கத் தேசங்களிலிருந்து பன்னிரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வாரிச் சுருட்டிக்கொண்டது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி மொழிகள், மதங்கள், இசை முறைகளைச் சுமந்து வந்தனர். இந்த ஒட்டுமொத்த பன்முகத்தன்மையையும் அமெரிக்கப் பருத்தி தோட்ட அதிபர்கள் உடைமை என்னும் ஒற்றை அடையாளத்திற்குள் சுருக்கிக்கொண்டனர். ஒரு குறிப்பிட்ட மொழியோ அல்லது சடங்கோ முழுமையாக உயிர் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் குடும்பங்களைத் திட்டமிட்டுப் பிரித்தனர். அமெரிக்கக் குடியேற்றங்களின் பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் முரசுகளைத் தடைசெய்தனர்; ஏனெனில், எந்தவொரு கண்காணிப்பாளராலும் குறியீட்டை உடைக்க முடியாத செய்திகளை அந்த இசைத் தாளங்களால் கடத்த முடியும் என்பதும், அது மக்களைப் புரட்சியை நோக்கி ஒன்றிணைக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





