கண்காணிப்பு, கட்டுப்பாடு, தண்டனை: திருநர் நலனைச் செரித்த இந்துத்துவ சித்தாந்தம்

கனகா வரதன்

டந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. வீரேந்திர குமார் காதிக், நாடாளுமன்றத்தில் ‘திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா, 2026’ஐ தாக்கல் செய்தார். பொதுவாக அரசு கொண்டுவரும் எந்தவொரு மசோதாவோ அல்லது சட்டமோ ஒரு தரப்பினருக்குச் சாதகமாகவும், சிலருக்குப் பாதகமாகவும் அமைவது வழக்கம். ஆனால், இந்த மசோதா ஒட்டுமொத்தத் திருநர் சமூக மக்களையும் ஓரணியில் திரட்டி எதிர்வினையாற்ற வைத்திருப்பது, அதிலுள்ள சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டுகிறது. மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டங்கள் வீரியமடைந்து வரும் வேளையில், இம்மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே திருநர் சமூகத்தின் ஒற்றைக் கோரிக்கையாக இருப்பதை நாம் இங்கே பதிவு செய்ய வேண்டும்.

இத்தகைய சூழலில், இம்மசோதா குறித்த விமர்சனப் பார்வையை முன்வைக்க மூன்று அம்சங்கள் முக்கியமாகின்றன. ஒன்று, மசோதா பரிந்துரைக்கும் மாற்றங்கள் எத்தகைய உரிமைகளை வழங்குகின்றன அல்லது பறிக்கின்றன என்பதைப் பட்டியலிடுவது. இரண்டு, மசோதாவின் பரிந்துரைகளைக் கொண்டு அதன் நோக்கமும் குறிக்கோளும் என்னவாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயல்வது. மூன்று, நால்சா (NALSA) தீர்ப்பு உட்படத் திருநர் சமூகத்தின் நீண்டகாலச் சமூக, சட்டப் போராட்டங்களின் படிப்பினைகளைக் கொண்டு இம்மசோதாவைப் பகுப்பாய்வது. இதன் மூலம் திருநர் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தீர்வுகள் குறித்த உரையாடலைப் பொதுவெளியில் முன்னெடுப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மசோதா முன்வைக்கும் மாற்றங்கள்

இந்தத் திருத்த மசோதாவின் முதல் ஏமாற்றம், இது உரிமைகள் சார்ந்த எந்தவித முன்னெடுப்புகள் குறித்தும் பேசாததுதான். திருநர் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான தனி இடஒதுக்கீடு குறித்தோ, வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்தோ இதில் ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடப்படவில்லை. சில செயல்முறைத் திருத்தங்களைத் தாண்டி, மூன்று அடிப்படை மாற்றங்களை மசோதா முன்வைக்கிறது:

யார் திருநர்?

சர்ச்சைக்குரிய முதல் விஷயம்,  திருநர் என்ற வரையறையையே மசோதா மாற்றி  அமைக்கிறது.

பிரிவு (2) உட்பிரிவு (k), திருநர் அடையாளத்தை ஹிஜ்ரா, அரவாணி, ஜோக்தா, கின்னர் போன்ற சமூகப் பண்பாட்டு இனக்குழுக்கள் எனவும், பிறப்பின்போது உறுப்பியல் மாறுபாடு கொண்டோர் எனவும், கட்டாயப்படுத்திப் பாலின மாற்றத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர் எனவும் சுருக்குகிறது.

2019ஆம் ஆண்டுச் சட்டத்தில் வழங்கப்பட்ட ‘பாலின அடையாளத்தைச் சுயநிர்ணயம் செய்யும் உரிமை’யையும், ‘இடைப்பால்’ (Intersex) அடையாளங்களுக்கான பிரத்தியேக விளக்கத்தையும் இது நீக்குகிறது. இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், இதில் ‘திருநம்பிகள்’ (Transmen) விடுபட்டிருப்பதுதான். இந்தச் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால் திருநம்பிகளின் அடையாளமே கேள்விக்குள்ளாக்கப்படும். ஏற்கனவே 2019 சட்டத்தின்படி அடையாள அட்டை பெற்றவர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சமும் எழுகிறது.

பரிசோதனை மற்றும் கட்டுப்பாடு

“2019 சட்டத்தின்படி, ஒருவர் தன்னைத் திருநர் எனச் சுயநிர்ணயம் செய்துகொண்டு அதற்கான ஆவணங்களைப் பெற முடியும். ஆணிலிருந்து பெண் அல்லது பெண்ணிலிருந்து ஆண் எனப் பாலின அடையாளத்தை ஆவணங்களில் மாற்ற, மருத்துவச் சான்றிதழ்களை மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தப் புதிய சட்டத்திருத்த மசோதா திருநர் அடையாளச் சுயநிர்ணயத்தை மறுப்பதோடு, அதனைக் கட்டுப்பாடு, அங்கீகாரம், கண்காணிப்பு என்ற கட்டமைப்புக்குள் கொண்டுவருகிறது.

  • பிரிவு (2) உட்பிரிவு (AA): மாவட்ட அளவிலான மருத்துவ வாரியத்தை நிறுவி, திருநர் அடையாளத்திற்கு மருத்துவப் பரிசோதனையைக் கட்டாயமாக்குகிறது.
  • பிரிவு (6) உட்பிரிவு (1): மாவட்ட நீதிபதி மருத்துவ வாரியத்தின் பரிந்துரையை ஆராய்ந்து, தேவைப்பட்டால் பிற மருத்துவ நிபுணர்களின் உதவியைப் பெற்றுச் சான்றிதழை வழங்கப் பரிந்துரைக்கிறது.
  • பிரிவு (7) உட்பிரிவு (1, 1 a): மருத்துவ நிறுவனங்கள், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நபர்கள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியருக்கும் மருத்துவ வாரியத்திற்கும் அளிக்க வேண்டும் எனக் கூறுகிறது.

2019 சட்டத்தில் சுயநிர்ணயத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டைக்கு, இந்தத் திருத்த மசோதா மருத்துவப் பரிசோதனை, மாவட்ட நீதிபதியின் திருப்திக்கேற்ப தேவைப்பட்டால் மறு ஆய்வு என ஐந்து கட்டச் சோதனைகளை முன்வைக்கிறது. மருத்துவ வாரியக் கட்டமைப்பு என்ன நிலையில் இருக்கிறது, என்ன மாதிரியான பரிசோதனைகளை மேற்கொள்ளும், அது எவ்வளவு மனிதாபிமானத்துடன் நடைபெறும், அதில் திருநர் மக்களின் சுயமரியாதை எப்படி நசுக்கப்படும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதில் மற்றொரு வேடிக்கை என்னவெனில், மருத்துவ வாரியத்தின் பரிந்துரையை ஏற்கவும் நிராகரிக்கவும் மாவட்ட நீதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இது தெளிவில்லாத நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி, மாவட்ட நீதிபதி என்ற அதிகாரத்தின் விருப்பு வெறுப்புகளுக்கும் சௌகரியத்திற்கும் திருநர் மக்களின் வாழ்வையும் சுயமரியாதையையும் அடகு வைக்கிறது.

திருநர் மக்கள் அனுபவிக்க நேரும் மனித உரிமை மீறல்களைத் தாண்டி, சாதிச்சான்றிதழ், ரேஷன் அட்டை என அடிப்படை ஆதாரங்களுக்காக அலைக்கழிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை புரிந்த எவரும் இதன் நடைமுறைச் சிக்கல்களை உணர முடியும். திருநம்பிகள் தமிழ்நாட்டின் மருத்துவச் சேவையை நுகர எப்படியான சங்கடங்களை அனுபவிக்கிறார்கள் என்பதற்கு ‘நியூஸ் மினிட்’ இணையதளத்தில் வெளியான கட்டுரையே சான்றாகும்.

