புளியமரத்தின் கிளையில் கருப்புச் சேலையில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள் இளவரசி. 5ஆம் வகுப்பு படிக்கும் அவளுக்கு எப்போது மழைக் காலம் வரும் என்றிருந்தது. அந்த மூன்றுமாதக் காலம் முழுதும் அவளுக்கு இன்பத்தைத் தருவது மாலை நேரச் சாரலோ, பெருமழையோ அல்ல. தான் வளர்க்கும் பன்றிக்குட்டிகளுக்கு உணவளித்துக் கொண்டே பன்றிக் கொட்டகையின் சகதியில் மெல்ல நடந்துகொண்டே ஓடுவதும் சில சமயங்களில் அதில் வழுக்கி விழுந்து சிரிப்பதும்தான். கார்த்திகை தொடங்கி ஒருவாரம் ஆகிவிட்டது, இன்னும் கருமேகங்கள் புலப்படவில்லை என்று மனசுக்குள்ளும் சில நேரங்களில் வெளிப்படையாகவும் குமுறிக்கொண்டிருந்தாள். இளவரசியின் குமுறலைக் கேட்ட அவளது தாய், ‘இவள் ஏன் மழை வேண்டும் என்று இப்படிப் புலம்புகிறாள், மழை வந்தால் நான் படும் பாட்டை இவள் எங்கு அறியப் போகிறாள்’ என்ற யோசனையில் வீட்டு மூங்கில் பிளாச்சு கதவுகள் சரியாக உள்ளதா என்று பரிசோதித்துக்கொண்டிருந்தாள். வசவுச் சொற்கள் சரளமாக இளவரசியின் காதுகளை எட்டியவாறு இருந்தன. சத்தம் வந்த திசையில் திரும்பினால், வலது கையில் தன் உயரத்திற்கு ஒரு தடியும் இடது கையில் வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கிக்கொண்டும் வசுவுச் சொற்களை வாரி வழங்கிக்கொண்டிருந்தார் கோபாலன். இளவரசிக்கு ஏதும் புரியவில்லை. அப்பாவும் அம்மாவும் அவரளவுக்குப் பேசவில்லை என்றாலும் இவர்கள் பேசிய வார்த்தைகள் அவரை மேலும் சினம் கொண்டவராக மாற்றியதை இளவரசியால் பார்க்க முடிந்தது. கோபத்தில் வசைச் சொல்லைக் கூறியவாறே கையில் இருந்த தடியை விட்டெறிந்தார். எதிரில் இருந்த இருவரும் விலகிக்கொள்ள, அது பின்னாடி இருந்த இளவரசியின் நெற்றியில் பட்டுக் கீழே விழுந்தது. அவ்வளவுதான் இளவரசியின் அப்பாவும் அம்மாவும் கோபாலனை ஒரு கை பார்த்துவிட்டார்கள். அடிபட்ட இடத்தைக் கைகளால் பிடித்துக்கொண்டு அங்க நடப்பவற்றை வேடிக்கைதான் பார்க்க முடிந்தது இளவரசியால். முகம் வீங்கிய கோபாலன்,
“ஏண்டா, உன் ஊட்டுப் பன்னி என் கொல்லய நாசம் பண்ணுது. அத என்னனு கேக்க வந்தா என்ன கொல்லப் பாக்குறீங்களா?” என்று கூச்சலிட்டான்.
“இதோ பாரு கோபாலு அதச் சொல்றதுக்கு ஒரு மொற இருக்கு. நீ பாட்டுக்கு வந்து சீனா பூனானு பேசிக்கிட்டு இருக்க. நீ உட்ட தடி, என் மக கண்ணுல பட்டுருந்தா நீயா ஆபிரசன் செலவ பாப்ப”
“ஆங்… அதான் எனக்கு வேல பாரு. இனி உன் ஊட்டுப் பன்னிங்க என் கொல்ல பக்கம் வந்துச்சு, வெங்காய வெடி வச்சுக் கொன்னுபுடறனா இல்லயானு பாரு”
“வப்ப வப்ப… வச்சிதான் பாரேன்”
“வைக்கதான் போறேன். யாரும் இல்லாத அனாத நாயிங்களுக்குப் பேச்சப் பாத்தியா. ஒத்தக் குடும்பமா இந்த ஊர்ல இருக்கும்போதே உங்களுக்கு இவளோ கொழுப்பு இருக்கு.” அவன் மறையும் வரை அவனது வசவுச் சொற்கள் அவர்களின் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.
“எதுக்குமா நம்ம பன்னிங்க அவரு கொல்லக்கிப் போது?” என்று இளவரசி கேக்க,
“ம்ம்… பன்னீங்க பீயத் திங்க காடு கரைக்குத்தான் போவும். இவ ஒருத்தி, நேரம் காலம் தெரியாம கேள்வியா கேட்டுகிட்டு… நெத்தியக் காட்டு இப்டி,” என்று அவளது நெற்றியில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக்கொண்டிருக்கும் போது மீண்டும் இளவரசிக்குச் சந்தேகம் வர,
“அவரு கொன்னுபுடுவேன்னு சொன்னாரே, அது நம்ம பன்னிங்களயா?”
“ஆமா”
“அப்போ புதுசா பொறந்த கிருஷ்ணனையுமா?”
அவள் அம்மா பூவரசி கண்கள் ததும்பின.
“இல்லம்மா, கிருஷ்ணன ஒண்ணும் பண்ண மாட்டாங்க. அவன் வீட்டுலதான இருக்கான். அவன் வெளிய போக இன்னும் ஒருமாசம் ஆகும். நீ ஒண்ணும் பயபடாத”
சரியென்று பூவரசியை அணைத்துக்கொண்டாள் இளவரசி.
நாட்கள் வேகமாக ஓடத் தொடங்கின. நகரமயமாதலும் அண்டைவீட்டாரின் வசவுகளும் நாளுக்கு நாள் பூவரசியையும் அவளது கணவன் மாரசனையும் கவலையுறச் செய்தன. இந்த ஊரில், இந்தத் தெருவில் நாம் இருக்க வேண்டுமானால் நம் வீட்டின் நிலைமையை மாற்ற வேண்டும் என்று ஒரு மனதாக முடிவெடுத்தனர். என்னதான் அவர்களுக்குக் காலனித் தெரு மக்களின் ஆதரவு இருந்தாலும் தான் குடியிருக்கும் தெருவில் அண்டை வீட்டாரின் தொந்தரவை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பன்னி நாற்றம் அடிக்குது, ஒரே சத்தமா இருக்குது, தூங்க முடியல என்று தினமும் காலை பூவரசியின் வீட்டு முன்பு வந்து கத்துவார்கள். ஆனால், பூவரசிக்கும் பன்றி வளர்ப்பிற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. திருச்சி கீரனூரை ஒட்டியுள்ள ஆவூர் கிராமத்தைச் சேர்ந்தவள் பூவரசி. பதினாறு வயதில் திருமணமாகி கணவர் வீட்டுக்கு வந்ததிலிருந்து பன்றிகளைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் இவளின் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு விட்டது. இளவயதில் தன் வீட்டில் வளர்ந்த பன்றிகளை விற்றுவிடுங்கள் என்று சொன்ன பூவரசி, மாமியார் வீட்டில் அதைத் தன் பொறுப்பென ஏற்றுக்கொண்டது அவளுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை என்பது மாரசனுக்கு நன்றாகத் தெரியும். தன் பொருளாதார நிலைமையைச் சீர் செய்யவும் மேம்படுத்தவும் அந்தப் பன்றிகளை மட்டும்தான் நம்பியிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டதன் தன்மை அது. தான் ஓர் ஆட்டோ ஓட்டுநர் என்று பொய் சொல்லிதான் பூவரசியைத் திருமணம் செய்துகொண்டான் மாரசன். பின்னர் அவனின் பிரதான தொழிலே பன்றிகளை வளர்ப்பதும், பண்டிகை நாட்களில் கறி போடுவதும், விலைக்குக் கேட்பவர்களுக்கு விற்பதும்தான் என்பதைத் தெரிந்துகொண்டாள். அதனால் ஓரிரு மாதங்களிலேயே பன்றிகளுடன் நன்றாகப் பழகிவிட்டாள். அவளின் குரலுக்கு அவை எங்கிருந்தாலும் ஓடோடி வரும் அளவுக்குப் பழக்கியிருந்தாள் என்று அவளது மாமியார் மலையாத்தாள் வீட்டுக்கு வருவோரிடம் பெருமைப்பட்டுக்கொள்வது வழக்கம். இளவரசிக்குப் பூ பூத்தச் சடங்கு நடந்தபோது பூவரசி முகத்தில் புதுவிதமான பிரகாசம் தெரிந்தது. ஆனால், மகள் இன்னும் மனதளவில் பெரிய பெண்ணாக மாறவில்லை என்பதை பூவரசியின் கண்களில் மிளிர்ந்த நீர்த்திவலைகள் பறைசாற்றின. திடீரென்று சலசலத்த பேச்சொலிகள் பூவரசியை முன்பக்க வாசற்கதவுகளை நோக்கி நகரச் செய்தது. யாரோ ஒருவரின் வருகையை அது உணர்த்தியது. பூவரசிக்கும் மாரசனுக்கும் அதிர்ச்சி அளிக்கவில்லை என்றாலும் மற்ற அனைவருக்கும் அது சற்று அதிர்ச்சிகரமான சம்பவம்தான். வந்தது கவுன்சிலர் நரசிம்மன். தனக்கு அரசியல் அதிகாரத்தை அளித்த மக்களிடம் நல்ல பெயரை மட்டுமே வாங்க நினைக்கும் நரசிம்மனின் அனைத்துச் செயற்பாடுகளும் அரசியல் நோக்கத்தை ஒட்டியே இருக்கும். ஆகையால், நல்லதோ கேட்டதோ ஊரில் யார் வீட்டில் என்ன நடந்தாலும் சென்றுவிடுவான்.
“ஒத்தக் குடும்பத்தப் பாத்து எதுக்குணா நீ பயப்புடற. இவுங்க வீட்டுக்குலாம் நாம போகணுமா?” என்று கேட்ட பிச்சமுத்துவைப் பார்த்து நரசிம்மன் கூறினான்,
“அடே எல்லாம் எதுக்காக, ஓட்டுக்காகத்தான். என்ன அவன் வீட்டுல மூனு ஓட்டுதான்னாலும் அது முன்னூறு ஓட்டுக்குச் சமம். ஏன்னு தெரியுமா?”
“நீங்க சொல்றது சரிதான். ஒத்தக் குடும்பமா இருந்தாலும் இப்ப அவுங்களுக்கு இருக்குற மதிப்பு சாஸ்தி” என்று குணசேகரன் சொல்லி முடித்த உடனே,
“அட ஆமய்யா. பன்னிக்கொட்டா மாரி இருந்த வீட்ட இப்ப மாளிகை மாறி எப்டி கட்டிருக்ககாய்ங்க பாத்தில்ல. அது மட்டுமா, அந்த வீட்ட கட்டுனதுக்கப்புறம் ஊர்முழுக்க அவுங்களோட பேச்சுதான்” என்று கந்தசாமி இழுத்து நிறுத்தினான்.
“யோ அதுக்கும் 300 ஓட்டுக்கும் என்னய்யா சம்மந்தம்” என்று குணால் தனது கரகரத்தக் குரலில் கேட்டான்.
“அட இருக்குப்பா. எந்தப் பன்னியயெல்லாம் நாம கேவலமா நினச்சமோ, அந்தப் பன்னிய வச்சுதான் இன்னைக்கி இந்த வீடு, மேற்கால இடம், எல்லாத்தியும் வாங்கிருக்கானாம். அதுமட்டும் இல்ல, உதவினு வந்து கேக்குறவுங்களுக்கு அவுங்க இல்லன்னு சொல்றதில்ல. அப்படி இருக்க, ஊருக்குள்ள கொஞ்சம் செல்வாக்கு அதிகாமயிருக்கு. போற போக்கப் பாத்தா அடுத்த தேர்தல்ல கவுன்சிலருக்கு நின்னாலும் நிப்பானுங்க போல” என்று சொல்லிச் சத்தமிட்டுச் சிரித்தார்கள், நரசிம்மனைத் தவிர மற்ற எல்லோரும்.
“நின்னா ஓட்டு போட்ருவாய்ங்களா?” என்று முறைத்தான் நரசிம்மன்.
“யோவ் நம்ம ஊரப்பத்திதான் நல்லா தெரியுமேயா. உதட்டுல சிரிப்பையும் கக்கத்துல கொடுவாளயும் வச்சிக்கிட்டுப் பேசுறவுனுங்கதான் நம்ம பயலுவோ” என்று அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
“அந்தக் கொடுவா எவன் கக்கத்துல இருக்குங்கறத தெரிஞ்சிக்கிறதுலதான் நம்மளோட அரசியலே இருக்கு, என்ன தனபாலு!”
“நீங்க சொன்னா சரிதான் மாமா”
“இப்போ உதட்டுல சிரிப்போட போவமா அந்த வீட்டுக்கு…” என்று நரசிம்மன் சொல்ல மறுபடியும் சிரிப்புச் சத்தம் நிறைந்தது.
சபை நாகரிகம் கருதி வந்தவர்களை வரவேற்று, உபசரித்து அனுப்பிவைத்தாள் பூவரசி. ஆனால், வந்தவர்களுடைய சூட்சமத்தைப் புரிந்துகொள்ள அவளுக்குக் கொஞ்சம் கடினமாக இருந்தது. இச்சிந்தனையைக் கலைத்தச் சிறுவர்களின் குரல்கள் பூவரசியை இயல்புநிலைக்குக் கொண்டுவந்தன. இளவரசியின் பள்ளித் தோழர்கள் வருவதைக் கவனித்த அவள்,
“ரூம்ல இருக்கா போய் பாருங்க” என்று அனுப்பி வைத்தாள்.
“என்ன இளவரசி செம்ம சாப்பாடு போலயே” என்று கதிர் கேட்க,
“ஆமான்டா நிறைய இருக்கு. போகும்போது தரேன், எடுத்துட்டுப் போ”
“சரி சரி நீ சொல்லலனாலும் அதத்தான் செய்யப் போறோம்” என்று மகிழினியைப் பார்த்தான்.
மகிழினி நமட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.
“சரி அரபாத் வரலயா?”
“அவுங்க வீட்டப் பத்தி உனக்குத் தெரியாதா… அவுங்க அனுப்பல போல”
“சார் ஸ்கூலுக்கு வரட்டும், அப்போ பாத்துக்குறன்” என்று இளவரசி யோசித்துக்கொண்டிருக்க, கதிரும் மகிழினியும் வந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
தனது மகள் பூ பூத்த விழா நல்லபடியாக முடிந்ததை எண்ணி மாரசனும் அவன் தம்பி பாஸ்கர் உள்ளிட்ட அவனது குடும்பத்தாரும் அன்றிரவு மது போதையில் சிலாகித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் உறங்கிய பிறகு பூவரசியிடம் கொஞ்சிக்கொண்டிருந்தான் மாரசன். கருவேல மரங்களின் ஈக்கள் சத்தமும், உறங்கிக் கொண்டிருக்கும் பன்றிகளின் உறுமல் சத்தமும் இவர்களைச் சட்டை செய்யவில்லை. ஆனால், இவர்களின் முனகல்கள் அவற்றைச் சட்டை செய்தன. பன்றிகள் அவ்வப்போது தம் தலையைத் தூக்கி என்ன சத்தம் என்று குழப்ப நிலையில் பார்த்துவிட்டு மறுபடியும் தூங்க முயற்சிக்கும் நிலையே நிகழ்ந்துகொண்டிருந்தது.
பின்னிரவு மூன்று மணிக்குமேல் மூடுபணியை விலக்கிக் கொண்டு ஓர் உருவம் கையில் உடுக்கையுடனும் வாயில் சிவப்பு நிற எச்சிலை அசைபோட்டுக்கொண்டும் உடுக்கையை ஆட்டியபடி வந்துகொண்டிருந்தது. எல்லா வீடுகளிலும் ஒரே வசனம்தான் என்றாலும் பூவரசியின் வீட்டின் முன்பு அவனுக்கு நா எழவில்லை. அதை அவன் உணரவே சில நிமிடங்கள் பிடித்தன. அந்த வீட்டின் முகத்தோற்றம் அவ்வீட்டாரின் எதிர்காலத்தைக் காட்சியளிப்பதாக ஓர் உணர்வு அவனை ஆட்கொண்டது. கண்களை மூடிக்கொண்டு தனக்குத் தெரியும் காட்சிகளை, சிவப்பு நிற எச்சிலைத் துப்பிவிட்டுக் கூறத் தயாரானான்.
“ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா
இந்த வீடும்…
வீட்டுப் பொருளும்….
பத்ரமா பாத்துக்க வேண்டிய நேரம் இது…
ஜக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா….
இதச் சுத்தி நிறய செந்நாய்ங்க வட்டம் போடுதுமா… வட்டம் போடுது.
ஜாக்கம்மா சொல்றா… ஜக்கம்மா சொல்றா…”
எனச் சொல்லி முடிக்கும்போது அவன் உடல் சிலிர்த்திருந்தது. ஏன் எதற்கு என்று அவனுக்கு எதுவுமே புரியவில்லை. எச்சிலை முழுங்கியபடியே மெதுவாக அங்கிருந்து நகர்ந்தான்.
குடுகுடுப்புக்காரரின் வார்த்தைகள் அறைத்தூக்கத்தில் இருந்த பூவரசிக்கும் மாரசனுக்கும் மட்டும் அல்லாமல் சில விருந்தாளிகளின் காதுகளுக்கும் அது எட்டியிருந்தது. விடிந்து சூரியனின் வருகை அத்தெரு மனிதர்களை உசிப்பிவிட்ட நேரத்தில் குறி சொன்ன வீட்டில் தனக்கு வேண்டிய தட்சணையைப் பெற்றபடியே வந்துகொண்டிருந்தார் குடுகுடுப்பைக்காரர். அடுத்து பூவரசி வீடுதான் என்றவுடன் தன் எண்ணங்களைச் சரியாகச் சொல்ல ஆயத்தமானார். இவரின் வருகையைப் பல கண்கள் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தன.
