செடி நெடுகிலும் மலர்ந்திருந்த பூக்கள் காற்றின் போக்கிற்குத் தலையாட்டிக்கொண்டிருந்தன. மலர்களும் இலைகளும் அதனதன் இடங்களைத் தாண்டி அவ்வப்போது மேசை விளிம்பில் சாய்ந்து அவள் கண் முன்னே உடலசைத்துக் காட்டின. அவள் புன்னகைத்தாள். சில அத்துமீறல்கள் களங்கமற்றவை. மிக இதமானவை. நீண்டு உயர்ந்த ஒற்றைக் கால் இருக்கையில் அவள் அமர்ந்திருந்தாள். அந்த உணவகத்தின் சுவரை ஒட்டி நீண்டு செல்லும் மேசையில் கை ஊன்றியபடி அவள் வீதியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வட்ட மேசைகளில் ஆங்காங்கே அமர்ந்து மதுஅருந்தும் மனிதர்களுக்கு முதுகு காட்டியபடி இந்த அரை இருளில் அமர்ந்துகொண்டது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

மெட்ரோ ரயில் ஒன்று அந்தரத்தில் பறந்து வந்து அவள் பார்வையைக் கடந்து போனது. விழி விரியப் பார்த்தவள் வழக்கமாக அமரும் இடம் இதுவல்ல. அதிர ஒலிக்கும் பாடல்களுக்கு நடுவே கூட்டம் கூட்டமாக அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இடையே அவள் உணரும் அந்நியத்தன்மை உடலெங்கும் ஊரும். அதனால் அவள் தரைத் தளத்தை விடுத்து, சில படிகள் உயரத்தில் இருக்கும் மேல்தளத்தில் இரும்பு ஜன்னல் கம்பி அருகே இருக்கும் கடைசி மேசையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வாள். அது யாராலும் விரும்பப்படாத அரை இருள் மூலை. ஒயின் கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு எழுந்து போய் அந்த ஜன்னல் அருகே நின்றுகொள்வாள். ஒயின் தனது கருஞ்சிவப்பு வண்ணத்தின் அடர்த்தியைக் குறைத்துக்கொண்டு உள்ளே மிதக்கும் சதுர வடிவ ஆப்பிள் துண்டுகளைக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கும் அழகை, கோப்பையை உயர்த்திப் பார்த்து ரசிப்பாள். சில்லென்ற மதுவைக் கொஞ்சம் உறிஞ்சுகையில் வாய்க்குள் வந்து விழும் ஆப்பிள் துண்டை நாவால் சுழற்றியபடி வெளியில் வேடிக்கை பார்ப்பாள்.

பகல் பொழுதில் பரபரக்கும் இந்நகரம் இரவில் இளகி இளகிக் கரைகிறது.

 

இருளில் ஒளிரும் கட்டடங்களின் உள்ளே மனிதர்கள் உற்சாகமாக உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், தோள் தட்டி விளையாடுகிறார்கள், முத்தமிட்டுக்கொள்கிறார்கள், சண்டையிட்டுக்கொள்கிறார்கள், சமாதானம் அடைகிறார்கள், கலவி வேண்டி விரைகிறார்கள். அவள் கட்டடங்களின் பின்பக்கம் அழுக்குப் படிந்த அறைகளில் நடமாடிக்கொண்டிருக்கும் ஊழியர்களை வேடிக்கை பார்த்தபடியே மிடறு மிடறாக மதுவை அருந்துவாள். உணவு மேசையை விட்டு அவள் அப்படி ஜன்னல் பக்கம் நெடுநேரம் நின்றுகொள்ள எந்தத் தடையும் இல்லை. தொந்தரவு தராத தூரத்தில் அவளின் அழைப்புக்காகக் காத்திருக்கும் அந்த வடகிழக்கு மாநிலப் பெண்ணை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். சிந்தனைக்குள் கால் படாத ஓர் ஏகாந்த வெளியைத்தான் அவள் வேண்டி நிற்கிறாள் என்பதை அந்தப் பணிப்பெண் நன்கு அறிந்திருந்தாள். தலையைத் திருப்பும் நொடியில் ‘எஸ் மேடம்’ என்று புன்னகையுடன் நெருங்கி வரும் அவளை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட வேண்டும் என்று மனம் ஆவலுறும்.

இன்றுவரை மதுவின் முதல் மிடரை ரசனையுடன் அணுகத் தெரிவதில்லை. உடலைக் குலுக்கிப் போடுகிறது. இரண்டு, மூன்று, நான்காவது மிடரில் இணக்கம் கொண்டு ஆதரவாய் கைக்கோத்துக்கொள்கிறது. முதல் முறையாக மது அருந்திய நாள் அவளுக்கு நினைவுக்கு வருகிறது. ஒயின் என்பது மது வகையே அல்ல என்று அவர் சொன்னார். குடிப்பழக்கமே இல்லாத உங்களுக்கு இது தேவையற்ற விஷப் பரிட்சை என்று வாதிட்டாள். அலுவலக விருந்துகளில் சகஜமாகப் புழங்கும் மதுவைத் தவிர்த்து விட்டு, சிக்கன் துண்டுகளையும் காய்கறி சாலட்டுகளையும் தின்றுகொண்டிருப்பது அவமானமாக இருப்பதாக அவர் சொன்னார். விருந்து முடிந்து மதுவின் போதையில் இருப்பவர்களைப் பத்திரமாக வண்டி ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவிட்டு வருவதைப் பெருமையாகச் சொல்லிய வாய்தான் இன்று அதையே அவமானம் என்று சொல்லியது. எப்பொழுதும் இந்த வீட்டின் முடிவுகள் அவரைச் சார்ந்தவை. அதை மீறவோ, மறுக்கவோ எங்களுக்கு அனுமதி இருந்ததில்லை. அன்று மகள் உறங்கச் சென்ற பின் நாங்கள் ஒயின் குடித்தோம். அலுவலகத்தில் பெண்கள் ஒயின் குடிக்கிறார்கள், அது உடலுக்கு நல்லது, நகரப் பெண்களின் மேனி பளபளப்பதும் அதன் புண்ணியத்தில்தான் என்றார். நான் பழகிக்கொள்ளாத நாகரிகத்தை அவர் பழகத் தந்தார். நீண்ட கூந்தலைக் கத்தரித்து குதிரை வால் ஆக்கியது போல, புடவையில் இருந்து சுடிதாருக்கு மாறியது போல, மேலும் மேலும் படிக்கட்டுகளில் ஏறி அவர் தோள் உயரத்திற்கு வர இசைந்தேன். பின்வந்த வாரங்களில் அவர் தொடர்ந்து குடித்தார். பிறகு என் துணை அவருக்கு வேண்டியிருக்கவில்லை. ‘இப்படித் தொடர்ந்து குடிக்கறது நல்லதில்ல, இப்படியே நீங்க குடிச்சா நான் ஊருக்கு ஃபோன் பண்ணி அத்தை கிட்ட சொல்வேன்’ என்று சொன்னேன். ‘தைரியம் இருந்தாச் சொல்லு பாப்போம்… நீயும் குடிச்சன்னு நான் சொல்வேன். உன்னக் குடிக்க வச்சதே அதுக்குதானே’ என்று சொல்லிவிட்டு அவர் அன்று சிரித்த சிரிப்பு அவ்வளவு வன்மம் நிறைந்தது.

மீண்டும் ஒரு மெட்ரோ ரயில் கடந்து மறைந்தது. சீருடையில் இருந்த மெலிந்த அந்தப் பையனைக் கை உயர்த்தி அழைத்தாள். ஒயினைத் தருவித்தாள். கூடவே கொஞ்சம் மசாலா கார்னும். இரண்டு மிடறு குடித்துவிட்டுக் கோப்பையைத் தள்ளி வைத்தாள். விதவிதமான பாடல்களை ஒலிக்கவிட்டுக்கொண்டிருந்த இளைஞனை உற்சாகமூட்டியபடி ஒரு கூட்டம் ஆடிக்கொண்டிருந்தது. குடி கொண்டாட்டத்திற்கானதா? அவளுக்குத் தன் நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘நீ குடித்துவிட்டால் உன்னை விக்டிமாக ஆக்கிக்கொள்கிறாய், உன்னால் இப்படி நினைத்த நேரத்தில் வெளியில் வந்து குடிக்க முடிவதே ஒரு சுதந்திரம்தானே? பின்ன இன்னும் என்ன வேண்டும் உனக்கு’ என்றான். குடிப்பதுதான் சுதந்திரமா? இதுதான் நான் வேண்டும் நல்வாழ்வா? இதுதான் சந்தோசமா? நினைவை மழுங்கச் செய்தல் ஒருவகை தப்பித்தல் மட்டுமே என்பது உனக்கு விளங்கவில்லையா நண்பா! அன்றோடு குடித்துவிட்டு அவனுக்குத் தொலைபேசுவதை நிறுத்திக்கொண்டாள்.

