“பொய்கள், தவறான பரப்புரைகள் ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பே எனது முனைவர் பட்ட ஆய்வறிக்கை!”

னது முனைவர் பட்ட ஆய்வானது, பொய்களுக்கும் போலிப்  பரப்புரைகளுக்கும் எதிரான ஓர் எதிர்ப்பு வடிவமாகும். இந்த ஆய்வறிக்கை வெறும் முனைவர் பட்டத்தைப் பெறுவதற்காக மட்டும் எழுதப்பட்டதல்ல; பொய்கள், தவறான பரப்புரைகள், அரசு பயங்கரவாதத்தின் மூலம் எங்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக உருவான ஓர் உணர்வெழுச்சியாகும். இந்த ஆய்வை எழுதிய ஒவ்வொரு தருணத்திலும் எனக்குள் சுய சந்தேகம் எழத்தான் செய்தது. அப்போதெல்லாம், “எனது நெறியாளரையும் தேர்வாளரையும் தவிர, வேறு யாரும் இதைப் படிக்கப் போவதில்லை; குறிப்பிட்ட கெடுவுக்குள் இதைச் சமர்ப்பித்தால் மட்டும் போதும்” என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

ஆய்வைச் சமர்ப்பித்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு – அதில் ஆறு ஆண்டுகள் சிறையிலேயே கழிந்த நிலையில் – எனது ஆய்வு நூலாக வெளிவருவது, எனக்கு மகிழ்ச்சியை விடவும் பதற்றத்தையே அதிகமாக்குகிறது. ஏனெனில், எனது படைப்பில் எனக்கு எப்போதுமே முழுமையான திருப்தி இருந்ததில்லை.

 

 

ஆனாலும், இது ஓர் அசாதாரணமான சூழலில் எழுதப்பட்ட ஆய்வு என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன், பிப்ரவரி 2016இல் நாடறிந்த ஜே.என்.யூ. தேசத்துரோக வழக்கில் நானும், அனிர்பான், கண்ணையா ஆகியோரும் கைது செய்யப்பட்டு, ஒரே இரவில் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டோம். எங்களைக் குற்றவாளிகளாகச் சித்திரித்தது எந்தவொரு சட்டப்பூர்வமான நீதிமன்றமும் அல்ல; மாறாக, பரபரப்பைக் கிளப்பிய செய்தி விவாத மேடைகள்தான். பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அவ்வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படவே இல்லை.

அந்தப் பனிக்காலத்தில் கொதித்தெழுந்த தொலைக்காட்சிச் செய்தியாளர்களே தாங்களே நீதிபதிகளாகவும், நடுவர் குழுவாகவும், தண்டனையை நிறைவேற்றுபவர்களாகவும் மாறினர்; “மக்கள் உழைத்துக் கட்டும் வரிப்பணத்தை எங்களைப் போன்ற தீவிரவாதிகள் கூடும் ஜே.என்.யூ. பொதுப் பல்கலைக்கழகத்திற்கு ஏன் செலவிட வேண்டும்?” என்று கேள்விகளை எழுப்பினர். பொதுவாக, ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் ஒருவர் வகுப்பறையில் கற்பதற்கு இணையாக, அங்குள்ள தாபாக்களிலும், போராட்டக் களங்களிலும், இரவு நேரப் பொதுக்கூட்டங்களிலும்கூடக் கற்றுக்கொள்ள முடியும். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை வலியுறுத்தி 2015இல் நடத்தப்பட்ட ‘யுஜிசி முற்றுகைப் போராட்டத்தின்’போது நடந்தது போல, நாங்கள் எங்களது பல இரவுகளை காவல்துறையின் தடுப்புக் கட்டைகளுக்கு நடுவே கழித்திருக்கிறோம். அதே அளவு நேரத்தை நூலகங்களிலும் செலவிட்டிருக்கிறோம்.

கைதான சில நாட்களில், கூட்டு விசாரணைக்காக ஆர்.கே.புரம் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது நாங்கள் மூவரும் தற்செயலாகச் சந்தித்துக்கொண்டோம். ஒருநாள் பிணையில் எங்களை ஒன்றாகத் தங்க வைத்தார்கள். “எங்களுக்கு என்ன நடந்தாலும் அதை எதிர்கொண்டு, எப்படியேனும் குறிப்பிட்ட தேதிக்குள் ஆய்வைச் சமர்ப்பித்துவிட வேண்டும்” என்று அப்போது எங்களுக்குள் உறுதிபூண்டோம்.

எங்களது படிப்பில் சிறு பின்னடைவு ஏற்பட்டாலும், அது பொதுப் பல்கலைக்கழகங்களுக்கு எதிரான விமர்சனமாக மாற்றப்பட்டுவிடும்; குறிப்பாக, ஜே.என்.யூ.வைக் குறிவைத்துத் தாக்குவார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஆகவே,  எங்களுக்காக மட்டுமல்ல நாங்கள் சார்ந்திருந்த மாணவர் அமைப்பிற்காகவும், எங்களை வளர்த்தெடுத்த ஜே.என்.யூ. சமூகத்திற்காகவும் நாங்கள் பொறுமை காத்தோம்.

