பேரொளிப் பயணம்

யாழன் ஆதி

22

ர் எந்திரத்தை நாம் மிகச்சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் அது பழுதாகிவிடும். மிக விலையுயர்ந்த மின்னணுக் கருவிகள் துருபிடிக்காமல் இருக்க ஈரம் உறிஞ்சும் வேதிப்பொருட்களைச் சிறு பைகளில் வைத்திருப்பார்கள். நம் மனித வாழ்வும் அப்படித்தான்; முழுமையாக இந்த வாழ்வை நாம் திருத்தி திருத்தி மாற்றிக் கொள்ளாவிட்டால் அது அழுகிய பழத்தைப் போல் பயனற்றதாகிவிடுகிறது. இந்த வாழ்வை மிகச்சரியான வழியில் நேர்படுத்தும் வேலையைத்தான் பௌத்தம் இன்றளவும் செய்து வருகிறது.

புத்தர் தன் வாழ்நாளை அதற்காகத்தான் அர்ப்பணித்தார். மனித வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்னும் அடிப்படைதான் அவரின் எல்லாப் பணிகளுக்கும் அடித்தளமாக அமைந்தன. அவரின் நான்கு உண்மைகள், ஐந்து ஒழுக்கங்கள், எண்மார்க்கங்கள் எல்லாமே மனித வாழ்வை நெறிப்படுத்துவதற்குத்தான் என்றால் அது மிகையாகாது.

துன்பங்களிலிருந்து விடுதலைப் பெறுவதற்கும் அதனை அடைவதற்கான வழிகளை அறிந்துகொள்வதற்கும் முனைவதைப் போலவே முழுமையான வாழ்வையும் வாழ மானுடம் தன்னைத் தயாரித்துக்கொள்ள வேண்டும் என்பது பௌத்தத்தின் கூறாக இருக்கிறது. முழுமையான வாழ்வு என்பது எத்தகையதாக இருக்கும். அதை வெளியிலிருந்து யாராவது நமக்குத் தருவார்களா? அல்லது கடவுளின் அருளால் கிடைக்குமா? பெருந்தவங்களால் பெற்றுவிட முடியுமா? என்றால் எதனாலும் முடியாது. பௌத்தம் அற்புதங்கள் செய்யும் சமயம் அல்ல. காரண காரியங்களை அறிவியல் தெளிவுடன் ஆராயும் ஒன்று. அப்படியானால் முழுமையான வாழ்க்கையை எப்படி மனிதர்கள் அடைவது என்றால் அது அவர்களால் மட்டுமே முடிந்த ஒன்று. ஒரு தனிமனிதர் தான் என்னவாக ஆக வேண்டும் என்று கருதி செயல்படுகிறாரோ அதுவாக ஆக முடியும். அப்படி அவர் ஆற்றுகின்ற முயற்சியே அவரை அடைவுகளை அடைய வைக்கும் தன்மையுடையவராக மாற்றும். புத்தர் தான் பரப்பிய அனைத்துக் கோட்பாடுகளையும் தானே உருவாக்கினார். அவற்றை மனிதர்கள் பின்பற்றுகிறபோது முழுமை அடைவதற்கான சாத்தியங்கள் மேலோங்குகின்றன. புத்தர் சம்மாசம் புத்தரானது அப்படித்தான். தானே முயன்று கற்றுத்தேர்ந்து மானுடத்தை உய்வித்தார். அவர் தந்த முழுமையான பத்து வழிகள் பத்து பாரமிதங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன. இவை ஒருவேளை துறவிகளுக்கானவையாக இருக்கலாம். சாதாரண மக்களுக்கானவையாக இருக்க முடியாதோ எனத் தோன்றலாம். இவை மிக எளிமையாகப் பின்பற்றத் தக்கன. அன்றாடம் பின்பற்றினால் முழுமையான வாழ்விற்கான தடங்களாக அவை மாறும். குடும்பத்தினரும் பின்பற்றக் கூடிய எளிமையானவை இந்தப் பாரமிதங்கள்.

  1. தானம்

தானம் என்பது தன்னலமற்று பிறருக்கு வழங்குவது. பிறரின் துயர் நீக்க அவர்களின் தேவையறிந்து வழங்குவது. ஒரு மரத்தைப் போல. மரம் தன்னிடமிருக்கும் எல்லாவற்றையும் தரும். அதனால்தான் அதற்கு ‘தரு’ என்று ஒரு பெயர் இருக்கிறது. மரம் தருகிறபோது யாருக்குத் தருகிறோம் என்று பார்ப்பதில்லை. பெறுபவர்கள் யார் என்னும் கணக்கு மரத்திற்கு இல்லை. தானம் தரும்போது நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். பெறுபவர்கள் தகுதி, அவர்கள் யார் என்று பார்க்காமல் தர வேண்டும். அது மட்டுமல்ல நாம் ஒருவருக்கு ஒன்றைத் தருவதால் அவர் அதற்குப் பதிலாக நமக்கு வேறு ஏதாவது தருவார் என்ற எதிர்ப்பார்ப்பில் தரக்கூடாது. பிற்காலங்களில் எப்போதாவது உதவுவார் எதற்கும் கொடுத்து வைப்போம் என்று தரக்கூடாது. தருவது என்பது நாம் நம்மை முழுமையாக்கிட எனக் கருதி நாம் தருவதை அவர் பெற்றுக்கொள்கிறாரே என்னும் நன்றியுணர்வோடும் மிகுந்த மரியாதையோடும் தர வேண்டும். தானத்தைப் பௌத்தம் ஒரு போராகவே கருதுகிறது. நம்முடைய ஆசைகளைத் துறக்கிற போராக, நம் சுயநலத்தை அழிக்கிற போராக, நிப்பாணத்தை அடைவதற்கான போராகக் கருதுகிறது.

தானத்தை மூன்றாகப் பிரிக்கலாம்

  1. பொருள் தானம், 2. அடைக்கல தானம், 3. கற்பித்தல் தானம்

பொருள் தானம் என்பது எளிமையாக விளங்கிவிடுகிறது. ஆனால் அடைக்கல தானம் என்பது சக உயிர்கள் பயத்தில் இருக்கும்போது, நோயில் இருக்கும்போது, உளம் சார்ந்த அச்சத்தில் இருக்கும்போது அவர்களுக்குத் தேவையான அன்பை அரவணைப்பைத் தருவது. மனிதர்களுக்கு மட்டுமா இந்தத் தருதல் என்றால் இல்லவே இல்லை. எல்லா உயிர்களுக்கும் இது தேவை. ஒரு சிறு செடிக்கும், சிற்றுயிர்க்கும் கூட இந்தத் தானம் தேவைப்படுகிறது. அதைப் பெறுவதும் தருவதும் எத்தகைய அன்பின் வெளிப்பாடாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மிக உயர்ந்த தானமாக கற்பித்தல் தானத்தைச் சொல்லலாம். பசிக்கு மீனைத் தருவதை விட மீன் பிடிக்கச் சொல்லித் தருவது மிகவும் அவசியமானது. பழைய சொலவடையாக இது இருந்தாலும் கற்பித்தல் தானத்தை வெகு ஆழமாக அது நமக்குப் புரிய வைக்கிறது.

  1. சீலம்

ஒழுக்கத்தைக் கடைபிடித்தல். ஒழுக்கமற்ற செயல்களால்தான் நாம் பிறருக்குத் துன்பங்களைத் தருகிறோம். அது அறிந்தோ அறியாமலோ நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒருவர் புகைபிடிப்பவராக இருக்கிறார் என்றால் யாருக்கும் தெரியாமல் அவர் புகைத்தால் கூட இந்தக் காற்றில் ஒரு துளி நிக்கோடின் கலந்த கார்பன் டை ஆக்ஸைடை அவர் கலந்துவிடுகிறார். மனத்தின் எதிர்மறை சிந்தனைகளால் கோபம், பொறாமை, ஆசை, அபகரித்தல் என மனித மனம் சிதைந்து ஒழுக்கமற்று அலைகிறது. நேர்மறையாக அவற்றை மாற்றினால் அன்பு, நன்னெறி, பிறருக்காக வாழ்வது என்னும் நலம் விழையும். பௌத்தத்தில் திரிபிடகத்தில் இருக்கும் விநய பிடகத்தில் எல்லோருக்குமான ஒழுக்கம் கூறப்பட்டுள்ளது. ஐந்து ஒழுக்கங்களாகிய பஞ்ச சீலத்தை நாம் கடைபிடித்தாலே எந்தத் தீ நெறியும் நம்மை அண்டாது.

  1. சாந்தி

எப்படிப்பட்ட இக்கட்டான காலங்களிலும் பொறுமையாக இருத்தல். பிறரால் வார்த்தைகளாலும் செயல்களாலும் நமக்குப் துன்பங்கள் வரலாம். அந்நேரங்களில் நாம் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். புத்தரின் வாழ்வில் அவருக்கு நேர்ந்த நிகழ்வுகளில் அவர் பொறுமையாகத் தன் புலன்களைக் காத்திருக்கிறார் என்பது அவரின் வாழ்விலிருந்து நாம் அறிகிறோம். அங்குலிமாலா புத்தரை ஏசுவதையும் அதற்கு அவர் காத்த பொறுமையும் வெறும் கதை மட்டுமல்ல. மாறாக, அவை நமக்கு வாழ்வியல் பாடங்கள். எத்தகைய சூழலையும் வென்று முன்னே செல்வது என்பது இதன் நோக்கம். நாம் செல்ல வேண்டிய இலக்கினை அடைவதற்குக் கோபமும் ஆத்திரமும் தடையாக இருக்கலாம். அவற்றைப் பொறுமையினால் மிக இயல்பாகக் கடக்கலாம். தன்னை மிகக் கடுமையாகத் திட்டிய இளைஞனிடம் பொறுமை காத்தார் புத்தர். “இவ்வளவு திட்டுகிறேன் அமைதியாகவே இருக்கிறாயே?” என அவன் புத்தரிடம் கேட்டான். புத்தர் சொன்னார். “நீ ஒருவருக்கு ஒரு பரிசினைத் தருகிறாய் என வைத்துக்கொள். வாங்க வேண்டியவர் வாங்கவில்லை என்றால் என்ன செய்வாய்?” என்று கேட்டார். “நானே வைத்துக்கொள்வேன்” என்றான் அவன். “நீ திட்டியதையும் நான் வாங்கிக்கொள்ளவில்லை. அப்படியானால் அவை உன்னிடமே இருக்கின்றன” என்றார் புத்தர். இளைஞன் அமைதியாகிவிட்டான்.

  1. வீரியம்

விடாமுயற்சி என்பது இதன் பொருள். நாம் எடுத்துக்கொண்ட இலக்கை அடையும் வரை வீரியத்துடன் உழைக்க வேண்டும். இது மிகவும் கடினமானது என்று பின் வாங்கக் கூடாது. உடலையும் மனத்தையும் ஆற்றலோடு வைத்துக்கொள்ள வேண்டும். சிறந்த எண்ணங்கள், உடல் சார்ந்த பயிற்சிகள் என நம்மைத் தயார் செய்வது. வாழ்வின் இறுதி லட்சியமான நிப்பாணத்தை அடைவதற்குத் தேவையான எல்லாவற்றையும் ஆற்றுவது. அதற்குத் தடையாக இருக்கும் எல்லாவற்றையும் தகர்க்க வேண்டிய வீரியத்துடன் இருப்பது. இந்தப் பாரமிதம் நமக்குத் தரும் செய்தி என்பது விடாமுயற்சி என்னும் இந்தப் பண்பு இல்லை என்றால் நம்மால் வெற்றிப் பெறலாகாது. வெற்றி ஒரு மனிதருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அதனால் மனம் அமைதி அடையும். மனத்தின் அமைதி நமக்கான வாழ்வமைதியை வழங்கும்.

  1. தியானம்

மனத்தை ஒருங்கிணைப்பது பௌத்தத்தின் மிக முக்கிய நோக்கம். பௌத்த உளவியல் என்பதே மனித வாழ்க்கைக்கான மகிழ்ச்சியை நாடுவதுதான். மனத்தைப் பற்றி அதிகமான உரையாடல்களை புத்தர் நிகழ்த்தி இருக்கிறார். மனத்தைப் புரிந்துகொள்ளல் என்பது மிக முக்கியம். அதற்கு முதலில் மனத்தால் வரும் பேராசைகளின் விளைவுகளைப் புரிந்துகொண்டு அவற்றை விட வேண்டும். அதைப் போல் விட்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்க அவரைத் தேடிப்போவது இரண்டாவது. அவரின் வார்த்தைகளை மிகக்கவனமாகக் கேட்பது மூன்றாவது. அதன்படி வினையாற்றுவது நான்காவது, அதற்கு விழிப்புணர்வு என்று பெயர். விழிப்புணர்வுடன் செயல்படுவது அறிவுடன் செயலாற்றுவது. அறிவு வளர தியானமே அடிப்படை என்பது புத்தரின் கூற்று. மனத்தைச் செழுமைப்படுத்தும் தியானம் ஒரு பாரமிதம்.

  1. பிரக்ஞை

பிரக்ஞை எனின் ஞானம். அது அறிவைக் கடந்தது. வாழ்க்கை பற்றியும் இங்கு இயங்கும் புற மற்றும் அக உலகங்கள் குறித்தும் அறியும் தன்மையைப் பிரக்ஞை எனக் கூறலாம். துக்கத்தையும் நிலையாமையையும் மிகச்சரியான போக்கில் புரிந்துகொள்ளவது பிரக்ஞை. பிரக்ஞை என்பது கருணையுடன் கூடியது. கருணையும் பிரக்ஞையும் மனித குலத்திற்குத் தேவையானவை. நுட்பமான ஞானத்தோடு இந்த உலகை எதிர்கொள்ள பிரக்ஞை ஒரு பாரமிதமாகும். இதனால் முழுமையான மனித ஆற்றல் உருவாகும்.

  1. உபாயம்

தேவையான சூழலுக்கு உகந்து பிறருக்கு உதவுவது. உதவுவது என்பது உதவியைச் செய்வதில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவது. உண்மையை உண்மையாய்க் கூற முடியாத தருணம் வாய்க்கும்போது அதை விளக்க சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது உபாயம். பௌத்தத்தில் ஒரு புகழ்பெற்ற உவமை இருக்கிறது. பற்றி எரியும் வீட்டில் இருக்கும் குழந்தைகளை மீட்டெடுக்கும் தந்தை குழந்தைகளிடம் நெருப்பின் ஆபத்தை நேரிடையாகச் சொல்லாமல் குழந்தைகளின் மனத்தைத் திசைதிருப்பி வேறுவகையான முறைகளைப் பயன்படுத்தச் சொல்லி அவர்களைக் காப்பாற்றுவது. ஆனால், உபாயம் என்பது பொய் கூறுவதல்ல. உதவுவதற்கான நுட்பமான அறிவைப் பயன்படுத்தும் பாரமிதம்.

  1. பிரணிதானம்

உலகில் இருக்கும் எல்லா உயிர்களையும் காக்கும் நோக்கத்துடனான உறுதிதான் பிரணிதானம் என்பது. உலகில் இருக்கும் எல்லா உயிர்களும் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளன. உணவுச் சங்கிலியால் அழிவது என்பது வேறு. ஒரு தனிமனிதனால் அழிவதும் துன்புறுவதும் வேறு. ஆகவே உலக உயிர்கள் போரினாலோ, பேரிடர்களினாலோ அழிவதைத் தடுப்பதற்கான உறுதிதான் பிரணிதானம் என்னும் பாரமிதம். பௌத்தப் பயிற்சியைத் தொடங்கும்போது நான்கு உறுதிமொழிகளை எடுக்கிறார்கள். அவை (1) எண்ணற்ற உயிரினங்களைக் காப்பாற்றுவது (2) எல்லையற்ற உலக ஆசைகளை ஒழிப்பது (3) வற்றாத கோட்பாடுகளில் தேர்ச்சி பெறுவது (4) இணையற்ற ஞானத்தை அடைவது. இவற்றில் இருக்கும் முதல் உறுதிமொழி பிரணிதானம். புத்தரின் மடியில் வீழ்ந்த வேட்டையாடப்பட்ட பறவையை புத்தர் காப்பாற்றுவார். வேட்டையாடிய அவரின் உறவினர் அப்பறவையைத் தன்னுடையது என்று வாதிடும்போது, பறவை வேட்டைக்காரனுக்குச் சொந்தமாகுமா அல்லது காப்பாற்றியவனுக்குச் சொந்தமாகுமா எனக் கேட்டார். உலக உயிர்கள் காப்பாற்றுபவர்களுக்குச் சொந்தம் ஆகட்டும். கொல்பவர்களுக்கு அல்ல என்பதே இந்தப் பாரமிதம்.

  1. பலம்

இந்தப் பாரமிதம் வெறும் உடல் பலத்தை மட்டும் குறிப்பிடவில்லை. மாறாக, தன்னை வெல்லும் மனபலத்தையும் குறிக்கிறது. தீமைகள் செய்யும் ஆசைகள் தூண்டப்படும்போது அதைச் செய்யக்கூடாது என்று கருதி செய்யாமல் இருக்கும் பலம். தீயவற்றைச் செய்யும் சக்திகளையும் அழிக்கும் பலம். மனத்தின் பலத்தை ஐந்துவகையாக முன்வைக்கிறது பௌத்தம். நம்பிக்கையின் மனபலம், ஆற்றலின் மனபலம், சமநிலையின் மனபலம், ஒருமுகப்படுத்தலின் மனபலம், ஞானத்தின் மனபலம். இவற்றைக் கூறுவதே இப்பாரமிதம்.

  1. பேரறிவு

பேரறிவு உலகப்பூர்வமான அறிவினையும் இந்த அண்டத்தின் செயல்படும் விதிகளையும் புரிந்துகொள்ள இந்தப் பேரறிவு உதவுகிறது. நல்ல நூல்களை வாசிப்பதும் பல அறிஞர்களின் கருத்துகளைக் கேட்பதும் இந்தப் பேரறிவினை வளர்க்கும்.

6ஆவது பாரமிதம் வரை பொதுவாக இருக்கின்றன. இன்னொரு பாரமிதம் குறித்த வரையறையில் 7. சச்ச பாரமிதம், 8. அதிட்டான பாரமிதம், 9. மெத்த பாரமிதம் 10. உபெக்கா பாரமிதம் போன்றவை கிடைக்கின்றன.

இந்தப் பாரமிதங்கள் மனித வாழ்வின் இனிய நகர்தலுக்கானவை. அவற்றைத் தொடர்வது பௌத்த வாழ்வின் அணிகலன்.

l yazhanaathi@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger