ரத்தச்சுவை

கு.இலக்கியன்

ட்டுத்தாழ்வாரத்தில் பெய்திருந்த மழைநீர் சொட்டிக்கொண்டே இருந்தது. அது சிறுக வழிந்து ஒரு சொட்டாகச் சேகரமாகி ஒவ்வொன்றாக விழுகிறபோதும், தன் இமைகளை மூடி மூடித் திறந்துகொண்டிருந்தாள் பாக்கியம். மழை யாருக்குத்தான் பிடிக்காது. மழையை வருடி பார்ப்பது வாழ்நாள் சுகம். சட்டென்று எழுந்தவள், தாழ்வாரத்தில் வழிந்தொழுகுகிற மழைநீரைப் பிரியங்களோடு கையிலேந்தி அதன் சில்லிப்பை உள்ளங்கையிலிருந்து மெல்ல உள்ளத்திற்கு அனுப்பினாள். அப்போது அவள் கண்களில் வசீகர மின்னல்கள் பளிச்சிட, மழையின் குளிரில் ஈரமாய் அடர்ந்திருந்த சிறுசுகளின் மீது நீரைத் தெளித்தாள். குளிர் கண்ட அவைகள், மயிர்கால்கள் சிலிர்த்து ஓடின.

பத்துக்கு இருபது பக்கவாட்டு நீளத்தில், செங்குத்து மரங்கள் இரண்டு தாங்கி நிற்கும் அது ஓடால் வேய்ந்த மேட்டுக் கொட்டகை. பாக்கியம் துல்லியமாக எண்ணிச் சொல்வாள் “பன்னெண்டு பதுவுசு, பதினாறு ரவுசு, ஆறு சிறுசு, அதுல நாதாறி நாலு. ஆக மொத்தம் முப்பத்தியெட்டு”. காலையிலும் மாலையிலும் எண்ணியெண்ணித் திறப்பதும், அடைப்பதும் பாக்கியம்தான். பதுவுசு தாய் பன்றிகள். ரவுசு விடலை. அங்கும் இங்கும் ஓடிக் குதித்து பட்டியைத் திணறடிக்கும் நாலும்தாம் நாதாறி. திரண்ட மடியின் பின்னே கொனைந்தலையும் குட்டிகள் சிறுசு. பாக்கியத்தின் கணிப்பும் கவனிப்பும் இப்படித்தான்.

சாணப்பன் அவள் அப்பன். அமுசு அவள் ஆத்தா. பாக்கியத்திற்குப் பத்து வயதிருக்கும் போதே, விசக்கடிக்குப் பார்த்த வைத்தியம் ஒன்றும் பலிக்காமல் காடு சேர்ந்துவிட்டாள் அமுசு. அதன் பிறகு, அப்பனும் அவளும் என்றான வாழ்க்கையில் அவளுக்கு ஒரே ஆறுதல் இவைகள்தான். ‘சாணப்பன் ஒரு நாளும் அதுகள கவனிச்சதில்ல, அடச்சதில்லை. ஆனா, ஏவாரியைக் கூட்டிக்கிட்டு வந்து வெலப் பேசி முடிக்கமட்டும் முந்திக்கிட்டு நிக்கும், கறி ஆக்கி வச்சா குமிஞ்ச தல நிமிராம சாப்படும்‘ தன் அப்பனை திருந்தவே இல்லை என முணுமுணுத்த பாக்கியம், சிமெண்ட் உறை தொட்டிக்குள் காய், கனி கழிவுகளைக் கொட்ட, ரவுசுகளோட அந்த நாலும் துள்ளிக்கிட்டு ஓடிவந்தன. அவைகளின் எறப்புச் சத்தத்தையும், தள்ளுமுள்ளையும் தாளாத பாக்கியம் அதட்டியபடியே பட்டியிலிருந்து வெளிவந்தாள்.

வானம் இருட்டியிருந்தது. நேரமே விளக்கு வைத்துவிட்டப் பொழுதில் சாணப்பனைத் தேடிக்கொண்டு கொண்டிராசு வந்தார். கொண்டிராசு வரும்போதெல்லாம், சாமக்கோடங்கிக்கு மருளும் கைக்குழந்தையைப் போல அஞ்சி நடுங்குவாள் பாக்கியம். அவர் வந்தாலே பட்டியிலிருந்து ஒரு ரவுசை இழக்க வேண்டிவரும். கொண்டிராசு, கிள்ளிக்கொண்டார் வீட்டு வேலையாள். முதலாளிக்கு இளம் பன்றிக்கறி கேட்டு சாணப்பனைத் தேடிவருவார். போகும்போது ஒரு ரவுசையும், கூடவே சாணப்பனையும் கூட்டிக்கொண்டு போய்விடுவார். சாணப்பன், கிள்ளிக்கொண்டார் வீட்டுத் பண்ணைத்தோட்டத்தில் ரவுசைக் குளிப்பாட்டி, தீ மூட்டி, இளஞ்சூட்டில் மெல்ல வாட்டி, விரித்த வாழை இலையில் இரண்டாக வகுந்து வைத்தால், வெல்லக்கட்டிப்போல் வெறும் வாயாலே தின்னுத் தீர்த்துவிடலாம் போல இருக்கும். சுண்டக் காய்ச்சிய வெல்லப்பாகை துண்டுத் துண்டாக வெட்டி வைத்ததைப்போல, ரவுசை வெட்டிக்கொடுத்துவிட்டு, பதிலுக்கு ஒரு சாராயப் பாட்டிலோடு வந்து சாய்ந்துவிடும் சாணப்பன் பெருமைப் பேசி புலம்பத் தொடங்கிவிடுவார். “எங் கட்டக்கால் குட்டி, தங்கக் குட்டி, வெட்டி வச்சா… மகிழம்பூவா மணக்கும். அந்தச் சூரியன் என்னாடக் கலரு… என் கட்டக்கால் குட்டி அப்படிச் சொலிக்கும்“ என்றவன் உடைந்த குரலில் “ஆனா பாக்கியம், அது கொரவளையில கத்தி வச்சப்பதான் எனக்கு வலிச்சுச்சு” எனத் தூங்கும் வரைக்கும் இதே பேச்சாகப் புலம்பிக்கிடப்பார்.

தொழில் விசயமாக ஆறுமாதம் வெளியூரிலும், அடுத்த ஆறுமாதம் உள்ளூரிலும் இருக்கும் கிள்ளிக்கொண்டார் சொந்த ஊருக்கு வந்துட்டா அத்தனை சுகபோகத்தையும் அனுபவச்சிட்டுத்தான் புறப்படுவார். அவர் புறப்படும் வரை மாசத்துக்கு ஒரு ரவுசைக் கேட்டு ஆள் அனுப்பிவிடுவார். மறுக்க முடியாது. இதுக மேச்சலுக்கு இறங்கினா அவர் நிலத்தில்தான் மேயணும். பட்டில அடச்சி தீனிப்போட்டாலும் அவர் வீட்டில் மிஞ்சியதைத்தான் கொண்டுவந்து போடணும். பாக்கியத்தால் என்ன செய்ய முடியும். வெட்டுக்கட்டைக்கு வந்துவிட்டால் விறா விறான்னு கத்தி ஆகப்போறது ஒண்ணுமில்ல, என்ற வாழ்க்கைதான், சகித்துக்கொண்டாள் பாக்கியம். ‘வேர்வை நாசியத்த இந்தப் பன்றிகள்தான் தினந்தோறும் சேற்றில் கிடந்து புரண்டு வெக்கையிலிருந்து அதுகள காத்துக்கொள்ளும். இதுகளப்போலவே, நாமும் மானம், ரோசமற்று மலுங்கிக் கிடந்துதான் வாழ வேண்டும் போல’ என்று வெதும்பியபடியே பாக்கியம் அவைகளைப் பட்டியில் அடைத்தாள்.

மேட்டுக் கொட்டகையின் ஓரத்திலே இருக்கும் ஒரு கீற்றுக் கொட்டகையில்தான் இருந்தாள் பாக்கியம். காற்றுக்கும் மழைக்கும் என்று தன் காலத்துக்கும் இதுகளைப் பார்த்துக்கொண்டே கிடக்கிற வாழ்வு அவளுக்குப் பிடித்திருந்தது. குட்டிகளை ஈன்றுக்கிடக்கும் பதுவுசுகளைப் பார்க்கும் போதெல்லாம் தாய்மையின் பெரும் நதி கிளைத்து, அவளின் மார்புகளுக்கிடையில் பாய்வதாக எண்ணிக்கொள்வாள். படுத்துக் கிடந்த பதுவுசு ஒன்றின் சரிந்த மார்புக் காம்புகளில் சப்பிப் பிழைக்கும் குட்டிகளை வாரி அணைத்துக்கொள்ளும் பாக்கியத்திற்கு, அவ்வப்போது தன் ஆத்தாளின் நினைவுகளில் ஆழ்ந்து தழுதழுப்பதும் வழக்கம்தான். இவைகள்தான் எல்லாவற்றிற்கும் மருந்தாகி தேற்றும் சீவன்கள். கரை மோதித் திரும்பும் அலைகளென நினைவுகளில் மூழ்கித் திரும்பினாள் பாக்கியம்.

Illustration : jjb’s Hive

அன்று ஏனோ இரவு அவ்வளவு நீளமானதாகி விடிந்தது. இப்போதும்கூட மேட்டுக்கொட்டகையில் அவைகளின் உறுமல் சத்தமும் ரவுசுகளின் சேட்டைகளாலும்தான் கண் விழித்திருந்தாள். சாணப்பன் விடியும் முன்னமே எழுந்து வெட்டி சோலிக்கு குந்திக்கிடக்க நகராட்சி கக்கூஸ் கட்டைக்குப் போயிருப்பார். அதுகளை மேய்ச்சுலுக்கு விரட்டிவிட்டு, பட்டியை, தொட்டியை என்று சுத்தம் செய்து, சோறு பொங்கி முடிக்கவே மணி பத்துக்கு மேலாகிவிடும். அதுக்குப் பிறகுதான், எச்சம் மிச்சமான கஞ்சி வாங்கிச் சேர்க்க காய், கனி கழிவுகளைச் சேகரிக்கவென்று புறப்படுவாள் பாக்கியம். அப்படித்தான் அன்றும், காலை கிளம்பியவள் மாலை இருள் கவ்விய நேரத்தில் வீடு வந்தாள். அப்போது, பட்டிக்குத் திரும்பியிருந்தவைகளின் உறுமல் சத்தமும் மூச்சிறைக்கும் ஒலியும் வேறாகக் கேட்டது அவளுக்கு. நேராக ஓட்டுக் கொட்டகைக்கு ஓடியவளின் கண்களில் பதுவுசுதான் முதலில் பட்டது. கிட்டப்போய் பார்த்தாள். பதுவுசு, ரவுசு, சிறிது என்று அவைகளின் சேற்றுடம்பில் ரத்தம் கசிந்தபடியிருக்க, தொட்டியிலிருந்த தண்ணீரை வாரி இறைத்தாள். சேறு நீங்கிய அவைகளின் உடலில் சிறிதும் பெரிதுமான வெட்டுக்காயங்கள்.

கண்ணீர் சொறிய அவைகளை வருடிய பாக்கியத்தின் காதுகளில், கீற்றுக் கொட்டகையின் முன்பு யாரோ கத்துவது கேட்டது. “பன்னிங்கள கிழங்கு வயல்ல ஓட்டிவிட்டுட்டு நீயும் கொப்பனும் ஊரு மேயவாடி போனீங்க…, வந்துப்பாரு… செடிங்க கிழங்கு வைக்கிற நேரம், பாதி வயல நோண்டிப் போட்டுருச்சி சனியனுங்க… இன்னமே வயப்பக்கம் வந்துச்சு, ஒண்ணுக்கூட உசுரோட திரும்பாது.” எச்சரித்துவிட்டுப்போனார் மச்சு வீட்டுகாரர். பாக்கியத்திற்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை. மரவள்ளிக்கிழங்கு வயல்கள் இருப்பது அவளுக்குத் தெரியும்தான். ஆனால், அந்த வயல்களெல்லாம் கம்பி வேலிக்கட்டி அடைக்கப்பட்டிருந்ததால் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டாள். கண்ணீரினூடே காயம் பட்ட அத்தனைக்கும் எரி சாம்பலை எண்ணையில் குழைத்துப் பூசிவிட்டவள், இரவு பட்டியின் ஓரமாகவே படுத்துக்கொண்டாள்.

இது நடந்து ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டிருந்தது. சாணப்பனுக்கும் உடல்நிலை மோசமாகிவிட்டது. அவர் முன்புபோல வெளியில் எங்கும் போவதில்லை. கீற்றுக் கொட்டகையின் முன்பு அல்லது ஓட்டுத்தாழ்வாரத்தின் ஓரத்திலே படுக்கையாகிவிட்டார். அன்று வானம் மையிருட்டாகி இருந்தது. எந்த நேரத்திலும் மழை அடித்துப் பெய்யும் போலிருந்தது. சிறிசு, பெருசு என்று அவைகள் எல்லாவற்றையும் பட்டியில் அடைத்துவிட்டு, கொட்டகைக்கு வந்தாள் பாக்கியம். வாசலில் கொண்டிராசு நின்றுகொண்டிருந்தார். பக்கென்று ஆனது அவளுக்கு. “சாணப்பன் எங்க?” என்றவரிடம், “இந்தா வரச்சொல்றேன்” என்று படபடத்தாள். சாணப்பன் படுக்கையிலிருந்து எழுந்து வந்தவனிடம் “மொதலாளி கூட்டி வரச்சொன்னார்” என்றதும், ரவுசுக்காக பட்டிக்குப் போகத் திரும்பிய சாணப்பனை தடுத்து, “அது வேண்டாம், உன்ன மட்டும்தான் அழச்சுட்டு வரச்சொன்னார்” என்று சொல்ல, ஒன்றும் புரியாமலே கிள்ளிக்கொண்டார் பண்ணைத் தோட்டத்தில் நின்றார் சாணப்பன்.

இருட்டி இருந்த வானம் மின்னல், இடி எனத் தொடங்கிவிட்டது. தோட்டத்திற்கு வந்து வெகு நேரமாகியும் கிள்ளிக்கொண்டார் வரவில்லை. உடல் நலம் குன்றிப்போயிருந்த சாணப்பனால் நீண்ட நேரம் நிற்க முடியாமல், குட்டிகளை வகுந்து வைக்கும் அந்த சிமெண்ட் கட்டையில் படுக்க ஆயத்தமானார். அப்போது முதலாளி, கொண்டிராசுவின் பேச்சுக்குரல் கேட்க நிதானித்தார். “ஏலே சாணப்பா… என்னடே மேலுக்கு, சவத்துப்போயி கிடக்க?” கிள்ளிக்கொண்டாரின் குரல் அடைத்தது போல இருந்தது. “மேலுக்கு முடியல சாமி. என்னா தாக்கல்ன்னு சொன்னிங்கன்னா கேட்டுட்டுப் போவேன், மானம் மழ இருட்டா கிடக்கு, மவ தனியா இருக்கு.” “சாணப்பா சேதி ஒண்ணுமில்ல, ஒத்தையாக்கிடக்கிற உன் மவள போய் கூட்டிவந்து விட்டுட்டுப்போ…ராத்திரிக்கு இங்க இருந்துட்டு வரட்டும்“ என்று சொல்லிய கணம், ஆவேசம் கொண்ட சாணப்பன், அறையும் விதமாக கை ஓங்கிவிட்டார். சாணப்பனை கொண்டிராசு அதட்ட அமைதியானார்.

கிள்ளிக்கொண்டானுக்கு அவமானமாகிவிட, சாணப்பனை எட்டி உதைவிட்டான். நோய்மை தின்றிருந்த சாணப்பன் பலமற்றவனாய்த் தடுமாறி விழ அடுத்தகணம் மயங்கிப்போனார். கோபம்கொண்ட கிள்ளிக்கொண்டான் “ஏலே கொண்டி… அவள போயி கூட்டியாடா” என்று அனுப்பிவிட, அதிகார குரலுக்குப் பணிந்தவன் கீற்றுக் கொட்டகையில் நிற்க, இருட்டியிருந்த வானம் ஒன்றிரண்டாய் பெய்யத் தொடங்கிவிட்டது. “இடி மின்னலுக்கு அங்கும் இங்கும் மருண்டு கொண்டிருந்தவைகளின் உயிரொலிகளின் இடையே பாக்கியத்தை “ஏய்… உடனே என் பின்னால வா…, மெதலாளி கூப்ட்டாரு…” என்று அதட்ட, அவளோ “என் அப்பன் எங்க..? அப்பன் எங்க?” என்று கேட்டபடியே போனாள்.

மழையும் இறங்கிவிட்டது. கொண்டிராசு குடையோடு முன்னால் போக, நனைந்தும் நடுங்கியும் பின் தொடர்ந்தவளைப் பண்ணைத் தோட்டத்து வீட்டின் கொல்லை புறம் வழியாக உள்ளே அழைத்துப்போய் விட்டுவிட்டு வேகமாய் வெளிவந்துவிட்டான் கொண்டிராசு. தோட்டத்தில் மயங்கிக் கிடந்த சாணப்பனை காணவில்லை. மழையின் ஈரத்தில் மயக்கம் தெளிந்தவன் மேட்டுக் கொட்டகையில் மகளைத் தேடினார். இடிக்குப் பயந்து பட்டியில் அலைந்தவைகள் சாணப்பனைக் கண்டதும் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தன. சாணப்பனின் பின்னாலேயே ஒன்றின் பின் ஒன்றாக அவைகளும் அவரைத் தொடர்ந்தன. மகளைத் தேடி சாணப்பனும் அவரோடு அவைகளும் கிள்ளிக்கொண்டானின் பண்ணைத் தோட்டத்திற்குள் சென்றபோது, வீட்டிற்குள்ளிருந்து கிள்ளிக்கொண்டானின் பெரும் அலறல் சத்தம் கேட்டது. தாழிட்டிருந்த வீட்டிற்குள் போக முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான் கொண்டிராசு. இடிக்கும் மழைக்கும் பயந்த அவைகளின் உறுமல் சத்தத்தை மீறி கிள்ளிக்கொண்டானின் வீறிடல் வெளியே கேட்டு அடங்கியது.

அரை மணி நேரமிருக்கும், பாக்கியம் ரத்தச் சகதியாய் வெளியே வந்தாள். கொண்டிராசு அவளைப் பார்த்து நடுங்கியவன் உள்ளே ஓடி முதலாளியைப் பார்த்தான். கிள்ளிக்கொண்டானின் உடல் ரத்தத்தில் கிடந்தது. அருகில் போய் உற்றுப் பார்த்தான், உடல் முழுக்கக் கடித்துக் குதறருண்டு செத்துக் கிடந்தான். குரல்வளையிலிருந்து ரத்தம் பீறிட்டு வழிந்துகொண்டிருந்தது. விழிகள் மேல்நோக்கி நிலைகுத்திவிட்டன. பதறி, படபடத்து தோட்டத்திற்கு ஓடி வந்தான் கொண்டிராசு. வலுத்த மழையில் நாலாபுறமும் அவைகள் சிதறுண்டு அலைந்திருக்க, பாக்கியம் சாணப்பனை கைத்தாங்கலாக அழைத்துப் போய்க்கொண்டிருந்தாள். அன்றிரவு வெகு நேரம் அவைகளின் உறுமல் சத்தமும் மழையின் ஓசையும் கேட்டபடியே இருந்தது.

இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழைவானம் பளிச்சென்று விடிந்து, ஓட்டுத்தாழ்வாரத்தில் மழை சொட்டிக்கொண்டே இருந்தது. இரவு முழுக்க திசைக்கொன்றாய் அலைந்த பன்றிகள் பட்டியில் ஒவ்வொன்றாய் வந்து நின்றன. “தோட்டத்தில இருந்த கிள்ளிக்கொண்டானை ஊருக்குள் புகுந்த சிறுத்த கடிச்சு கொன்னுடுச்சாம்“ என்று கரையோரம் வந்துபோகிறவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இதைக் கேட்டபடி சாணப்பன் பட்டியில் அமர்ந்திருக்க, பாக்கியம், பதுவுசின் காலடியில் நடுங்கியபடி நின்ற சிறுசுசை தூக்கி மார்போடு அணைத்து முத்தமிட்டாள். அதுவரை சொட்டிக்கொண்டிருந்த மழை அப்போது முழுவதும் நின்றிருந்தது.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!