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள் சான்றிதழ்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டியதைக் கட்டாயமாக்குவதன் மூலம், திருநர் மக்களையும் அவர்களின் உடலையும் அந்தரங்கங்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவருகிறது. ஒரு நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் உள்ள உறவை, தொடர்பை உறுதிப்படுத்துவது அடையாள ஆவணங்கள்தாம். அடையாள ஆவணங்களைக் கட்டுப்படுத்துவதும் கடினமாக்குவதும், இந்த நாட்டில் திருநர் மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகப் பாவிப்பதாகத்தான் உள்ளது. இந்தத் தருணத்தில், நாம் சி.ஏ.ஏ (CAA) போன்ற சட்டங்களின் மூலம் குடியுரிமையை நிரூபிக்கும் சுமையை இஸ்லாமிய மக்கள் மீது திணித்ததை நினைவுகூர வேண்டும்.

குற்றமும் தண்டனையும்

இம்மசோதாவின் பெரும்பகுதி, பிரிவு (18)-இன் கீழ், குற்றங்கள் மற்றும் தண்டனைகளின் விரிவாக்கம் குறித்ததாகவே இருக்கிறது. 2019 இன் சட்டம் கொத்தடிமை முறை ஒழிப்பு, திருநர் மக்களுக்கு எதிரான அநீதி, வன்முறை போன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தண்டனை என வகுத்திருந்தது. ஆனால், இந்தத் திருத்த மசோதாவில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் நான்கு உட்பிரிவுகள், திருநர் மக்களுக்கான பாதுகாப்பு என்ற போர்வையில் ஒன்றிய அரசின் அச்சத்தையே வெளிக்கொணருகின்றன.

இந்த உட்பிரிவுகள் கடத்தல், ஆண்மையைச் சிதைத்தல், ஒரு குழந்தை அல்லது வயது வந்தவரைத் திருநர் அடையாளத்தை வெளிப்படுத்தக் கட்டாயப்படுத்துதல் போன்ற பிரிவுகளைச் சேர்க்கின்றன. சில குற்றங்களுக்குத் தண்டனைகள் ஆயுள் தண்டனை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இங்கே கவனிக்க வேண்டியது மசோதாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்லாடல்கள்: “பலவந்தமாக, அச்சுறுத்தல், வற்புறுத்தல், கவர்ச்சி, ஏமாற்றுதல், தூண்டுதல், முறையற்ற செல்வாக்கு அல்லது வேறுவிதமாக.”

இதே சொல்லாடல்களை நாம் ‘கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்’ போன்ற சட்டங்களில் காண முடியும். எப்படி ‘கட்டாய மதமாற்றம்’ என்ற போலியான கருத்தாக்கத்தின் மூலம் சிறுபான்மையினர் மீது வெறுப்பு உற்பத்தி செய்யப்பட்டதோ, அதேபோல் திருநர் மக்கள் மீதான வெறுப்பை நிறுவனப்படுத்தவும் அச்சத்தை விதைக்கவும் இப்படியான சொல்லாடல்கள் வழிவகுத்துப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இப்படியான குற்றப் பிரிவுகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம், திருநர் சமூக மக்களையும் அவர்களைச் சார்ந்து இயங்கும் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என எவரையும் குற்றவாளிகள் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியும் என்ற அபாயம் பெரும் அச்சமூட்டுகிறது. பொதுவாக ஒரு திருநர் குழந்தையோ அல்லது இளம் வயதினரோ தங்களைத் திருநர் என்று உணரும்போது, குடும்பத்தாலும் சமூகத்தாலும் ஒதுக்கப்படுவதும் துன்புறுத்தலுக்கு ஆளாவதும் நாம் அறிந்ததே. அப்படியான நபர்களுக்கு அடைக்கலமும் ஆறுதலும் கொடுக்கும் எவரையும் இந்தக் குற்றப் பிரிவின் கீழ் கொண்டுவந்து அரசு தண்டிக்க முடியும்.

வேடிக்கை என்னவென்றால், திருநர் நபர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற பெரும் குற்றங்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தண்டனையைப் பரிந்துரைக்கும் அரசு, ஒருவரைத் திருநராக வெளிக்காட்டக் கட்டாயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை வரை உறுதி செய்ய வழிவகுக்கிறது. யாரைப் பாதுகாக்க, யாரைத் தண்டிக்க இந்தச் சட்டம் என்ற அடிப்படைக் கேள்வியை இங்கு எழுப்பாமல் இருக்க முடியவில்லை. இந்தப் போக்கைத் திருநர் மக்களுக்கு எதிராக ஆங்கிலேயக் காலனி அரசு கொண்டுவந்த ‘குற்றப் பரம்பரைச் சட்டத்தின்’ நீட்சியாகவே பார்க்க முடிகிறது. ஆங்கிலேய அரசுக்குத் திருநர் மக்கள் மீதிருந்த அதே அச்சமும் பயமும் இங்கும் பிரதிபலிக்கிறது.

அரசின் தன்னிலை விளக்கம்

திருத்த மசோதாவை ஏன் கொண்டு வருகிறோம், இதன் அடிப்படைக் காரணம் என்ன, எந்த நடைமுறைச் சிக்கல்களைக் களைய இது தேவைப்படுகிறது என்ற தன்னிலை விளக்கத்தையும் மசோதாவின் இறுதியில் ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்தத் தன்னிலை விளக்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஆச்சரியமூட்டும், நகைப்புக்குரிய இரண்டு வாசகங்களை இங்குக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்:

  • ‘கொள்கையானது, தங்கள் தவறு எதுவுமின்றியும் விருப்பமின்றியும் உயிரியல் காரணங்களால் கடுமையான சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்பவர்களை மட்டும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது; இன்றும் கொண்டுள்ளது.’
  • ‘திருநர் என்பதன் தற்போதைய வரையறை, அதன் மூலம் பயனடையும் உண்மையான ஒடுக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதைச் சாத்தியமற்றதாக்குகிறது.’

ஜனநாயக அரசின் அடிப்படை மாண்பு இம்மசோதாவில் எப்படிச் சரிந்திருக்கிறது என்பதுதான் இங்கு வேதனையளிக்கிறது. பாதுகாப்பு என்ற அடிப்படை உரிமையை உறுதி செய்யும் ஒரு சட்டத்தில், அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகப் பார்வையை விடுத்து, அந்தச் சமூகத்திற்குள் ‘தீவிரமாகப் பாதிக்கப்பட்டவரைத்’ தேடி அலையும் ஒரு என்.ஜி.ஓ (NGO) மனநிலையில் அரசு இருப்பது முதல் சிக்கல். இரண்டாவது, இந்தப் போக்கு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டு உரிமைகளில் ‘கிரீமிலேயரைப்’ புகுத்திய பார்ப்பனச் சித்தாந்தத்தையே நினைவூட்டுகிறது.

மேலும் ஒன்றிய அரசு குறிப்பிடுவது: ‘தற்போதுள்ள வரையறையின் கீழ் திருநர்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பாகச் சந்தேகங்களும் சிக்கல்களும் எழுந்துள்ளன. அம்மக்களுக்குத் தேவையான உரிமைகளையும் சலுகைகளையும் வழங்குவதிலும் விநியோகிப்பதிலும் குளறுபடிகள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, திருநருக்கான வரையறையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது’ எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இங்கே எழும் அடிப்படை கேள்வி, அரசு திருநர் மக்களுக்கு என்னென்ன உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியிருக்கிறது என்பதுதான். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் இடஒதுக்கீடு போன்ற அடிப்படை உரிமைக் கோரிக்கைகளுக்கு மௌனம் காக்கும் அரசு, ஏதோ பல முன்னெடுப்புகளை எடுத்தது போலவும், அதில் எண்ணற்ற குழப்பங்கள் வந்துவிட்டது போலவுமான ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பது ஏற்புடையதாக இல்லை.

2019 இன் சட்டம், திருநர் மக்களுக்குப் பொதுச்சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், பாலின உறுதிப்படுத்தல் சார்ந்த மருத்துவப் பராமரிப்பு, சேவை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் விதிகளை வகுத்திருக்கிறது. ஆனால் யதார்த்தமோ, சென்ற ஆண்டு வரை ‘ஆயுஷ்மான் பாரத்’ போன்ற திட்டங்களுக்குத் திருநர் நலன் சார்ந்து ஒதுக்கப்பட்ட நிதி 76.87 கோடி (2025-26) என்ற அளவில்தான் இருக்கிறது. ஒதுக்கப்படும் நிதியிலும் மிகவும் சொற்பமான தொகையே செலவழிக்கப்படுகிறது; குறிப்பாக 2021-2024 காலக்கட்டத்தில் 11% மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது

மசோதாவின் மதிப்பீடு

உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாகத் திருநர் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்டு வரும் சட்டங்கள் மற்றும் வெறுப்பு அரசியலின் தொடர்ச்சியாகவே இம்மசோதாவைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல், கடந்த பத்தாண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) மற்றும் பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு வரும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் போன்ற பிற்போக்கான சட்டத் திருத்தங்களின் ஒரு அங்கமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது

கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு, நலத்திட்டங்கள், திருநர் மக்களின் நலனுக்கான நீதி என எந்தவொரு நேர்மறைச் செயல்திட்டங்களையும் முன்னெடுக்காமல், திருநர் மக்களுக்கு எதிரான அடிப்படைவாதிகளின் அச்சத்தையும் பாகுபாட்டையும் நிறுவனப்படுத்தும் நோக்கம் மட்டுமே இம்மசோதாவில் வெளிப்படுகிறது. இந்த மசோதா, திருநர் மக்களின் அரசியல் முன்னெடுப்புகளை ‘நால்சா’ (NALSA) தீர்ப்புக்கு முந்தைய காலத்திற்கே இழுத்துச் சென்று, அவர்களின் சமூக முன்னேற்றத்தைச் சிதைக்கும் என்பதை மறுதலிக்க முடியாது. இம்மசோதாவின் மிகப்பெரிய சிக்கல், இதில் விரிவாக்கப்பட்டுள்ள குற்றங்களும் தண்டனைகளின் வீரியமும்தான் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும்; திருநர் மக்களை ஒன்றிய அரசு ஒரு பண்பாட்டு இனக்குழுக்களுக்குள் அடைத்துப் பார்ப்பதுதான் இதன் அடிப்படை முரணாகும். குறிப்பாக, இந்து மத வழிபாட்டையும் சடங்குகளையும் பின்பற்றும் நான்கு இனக்குழுக்களை மட்டுமே இம்மசோதா அங்கீகரிக்கிறது. திருநம்பிகளுக்குக் (Transmen) கலாச்சார இனக்குழுக்களின் வரலாற்றில் இடமில்லை என்ற ஒரே காரணத்திற்காகவே, அவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. திருநர் மக்கள் குடும்பத்தாலும் சமூகத்தாலும் ஒதுக்கப்பட்டு, இறுதியாகத் தள்ளப்படும் புகலிடம்தான் இத்தகைய இனக்குழுக்கள். நவீன காலத்தில் பாகுபாடுகளைக் களைய முன்வராமல், உரிமைகளை வழங்காமல், இந்த இனக்குழுக்களை மட்டும் அங்கீகரித்துத் தூக்கிப் பிடிக்கும் இம்மசோதா, ‘குலக்கல்வி’ முறையை ஆதரிப்பதற்கு ஒப்பான தூய்மைவாத இந்துத்துவப் பார்வையே அன்றி வேறொன்றுமில்லை. இன்னும் எவ்வளவு காலத்திற்குத் திருநர் மற்றும் திருநங்கைகள் இத்தகைய இனக்குழுக்களுக்குள் அடைபட்டுப் புழுங்கிச் சாக வேண்டும்? இங்கே கவனிக்க வேண்டியது யாதெனில், இப்படியான இனக்குழு அடையாளங்களை நோக்கித் தள்ளப்படும் மக்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களாகவே இருக்கிறார்கள். எனவே, ஜமாத் மக்களின் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது இப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகரும் முதல் படியாக இருக்கும்.

நிறைவாக

‘திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா’ என்பதற்குப் பதிலாக, ‘திருநர் உரிமைகள் பறிப்புச் சட்டத் திருத்த மசோதா’ என்பதே இம்மசோதாவுக்குப் பொருத்தமான பெயராக இருக்கும். அரசியல் சாசனம் உறுதி செய்த அடிப்படை உரிமைகளான சமத்துவம், பேச்சு – கருத்துச் சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் (பிரிவு 14, பிரிவு 19(1)( a), பிரிவு 19(1)( c), பிரிவு 21) ஆகியவற்றுக்கும், ‘நால்சா’ தீர்ப்பு வழங்கிய பாலினத்தைச் சுயநிர்ணயம் செய்யும் உரிமைக்கும் இம்மசோதா முற்றிலும் முரணாக இருக்கிறது.  இம்மசோதா நடைமுறைக்கு வந்தால், இடஒதுக்கீடு போன்ற உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருப்பதை விடுத்து, அடிப்படை அடையாளத்திற்காகவே மீண்டும் போராட வேண்டிய பின்னடைவு ஏற்படக்கூடும். எனவே, மசோதாவை முழுவதுமாகத் திரும்பப் பெற்று, குறைந்தபட்சம் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்திற்கே திரும்ப வேண்டும் என்பதே இத்தருணத்தில் சரியான கோரிக்கையாகவும் நிபந்தனையாகவும் இருக்கும். மேலும், இம்மசோதா நமக்குப் புகட்டும் பாடம் என்னவெனில், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணிக் காப்பது அடிப்படைவாதிகளின் வேலை; அவற்றை அழித்தொழிப்பதே (அல்லது சீர்திருத்துவதே) அம்பேத்கரிய, பெரியாரிய முற்போக்குச் சித்தாந்தங்களின் கடமையாகும். மனதின் மற்றும் சிந்தனையின் விடுதலைதான் அரசியல் அதிகாரத்தை நோக்கிய பயணத்தின் முதல் படியாக இருக்க முடியும். இந்து கலாச்சாரங்களைக் கட்டிக்கொண்டு சமூக மாற்றத்தையோ அல்லது புரட்சியையோ நோக்கி நகர்வதென்பது அபத்தமான கனவாகத்தான் இருக்கும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு எனும் அரசியல் அதிகார உரிமைகளைக் கோரும் அதே வேளையில், கலாச்சாரச் சீர்திருத்தத்தையும் நாம் முன்னெடுக்க வேண்டும். கலாச்சார மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் முன்னெடுப்பதும், இனக்குழு அடையாளங்களின் தேவை இல்லாத அளவுக்கான பாகுபாடுகளற்ற ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதும்தான் திருநர் மக்களின் உண்மையான விடுதலைக்கு வழிவகுக்கும். அந்தப் பொறுப்பு ஏதோ திருநர் மக்களுக்கானது மட்டுமல்ல; முற்போக்கு இயக்கங்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும். திருநர் மக்கள் பெரும்பான்மை மையநீரோட்டத்தில் கலப்பதே ‘பேகம்புரா’ நோக்கிய தோழமைப் பயணத்திற்கு வழிவகுக்கும்.

“அறிவை வளர்த்தெடுப்பதே மனித வாழ்வின் மிக உயரிய நோக்கமாக இருக்க வேண்டும்.” – பாபாசாகேப் அம்பேத்கர்

உசாத்துணைகள்

  • https://prsindia.org/files/bills_acts/bills_parliament/2026/Transgender_Bill_2026_Text.pdf
  • https://prsindia.org/files/bills_acts/bills_parliament/2019/The%20Transgender%20Persons%20(Protection%20of%20Rights)%20Bill,%202019%20Bill%20Text.pdf
  • https://www.thenewsminute.com/premium/for-trans-men-in-india-a-doctor-visit-is-a-minefield-of-humiliation-denial-and-trauma

l kangavarathan@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger