மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

7

ருபதாம் நூற்றாண்டில் தேசிய இயக்கம் மட்டுமல்லாது மற்ற இரண்டு தரப்பினரும் நந்தனார் அடையாளத்தைக் கையாண்டனர்: தலித் இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகள்.

முதலில் தலித் இயக்கங்கள் கையாண்ட விதத்தினை இந்த அத்தியாயத்தில் காணலாம். 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டிலும் தலித்துகள் குறிப்பாக, பறையர் வகுப்பாரையொட்டி இருவர் பற்றிய சொல்லாடல்கள் அதிகம் விவாதிக்கப்பட்டன.

ஒருவர் வள்ளுவர், மற்றவர் நந்தனார். இவ்விருவரையும் அர்த்தப்படுத்திய விதத்தை வைத்தே இச்சமூகம் தலித்துகளை எவ்வாறு வைத்துக்கொள்ள விரும்பியது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

வள்ளுவர்

குறளை எழுதிய வள்ளுவர், பறையர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டது. இது அப்போது நிலைப்பெற்றுவந்த ‘பறையர் என்போர் இழிந்தோர்’ என்ற கருத்திற்கு எதிரானதாக இருந்தது. குறிப்பாக, மிஷனரிகளாலும் காலனிய அதிகாரிகளாலும் குறள் கண்டுகொள்ளப்பட்டப் பிறகு குறளாசிரியரின் வரலாற்றிலிருந்து ‘பறையர் நீக்கம்’ செய்வதில் ‘உள்ளூர்காரர்கள்’ ஆர்வம் காட்டினர். குறள் மீது மதம் சார்ந்து சைவ அடையாளமும், சாதி சார்ந்து பிராமண ஆணுக்கும் பறையர் பெண்ணுக்கும் பிறந்தவர் என்ற அடையாளமும் கற்பிக்கப்பட்டன.

இதன் மூலம் பறையர்கள் கல்வியும் சுகாதாரமும் இல்லாததாலேயே கீழாகிப் போனார்கள் என்ற சாதிய கற்பிதத்தை நிலைப்படுத்த முயன்றனர். அதற்கு இடையூறாக குறளாசிரியர் பறையரே என்ற தகவல் இருந்தது. அந்நிலையில்தான் ‘அச்சமூகத்தவர் அனைவருக்கும் வழிகாட்டத்தக்க நூலறிவும் கல்வியும் இருக்க முடியாது’ என்று கூறும் விதத்தில் பிறப்பு வரலாற்றில் பிராமணத் தந்தையை இணைத்து ஈடுகட்ட முயன்றனர். கண்ணுக்குப் புலப்படாத விதத்தில் இப்பொய் அரங்கேற்றப்பட்டதால் பெரிய எதிர்ப்பு இல்லாமல் போனது.

அதேவேளையில் இத்தகைய திரிபுக்குப் பஞ்சமர் அறிவாளிகளிடையே எதிர்ப்பே இல்லாமல் இருந்தது என்றும் சொல்லிவிட முடியாது. வித்வான் V.A.முனிசாமி பிள்ளை என்பவர் எழுதிய ‘தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் புராணம்’ என்ற நூல் வள்ளுவர் ஆதிதிராவிடரே என்பதை நிறுவ எழுதப்பட்டதாக ஆதிதிராவிடன் இதழ் (15.06.1919) கூறுகிறது. 26.04.1920 தேதியிட்ட சுதேசமித்திரன் ஏட்டில் ஸ்ரீமான் கோ.குப்புசாமி என்பவர் “வள்ளுவர் பஞ்சமரா?” என்று சகஜானந்தரை நோக்கிக் கேள்வியெழுப்பினார். இதற்கு பெருமாள் நாயனார் என்பவர் “வள்ளுவர் பஞ்சமரே, பறையரே” என்று பதிலளித்தார் (15.06.1920, ஆதிதிராவிடன் இதழ்). வள்ளுவர் தொடர்பான இத்தகு விவாதங்கள் பரவலாக நடந்ததையும், அதில் ஆதிதிராவிட அறிவாளிகள் பலரும் வள்ளுவர் பஞ்சமர் என்று கருதுவதில் ஒன்றுபட்டிருந்தனர் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. வள்ளுவர் பிராமணருக்கும் பறையருக்கும் பிறந்தார் என்ற கதையின் ‘அரசியலையே’ கட்டுடைத்தார் அயோத்திதாசர்.

1920களில் எம்.சி.ராஜா, டி.கோபால் செட்டியார், திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை ஆகியோர் முறையே எழுதிய ‘Oppresed Hindus’, ‘ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்’ ஆகிய நூல்களில் வள்ளுவரைப் பறையராகக் கூறியுள்ளனர். ஆனால், நவீன தமிழகத்தில் அழுத்தம் பெற்ற சமயச் சார்பற்ற தமிழ் அடையாளத்தால் வள்ளுவர் தமிழர் அனைவருக்கும் என்றாக்கப்பட்டார். அதனூடாக தலித்துகளின் உரிமை கோரல் மெல்ல மறைந்துபோனது.

நந்தன்

வள்ளுவர் போலவே 19ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ளப்பட்ட மற்றோர் அடையாளம் நந்தனார். கிட்டத்தட்ட வள்ளுவருக்கு நடந்ததே நந்தனாருக்கும் நடந்தது. பெரியபுராணம் உள்ளிட்ட பிரதிகள் கூறிய கதை என்று சொல்லிக்கொள்ளப்பட்டாலும் நந்தனாரைப் பறையர் அடையாளத்தோடு இணைத்து, மன்னன் என்ற நினைவைத் திரித்து இழிவின் சித்திரமாக்கியது 19ஆம் நூற்றாண்டின் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’தான். இத்தகைய திரிபுகளோடும் மோதல்களோடும் இருபதாம் நூற்றாண்டுக்குள் நுழைந்த இவ்விரு அடையாளங்களும் தலித்துகளின் அடையாளமாக இல்லாமல் போனது அல்லது அவர்கள் மீதான சாதிய இழிவைக் காப்பாற்றுவதற்கு ஏற்ற வகையில் தக்க வைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக நந்தனார் கதை மீதான திரும்பத் திரும்பக் கூறல் அவரைப் பிரபலப்படுத்திவிட்டது.

19ஆம் நூற்றாண்டிலேயே மன்னன் என்ற நினைவு மங்கி அடிமை எனும் நினைவு மேலோங்கிவந்ததை இரட்டைமலை சீனிவாசன் குறிப்புகள் வழி அறிந்தோம். நந்தனார் பண்ணையடிமையாக இருந்த சிவபக்தன் என்ற நினைவு நிலைபெற்ற பின்னர் தலித்துகளும் அவ்வடிவத்தை ஏற்றனர். இதுதான் கண்ணுக்குப் புலப்படாத ஆதிக்கத்தின் நுட்பம். ஆனால், தலித்துகள் இதனை முழுமையாக ஏற்றார்கள் என்றும் சொல்ல முடியாது. அவர்களிடையே இது சார்ந்து இரண்டு தரப்புகள் இருந்தன. அவற்றில் முதல் தரப்பைப் பார்க்கலாம்.

சுவாமி சகஜானந்தர்

இருபதாம் நூற்றாண்டு ஒடுக்கப்பட்டோர் அரசியல் பண்பாட்டு வரலாற்றில் சுவாமி சகஜானந்தர் முக்கியமானவர். தலித்துகளுக்காக மிஷனரி பள்ளிகள், பஞ்சமர் பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில் தலித்துகளாலேயே தொடங்கப்பட்ட பள்ளிகள் என்று சகஜானந்தர் சிதம்பரத்தில் தொடங்கிய பள்ளிகளையே கூற முடியும். 1916ஆம் ஆண்டு சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தரின் கல்விப் பணிகள் தொடங்கின. தொடக்கப் பள்ளியாகத் தோன்றிப் படிப்படியாக மேல்நிலைப் பள்ளி, விடுதி என்று வளர்ந்தது. 1916 ஜூலை 7ஆம் நாள் நந்தனார் கல்விக்கழகம், 1917 மே 20ஆம் நாளில் ஆரம்பக் கல்விச்சாலை என்று இந்த வளர்ச்சி நீடித்தது. தற்காலம் வரையிலும் இயங்கிவரும் இப்பள்ளிகள் சிதம்பரம் வட்டாரத்திலுள்ள தலித் அல்லாதவர்களும் கல்வி பெற உதவியது. சுவாமி, சிதம்பரம் வட்டார கிராமங்கள் தோறும் சென்று குழந்தைகளை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தார். இப்பள்ளிக்கு அவரிட்ட பெயர் நந்தனார் பள்ளி. இம்முயற்சியின் தொடக்கமாக நந்தனார் தீக்குளித்ததாகக் கருதப்படும் ஓமக்குளம் கரையிலேயே நந்தனார் மடம் என்ற ஒன்றை ஏற்படுத்தினார்.

நந்தனாரும் சகஜானந்தரும்

சகஜானந்தருக்கு நந்தனார் என்ற முன்னுதாரணம், இளமை முதலே இருந்துவந்த ஆன்மீக நாட்டத்திலிருந்து தொடங்கியிருக்கிறது. ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் பிறந்த சகஜானந்தரின் இயற்பெயர் முனுசாமி. நீலமேக சுவாமிகள் எனும் துறவி மீது முனுசாமி ஈர்க்கப்பட்டார். நீலமேக சுவாமிகள் திருந்துருத்தி இந்திர பீடம் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் பரம்பரைச் சீடரான ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளிடம் வேதாந்த பாடம் கற்றவர். குருவின் ஆணைப்படி துறவை மேற்கொண்ட முனுசாமி, ஆரணிக்கு அருகிலுள்ள முனுகப்பட்டு கிராமத்தில் தங்கினார். பிறகு, நீலமேக சுவாமிகளின் அறிவுறுத்தலால் நரசிங்கபுரம் தக்கண்ண சுவாமிகளிடம் தத்துவ நூல்களைக் கற்றார். இவர் மூலமே முனுசாமி சென்னை சென்றார். சென்னையில் பல்வேறு கருத்தூட்டங்களைப் பெற்றுவந்த அவர், வியாசர்பாடி கரபாத்திர சிவபிரகாச சுவாமிகளிடம் வந்து சேர்ந்தார். இக்காலத்திலேயே நந்தனார் என்கிற சைவ அடியாரின் ‘வரலாறு’ இவரின் ஆன்மீக உருவகமாகத் தாக்கம் பெற்றிருக்கிறது. அதனை “இந்த மடத்தின் செயல்பாடும் அறிஞர்களின் வரவும் சகஜானந்தரின் பிற்கால நந்தனார் மடாலய உருவாக்கத்திற்கு மிகவும் பக்கபலமாக இருந்தது” என்று ரெங்கையா முருகன் கூறுவதன் மூலம் அறிகிறோம். வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் துறவையளித்து, என்றும் ஆனந்தமாக இருப்பவன் என்ற பொருளில் சகஜானந்தம் எனும் பெயரைச் சூட்டினார் என்றும் முருகன் குறிப்பிடுகிறார். சகஜானந்தருக்கு மடத்தில் அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அவரின் சாதி காரணமாக வெறுத்த அன்பர்களுக்கு திருவள்ளுவர், நந்தனார், திருப்பாணாழ்வார் உள்ளிட்டோர் பேரருள் பெற்று விளங்கியதை சுவாமிகள் எடுத்துக்காட்டி சகஜானந்தரின் மெய்யருளைச் சுட்டுவாராம். இதை “ஏனைய அரசு, வணிகம், தொண்டு என்பன முழுவதும் குன்றிவிட்டதால் மநுவானவர் தமது அரசாட்சியில் உள்ள மக்களை நான்கு வகையான தொழில் செய்யுமாறு ஆணை செய்தனர். பின்னோர்கள் சாதி என்று வழங்கி வந்தனரன்றி இறைவன் படைப்பில் எள்ளளவும் பேதமில்லை” என்று அவர் கூறிய கூற்றை எடுத்துக் காட்டுகிறார் ரெங்கையா முருகன். இப்பின்னணியிலிருந்தே நந்தனார் பற்றிய பிம்பம் சகஜானந்தருக்கு அழுத்தம் பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தீண்டாமை பற்றியும் தன் மீது நிலவும் பாகுபாடு குறித்தும் அவருக்குப் புரிதல் இருந்திருக்கிறது. மேலும், மடத்தில் பல தரப்பின் தொடர்பும் அவருக்கு வாய்க்கப் பெற்றது.

சுவாமி சகஜானந்தர்

மடத்திலிருந்து மண்ணடி ஆ.முருகேசப் பிள்ளை ஆருத்ர தரிசனத்திற்காகச் சிதம்பரம் சென்றபோது சகஜானந்தரை அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கெனவே நந்தனாரை ஆன்மீக ரீதியாக ஏற்றியங்கிய சகஜானந்தருக்கு இது விருப்பமானதாக இருந்திருக்க வேண்டும். இதுகுறித்து குறிப்பிடும் சகஜானந்தர் “ஸ்ரீமான் திரு ஆ.முருகேசப் பிள்ளையவர்கள் 1910ஆம் வருடம் ஜூலை மாதம் சிதம்பரம் தரிசனத்திற்குத் தம்மோடு அடியேனையும் அழைத்துக்கொண்டு சென்று சிதம்பரத்தில் எம்குலமணியாகிய திருநாளைப் போவார் தீயில் மூழ்கிய ஓமக்குளத்தின் கரையில் ஸ்ரீமஹாத்மா ஆறுமுக சுவாமியவர்களும் பின்னத்தூர் ஸ்ரீமத் இலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறுகட்டிடமாகிய சத்திரத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் காண்பித்து ஈண்டிருந்து ஏழைப் பஞ்சமர்களுக்கு நன்மை செய்வது நலமெனத் தெரிவித்தார்கள்” என்று இதன் தொடக்கத்தைக் குறிப்பிடுகிறார். இக்கூற்றில் அவர் நந்தனாரைத் தம் குலத்தவராகக் கருதுவதில் பெருமை கொண்டிருப்பது தெரிகிறது. அதன்படி தமிழ் சைவ மரபில் வழங்கப்பட்டுவந்த நந்தனார் கதையாடலை அப்படியே அவர் ஏற்றிருக்கிறார். நந்தனார் தெய்வ அருள் பெற்று உய்வுற்ற வழிமுறையையே நந்தனார் குலத்தினருக்கான வழிமுறையாகப் புரிந்துகொண்டிருப்பார் என்று கருதுவதில் தவறு ஏதுமில்லை. அவரைப் பாதித்தது பெரியபுராண நந்தனாரா? கோபாலகிருஷ்ண பாரதி நந்தனாரா? என்று ஆராய்வது நம் காலத்தில் இருந்து எழுப்பிப் பார்க்கும் கேள்வியாக மட்டுமே இருக்க முடியும். மற்றபடி மடங்களின் ஆன்மீகப் பயில்முறை, கோபால கிருஷ்ண பாரதியின் கதையாடல் மடங்களைப் பாதித்திருந்த விதம் என்றெல்லாம் யோசனை செய்து பார்க்கையில் இந்த வித்தியாசங்கள் எல்லாம் இல்லாமல் பெரியபுராண கதையாடலும் கோபால கிருஷ்ண பாரதியின் கதையாடலும் இணைந்த நந்தனார் பிம்பமே அவரிடம் தொழிற்பட்டிருக்கும் என்று கருதலாம்.

மரபும் நவீனமும்

ஆன்மிகத்தின் வழி அதன் ஒரு பகுதியாக ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுப் பணிக்கு வந்த சகஜானந்தருக்கு ஆங்கிலேயர் மூலம் அறிமுகமான நவீனக் கல்வி குறித்த சிந்தனை எவ்வாறு எழுந்தது, அதோடு நவீன அரசியல் பின்புலத்தில் உருவான சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு எவ்வாறு வர முடிந்தது என்பதுதான் சுவாரசியமான விஷயம். அதாவது, இவை மரபிலிருந்து நவீனத்தை எட்டுவதாகிறது. துறவு மரபைச் சேர்ந்த ஒருவர் நவீன போக்கிற்கு மாறியிருப்பதை நாம் சகஜானந்தரிடம் பார்க்கிறோம்.

அவர் சட்டமன்றத்தில் எழுப்பிய கோரிக்கைகள் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் பற்றி தீவிரமான அக்கறை கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. ஒரு துறவிக்கு இந்த அளவு அரசியல் தீவிரம் இருக்குமா என்று பார்க்கும் அளவுக்கு இது அமைந்துள்ளது. இது அக்காலகட்ட அரசியல் சூழ்நிலையின் விளைவா? தொடக்க கால மடங்கள், துறவிகள் உடனான தொடர்பிலிருந்து உருப்பெற்ற நேர்மறையான அல்லது எதிர்மறையான அழுத்தமா? ஏனெனில், சகஜானந்தரின் தொடக்க கால அனுபவங்கள் பற்றியோ, சமூக அரசியல் தெளிவு பற்றியோ, தீண்டாமை மேம்பாடு குறித்து அவர் கொண்டிருந்த கருத்துகள் பற்றியோ அறியக்கூடிய நேரடித் தரவுகள் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை.

சிதம்பரத்தில் பஞ்சம வகுப்பு சிறுவர்களுக்கான பள்ளியை சகஜானந்தர் தொடங்குவதற்கு முன்பே பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி, செட்டியார் பள்ளி, ஆறுமுகநாவலரின் அறக்கட்டளை சார்பில் கல்விக்கூடம் ஆகியவை இருந்தன. இவை சைவ நம்பிக்கையுடையோரின் பின்புலம் கொண்ட நிறுவனங்களாகும். இவற்றில் ஒடுக்கப்பட்டோர் குழந்தைகள் எத்தனை பேர் பயின்றிருக்க முடியும், அவர்களுக்கு எந்த அளவு இடம் தரப்பட்டிருக்கும் என்பவற்றிற்கெல்லாம் விடை தெரியவில்லை. அதேவேளை இப்பள்ளிகள் கிறிஸ்துவ மிஷனரிகளின் முயற்சிகளுக்கு எதிர்வினைகளாகத் தோன்றியவை என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இவை நவீன அரசியல் சூழ்நிலைக்கேற்ப மரபான ஆன்மீக குழுக்கள் உருவாக்கிக்கொண்ட முயற்சிகள் என்று கூறலாம். சகஜானந்தரும் இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு நவீன கல்வி முறையைக் கையெடுத்திருக்கலாம். இதன்படி சைவ மரபில் பஞ்சமர் குழந்தைகளுக்காகக் கல்விப் பணியாற்ற முற்படும் சகஜானந்தருக்கு அதே மரபைச் சேர்ந்த நந்தனார் முன்னோடியான குறியீடாகி இருக்கிறார்.

நந்தனார் என்னும் குறியீடு

தான் இழிவுபடுத்தப்படுவதும், ஆலயங்கள் சென்று தரிசனம் பெற இயலாததும் தன் பிறப்பின் விதி என்று நந்தனார் கருதுவதாகக் கதையாடல் கூறுகிறது. அதனால் அவரை இழிவுபடுத்தும் பண்ணையாரையோ தில்லைவாழ் அந்தணர்களையோ யோசிக்காமல் சோதனைகளைத் தாங்கினால் அவர்கள் மனமிறங்கித் தரும் அனுமதி வழியே சென்று புலைப்பிறப்பெனும் இழிவை நீக்கி, மேல்நிலை அடையலாம் என்பதே நந்தனார் கதையின் சாராம்சம். அதாவது, சிவதரிசனம் அடைதல் என்ற இலக்கில் தூய்மையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் அதைக் கண்டு இரக்கம் கொள்ளாதாரும் ஒருகட்டத்தில் இறங்கி வருவார்கள் என்று இதைப் பொருள்படுத்திக்கொள்ளலாம். நவீன அரசியலில் ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுப் பணியில் ஈடுபட வந்தவர்களுக்குப் பிற சமூகத்தவர்களின் ஆதரவும் அனுசரணையும் கிடைப்பதற்காக ஒடுக்கப்பட்டவர்களுக்கு நந்தனார் என்னும் பிம்பம் ஒரு குறியீடாக அமைந்தது. இவ்வாறுதான் சகஜானந்தரால் மரபு வழியாக ஏற்றுணர்ந்திருந்த நந்தனார் என்னும் தொன்மம் நந்தனார் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வி எனும் நவீன வாய்ப்பிற்கான பிம்பமாக வரித்துக்கொள்ளப்பட்டது.

நிலவும் சமூக அமைப்பில் சாதிய இழிவால் பின்தள்ளப்படுவோரும் அத்தகைய இழிவு நீங்கிய நல்வாழ்வு வேண்டுமென்றே விரும்புகிறார்கள். பொதுவான சமூக உளவியல் இதுவே. இவற்றில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிமுறை இருக்கலாம். நந்தனார் கதையிலுள்ள புலைப்பிறப்பு எனும் இழிநிலை, வழிபாட்டிற்கான தொடர் முயற்சி, தீயில் மூழ்குதல், புனித நிலை அடைதல் ஆகியவை நவீன காலத்தில் வேறு விதத்தில் பொருள் பெற்றிருக்கின்றன. அதாவது, இழிவு தந்த இன்னல்களைக் கருதாமல் இறைப்பற்றையே கருதி புலைப்பிறப்பு எனும் இழிநிலையைத் தீயில் அழித்து நந்தனார் புனித நிலை அடைந்தது போல, நந்தனார் குலத்தினர் நவீனம் தந்த கல்வியைக் கற்று முன்னேறினால் மரபுவழிபட்ட சாதிய இழிவை மாற்றிக்கொள்ள முடியும் என்கிற ஒப்புமை இதிலிருப்பதை நாம் கவனிக்கலாம். கல்வி மூலமே உள்ளூர் சாதி ஒடுக்குமுறையிலிருந்து தலித்துகள் விடுபட முடியும் என்று சகஜானந்தர் தீவிரமாக நம்பினார். இது அன்று முதல் இன்றுவரை தலித் மக்களின் ஏகோபித்த பார்வை. இதற்காக ஒவ்வொரு குழுவினரும் வெவ்வேறு அணுகுமுறை சார்ந்தும், புரிதல்கள் சார்ந்தும், வாய்ப்புகள் சார்ந்தும் செயல்பட்டுள்ளனர். இத்தகு முயற்சிகளுக்கேற்ப வரையறைக்குட்பட்ட விளைவுகளும் நடந்திருக்கின்றன. தலித் சாதிகளின் ஒரு நூற்றாண்டு சமூக வளர்ச்சியில் இதுவொரு முக்கியமான, அதேவேளையில் கவனிக்கப்படாத போக்கு. நந்தனார் கதையாடலில் தலித் ஒருவரின் வரையறை எதுவோ அந்த வரையறைக்கேற்ப சகஜானந்தரின் தலித் மேம்பாடு பற்றிய புரிதலும் அமைந்திருக்கிறது.

நந்தனாரால் கிடைத்த உதவிகள்

சகஜானந்தர் இளமையில் துறவு வாழ்க்கையைத் தொடங்கிய நாட்களிலிருந்து பிறரின் ஆதரவோடு செயல்பட்டார். அவருக்கெதிரான தீண்டாமை பேச்சுகள் இருந்த அதேவேளையில், அதை மீறி அரவணைத்த கைகளும் இருந்தன. நந்தனார் என்ற கதையாடல் இவர் போன்றோருக்கு ஒரு முன்னுதாரணம். அதேவேளையில் இவருடைய வாழ்க்கைப் பயணம் கூட நந்தனார் வாழ்க்கையின் பிரதிபலிப்புதான். சகஜானந்தரின் ஆன்மீக துறவுக்குக் காரணமான நீலமேக சுவாமிகள் வேளாளர் ஜாதியைச் சேர்ந்தவர். சிதம்பரத்தில் சகஜானந்தர் முன்னெடுத்த கல்வி முயற்சியும் கூட எதிர்ப்பு இல்லாமல் நிறைவேறிவிடவில்லை. அதற்காகப் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தார். இந்நிலையில் ஒடுக்கப்பட்டோர் மேம்பாடு அடைய எந்தத் திசையிலிருந்து கிடைக்கும் ஆதரவையும் நல்வினையாக்கிக்கொள்ளவே அவர் விரும்பியிருக்கிறார். பள்ளிக்கு நில ஒதுக்கீடு பெறுவதிலிருந்தே இன்னல்கள் தொடங்கின. அவ்வேளையில் சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகளின் வேதாந்த மடத்து மடாதிபதி பரஞ்சோதி சுவாமிகள் உதவிக்கரம் நீட்டினார். இதன் தொடர்பில் பலரும் நந்தனார் மடம் இயங்க உதவினர். பிறகு, தேசிய இயக்கத்தவரும் காங்கிரஸ் அரசாங்கமும் நந்தனார் மடத்தின் வளர்ச்சிக்கு உதவினர். ராஜாஜி, காந்தி, காமராஜர், வஉசி, பெரியார் என்று பல்வேறு தலைவர்களுடனும் தொடர்பு கொண்டிருந்த சகஜானந்தர், சிதம்பரம் சென்று சிவனை வழிபடுவது என்ற ஒற்றை லட்சியத்திற்கு முன், எந்த இன்னலையும் ஏற்கத் தயங்காத நந்தனார் போன்று லட்சியத்தை அடைய எந்தச் ‘சமரசத்திற்கும்’ இணங்கி இயங்கினார். இவ்வாறு நவீன சமூக மேம்பாட்டுச் செயல்முறைக்குத் தொன்மரீதியான பிம்பமொன்று உள்ளீடாக இருந்துவந்ததைப் பார்க்கிறோம். எனவே, நந்தனார் என்ற பெயர் இருபதாம் நூற்றாண்டில் ஆன்மீக எல்லைக்குட்பட்டு மட்டும் நிற்கவில்லை.

நந்தனார் தன் அணுகுமுறையால் எதிர்தரப்பை மெல்ல மெல்ல மாற்றி இணங்க வைத்தார் என்ற கதையாடல் அவர் பற்றிய பிற சாதியினரின் ஏற்புக்கு முக்கிய காரணமானது. இத்தகைய பிம்பத்திற்கு உதவுவது மூலம் தங்கள் தரப்பைக் காத்துக்கொள்வதோடு, அவர்களின் பார்வையில் தங்களைக் கருணையாளர்களாகக் காட்டிக் கொள்ளும் வாய்ப்பும் பிறருக்கு ஏற்படுகிறது. இதனால்தான் இப்போதும் தமிழக முற்போக்குத் தளங்களில் இதனை நந்தனாரின் ஏமாளித்தனமாகவும் சமரசத்திற்கான குறியீடாகவும் கருதும் போக்கிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சுயபலத்தை மட்டுமே நம்பி மேம்பாட்டுப் பணிகளைத் திட்டமிட முடியாது. சமூக அதிகாரமும் சொத்து உள்ளிட்ட பலமும் கொண்ட பிற சமூகத்தினரின் உதவி மூலம் வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள நினைப்பது ஒரு வழிமுறை. அதற்கு ஆன்மீகம் வழியாக நம்பப்பட்டு வரும் அறவுணர்வு அவர்களை அசைய வைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இத்தகைய ஆன்மீக அறவுணர்வின் சொல்லாடலாக நந்தனார் என்ற பிம்பம் இருந்திருக்கிறது. உள்ளூர் ஆன்மீகத் துறவு பின்னணியிலிருந்து சமூகச் செயல்முறைக்கு வந்த சகஜானந்தர், மக்களை ஒன்றுதிரட்டிப் போராடி மாற்றங்கள் ஏற்படுத்துதல் என்ற நவீன காலகட்ட அரசியலை, புரிதலைக் கொண்ட தலைமுறையைச் சேர்ந்தவரல்லர். மேலும் ஒடுக்கப்பட்ட ஒருவர் பிறரைப் போல் ஒழுக்கத்தால் உயர்ந்து பக்திமானாக மாற முடிவதும் இழிவு மறுப்புதான் என்கிற அர்த்தமும் நந்தனார் கதையாடலில் இருக்கிறது.

நந்தனாரைக் குறிப்பிட்ட அம்பேத்கர்

இந்த அர்த்தத்தில்தான் சகஜானந்தர் புரிந்திருந்தார் என்பதற்கான வெளிப்படையான குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், அம்பேத்கருக்கு இதுபோன்ற பார்வை இருந்தது. தானெழுதிய ‘தீண்டப்படாதார் யார்? அவர்கள் தீண்டப்படாதார் ஆனது எவ்வாறு?’ நூலை “தீண்டப்படாதவரிடையே பிறந்து தமது பக்தியாலும் ஒழுக்க நலன்களாலும் அனைவரின் பெருமதிப்பைப் பெற்றுப் புகழ்மிகு திருவருட்செல்வர்களாகத் திகழ்ந்த நந்தனார், ரவிதாஸ், சோகாமேளர் ஆகிய மூவர் நினைவுக்கு உரிமையாக்கப்பட்டது” என்று கூறி சமர்ப்பணம் செய்திருக்கிறார் அம்பேத்கர். தீண்டப்படாதாரை ஒதுக்கி வைப்பதற்குக் காரணமாகக் கூறப்படும் இழிவுகளைப் பின்தள்ளி பிறராலும் மதிக்கப்படும் நிலையை எட்டியவர்களாக மாறியதாலே இம்மூன்று ஆன்மீகப் புனிதர்களை அம்பேத்கர் குறிப்பிட்டெழுதி நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அம்பேத்கரின் சாதி ஒழிப்பு பற்றிய மொத்த பார்வையிலிருந்து பார்க்கும்போது அவர் நந்தனார் வழிமுறையை ஏற்பதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால், இங்கு அவர் தன் மொத்த பார்வையை இப்புனிதர்கள் மீதேற்றாமல் அவர்களின் காலத்திலிருந்து பொதுச் சமூக உளவியலை எதிர்கொண்டதை முக்கியமாகப் பார்த்திருக்கிறார்.

நந்தனாரும் தேசியவாதமும்

பிரிட்டிஷாருக்கு எதிராக உருப்பெற்ற இந்திய தேசியவாதம் இந்து உயர் ஜாதிகள் நலனிற்கானவை; பிராமணியத் தன்மை கொண்டவை என்று விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் தேசியவாத தரப்பிற்கு இருந்தது. மரபார்ந்த இந்து பண்பாட்டு அடையாளங்களை முற்றிலுமாகத் துறக்க முடியாமலும், காலனியம் வழியான புதிய சீர்திருத்தங்களைப் புறந்தள்ள முடியாமலும் தவிப்பான நிலையில் தேசியவாதம் இருந்தது. தேசியவாதிகளின் பேச்சுகளிலும் நடைமுறைகளிலும் இந்தத் தடுமாற்றம் பிரதிபலித்ததை அக்காலகட்ட பதிவுகளின் வழியே பார்க்க முடியும். “ஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி” என்ற பாரதியின் புகழ்பெற்ற வரிகள் இதற்கோர் உதாரணம். இந்நிலையில்தான் சுதேச அறிவாளிகளும் தலைவர்களும் கல்வி நிறுவனங்களையும் சாதி மத ரீதியான சீர்திருத்தக் கருத்துகளையும் கணக்கில் எடுத்தனர். ஒடுக்கப்பட்டோர் மீது கவனம் செலுத்துவதன் மூலமாகப் பலரையும் உள்ளடக்கிய தேசியவாதச் சொல்லாடலையே உருவாக்கினர். தங்களை நோக்கிய முரண்பாட்டை எதிர்கொள்ளும் வகையில் தாங்களே தலித்துகளை மேம்படுத்தும் பணியில் இறங்கினர். இப்பின்னணியில்தான் அவர்கள் எதிர்பார்த்த ‘நல்ல தலித்’திற்கான பிம்பமாகத் தமிழ் எனும் வட்டாரத்தில் நந்தனார் கதையாடல் இருந்தது. நந்தனார் போன்று இணங்கிச் செல்லும் பாத்திரத்தை அரவணைப்பதில் இப்புதிய தேசியவாதத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இணங்கிச் செல்வதன் மூலம் அது நந்தனாரை மேலுயர்த்தும். பாரதியின் ‘உயிர்பெற்ற தமிழர் பாட்டு’ என்ற தலைப்பிலான கவிதையில் இதற்கான சித்திரம் தரப்படுகிறது. அதாவது, “நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் – இந்த நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின் எந்தக் குலத்தின ரேனும் – உணர்வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்” என்கிறார். இந்த வரிகள் கடந்தகால நந்தனை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, இனியும் இருக்க வேண்டிய தலித் ஒருவரின் பாத்திரத்தையும் வரையறுக்கிறது. ‘எக்குலத்தினரேனும்’ என்ற முடிவை ‘நல்லதாயின குணம்’ என்பதுதான் தீர்மானிக்கிறது. நல்ல குணம் என்பது நந்தனார் கதையில் வர்ணிக்கப்படும் பணிவு உள்ளிட்டவற்றையே குறிக்கிறது.

சாதி மதம் பாராமலிருப்பதைத் தேசியவாதத்தின் பண்பாகச் சுட்டிய பாரதியார், நந்தனாரை மட்டுமல்ல நந்தனாரை முன்வைத்துச் செயல்பட்ட சகஜானந்தரையும் பாராட்டினார் என்பதை முன்னரே பார்த்தோம். இவ்விடத்தில், நந்தனார் கதை, பக்திக்காக எழுதப்பட்ட பனுவல் என்று வாதத்திற்குக் கூட சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதை இருபதாம் நூற்றாண்டில் பார்க்கிறோம்.

ஒரு கதை நிகழ், செயல் முறையில் எப்படி வரலாறாக மாறியது என்பதை இங்கே புரிந்துகொள்கிறோம். பிராமணியத்தின் அரசியலைத் திறனாய்வு செய்து எழுதிய அம்பேத்கரே ஏற்குமளவுக்கு நந்தனார் கதை ஆங்கிலத்திலும் பரவியிருக்கிறது. காலம் ஏற்படுத்திய மாற்றம் என்று இதைக் கூறலாம். நந்தனார் பற்றி எழுதப்படும்போது அது நிஜமெனக் கருதி எழுதப்பட்டதா என்று தெரியாது. ஆனால், நந்தனார் கதை நிஜமா, பொய்யா என்பது அது எழுதப்பட்ட காலத்திற்கும் பின்னாட்களிலேயே அர்த்தமாகியது. இன்றிலிருந்து கடந்த காலத்தை வரையறுப்பது என்பது இதுதான். இவ்விடத்தில் பிரதியானது எழுதியவர் கையிலிருந்தும் – வடிவத்திலிருந்தும் நழுவிப் போய்விடுகிறது. தேவையும் வாசிப்பும்தான் ஒரு கதை நிஜமாக வேண்டுமா, புனைவாக வேண்டுமா என்பதை முடிவு செய்கிறது.

சகஜானந்தரின் ‘முரண்’

சைவக் கதையாடலின் நந்தனாரை முன்வைத்திருந்தாலும் சகஜானந்தருக்குப் பறையர்களின் வரலாறு குறித்த பார்வை வேறாக இருந்தது. அச்சமூகத்தினர் பூர்வத்திலிருந்தே இழிவாக இருந்தவர்கள் அல்லர் என்பதே அவர் புரிதல். அதாவது, “பண்டைக் காலத்தில் இவர்கள் சீரும் செல்வமும் உடையவர்களாய் வாழ்ந்துவந்தனர்… ஆரியர்களும் திராவிடர்களும் இந்நாட்டில் குடியேறிய போது, இந்நாட்டிலிருந்த பழங்குடி மக்கள் அவர்களை எதிர்த்துப் போராடினர்; முடிவில் தோற்றனர். தோற்றவர்கள் பெருந்தொகையினராய் இருந்தமையின் ஜெயித்தவர்கள் இவர்களை மதிற் காவல் வாயிற்காவல் முதலிய சிறைகளில் வைத்துப் போஷிக்க முடியாமையின் இவ்வுலகத்தையே சிறைக்கூடமாக்கினர். தீண்டாமை என்னும் விலங்கிட்டு ஊர்களுக்கு வெளியே இருக்கும்படி செய்து சுதந்திரங்களைப் பறித்துத் தங்களுக்கு பரதந்திரர்களாக்கினர்” என்கிறார். அதேபோல சைவப் பின்னணியும் தேசியவாத ஆதரவும் கொண்டு பணியாற்றிய சகஜானந்தர், ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுக்காக வெவ்வேறு வழிகளில் செயல்பட்டவர்களை மறுத்ததில்லை. எவ்வழியாயினும் உருவாக இருக்கும் விளைவுகளே அவருக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. ‘அரிஜனப் பிரதிநிதிகள் மற்ற கட்சிகளில் இருந்தாலும், அரிஜன நலன்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சேர்ந்துள்ள கட்சிகள் இவ்விஷயத்தில் ஒத்துழைக்க வேண்டுமென்று நிபந்தனையிட்டுச் சேர வேண்டுமென்பதே’ அவரின் நிலைப்பாடாக இருந்தது. தங்களின் கடந்த காலம் வீழ்த்தப்பட்டிருந்தாலும் அதைச் சமகாலத்தின் மரபார்ந்த மடங்கள் – நவீன தேசியவாதம் ஆகிய வாய்ப்புகளின் மூலம் மறு உருவாக்கம் செய்துகொள்ள விரும்பிய முன்னோடி ஒருவரின் முயற்சிகளாகவே சகஜானந்தரின் பணிகளையும் புரிதலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இதனூடாக காந்தியின் எழுச்சி வழியே ‘அரிசனம்’ என்ற அடையாளமும் நிலைபெற்றது. காந்திய மேடைகளில் நந்தனார் அரிசன புனிதராக முன்வைக்கப்பட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியமைத்த மாநிலங்களில் காந்தியின் தொடர்ச்சி காரணமாக ஹரிஜன நிர்மாணத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அரசோ, அரசின் ஆதரவுடனோ அரிஜனங்களை நோக்கி தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு நந்தனார் பெயரும் சூட்டப்பட்டது. 1950களில் மதுரையில் காந்தி அபிமானிகளால் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குத் தொடங்கப்பட்ட பள்ளி மற்றும் விடுதிக்கு நந்தனார் பெயரே சூட்டப்பட்டது. இந்த விடுதி இப்போதும் இருக்கிறது.

எல்.இளையபெருமாளும் வள்ளல் பெருமாளும்

சகஜானந்தர் 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் காலமானார். இறக்கும் முன்பே நந்தனார் கல்விக் கழகத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு எல்.இளையபெருமாளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு எல்.இளையபெருமாள் நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடைசியில் இளையபெருமாள் பக்கமே தீர்ப்பு வெளியானது. ஓமக்குளத்தின் தென்புறத்தில் காட்சியளிக்கும் நந்தனார் கோயில் பணிக்காக இளையபெருமாள் 1961ஆம் ஆண்டில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று நிதி திரட்டிவந்தார். பிறகு சிற்சில எதிர்ப்புகளுக்கிடையே கும்பாபிஷேகம் நடந்தது.

எல்.இளையபெருமாள் தென்னாற்காடு வட்டார தலித் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக வளர்ந்தார். சகஜானந்தரின் தொடர்ச்சி என்ற முறையில் அவர் இயங்கிய ஆன்மீகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றில் இளையபெருமாளும் பங்கு வகித்தார். பின்னாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராகவும் திகழ்ந்தார். இழிதொழில் மறுப்பு என்ற முறையில் பறை மேள ஒழிப்பில் தீவிரமாகப் போராடினார். இவ்விடத்தில் முரண்பாடு போன்ற ஒன்றைக் காணலாம். பறைமேளமடித்தல் போன்ற தொழில்கள் மரபுரீதியாகச் சுமத்தப்பட்டவை என்ற முறையில் இம்மக்களை இழிவுபடுத்துகிறது என்று கருதிய அதேவேளையில், நந்தனார் என்ற மரபான கதையிலிருந்த பண்ணையடிமை என்ற இழிவை எவ்வாறு ஏற்றிருந்தனர் என்பது கேள்வியாக இருக்கிறது. சகஜானந்தர், இளையபெருமாள் போன்றோர் நந்தனார் வழியான நல்விளைவுகளைக் கருதி அவர் கதைக்குள் இழிவைப் பார்க்காமல், நெருப்பில் இறங்கி மேலேழும் அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டனர் எனலாம். அதாவது, மரபான கதையில் புனிதராகும் அம்சத்தை நவீன காலத்தின் கல்வியோடு இணைந்து “படித்தால் மேலெழலாம்” என்று மாற்றிப் பொருள் கொண்டனர் எனலாம். இளையபெருமாள் அரசியல் வாழ்வின் பிற்காலத்தில் வள்ளல் பெருமானின் எழுச்சி நடந்தது. இவர் இளையபெருமாளோடு இணைந்தும் முரண்பட்டும் இயங்கிய காங்கிரஸ்காரர். இவர் முயற்சியால் நந்தனார் பிறந்ததாகக் கருதப்பட்ட ஆதனூரில் மூப்பனாரை அழைத்துவந்து நந்தனார் சிலை திறக்கப்பட்டது.

இரண்டு நூல்கள்

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராகவும், மிசோரம் மாநில ஆளுநராகவும் இருந்து காலமான ஆ.பத்மநாபன், ‘நந்தனார்’ (1986) என்ற பெயரில் நூலொன்றை எழுதினார். அதேபோல மற்றொரு புனிதரான சோகாமேளர் (1992) பற்றியும் நூலெழுதினார். கோபால கிருஷ்ண பாரதியின் கதையையே ஒரு வரலாறாகக் கருதி எழுதப்பட்ட ‘நந்தனார்’ நூல், தாழ்த்தப்பட்ட ஒருவரின் ஒழுக்கத்தையும் தூய பக்தியையும் மெச்சியது.

அடுத்து மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் தலைவராக இருந்த சுந்தரராஜ் மாணிக்கம் நந்தனார் பற்றி எண்பதுகளில் எழுதிய Nandanar – The Dalit martyr  நூல் குறிப்பிடத்தக்கது. நந்தனாரின் வழக்கமான வரலாற்றை ஏற்று எழுதப்பட்ட இந்நூலில் நந்தனார் கதைக்கான தொடக்கமாக அறியப்படும் திருத்தொண்டத் தொகை, பெரியபுராணம், சரித்திரக் கீர்த்தனை போன்றவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறார். அப்பிரதிகளில் நந்தனாருக்கு மறுக்கப்படும் கோயில் வெளி, பண்ணை அடிமை முறை, நூலாசிரியர்களின் விவரணை முறை ஆகியவற்றை வைத்து நந்தனார் வாழ்க்கை மறைப்பு, திரிப்பு, சமயவாதிகளின் சூழ்ச்சி என்பதாக விளக்கியிருந்தார். இதன் தொடர்ச்சியாக 1991 மார்ச் மாதம் 15, 16 ஆகிய இரு நாட்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை சார்பாக நடத்தப்பட்ட பாபாசாகேப் அம்பேத்கர் நூற்றாண்டு கருத்தரங்கில் ‘காலந்தோறும் நந்தன்’ என்ற கட்டுரையை வாசித்தார். பிறகு இக்கட்டுரையை விரிவாக்கி, மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரி வெளியீடாக ‘காலந்தோறும் நந்தன் (The Nandan Syndrome) (1991)’ என்ற சிறு நூலாகக் கொணர்ந்தார்.

“தீண்டாமை, வறுமை, அறியாமை, ஆதிக்க வெறி, சுரண்டல் போன்ற பல நோய்களால் அல்லலுறும் ஆரோக்கியமற்ற சமூக அறிகுறிகளின் மறுபெயர்தான் ‘தி நந்தன் ஸின்ட்ரோம்’ (The Nandan Syndrome)” என்று கூறுகிறார். இந்தச் சொற்பதம் குறிப்பாகச் சுட்டுவது 1) மாறாத மாற்றந்தாய் மனப்பான்மை 2) இருந்து கொண்டிருக்கும் இருவேறு உலகங்கள் 3) தொடருகின்ற சுரண்டல் 4) தீராத சாதிக் கொடுமைகள் 5) மாற விரும்பாத ஆதனூர்கள் ஆகிய ஐந்து பிரச்சினைகளையாகும். இந்நூல் நந்தனின் வரலாற்றைச் சொல்லவில்லை. மாறாக, மேற்கண்ட ஐந்து பிரச்சினைகள் நந்தனார் காலத்திலும் இருந்ததாக அவர் கதையைக் காட்டிக் கூறுகிறது. அப்பிரச்சினைகள் இன்றும் மாறவில்லை என்பதற்கான சமகால உதாரணங்களை இந்நூல் காட்டுகிறது.

தலித்துகளின் இத்தகைய முயற்சிகள் எல்லாம் நந்தனார் காலம் போலவே இன்றும் சாதிக் கொடுமைகள் இருக்கக் கூடாது என்ற அக்கறையில் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். அதேவேளையில் ‘அதேமாதிரி இருக்கக் கூடாது’ என்று சொல்லும்போது ‘அது மாதிரி இருந்தார்கள்’ என்பதையும் ஒத்துக்கொண்டுவிடுகிறார்கள். அவ்விடத்தில் நந்தனார் கதைக்கு ஒரு வரலாற்றுப் பண்பை ஏற்றிவிடுகிறார்கள் என்பதையும் பார்க்கிறோம்.

இது ஒருபக்கம் நடந்துவந்தாலும் அம்பேத்கரிய அரசியலாளர்களால் நந்தனார் பெரிய அளவில் பேசப்படவே இல்லை. தீண்டாமையை வென்று கல்விமானாக உயர்ந்தார் என்று மேடைதோறும் பேசப்பட்ட அம்பேத்கர் கதையாடலுக்கு முன் நந்தனார் பெருமை தேவைப்படவில்லை.

அவர்கள் நந்தனாரைச் சமரசவாதியாகவோ அல்லது ஏமாளியாகவோதான் கருதியிருப்பார்கள். அதேவேளை, 1990களுக்குப் பிந்தைய தலித் கலை – இலக்கியச் சொல்லாடல்களில் நந்தனார் பெயர் ஓரளவு தென்படுகிறது. குறிப்பாக, 90களுக்கு முன்பிருந்தே இடதுசாரிகள் நந்தனார் பற்றித் தந்துவந்த விளக்கமே தலித் சொல்லாடல்களில் பிரதிபலித்தன. அதன்படி நந்தனார் பெயரைக் குறிப்பிட நேரும் மேடைகளில் அவர் வைதீகத்தை நம்பிச் சென்று ஏமாந்தவர், அவர் கொல்லப்பட்டு நெருப்பில் இறங்கி இறைவனை அடைந்தார் என்றாக்கப்பட்டவர், பண்ணையாரை எதிர்த்துப் பேசாத கோழை என்பதான எதிர்மறைச் சுட்டல்களோடுதான் நினைவுகூரப்பட்டார். 1990களின் தலித் கலை விழா மேடைகளில் நந்தனார் கதையை விமர்சனப் பூர்வமாக மாற்றி நாடகமாக்கிய இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதையை பாண்டிச்சேரி ராஜு அரங்கேற்றினார். இ.பா.வின் நந்தன் கதை மீதான விமர்சனம் தலித் அரங்கத்தினரால் ஏற்கப்பட்டது என்பதே இதன் பொருள்.

மொத்தத்தில் இந்த மாறுதல்கள், மாற்றுச் சொல்லாடல்கள் யாவும் நந்தனார் பற்றிய கோபாலகிருஷ்ண பாரதியாரின் பிரதியை ஏற்று அதன் மீது செய்த மாறுதல்கள் மட்டுமே. நந்தனார் ஒரு பண்ணையடிமை என்பதோ, சிவபக்தன் என்பதோ எங்கும் மாறவில்லை. 2010ஆம் ஆண்டு ராஜசேகர் பாசு என்பவர் எழுதிய Nandanar’s Children: The Paraiyan’s tryst with Distiny, Tamil Nadu 1850 – 1956 என்ற நூல் வெளியானது. தமிழ்நாட்டுப் பறையர்களின் ஒரு நூற்றாண்டு அரசியல் வரலாற்றைக் கூறும் அந்நூலுக்குத் தலைப்பை யோசிக்கும்போது பறையர்களின் பொதுக் குறியீடாக நந்தனார் என்ற பெயரே தோன்றியுள்ளது. மேலும் அட்டைப்படத்திலும் நந்தனார் கைகளைக் குவித்தவாறு சிதம்பரம் கோயில் தீயில் இறங்கும் காட்சியே வரையப் பட்டுள்ளது. நந்தனார் எந்த அளவிற்குத் தலித்துகளின் குறியீடாக மாறிப்போனார் என்பதையே இது உணர்த்துகிறது. சமூக நனவிலியில் அது கலந்துவிட்டது என்று கூறலாம்.

m

தலித் தரப்பில் நந்தனார் பற்றி இதுவரை பார்த்தது ஒரு போக்கு என்றால், மற்றொரு போக்கும் இருந்தது. அவற்றை இனி காணலாம்.

பண்டிதர் அயோத்திதாசர்

நந்தனார் சரித்திரக் கீர்த்தனையின் கதை பரவிவந்த காலத்திலேயே அதனை மறுத்து அது ‘பொய்க்கதை’ என்றெழுதியவர் பண்டிதர் அயோத்திதாசர். அதோடு அதன் ‘மெய்க்கதை’ என்று கருதும் கதையையும் எழுதிக் காட்டினார். சிறிதும் பெரிதுமான கட்டுரைகளிலும் விரிவான தொடர்களிலும் நந்தனார் கதையைத் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார். ‘பறையர்கள் என்போர் தாழ்ந்தவர்கள்’ என்ற கருத்து பிராமணர்களால் பரப்பப்பட்ட பொய்க்கதை என்று குறிப்பிட்ட அவர், அப்பொய்யைப் பரப்ப உருவாக்கப்பட்ட கதைகளில் ஒன்றே இந்த நந்தனார் கதை என்றார். பூர்வ பௌத்தர்களுக்கும், குடியேறிகளான பிராமணர்களுக்கும் இடையேயான மோதலில் பௌத்தர்களே பறையர் என்றாக்கப்பட்டனர் என்று கூறிய அவர், இம்மோதலில் பௌத்தச் சமயத்தையும் மைய காரணியாக இணைத்தார். அவர் பௌத்தம் வந்தடைந்ததற்குக் காரணமாக அஷ்வகோசர் எழுதிய ‘நாரதிய புராண சங்கைத் தெளிவு’ என்ற ஏட்டுச்சுவடி தந்த வரலாறு கூறப்படுகிறது. அவரைப் பௌத்தம் நோக்கித் திருப்பக் காரணமான இந்த ஏட்டின் கதையாடலில்தான் நந்தன் பற்றி அவர் காட்டும் வரலாறும் கிடைத்தது என்கிறார். இனி அயோத்திதாசர் கூறிய கதையைப் பார்க்கலாம்.

நந்தன் என்னும் பௌத்த அரசன்

புன நாட்டிற்குக் கிழக்கே வாதவூர் எனும் தேசத்தை நந்தன் எனும் அரசன் ஆண்டுவந்தான். பௌத்த நெறியை உள்வாங்கிய அவன் தன் நாட்டைப் பௌத்த நெறிப்படி ஆண்டான். இந்நிலையில் புரூசிக நாட்டிலிருந்து வந்த குடியினர் இவற்றைக் கண்டு பொறாமையுற்று நந்தனின் நாட்டை வசப்படுத்தும் திட்டங்களோடு காத்திருந்தனர். புன நாட்டிற்கு அருகிருந்த சோணாட்டில் சிவாலயம் என்ற பெயரில் ஒரு கோயிலைக் கட்டி அதில் ஒரு சிலையை வைத்து அதன்மேல் ஒரு துளையை உண்டாக்கி நீர் வரும்படி செய்து சாமி சிலை மீது விழும்படி ஆக்கினர். சாமி தலையிலிருந்து நீர் விழுகிறது என்று மக்களிடையே சொல்லி நம்ப வைத்தனர். பிறகொரு நாளில் அவர்கள் நந்தனின் நாட்டுக்குச் சமண முனிவர்களை ‘போலச்செய்து’ கொண்டு சென்றார்கள். இப்புதியவர்களை நந்தன் பார்க்க விரும்பினான். அவனிடம் கொண்டு செல்லப்பட்ட வேடதாரி பிராமணர்கள் முதலில் சில சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கூறினார்கள். தங்களை விவேகம் மிகுந்தவர்களாக அவன் எண்ண வேண்டுமென்பதே அவர்கள் ஸ்லோகம் சொன்னதன் நோக்கம்.

ஆனால், இவர்களின் பொய் வேடம் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த பௌத்த முனிவர்கள், மன்னனிடம் இவர்கள் துறவிகள் போல் வேடமிட்டு நாட்டுக்குடிகளை ஏய்க்க வந்தவர்கள் என்றனர். உடனே பௌத்த ஞானியாகிய அசுவகோசரை வரவழைத்து அவர்களை விசாரிக்க வைத்தான். விசாரணையில் அவர்களின் பொய் வேடம் புலப்படத் தொடங்கியது. அவர்கள் தங்களுடையதாகக் கூறும் தேசத்தைத் தெரிந்து வரும்படி ஒற்றர்களை அனுப்ப முற்பட்டார் நந்தன். ஒற்றர்கள் உண்மை அறிந்துவந்தால் தாங்கள் அதுவரையிலும் சொல்லிவந்த பொய்கள் பறையப்பட்டு விடும் என்று அஞ்சி அவர்கள் நந்தனைக் கொல்லத் திட்டமிட்டார்கள். நந்தனை நோக்கி “நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்பதற்கு இங்கேயே சான்றுகள் இருக்கின்றன” என்றார்கள்.

அதாவது, நாங்கள் பூர்வீகமாக வணங்கிவரும் சிவாலயம் இங்கிருக்கிறது, அந்த அளவுக்கு நாங்கள் பூர்வீகமானவர்கள் என்றனர். நந்தன் அவற்றை நேரில் பார்த்தறிய விரும்பினான். அதற்கு அவர்கள் நிபந்தனைகள் விதித்தனர். நீங்கள் மட்டும் வந்தால்தான் பார்க்க முடியும் என்றனர். தில்லை மரங்கள் அடர்ந்த காட்டில் மண்ணைத் தோண்டி அதன் மத்தியில் கல்லாலான தூண்கள் அமைத்துக் கட்டடம் போல செய்திருந்தனர். நந்தன் அதன் மத்தியில் காலை வைத்ததும் உள்ளே விழுந்தான்.

இப்படியாகப் பொறிவைத்து நந்தன் கொல்லப்பட்டான். ஊருக்குள் திரும்பி வந்த வேடதாரி பிராமணர்கள் நந்தனை சாமி உள்வாங்கிக்கொண்டது என்ற கதையைப் பரப்பினர். ஏற்கெனவே நந்தன் மீது பொறாமை கொண்டிருந்த சிற்றரசர்கள் துணையோடு நந்தனின் நாட்டைக் கைப்பற்றச் செய்தனர். இதுதான் அயோத்திதாசர் எழுதிய நந்தன் கதை. நந்தன் என்னும் பௌத்த அரசன் கொல்லப்பட்டான் என்பதோடு இந்தக் கதையை அயோத்திதாசர் நிறுத்தி விடவில்லை. மாறாக, நந்தன் என்னும் மன்னன் இருந்தான் என்பதும், அவன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்பதும் தெரியக்கூடாது என்பதற்காகச் சமூக நினைவில் அவனைப் பற்றி முற்றிலும் வேறு ஒரு புதிய கதையை (நந்தனார் கதை) உருவாக்கிவிட்டார்கள். மேலும், அப்புதிய கதையைக் கேள்வியில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதன்மீது புனிதத்தை ஏற்றி வெவ்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்பப் பரப்பினர். இவ்வாறு பின்னாட்களில் இப்புதிய கதை மட்டுமே மக்கள் நினைவில் நிலைத்துப் போனது என்பதையும் சொல்லியிருக்கிறார். நந்தன் வரலாற்றைச் சொல்லியதைக் காட்டிலும் நந்தனார் என்ற புதிய கதை ஏற்கப்பட்ட நுட்பத்தைச் சொல்லியதில்தான் அயோத்திதாசரின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.

சைவக் கதையாடலின் நந்தனார் சித்தரிப்பு பொய்யானது என்று கூறிய அவர் வேடம் தரித்துக்கொண்ட பொய் பிராமணர்களின் உண்மை நிலை அறியப்பட்டுவிடக்கூடாது என்பதால் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட நந்தன் என்னும் பௌத்த மன்னனின் வரலாற்றை மறைக்கப் பண்ணையடிமை நந்தனார் என்ற கதையாடலை உருவாக்கினார் என்ற காரணத்தை விரித்தார்.

பௌத்த வரலாற்றிற்கான உருவகமாய் நந்தன்

அயோத்திதாசரின் நந்தன் கதையிலும், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் கதையிலும் ஒரு கதைக்கு மற்றொரு கதை தலைகீழாக இருக்கிறது. ஒரு கதையில் அரசன்; மற்றொரு கதையில் அடிமை. அதாவது, முற்றிலும் நேரெதிர் நிலை. அரசன் என்பது உச்ச நிலை, அடிமை என்பது கடை நிலை. இந்த அளவிற்கான உச்சபட்ச எதிர்நிலையை ஏன் எடுக்க வேண்டும்? அதாவது, ஒரு கதையின் ஏற்கெனவே இருந்த நிலையின் தடயம் கூட இல்லாமல் மறைய வேண்டுமென்றால், அதற்கு நேரெதிரான உச்சநிலையை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இதில் செயல்பட்டிருக்கிறது.

அயோத்திதாசரைப் பொறுத்தவரையில் நந்தன் கதை அவரெழுதிய மற்றுமொரு வரலாறல்ல. அவர் கொண்டிருந்த இந்திய வரலாறு என்பதற்கான ஓர் உருவகம் போல் நந்தன் கதை அமைந்துவிட்டது. நந்தன் என்ற பெயருக்குப் பதில் பௌத்தம் என்று எழுதினால் அப்படியே பொருந்தக்கூடிய அளவிற்கு அந்த ஒப்புமை இருக்கிறது.

தொன்மையில் நந்தன் அரசனாக இருந்தான். அவன் நாட்டில் பௌத்த நெறி தழைத்தோங்கி இருந்தது. பிறகு, தந்திரமாகக் கொல்லப்பட்டு அவன் நாடும் நெறிகளும் வேச பிராமணர்களால் உள்வாங்கப்பட்டன. பிறகு, அவன் மன்னனாக இருந்தான் என்பது மறைக்கப்பட்டு அடிமையாக இருந்தவனென்று புனையப்பட்டான். அயோத்திதாசர் எழுதிய இந்த வரிசையை அப்படியே பௌத்த வரலாறு பற்றி எழுதிய வரிசைக்கும் பொருத்தலாம்.

நந்தன் தந்திரமாக வீழ்த்தப்பட்ட கதையைப் போலவே, பௌத்தமும் பூர்வ காலத்தில் மேலோங்கியிருந்து வைதீகத்தால் தந்திரமாக உள்வாங்கப்பட்டது என்ற வரலாற்றுப் பொருத்தம் கிடைக்கிறது. பௌத்த அடையாளங்கள் திரிக்கப்பட்டு இந்து அடையாளங்களாக்கப்பட்டது போல், நந்தன் வரலாறும் திரிக்கப்பட்டு அடிமையாக இருந்தவன் என்று ஆக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் பௌத்தமும் நந்தனும் ஒன்று மற்றொன்றிற்குக் குறியீடாக அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். பௌத்த வரலாறு, நந்தன் கதை என்கிற எதிர்மறை மறைந்து வரலாறு கதைக்குள் உருவகமாகவும், கதை வரலாற்றுக்குள் உள்ளுறையாகவும் ஊடாடுகிறது. கதைக்கும் வரலாற்றுக்குமான இடைவெளியே கூட இவ்விடத்தில் மங்கிப் போவதைப் பார்க்கிறோம்.

அயோத்திதாசரின் இப்பார்வை அவர்வழி வந்தவர்களால் ஏற்கப்பட்டிருந்தது. அயோத்திதாசர் மரணத்திற்குப் பின்னர் அவர் எழுத்துகளை நூல்களாக வெளியிட தொடங்கப்பட்ட சித்தார்த்தா புத்தகச் சாலை (சி.பு.சா) சார்பாக ‘நந்தன் சரித்திர தந்திரம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. ஆனால், அது எத்தனை பதிப்புகள் கண்டன, எந்த அளவிற்குச் சென்றடைந்தன என்பதை அறிய முடியவில்லை. நந்தன் மன்னன் என்ற தகவல் ஏதோவொரு வகையில் ஆங்காங்கு நினைவுகூரப்பட இந்நூல் காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

20.08.1939 தேதியிட்ட குடியரசு ஏட்டில் “ராமராஜ்ஜியம் எப்படி இருக்கும்?” என்ற தலைப்பில் பெரியார் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார். அதில் “தமிழ்நாட்டை ஏன் ஒரு தமிழ் மன்னன் அல்லது ஒரு தமிழன், திராவிடன், ஆட்சியின்பேரால் அழைக்கக்கூடாது என்று கேட்கின்றோம். இந்தத் தமிழ்நாட்டிற்கு ஓர் ஆட்சி வேண்டுமானால் ஒரு பழங்காலத்து மூவேந்தர்கள் ஆட்சியை ஸ்தாபிக்கப் பாடுபடுகிறோம் என்றோ அல்லது மூவேந்தர்களாலும் கைவிடும்படி செய்யப்பட்ட பிறகு, ஒரு நாயக்கர் ஆட்சி இருந்ததாகச் சொல்லப்படுவது உண்மைச் சரித்திரமானால் அந்த நாயக்கர் ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ அல்லது முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டதாகச் சொல்லப்படுவதில் நேர்மையாக, நீதியாக அரசாட்சி செய்த ஒரு முஸ்லிம் மன்னன் பெயரைச் சொல்லி அவன் ஆட்சியை ஸ்தாபிக்க ஆசைப்படுகிறோம் என்றோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தைச் சேர்ந்த நந்தன் முதலிய அரசர் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படும் சரித்திரம் உண்மையாய் இருக்குமானால் அந்த ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறோம் என்றோ சொல்லாமல், அவர்கள் பேரால் இந்த நாட்டை அழைக்காமல் பரத தேசமென்றும், ராமராஜ்ஜியம் என்றும், இந்தப் பார்ப்பனர் சொல்லுவதின் அர்த்தம் என்ன என்றும் அதைச் சில தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு பின்தாளம் போடும் இழிதன்மைக்குக் காரணம் என்னவென்றும் கேட்பதோடு இன்று நிறுத்திக் கொள்ளுகிறோம்” என்று எழுதியிருக்கிறார். நந்தன் மன்னன் என்பதை அவர் ஏற்றரா, இல்லையா என்பது இங்கு பிரச்சினையில்லை. வேறொரு பிரச்சினை பற்றி எழுதும்போது ஒரு தகவலாக இதைக் குறிப்பிட்டுச் செல்கிறார். அதாவது, நந்தன் மன்னன் என்பதை அவர் கேள்விப்பட்டிருக்கிறார். இதன்படி நந்தன் மன்னன் என்ற தகவல் 1939 வரையிலும் ஏதோவொருவகையில் ஊடாடியிருப்பதை அறிகிறோம்.

நந்தனார் கதை தங்களை இழிவுபடுத்துகிறது என்ற பார்வை தலித் குழுகளுக்கிடையே வெவ்வேறு வடிவங்களில் புழங்கியிருக்கிறது. இவ்விடத்தில் இரண்டு எதிர்ப்புகளைச் சுட்ட முடியும். நந்தனார் கதை திரைப்படமாக வந்தபோது கோலார் தங்கவயல் பகுதியில் எதிர்ப்பு உண்டானது. அதன் காரணமாக நந்தனார் படம் கடைசிவரை கேஜிஎப் எல்லைக்குள்ளே வராமல்போனது என்று கே.எஸ்.சீதாராமனின் ‘கோலார் தங்கவயல் வரலாறு’ நூல் கூறுகிறது. மேலும், கேஜிஎப்பிலிருந்து ஓர் ஆதிதிராவிடக் குழு சென்னைக்குப் போய் நந்தனாராக நடித்த தண்டபாணி தேசிகரைச் சந்தித்து முறையிட்டனர் என்கிறது அந்நூல். கோலார் தங்கவயலில் வெவ்வேறு கருத்து நிலை கொண்ட தலித் குழுக்கள் இருந்தன. இவற்றில் எந்தக் குழுவினர் இம்முயற்சியில் ஈடுபட்டனர் என்பதை அறிய முடியவில்லை. அநேகமாக வைணவ தலித்துகளாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இரண்டாவது குறிப்பு சிங்கப்பூரில் செயல்பட்டுவந்த ‘சிதம்பரம் தாலுக்கா மகாஜன சங்கம்’ என்ற அமைப்பின் கடிதம் மூலம் கிடைக்கிறது. சிதம்பரம் வட்டாரத்திலிருந்து சிங்கப்பூருக்குப் பிழைக்கச் சென்ற தலித்துகள் உருவாக்கியது இச்சங்கம். தங்கள் சொந்தக் கிராமங்களில் தலித் மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவுகிறவர்களாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர்களால் நடத்தப்பட்ட இச்சங்கம், நந்தனார் கதை தலித்துகளை மரியாதைக் குறைவாகப் பேசுவதால் தடை செய்யும் கோரிக்கையை எழுப்புமாறு தங்கள் தலைவர்களான எல்.இளையபெருமாள், தொண்டு வீ.வீராசாமி (இருவருமே அப்போது எம்.பிகளாக இருந்தனர்) ஆகியோருக்கு வேண்டிக்கொண்டு ஒரு கடிதத்தை எழுதியது.

10.01.1953 நாளிட்ட அக்கடிதத்தில் “கீழ்க்கண்ட செய்தியைத் தங்களின் இரு பேர்களுடைய கவனத்திற்கு அனுப்பி உள்ளோம். டெல்லி மக்கள் சபையில் எடுத்துரைப்பீர்கள் என்ற நம்பிக்கையில். பக்த நந்தனார், நவீன நந்தனார் போன்ற நாடகங்களில் நம் மக்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர். அது மட்டுமா? ரிக்கார்டுகள் மூலமாகவும் இழிவுபடுத்தப்படுகிறது. அடா பறையா என்ற ரிக்கார்டை போன்ற மற்றும் பல ரிக்கார்டுகள் நம் மக்களை இழிவுபடுத்தி வருவதால் அந்த ரிக்கார்டுகளை அழிப்பதற்கு மக்கள் சபையிலே நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். இதை நம் மக்கள் உங்களுக்கு அறிவிக்கும்படி எம்மைச் சொன்னார்கள். நீங்கள் கட்சிப் பேதத்தைக் கொண்டு கைவிடாதீர்கள். அபிப்பிராய பேதமிருக்கலாம். நீங்கள் ஒரே இலட்சியத்திற்காகப் பாடுபடுகிறீர்களென்பதை மறந்து விடாதீர்கள். சமூகத்திற்கு இழிவு தரும் பழக்கத்தை அழியுங்கள்” என்று சொல்லப் பட்டுள்ளது.

நந்தனார் கதையாடலைத் தடை செய்யக் கூறும் இக்கடிதம் கதை நடந்ததாகக் கருதப்படும் ‘புனிதத் தலமான’ சிதம்பரம் பகுதியிலிருந்து சென்று பணியாற்றியவர்கள் அவ்வூர் பெயரிலேயே அமைத்துக்கொண்ட சங்கம் மூலமாக எழுதியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தனார் கதையாடலை ஏற்பதா, மறுப்பதா என்ற விவாதத்திற்குள் இத்தகைய எதிர்ப்புகள் போகவில்லை. ஆனால், இத்தகைய எதிர்ப்புகள் கதையை நேரடியாக மறுக்கவில்லையே தவிர அக்கதையை நாடகமாகவோ பாடலாகவோ கையாளுவதிலிருந்தும், பார்ப்பதிலிருந்தும் இம்மக்களை விலக்கியிருக்கிறது. இது அயோத்திதாசரின் நந்தன் என்ற மாற்றுக் கதையாடல் காரணமாக நடந்தவை என்று சொல்ல முடியவில்லை. மாறாக, சமூக அரசியல் விழிப்புணர்வு மூலம் இயல்பாக நடந்திருக்கிறது. ஆனால், இப்போக்கின் தொடக்கம் அயோத்திதாசர்தான் என்று சொல்வதில் தவறில்லை.

இதற்குப் பிறகு பெரிய இடைவெளி வந்திருக்கிறது. 1993ஆம் ஆண்டு அறவுரை இதழில் ‘இல்லாத நந்தனுக்கு இருக்க ஒரு இடம்’ என்ற பொதுத்தலைப்பில் ‘நந்தன் கொலை – ஓர் ஆய்வு’ என்னும் தொடரை எழுதத் தொடங்கினார் அன்பு பொன்னோவியம். சில இதழ்களோடு நின்றுபோன அறவுரையில் மூன்று அத்தியாயங்கள் வரை இது வெளியானது.

அவர் எந்நோக்கில் எழுதப் போகிறார் என்பதை இம்மூன்றை வைத்து அறிய முடியவில்லை. ஆனால் “இல்லாத நந்தன்” என்று குறிப்பிடுவதன் மூலம் அவர் சொல்லவந்ததை ஓரளவு யூகிக்க முடிகிறது. மேலும் அவர் அயோத்திதாசரைப் படித்தவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் இருந்தாலும்கூட 1990களின் இறுதியில் அயோத்திதாசர் எழுத்துகள் நூல் தொகுதிகளாக வந்த பின்பு அவர் வாயிலாகவே நந்தன் மன்னன் என்ற நினைவு மீண்டும் எழுந்தது.

1999ஆம் ஆண்டு முதல் திராவிட இயக்கம் மற்றும் பெரியார் மீது தலித் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து ரவிக்குமார் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியபோது, அதன் மையவிசையாக அயோத்திதாசரைக் கொண்டார். ஆனால், அயோத்திதாசரை முன்கொண்டு திராவிட இயக்க விமர்சனத்தைக் கையெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், ரவிக்குமார் அதை மேற்கொண்டு எடுத்துச் செல்லவில்லை. மாறாக, தலித் வரலாறு என்கிற செயல்பாட்டுக்கு அழுத்தம் தந்தார். ‘மீளும் வரலாறு’, ‘வரலாற்றை நேர் செய்தல்’ போன்ற சொல்லாடல்கள், தலித் வரலாற்று மாதம் என்றெல்லாம் இது விரிந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏடான தாய்மண் இதழில் எழுதிவந்த ‘பெரியார் ஒரு மறுபரிசீலனை’ என்கிற தொடரைப் பாதியில் நிறுத்திக்கொண்ட ரவிக்குமார், ‘மீளும் வரலாறு’ எனும் தலைப்பில் ‘நந்தன் வரலாறு’ என்கிற தொடரை 2003ஆம் ஆண்டு வாக்கில் எழுத ஆரம்பித்தார். இது நந்தனை மன்னனாகக் காட்டி அயோத்திதாசர் எழுதியதை வலுப்படுத்தும் வகையில் எழுதப்பட்டத் தொடராகும். நந்தன் மன்னனாக இருந்தான் என்பதை வரலாற்று ரீதியாக நிறுவிக் காட்டும் வகையில் பெரும்பாலும் சோழர் கால வரலாற்றினூடாக நந்தன் வரலாற்றிற்கான பொருத்தப்பாட்டைத் தேட முற்பட்ட முன்னோடி நூல் இது. பிறகு, இத்தொடரின் வாதங்களை உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் நடத்திய அறக்கட்டளைச் சொற்பொழிவில் வழங்கிய ரவிக்குமார் உ.த.நி மூலமாகவே 2009ஆம் ஆண்டு ‘மீளும் வரலாறு, அறியப்படாத நந்தனின் கதை’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அறியப்படாத நந்தன் கதை என்பதைவிட அயோத்திதாசருக்குப் பின் அறியப்படாதிருந்த நந்தன் கதை என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். அதே தலைப்பில் முனைவர் பட்டத்தையும் மேற்கொண்டவர், ஆய்வேட்டின் பகுதிகளை மணற்கேணி ஏட்டில் கட்டுரைகளாகவும் வெளியிட்டார். எனவே நந்தன் மன்னன் என்ற இன்றைய சிந்தனைக்கு அயோத்திதாசரே காரணம் ஆனார். ‘மாமன்னன் நந்தன்’ என்ற இத்தொடரே அவர் வாசிப்பின் தொடர்பில் எழுந்ததாகும். அயோத்திதாசர் கூறும் வரலாற்றை எடுத்துக்கொண்டு சான்றுகளைத் தேடினால் அது பெரும் பிரமாண்டத்திற்குள் நம்மை இட்டுச் செல்கிறது.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!