அப்பஞ்சதை

சங்கீத் குமார் ராஜீ

பொழுது சாய்ந்துவிட்டது. கூடுமானவரை விறுவிறுப்புடன் கால்களை வழக்கத்திற்கு மாறாக எடுத்து வைத்து நடந்த மாதேவி இருட்டுவதற்குள்ளாகவே சேர்ந்துவிடலாம் என்றுதான் புறப்பட்டாள். ஊரைச் சுற்றிலும் கருவேலம் மரங்கள் அகன்று நிற்கும். கிழக்குத் திசையில் வந்தால் மண் பாதையில் இறங்கி எளிதில் ஊரைச் சேர்ந்துவிட முடியும். அதே மேற்கிலிருந்து வருபவர்களுக்கு அந்த வசதியும் இல்லை. ஊரின் பின்புறம் கருவேலம் மரங்களுக்கு அப்பால் இருக்கும் வரப்பின் வழியாக நடந்துவர வேண்டியதாக இருக்கும். அங்கிருந்த மாட்டு வண்டிப் பாதையை அந்த நிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர். தற்போது அதையும் முற்களால் அடைக்கத் துவங்கியிருந்தனர். எதையும் பொருட்படுத்தாமல் ஒதுக்கிவிட்டு எப்போதும் போல செல்பவர்களும் உண்டு.

அவளுக்கு மாற்றுப் பாதை குறித்த எண்ணமே வரவில்லை. அவள் வரப்பில் இறங்கி நடக்கத் துவங்கினாள். மிக துரிதமாக ஊரைச் சேர்ந்துவிட வேண்டும் என்ற நோக்கிலேயே அவளின் கால்கள் வேகம் குறையாமல் நடந்தன. கால்களில் மாட்டியிருந்த வார் செருப்பு குதிகாலில் பட்டு எழுப்பிய ஒலியுடன் புற்களில் உரசும் ஒலியும் இரண்டுற கலந்து பூச்சிகளின் சப்தத்தை அமைதியாக்கின. முள் மரங்களுக்கு மத்தியில் நடந்து வரும்போது நீட்டியிருக்கும் முள் கிளைகளை ஒதுக்கவும், கால் செருப்பில் குத்திய ஓரிரு முற்களைப் பிடுங்கவும் அவளின் வேகம் குறைந்ததே ஒழிய மற்றபடி எதற்காகவும் குறையவில்லை.

கிடுகிடுவென ஒரே மூச்சாக அன்றிரவு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். சிவமணி இருந்த பழையதை சாப்பிட்ட பின் நாளை மண்டபத்திற்கு வேலைக்குச் செல்லும் யோசனையில் படுக்கையில் கிடந்தாள். யாரோ வந்திருப்பதைச் சுதாரித்தவள், “யாருடி மோ” என்று குரல் எழுப்பினாள். மாதேவி வந்ததை அறிந்த உடனே எழுந்தோடி சொம்பில் தண்ணீரை மொண்டு “வா சாமி” என்று கையில் கொடுத்தாள். கை கால்களைக் கழுவி நீரை உதறிக்கொண்டவள், சொம்பை வாங்கி தாகம் தீர குடித்தாள். பின் ஆசுவாசமாக வீட்டினுள் நுழைந்து கட்டிலில் அமர்ந்தாள். அவள் இளைப்பாறுவதற்கு ஏற்றார் போல கட்டிலில் அமர்ந்தபடியே கால்களை முன்னாள் நீட்டிக்கொண்டாள். சிவமணி முக்காலியை எடுத்துக் கட்டிலின் அருகில் போட்டு அமர்ந்துகொண்டாள். மீதம் இருந்த கொஞ்சம் பழயதை மாதேவிக்குச் சாப்பிட ஊற்றினாள். எந்தப் பாதையில் வந்தாய், எப்போது புறப்பட்டாய் என்ற விசாரிப்புக்கு மேல் சிவமணி எதுவும் பேசவில்லை. இருவருக்கும் இடையில் அதிக நேரம் அமைதியே நிலவியது.

அவள் மகனையும் கணவனையும் அழைத்து வராதது சிவமணியின் இரவு தூக்கத்தை, கூரை மட்டையைக் கரையான்கள் மேய்வதைப் போல சிறுகச் சிறுக விழுங்கிவிட்டது. புகையை நேர் செங்குத்தாகப் பரப்பிக்கொண்டு காற்றின் ஊதலுக்கேற்ப கூரைக்குள் அப்படியும் இப்படியுமாக அலைமோதும் வெளிச்சத்தில் என்றுமில்லால் நேரம் கடந்து எரிந்துகொண்டிருந்த விளக்கு, மொத்த சீமெண்ணெயையும் உரிஞ்சிவிட்டதைக் கூட அவள் அறிந்திருக்கவில்லை. இரவு முழுவதும் புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். சிந்தையிலிருந்து விலகாமல் எண்ணங்கள் மனதுக்குள் ஊடுருவிக்கொண்டிருந்ததால் எவ்வளவு முயன்றும் அவளால் உறங்க முடியவில்லை. முக்காலியில் ஒரு காலை நீட்டி மறுகாலை மடக்கிப் பிடித்துக்கொண்டு அவள் மிச்சம் வைத்திருந்த கொஞ்சம் பழயதையும் மகளுக்கு ஊற்றிக்கொண்டிருக்கும்போதே “ஏம்ம சாமி… ஏதும் சச்சரவா” என்ற வார்த்தை அவளுக்குத் தொண்டை வரை வந்துவிட்டது. ஆனாலும் கட்டுப்படுத்திக்கொண்டவளாக அவளை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. மாதேவி சாப்பிட்ட கையுடன் புடவையைக் கூட மாற்றிக்கொள்ளாமல் மிக இயல்பாக பக்கத்துக் குடிசைகளை நோக்கி நடந்தாள். அவள் கால் கொலுசுகளின் சத்தம் இலகுவாக குறையும்போது அதை சிவமணியால் சுதாரிக்க முடிந்தது. அக்கம்பக்கத்தில் பேசிவிட்டு எப்போது வந்து படுத்தாள் என்பதையும் அவள் உணர்ந்தவளாய் இல்லை. காலையில் எழுந்தவள் வாசல் தெளித்து, உலை வைத்துச் சோறாக்கி முடித்தாள். அதே முனைப்புடன் கட்டுத் தரையைக் கூட்டி, செவலை ஆடு வீரம்மாளை அருகில் இருக்கும் முள் மரத்தடியில் கட்டிவிட்டு பக்கத்துக் குடிசைகளுக்கும் சென்று வந்துவிட்டாள். புறப்படும் முன் மாதேவியை உலுக்கி “யெ பிள்ள.. இந்த.. இங்கயே இரு சாமி. பொழுது இறங்ககுள்ள நா வாரேன்.. மண்டபத்தில கொஞ்ச நேர வேல. ஆனதும் ஓடியாந்துறே” என்று சொல்லிவிட்டு அவதி கொண்டவளாக முடியைப் பின்பக்கத்தில் சுத்திக்கொண்டு புறப்பட்டாள். புடவையைச் சரி செய்து கட்டியபடி வாசலில் இருந்து களிமண் பாதையை அடையும்போது வீரம்மாள் தன் கழுத்துக்கயிற்றைத் தொண்டை இறுக இழுத்துக்கொண்டு மூக்குச்சதை சுருங்கி விரிய நாவின் அடிப்பகுதியிலிருந்து அழுத்தமாகக் குரல் எழுப்பிக் கத்தியது. அவள் குடிசையின் அருகில் இருந்த மரங்களின் மறைவில் அவசரமாக நடந்து செல்லும்போதும் அதன் சத்தம் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஊர்ப் பெண்களை அடையும் வரை அவளுக்குள்ளாகவே பேசிக்கொள்வது போல புலம்பினாள். அவள் நடையில் கூடியிருந்த வேகம் இன்னமும் அதிகமானது. ஒரு கையில் நரம்பு பையைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையைக் காற்றில் வீசிக்கொண்டு அவளாக “அனாமுத்தா விட்டுட்டு நாம இங்க வந்தா அந்தப் பையன் அங்க என்ன.. எங்கன தடுமாருதோ தெரிலே. சோறு உண்டான என்னவோ… ஆளக் கூட்டியர முடில… நம்ம பொழப்பப்படி இருக்கப்போ பகலில்ல வந்து போவனு. என்ன பிள்ளயோ.. என்னமோ சொல்ல முடில.. புத்தி மலுங்குது. யென் வகித்து வலி என்னக்கி அடங்குமோ” என்று பேசிக்கொண்டே ஊர்ப் பெண்களைச் சென்றடைந்தாள். காந்திமாவும் செல்வியும் ஊர் எல்லையில் சிவமணிக்காகக் காத்திருந்தார்கள்.

சிவமணியைப் பார்த்த நொடியில் அவசரத்தைக் கூட்டும் வகையில் “யேண்டியே, மவ வந்துருக்குமாட்டுமிருக்கு… சோறாக்கிட்டு வந்தெயா.. என்ன செஞ்சவ.. வெடு வெடுனு போலம்பிட்டு வாரவோ!” என்று கேட்டபடி தன் வயதையொத்த செல்வி தரையில் இருந்த பையைக் கையில் எடுத்தவள் இடத்தைவிட்டுப் புறப்படத் தயாரானாள்.

அதே நொடியில் “இராவுல ஊட்டுக்கு வந்துச்சிக்கா” என்று காந்திம்மாவும் சிவமணியைப் பார்த்துப் பேசினாள்.

“ஆமாம்மோ.. வந்திருக்குறா. செஞ்சிட்டுதா வந்தே..” இருவருக்கும் சேர்த்து ஒரே பதிலைத் தந்தாள். அவளுக்குப் பதில் சொல்வதில் சட்டென்று தடுமாற்றம் உண்டானது.

காந்திமாவின் வீட்டிற்கு வந்ததாகச் சொன்னதை நினைத்துக்கொண்டவள் அவளின் கண்களைப் பார்த்து “ஏதும் மூச்சு வுட்டாளா” என்று கேட்டாள்.

“பாத்துட்டு போலாமின்னு வந்திருக்கறங் றா. அப்பிடி ஏதும் இருந்தாலும் என்னுட்ட சொல்லுமா அந்தப் பிள்ள…” என்று காந்திம்மாள் பதில் சொன்னாள்.

“பிருசனப் பத்தி வாயெடுத்திச்சா” மேலும் சிவமணியின் கேள்விகள் நீண்டன. பேச்சோடு மூவரும் மிதமான வேகத்தில் நடந்துகொண்டிருந்தார்கள்.

“எங்க ஒண்டியுமா வந்தேன்னேன்.. ஆமானு ஒரே சொல்லுதா, மேல எதுவும் வார்த்த வரல” பிறகு காலையிலேயே வெயிலின் காந்தலைப் பற்றிப் பேசியவள் மீண்டும் தன் கணவர் நகைத்ததைப் பற்றி விளக்கினாள் காந்திம்மாள்.

“யெ ஊட்டாளு சும்மாயிருக்காமா.. க்கா”

“ஏன்டி.. உங்கண்ணே ஊட்டுல.. வயித்துக்குக் கூட ஒண்ணுமில்லயாட்ட இருக்கே. ஒரே ஆளு ஒத்தாச இல்லாம ஊழியம் செய்யிறவளாட்டம்”

“பிள்ளய பாருடியோ.. என்னடி இப்பிடி ஊட்டமில்ல ஒன்னுமில்ல. உங்களுக்குப் பிள்ளையக் குடுத்தோம் பாருடி.. அப்டின்னதுக்கு நானெல்லாம் நல்லாதா இருக்குறன்னா. எனக்கென்ன கொற, ஆள் மேல ஆள் போட்டு வேல செஞ்சிட்டு.. ராணியாட்ட” என்று மாதேவி தன் கணவரிடம் கூறிய பதிலைச் சொல்லி லேசாகச் சிரித்தாள் காந்திம்மா. மாதேவியை விட சில வருடங்கள் மூத்தவளாக இருந்தாலும் இருவரும் நல்ல பழக்கம்.

இப்படிப் பேசிகொண்டே சாலையின் ஓரத்தில் இருக்கும் புற்களில் உருவாயிருந்த தரையில் நடந்து சென்றனர். அவர்கள் சென்றடைய வேண்டிய இடம் வந்துவிட்டது. மாதேவியிடம் நாளை காலைதான் வருவேன் என்பதை அவள் சொல்லவில்லை. முடிந்தவரை வந்து கொஞ்சம் சோற்றைக் கொடுத்துவிட்டுப் பிள்ளையைப் பார்த்துப் போகலாம் என்ற நினைப்பிலேயே புறப்பட்டுவிட்டாள்.

ஆனால் இரவே அக்கம்பக்கத்து வீடுகளில் பேசும்போது நாளை அபிராமி மண்டபத்தில் கல்யாண வேலைக்கு அழைத்திருக்கும் செய்தி மாதேவிக்குக் கிடைத்துவிட்டது. அந்த இடத்தில் இதற்கு முன்பு தண்ணீர்த் தொட்டி மட்டுமே இருந்தது. அது வெவ்வேறு ஊரிலிருந்து நீண்டு வரும் நான்கு சாலைகளை இணைக்கும் இடம். சந்தைக்குச் செல்லும் பிரதான வழியும் கூட. அதிலிருந்து நடந்தால் சிறிதுநேரத்தில் பட்டினத்தை அடைந்துவிடலாம். கால்நடையாகவும் சைக்கிளிலும் எத்தனையோ முறை அந்த வழியில் அப்பனுடன் சென்று வந்ததுண்டு. ஆடு, மாடுகளை ஓட்டி வந்ததுண்டு. அதைச் சொல்லும்போது எப்போதோ பார்த்த இடத்தைப் போல அவளால் உணர முடிந்தது. அவளின் கற்பனைக்கு அவற்றைக் கொண்டுவர முயலும்போது தந்தையின் உருவம் வந்துபோனது. அதுவும் அந்தத் தொட்டி மட்டுமே அவளின் நினைவுக்கு வந்தது. அது குடிநீர்த் தொட்டி. ‘இந்திரா காந்தி அம்மையார் தலைமையில் ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் கட்டப்பட்டது’ எனப் பொறிக்கப்பட்டிருக்கும். சந்தைக்குக் கொண்டுவரும் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் காட்டும் வழக்கம் இருந்ததால் அதன் அருகில் அடிக்கடி ஆட்கள் சண்டையிட்டுக்கொள்வார்கள். ஆனால், எல்லோரும் அங்கு ஆடு மாடுகளைப் பிடித்துச் செல்ல மாட்டார்கள். அதனருகில் மண்டபம் உருவாகியிருக்கும் தோற்றம் அவளின் கற்பனைக்கு எட்டாத உருவமாக வந்துபோனது. ஏனென்றால் பக்கத்து வீட்டு சொட்டுக் கிழவி விளக்கிச் சொன்ன விதம் அப்படி.

”ரெண்டடுக்கு கட்டடம்மா. ஆடம்பரமாம்… அப்படியாம். வேலைக்கி கூப்டுறவன் சொல்றான் அண்ணாந்து பாக்கணுமின்னே கட்டுனதாம். அப்படி என்ன சமாச்சாரம்னு அவங்கிட்ட கேக்றன், அதெல்லாம் அங்க கல்யாணம் கட்டுறவங்களுக்குச் சொல்ல வேண்டிது… அப்பிடிங்குறான். தண்ணித் தொட்டி கட்டி ஒருத்தனுத ஒருத்தன் நீங்களே மோந்துகிட்டீங்க… இதையும் கட்டி மோந்துகோங்க. யாரையு அண்டாதீங்கன்னன் அவன. உர்ருனு பாக்குறான். கொழுப்பெடுத்த மொண்ணையனுக்கு அப்படிதா பதில் சொல்லனுமுங்குறன். அப்பே சம்பளமென்ன ஒருபொழுதுக்கு ஆயிரம் வரும்மாங்கறன்… வரும், வாங்கி சுறுக்குல சொருகிட்டு போவங்றான். உலகத்துல இல்லாத மண்டபங்கற… இது கூட இல்லாமே சும்மா வந்து செஞ்சித் தருவாங்களா கேக்கறேன், அதுக்கும் எதுவு பேசுவனாங்கறா. அப்றோமா உங்கம்மா, அவே செல்வியும் நின்னாளுங்க, போயி பேசிருப்பானாட்டம் இருக்குது. அதா போறாங்க” என்றதும் மாதேவியின் பற்களைப் போதுமான அளவிற்கு மேல் காட்டாத உதடுகள், கண்கள், கன்னங்கள், நெற்றி என மொத்த முகமும் ஒத்துழைத்து அவளையறியாமல் எதார்த்தமான ரசனைக்கு உட்பட்டு, எல்லையற்ற புன்னகையோடு எப்போதும் போல கிழவியின் பேச்சை ரசித்து கவனித்தாள். சொட்டுக் கிழவி பேச்சில் வசியம் செய்துவிடுவாள். அப்படிப்பட்ட நகைப்புத் திறனுடன் கூடிய ஜோடிகையான பேச்சுத் தன்மை அவளிடம் இருந்தது. கிழவி மீது மாதேவிக்கு அளவுகடந்த அன்பு. சிவமணிக்குப் பிரசவம் பார்த்தது கிழவிதான். மாதேவி பிறந்த நாள் முதல் அவளுக்கு நல்லது கேட்டதிலிருந்து எந்த புத்திமதியும் அவளின் தந்தை கிழவியிடம்தான் கேட்பார். “அக்காதா கூட பிறந்த பொறப்பா உனக்கு முதல் சங்கட பால் ஊத்துச்சி” என்ற சொன்ன நினைவுகள் அவளுக்கு இருந்தது. அந்த சந்தோசம் மிகுந்த பிணைப்பில் கேட்டுக்கொண்டிருந்த மாதேவியிடம் கிழவி தொடர்ந்து பேசினாள்.

“ரண்டு நா கணக்காம். ஆளுக்கு முன்னூறு பேசி இருக்குங்களா. ராவுக்கு அங்கேயேதா படுக்க. ஊட்ட ரெண்டு நா எட்டிப் பாக்க முடியாது. துணிஞ்சி போவ எனக்கி தெம்பில்ல” என்று இருவரும் பேசி முடிக்கும்போது நடுசாமம் இருக்கும். அதன் பின் வந்து படுக்கை விரிப்பில் தாயுடன் படுத்துக்கொண்டவள், காலையில் சிவமணி புறப்பட்ட பின்பே எழுந்தாள்.

மாதேவி காலையிலிருந்தே வீட்டில் தனியாகப் பொழுதைக் கழிக்க வேண்டியிருந்தது. தகப்பனின் நினைவுகள் மனதில் வந்து போயின. அதிகாலையில் கோழிகள் கூவ தொண்டியப்பன் தோள் மீது ஏறிக்கொண்டு சந்தைக்குச் சென்று திரும்புவது, இரவில் மடியில் படுக்க வைத்து சோறு ஊட்டுவது வரை வந்து போயின. இப்படி அவள் நினைவுகள் முழுவதும் எந்த வேலையிலும் தன்னைச் செலுத்திக்கொள்ள முடியாமல் இரண்டு மூன்று நாட்களாக அப்பனைப் பற்றிய எண்ணமே சிதறடித்தது. இப்போது ஒரே மூச்சாக வீட்டிற்கு வந்ததும் அவரின் நினைவே, அவளின் ஞாபகங்களுக்குள் ஆழமாக நுழைந்தது.

தொண்டியப்பனுக்கு மாட்டு வியாபாரம்தான் பிழைப்பு. அவரின் தந்தை காலத்தில் தோல் வியாபாரமும், கறி அறுப்பும்தான் முதன்மையாக இருந்தது. அதன் பின் தொண்டியப்பன் அந்தப் பழக்கத்தின் மூலம் எருது வியாபாரம், கறி அறுப்பு இப்படி தனக்கு உகந்த வேலையைச் செய்தார். தொண்டியப்பனிடம் கறி வாங்குவதற்கென்றே ஆட்கள் கூடி நிற்பார்கள். அவர் ரொம்பவும் இலகுவான ஆளாகத்தான் நடந்துகொள்வார். சக்கிலிய வசிப்பின் எல்லையில் கறி போடுவது அவரின் வாடிக்கை. முன்கூட்டியே சொல்லி வைத்தவர்களுக்குக் கறி கொடுத்துவிடுவார். பின் நாளில் கூட பணம் வாங்கிக்கொள்வார். ஊரில் ஆளுக்கு ஒரு கூரோ, இரண்டு கூரோ வாங்கிப் போவார்கள். மாதேவி அருகில் அமர்ந்துகொண்டு ஒவ்வொரு கூறுக்கும் கொஞ்சம் கொழுப்பையும் குடலையும் எடுத்துப் போடுவாள். ஒரு துண்டு சேர்த்துப் போட்டுவிட்டால் கறி போடும் இடத்தில் சலசலப்பு வந்துவிடும்.

தொண்டியப்பன் ஆள் நான்கடி உயரம் இருப்பார். அவ்வளவாக பருமன் இல்லாத உடல். மாநிறமான இறுக்கமான உடல்வாகு. சுருட்டை முடி. முழுமையாக அல்லாமல் சிறிதளவு மட்டும் மேல் அடுக்கு பற்களின் ஈறுகளுக்குக் கீழ் படிந்திருக்கும் கரை அம்முகத்தை அழகாக காட்டும். நெற்றியில் இரண்டு நரம்புகள் புடைத்துக்கொண்டு தெரியும். அதுவும் அவருக்கே இருந்த தனி அடையாளம். அவரிடம் இருந்த இரண்டு பழக்கங்கள் அடிக்கடி பீடி பற்றவைப்பது, வேப்பஞ்சாரயம் குடிப்பது. அவருக்கு ஜோடியாக குப்பனும் நடேசனும் கூடவே இருப்பார்கள். மூவரும் எந்தப் பிழைப்புக்குப் போனாலும் பங்கிட்டுப் பிரித்துக்கொள்வார்கள். இந்தச் சுத்துப் பகுதிகளில் இம்மூவரும் போகாத ஊரில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெளி பகுதிகளில் பலரும் இவர்களைப் பரவலாக அறிந்திருந்தார்கள்.

மாதேவியை அசலூருக்கு மணம் முடித்து அனுப்பிய பின்பு, ஒருமுறை கூட அவளைப் பார்க்க சிவமணி சென்றதில்லை. பேரன் பிறந்தபோது கூட ஆஸ்பித்திரியில் வைத்துப் பார்த்துவிட்டு பின் வீட்டுக்கு அழைத்துவந்து சில நாட்கள் வைத்திருந்து அனுப்பிவிட்டாள். அவ்வளவே. அவளுக்கு அவள் இருப்புண்டு என்றே இருந்துகொண்டாள். தொண்டியப்பன் மாதேவிக்குக் கல்யாணம் முடிந்த இரண்டு வாரங்களில் இறந்து போனார். அந்த நேரத்தில் அவரின் உடல் அவ்வளவு சொகுசாக அவரை வைத்திருக்கவில்லை. அவர் ஆண்டையிடம் இருந்து வெளியேறிய பின்பு சாலையில் தார் போடும் வேலைகளுக்குச் சென்று வருவதுண்டு. அதே நேரங்களில் கிழங்கு மில்லுகளுக்கும், சோளம் பிரிக்கும் குடோன்களுக்கும் வேலைக்குச் சென்றதுண்டு. சீசனுக்கு ஊரிலிருந்து இடைத்தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுவார். புகை மண்டி நெஞ்சை உருக்கிவிடுகிற வேலை அவையெல்லாம். ஓடி ஓடி புகையிலும் புழுதியிலும் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஊரில் பலரும் அதே வேலையைச் செய்துவந்தவர்கள்தான். அப்படித்தான் இரண்டு மூன்று பேர் மூச்சு வாங்க முடியாமல் உயிரை விட்டனர். ஜனம் பலவும் பயந்தது. அவருக்கு நெஞ்சுப் பகுதியில் கடுமையான எரிச்சலும் வறட்டு இருமலும் இருந்தது. அதை அவர் பொருட்படுத்தியதில்லை. அப்போதைக்கு தொண்டியப்பன் தப்பினாலும், அவருடைய பீடி பழக்கம் கடைசி நேரங்களில் உடலை உறிஞ்சிவிட்டது. இருமலும் மூச்சுத் திணறலுமாக அவதிப்பட்டார். வயதும் அறுபதை நெருங்கியிருந்தது. இரண்டு மாதங்கள் தர்மாஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் பார்த்தாள் சிவமணி. எழுந்து நிற்கவே சிரமப்பட்டார். அவருக்கென்று சொத்து பத்து எதுவும் இல்லை. சிவமணியை அழைத்துவந்து குடும்பம் நடத்தத் தொடங்கிய நாளிலிருந்து கடுமையாக உழைத்தவர், அவர்கள் இருவரின் சேகரிப்பு அத்தனையையும் பல தொழில்களில் போட்டுப் பார்த்தார்.

ஒருகட்டத்திற்கு ஊரே சொந்தமாக சேமிப்பு வைத்து நிலம், நகை எனச் சேர்க்கத் துவங்கியிருந்தார்கள். அப்படித்தான் இம்மண்ணில் உழைத்து சேமிப்பு வைத்தனர். “உழச்சி என்ன புரியோஜனம், கடைசியில எப்பிடி கடக்கது” என்று வந்து பார்த்த பலரும் பேசிவிட்டுச் சென்றனர். அந்த நேரத்தில் உயிராக இருந்த மகளைப் பற்றிதான் அவருடைய பேச்சு முழுவதும் இருந்தது. “எம் பிள்ளைக்கு ஒரு கல்யாணம் கட்டிக் குடுத்துப் பாக்க முடியாதவனா போயி சேரப் போறனே” என்று ஆஸ்பத்திரியில் வைத்தே அழுது புலம்பினார்.

ஊர்க்காரர்கள் வேலை செய்யும் பழக்கம் இருந்ததால் ஒருசில நேரங்களில் தன் தந்தை பண்ணை ஊழியம் செய்த நிலத்திற்கு சென்றுவந்திருப்பதாகச் சொல்வார். அதன் பின் அதிலிருந்து முழுமையாக விலகிக்கொண்டார். ஒருகட்டத்திற்கு மேல் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்க வேண்டுமென்று கூட அவருக்குத் தோன்றியதில்லை. அவர்களாகக் கூலிக்கு அழைத்தாலும் போக மாட்டார். இறுதியாக மாட்டு வியாபாரமே கதி என்று ஆகிவிட்டார். வியாபாரத்தில் அசலூர்க்காரர்கள் வம்புவைத்துக் கொண்டாலும் எதையும் அவர் பொருட்படுத்தியதில்லை. சிறுவயது போலவே பெரிய பொம்பளையான பின்னும் மாதேவியைப் பல இடங்களுக்குக் கூடவே அழைத்துச் செல்வார். கல்யாணமான இரண்டு ஆண்டுகளில் பிறந்த ஆண் குழந்தை இறந்து போனது. அதன் பின் ஐந்து ஆண்டுகள் குழந்தையில்லாத கவலையில் நொந்துகொண்டிருந்தார்கள். அந்தத் தவிப்பில் கருவானவள் மாதேவி. அவளை மீறி மீண்டும் குழந்தை தங்கவில்லை. சிவமணி பிள்ளையை வளர்ப்பதில் கண்டிப்பாக இருந்தாள். எங்கும் ஆளில்லாமல் அனுப்ப மாட்டாள். ஊர்ப் பெண்களோடுதான் காட்டுப் பக்கம் போகச் சொல்லுவாள். இரவு வேளையில் வாசலில் படுக்க வைக்க மாட்டாள். பேய் பிசாசு பிடிக்கும் என்று வேப்பிலை வைத்து வெளியில் அனுப்புவாள். பள்ளிக்கூடம் போகும்போது தொண்டியப்பனை “சூரகாத்து சொலட்டிடும், நாயீ பாஞ்சிரும்… எட்டிப் போயிட்டுப் பிள்ளகள்ட்ட விட்டுடு வா..” என்று நச்சரிப்பாள். ஆனால், தொண்டியப்பன் அதையெல்லாம் பெரிதாக நினைக்கவில்லை. அவருக்கு இருக்கும் ஒரு பிள்ளக்கி எல்லாமும், தான் அறிந்த அத்தனையும் தெரிய வேண்டுமென எண்ணினார். எங்கு சென்றாலும் ஒருமுறைக்கு இரண்டுமுறை “வரியா சாமி” என்று கேட்பார். மாதேவி மறுத்தால் விட்டுச் செல்வார். இல்லையென்றால் சிவமணியிடம் சண்டையிட்டு அழைத்துச் சென்றுவிடுவார். மாட்டுச் சந்தைக்குக் காலையில் சென்றுவருவது மாதேவிக்கு வாடிக்கையாக இருந்தது.

தொண்டியப்பன் மாடுகள் விலை குறித்து எப்படிப் பேசுகிறார், என்ன விலைக்கு மாடுகள் போகின்றன என்பதையெல்லாம் கூட அவள் பார்த்துத் தெரிந்துகொண்டாள். ஆடு மாடுகளுக்கு அவள் ஒரே ஆளாகவே, யார் உதவியின்றியும் அண்ணங்கால் போட்டுவிடுவாள். சில நாட்களுக்குப் பின் கன்றுக்குட்டிகளுக்கு மூக்கு குத்த கூட அவள் கற்றுக்கொண்டாள். மற்றவர்களுக்கும் தொண்டியப்பனுக்கும் வியாபாரிகள் சொல்லும் விலை மாறுபட்டிருக்கும். அதையும் கூட அவளால் அறிய முடிந்தது. அப்பன் கைமேல் துண்டைப் போட்டுக்கொண்டு, வார்த்தை மேல் வார்த்தை போட்டு, துணி மறைவில் விரல்களால் வியாபாரம் பேசுவதை… அந்த விவகாரமான பேச்சை… அவள் உன்னிப்பாக கவனிப்பாள்.

“மொண்டாட்டி ரெண்டு வெரலுக்கு முடில, என்ன வியாபாரம் இது… யய்யா கட்டுப்பிடி ஆவுமா.. நம்மகிட்ட வாங்கனுமில்ல.. எதுவும் இல்லாம நானென்ன ஊட்டுல கொண்டா கட்ட முடியு… புடிச்சி வெல சொல்லு.. ஊம்பாட்டுக்கு நீட்டாத”

“சுழி இல்லாத மாடு. கரவ அருமையா இருக்குமய்யா. ரெண்டு பல்லு.. நாட்டு ரக மாடு, பதமா இருக்கும். வாளச் சொலட்டாது. நல்ல சுழி. மூக்கு குத்துனது, கொம்பு வச்சது, கொம்பு இல்லாதது, பலனுக்குக் கண்ணு போட்ட.. நாலு மாசத்துல நின்ரும்..” இப்படி வியாபாரிகள் சந்தையில் எதைச் சொல்லி விலை பேசினாலும் அதிலிருந்து விலை இறக்காமல் விட மாட்டேன் என்று அவரின் மனசு சொல்லும் விலைக்குக் கொண்டு வந்துவிடுவார்.

”உனக்கு இருந்தா எனக்கு. என்னுட்ட இருந்தா உனக்கு” என துண்டாகவும் நட்பாகவும் பேசும் வழக்கம் தொண்டியப்பனிடம் இருந்தது. அவர் பலரிடம் மாதேவியை அறிமுகப்படுத்தியதுண்டு. அப்படிப் பேச்சும் போக்குமாக இருந்தவர் சாய்ந்தவாக்கில் எழ முடியாமல் ஆகுமென யாரும் நினைக்கவில்லை. அத்தோடு எல்லாமும் நின்றுவிட்டது.

மாதேவியைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி பத்தாம் வகுப்புவரை படிக்க வைத்தார்கள். அதன்பின் அவளாகவே நின்றுகொண்டாள். தையல் வகுப்பிற்குச் சென்று, துணி தைக்கக் கற்றுக்கொண்டாள். வகுப்பு சொல்லித்தரும் இடத்திலேயே துணிகள் தைக்கும் வேலையும் செய்தாள். கடைசி நேரத்தில் அவர் உடல் நிலையை மனதில் வைத்து உயிரோடு இருக்கும்போதே கல்யாணத்தை முடிக்க வேண்டுமென தன் சொந்த தம்பிக்கே பிள்ளையைக் கட்டிக்கொடுத்தாள். அவனுக்கு அதுவரையில் பிள்ளை தேடி கிடைக்கவில்லை. அவள் விருப்பப்பட்டு அந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டாள். கல்யாணம் ஆன இரண்டு வாரத்தில் தொண்டியப்பன் இறந்து போனார். தொண்டியப்பனுக்கு மகனாய் இருந்து மொத்த சாங்கியத்தையும் செய்தது மருமகன்தான்.

சிவமணி கிடைக்கும் வேலைக்குச் சென்று ஒண்டிக் குடித்தனம் செய்துவந்தாள். மாதேவி எப்போதாவது வீட்டிற்கு வருவது வழக்கம். இருவருமாக வரும்போது சிவமணியின் மனம் எந்தச் சலனமும் அடையாது. தனியாக வரும்போது என்னவாயிருக்கும் என்று அடித்துக்கொள்ளும். அவன் உடன்பிறந்தவன், சிறுவயதில் இருந்தே முரடனென்ற எண்ணம்தான் அதற்கொரு காரணம். தொண்டியப்பன் இறந்த பிறகு வீட்டிற்கு வருவது இது இரண்டாவது முறை. முதல்முறை வந்தபோது அவன் வீட்டிற்குள்ளே வரவில்லை. மாதேவி “வீட்டுக்குப் போயிட்டு கறியாக்கித் தின்னுட்டு வரலா மாமா” என்று அழைத்தாலும் அவன் வரமாட்டேன் என்று சொல்லிவிடுவான். பேரன் சிவமணியைக் கண்டால் வந்து விளையாடுவதுண்டு. அவன் சிவமணியை நன்கு அடையாளம் அறிந்து வைத்திருந்தான். மாதேவியுடன் தையல் வேலைக்கு வாரம் ஒருநாள் வருவான். அப்போது பார்த்தால் சில நேரம் வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பிட வைத்த பின் அதே கையுடன் பாதி தூரம் சென்றுவிட்டு வருவாள். சிவமணி தொண்டியப்பனைப் போல அல்ல, அவள் எடுத்த வாக்கில் பழமையைக் கேட்டுவிடுபவள். அவளுக்குத் தன்மானதுக்குப் பிறகுதான் சொந்தம் பந்தம் எல்லாமும். தன்னுடைய தம்பி தன் வீட்டிற்கு வராதது அவள் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

ஒருமுறை நேருக்கு நேராகக் கூட அவனிடம் கேட்டதுண்டு. “யென் ஊட்டுக்கு வரக் கூடாதுன்னு என்ன இருக்குது. நானென்ன கொலகாரியா, இல்ல பாவம் பண்ணவளா. என்ன செஞ்சிபுட்ட நானு? அதென்ன அப்படி புத்தி மனுசனுக்கு” என்று கேட்டாள். அவன் எதுவும் பேசவில்லை. தொண்டியப்பனுக்கு மருமகன் சாங்கியம் செய்தது குறித்து தொண்டியப்பனின் பெரியப்பன் தலைக்கட்டைச் சேர்ந்த சிலரது பேச்சு ஊர்ப் பெரியவர்கள் மூலம் அவன் காதுக்கு எட்டியது. சிவமணி, தொண்டியப்பனுடன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்தது, பின்னாளில் சேர்ந்துகொண்டது… இவை இரண்டில் ஒன்றுதான் காரணமாயிருக்குமென்று அவள் உணர்ந்திருந்தாள். ஆனாலும் அதை எப்போதும் அவன் எதிர்த்துப் பேசியதோ காட்டிக்கொண்டதோ இல்லை.

மாதேவி வீட்டைச் சுத்தம் செய்து ஒட்டடை அடித்தாள். அவளால் பனை மட்டையில் அப்பியிருந்த மொத்த கரும்புகை படலத்தையும் சுத்தம் செய்ய முடியவில்லை. முடிந்த வரை அடுப்புக்கரி, மண் சட்டி, சாக்கு மூட்டைகள் என வீட்டில் இருந்த அத்தனை பொருட்களையும் துப்புரவாக எடுத்துவந்து வெளியில் போட்டாள். கூரையில் சொருகியிருந்த பைகளை எடுத்துவந்து வெளியில் வைத்தாள். பண்ட பாத்திரங்களைக் கழுவி கட்டிலில் காயப் போட்ட பின் சாணி தெளிப்பதற்காக வாசலில் வைத்திருந்த ஜோடி குண்டாவை எடுத்துக்கொண்டு வீதியில் நடந்தாள். அந்தப் பாத்திரம் ஒன்றைப் பார்த்தார் போல இருக்கும் சந்தையில் ஜோடியாக ஒரு விலையில் கிடைக்கும். அப்படி அவளும் தந்தையும் வாங்கிவந்த குண்டாவில் ஒன்று அது. அந்தப் பக்கமாய் முட்களுக்கு மத்தியில் கட்டியிருக்கும் மாடுகள் போட்டிருந்த சாணியில் அப்போதே போட்டிருந்ததைப் பார்த்து இரண்டு கைப்பிடி அள்ளிப்போட்டாள். வீட்டின் அருகில் இருந்த முள் மரத்து நிழலில் கயிறு திரித்துக்கொண்டிருந்த நடேசனின் குரல் அவளைக் கண்ட மாத்திரத்தில் கேட்கத் துவங்கியது.

“யெம் பிள்ள… எப்போ வந்தே?”

“நேத்து ராவே வந்துட்டே..” சிறிது தொலைவில் இருந்தவர் காதில் விழும்படி சத்தம் கூட்டிச் சொன்னாள்.

“இந்தப் பக்க வரிலியா… ஆள நான் பக்கல”

“வந்தே, பேசிட்டுதா போன. கேட்ட, நீங்க ஆளில்ல சொன்னது. போயிட்ட” நேற்றிரவு வீட்டிற்கு வந்து சென்றதைக் குறிப்பிட்டாள். அவர் கேட்டுப் பதில் சொல்வதற்குச் சிறிது நேரம் எடுத்துக்கொண்டார்.

“சேரி சேரி யம்மோ…” என்ற குரல் அவரிடமிருந்து வந்தது.

“ஊடு பூசலாம்னுதே…” என்று அருகில் வந்தவள், குண்டாவைக் காட்டி “எல்லாம் திட்டுத் திட்டா பேந்துகடக்கு. ஒரு வழி வழிச்சி வுடலானு…” அவரின் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்.

“உங்கம்மாளுதா சாமி பாவம். அப்பாவி மவ வந்து அந்த சனி மூலைல இருக்க சாஞ்ச சோவுத்த செம்மண் அணச்சித் தரச் சொல்லி பறந்துட்டு இருந்தா. என்னாலதா பண்ணிக் குடுக்க முடில. ஆள் இல்ல… கூட மாட வேல செய்ய“ என்று கயிற்றைத் திரிக்கப் பயன்படும் சக்கரம் போன்ற இயந்திரத்தைச் சுத்திக்கொண்டே பதில் சொன்னார்.

“சொல்லுச்சு… இதுகு மேல வேணா. அத செங்கல்லு வச்சிக் கட்டி ஓடு போட்டுக்கலாம்” இயந்திரத்தின் இரைச்சலில் சரியாகக் கேட்காவிடினும் புரியும்படி வாயை அசைத்துப் பேசினாள்.

“அதனாலதா விட்ருச்சி போல. பெறகு கேக்க காணோ. ஊட்ட உங்கோம்மா அப்டி வச்சிருக்க பொம்பள இல்லையே… அவளுக்கு என்ன நெனப்போ” என்று அவராகவே சத்தமாகப் பேசி முடித்தார்.

“அங்களா எப்டி? வௌச்சல்லாம் இருக்கா?” ஊர் பற்றிய விசாரிப்பிக்குள் நுழைந்தார்.

“ஏதோ இருக்குது. மழக்கிதா காயிது.. கள்ளச் செடிலாம்”

“எல்லாம் சவுரியம்தான”

“எல்லா நல்லா இருக்கோம்” என்று சொன்ன மாதேவியை உற்றுப் பார்த்தவர், கயிறு திரிப்பதை நிறுத்திவிட்டு “தொண்டி இருக்குற வர நல்லாருந்த. இப்போ அவனாட்டம் விலுவிலுனு போயிட்ட” என்றதும் அவள் எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள்.

“சேரி… பொழுததேறங்ககுள்ள இழுத்துவிடு. அப்போதா ராவுக்குக் காயும்” என்று மீண்டும் கயிறு திரிப்பதில் கவனத்தைச் செலுத்தினார். கயிறு திரிக்கும்போது எழும்பும் அந்த இரைச்சல் கேட்டுக்கொண்டே இருந்தது.

தந்தையின் நினைவுகளில் மூழ்கியவளாக வீட்டை நோக்கி நடந்தாள் மாதேவி. அவளின் எண்ணங்கள் முழுவதும் அப்பனைப் பற்றிய தீவிரத்தில் மீண்டும் நுழைந்தது. ‘நம்முடைய அப்பனுமிருந்திருந்தால் இப்படித்தானே இருந்துருப்பார்’ என அவள் மனம் தவித்து கண்களில் கண்ணீர் துளிகள் வழிந்தன. இடுப்பில் சொருகியிருந்த புடவையை எடுத்துக் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

மாதேவி வீடு முழுவதும் சாணி கரைத்து வழித்து முடிப்பதற்குள் பொழுது இறங்கத் துவங்கியிருந்தது. சிவமணி ராவுக்கு வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்த காரணத்தால் வந்தாலும் கூட வரலாம் என்ற எண்ணம் வரவே செய்தது. முள் மரத்தடியில் கட்டியிருக்கும் செவலையாடு வீரம்மாளைப் பிடித்து அண்ணங்கால் போட்டுவிட்டாள். ஆடு தின்று போட்டிருந்த கூலத்தை ஒதுக்கி, கட்டுத்தரையைக் கூட்டி அள்ளினாள். பின்பு அங்கேயே அமர்ந்து ஆடு மேய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மாதேவி வீட்டில் இருந்தபோது இரண்டு வெள்ளாட்டுக் குட்டிகளை வளர்த்துவந்தாள். அது தொண்டியப்பனுடன் சந்தைக்குச் சென்றபோது வாங்கிவந்தது. அதில் ஒன்று பால் குடிக்காமல் சோர்ந்து போய் இறந்துவிட்டது. எவ்வளவு போராடியும் பால் குடிக்க மறுத்துவிட்டது. அதன் பின் வளர்ந்துவந்த ஒரு குட்டியின் முழு பொறுப்பும் மாதேவியிடம்தான். எந்த அலுவலுக்குப் போனாலும் சாயங்காலத்தில் அதை கவனிக்க வேண்டியது. அதற்குப் புல் பிடிங்கி வருவது, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது என எல்லா வேலைகளையும் அவளே செய்தாள். அதை முதன்முதலில் சினைக்கு அழைத்துச் செல்லும்போது கூட மாதேவி பின்னால் இருந்து துரத்த “வருதான்னு பாரேன்… ராவு பூரா கத்தத் தெரிது, வரதுக்கு என்ன..” என்று தொண்டியப்பன் இழுத்துச் சென்ற நினைவுகள் வந்தன. அது ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் வீட்டில் இருந்து, ஒரு ஈத்துக்கு இரண்டு இரண்டு குட்டிகளை ஈன்றது. அதன் பின் அரிசியைச் சாப்பிட்டு வயிற்று கோளாறால் இறந்து போனது. அது கடைசியாக ஈன்ற இரண்டில் ஒரு கிடாயை விற்றுவிட்டு குட்டியை மட்டும் சிவமணி வைத்துக்கொண்டாள். வீரம்மாள் என்று அழைத்தால் அது ஓடி வந்துவிடும். மேய்ச்சலுக்கு ஆள் கூடவே இருக்க வேண்டும் என்றில்லை.

வீட்டில் இருந்த பையில் ஒருபடிக்கு மேல் கொரளு இருப்பதைப் பார்த்தாள். அதை எடுத்துத் தண்ணீரில் ஊர வைத்தாள். ஒரு வருடம் குத்தகை நிலம் ஓட்டினார் தொண்டியப்பன். இருவரும் சேர்ந்து நிலத்தில் வேலை செய்தார்கள். ஒரு ஜோடி எருதுகளைச் சந்தையில் பிடித்துவந்து ஒரு விலைக்கு வருடம் வருடம் உழுவதற்குக் கொடுப்பது வழக்கம். அந்த வருடம் உழுத பின் மற்ற நிலங்களுக்கு எருதுகளை உழ கொடுத்துவிட்டார். அப்படி வீரய்யன் வீட்டில் மூன்று நாட்களுக்கு உழுவை நடந்தது. எருதுகள் இரண்டையும் அவரின் வீட்டிலேயே வைத்திருந்தார். இரவில் வேப்பஞ்சாரயம் அருந்திவிட்டு பணம் எதுவும் வாங்காமல் வீட்டிற்குச் சென்றபோது சிவமணி இரவு முழுக்கத் திட்டித் தீர்த்துவிட்டாள். “நான் போயி காலைல கேக்குறேன்” என்றவளை வேண்டாம் என்று அடக்கிவிட்டார். மாதேவி கேட்டபோதும் கூட அவர் பதிலேதும் சொல்லவில்லை. “நம்ம மாமென்தானே, வாங்கிக்கலாம்” என்று சொல்லி முடித்தார். அந்த வருடம் பலரும் தட்டு பயிரிட்டிருந்தார்கள். இன்னும் சிலர் கம்பு விதைத்தார்கள். வீரய்யன் மட்டும் கொரளு விதைப்பதாகச் சொல்லியிருந்தார். விளைச்சலுக்குப் பிறகு வீரய்யன் வீட்டிற்கு வந்து பாஞ்சி படி கொறளு கொடுக்கச் சொன்னதாகக் கொடுத்தார். அப்போது இதான் காரியமென்று அவளுக்குப் புரிந்தது. அதை உணர்ந்தவளுக்கு சந்தோசம் கொஞ்ச நஞ்சமில்லை. அவள் கூலிக்குச் சென்றால் விலைக்குக் கொரளு வாங்கிவந்து சமைப்பாள். அது அவளுக்கு மிகவும் பிடிக்கும். கொரளும் மாட்டுக்கறியும் சமைக்கிறபோது மட்டும் அவளுக்கும் சேர்த்துக் கொஞ்சம் வேப்பம்சாரயம் வாங்கி வருவார். சாப்பிட்ட பின் இருவரும் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். அவன் நெடு நாட்களாக சிவமணிக்கு வாங்கி வர வேண்டும் என்று நினைத்தது நடந்தது. அன்றிரவு வீரய்யனை இருக்கச் சொல்லி கொண்டுவந்த கொரளைச் சட்டியில் கடைந்து கொடுத்தாள். தொண்டியப்பன் மடியில் அமர்ந்து இறுக்கமாகக் கட்டி கொண்டு சாப்பிட்ட ஞாபகம் கூட மாதேவி கண் முன் சொல்வதறியாது உணர்ச்சி வெள்ளம் கொண்டு நிழலாடியது.

சிவமணி மண்டபத்தில் வேலைக்குச் சென்ற இடத்தில் மதிய உணவு முடிந்தது. மூவரும் காலையிலிருந்து ஒதுங்க நேரமில்லாமல் வேலை செய்தார்கள். காந்திம்மா கொட்டப்படும் குப்பைகளை முழுவதுமாகச் சேகரித்து வைத்தாள். செல்வி ஆங்காங்கே சுத்தம் செய்ய வேண்டும் என்று சொன்ன இடங்களைச் சுத்தம் செய்து வைத்தாள். அதற்கிடையில் இரவு உணவிற்குப் பாத்திரங்களைக் கழுவித் தர வேண்டியிருந்தது. ஒவ்வொரு பந்தி முடிந்ததும் சிவமணி இலைகளைக் கூடையில் தள்ளி குப்பையில் போட வேண்டும். மணி எட்டுக்கு மேல் முடிந்துவிடும். மீண்டும் நாளை காலை மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் வருவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். சிறிது நேரம் பந்தியில் ஆள் யாரும் வரவில்லை. அதற்கிடையில் சாப்பிட முயன்றபோது நடந்த கூத்தை நினைத்துப் பார்க்கும்போது ஏன் இங்கே வந்தோம் என்ற நிலைமைக்கு அவர்களின் மனம் சென்றுவிட்டது.

அலுவலகத்தில் இருந்தவன் எந்நேரமும் அவர்களையே கவனித்துக்கொண்டிருந்தான். ஊருக்கு வந்து வேலைக்கு அழைத்ததும் அவன்தான். அவனிடம் காலையிலிருந்து இரண்டுமுறை வாக்குவாதமாகிவிட்டது. மண்டபத்தின் பின்புறம் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்யச் சொன்னபோது ஆத்திரப்பட்டவர்களாக மூவரும் முடியாதென மறுத்துவிட்டார்கள். பின் வந்துவிட்டோம் என்ன செய்வதென்று செய்து கொடுத்தார்கள். அது அகண்டு விரிந்த பெரிய கன்னி விளைச்சல் பொருட்களைக் காயப் போடுவதற்குப் பயன்படுத்தும் இடம். அதில் பந்தல் போடப்பட்டிருந்தது. கிழங்கு மாவு கொட்டப்பட்ட அந்த இடம் முழுவதையும் தண்ணீர் ஊற்றித் தேய்த்துக் கழுவினார்கள். முதலில் அவர்கள் மறுத்துப் பேசியதைப் பொறுக்க முடியாதவனாக அவன் ஆங்காங்கே நின்று அவர்களை கவனித்த வண்ணமிருந்தான். அதுமட்டும் இல்லாமல், சமையல் செய்ய வந்தவர்கள் ‘இப்போது இல்லை அப்புறம், அப்புறம்’ என்று சாப்பிடவிடமால் நீண்ட நேரம் தத்தளிக்கவிட்டது மட்டும் அல்லாமல் பாத்திரங்களைக் கழுவிய பின்பே மூவரும் சாப்பிட முடியும் என்று சொன்னார்கள். தன் பொறுமையை மேலும் கட்டுக்கொள்ள முடியாமல் கடும்கோபமான செல்வி.

“இந்தாயா என்ன நிஞ்சிட்ருக்கஞ் சாப்டுதா செய்ய முடியும். முன்னேயே கழுவனுனா, நீயே கழுவிக்க போ. உக்காருங்க நாம சாப்டலாம்” என்று இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

“என்ன சொன்னா” என்று சமையல்காரர் முறைத்ததும்

“ஏதோ உ ஊட்டிக்கு வந்தவனாட்டம் பண்றயே..” என்று சத்தம் போட்டுப் பேசினாள்.

“மரியாதையா காப்பத்திக்கா. மனுஷன பாரு மயிர பாரு..” என்று அவளாக எழுந்து உணவைப் பரிமாறினாள். அவள் இதைப் பேசியபோது தொலைவில் நடந்து சென்ற அவரது காதுகளில் சரியாக எட்டவில்லை. கல்யாண வீடென்றால் அப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்தார்கள்.

மாதேவி பள்ளிக்கூடத்தை விட்டு நின்றவுடன் கல்யாணம் முடிக்க வேண்டும் என்று சிவமணி துடியாய் துடித்தாள். ஆனால், தொண்டியப்பன் அதற்கு ஒத்துழைக்கவில்லை. “பிள்ளைக்கா.. என்ன கடக்குது அதுக்குள்ள ஓடனே..” என்று சொல்லிச் சத்தம் போடுவார். வீட்டில் இருவருக்கும் சண்டை நடந்துகொண்டே இருக்கும். “இவ்வளோ பெரிய பிள்ளையாகி மூக்கு கூட குத்தல இன்னும்… நாலு பேரு சிரிக்கில” என்று அடிக்கடி கடிந்து கடிந்து அதை மட்டும் சுட்டிக்காட்டி பேசினாள். அதற்கும் திருமணத்திற்கும் சிறிய தொடர்பு இருக்கவே செய்தது. தொண்டியப்பன் எண்ணம் முழுவதும் பவுன் சேர்த்து வைக்க வேண்டும். அதன் பின் கல்யாணத்தின்போது மாட்டுவண்டி நிறைய ரெட்ட சீர் வைத்துப் பிள்ளையை அனுப்ப வேண்டும். அதுவே அவரின் வைராக்கியம். அதைத்தான் அவர் யார் பேச்செடுத்தாலும் சொல்லிவருவார். அவளுக்கு அடுத்த சில வருடத்திலேயே மூக்குக் குத்தும்போது மூக்குக்கு, காதுக்கு, கழுத்துக்கு எனப் பத்து பவுன் வாங்கிப் போட்டார். வார் செருப்பு, புது கொலுசு அத்தனையும் போட்டு மெச்சிக்க வைத்தார். அவள் புது ஆடைகளுடன் அலங்காரமாக நின்றதைக் கண்டு ஊர் மக்கள் கண்ணில் ஒத்திக்கொண்டார்கள். அன்றைய நாள் தொண்டியப்பன் அவ்வளவு சந்தோசத்தில் இருந்ததை யாருமே பார்த்ததில்லை என்றுதான் பலரும் பேசினார்கள். “எம்மவுளுக்குப் போனதுதான் யாருக்கும். அது எதுனாலும் சரி, யாருனாலும் சரி. என் பொண்டாட்டிக்கும் அதேதா” என்று சிரித்தார். அவர் அன்றிரவு மிதமிஞ்சிய போதையில் இருந்தார். “யே ஊர பாருங்கடா, யே மவள பாருங்டா… ராணியாட்டம். தன்மானத்துல வளந்தவ. எவன் காட்டு வாசல்ல வந்து நிக்கில நான் அவள வளக்கதுக்கு…” என்று வளர்ந்து செழித்திருந்த நிலங்களுக்கு முன் நின்று கத்திச் சத்தம் போட்டார். அன்று அவரை அடக்கவே ஊர்க்காரர்களுக்கு பெரும் பாடாய் இருந்தது. அப்பன் இளமை தோயாத தேகத்தோடு துடிப்பாய் இருந்த காலம் இல்லையா, அது எப்படி அவளின் நினைவுக்கு வராமல் இருக்கும். சந்தோசம் கலந்த புன்னகையோடுதான் அதை நினைத்துக்கொண்டாள்.

மெல்ல சூரியன் மறைய துவங்கிய நேரத்தில் மீண்டும் சாப்பிட கூட்டம் வரத் துவங்கிவிட்டது. கீழே பேருந்துகள் காத்திருக்கிறது சாப்பிட்டவுடன் புறப்பட வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். மூவரும் வேலையை விறுவிறுப்பாகத் தொடர்ந்து செய்தார்கள். அங்கிருந்த சிலருக்கு மட்டுமே மேலும் கொஞ்சம் சாப்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் அவர்களின் கணக்குக்கு மேல் ஆட்கள் வரத்தான் செய்தார்கள். ஒருவழியாக இன்றைய மொத்த வேலையும் இரவு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் வேலை செய்தார்கள். சொன்னது போலவே இரவு எட்டு மணிக்கு மேலெல்லாம் ஆள் யாரும் சாப்பிட வரவில்லை. இரண்டு பேருந்துகளும் கிளம்பியிருந்தன.

“கூட்டியாந்தவன் இப்படியானவன்னு நானென்ன கண்டேன்” என்று செல்வி பேசினாள்.

“இந்த வேலயே அவன் சொன்ன காசுக்கு சேத்தி. கீழ போங்கறது என்ன.. அள்ளு அள்ளுனு அதட்டுறது என்ன” என்று அழைத்து வந்தவனைக் கடிந்து காந்திமாவும் தன் ஆதங்கத்தைச் சொன்னாள்.

“ஏன்டி அதுக்கு நீ யென் அந்தச் சத்தம் போட்ட” என்று சிவமணி செல்வியைப் பார்த்துக் கேட்டாள்.

“பின்னேன்ன, நம்மல பாத்தா எப்படிருக்கோ… எல்லாத்துக்கும் ஒரைக்கட்டும்னுதா போட்டன். ஓரச்சியிருக்கும், இனி தீண்டுவானுகங்ற” என்று அழுத்தமாகப் பதில் சொன்னாள்.

“ஏதோ வேலக்கி வந்தவங்க கிட்ட மரியாதையா நடந்துக்க தெரில. இவனுகல வச்சி பாக்கச் சொல்றியா” என்று செல்வி தொடர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடத் தேவையான உணவு பாத்திரங்களை அருகில் கொண்டுவந்து வைத்தாள். சாப்பிடும் இடத்தில் இவர்களைத் தவிர யாரும் இல்லை. காலையிலிருந்து நடந்ததைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“அவன் சரியான ஆள இருந்தா வேலக்கி கூப்ட வரப்போவே கீழ் கட்டடம், வெளில இருக்க கன்னி எல்லாத்தையும் கழுவனும்னு சொல்லி இருக்கனுமில்ல. இங்கந்து சொல்றானா என்ன நினைப்பிருக்கும்னு நினச்சுப் பாரு” என்று மேலும் செல்வி பேசினாள். ஒருபக்கம் மூன்று இலைக்கு உணவையும் அவளே பரிமாறினாள். அவளை ஆசுவாசப்படுத்த முயன்றவளாக சிவமணி அமர்ந்து சாப்பிடச் சொன்னாள். அதன் பின் சிறிது நேரம் பொருட்களை எடுத்து வைத்தது குறித்துப் பேசினார்கள். முக்கியமாக சிவமணி செல்வியை மீண்டும் அதே பேச்சை எடுத்துவிடாமல் வேறு பேச்சில் எப்படித் திருப்புவது என்று யோசித்தபடி இருந்தாள்.

அந்த நேரத்தில் “அதுக்கு சமையக்காரன திட்டுனா சரியா போகுமா” என்று கேட்ட காந்திம்மா எதையோ யோசித்து அவளாகவே சிரித்தாள். செல்வி விடவில்லை மேலும் பேசினாள்.

“என்ன நினைக்கிற இவுனுங்கள… எத்தன வருசமா பாக்குறேன்” என்று பேசிக்கொண்டே செல்வி அவள் இலையில் இருந்த கொஞ்சம் சாப்பாட்டை அள்ளி சிவமணியின் இலையில் வைத்தாள்.

“பேசிட்டு இவ்வளோ சோத்த யென் எலைல போட்ட.. ஏண்டி..” என்று கடிந்தாள்.

“சாப்ட முடில. அள்ளி முழுங்கு, போலா” என்று வைத்தவுடன் நகைப்புடன் சிவமணியைத் துரிதப்படுத்தினாள் செல்வி.

“போலா போலா. இவள பாரு இந்தப் பக்கம் எட்டி” என நடுவில் அமர்ந்திருந்த செல்வி சிவமணியை அழைத்து காந்திமாவின் இலையைக் காட்டினாள். பார்த்து, இரண்டு வாய்ச் சோற்றை தான் சாப்பிடும் முன் சாப்பிட வேண்டுமென எச்சரித்தாள் சிவமணி.

“அடியே தின்டிஞ் வழிச்சு முழுங்குடி போவோ. பொழுது என்ன ஆச்சுன்னு பாரு” என்று செல்வி அவளை விளையாட்டாக அவசரப்படுத்திய சமயம் சிவமணி இருவரையும் கவனிக்காமல் சாப்பிடுவதில் மும்முறமாக இருந்தாள்.

“சோறு எறங்க மாட்டேங்கிது. நானென்ன செய்யட்டும்” என்று சிணுங்கினாள் காந்திம்மா.

“நல்லாருக்குது எம்மா. பொழுதெல்லாம் வேல செஞ்சிட்டு இவளோ சோறு கூட தின்னலனா என்ன ஆவனு தெரில போ. இனுங்கி பிடிவன் நீதா திங்கிற..” என்று சிவமணி அவளைப் பார்த்து அதட்டிச் சொன்னாள்.

“இதா, தின்லன்னா மிலுங்குடி…” என்று செல்வியும் சேர்ந்து அதட்டினாள். காந்திமா புதிதாக வேலைக்கு வருபவள். அவளை அதிகமாக வேலை செய்ய அவர்கள் அனுமதிக்கவில்லை. “ஓடி ஓடி செய்யணும்னு இல்ல, கவனம்… வழுக்குது தர..” என்று எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தார்கள். அவளுக்கு குழந்தை வயிற்றில் தங்கவில்லை என்ற கவலை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிற்பதும் உதிரமாய் கரைந்து போவதுமாய் இருந்தது. இருவரின் அதட்டலும் அதனால்தான் அதிகமாக இருந்தது. இவருக்கும் அவளின் உடல்நலம் மீது அதீத பற்று இருக்கவே செய்தது.

“அள்ளிச் சாப்புட முடில. போ.. நீ சாப்டு” என்று செல்வியின் இலையில் அள்ளி வைத்தாள். செல்வி எதுவும் பேசவில்லை, வைத்ததைச் சாப்பிட்டாள். கடைசி வாய் சாப்பாட்டைச் சாப்பிடும்படி இருவரும் காந்திமாவைப் பார்த்துச் சொன்னார்கள்.

“இதே வழிச்சிட்டே பாரு..” என்று உடம்பை நிமிர்த்தி இலையில் இருந்த சாப்பாட்டை வாயில் திணித்து முழுங்கும்போது இருவருக்கும் சிரிப்பு வந்தது. காந்திம்மாவும் சேர்ந்து சிரிக்க, அந்த இடம் அவர்களின் சிரிப்புச் சத்தத்தை எதிரொலித்தது.

சமையல்காரர்கள் அடுத்த நாள் காலையில் சமைக்க வேண்டுமெனப் பரிமாறி முடித்த கணமே உறங்க புறப்பட்டுவிட்டனர். நாளை வேலைக்குக் காலையில் பரிமாறும்போது வந்தால் போதுமென்று தோன்றியது. சாப்பிட்ட வேகத்தில் சமையல் செய்த இடத்தில் இருந்த பொருட்களை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, தரையை முழுவதுமாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவினர். பின்பு மொத்த பாத்திரங்களில் இருந்த உணவையும் அப்புறப்படுத்திவிட்டு, அதைக் கழுவி ஓரமாக அடுக்கினர். வேலை முழுவதும் முடிந்த பின் வீட்டை நோக்கி நடக்க. பொழுது நன்றாக இருட்டியிருந்தது.

ஊரின் திண்ணை மேட்டில் எப்போதும் கூட்டம் ஜகஜோதியாக இருக்கும். ஆளுக்கு ஆள் ஒரு பேச்சைப் பேசிக்கொண்டு நிற்பார்கள். இரவு நெருங்கும் சமயம் செம்மேட்டுக்குக் கறி போட போன குப்பன் இரண்டு சப்பையைத் தூக்கி வந்து கட்டியிருந்தார். ஊர் பூராவும் வீடு தவறாமல் ஒரு கை வாங்கிப் போனது.

அந்தப் பக்கமாய் பேசப் போனவளிடம் “ஒரு கை கறி வாங்கிப் போ.. ஓடு பிள்ள.. பின்னாலயே நான் வாரேன். இந்தே.. இந்தே போ” என்று தூக்குச் சட்டியை நீட்டி நடேசனின் மனைவி தங்காயி கிழவி சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவளுக்கும் ‘ஒரு கை கறி அப்பனுக்குச் செஞ்சா நல்லாருக்கும்’ என்ற எண்ணம் வந்தது. எப்படிக் கேட்பது என்று நடந்தாள். அவளைப் பார்த்த குப்பன் “எப்ப வந்தவ..” என்று அழைத்துப் பேசினார். அவளும் “நேத்தக்கி” என்று பதில் சொன்னாள்.

மாதேவியை கவனித்த நடேசன் “பிள்ளகிட்ட கறி எடுத்து குட்றா..” என்று போதையில் சத்தம் போட்டார். யார் கறி போட்டாலும் நடேசனுக்கு அழைப்பு வந்துவிடும். அவர் தொதுவாகக் கறியைக் கூறுகளாகப் பிரிப்பது என்பதில் கில்லாடி. அவர் பங்கிற்குக் கறியும் கொடுத்து அனுப்புவது வழக்கம். தங்காயி நடேசன் சொல்லியனுப்பியதை அறிந்து தூக்குச் சட்டியோடு வந்திருந்தாள்.

தொடை சதையை அறுத்து “இந்தா ரெண்டையும் பிடி” என்று குப்பன் இரண்டு கூறு கறியைக் கையில் எடுத்துக்கொண்டு “இது நடேசனுட்டு சதை.. இது எம்மாமன் தொண்டி, அவங்கப்பன் சதை… ரெண்டு கூறு. யெ மாமானில்லனா நானெங்க இதெல்லாம் செய்யப் போறேன். அத்தனயு சொல்லிக் குடுத்தவன் போயி சேந்துட்டான் மனுசன்..” என்று தங்காயியின் தூக்குச் சட்டியில் கறியைப் போட்டபின் கொஞ்சம் ஈரலை அறுத்துப் போட்டார். அதை வாங்கி மாதேவியின் கையில் திணித்து தங்காயி அவளைச் சமைக்கச் சொல்லி அனுப்பி வைத்தாள்.

அவள் வீட்டிற்கு வந்ததும் கறியில் கொஞ்சத்தைக் கிழவிக்கு வைத்துவிட்டு மீதியைக் கழுவி அடுப்பில் வேக வைத்தாள். முதலில் ஒரு சட்டியில் கொரளையும் பின் ஒரு குண்டாவில் மாட்டுக்கறியையும் வைத்தாள். அது வெந்துவரும் நேரத்திற்குள்ளாகவே வெளியில் சென்று மிளகு, இஞ்சி, மல்லி, சீரகம், தேங்காய் எனப் பொருட்கள் எல்லாவற்றையும் செக்கில் அரைத்து வந்து வைத்துக்கொண்டாள். சமையல் வேலை மணம் வீச நடந்துகொண்டிருந்தது. மிக இயல்பாகவே அவள் வீட்டு வேலைகளைச் செய்து பழகியிருந்தாள்.

சிவமணிக்கு முன்பு செல்வி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். மாதேவியிடம் விசாரித்துவிட்டு, பையைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். சிறிது நேரத்தில் சிவமணி வந்தவுடன் “கறி வங்கியாந்தியாம்.. அதான் சமைக்க ஒன்னுமில்லனா என்ன செய்யனு கடைக்கு ஒடிட்டு வாரேன்..” என்றாள். அவள் நாசிக்குள் கறி வாசம் நுழைந்ததும் குழம்பு தயாரானதை உணர்ந்தவள் “சரி எம்மா… யே அப்படி பாக்கற” என்று பொருட்களை வாசலில் வைத்துவிட்டுக் குளிக்கப் புறப்பட்டாள். கறி வாங்கி வந்தவளுக்குச் சமைக்கப் பொருள் வாங்கி வரத் தெரியாதா என்பது போல இருந்தது அந்தப் பார்வை. பின்பு மாதேவியும் குளித்து முடித்தாள். அம்மாவின் ஜாக்கெட்டும் புடவையும் அவளுக்கு எடுப்பாய் இருந்தது. ஒரே நடையாக வீரம்மாளைக் கொண்டுவந்து வீட்டின் முன் கட்டிவிட்டாள்.

கறி கூறு போட உதவியதற்கு நடேசனுக்கு இரண்டு பொட்டலம் வேப்பசாராயம் கிடைத்தது. அதைக் குடித்த மிதப்பில் அவர் தன் பெண்டு பிள்ளைகளைத் திட்டியபடி தன் கூரையின் முன் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். அப்போது அந்த அதட்டல் மாதேவிக்கு நன்றாகக் கேட்டது.

வீட்டில் சமைத்ததை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்க அவளின் முழு உடுப்பையும் மாநிற தேகத்தையும் சீமெண்ணெய் வெளிச்சத்தில் சிவமணி பார்த்தாள். இருவரின் நிழலும் குடிசைக்குள் பிரகாசித்தது. மாதேவி கறி வெந்திருக்கும் பதத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளை கவனித்த வண்ணமிருந்த சிவமணியின் பக்கம் திரும்பி தொண்டியப்பன் இறந்து இன்றோடு இரண்டு வருடம் ஆகிறதென்பதைச் சொன்னாள். முதல் வருடம் எதுவும் செய்யாமல் இருந்ததால் அவளுக்கு அந்த ஞாபகம் கூட இல்லாமல் போனது.

“அப்பன் செத்து இன்னியொட ரெண்டு வருஷமாச்சு மா”

“அதே நினப்புதா வருது என் கண்ணுல. அந்த மொகோமேதா…”

“அப்பனிருந்தா நமூடு இப்டி இருக்குமா” என்று சொன்னபடி தட்டில் கொஞ்சம் கொரலு களியும், மாட்டிறைச்சியும் போட்டு வைத்தாள். மாதேவி சிறிய மண் விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். சிவமணி சொல்ல முடியாத தன் கணவனுடனான வாழ்வையும், தனிமையின் வேதனைகளையும் எண்ணிக் கலங்கினாள். இடமே அமைதியாய் இருந்தது. எழுந்து வாசலைவிட்டு நடந்தவள் அக்கம்பக்கத்துப் பெண்களை அழைத்து வந்தாள். அனைவரும் வணங்கினார்கள். நடேசனும் தங்காயியும் வெளிக் கட்டிலில் அமர்ந்துகொண்டார்கள். நடேசன் போதையில் தொண்டியப்பன் பற்றி பேசினார். அவர்கள் புருசன் பொண்டாட்டி போல என்ன சண்டை சச்சரவு இருந்தாலும் அனுசரித்து வெளி ஊருக்கு வேலைக்குச் சென்றுவந்த அனுபவங்களைக் கூறிக்கொண்டிருந்தார். சிவமணி “அங்கயேந்து வீட்டு கூட்டியாந்தது இதுக்குதான் போல. நானில்லாம அந்த மனுஷன் இருப்பானா…” என்று அழுதாள். அவளின் சுருக்கம் கொண்ட தோள்கள் பட்டை பட்டையாக வெளிச்சத்தில் தெரிந்தன. உருவப்படம் கூட இல்லாத அவர், நினைவுகளின் ஒளியாய் அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் இடத்தில் அந்த விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

இருவரும் புறப்படுகையில் எடுத்து வைத்திருந்த கறியைக் கையோடு கிழவியிடம் கொடுத்தனுப்பினாள் மாதேவி. தங்காயி எண்ணெய்யும் மஞ்சளும் தடவி சட்டியில் போட்டு மூடி வைத்தாள். இரவு அரூபமாகப் பரவிக்கொண்டது. முட்களுக்கு மத்தியில் இரவு நேரங்களில் ஒலிக்கும் பூச்சிகளின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பதினைந்து குடிசைகளிலும் அமைதி மட்டுமே நிலைகொண்டிருந்தது. எந்தக் குரல் சத்தமும் இல்லை. மாதேவிக்கு அப்பன் இல்லையென்ற கவலை. சிவமணிக்கு பிள்ளையும் பேரனும் இருக்கிறார்கள் என்ற ஆறுதல். இருவரும் பேசிக்கொள்ளாமல் ஒரே பாயில் வீட்டினுள் படுத்திருந்தார்கள்.

வீட்டிற்கு வந்த சற்று நேரத்தில் நடேசன் வைத்திருந்த பட்டையைப் பிரித்துக் கொஞ்சத்தை வாயில் ஊற்றிக்கொண்டார். போதை மிதப்பில் உறங்கிக்கொண்டிருந்தவர் காதுகளில் “யெ ஒக்காலோலி… பச்ச சாரு கொச்சம் கொட்ரா..” என்ற குரல் அழுத்தமாகக் கேட்டது. நடேசன் அதே வேகத்தில் திடுக்கிட்டு எழுந்துகொண்டார். ஊருக்குப் பின்னால் மேற்கே இருக்கும் கானகத்தை நோக்கி நடந்தார். மெல்ல தொண்டியப்பன் பிதைப்பின் அருகில் சென்று நின்றார். அவனின் பிதைப்பு களிமண்ணால் அணைத்து அரை அடிக்குக் குவிக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் இருந்த அரசமரத்தின் இலைகள் அதன் மேல் பரவிக்கிடந்தன. தலைமேட்டில் அவற்றைத் தன் கரங்களால் ஒதுக்கிவிடுவதற்கு நிலா வெளிச்சம் போதுமானதாக இருந்தது. அதே இடத்தில் ஒரு மொடக்கு சாரயத்தை ஊற்றிவிட்டு தன் வாயில் மீதியை ஊற்றிக்கொண்டார். பின் வீட்டை நோக்கி நடந்தார்.

l [email protected]

 

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!