“அம்மா நான் சொன்னத ராத்ரியே கேட்டுருப்பீங்க, இருந்தாலும் சொல்றேன். உங்களுக்கு ஒரே நேரத்துல நல்லதும் கெட்டதும் நடக்கப் போகுது. நீங்க பத்ரமா இருக்க வேண்டிய காலம் இது. நா ஏதோ காசுக்காகவோ, நீங்க கொடுக்கப்போற அரிசிக்காகவோ இதச் சொல்லல. உங்க வீட்டுக்கு முன்னாடி வந்து நின்னப்போ பேசுனது நான் இல்ல, என் குலதெய்வம் ஜக்கம்மா. இப்படியொரு உணர்வ என்னோட இத்தன வருஷ வாழ்க்கையில நான் அனுபவிச்சது கிடையாது. என் தாயி உங்களுக்கு ஏதோ குடுக்கப் போறா, அது நல்லதாதான் இருக்கும்.” என்று சொல்லி முடித்தவுடன் அவர்களுக்கு ஆச்சரியத்துடன் சந்தேகமும் தொற்றிக் கொண்டது. மாரசனின் கண்கள் எதையோ நினைத்துப் பயப்படுவதைக் குடுகுடுப்பைக்காரன் கவனித்தார். பிறகு, நூறு ரூபாய் காசும் இரண்டு படி அரிசியும் கொடுத்த பிறகு, “சரி தாயி நல்லது நடக்கட்டும்” என்று சொல்லி விடைபெற்றான்.
உடனே மாரசன் பூவரசியை விறுவிறுவென்று வீட்டின் உள்ளே கூட்டிச் சென்றான். “என்ன பூவரசி இது? ஒருவேள அவன் சொல்றது நம்மளோட விஷயமா இருக்குமோ?” என்று கூறி முடிக்கும் முன் அவன் வாயைப் பொத்தினாள். தன் கண்களாலேயே, ‘சுற்றியும் பார். உறவினர்கள் இருக்கிறார்கள்’ என்று சைகையில் தெரிவித்தாள். மாரசன் பதற்றம் கொண்டிருப்பதைக் கண்ட பூவரசி அவனை ஆசுவாசப்படுத்தினாள். “இதோ பாரு நம்ம விஷயம் நமக்கு மட்டும்தான் தெரியும். ஒன்னு நல்லா தெரிஞ்சிக்க, நாம ஒன்னும் திருடல கொள்ள அடிக்கல. அவன் சொன்ன மாரி அந்த ஜக்கம்மாவா பாத்து நமக்கு இதக் குடுத்துருக்கு. உன்னோட பயமே நம்மளக் காட்டிக் குடுத்துரும் மாரசா. தைரியமா இரு.” என்ற பூவரசியின் வார்த்தையில் உள்ள நம்பகத்தன்மை அவனைச் சமாதானப்படுத்தியது. பூவரசி இல்லையென்றால் நாம் என்ன ஆவோம் என்ற சிந்தனையும் அவனை வியாபித்தது. அவளைத் திருமணம் செய்து கொண்டது முதல் அவளை நினைத்துப் பூரிக்காத நாள் இல்லை என்பதை உணர்ந்தான். அவளின் தைரியமும் நுண்ணறிவும் தன் வாழ்க்கைக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷம் என்று எண்ணிக்கொண்டிருந்த மாரசனை சுயநினைவுக்குக் கொண்டு வந்தாள் பூவரசி. “இத நாம அப்றம் பேசிக்கலாம்” என்று அன்றாட வேலையைப் பார்க்கச் சென்றாள்.
“என்ன அதிர்ஷ்டம் வந்து என்ன ஆவப் போகுது, நாம உழச்சாதான் நமக்குச் சோறு” என்று சத்தம் போட்டுச் சொன்னபடியே தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். விருந்தாளிகளின் கண்களிலும் மனதிலும் என்ன விஷயமென்று தெரிந்துகொள்ளாமல் எப்படி இங்கிருந்து செல்வது என்ற எண்ணம் நிறைந்திருந்தது. அவர்கள் இருக்கும்வரை இந்தப் பேச்சை எடுக்கக் கூடாது என்பதில் பூவரசியும் மாரசனும் உறுதியோடு இருந்தார்கள். விழா முடிந்த இரண்டாம் நாள் மாமன் அய்யாச்சாமியும் பெரியப்பா நல்லகண்ணுவும் சித்தப்பா சுந்தரமும் தத்தம் குடும்பங்களுடன் விடைபெற்றனர்.
நஜீம் ஊரில் உள்ள அனைத்து மளிகை கடைகளுக்கும் பொருட்களை இறக்குமதி செய்பவர். காய்கறிகளைத் தவிர்த்து இதர தின்பண்டங்கள், புகையிலை, சிகரெட் போன்ற எளிதில் கெடாத பொருட்களை மொத்தமாகப் பெற்றுச் சில்லறைக்கு மளிகை கடைகளுக்குக் கொடுப்பது அவரது தொழில். நல்ல நிலையில் இருந்த அவருக்குத் திடீரென ஏற்பட்ட பொருள் முதலீடு இழப்பினால் தொழில் பாதிக்கப்பட்டு, பணத் தேவையை நாடி எங்கெங்கோ அலைந்து திரிந்தார். தன் அப்பாவின் நிலையைக் கண்ட அரபாத் அவருக்கு உதவ ஏதாவது செய்ய முடியுமா என்று எண்ணினான். பள்ளியில் அவனது முகம் வழக்கத்துக்கு மாறாக இருப்பதை எண்ணி இளவரசி என்னவென்று கேட்டாள். தனது நிலையைச் சொல்லிக் கண்கலங்கினான். அவன் மீது சொல்ல முடியாத பாசப் பிணைப்பைக் கொண்ட இளவரசிக்கு அவனின் கண்ணீர் பெரும் துயரத்தைத் தந்தது. “இதுக்கு ஏன் அழுவற. என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றன்” என்று சொல்லி அவன் கண்களைத் துடைத்துவிட்டாள். ‘எதற்காக நான் அவனுக்கு உதவ ஒப்புக்கொண்டேன்? அவன் கண்ணீர் அவ்வளோ கனமானதா இருக்கக் காரணம் என்ன? எப்படி அவனுக்கு நாம் உதவ முடியும்?’ போன்ற பல கேள்விகள் அவளைக் குடைந்துகொண்டிருந்தன.
அப்போது நெல் இரைப்பது போன்ற பேச்சொலிகள் இளவரசியின் காதுகளில் விழுந்தன. தனது கவனத்தைக் கூர்மைப்படுத்தினாள். அது தனது அப்பாவும் அம்மாவும் என்பதை விளங்கிக்கொண்டவள், அவர்களின் பேச்சொலிகள் விட்டுவிட்டுக் கேட்பதை எண்ணி எரிச்சலுற்றாள். இன்னும் உன்னிப்பாகத் தனது காதுகளைத் தீட்டியதன் பலனாக “பணம், பன்னிக்கொட்டாய்” என்ற வார்த்தைகளை மட்டுமே அவள் செவிகள் விழுங்கிக்கொண்டன. அவளது புருவங்கள் மேல் நோக்கி எழுந்தன, மூளை கணக்குப் போட ஆரம்பித்தது. ‘என்ன பணம், என்ன பன்னிக்கொட்டாயில வைக்கணும்’ என்று சிந்தித்தவாறே உறங்கிப்போனாள்.
மறுநாள் பன்றிக்கொட்டகை முன் நின்று எதையோ ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தாள். பணம், கொட்டாய் என்ற சொற்கள் மட்டுமே அவள் காதுகளில் விழுந்ததால், என்னவென்று சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நொந்துகொண்டாள். தனது செல்லப் பன்றியான கிருஷ்ணனை, ‘எவளோ பெருசா வளந்துட்டான்’ என்ற ஆச்சரியத்துடன் அவன் நடவடிக்கைகளை இரசித்தபடி நின்றுகொண்டிருந்தாள். அது அங்குமிங்கும் தாவியும் பெண் பன்றிகளின் மீது ஏறிக்கொண்டும் கடித்துகொண்டும் தன் காதுகளை ஆட்டிக்கொண்டும் உருண்டும் பிரண்டும் ஆடிக்கொண்டிருந்தது. அதன் மூக்குகள் எதையோ கண்டுபிடித்ததைப் போல மண்ணில் முண்டத் தொடங்கியது. இரண்டு முண்டுகளுக்குப் பிறகு அதன் மூக்குவழியே இரத்தம் கசிவதைப் பார்த்த இளவரசி பதறிப்போய் கிருஷ்ணனிடம் ஓடினாள். அவனை அங்கிருந்து கொட்டாயினுள் அடைத்து, காயங்களுக்கு மஞ்சள் பொடியும் தண்ணீரும் சேர்த்து துடைத்தாள். அந்தக் காயம் இரும்புக் கம்பி கிழித்தது போல சிறிய தழும்பை கிருஷ்ணனின் மூக்கில் ஏற்படுத்தியிருந்தது. இளவரசிக்கு ஓரளவு எல்லாம் புரிந்தது. அவ்வேளை என்ன சத்தம் என்று வந்த பூவரசியிடமும் மாரசனிடமும் “கிருஷ்ணன் சண்ட போட்டு அடிப்பட்ருச்சு” என்று சொல்லிச் சமாளித்தாள். பூவரசி அருகில் சென்று பார்த்தாள், “ரொம்ப பெரிய காயம் இல்ல. நீ வச்ச மஞ்சளே புண்ண ஆத்திடும். நீ கௌம்பு, ஸ்கூலுக்கு டைம் ஆச்சு” என்றாள். பள்ளிக்கூடம் செல்லும் வழியெல்லாம் அங்கு ஏதாவது இருக்குமோ என்ற எண்ணம் இளவரசி மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ‘எப்படியும் மதியத்துல யாரும் இருக்க மாட்டாங்க. அம்மா தூங்கும், அப்பா பன்னிங்கள குளிப்பாட்ட போய்டுவாரு. அதுதான் சரியான நேரம்’ என்று எண்ணியபடியே நடந்தாள்.
அரபாத்தைப் பார்த்த இளவரசி “சரி நான் உனக்கு ஹெல்ப் பண்ணா, நீ எனக்கு என்ன பண்ணுவ” என்று கேட்டாள்.
“என்ன பண்ணனும்?”
“சொன்னா செய்வியா?”
“ம்ம்ம்”
“பெருசாலாம் உன்ன ஒண்ணும் செய்யச் சொல்ல மாட்டன். என் வீட்டு விஷேசத்துக்கு நீ வரலல்ல… அதுக்கு சாரி சொல்லு, உனக்கு ஹெல்ப் பண்றன்.”
“அய்யோ, இதச் சொல்ல மறந்தே போய்ட்டன் இளவரசி. நான் அன்னைக்கி உன் வீட்டுக்கு வர கிளம்பிட்டன். அப்போதான் அப்பாக்குக் கடன் தொல்ல அதிகமாயிடுச்சுனு வீட்டுல சண்ட. அதனாலதான் வர முடில. சாரி இளவரசி”
“பரவால்ல, பரவால்ல. சாய்ந்தரம் ஏழு மணிக்கு ஆலமரக் காளியம்மன் கோயிலுக்கு வந்துரு. அங்க உன்ன பாக்குறேன் சரியா,” என்று சொல்லி தன் இடத்தில் சென்று அமர்ந்துகொண்டாள்.
Courtesy: Victor Ehikhamenor
பொழுது விடிந்த கையோடு கையில் சொம்புடன் வாயைக் கொப்பளித்துக்கொண்டிருந்தான் நரசிம்மன். அவன் நின்ற தோரணையும் கண்களில் உள்ள பரபரப்பும் யாரையோ எதிர்பார்ப்பதைக் காட்டின. வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்த நரசிம்மன் தனபாலின் வருகையைப் பார்த்துத் தனது நடையை நிறுத்தினான்.
“என்ன ஆச்சு தனபாலு, போன விஷயம் என்ன ஆச்சு?”
“மாமா நா எவ்வளவோ கேட்டுப் பாத்துட்டன். பணம் இல்லயாம், அவன் பொண்டாட்டி அவன் ஊருல இல்லணு சாதிக்கிறா. இப்போதைக்குக் கொஞ்சம் மிரட்டிட்டு வந்துருக்கேன். ரெண்டு நாளு பாப்போம். இல்லனா என்ன பண்ணலான்னு யோசிப்போம் மாமா”
“அடப் போடா முட்டாப் பயலே… ஆள விட்டுப்புட்டு இங்கவந்து பேச்சு பேசுற. பணம் கொடுத்து மூனு வருஷம் ஆகுது. வட்டியும் இல்ல அசலும் இல்ல. வைத்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்குறேன். நீ என்னன்னா சும்மா மிரட்டிட்டு மட்டும் வந்துருக்க.”
“மாமா இப்பலாம் முன்ன மாரி இல்ல, கந்துவட்டினு சொன்னாலே போலீசு கேசுனு போய்ட்றானுங்க. எல்லாம் நம்ம நல்லதுக்குதான் சொல்றன், கொஞ்சம் பொறுமையா இருங்க.”
“ஒரு தொழில் பண்றான்னு இந்த நஜீம் பயலுக்கு வட்டி விட்டன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும். எல்லாம் நம்ம தப்பு… எவன் நெலம எப்ப மாறுமுணு எவனுக்குத் தெரியும்” என்று பல்லைக் கடித்துக்கொண்டான்.
மணி ஒன்னைத் தொட்டவுடன் மதிய உணவு இடைவேளையில் வீட்டிற்குப் புறப்பட்டாள் இளவரசி. அவளது எண்ணம் போல சூழலும் அவளுக்குச் சாதகமாக இருந்தது. கொட்டாயின் மேல்புரத்தில் இருந்த சகதியை முதலில் வாரினாள். வேப்பமர ஓணானும் வீட்டுச் சேவல்களும் கொட்டாய் மூலையில் மஞ்சளும் குங்குமமும் பூசப்பட்டிருந்த செங்கற்களும் மட்டுமே அச்சம்பவத்திற்குச் சாட்சியாக இருந்தன. மதிய வெயில் பெரும் மௌனத்தை வியாபித்திருந்தது. சகதியை எடுத்து முடிக்கும் முன்பே கிருஷ்ணனின் மூக்கைக் கிழித்தக் கம்பியைக் கண்டுபிடித்துவிட்டோம் என எண்ணி அதை இழுத்தாள், அது வரவில்லை. அதைச் சுற்றித் தோண்டினாள். சில அடிகளுக்குப் பிறகு ஒரு சுரக்கைக் குடுவை தென்பட்டது. அது நெகிழித் தாள்களால் இறுகச் சுற்றப்பட்டு, மணிக்கட்டுத் தடிமன் அளவுள்ள கட்டையால் மூடப்பட்டிருந்தது. அதில் என்ன இருக்கும் என்ற ஆச்சரியம் ஒருபுறம்; சீக்கிரம் இதை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம்; அம்மா வந்துவிடுவாளோ என்ற பதற்றம் ஒருபுறம் என அவளது இதயம் வேட்டையாடப்படும் பன்றியின் கால்களுக்கொப்ப ஓட ஆரம்பித்தது. அதன் சத்தம் நேரமாகிக்கொண்டிருப்பதை இளவரசிக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. தனது முழுப் பலத்துடன் அவசர அவசரமாகத் திறக்க முயன்றாள். ஒருவழியாகப் பலன் கிட்டியது. உள்ளே புகும் சிறிய வெளிச்சத்தில் ஏதும் தெரியவில்லை. குடுவையைத் தலைகீழாகக் கவிழ்த்ததில் உள்ளே இருந்து காது கம்மலும் கழுத்துப்பட்டையும் விழுந்தன. அதற்கு மேல் அவள் எவ்வளவு முயற்சி செய்தும் ஏதும் வரவில்லை. அதனுள் இன்னும் நிறைய நகைகள் இருப்பதுபோல கனத்தது. அது தங்கம் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது. இப்போதைக்கு இது போதும் என்ற எண்ணத்துடன் கொட்டாயைப் பழைய நிலைக்கு மாற்றினாள். எல்லாம் சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக் கொண்டு கம்மலையும் கழுத்துப்பட்டையையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். ‘நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது? அந்த நகைகள் எப்படி நம் வீட்டுக் கொட்டாய்க்கு வந்திருக்கும். இவ்வளவு பெரிய காரியத்தை ஏன் அரபாத்திற்காகச் செய்கிறேன்” போன்ற கேள்விகளுடனே உணவு இடைவேளை முடியும் முன் பள்ளிக்குச் சென்றுவிட்டாள்.
காளியம்மன் கோயிலின் அகல் விளக்குகள் எரிந்துகொண்டிருப்பது சற்று முன் யாரோ வந்துசென்றதைப் பறைசாற்றியது. மார்கழிப் பனி அரபாத்தின் ஒருபக்க நாசியை அடைத்திருந்தது. பாதி நாசியில் மூச்சை விட்டபடி இளவரசிக்காகக் காத்துக் கொண்டிருந்தான். சொன்னது போல இரவு ஏழு மணிக்கு வந்துவிட்டாள் இளவரசி.
“ரொம்ப நேரம் ஆயிடுச்சா…”
“இல்ல இல்ல, ஏன் என்ன வரச் சொன்ன?”
“கொஞ்சம் இரு” என்று தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த நகையை எடுத்து அரபாத் கையில் வைக்கும் முன் யாராவது பார்க்கிறார்களா என்பதையும் கவனித்தாள்.
“என்ன இது?”
“நா சொன்ன உதவி”
“ஏது இது?”
“அது எதுக்கு உனக்கு? இது உன் குடும்பப் பிரச்சனயத் தீக்கும்தான. அப்போ எடுத்துட்டு போ” என்றாள்.
“உனக்கு எதும் பிரச்சன வராதா?”
“வராது”
“சரி இளவரசி, ரொம்ப தாங்க்ஸ். நா இந்த உதவிய மறக்கவே மாட்டன்” என்று கை குலுக்கினான்.
அவளுக்கு அவன் முகத்தில் சிரிப்பைப் பார்த்ததில் ஓர் ஆனந்தம்.
“சரி நாளைக்கி ஸ்கூல்ல பாப்போம்”
“சரி” என்று விடைபெற்றுக்கொண்டனர்.
இந்த நகைகளைத் தான் கொண்டுவந்திருப்பது தெரிந்தால் நிச்சயமாகச் சந்தேகப்படுவார்கள் என்று எண்ணி அதை வீட்டின் பீரோவில் வைத்தான் அரபாத். அதைக் கண்ட அரபாத்தின் அம்மா சல்மா ஆச்சரியத்துடன் தன் கணவனிடன் காட்டினாள். “ஏது இது? எங்கிருந்து வந்தது?” எனக் கேள்விகளும் குழப்பமும் வீட்டைச் சூழ்ந்தன. எல்லாவற்றையும் கவனித்தவாரே நின்றுகொண்டிருந்தான் அரபாத். ‘உனக்கு எப்படி இந்த நகைங்க கெடச்சது?’ என்று கேட்டால் என்ன சொல்வது என்ற பதற்றம் அவனை வியாபித்திருந்தது. ரொம்ப நேரமாக நகையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த நஜீம் ஒரு முடிவை எடுத்துவிட்டது போல நாற்காலியிலிருந்து எழுந்தான். எது சரி, எது தவறு என்பதை முடிவெடுக்கச் சூழ்நிலை அவனுக்கு அவகாசம் தரவில்லை. குடும்பமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். இப்போதைக்கு இந்த நகைகளை வைத்து நரசிம்மனின் கடனை அடைப்போம் என்றெண்ணி அவற்றை அவனிடம் எடுத்துக்கொண்டு போய் நீட்டினான். நகையை உற்றுப் பார்த்த நரசிம்மன் ‘மீதிப் பணத்த எப்போ தருவ’ என்று கேட்டார். “இப்போதைக்கி இத வச்சிகோங்க. மீதிய சீக்கிரம் குடுத்துட்றன்” என்று அங்கிருந்து புறப்பட்டான் நஜீம். இதுதான் லாபம் என்று நினைத்துக் கொண்டு தன் மனைவி சுந்தரியிடம் நகைகளைக் கொடுத்து “உள்ள வை” என்றான் நரசிம்மன். கொஞ்ச நேரத்தில் “என்னங்க, என்னங்க” என்று பதற்றத்துடன் கூப்பிட்டாள் சுந்தரி.
“என்ன ஆச்சு” என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான் நரசிம்மன். சுந்தரி நகைகளுடன் நரசிம்மனின் பாட்டி உருவப் படத்தின் முன் நின்றுகொண்டிருந்தாள். பாட்டியின் உருவப் படத்தில் உள்ள நகையும் தன் கையில் உள்ள நகையும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பதை உணர்ந்தவள், நரசிம்மனிடம் நகையை நீட்டினாள்.
எல்லாம் புரிந்தவனாய், “டேய் அவனப் புடிங்கடா” என்று கத்தினான்.
முன்பக்க இரும்புக் கதவு மூடபட்டது. நஜீமுக்குக் குழப்பமும் பதற்றமும் தொற்றிக்கொண்டன. “என்ன ஆச்சு இப்போ, அது எதுனா திருட்டு நகையா” என்று குழம்பிப் போயிருந்தான்.
“நஜீம் இங்க வாயேன்” என்று நரசிம்மன் கூப்பிட, எதுவும் தெரியாத நஜீம் அவனருகில் சென்றான்.
“உண்மையச் சொல்லு, இந்த நக உனக்கு எப்படிக் கெடச்சது?”
“என்னங்க சொல்றீங்க… இது என் பரம்பர சொத்து” என்றான்.
“மறுபடியும் நான் இப்படி பொறுமையா கேட்க மாட்டன் நஜீமு, மரியாதையா சொல்லிடு. உனக்கு நக எங்க எப்படிக் கெடச்சது” என்று அவன் முகத்திற்கு முன் வந்து நின்று கேட்டான்.
நஜீம் எவ்வளவோ முயன்று பார்த்தான். ஆனால், அவனுக்கே அது யாருடைய நகை என்று தெரியாததால், நரசிம்மன் நஜீம் சொன்னக் கதையை நம்பத் தயாராக இல்லை. அவனை நாற்காலியில் கட்டிவைத்து, ஒவ்வொரு நபராக அறைய ஆரம்பித்தனர். கன்னம் வீங்கி, பார்வை மங்கலானது. இதைக் கேள்விப்பட்ட சல்மாவும் அரபாத்தும் நரசிம்மனின் வீட்டின் முன்பு தனது உறவினர்களுடன் வந்து “கடன் குடுக்க வந்தவன இப்படிப் போட்டு அடிச்சிருக்கீங்களே… நீங்கலாம் நல்லாருப்பீங்களா?” என்று அழுதபடியே சல்மா கேட்டாள்.
“வாங்கம்மா வாங்க, எங் வூட்டு நகயத் திருடி என்கிட்டயே கடன அடைக்கக் குடுப்பிங்க, நாங்க அதப் பத்திரமா வாங்கி வச்சிக்கிட்டு, போய்ட்டு வாங்க ராசானு வழியனுப்பி வைக்கச் சொல்றியா” எனப் பல்லைக் கடித்தான்.
“எதுயா உன் வூட்டு நக” எனக் கூட்டத்தில் ஒருவர் கேட்க
“யோவ் இவன் கொண்டுவந்த நகையும் என் பாட்டி போட்ருக்கறதும் ஒரே நக. இந்தா பாரு” என நரசிம்மன் போட்டோவை நீட்டினான். எல்லாரும் நகையையும் போட்டோவையும் உற்று உற்றுப் பார்த்தனர். யாருக்கும் பேச்சு வரவில்லை.
“அது இருக்கட்டும்பா, அதுக்காக கடன் குடுக்க வந்த மனுஷன இப்படிக் கட்டிப்போட்டு அடிக்கிறது சரி இல்ல சொல்லிட்டோம், ஆமா” எனக் கூட்டத்தின் கிழக்குப் பக்கமாகச் சத்தம் கேட்டது.
“யோ காணாம போன நகையோட மதிப்பு என்ன தெரியுமா? இன்னைய காலத்துக்கு 150 பவுனு எவளோ மதிப்பு வருமுன்னு கொஞ்சம் கணக்கு போடு. ரெண்டு தலமுறையா தேடிக்கிட்டு இருக்குறோம். இன்னைக்கிதான் சரியான தடயம் அம்புட்ருக்கு. உன் நகனா சும்மா வுட்ருவியா?” எனக் கேட்க எல்லாரும் அவரவர் முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
“இப்ப பேசுங்கயா யாராவது… என்ன யாருக்கும் பேச்சு வரலயா?”
“அப்படியே இருந்தாலும் நீ கோர்ட்டு போலீஸ்னு போயிருக்கணும். அத விட்டுட்டு இப்படிப் பண்ணது நல்லா இல்ல. எதுவா இருந்தாலும் அவர விடு பேசிக்கலாம்” என்றார் நஜீமின் தூரத்துச் சொந்தமான கஜார்.
“அப்போ என் நகைக்கு நீ பொறுப்பேத்துக்கிறியா?” என நரசிம்மன் கேட்க,
“நரசிம்மா நீ அவர அடிச்சது தப்பு. இப்போ அவர விடுறியா இல்ல போலீஸோட வரட்டுமா?” என்று வேட்டியை மடக்கிக் கட்டினார் அசாம்.
நரசிம்மனின் தோளில் தனபாலின் கை வந்து அமர்ந்தபடி “மாமா இப்போதைக்கு இத விடுங்க, ஏன்னா பிரிட்டிஷ் பீரியட்ல அது உன் தாத்தன் வாங்குனதோ இல்ல திருடுனதோ நமக்குத் தெரியாது. இப்போதைக்கி நமக்கு இருக்குற ஒரே நல்ல விஷயம், நக ஊருக்குள்ளதான் இருக்குன்றது. போலீஸு கேசுனு ஆச்சுனா எதுவும் நமக்குக் கிடைக்காது பாத்துக்கோங்க” என தனபால் சொல்ல, அவன் சொல்வது சரிதான் என்பது போல தலையை ஆட்டினான் நரசிம்மன். இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த அரபாத் என்ன செய்வதென்றே புரியாமல் மிரட்சியோடு நின்றுகொண்டிருந்தான். அவன் அப்பாவை விடுவித்த பிறகு அவனும் சல்மாவும் நஜீமை கைத் தாங்கலாகத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அரபாத்தாலும் சல்மாவாலும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “எல்லாம் அந்தப் பாழாப்போன நகையால வந்தது” எனத் திட்டிக்கிட்டே வந்தாள் சல்மா.
“நக எங்க இருக்குனு சொல்லலன்னா உன் குடும்பம் இருக்காது நஜீம்”
கைக்கட்டை அவிழ்க்கும்போது தனபால் தன் காதுகளில் சொன்னதைப் போகும் வழி முழுக்கப் புலம்பியபடியே வந்தான் நஜீம். அரபாத்தின் கண்களில் பயம் கலந்த இயலாமை கண்ணீராக வழிந்தோடியது. ‘நாம போய் இந்த நகையப் பத்திச் சொல்லிடலாமா? அப்படிச் சொன்னா இளவரசிக்கு எதும் ஆயிடுமோ? அவளுக்கு இந்த நகைங்க எப்படிக் கெடச்சது? அவள் எங்கயாவது திருடிருப்பாளோ’ என்றெல்லாம் யோசித்தபடி விறுவிறுவென இளவரசியைப் பார்க்கப் போனான்.
“இளவரசி இந்த நக உனக்கு ஏது?”
“ஏன்டா, என்ன ஆச்சு?”
“இப்போ சொல்லப் போறியா இல்லயா?”
“அதுவந்து…”
“அது திருட்டு நகயா”
“டேய், என் வீட்டுக்குத் தெரியாம வந்து குடுத்தன்றதால அது திருட்டு நக ஆயிடாது. புரியுதா”
“அப்படினா மீதி நகயும் நீங்கதா வச்சிருக்கீங்களா?”
அவனது பேச்சும் பதற்றமும் புரியாதவளாக நின்றாள் இளவரசி. பிறகு, நடந்ததை எடுத்துச் சொன்ன பிறகு அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை. “இளவரசி மீதி நகய நீங்க நரசிம்மங்கிட்ட குடுத்துருங்க. இல்லனா அவன் எங்கள குடும்பத்தோட கொன்னுடுவேன்னு மிரட்டுறான். தயவு செஞ்சு புரிஞ்சிக்க, எங்க நிலம ரொம்ப மோசமாயிடுச்சி. நீ குடுக்கலன்னா நான் நகய யார்கிட்ட இருந்து வாங்குனன்னு சொல்ல வேண்டிவரும்” என்று அங்கிருந்து ஓடினான். “டேய் நில்றா, நில்றா” என இளவரசி கூப்பிட்டும் அவன் கால்கள் நிற்கவில்லை. பல கேள்விகள் அவள் மனதுக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தன. நடந்த சம்பவங்களையெல்லாம் கேள்விப்பட்ட மாரசன் வேகமாக வந்து தன் வீட்டுப் பின்புறத்தில் தோண்டினான். குடுவை, தான் மூடி வைத்தது போல இல்லை என்பதை உணர்ந்த அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன வந்ததும் வராததுமா இங்க நோண்டிக்கிட்டு இருக்குற” என பூவரசி கேட்டாள். அவன் கண்களின் மிரட்சியையும் நடுக்கத்தையும் பார்த்த பூவரசிக்குப் புரிந்துவிட்டது. அதேசமயம் வீட்டிற்குத் திரும்பிய இளவரசி அப்பாவின் கையில் உள்ள குடுவையைப் பார்த்து அதிர்ச்சியுற்றவள் போல நிற்க, இவளுக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்குமென்று பூவரசி முடிவே செய்துவிட்டாள். “உண்மயச் சொல்லு இளவரசி, என்ன பண்ண?” கண்களைக் கசக்கிக்கொண்டே முதலில் இருந்து கடைசிவரை சொன்னாள்.
ஓட்டம் பிடித்த அரபாத்தின் கால்கள் அவன் வீட்டு முன்புதான் நின்றன. தன் அப்பாவின் நிலைக்கு நாம்தான் காரணம் என்று நொந்துபோன அரபாத், தூங்குவதற்கு அவதிப்பட்டான். எந்நேரத்திலும் அவர்கள் நம் வீட்டிற்கு வரலாம் என்ற பீதி அவனை ஆட்கொண்டிருந்தது. இரவு பதினொரு மணி இருக்கும் வேளையில், போர்வையைப் போர்த்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அவன் வருகையை யாரோ எதிர்பார்த்திருப்பது போல நடையில் வேகம் கூடியது.
தூக்கம் தொலைந்தது அரபாத்திற்கு மட்டுமல்ல, மூன்று குடும்பங்களுக்கும். உறக்கமின்றி வீட்டு வாசலில் பிதற்றிக் கொண்டிருந்தவனிடம் தனபால் சில போதனைகளைக் கூறிக்கொண்டிருந்தான். அவ்வேளையில் அங்குவந்த அரபாத்தை “நீ எதுக்குடா இங்க வந்த?” என்று கேட்டான் தனபால்.
“ஒரு உண்மையச் சொல்லணும்” என்றான் அரபாத்.
அவர்களின் கண்கள் அகல விரிந்தன… “என்ன சொல்லு”
“அந்த நக எங்களோடது இல்ல. அத நான் என் கூட படிக்கிற இளவரசிகிட்டதான் வாங்கிட்டு வந்தேன்.”
அவர்களின் கண்கள் மிளிரத் தொடங்கின.
“யாருடா அது?”
“அதான் மாமா, பூவரசி மக”
“ஓஹோ அப்படி போகுதா கத. நான் நினச்சது சரியாப் போச்சு தனபாலு. அவ புருஷனோட தாத்தன்தான் என் தாத்தனுக்குப் பண்ண வேல பாத்தது. இப்போ புரியுது எங்க எப்டி நக தொலஞ்சிதுனு. சரி சரி, நீ போடா. உண்மய சொன்னதால நீங்க பொழச்சிக்கிட்டீங்க”
“மாமா எதுக்கு இப்போ குதிக்குற, எத வச்சு அவகிட்டதான் இருக்குன்ற?”
“காரணம் இருக்குடா. என் தாத்தன் பிரிட்டிஷ்காரன்கிட்ட குமாஸ்தாவா இருக்கும்போது அப்படி இப்படினு சேத்து வச்சதே 500 பவுனு நக. அதுல அவன்கிட்ட வேல பாத்த நிறய பண்ண ஆளுங்கள்ல ஒருத்தனுக்கு 150 பவுன குடுத்துருக்கான் அந்தக் கெழ பாடு.”
“எதுக்குக் குடுத்தாரு, அவருக்கென்ன பைத்தியமா? என்று சொன்னவாறே அருகில் இருந்த சொம்பில் நீர் அருந்தினான்.
“எங்க அப்பா பொறந்ததுக்கே அவன்தான் காரணமாம்”
நரசிம்மன் பதிலைக் கேட்டு தனபாலுக்குப் புரையேறியது
“என்ன சொல்றீங்க, புரில…”
“என் பாட்டி மாசமா இருக்கும்போது சாவத் தெரிஞ்சாளாம். அப்போ மாட்டுவண்டிக் கட்டிக்கிட்டுச் சரியான நேரத்துல கொண்டிபோய் சேத்ததுக்காக அந்தக் கெழ பாடு இதச் செஞ்சுருக்கான்”
“இதுக்கல்லாமா நகயக் குடுப்பாங்க, அதுவும் 150 பவுனு”
“உனக்கே கோவம் வருதுல்ல… அப்போ எனக்கு எப்புடி இருக்கும்”
“சரி மாமா மீதி நக எல்லாம் எங்க இருக்கு?”
தனபாலை மேலிருந்து கீழேவரை பார்த்தான் நரசிம்மன்,
“என்ன தனபாலு, தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்க போல” எனச் சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டே கேட்டான்.
“அப்டிலாம் இல்ல மாமா, சும்மா கேட்டேன்”
“ஆனா, என் தாத்தன் யார் கிட்ட குடுத்தான்றது மட்டும் தெரியாம இருந்துச்சு”
“இப்போ தெரிஞ்சிருச்சு” இரண்டு பேரும் சேர்ந்தே சொன்னார்கள்.
“ஆமாம்மா நான்தான் எடுத்தேன்” என்று சொன்னவுடன் ரெண்டு அறை விட்டாள் பூவரசி.
“நீ செஞ்ச காரியம் எங்க கொண்டி விடப் போகுதுணு தெரியல” ஆத்திரத்துடன் சொன்னாள்.
“என்ன செஞ்ச அந்த நகய?”
“நான் எனக்காக எடுக்கலம்மா”
“மீதிய நான் சொல்றன்” என்று மாராசன் தான் கேள்விப்பட்ட விவரங்களை ஒன்றுவிடாமல் சொன்னான். அவர்களுக்குத் தலையே வெடித்துவிடும் போல இருந்தது. இளவரசி அழுகையை நிறுத்தியபாடில்லை.
“நம்மள கொன்றுவாங்களாம்மா?” எனக் கேட்ட இளவரசியைப் பார்த்து
“அப்பிடிலாம் ஒண்ணும் நடக்காது” உருட்டுக் கண்களால் நம்பிக்கை மிகுந்த பார்வையை வெளிப்படுத்தினாள் பூவரசி.
“எல்லாம் நம்ம கைய மீறிப் போய்டுச்சி. இப்போ நாம பண்ண வேண்டியது ஒன்னே ஒன்னுதான்” பூவரசி சொன்னவுடன் இருவர் முகங்களிலும் கேள்விக்குறி தொற்றிக்கொண்டது. “சண்ட போடப் போறம்” என்றதும் கேள்விக்குறி ஆச்சரியக்குறியாக மாறியது.
“என்ன பாக்குறீங்க, நம்மால முடியுமா முடியாதான்னா… நம்மள காப்பாத்திக்க நமக்கு வேற வழி கிடையாது. புரியுதா” என்றாள் பூவரசி. இருவரும் திருதிருவென்று முழித்தார்கள்.
“புரியுதா…”
என்று அழுத்திக் கேட்டவுடன் சுயநினைவுக்குத் திரும்பியவர்கள் போல “ஆங்… புரியுது” என்றார்கள். “தயாரா இருங்க, அவுங்க எப்ப வேணாலும் வரலாம். அவுங்களுக்கு நாம நகய எங்க வச்சிருக்கோம்னு தெரியாது. அவுங்க உள்ள வரதுக்கு ஒரே வழி பின்பக்கம் இருக்குற கருவக்காடுதான். வேற வழி இல்ல. ஒருவேள இன்னைக்கி அவுங்க வரலன்னாதான் நாம பயப்படணும்.” ஏதோ இதற்கு முன்பு பல கொள்ளைக் கூட்டங்களைச் சமாளித்தவள் போல பேசிக்கொண்டிருக்கும் பூவரசியை இருவரும் வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
“தனபாலு பசங்களுக்கு போனப் போடு. வெளியூர்க் காரன உள்ள எறக்கு. எனக்கு அந்த மொத்த நகையும் வேணும். குறுக்க யாரு வந்தாலும் போடச் சொல்லு” என்று சொல்லும்போது நரசிம்மனின் கண்களில் பேராசையின் மொத்த வெளிச்சமும் பரவியிருந்ததைக் கவனித்தான் தனபால்.
“மாமா எதுனா பிரச்சன ஆயிடப் போகுது”
“டேய் அவ குடும்பம் என்ன அங்காளி பங்காளி கூடவா இருக்காணுவோ… ஒத்தக் குடும்பம். அவன் பக்கத்து ஊட்டுக்காரனே பன்னி வளக்குறான்னு எப்ப இவளத் துரத்தலான்னு இருக்கான். அவ இருக்கால்ல… அந்த இடம் ஊர்த் தெருவா இருக்குறதுக்கு முன்னாடி வெறும் குட்ட. இப்பதான் நிறய வீடுங்க வந்திருச்சு. அப்ப வந்து குடிசயப் போட்டுத் தங்கிருக்காணுவோ. அதுனால நமக்குச் சாதகமாதான் எல்லா விஷயமும் இருக்கு. அவளுக்குனு கேக்க யாருமில்லடா. அத தற்கொல மாரி செட் பண்ணச் சொல்லு. நம்மளோட பேரு அடிபட்றக் கூடாது. அதேமாரி நகையிலயும் ஒரு கிராம் கூட கொறயக்கூடாது புரிஞ்சிதா” எனச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான் நரசிம்மன். தனபாலின் கைகள் வேகமாக இயங்கின.
“இளவரசி நீ போய் விஷயத்த சொல்லி அஜித்தையும் விஜியயும் நான் கூப்டனு கூட்டியா”
அஜித்தும் விஜியும் மாரசனின் பெரியப்பா மகன்கள். மூன்று கி.மீ.தூரத்தில் உள்ள எருக்கானவூரில் உள்ளனர். அவர்களையும் மாரசனின் தம்பி பாஸ்கரையும் அழைத்துவரச் சொன்னாள் பூவரசி. அனைவரும் ஒன்றுகூடினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான யோசனையைச் சொன்னார்கள். எதையுமே பூவரசி ஏற்றுக்கொள்ளவில்லை. பாஸ்கருக்குக் கோவம் வந்துவிட்டது. “அப்போ உன் திட்டத்தச் சொல்லு” என்றவுடன் தன் திட்டங்களைச் சொல்ல ஆரம்பித்தாள். அனைவரின் காதுகளும் கண்களும் உன்னிப்பாகின. அவள் சொன்ன திட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் துல்லியமாகவும் இருந்தது. பூவரசி போடும் திட்டங்கள், இதைப் பலமுறை செய்திருக்கிறாளோ என்ற எண்ணத்தை மாரசனுக்கு ஏற்படுத்தியது. அதன் விளைவாகத் தன் அடிவயிறு கலக்கியதை உணர்ந்தான். பூவரசியும் இளவரசியும் தங்களிடம் உள்ள ஈட்டி, சூலுக்கி, கறி போடுவதற்குப் பயன்படும் அத்தனை கத்திகளையும் கையில் எடுத்துக் கொண்டனர். அஜித்தும் விஜியும் பன்றிகளைப் பிடிக்கப் பயன்படுத்தும் சுருக்குக் கயிறுகளை எடுத்துக்கொண்டனர். மாரசனும் பாஸ்கரும் பன்றிகளைப் பிடிக்கப் பயன்படுத்தும் வலைகளை எடுத்துக்கொண்டனர். அவர்கள் எந்த வழியாக இறங்குவார்கள் என்பதை யூகித்த பூவரசி, அனைவரையும் அவள் சொன்ன இடங்களில் நிற்கவும் பதுங்கவும் சொன்னாள். “எத்தன பேரு வருவாங்கன்னும் தெரியாது, எப்ப வருவாங்கன்னும் தெரியாது. எல்லாத்துக்கும் தயாரா இருங்க” என்றும், இளவரசியைப் பார்த்துப் பயப்படக்கூடாது என்றும் சொன்ன பூவரசி, “சரி அவங்கவங்க இடத்துக்குப் போங்க” என்றாள்.
காத்திருப்பும் கொசுக்கடியும் உறக்கமும் பயமும் அவர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்தன. தன் அம்மாவிடம் வந்த இளவரசி “எப்படிம்மா நம்ம வீட்டுக்கு அந்த நக வந்துச்சு” தன் மனதில் குடைந்துகொண்டிருந்த கேள்வியைக் கேட்டாள். மணி பனிரெண்டைத் தாண்டிக் கொண்டிருந்தது. அவள் தலையைக் கோதிவிட்டுச் சம்மணங்கால் போட்டு அமர்ந்து கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். “பிரிட்டிஷ்காரன் காலத்துல உன் தாத்தா வெள்ளக்காரன் வீட்டுல காவலுக்கு இருக்குற வேலயப் பாத்துக்கிட்டு இருந்துருக்காரு. ஆளு பாக்க நல்லா கருப்பா, கம்பீரமா இருக்குறத பாத்துட்டு அந்த வேலையக் கொடுத்தாங்களாம். அந்த வெள்ளக்கார துரைக்கி வேட்டைக்கிப் போகலன்னா தூக்கமே வராதாம். அப்படி ஒருநாள் வேட்டைக்கிப் போகும்போது நடக்க இருந்த ஆபத்துல இருந்து வெள்ளக்கார துரைய உன் தாத்தா காப்பாத்திட்டதாவும் அதுக்காக அவருக்கு 500 பவுனு நகய அந்த வெள்ளக்கார தொர குடுத்ததாவும் சொல்றாங்க”
“யாரு சொன்னா?”
“உன் தாத்தன் அவரு பொண்டாட்டிக்கிச் சொல்ல, அவுங்க தன் புள்ளைங்ககிட்ட சொல்ல, அப்டினு வழிவழியா இப்ப எனக்கு வரைக்கும் அந்தக் கத வந்துருக்கு.”
“நகதான் நம்மகிட்ட இருக்கே, அப்றம் எப்டி இது கதையா இருக்க முடியும்மா” என்றாள் இளவரசி.
அவளைப் பார்த்துப் புன்முறுவலித்த பூவரசி “ஆனா, நம்மகிட்ட இருக்குறது வெறும் 150 பவுன் நகதான். மீதி நகய அந்த நரசிம்மன் இருக்கானே கொலகார பாவி, அவனோட தாத்தா செந்நியன் பிள்ளை குமஸ்தாவா பிரிட்டிஷ்காரன்கிட்ட இருந்துருக்காரு. உன் தாத்தனுக்குக் கிடச்ச அதிர்ஷ்டத்தப் பார்த்துப் பொறாம புடிச்சவன். அவரு வீட்டுக்கு வர வழியில ஆள வச்சி வழிப்பறி பண்ணி திருடிருக்கான். அதுல மிஞ்சினதுதான் இந்த மீதி நகயல்லாம். அப்றம் அத புளியமர பொந்துலயும் மண்ணுக்கடியலயும் பொதச்சு வச்சு எப்படியோ காப்பாத்தி இப்ப நம்ம வரைக்கும் வந்துருக்கு. இப்போ இத அடயறதுக்குதான் நரசிம்மன் நம்ம வீட்டுக்கு ஆள அனுப்புவான்னு நினச்சி இங்க காத்துட்டுருக்குறோம்” என்று வானை அண்ணாந்து பார்த்து ‘எனது முன்னோர்களே எனக்கு நல்வழியை காமியுங்கள்’ என வேண்டிக்கொண்டு தலைக்கருகில் இருந்த மரத்தில் சாய்ந்தாள் பூவரசி. அடுத்த விநாடி அவள் கண்ட காட்சி அவளை மிரட்சியடையச் செய்தது. வானமும் நிலமும் மரங்களும் சிவப்பாக இருந்ததை அவளால் நம்ப முடியவில்லை. வனாந்திரத்தின் நடுவே சிறு புள்ளியாக உணர்ந்தாள். மயிர்கூசச் செய்யும் அந்தப் பேரமைதியில் ஏழு பெண்கள் வரிசையாக பூவரசியை நெருங்கிக்கொண்டிருந்தனர். பூவரசிக்கு நா எழவில்லை. அவர்கள் தலையில் கொண்டை போட்டு, பூ வைத்து சேலையை நேர்த்தியாக அணிந்திருந்தனர். அவர்களின் கருப்பு நிறமும் அரவணைப்பான பார்வையும் நம்பிக்கை தரக்கூடிய புன்னகையும் பூவரசிக்குப் பரவச நிலையை ஏற்படுத்தியது. அவர்கள் கால்களில் அணிந்திருந்த கருப்பு வளையம் முடிகளால் பின்னப்பட்டிருப்பதைக் கவனித்தாள்.
“என்ன பூவரசி சோர்ந்து போயிட்டியா?” அனைவரும் ஒன்றாகக் கேட்டது அந்நிலமெங்கும் எதிரொலிப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது.
“எங்கள யாருன்னு தெரில போலயே…” அனைவரும் உரக்கச் சிரித்தனர். சொல்லிவைத்தார் போல ஒரே அலைவரிசையில் பேசினார்கள்.
‘ஆம்’ என்பது போல தலையை ஆட்டினாள் பூவரசி.
“பன்னிக்கொட்டாய் பக்கத்துல இருக்க செங்கல்ல தெனம் கும்புடுவியே, மறந்துட்டயா” என்றவுடனே பூவரசியின் உதடு “ஏழு கன்னிமாறு” என்று முணுமுணுத்தது. கண்கலங்கியபடியே இரு கை கூப்பி வணங்கினாள்.
“நீ எதுக்கும் பயப்படாத. அந்த நகைங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது. அதுல எங்க ஒவ்வொருத்தரோட ரத்தமும் இருக்கு. எங்கள மீறி அத கொண்டு போக விட மாட்டோம். நீயும் மனச விட்றாத. உன் ரத்தம் தேவப்பட்டாலும் தைரியமா இரு”
“அப்போ என் குடும்பம்…” பூவரசி குரலில் பதற்றம் இருந்தது.
“நாங்க உங்ககூடதான் இருப்போம், ஏதும் நடக்காது.” ஒன்றாகக் கூறினார்கள்.
‘ஏழு கன்னிமாரம்மா, ஏழு கன்னிமாரம்மா’ எனக் கூறியபடியே கண்களை மூடினாள். அவள் விழியோரம் வழிந்த கண்ணீர் மடியில் படுத்திருந்த இளவரசி கன்னத்தில் பட்டுத் தெறித்தது. “என்னமா ஆச்சு?” என்று எழுந்தாள் இளவரசி. “ஒண்ணுமில்ல” என்று சமாளித்தவள், தனது கனவுக் காட்சிகளை நினைவுகூர்ந்தவாறு எழுந்து நின்றாள். திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாதவளாய் இம்முறை முயற்சி செய்ய ஆயத்தமானாள். அவளுக்கு வேறு வழியுமில்லை. எப்படியும் வாசல் பகுதியின் வழியாக உள்ளே வர மாட்டார்கள் என்பதை ஊகித்த பூவரசி, வீட்டுப் பின்பக்கம் காத்திருந்தாள். அவர்கள் வீட்டை நெருங்க வேண்டுமென்றால் நெடுஞ்சாலையிலிருந்து இறங்கி அதன் ஓரமாய் வளர்ந்துள்ள கருவேலங்காட்டுக்குள் நுழைந்துதான் அவளது வீட்டை நெருங்க முடியும். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அந்தக் கருவேலங் காட்டினுள் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் விழாமல் வர வாய்ப்பிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தாள் பூவரசி. இரு பக்கமும் சரிசமமான அளவுள்ள கருவேலங் காட்டினுள் அவர்கள் ஊடுருவிய பிறகு அவர்களின் செருப்பொலிகள் மட்டும் தனியாக இவர்களின் காதில் ஒலித்தது. அனைவரின் கண்களும் பூவரசியை நோக்கித் திரும்பின. அவள் தன் கொண்டையையும் பாவாடையையும் இறுகக் கட்டிக் காட்டிற்குள் நுழைந்தாள். அவள் முன்னே நடக்க, அவளைச் சூழ்ந்தவாறு முன்னேறிக்கொண்டிருந்தனர். புதிதாய் வந்த நபர்களுக்குப் பயனளிக்காமல் நிலவு ஒளிந்துகொண்டது. அது தங்களுக்குச் சாதகமானதுதான் என்பதை உணர்ந்து இவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். நிழல் உருவங்கள் அசைவது போல ஒரு காட்சி, ஒரு நிமிடம் நின்று கவனித்தனர். தங்கள் ஆயுதங்களின் பிடியை இறுக்கினர். அவர்கள் நெருங்க நெருங்க அவர்களின் தோற்றம் புலனானது. சொல்லிவைத்தாற்போல அனைவரும் ஆறடி உயரம், அளவான உடம்பு, சட்டை இல்லாமல், முழங்கால் முட்டியிலிருந்து இடுப்புவரை ஒரு துணி அவர்களை மறைத்திருந்தது. பெரிய ஆயுதங்கள் கையில் இல்லை. அவர்களைச் சமாளிப்பது சுலபம் என்று எண்ணியவாறு ‘முன்னேறலாம்’ என்று சைகை காட்டினாள் பூவரசி. அனைவரும் அமைதியாக நகர ஆரம்பித்தனர். மறுபடியும் நின்றனர், இந்தமுறை அவர்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவர்கள் நம்மை நெருங்கட்டும் என்று பூவரசி சைகை காட்ட, மரத்தோடு மரமாக ஒட்டிக் கொண்டனர். அவர்கள் மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். காரிருளில் தெரியும் வெளிச்சத்தினூடே அவர்களின் முகம் துணியால் மறைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அவர்கள் நெருங்க நெருங்க இவர்களின் இதயமும் இரத்தத்தை வேகமாக உடலுக்குள் பாய்ச்சி, உஷ்ணத்தைப் பரப்பியது. அதன் விளைவாக, பூவரசியின் சூலுக்கி முதலில் வந்த நபரின் கழுத்துப் பகுதியில் இறங்கி மறுபக்கம் வந்தது. சத்தமின்றிச் சாய்ந்தான் ஒருவன். அதைக் கண்ட அவன் சகாக்கள் கலவரமடைந்தனர். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு தனபால் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது, “ஒத்தக் குடும்பம். பெருசா யாரும் கிடையாது. அருவா கூட வேணாம், உங்க கையே போதும்.”
தன் கையால் தலையயை அடித்துக்கொண்டான் ஒருவன். ஒவ்வொருவரும் அவரவர் முதுகை ஒட்டியவாறு நின்றுகொண்டனர். நீண்ட நேரமானதால் இருட்டு அவர்களுக்குப் பழகியிருந்தது. ஆனாலும் அவர்களால் பூவரசியின் குழுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவனின் கழுத்தில் வந்து விழுந்தது சுருக்கு கயிறு, அவன் சுதாரிப்பதற்குள் அதன் முடிச்சுகள் இறுகத் தொடங்கின. அதன் மறுமுனை அஜித்தின் கைப்பிடியில். பன்றிகள் சுருக்கில் மாட்டியவுடன் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தும் யுக்தியைப் பயன்படுத்தி, இரண்டு கைகளையும் கயிற்றில் பிடித்து அதை மேலும் கீழும் ஆட்டி ஒரு சொடுக்கு சொடுக்கினான். ‘மடக்’ என்ற சத்தம் அவன் கழுத்து எலும்புகள் உடைந்ததைச் சொன்னது. மூன்றாவது நபருக்கு ஈட்டி பரிசாக வழங்கப்பட்டது. அக்கூட்டத்திற்குத் தலைவன் என யாருமே இல்லை என்பது போல பூவரசிக்குத் தோன்றியது. அவர்கள் எந்தவொரு திட்டமுமில்லாதவர்கள் போலத்தான் தெரிந்தது. மூவர் சாகவும் அவர்களுக்கு மரணத்தின் வாசனை மூக்கு வழியாக மூளையில் குடியேறி கால்களின் வழியாக ஓட்டம் பிடிக்க உத்தரவிட்டது.
எல்லாம் தனது திட்டத்தின்படி நடக்கிறது எனப் பார்த்துகொண்டிருந்த பூவரசியை, ‘எப்படி இவளோ துல்லியமா எல்லாம் இவளுக்குத் தெரியுது’ எனச் சந்தேகத்தோடு பார்த்தான் மாரசன். எல்லாம் ஏற்கெனவே தனக்குப் பழக்கப்பட்டது போல அவள் நடந்துகொள்ளும் விதம் அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்களின் பின்னால் ஊர்ர்… உய்ய்.. உய்ய்… என ஆளுக்கொரு திசையில் சத்தம் எழுப்பிக்கொண்டே ஓடினார்கள். தப்பிக்கும்போது பன்றிகளைச் சிதறவிடாமல் ஒன்றுசேர்த்து ஒரே பாதையை நோக்கி விரட்டப் பயன்படுத்தும் யுக்தி இது. நான்கு பக்கமும் வந்த சத்தத்தைக் கேட்ட கொலைகாரர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அவர்களைத் துரத்திக்கொண்டும் கையில் வைத்திருந்த ஆயுதங்களை மரத்தில் தட்டியபடியும் விரட்டினர். ஓடிய வேகத்தில் கால் சதைகளுக்குள் ஊடுருவும் கருவேல முட்களை இரு கூட்டங்களும் பொருட்படுத்தவில்லை. பன்றிகளுக்காக விரிக்கப்பட்ட வலைகளுக்கு அருகில் பன்றிகள் வந்துவிட்டால் துரத்துபவர்களின் கத்தும் சத்தமும் மரங்களைத் தட்டும் சத்தமும் பேரிரைச்சலாக மாறும். கொலைகாரர்கள் பாழுங்கிணறை நெருங்க நெருங்க அதே யுக்தியைக் கடைபிடித்தனர். அவர்களின் கால்கள் அந்தக் கிணறைத் தாண்டும் வேகத்தில் சுழன்று கொண்டிருந்தன. கொலைகாரர்கள் பாழுங்கிணறை நெருங்க நெருங்க அதே யுக்தியைக் கடைபிடித்தனர். அவர்களின் வேகமும் நிதானமில்லாத ஓட்டமும், பன்றிகள் வலையில் விழுவதைப் போல அவர்களையும் கிணற்றினுள் விழ வைத்தது. கிணற்றுச் சுவரிலும் படிகளிலும் அவ்வுடல்கள் பட்டு உடையும் சத்தத்தைக் கேட்டபடியே கிணற்றின் வாய்ப் பகுதியை வந்தடைந்தது பூவரசி குழு. அப்போதுதான் தங்கள் கால்களில் முடியால் பின்னப்பட்ட ‘மயிர்காப்பு’ இருப்பதை அனைவரும் கவனித்தனர். எதுவும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சற்றே பின்புறம் திரும்பியவர்கள், பூவரசியின் தோற்றத்தைக் கண்டு உறைந்து நின்றனர். அவள் கொண்டைபோட்டு பூ வைத்து நேர்த்தியான சேலை அணிந்தவளாய் நின்றுகொண்டிருந்தாள். அவளது புன்னகையையும் ஒளிநிரம்பிய பார்வையையும் கண்டவர்கள் கைக் கூப்பி வணங்கியபடி நெடுஞ்சாண் கிடையாக விழுந்தனர். மயிர்காப்பின் பிரகாசம் குறையக் குறைய பூவரசி மயங்கி விழ, கைத் தாங்கலாக அவளை வீட்டிற்குத் தூக்கிச் சென்றான் மாரசன். “மொத்தம் 26, மறுபடியும் வருவாங்…” என்று அரை மயக்கத்தில் பூவரசி சொன்ன சொற்கள் இளவரசியின் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தன.