அங்கமாலியின் மாங்காய்க் குழம்பும் உன்னுடைய அப்பமும் ரசமும்…

ரேகா.கெ. மலையாளத்திலிருந்து தமிழில்: ப.விமலா

சொவ்வரையா, செங்கமநாடா, தேசமா?1

அவனுடைய வீடு எங்கே என்று துல்லியமாகத் தெரியவில்லை. பெரியாற்றின் கரையில்தான் என்பது தெரியும். தெற்கிலிருந்து வரும்போது ஆலுவாவைத்1 தாண்டி, அங்கமாலிக்கு முன்பாக… எப்போதோ ஒரு மதிய உணவு நேரத்தில், ஸ்ரீசங்கரன் தன்னுடைய சொந்த ஊர் என்பது போல, அவன் ஊர்ப்பெருமையைப் பேசியதும் நினைவிருக்கிறது. அவனுடைய தொலைபேசி எண் மட்டுமே கைவசம் இருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் வங்கியில் யாரிடமும் அவனைப் பற்றியோ, அவன் வீட்டைப் பற்றியோ விசாரிக்க முடியாது.

ஆலுவா வந்தடைந்தபோது வண்டியிலிருந்து ஸ்ரீஜா இறங்கினாள். பத்து, இருபது நிமிடங்கள் மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தது. பைக்கை அருகில் கொண்டு வந்து நிறுத்தியதால் மட்டும்தான், அது அவன்தான் என்று புரிந்தது.

தங்களுக்குள் பார்த்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. இவ்வளவு சீக்கிரத்தில் அடையாளம் காண முடியாத அளவுக்கு ஒருவன் இப்படி மாறுவானா? மனிதத் தொடர்பில்லாத நிலத்தில் கண்டபடி வளர்ந்த புற்கள் போலத் தாடி… விரக்தியின் குழிகளில் விழுந்து எழ முடியாமல் தளர்ந்து கிடக்கும் கண்கள், நம்பிக்கை இழந்து காட்டுக்கொடி போல வளர்ந்த முடி.

“அக்கா என்னைப் பார்க்கத்தான் வந்தீங்களா?” அவன் நம்ப முடியாதவனாகக் கேட்டான்.

வங்கியில் வைத்து அவன் ‘ஸ்ரீஜா மேம்’ என்றுதானே கூப்பிட்டுக் கொண்டிருந்தான் என்பது திடீரென்று நினைவுக்கு வந்தது.

“இல்லை. திருச்சூரிலிருந்து திரும்பும் வழியில் ஒரே தலைசுற்றல்… அப்போதுதான் அரவிந்தனின் வீடு இங்குதானே இருக்குனு நினைச்சேன். இனிப் பயணம் செய்ய முடியாது.”

“ஐயோ… ஆஸ்பத்திரிக்குப் போலாமா? அக்காவால, என் கூட பைக்கில உட்கார முடியுமா? வேற வண்டி கூப்பிடணுமா?”

“அவ்வளவெல்லாம் இல்ல. நான் பைக்கிலேயே வர்றேன்.”

பைக்கில் ஏறத் தொடங்கும்போதுதான் உள்ளிருந்த பகுத்தறிவு, தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது. நேர்மைக்காக மன்னரின் பட்டும் வளையலும்2 வாங்கிய ‘திருவட்டார் ஸ்தாணுமாலயன் தம்பி’யின் பேத்தி யாருடன் பயணம் செய்கிறாள்..? இந்தத் தவறானவனுடன் பயணம் செய்வதை, அறிமுகமுள்ள யாராவது பார்த்தால்ஞ்?

‘பகுத்தறிவி’ன் தடை வலிமை பெறும் முன்பே, அவனுடைய பைக் மெதுவாக, மிக மெதுவாக நகரத் தொடங்கியது.

முக்கியப் பாதையிலிருந்து சந்துப் பாதைக்குள் நுழையும்போது அவன் சொன்னான்: “அக்கா, பாதை அவ்வளவு சரியில்லை. கெட்டியாப் பிடிச்சிட்டு உட்காருங்க…”

“உன்னைப் போலவே பாதையும் கெட்டுப் போய்விட்டதோ..?” என்று ‘பகுத்தறிவு’, ஒரு அழுக்குப் பிடித்த நகைச்சுவையைச் சொன்னது.

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. வீடு வந்து சேரும்வரை அவனைப் பேசவிடாமலிருக்க, அந்த ஒரேயொரு வாக்கியத்தால் முடிந்துவிட்டதே என்று உள்ளிருந்த ‘உணர்ச்சி’ குற்றஞ்சாட்டியது.

சுற்றிலும் மரங்கள் நிறைந்த, அவ்வளவு பெரிதல்லாத ஓர் இரண்டடுக்கு ஓட்டு வீடு. தறவாட்டுப்3 பாரம்பரிய பெருமைப் பேச்சு எதுவுமில்லாத, ஐம்பதாண்டுகளாவது வாழ்ந்து ஆசை தீர்ந்த ஒரு வீடு.

அசைவற்றுக் கிடக்கின்ற ஒரு இரட்டைத்தலை உயிரினத்தைப் போல பயமுறுத்தும் அமைதி…

அவன் பாக்கெட்டில் சாவியைத் தேடுவதைப் பார்த்தபோதுதான், உள்ளே யாரும் இல்லை என்ற விசயம் ஸ்ரீஜாவின் கவனத்திற்கு வந்தது.

“இங்கே வேறு யாரும் இல்லையா?”

“இல்ல அக்கா… நான் ஜெயிலில் இருந்தப்போ, அம்மா தற்கொலை பண்ணிப்பாங்கனு சொல்லி அம்மாவோட தங்கச்சி வந்து கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. நான் அதுக்கப்புறம் அம்மாவப் பாக்கவே இல்ல.”

“அப்பா?”

“நான் அக்காகிட்டச் சொல்லியிருக்கேனே, என்னோட பத்தாம் வகுப்பு பரீட்சை அன்னைக்குத்தான் அப்பா இறந்தார்னு… அன்றைய பேப்பர் கட்டிங்கையும் காட்டியிருக்கேன்.”

“ஓ… நினைவிருக்கிறது. அப்பா இறந்த நாள்ல போய் பரீட்சை எழுதிய கெட்டிக்காரன்… அரவிந்தன் ராதாகிருஷ்ணன் பரீட்சை எழுதி முடித்து, இறுதிச் சடங்குகளைச் செய்யும் புகைப்படத்துடன் கூடிய செய்தித்தாள் செய்தி…”

மண்பானையைச் சுமந்து, நனைந்து ஒட்டி நடுங்கிப்போய் நிற்கும், சுருங்கிய கண்களுடைய, ஒரு மெலிந்த பையன்…

ரிசல்ட் வந்த நாளில் அவனைப் பாராட்ட வந்த எம்.எல்.ஏ., பஞ்சாயத்துத் தலைவர்… வரவேற்புகள்… பரிசுகள்… பூங்கொத்துகள்…

“ஆமாம்ம்ம்… அவையெல்லாம் பார்த்திருக்கிறேன்.”

வங்கியின் வேலைப்பளு பரிசாகக் கொடுத்த நீரிழிவு நோயும் ஞாபகமறதியும் காரணமாக இருக்கலாம். நெருங்கியவர்களின் பெயர்கள்கூட சில நேரங்களில் மறந்துபோய் விடுகிறது.

“எங்க ஊர்ல, முன்னெல்லாம் பத்தாவது பாஸாகி, டைப்ரைட்டிங்கும் படிச்சு முடிச்சிட்டா, ஆம்பளப் பிள்ளைங்க கல்கத்தாவுக்குப் போகணும். அப்பாவும் போனார். கொஞ்சக்காலம் டைப்பிஸ்ட்டாஞ் கொஞ்சக் காலத்துக்கு அப்புறம் ஜர்னலிஸ்ட் (பத்திரிகையாளர்) ஆனார். கிட்டத்தட்ட நாற்பது வயசுக்கு மேல ஆனதும் ஊருக்குத் திரும்பி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டார். நான் பிறந்தேன். இங்கே கொஞ்சம் மாமரங்களையும் வாழைகளையும் நட்டார். அப்பாவும் இறந்துபோயிட்டார்.”

“அதோ… அதான் இப்போ அந்த ஆள்…” சற்று தொலைவில் நிற்கும் ஒரு மாமரத்தை நோக்கி அவன் விரல் நீட்டினான். பின்னர், அவனை ஸ்ரீஜா முதன்முதலில் பார்த்தபோது அவனுடைய முகத்தில் இருந்த அதே ‘மோனாலிசா சிரிப்பை சிரித்தான்.

“இந்த அரவிந்தன் பையன் ஒரு பத்து, பதினைந்து வருஷத்துக்கு முன்னாடியே பிறந்திருக்கக் கூடாதா… அப்படின்னா கண்டிப்பாக் காதலிச்சிருக்கலாம்” என்று பக்கத்து இருக்கையிலிருந்த ஜிஜியிடம் ஸ்ரீஜா அன்று நகைச்சுவையாகச் சொல்லியிருந்தாள்…

இரு மடங்கு வயதான பெண்ணைத் திருமணம் செய்த பிரெஞ்சு அதிபரைப் பற்றி அன்றைய செய்தித்தாளில் வந்த செய்தியைக் காட்டி, “இன்னும் தாமதமாகிவிடவில்லை” என்று ஜிஜி கேலியாகப் பதிலளித்ததும்ஞ் ஜிஜியின் கன்னத்தைக் கிள்ளியதும்… அதிக காலமாகவில்லை… அதிகபட்சம் ஒன்றரை வருஷம்…

“பொதுவா இறந்தவர்களுக்காகத் தென்னைதானே நடுவாங்க?”

“அப்பா ஒரு மாமரப் பைத்தியம். மாமரம் போதும்னு அவர் ஏற்கனவே சொல்லியிருந்தார்.”

ஸ்ரீஜாவிற்கு மிகவும் சோர்வாகத் தோன்றியது. ஏதாவது சாப்பிடாவிட்டால் விழுந்துவிடுவாள்.

“இங்கே சாப்பாடு இருக்கா..? மேனேஜர்ஸ் மீட் இருந்திச்சுடா… ஒண்ணுமே சாப்பிட முடியல… “

மேலதிகாரிகளின் வழக்கமான அறிவுரைகள், செயல்பாடுகள் குறித்த மதிப்பீடு, கண்டிப்பு, மிரட்டல், குதிரையின் வாலில் வலியை ஏற்படுத்தி, அதை முன்னோக்கி ஓடவைக்கும் அதிபுத்திசாலித்தனம், எல்லா அச்சுறுத்தல்களும் முடிந்த பிறகு பல வகையான இறைச்சிகள், பழங்கள் மற்றும் பானங்களால் நிரம்பி வழியும் உணவு மேஜையை நோக்கி ஒரு தள்ளு…

எப்போதும் நடப்பதைப் போலவே, வலியை உணர்ந்த குதிரைக்குப் பிடிவாதம் அதிகமாகி எதுவும் சாப்பிடத் தோன்றவில்லை.

“சுயமரியாதைக்குக் காயம் ஏற்பட்டிருக்குமே…?”

ஸ்ரீஜா சிரித்தாள்; அவனும்…

“அக்கா பையையெல்லாம் உள்ளே வச்சிட்டு வாங்க. அதுக்குள்ள நான் குளிச்சிட்டு வந்து சாப்பாடு ரெடி பண்றேன்.”

பெரியாற்றை இதுவரை பக்கத்தில் பார்த்ததில்லை. ரயிலின் கதவருகே நின்றால், ஆலுவா பாலத்தைக் கடக்கும்போது பெரியாற்றில் விழுந்துவிடுவோமோ என்ற பயம்கூடத் தோன்றியிருக்கிறது…

ஒருமுறை போய் பெரியாற்றைத் தொட்டுப் பார்த்தால்..?

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then


Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger