எனது சிறையறையில் ஒரு சிட்டுக்குருவி

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தமிழில்: முத்துராசா குமார்

 

மனித உரிமை செயற்பாட்டாளர், எழுத்தாளர், கவிஞர். டெல்லிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஜி.என்.சாய்பாபா. ஆந்திரப் பிரதேசத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தடுப்பூசி இல்லாததால் ஐந்து வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வின் இறுதிவரை சக்கர நாற்காலியுடன்தான் பயணித்தார்; போராடினார். மாணவப் பருவத்திலிருந்தே ஆதிக்கத்திற்கு எதிராகக் களமாடியவர். ‘சல்வா ஜூடும்’ ‘ஆப்ரேஷன் க்ரீன் ஹன்ட்’ என்ற பெயரில் சொந்த நாட்டுப் பழங்குடிகள் மீது இந்திய அரசு போர் தொடுத்தது. இதற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் சாய்பாபா மிகத் தீவிரமாக இயங்கினார்.

2014, மே 9ஆம் தேதி மதியம் டெல்லியில், மகாராஷ்டிரா காவல்துறையால் பலவந்தமாகக் கடத்தப்பட்டார் சாய்பாபா. காவலர்கள் மிகக் கடுமையாகக் கையாண்டதில் சாய்பாபாவின் இடதுகைத் தசையிலும், நரம்பிலும் மோசமான பாதிப்பு உண்டாகி, குணப்படுத்தவே முடியாமல் போனது. தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு, ‘UAPA’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு கட்சிரோலி அமர்வு நீதிமன்றம் சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

சக்கர நாற்காலி, மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டதோடு, ‘கிழிஞிகி சிணிலிலி’ எனும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட சாய்பாபா, உளவியலாகவும், உடல் ரீதியாகவும் ஏராளமான கொடுமைகளுக்கு ஆளானார். 2020ஆம் ஆண்டு இறந்த தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கூட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இறுதியாக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர்நீதிமன்றம் சாய்பாபாவை விடுதலை செய்தது. இருந்தாலும் இந்த விடுதலையை ரத்து செய்யக் கோரி ஒன்றிய பா.ஜ.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தொடர் மருத்துவச் சிகிச்சையில் இருந்தும் உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததால், 2024ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சாய்பாபா இயற்கை எய்தினார். அவரது கண்களும், உடலும் மருத்துவமனைக்குத் தானம் செய்யப்பட்டன.

சிறைக்குள் இருந்தபடி சாய்பாபா எழுதிய கவிதைகளும், கடிதங்களும் அடங்கிய ஆங்கில நூலை ‘Why Do You Fear My Way So Much? Poems and Letters from Prison – G.N.Saibaba’ என்ற தலைப்பில் ‘SPEAKING TIGER (2022)’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலுள்ள இரு கவிதைகளும் இந்த நூலில் இடம்பெற்றவையே.

‘மரணத்தை வென்றவர் – பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் வாழ்வும் காலமும்’ – தமிழில்- பிரேம் என்ற நூலை அலைகள் பதிப்பகம் (2026) வெளியிட்டுள்ளது.

 

எனது சிறையறையில் ஒரு சிட்டுக்குருவி

 

குளிரும் வெறுமையுமான

நடுநிசியில்

எனது சிறைக்கம்பிகளுக்குள்

அம்பைப் போல

பறந்து வந்தது

சிட்டுக்குருவி ஒன்று.

 

தத்தித் தத்தி

மெதுவாய்த் தாவி

கழிவறையின் கைப்பிடிச் சுவரில்

அமர்ந்தது.

 

தூக்கக் கலக்கத்தில்

பாதி மூடிய

பிரம்மைக் கண்களுடன்

குருவியிடம்

ஏதோ மங்கலாய்

இரகசியம் சொல்ல

முயன்றேன்.

மெலிந்த காவலாளி

பின்னால் வர

இறுகிய முகத்துடன் இளித்தபடி

நள்ளிரவு கண்காணிப்புக்கு

அவசரமாய் வருகிறார்

பருத்த அதிகாரி.

 

கனவிலிருந்து விழித்து

அந்தச் சின்னஞ்சிறு உயிரை

உற்றுக் கவனித்தேன்.

வெளியே பறக்க முனைகையில்

நேராய்க் கம்பியில் மோதி

தரையில் விழுந்தது.

மரத்துப்போன

எனது இதயப் புலம்பலைப் போலிருந்தது

அதன் முணுமுணுப்பு.

 

சிதைந்த நாகரிகத்தின்

பேயைப் போல

ஒலியெழுப்பியது

தொலைதூர நிலையத்தின்

இரவு ரயில்.

நிதானமும் துணிவும் வந்த குருவி

எனது சிறையறைக்குள்

அங்குமிங்கும் நடந்து

தரையின் சிறுபுள்ளிகளைக்

கொத்தியது.

 

கண்காணிப்பில் சோர்ந்த

தனது கண்களைத் தேய்த்தபடி

வராந்தாவில்

முன்னும் பின்னும் நடந்தார்

காவலாளி.

 

படுக்கையில் ஏறிய

சிறுகுருவி

ரணமும் நடுக்கமுமான

என் பாதங்களுக்கருகில்

அமர்ந்தது.

எனது மூச்சை அடக்கினேன்.

படுக்கையெங்கும்

மெல்ல நடந்து

கண்களை

அங்குமிங்கும் உருட்டி

என்னிடம் ஏதோ சொல்ல வந்தது

அல்லது

எனது இதயத்துடிப்பைக் கவனித்தது.

 

பிரமாண்டமான

பாதுகாப்பு மதில்களுக்கு வெளியே

கோரமாய் அலறுகிறது

ஆந்தை.

ஒருவேளை

தனது பாதையை

அல்லது

தனது கூட்டை

அல்லது

தனது அன்புக்குரிய ஒருவரை

அந்தச் சிற்றுயிர்

தொலைத்திருக்குமோ.

 

சடசடத்த தனது சிறகால்

திடீரென

உத்திரத்துக்குப் பறந்து

தரையில் விழுந்து துடிதுடித்தது.

ஒவ்வாமையான

அபாயச் சங்கு ஓலமிட்டது.

கண்காணிப்பு காவலாளிகள்

தங்களது பணி நேரங்களை

மாற்றிக் கொண்டனர்.

உயிரற்ற இரவு

மீண்டும் அனத்தியது.

 

சிறைக்குள் பறவை இருக்க

எனது வறண்ட தொண்டைக்கு

என்னால்

எப்படித் தண்ணீர்

எடுத்துக்கொள்ள முடியும்?

 

எனது ஆழ்கனவுக்குள்

மீண்டும் போய்

அதனிடம்

இரகசியமாய்ச் சொன்னேன்:

என் நண்பனே,

பயங்கரத் தனிமையில் இருக்கிறேன்

தினமும் ராத்திரி வா.

 

23 டிசம்பர் 2017

(சந்துவுக்கு)

 

எனது கொடுஞ்சிறையில் ஒரு கனவு

 

பாலைவனத்திலிருந்து எழுந்த பூதம்

இயற்கையின் பல்லுயிர்களைத்

தனது காலில் போட்டு மிதித்தபடி

பூமியெங்கும்

அலைகிறது.

 

வானெங்கும்

நெருப்பைக் கக்குகின்றன

இரும்புக் கழுகுகள்.

மழைத்துளியின்றி முழங்குகிறது

மின்னலிடிப் புயல்.

மின்னல் வெளிச்சத்தில்

குருடாகின்றன

நிலத்தின் கண்கள்.

 

மரங்கள்

வேரோடு பிடுங்கப்படுகின்றன.

ஆறுகள்

வறள்கின்றன.

மலைகள்

சுக்குநூறாகின்றன.

காடுகள்

தீப்பிடிக்கின்றன.

உலகம்

நாசமாகிறது.

 

இயல்பான

வெயிலைப் போலில்லை

இந்தக் கோடை.

இயல்பான

கடற்சீற்றம் போலில்லை

இந்தப் புழுதிப் புயல்.

தனது ராட்சதக் கைகளை

அகல விரித்து

சாவுகளின் மீது

திகிலாட்டம் போடுகிறது

அகோர மிருகம்.

இசை நிற்கிறது.

படைப்புத்திறன் மங்குகிறது.

கவிஞர்களுக்கு விஷம்

கொடுக்கப்படுகிறது.

வரலாற்றாய்வாளர்கள் உயிரோடு

எரிக்கப்படுகிறார்கள்.

விஞ்ஞானிகள் மூளைச்சலவை

செய்யப்படுகிறார்கள்.

தத்துவவாதிகள் தூக்குமேடைக்கு

அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

 

அன்பானவர்களை

சிந்தனைவாதிகளை

அடையாளம் தெரியாத ஆள்

சுட்டுக் கொல்கிறான்.

செத்த பறவைகளைப் போல

மரத்திலிருந்து விழுகின்றனர்

மக்கள்.

கிராமங்களும், நகரங்களும்

வலியால் முனகுகிறது.

 

பொல்லாத நமட்டுச்சிரிப்புடன்

தரையெங்கும்

ஓங்கி நடக்கிறது பிசாசு.

உருக்குலைந்த பூமியில்

மனித காலடித் தடங்களைத்

துடைத்துச் செல்கிறது

இடியுடன் கூடிய

சுழற்புயல்.

 

(மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அடித்த புழுதிப் புயலிலும் ஓயாத இடியிலும் சிக்கி நாடெங்கும் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இந்தச் செய்தியைப் படித்த பிறகு மே 14, 2018 அன்று எனக்கு வந்த கனவின் வார்த்தைகளே இவை)

14 மே 2018

(N..வேணுகோபாலுக்கு)

=writermuthurasa@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger