கொட்டடி வன்முறைகள் குறித்து, “சில மோசமான காவலர்களின் (few bad apples) நடத்தையின் காரணமாக நிகழ்ந்துவிட்டது” என்று அளிக்கப்படும் வழமையான விளக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில், 2020ஆம் ஆண்டில் நடந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரின் கொட்டடிப் படுகொலை குறித்த அரசின் ஆவணங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. காவல்துறை வன்முறை குறித்த எந்தவொரு புரிதலும், காவல்துறை வன்முறையின் கட்டமைப்புச் சார்ந்த தர்க்கத்தைச் சாத்தியமாக்கும் அரசு (state) மற்றும் அரை அரசு அமைப்புகள் (semi State actors) ஆகியவற்றின் பாத்திரத்தை மிகத் தெளிவாக ஆராய்வதாக இருக்க வேண்டும். அரசு கட்டமைப்பிற்குள் வன்முறை மையமாக இருப்பது மற்றும் அரசு வன்முறையைக் கேள்விக்கிடமற்றதாகக் கொண்டு செல்லும் பலதரப்பட்ட அமைப்புகள் ஆகிய இரண்டையும் முதன்மைப்படுத்தக்கூடிய ‘அரசு வன்முறை ஆய்வு’ என்ற கருத்தாக்கம் முன்மொழியப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு ஜூனில், ஜார்ஜ் ஃபிளாயிட், பிரேயோனா டைய்லர் ஆகிய இருவரும் காவல்துறையால் கொல்லப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவெங்கும் நடந்த போராட்டங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்ற அதேசமயத்தில், இந்திய நாளிதழ்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பி.ஜெயராஜ் (வயது 62), ஜெ.பெனிக்ஸ் (வயது 32) ஆகிய இருவரது கொடூரமான கொட்டடிக் கொலை குறித்த செய்திகளை வெளியிட்டன. தமிழ்நாட்டிலுள்ள சாத்தான்குளம் எனும் சிறிய நகரில் வசித்துவந்த ஜெயராஜும், பெனிக்ஸும் அவ்வூரிலேயே கைப்பேசிகளை விற்பனை செய்யும் சிறிய கடையொன்றை நடத்தி வந்தனர். கோவிட் கால ஊரடங்கு விதிமுறைகளை மீறி, அவர்கள் இருவரும் தமது கடையினைத் திறந்துவைத்ததாகக் குற்றஞ்சுமத்தி, அவர்களைக் கைது செய்தது காவல்துறை. 2020, ஜூன் 19 அன்று இரவு 7.30 மணியளவில் ஜெயராஜ் (தந்தை) காவல்துறையினரால் கைது செய்யப்பாட்டார். தனது தந்தை கைது செய்யப்பட்டதை அறிந்த பெனிக்ஸ், போலீஸார் அவரை அடைத்து வைத்திருந்த டாடா சுமோ வாகனம் நோக்கி ஓடிச் சென்று, “அவரை எதற்காகக் கைது செய்திருக்கிறீர்கள்?” என போலீஸாரிடம் கேள்வி எழுப்பினார். காவல் நிலையத்திற்கு வருமாறு பெனிக்ஸிடம் கூறிவிட்டு, ஜெயராஜை போலீஸார் கூட்டிச் சென்றனர்.
அதன் பிறகு, பெனிக்ஸ் தனது நண்பர்களை (அவர்களுள் ஒருவர் வழக்கறிஞர்) அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்குச் சென்றபோது, அங்கு தனது தந்தை காவலர்களால் தாக்கப்படுவதைப் பார்த்தார். அவ்வன்முறையை எதிர்த்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட, அவருக்கும் காவலர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து பெனிக்ஸும் கைது செய்யப்பட்டார். போலீஸார் பல மணி நேரம் தொடர்ந்து ஜெயராஜையும் பெனிக்ஸையும் தாக்கினர் என்று இக்கொட்டடிக் கொலை குறித்த ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, “போலீசிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென பெனிக்ஸுக்குப் பாடம் புகட்டும் விதத்தில்” அவர் தாக்கப்படுவதை அக்காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி ஊக்குவித்திருக்கிறார். இந்த வார்த்தைகள், காவல்நிலையத்தைச் சுற்றிப் பெருங்கூட்டம் சேர்ந்து, உள்ளே நடப்பது என்னவென்று அக்கூட்டம் அறிந்திருக்கும் சமயத்தில், காவல்நிலையக் கொட்டடிகளில் நடக்கும் வன்முறையை இயல்பாக்குவதற்கும், பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும் அச்சுறுத்தி ஒழுங்குபடுத்துவதற்குமான பள்ளிக்கூடப் பாடங்களாக அமைகின்றன.
பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவது உள்ளிட்டு, தந்தையும் மகனும் தொடர்ந்து பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்த மிக விரிவான சித்திரத்தை விசாரணை அறிக்கை தருகிறது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then