எத்தனை நெருக்கடிகளுக்கிடையே எனது ஆய்வை நான் மேற்கொள்ள வேண்டும் என்பதை அந்த இரவு எனக்கு உணர்த்தியது. ஆரம்பக்காலத்தில் சாய்பாசா, ராஞ்சி, பாட்னா, கொல்கத்தா ஆகிய நகரங்களிலுள்ள ஆவணக்காப்பகங்களிலும் பதிவறைகளிலும் சில தரவுகளைச் சேகரித்தேன். கள ஆய்வை இறுதி ஆண்டுகளில் செய்துகொள்ளலாம் என்றே நினைத்திருந்தேன். எல்லாச் செய்தித் தொலைக்காட்சிகளுக்கும் நன்றி; பிப்ரவரி 2016க்குப் பிறகு என்னால் கள ஆய்வுக்காக எங்கும் நகர முடியாமல் போனது. பிழைதிருத்தம் பார்க்கும்போது ஆங்காங்கே சில விடுபடல்கள் தென்பட்டன. அவை தர்க்கரீதியான போதாமையால் ஏற்பட்டவை அல்ல; மாறாக, குறைந்தபட்ச அடிப்படைத் தரவுகள்கூடக் கிடைக்காத சூழலினால் ஏற்பட்டவை.

ஆனாலும், இந்தப் படைப்பிற்கு அடிப்படையாக ஒரு கருத்தியல் கட்டமைப்பு இருப்பதை வாசகர்கள் பகுத்தறிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டு நிறைவடையும் காலகட்டத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களின் வரலாற்றின் மீது எனக்கு நாட்டம் ஏற்பட்டது. தங்களிடமிருந்து நீர், நிலம், காடு ஆகியவை பறிக்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வீரியமாகப் போராடிய காலகட்டம் அது. மேலும், அப்போராட்டங்கள் பழங்குடியினப் பிராந்தியங்களில் கொண்டுவரப்படும் ‘வளர்ச்சி’, ‘ஜனநாயகம்’ ‘அதிகாரப்பரவலாக்கம்’ குறித்த விவாதங்களுக்கும் இட்டுச்சென்றது.

 

 

அக்காலகட்டத்தில் வெளியான படைப்புகளில் – குறிப்பாக எழுத்து, சினிமா மற்றும் சமூக இயக்கங்கள் உருவாக்கிய சித்திரிப்புகள் அனைத்திலும் – பழங்குடியின மக்கள் இயற்கையோடும் ஒருவருக்கொருவரோடும் நல்லிணக்கத்துடன் வாழும் எழில்மிகு பழங்குடிச் சமூகங்களாகவே சித்திரிக்கப்பட்டனர். அவர்களின் நலன்கள் கிராம அமைப்புகளின் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதாகக் கருதப்பட்டது. பேராசை கொண்ட முதலாளிகளுக்கு எதிராக எளிய, ஒன்றுபட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட வீரமிக்க போராட்டமாகவே அது பார்க்கப்பட்டது.

உண்மையில், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பழங்குடி மக்களின் நிலப்பகுதியில் நடந்த போராட்டங்களைப் “பேராசை கொண்ட வெளியாட்கள் – ஒருங்கிணைந்த உள்ளூர்வாசிகள்” இடையேயான முரண் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. பழங்குடிகள் அனைவருமே அரசை எதிர்த்துப் போராடவில்லை; மாறாக, அவர்களில் சிலர் அரசுடன் கைகோத்துத் திட்டங்களை நிறைவேற்ற ஆயத்தமாகவே இருந்தனர். இந்த ‘அரசுடன் கைகோக்கும்’ உறவைப் புரிந்துகொள்வதும் எனது ஆய்வின் முதன்மைப் பகுதியாக இருந்தது. காலனிய மற்றும் பின்காலனிய அரசுகளை, உள்ளூர் அதிகாரக் கட்டமைப்புகளுடன் தொடர்புகொள்ள கட்டாயப்படுத்திய களச்சூழல்கள் அல்லது அவசியங்கள் யாவை? அவை எந்த அளவிற்கு உள்ளூர் மக்களின் வாழ்வைப் பாதித்துள்ளன? என்ற கேள்விகளுக்கான விடைகளையே நான் தேடினேன்.

எனது ஆய்வு பல போதாமைகளுடன்தான் வெளிவரும் என்பதை நான் அறிந்தே இருந்தேன். ஜார்க்கண்ட் மாநில உருவாக்கத்தின் பின்னணியிலிருக்கும் உழைப்பின் வரலாற்றை, இனவரைவியல் சார்ந்த களப்பணியை, பல்வேறு இயக்கங்களைப் பற்றிய ஆழமான கூராய்வுகளைச் செய்ய விரும்பினேன். ஆனால், இறுதியில் அந்தக் கனவுகளைக் கிடப்பில் போட நேர்ந்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலையீட்டோடு எப்படியோ எனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டேன்.

இந்த ஆய்வறிக்கை வெறும் முனைவர் பட்டத்தைப் பெறுவதற்காக மட்டும் எழுதப்பட்டதல்ல; பொய்கள், தவறான பரப்புரைகள், அரசு பயங்கரவாதத்தின் மூலம் எங்களது குரல்வளைகள் முடக்கப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக எழுதப்பட்ட ஓர் உணர்வெழுச்சியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அழுக்கேறிய கிடங்கு போலிருந்த ஒரு காவல்நிலையச் சிறையில், மூன்று உன்னதமான மனசாட்சிகள் “குறித்த நேரத்தில் ஆய்வைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தங்களுக்குள் செய்துகொண்ட சத்தியத்தை நிலைநிறுத்தவே இது எழுதப்பட்டது.

 

‘Fractured Communities: Adivasi Histories and the Politics of Power’ என்ற நூலின் ஆசிரியர் உமர் காலித். அவரது முனைவர் பட்ட ஆய்வே தற்போது நூலாக வெளிவந்துள்ளது.

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூலை 24, 2026

 

  • Kritzsrinivasan@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger