சூப்பர் நோவா
பிறக்கப்போகும் எனது குழந்தையே கேள்,
எங்களைப் போல
நீயும் ஒரு போருக்குத் தயாராய் இரு,
கருந்துளையை விட வலிமையான சாதியக் குழியைக் கண்டேன்,
கருந்துளையில் ஒளிகூட
தப்பிக்க முடியாது,
எல்லாவற்றையும் உள்ளிழுத்துக்கொள்ளும்
உன் உரிமைகளைத் தவிர
சாதியக் குழியோ
உன் உரிமைகளை
வெறிகொண்டு உரிஞ்சிக்கொண்டே இருக்கும்.
சுயமரியாதைக்கான போராட்டமே நம் தவம்.
இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரமாய் இரு
உனது ஒளியை மங்கவிடாதே
இன்னும் இன்னும்
பிரகாசித்துக்கொண்டே இரு
ஒருவேளை நீ ஒளியிழந்தாலும்
கவலை கொள்ளாதே என் கண்ணே,
உன்னிலிருந்து ஒரு சூப்பர்நோவா நிகழும்
புதிய நட்சத்திரங்கள் பிறக்கும்
அதன் அதிர்வலைகளும் ஒளிக்கதிர்களும்
இந்தப் பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் பந்தாடிவிடும்.
கண்ணே! விண்மீன்களை யாரும் அடக்கியாள முடியாது.
m
பிரசவ வலி / உழைப்பின் வலி
பாட்டாளிகளே ஆகச்சிறந்த கலகக்காரர்கள்.
அவர்களுக்கு மகனாகப் பிறந்தேன்.
என் தாய் ஒரு சம்மட்டியால் கற்களை உடைத்தெறிந்தாள்
அந்தச் சத்தம் அவள் கருப்பைத் தொட்டில் வரை எதிரொலித்தது.
அவளின் விசும்பல்கள் சம்மட்டிச் சத்தத்தோடு கலந்து,
முதிர்வதற்கு முன்பே அந்தச் சிசுவுக்குள் கலகத்தின் உயிர்ப்பைப் புகுத்தின.
அழிக்க முடியாதவற்றையும் அழிக்கிறார்கள்
தலித் தாய்மார்கள்.
மதம், சாஸ்திரங்கள், நம்பிக்கைகள் என எதற்கும்
அஞ்சியதில்லை அவள்.
கதிரையும் நிலவையும் கூட எதிர்த்தாள்.
‘சூரிய கிரகணம் கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிக்கும்’ என்று யாரோ சொன்னார்கள்.
கிரகணச் சூரியனின் கீழ் கல்லுடைத்துக்கொண்டே இருந்த அவளின் சம்மட்டி
நிலவின் நிழலைத் தூள்தூளாக்கியது.
அவள் பல கிரகணங்களைச் சிதறடித்தாள்,
எனது பிறப்பு என்பது அவளின் பிடாரித்தனத்திற்குக் கிடைத்த வெற்றி.
கௌதம் வேகடா: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் எழுதிவரும் தலித் கவிஞர், சித்திரக்காரர், குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். ‘Vultures and Other Poems’ , ‘A Strange Case of Flesh and Bones’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.
l chandrumayavan@gmail.com