என்னை முதன்முதலாகக் குடிக்க வைத்தது அவரைப் பொறுத்தவரை ஒரு சாமர்த்தியக்காரனின் தந்திரம். ஆனால், எனக்கு அது நம்பிக்கைத் துரோகம்; முதுகில் குத்து வாங்கிய வலி. இதுபோல் எத்தனை எத்தனை நிகழ்வைக் கடந்து வந்திருக்கிறேன்! அவர் அன்பின் ஈரத்தில் ஒரு புல் நுனி  அளவேனும்  பச்சையம் துளிர்த்துத் தளைத்துவிடாதா என்று ஏங்கிய காலங்கள் எவ்வளவு! சக அறைவாசியிடம் கூட சாதாரணமாக வந்துவிடும் அக்கறையும் கருணையும் இத்தனை நீண்ட இல்லறத்தில் எப்படி இல்லாமல் போகிறது? நினைக்க நினைக்க அவளுக்கு நெஞ்சு அடைத்துக்கொண்டது.

‘ஒன் மோர்’ என்று இங்கிருந்தே அந்தப் பையனிடம் சொன்னாள். அவன் புன்னகைத்து லேசாகத் தலையசைத்துவிட்டுச் சென்றான். தொலைபேசி ஒலித்தது. மகள்தான். வழக்கமான நல விசாரிப்புகள். மும்பைக்கு வேலைக்காகப் போய் தங்கிவிட்டவள். ‘சரிம்மா, பாத்துப் பத்திரமா வீட்டுக்குப் போங்க. மெட்ரோல போகாதீங்க, ஆட்டோல போய்டுங்க’ என்று சொல்லிவிட்டுத் துண்டித்தாள்.

அவள் கல்லூரி படிப்பிற்காக வெளியூர் சென்ற பிறகு வீட்டில் இருந்த ஒரு துளி வெளிச்சமும் காணாமல் போனது. கணவன் மனைவி இருவரும் அவரவர் வேலை, உணவு, தனித்தனி அறையில் உறக்கம் என்று இரு வேறு உலகை அமைத்துக்கொண்டார்கள். அவர்களுக்குள் உரையாடல் மிகச் சொற்பமாக ஆனது. மகள் தலையெடுத்துவிட்ட இத்தனை வயதிற்கு மேல் பிரிந்து செல்லுதல் இயலாத ஒன்று என்றான பிறகு, அவர்களுக்குள் அமைதி விவாகரத்தை வழங்கிக்கொண்டு ஒரே வீட்டில் தனித்திருந்தனர்.

வெக்கை தாளமுடியாத ஒரு நீண்ட ஞாயிறு அன்று மாலைதான் அவள் கிளம்பி இந்த உணவகத்துக்கு வந்து தனது இரண்டாவது ஒயின் கோப்பையைக் கையில் எடுத்தாள். பிறகு, மனம் உடைப்பெடுக்கும் நாட்களில் எல்லாம் அவளுக்கு மதுவே துணையானது. மகள் விடுமுறையில் வந்த நாளொன்றில் அவளிடம் தன் மதுப்பழக்கத்தைப் பற்றிச் சொன்னாள். அப்படி மகளிடம் தன்னை முழுமையாகத் திறந்து வைப்பதில் அடையும் விடுதலை உணர்வு அவளுக்குத் தேவையாக இருந்தது.

மணி பத்தைத் தொட்டுவிட்டது. தாமதமாக வீட்டிற்குச் சென்றால் அவர் வீட்டைத் தாளிட்டுக்கொண்டு விடுவார். ஒருமுறை மகளுடன் மாலை சினிமாவிற்குப் போனது அவளுக்கு நினைவு வந்தது. அப்போது மகள் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். ஒரு வெள்ளிக்கிழமை மாலை அது. இத்தனைக்கும் அவரைத் தொலைபேசியில் அழைத்து அனுமதி வாங்கித்தான் படம் பார்க்கச் சென்றார்கள். படம் முடிந்து, ஹோட்டலில் உணவு உண்டு வீட்டிற்கு வந்தபோது வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவரைத் தொலைபேசியில் அழைத்துக் கெஞ்சியும் அவர் வெளியே வரவில்லை. அக்கம்பக்கத்து வீட்டு ஆட்கள் மகளோடு தெருவில் நிற்பதைப் பார்த்துவிடப் போகிறார்களே என்ற பதற்றம் அதிகரித்து, அவரிடம் காலில் விழாத குறையாகக் கெஞ்சி மன்னிப்புக் கேட்ட பிறகே வந்து கதவைத் திறந்துவிட்டார். இப்போதும் ஒரு சாவி அவள் கையில் இருக்கிறது. ஆனால், சாவிக்குத் திறக்காத பூட்டு ஒன்று உள்பக்கக் கதவில் இருக்கிறது. இப்படித்தான் திறக்காத பூட்டுகள் அவள் வாழ்வின் வழிநெடுகிலும் இருக்கின்றன. தட்டித்தட்டி ஓய்ந்த கைகள் மீண்டும் அந்த வீட்டிற்குத் திரும்புவதை விரும்புவதில்லை.

அவள் ஆட்டோ ஏறினாள். திரும்ப விரும்பாத இடத்தை நோக்கியே மீண்டும் மீண்டும் பயணிக்க நேர்வதின் துயரம் சொல்லில் அடங்காது. அது ஒரு கையறு நிலை. அவள் இருக்கையில் சரிந்து அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். அந்த நேரத்திலும் நகரம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. போக்குவரத்து நெரிசலில் மிதந்து நகரும் ஆட்டோவின் வேகம் குறையும் தோரும் அவள் நிம்மதி கொண்டாள். இலக்கற்றதொரு நீண்ட பயணத்தைக் கற்பனை செய்தபடி கண் மூடி இருந்தவள், லேசாகக் கண் திறந்து பார்த்தபோது ஆட்டோ ஆள் அற்ற ஒரு சந்துக்குள் சென்றகொண்டிருந்தது. இது வழக்கமாகச் செல்லும் வழி அல்லவே! ஒருவேளை ஆட்டோ மாற்று வழியில் செல்கிறதா அல்லது போதை கிறக்கத்தில் தனக்குத்தான் வழி பிடிபடவில்லையா என்று குழம்பியது. அவள் பேசாதிருந்தாள். ஆட்டோ போய்க்கொண்டிருந்தது. ஒருவேளை தன்னைக் கடத்திக்கொண்டு போகிறானா? கழுத்தில் ஒரு செயின், காதில் சிறிய தோடு, ஒரு மோதிரம் அவ்வளவே. கேட்டால் அமைதியாக கழற்றிக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். ஒருவேளை தவறாக நடக்க முயற்சிப்பானா? ‘தம்பி, உனக்கு என் மகள் வயது’ என்று சொல்ல வேண்டும். மீறினால் எதிர்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ‘சமத்தா இருக்கணும் பாப்பா, அவருக்குக் கோவம் வர்றாப்ல நடக்கக் கூடாது’ என்று அம்மா அறிவுரை சொல்லி மறுவீடு அனுப்பிய நாளிலிருந்து எத்தனை நாட்கள் மனதுக்குப் பிடிக்காமல் உடன்பட்டுக் கிடந்திருக்கிறாள்! சம்மதம் அற்ற ஓர் உறவை, அத்துமீறலை எதிர்ப்பதற்குத் தான் பழகியிருக்கவே இல்லையே என்று ஆச்சரியம் கொண்டாள். ‘ஒருவேளை கடத்திக்கொண்டு போய் கை கால்களைக் கட்டிப்போட்டு ஒரு அறையில் அடைத்துவிடுவார்களோ’ என்று தோன்றியது. தன்னை யாரென்று தெரியாத ஓர் இடத்தில் கொஞ்சமே கொஞ்சம் வெளிச்சமும் ஒரு வாய் தண்ணீரும் கிடைக்கும் பாழடைந்த அறையில் வாழ்வதைக் கற்பனை செய்தாள். பனிக்காற்று அவள் கூந்தலைக் கலைத்து விளையாடியது. மெல்ல கண் சொருகி அவள் ஆழ்ந்து உறங்கிப் போனாள்.

• suji19477@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger