ராதாபாயின் மூன்று சத்திரங்கள்

தூயன்

முப்பத்தினான்கு வருடங்களாக சோற்றுப்பாளைச் சத்திரத்தைக் காத்திருக்க வைத்த ராதாபாயின் சாவு ஒரு வழியாகப் பெருந்தொற்று ஊரடங்கு விலக்கப்பட இருந்த இரண்டாவது வாரத்திற்கு முன்பு நடந்துவிட்டது. சத்திரத்துக்காரர்கள் கொண்டாடித் தீர்க்க வழியில்லாமலும், அவர்களின் வேண்டுதல்படி கிழவனால் (மகாஜன் நந்தகோஷ் ஷாரிப்) கொல்லப்படாமலும், இரண்டுக்கும் கொடுப்பினை இல்லாமல், சாவுச் சடங்கை ஒன்றுமில்லாத வெறும் கையாக்க நினைத்த முடிவை ஊரடங்கு எடுத்துக்கொண்டதுதான் சத்திரத்துக்காரர்களால் பொறுக்க முடியவில்லை. சத்திரத்துக்குள் அலறுவதற்கு ஆந்தைகளுக்கு அடுத்து, சைரன் ஒலி கத்திக்கொண்டு வருவதை அனைவரும் பார்க்கிறார்கள். ராதாபாயின் வீட்டுக்கு முன் அலறியபடி நிற்கிறது சவஊர்தி.

உள்ளே போனவர்கள் மறுகணம் ஸ்டெட்சரில் ராதாபாயுடன் வர, எல்லோரும் வாயைப் பொத்திக்கொண்டு வாசலில் நிற்கிறார்கள். சவத்தில் நாற்றமே இல்லை. சில கணத்துக்கு முன்பு செத்திருந்தாலுமே இத்தனை நாள் கிடந்ததற்கு எந்த அறிகுறியும் கிடையாது. ராதாபாயின் கொண்டை சரிந்து வாலாக ஆடுகிறது. ஆமாம், வால் அளவுதான் அதன் வெள்ளைக்கூந்தல். கல் மூக்குத்தியில் வெயில் பட்டுப் பளீரென ஒரு சிமிட்டல். ராதாபாயின் கரிய உடல் இத்தனை வருடம் வெயில் படாமலே வெளுத்துவிட்டிருக்கிறது. கிளிப்பச்சை நிறத்தில் மகிழமலர்ச் சேலை உடலிலிருந்து நழுவி ஸ்டெட்சரின் பிடியில் தொங்குகிறது. அதைப் பார்த்தவர்களின் முகங்கள் உறைந்துவிட்டன. சாவைக் காட்டிலும் அக்காட்சி அவர்களை மிரள வைத்திருக்க வேண்டும். துக்கம் தாளாமல் அழுகை பீறிடுகிறது. குழந்தைகள்கூட என்ன ஏதென்று தெரியாமல் பெரியவர்களின் முகங்களைக் கண்டு அழுகின்றன. அநாதையாய் இத்தனை வருடங்கள் கிடந்தவளுக்கு எதற்கு இப்படி என வந்தவர்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

ராதாபாயின் உடலை ஊர்தியில் ஏற்றினார்கள். சேலைக்கு வெளியே சரியும் இடது மார்பு, மங்கலாகத் தெரிந்தாலும் நந்தகோஷைத் திடுக்கிட வைத்தது. உடனே சத்திரங்களின் முகப்புகளை நோக்கித் திரும்பினார். எல்லோரும் வானத்தையும் சத்திரத்தின் கோபுரங்களையும் பார்த்தவாறே அழுகிறார்கள்.

நூறு வருஷமாகக் கூடாத மழை மேகம் இன்றைக்குக் கூடும் என்று மகாஜன் நந்தகோஷ் ஒரு வாரத்திற்கு முன்பு அறிவித்தார். அவர் சொன்னதைப் பற்றிக் கிழக்குச் சத்திரத்தில் ஒரே பேச்சு. ஆனால், சத்திரங்களுக்கு மேலே வானம் பொட்டுகூட சிணுங்கவில்லை, எப்போதும்போல ஊர்மேல் புளுதி அள்ளி வீசும் வழக்கமான நண்பகல் சூறாவளி அப்போதுதான் கடந்துபோயிற்று. இப்படித்தான் நந்தகோஷ் முப்பத்தினான்கு வருடங்களாகச் சொல்கிறார். அதை நம்புவதும் மறுப்பதுமாக நகர்கிறது சத்திரத்து வாழ்க்கை.

“ராதாபாயின் சாவு நாளைக்கு, பௌர்ணமிக்கு, மகாயாள அமாவசைக்கு மூனாவது நாள், தை அஷ்டமி சாய்ந்தரம், அமாவாசையும் தீபாவளியும் சேர்ந்தால்” என்று அவர் காலத்தை நூல்போட்டு இழுத்து வந்துவிட்டார். ராதாபாய், நந்தகோஷின் ஆரூடத்தைக் கேள்விப்படும்போதெல்லாம் “த்தூ” என்று, அவர் கடந்துபோகிறபோது வாசலுக்கு வந்து துப்பச் சலிக்காது. “உங்க சனத்தக் கெடுக்க உன்ன விட்டா யார் இருக்கா மகாஜன்?” என்று சிரிக்கும்.

நந்தகோஷ் எப்போதும்போல தன் தலைப்பாகையை அழுத்தியபடி முறைப்பார். ஆனால், உண்மையில் மேக்வால் மக்களைப் பொறுத்தவரை நந்தகோஷ் சொல்லும், ‘நடக்காது’ என்கிற, அத்தனை ஆரூடங்களும் பலித்திருக்கின்றன. சமயத்தில் காரைக்குடியிலிருந்தும் நகரத்தார்கள் ஆரூடம் கேட்க சத்திரத்துக்கு வருவதுண்டு. இன்னாருக்கு இந்த நேரத்தில் திருமணம் நடக்காது என்பார். அது சரியாக இருக்கும். இந்தத் தை மாதத்தில் வியாபாரத்தைத் தொடங்க முடியாது என்பார். பிடித்து நிறுத்தியது மாதிரி தொடங்கிய இடத்தில் அப்படியே நிற்கும். நடக்காத காரியங்களுக்குப் பலன் சரியாக விழுந்தாலும், ‘நடக்கிறது’ மட்டும் எப்போதுமே புத்திக்குப் புலப்படுவதில்லை. ஆனாலும் மேக்வாலாக்கள் ஐம்பது வருடங்களாக நந்தகோஷின் ஆரூடத்தைக் கேட்பதை நிறுத்தவில்லை. அவர்களுக்கும் மகாஜனை விட்டால் நல்லது கெட்டதற்கு யாரும் கிடையாது. அதோடு சோற்றுப்பாளைச் சத்திரத்தின் சொத்து மேக்வாலாக்களுக்குப் பாத்தியப்படுவது நந்தகோஷின் கையில்தான் இருக்கிறது.

நந்தகோஷ் மட்டும்தான் இன்னும் பூர்வ வழக்கங்களை விடாமல் வைத்திருக்கிறவர். தலைப்பாகை இல்லாமல் நந்தகோஷ் வெளியே போவதில்லை. சொடக் சொடக் என விரல்களில் கர்தால் வாசித்தவாறு பாட்டுப் பாடுவார். தனது ஒட்டகம் குல்சியை அழைத்துக்கொண்டு சத்திரத்திலிருந்து கிளம்பி தஞ்சாவூர் எல்லையைத் தொடும் சவுக்குக் காடுகளைச் சுற்றிவிட்டுத் திரும்புவார். தனிமை அவருக்கு இரண்டு நினைவுகளை மீட்டிவிடும். ஒன்று, ஜெய்சல்மரின் ராஜ்மஹால். மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு ராஜஸ்தானிய ஆடைகளென்றால் மிகவும் விருப்பம். ராணி ராஜாமணி சாஹேப் அவரது விருப்பத்தை நிறைவேற்ற நிரந்தரமாக ஆடை வடிவமைப்புக்கெனச் சிறிய கலைக்கூடமாகச் சத்திரங்கள் கட்டப்பட்டபோது நந்தகோஷின் பெற்றோர்களைப் போலவே, புதிய நிலப்பரப்பின் அழகைத் தங்கள் கற்பனைகளால் நிரப்பிக்கொண்டு, தங்களுக்கென உறவு கொண்டாட ஒரு நிலம் – சோற்றுப்பாளைச் சத்திரத்திற்குள் நுழைந்த மேக்வாலாக்களின் கண்களுக்கு ஒருவகையில் சத்திரத்தின் சன்னல், கதவு, மேல்மாடங்கள் என ஒவ்வொன்றும் பிக்கானரின் சிறிய மாடவீடுகளின் அழகோடுதான் தெரிந்தன. பால்ய வயதில் கற்பனையிலிருந்த அதே அழகும் பிரமிப்பும் நந்தகோஷின் கண்களைவிட்டும் இன்னும் அகலவில்லை. மூன்று சத்திரங்களும் சிறிய அரண்மனைபோல அதன் பிரமாண்டம் பெருக்கி, கற்பனையைத் திணறடிக்கும். எத்தனை நூறு வருடங்கள் இந்த மூன்று சத்திரங்களும் இங்கு இருக்கப்போகின்றன? எப்போது இந்த நிலம் மேக்வாலாக்களுக்குப் பாத்தியப்படப்போகிறது?

இரண்டாவது, முதல் நினைவு வந்ததுமே சத்திரத்தின் மீது கவிந்திருக்கும் அரண்மனையின் நிழல் கை நழுவி சூனியத்தில் மறையும் காட்சி தோன்றும். சட்டெனத் துக்கம் அடைக்கும். மீசையை நீவுவதற்குள் விரல்களெல்லாம் நடுங்கிவிடும். உடனே ராதாபாயின் சாவுக் குறித்து மறுபடியும் கட்டத்தை எழுதிப் பார்க்க வேண்டும். குல்சியின் கழுத்தில் தொங்கும் தோல்பையில் பஞ்சாங்கம் உள்ளது. காலகாலமாக ராதாபாயின் ஆயுள் கணக்கை எழுதி வைத்துக் கிறுக்கியிருக்கிறார். ஒவ்வொருமுறையும் கணக்குப் பலிக்காமல் போவது பெரும் குழப்பமாகவும் ஊரார்களின் நம்பிக்கையை வெளுக்கவும் செய்வதுதான் (மற்றவர்களுக்கு நடப்பது நடக்காததாக மாறுவது பற்றி மேக்வாலாக்கள் இதுவரை கவலைப்பட்டதில்லை) அவருக்கு வேதனையான விசயம்.

காலையில் எழுந்ததும் பல் தேய்த்துவிட்டு குல்சிக்குக் கோதுமைத் தவிடும் கரும்புச்சக்கையும் கலந்து வைத்ததோடு மறுபடியும் குல்சியின் கழுத்தில் தொங்கிய பஞ்சாங்கத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். கிழக்குச் சத்திரத்திலிருந்து நாலைந்து குழந்தைகள் பள்ளிக்குப் போகிற வழி நந்தகோஷின் வடக்குச் சத்திர வீடு. “குல்சிஞ் ஏய் குல்சி, என்ன சாப்பிடுற?” குல்சியைப் பார்த்துச் சிரித்தனர். பதிலுக்கு குல்சியும் ‘பிர்ர்ர்ஞ்’ என்று நாக்கைக் கடவாய்க்கு வெளியே நீட்டிக் காட்டியது. பிள்ளைகள் மேக்வாலாக்களின் மூன்றாம் தலைமுறை. நன்றாகவே தமிழ் பேசுகின்றனர். குல்சிகூட பதில் சொல்கிறது. நந்தகோஷிற்கு ஆத்திரமாக வந்தது. “அரே சுப்” என்று அனைவரையும் அதட்டினார். ஒரு குழந்தை அருகில் வந்து, “அம்மா புட்டு வைத்திருக்கு. நீங்க போங்க” என்றது. நல்ல குண்டு கண்கள். மூக்கில் வளையம். பத்து வயது தாண்டாது. எந்தச் சத்திரத்தைச் சேர்ந்ததென நந்தகோஷிற்குத் தெரியவில்லை. குழந்தை அவர் முகத்தைப் பார்த்துவிட்டுக் கிழக்கில் கை நீட்டியது. ஆச்சர்யத்தில் கன்னத்தை வழித்து முத்தமிட்டார். சிரிக்கும்போது அவரது மூக்கும் கண்ணும் உள்ளே இழுத்துக்கொண்டு மோவாய்ப் புடைத்து முன்னால் வரும். குழந்தைக்கு அது பிடிக்கவில்லை. சட்டென விடுபட்டுப் பிள்ளைகளோடு ஓடிற்று. குல்சி சாப்பிட்டு முடித்ததும் நந்தகோஷ் கிழக்குச் சத்திரத்திற்குக் கிளம்பினார். அங்கு திசைக்கொன்றாக (தெற்கில் மட்டும் இல்லை) வட்டவடிவில் ஒவ்வொன்றின் நடுவிலும் தறிக்கூடமும் சாயப்பட்டறையும் கொண்ட நூறு வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட மூன்று சத்திரங்கள் இருக்கின்றன. மூன்றுக்கும் பின்னால் மேலும் மூன்று சின்னஞ்சிறிய மாடவீடுகள் உண்டு. அவற்றைச் சின்னச் சத்திரம் என்று சொல்வது வழக்கம்.

மகாஜன் நந்தகோஷுக்கு உண்மையில் பசி இல்லை. கொஞ்ச நாளாகவே பகல் வேளைகளில் பசியுணர்வு அறவே கிடையாது (அது எப்போதிருந்து என்று கண்டுபிடிக்க முடியாமல் சலித்துக்கொள்வார்). அறவே என்றால் தாகம்கூட. பொழுது போய்விட்டால் யாரும், மகாஜனாக இருக்கும் ஒருவரைச் சாப்பிட அழைப்பது வழக்கத்தில் இல்லை. ஆனால், அப்போதுதான் வயிறு கத்த ஆரம்பிக்கும். இரவு ஆக ஆக ஓநாய் போல ஊளையிடும். எவ்வளவு தின்றாலும் அடங்காது. குல்சிக்கு வைத்திருக்கிற கரும்புச் சக்கையைத் தின்றும்கூட நிற்காது. சத்திரங்களில் பழைய குழம்பு கொதிக்கும் வாசம் வேறு பசியைத் தூண்டிவிடும். இத்தனைக்கும் பகல் ஆகாரம் இரவுக் கூப்பாட்டை நிறுத்தும் என்கிற நம்பிக்கையும் உண்டு அவருக்கு. ஆனால், எதுவும் நடக்காததுதான் வேதனையாக இருக்கிறது.

கிளம்பிப்போகவே பிடிக்கவில்லை. நடக்க நடக்க நாக்கு சப்பென்று உலர்கிறது. சத்திரங்களுக்குள் வறுசட்டியில் மாவு கொதிக்கும் சத்தம். அடுத்தடுத்த சத்திரத்து வீடுகளில் பொம்மைகளுக்கான அச்சுப் பலகையில் மாவு வார்க்கப்படுகிறது. வார்க்கப்பட்ட பொம்மைகள் வாசலில் வெயில் காய்கின்றன. ஆகாயத்தைப் பார்த்து ஆனந்தமாய் புன்னகைக்கின்றன. திண்ணையில் பீடி புகைத்தபடி விஸ்வகார் அமர்ந்திருக்கிறார். நந்தகோஷ் நிற்பது அவருக்குத் தெரியவில்லை. பார்வை மழுங்கிவிட்டது. இவர் குரலைச் செறுமியதும் திடுக்கிட்டு விழிகளால் துழாவியபடி “மகாஜன் நந்தாஸ்ஞ் என்ன ராதாபாய் வீட்டுக்கா?” என்று கேட்டுவிட்டுச் சிரிக்கிறார். “பேக்கூஃப்” என்று முனகியவாறே நந்தகோஷ் ராதாபாயின் வீட்டைக் கடக்கச் சில அடிகள் இருக்கையில் திரும்பக்கூடாதென்கிற பிடிவாதத்தை ராதாபாயின் வீட்டிலிருக்கும் ஏழிலைப்பாலைப் பூக்களின் சுகந்தம் நிறுத்திற்று. இந்த வருடமும் மரம் முழுக்க வெள்ளி நகையாட்டம் மலர்கள். நிறைய பட்டாம்பூச்சிகள் பூக்களின்மேல் ஆடுகின்றன. சத்திரத்துக்கு ஒவ்வொரு வருஷமும் இப்படிக் கொஞ்ச நாளைக்குத்தான் இந்தக் கொடுப்பினை அமையும். அடுத்த மாதம் சடை சடையாகக் காய்கள் தொங்கும். மறுகணமே என்ன சாபம், என்ன விதி என்று நொந்துகொண்டார்.

வீட்டுக்குள் கட்டிலில் ராதாபாய், வெளியே நந்தகோஷ் போவதைக் கவனிக்கவில்லை. “சேலைக்குப் பூ தையல் போட்டியாடீ ஏ மூதேவி?” கண்களை மூடிக்கொண்டு சத்தமாகக் கேட்க, தெற்குச் சத்திரத்திலிருந்து, “போடணும். நூல் வரட்டும்” என்று யாரோ சொன்னதும் அமைதியாகிறார் ராதாபாய். நந்தகோஷ் கிழக்குச் சத்திரத்தை அடைவதற்குள் மறுபடியும் ராதாபாய், “சேலைக்கு என்ன பட்டுடீ” என்கிறார், மறுபடியும் பதில் எங்கிருந்தோ வந்து நிறுத்த, கூடவே இளசுகளின் சிரிப்புச் சத்தமும் நடுத்தரப் பெண்களின் அலுப்புக்கொட்டும் கேட்கிறது. ராதாபாய்க்கான சேலை ஒன்று, நின்றுபோன மூத்தத் தறிகளுக்குள் இருக்கிறது. கடிகார முட்கள் மாதிரி இந்தக் கேள்வியும் பதிலும் ஐம்பது வருடங்களாகச் சுற்றுகிறது சோற்றுப்பாளைச் சத்திரத்தில்.

ஆமாம், மேக்வாலாக்கள் தறிக்கூடத்தை நிறுத்தி வருஷம் ஐம்பது ஆகிற்று. பெண்கள் பொம்மை தயாரிக்க, ஆண்கள் அதிகமும் கூலி வேலைக்கு ஒருபுறம் புதுக்கோட்டைக்கும் மறுபுறம் தஞ்சாவூருக்கும் போய்விட்டு இரவு திரும்புவது வழக்கம்.

நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு அன்றைக்கு இரவு சத்திரத்தில் ‘பந்திய சம்பம்’ கூட்டம். அதாவது, மூன்று சத்திரத்தில் கிழக்குச் சத்திரத்திலிருக்கும் பினாய் வீட்டில் கூடுவதாக முடிவு. காலையிலிருந்தே பினாய் வீட்டில் சப்பாத்தியும் கொண்டைக்கடலையும் தயாராகிக்கொண்டிருந்தது. குழந்தைகளுக்கு மேக்வாலாக்கள் அனைவரும் கூடுவதில் இனம் புரியாத ஆனந்தம். சத்திரத்தைச் சுற்றிச் சுற்றி விளையாடினர். விருந்துக்காகத் தேக்கு இலைகளைப் பறித்து வந்திருந்தனர்.

ராதாபாய்க்கு மதியம்தான் இந்த அசமந்தகமெல்லாம் தெரிந்தது. “என்ன விசயம்? எனக்குச் சேலை தரப்போறாங்களா?” என்று கேட்டதற்குக் குழந்தைகள் எதுவும் சொல்லவில்லை. ராதாபாயிடம் சொல்லக்கூடாதென எச்சரிக்க வேண்டியதில்லை. ஆனாலும், குழந்தைகள் எதையும் ராதாபாயிடம் காட்டமாட்டார்கள். ராதாபாய் மிரட்டியும் திட்டியும் பார்த்தார். குழந்தைகளுக்கு அது இன்னும் விளையாட வசதியாகிற்று. “பினாய் வெட்டுற கிணத்துல உங்களெல்லாம் தள்ளிவிடுறேன் போங்கடீ” என்று எரிச்சலுடன் நிறுத்திவிட்டார். சில வருடத்துக்கு முன் வடக்குச் சத்திரத்தில் இதேபோல பந்திய சம்பம் கூடிற்று. இருபத்திரண்டு வருடங்களாக பினாய் வெட்டிக்கொண்டிருந்த தண்ணீர் ஊறாதக் கிணற்றை நிறுத்துவதற்கும் இனி அதற்காக மேக்வாலாக்களிடம் நிதி வாங்குவது வேண்டாமென்றும் மறுபடியும் வெட்டுவதாக இருந்தால் பினாய் தனது சம்பாத்தியத்திலேயே செய்துகொள்ளவதாக அந்தப் பந்திய சம்பம் முடிவாகிற்று. பினாய் அதன்பிறகு தனது சொந்த மேக்வாலாச் சனங்களே இப்படி முடிவெடுத்ததற்காகக் கோபமாகத்தான் இருந்தார். ராதாபாய்க்கு ஹிந்தி தெரியாவிட்டாலும், அவர் பலமுறை நந்தகோஷிடம் சத்திர முச்சந்தியில் வைத்துச் சண்டைப் போடுவது தெரியும்.

இருபத்திரண்டு வருடத்தில் கிணறு வெட்ட பல லட்சங்கள் தீர்ந்துவிட்டன. மேக்வாலாக்களின் கூலிக்காசும் பெண்களின் பொம்மை விற்ற உழைப்பும் தண்ணீரைச் சுரக்காத பாறை நிலத்தைப் பிளக்க வாங்கிய வெடிக்கு வீணாகியதாக நந்தகோஷ் சத்தம் போட்டார். “சத்திரத்துக்குள் தண்ணீர் பிரச்சனை நாளாக நாளாக மோசமாவது மகாஜனுக்குத் தெரியலையா?” பினாயின் கேள்விக்குப் பதில் இல்லை. பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர் வண்டிகள் அதிகம் வரத் துவங்கிவிட்டன. இனி யாரும் சும்மா கொடுக்க மாட்டார்கள் என்றார் பினாய் கோபமாக.

வருஷா வருஷம் கிணறு ஆழமாவதோடு அதன் வாய் மிகப்பெரியதாக மண்ணையும் பாறையையும் சரித்துக்கொள்கிறது. நிறைய முறை கீரியும் நாயும் விரட்டிக்கொண்டு விழுந்துள்ளன. குழந்தைகள் கிணற்றின் வாயைப் பார்த்து அரண்டதாக மகாஜன் நந்தகோஷ் கூறினார். குல்சியே ஒருமுறை விழப் போய்விட்டது. ஆடு, கோழி சமைத்தால் குடலும் தோலும் அங்குதான் போகும். சத்திரத்தில் எங்கே குப்பை விழுந்தாலும் காற்று உருட்டி வந்து கிணறில் சேர்த்துவிடும்.

“அது குப்பையக் கொட்டத்தான் கிடக்குது” என்று மகாஜன் ஒரு சிரிப்பு சிரித்தார். பினாய்க்குச் சட்டென முகம் மாறிற்று. “எல்லாம் இந்தச் சத்திரத்துச் சாபம் மகாஜன். பூர்வ சொத்த பாத்தியம் பண்ண துப்பு இல்லாம இந்த ஊர்ல வந்து இருக்க வேண்டியிருக்கு. பேசாம வாங்க எல்லாரும் என்னோட கிணத்துல விழுந்துடலாம்” என்று கிளம்பிவிட்டார்.

அதன்பிறகு பினாயும் நந்தகோஷும் பேசிக்கொள்வதில்லை. தனி ஆளாக மறுபடியும் ஒருநாள் கிணறு வெட்ட பட்டுக்கோட்டையிலிருந்து ஆட்களை அழைத்து வந்துவிட்டார். சத்திரத்தின் ஸ்திரத்தன்மை பாழாகுமென மகாஜன் எச்சரித்ததால் வெடி போடவில்லை. இத்தனை காலமாக வெடிகளை விழுங்கியே கிணறு ஒருவாறு பூதக்குடலைப் போல மாறிவிட்டிருப்பதாக வந்தவர்கள் முனகினர். அவர்களுக்கு அது கிணறு போலவே படவில்லை. பேசிய கூலிக்கு நான்கு நாட்கள் இறங்கி வெட்டிவிட்டு, ஒரு பொட்டு ஊற்றுக்கண்கூட தென்படவில்லையெனக் கிளம்பியதோடு அத்துடன் பினாயும் வேலையை நிறுத்தி ஒரு வருடம் ஆகிற்று.

ராதாபாயைப் போலத்தான் மேக்வாலா சனங்களும் பினாயின் கிணறு சம்பந்தப்பட்ட பந்தியம் என நினைத்துக்கொண்டிருந்தனர். சோற்றுப்பாளை முக்கில் கூலிக்கு எடுக்கும் ஒப்பந்தக்காரர்களின் பணப் பிடித்தமாக இருக்கலாம் என்றும் சத்திரத்துக்கு வெளியே அடிபம்பு குழாய் இன்னொன்று வரப்போவதாகவும் (சத்திரத்தில் நிலத்தடி நீர் கிடையாது) அல்லது கார்வாரிலிருந்து யாரும் முக்கியஸ்தர் சொத்துப் பாத்தியம் விசயமாக வரலாம்… இப்படி ஆளுக்கொரு யோசனை இருந்தது.

Illustration : Aarav SwatiManish

பினாய் வீட்டில் அவரைத் தவிர யாரும் கிடையாது. பினாய் திருமணம் செய்யவில்லை. பல வருடங்களுக்குப் பின் மகாஜன் அன்றைக்குத்தான் பினாய் வீட்டிற்கு வருகிறார். திண்ணையில் பழைய தமிழ்ப் பத்திரிகைகள் அடுக்கப்பட்டிருந்தன. ஜன்னல் திண்டில் அளவுவாரியாகச் சில கற்கள் சேகரிப்பு. நிலைப்படியில் மஞ்சள் கறையுடன் ஒரு பை தொங்குகிறது. அதற்குள்ளும் இப்படிக் கற்கள் இருக்கலாம். ஹூக்கா ஒன்று தூசிபடிந்து மூலையில் கிடக்கிறது. அதனருகே அரிக்கன் விளக்கும் அதேபோல. பினாய் எதற்காக இதெல்லாம் பத்திரப்படுத்தியிருக்கான் என்று நந்தகோஷ் நொந்துகொண்டார். இரவு பதினொரு மணி வரை விருந்து நடைபெற்றது. குழந்தைகள் மடியிலும் தோளிலுமாகத் தூங்கிப் போனதும் ஆண்களில் சிலர், இறந்துபோன மூத்த மகாஜன்களுக்கு நன்றிக்கடன் செலுத்த கர்தால், காமய்ச்சா கருவிகளை இசைத்துப் பாடி முடித்தனர். சத்திரங்களின் மேல் ஆந்தைகளின் அலறல் ஆரம்பமானபோது பெண்கள் பேச்சைத் துவக்கினார்கள்.

“ஆந்தையலாம் சுட்டா என்ன?”

“சுட முடியாது. இருட்டுல திரியுதே, பறந்துடும். கல் எறிஞ்சு எறிஞ்சு சத்திரத்து ஓடுதான் போகுது”

“ஒருநாள் எல்லா ஆந்தைகளையும் வெடி போட்டுக் கொன்னு பினாய் கிணத்தில் போட வேண்டும்”

நந்தகோஷ் வயிறு ஆர ஆர நன்றாகச் சாப்பிட்டு முடித்தார். பல் இல்லாமல் சப்பாத்தியைக் கடலைக்குழம்பில் ஊறவிட்டு விழுங்கினார். அரிசி பாயாசத்துடன் விருந்து முடிந்தபோது பினாய் ஹுக்காவைத் துடைத்துக்கொண்டு அமர்ந்தார். சாயம் பூசப்பட்ட தலைமயிரும் மீசையும் அவரது அப்பா மிஸ்ராவை நினைவூட்டின. பினாய்க்கும் நந்தகோஷின் வயதுதான். தோற்றத்தில் இளமையாகவும் செயலில் நந்தகோஷைவிட வயதானவராகவும் தெரிகிறார்.

பினாய்தான் முதலில் தொடங்கினார், “அடுத்த வருஷம் நவம்பரோடு தொண்ணுத்தி ஒன்பது தொடங்குது. மகாஜனுக்கு ஞாபகம் இருக்கும், ஒரு விசயம். நூறு தொடங்குனா பின்ன சத்திரம் நம்ம கைல வராது. பங்கராய், ஸவர்ணா, ஷேகர்” என்று கூட்டத்தில் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லித் தேடிவிட்டு “ஏன் ஊமையா இருக்கீங்க. மகாஜனுகிட்ட பேசுங்க” சற்றுப் பலமாகவே கேட்டார். அந்த மூன்று பேருக்கும் நந்தகோஷின் வயது இருக்கும். அவர்களது முகங்கள் எதையோ பேசுகிற தயாரிப்பில் இருந்தன.

பங்கராய் எதுவும் பேசவில்லை. பதிலாக அவரது மனைவி லக்ஷ்மி “பயம் இல்லே பினாய் சாப், மரியாதைதான். இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்? பூமி நமக்கு வந்தாலும் ஆயுள் பூராவும் இங்க பொம்மைதானா செய்யப்போறோம்?” உடனே கூட்டத்தில் சலசலப்பானது. சில பெண்கள் அதையே அழுத்திக் கேட்டனர். பங்கராய் தனது மனைவியை அமர்த்தினார். அவள் “ச்சுப்” எனச் சீறிவிட்டு மறுபடியும் பினாயையும் மகாஜனையும் பதிலுக்காகப் பார்த்தாள். மகாஜன் நந்தகோஷுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. சத்திரத்திலேயே உயரமான மேக்வாலப் பெண் அவள். இப்போது லேசான கூன் அதைக் குறைத்திருக்கிறது. அவளது சத்திரத்தில் பலமுறை மகாஜன் சுடுகஞ்சிக் குடித்திருக்கிறார். அவளது பேரக் குழந்தைகள் எல்லாம் நன்றாக வளர்ந்துவிட்டன.

பினாய் எழுந்து எதையோ சொல்ல நினைத்தார். மகாஜனுக்கு பினாயின் கண்களைச் சந்திக்கவே பிடிக்கவில்லை. யாருடைய குழந்தையோ உறக்கத்தில் விட்டுவிட்டுத் தூறல் போல அழுகிறது. பினாய், “சத்திரம் நமக்கு வந்தா பின்ன எதுக்கு நீங்க பொம்மை பண்ணனும்? உங்கள யாரு பட்டுச் சேலை கேப்பா? நீங்க எதுக்குத் தண்ணீ எடுக்கப் போகணும்? எல்லாம் நம்ம கை மேல வரும். ஆனா இந்த வருஷம் போனா அப்புறம் பூமி நமக்கு வராது, ஒரு விசயம்” என்று அழுத்தமாக முடித்தார்.

ஸவர்ணா குரலைச் செருமிக்கொண்டு “மகாஜனுக்கு நமஸ்காரம்” என்று வணங்கிவிட்டுக் கூட்டத்தின் பக்கம் திரும்பி “ஒப்பந்தப் பத்திரம் இருக்கு. ஒருதடவை படிக்கிட்டா?” எல்லோரும் தலையாட்டினர். இருளில் அது அவருக்குத் தெரியவில்லை. கோபத்தில் “அரே ஷாய்ப்ஞ் எல்லாரும் வாயத் திறந்து சொல்லுங்கோப்பா?” என்றார். இந்த நூறு வருடத்தில் ஆயிரம் முறைக்கு மேல் வாசித்தது. ஆனாலும் பந்திய சம்பம் தொடங்கும்போது அது எதைப் பற்றியது எனத் தெரியப்படுத்த பிரச்சினையின் மூலத்தை எழுதி வாசிப்பது (ஏற்கெனவே எழுதப்பட்டிருந்தால்) வழக்கம். ஒப்பந்தம் நந்தகோஷின் தந்தை மகாஜன் பன்வாரி ஷாரிப் தமிழிலிருந்து இந்திக்கும், பிறகு எல்லோரும் வைத்துக்கொள்ளும்படியாகப் புழக்கத்திற்காகப் பேச்சுத் தமிழிலும் எழுதி, பத்திரப்படுத்தியது. பாலித்தீன் பையிலும், தோற்பையிலும், இரும்புப் பொட்டியிலுமாக மூன்று சத்திரத்திலும் இருக்கிற ஒரே வஸ்து.

“ஆவணி மாதம், 1918ஆம் ஆண்டு, திங்கள் கிழமை, அஷ்டயோக தினத்தில், ராணி மகாதேவி ராஜாமணி சாஹேப் அவர்கள் முன்னிலையில் திவான் —— எழுதிய ஒப்பந்தப் பத்திரம் இப்படியாகக் கூறப்படுகிறது. பழைய அரண்மனைக்கு வடக்கிலும் கந்தர்வகோட்டைக்குத் தெற்கிலும் இழுப்பைக்குடிக்கு மேற்கிலும் பஞ்சாம்பட்டணத்திற்குக் கிழக்கிலும் வரும் சோற்றுப்பாளைச் சத்திரத்தின் இருபது ஏக்கர் புஞ்சை நிலம் ராஜஸ்தானின் மேக்வால் சனங்களுக்காகப் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்த முடிவு. மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் விருப்பத்திற்கேற்ப, தொண்ணூற்று ஒன்பது வருடங்களுக்கு மேக்வால் மூத்த மகாஜன் பங்கஜ் திவாரியிடம் செய்துகொண்டது. ஆக, தொடங்கும் நாளைய தேதியிலிருந்து தொண்ணூற்று ஒன்பது வருடங்களுக்கு, மேலே பேசிய இருபது ஏக்கர் புஞ்சையில், தொடங்க இருக்கும் மூன்று சத்திரங்களில் உண்டு, உறங்கிக்கொண்டு சமஸ்தான மன்னர் குடும்பத்திற்கான பூ வேலைப்பாடுடைய ராஜஸ்தானிய புடவைகளைப் பட்டு நூற்கண்டு இணைத்துச் செய்துகொடுக்க வைக்கப்படும் ஆவண ஒப்பந்தம் இது. மேலே பேசிய பூமி மேக்வால் சனங்களுக்கு முதலில் எந்தவித உரிமை பாத்தியத்துக்கும் கோர ஆகாது என்பது உறுதி. அப்படி நிர்மாணம் செய்ய, சமஸ்தானக் குடும்பத்தினர் விருப்பத்தை நிறுத்தக் கோரும் சமயம், அதற்கடுத்தக் காலங்களில், வேண்டாம் என்கிற முடிவுக்குப் பிறகு, சேலை நெய்வது சமஸ்தானத்துக்கு விஸ்வாஸம் கொண்ட திருமதி கலைராணி இலட்சுமிபாய் (தேவதாசி) குடும்பத்துக்கு ஊழியப்படுவதும், அதற்கான செலவு சமஸ்தானத்து நிர்வாகத்திலிருந்தே கொடுக்கப்படும். மேலும், இலட்சுமிபாய்க்குப் பிறகு அவரது வாரிசுகள் ஒருவரோடு இந்த ஒப்பந்தக் காலம் முடியும். வாரிசு ஆனவர் விருப்பத்தை நிறுத்தக் கோரும்போது மேலே பேசிய இருபது ஏக்கர் பூமி அவ்வாறான வாரிசின் ஒப்பம் உடன் மேக்வாலாக்களுக்கு நிரந்தரமாகப் பாத்தியப்படும் என அரசின் ஆணைப்படி முடிவாகும்.”

ஸவர்ணா படித்து முடிக்கையில் எல்லோருமே ஒருவித நெகிழ்ச்சிக்கு வந்துவிட்டனர். ‘ஹோ’வெனப் பெருமூச்சு கிளை முறிவதுபோல எழுந்தது. எப்போதும் வாசிக்கத் தொடங்கும்போது உண்டாகும் அலுப்பும் சோர்வும் கடைசி வரிகளில் அவர்கள் அனுபவித்திராதக் கனவு மழையைப் போல விழிகளில் கண்ணீரையும் உள்ளத்தில் குளிர்ச்சியையும் அளித்துவிட்டுப் போகும். நாடோடிப் பாடலாக அது ஆரம்பிக்கிற வேகம் முடிகையில் சொற்களில்லாமல் வெறும் இசையுடன் துடிப்பதுபோல முடியவும் செய்யாமல் நீளாமல் அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் நந்தகோஷ் சில கணங்கள் உடல் நடுங்கித்தான் போவார். அந்தச் சுருக்கமான ஒப்பந்தம் (மூலத்தில் பதினாறு பக்கங்கள்) அவரது தந்தையார் இரத்தினமாய்ச் சொற்களை எடுத்து சந்ததிகளுக்காகக் கோத்தது.

“இன்னையோட தொண்ணுத்தி ஒன்பது வருஷம் ஆயிட்டுது. இனி என்ன செய்றது மகாஜன்? எல்லாரும் போய் ராஜாவ அரண்மனைல பார்க்கலாமா? வருஷம் நூறு ஆயிட்டா நாம எங்க போகணும்? புலி வாலாட்டம் ராதாபாய் இந்தச் சத்திரத்தைப் பிடித்துச் சுத்த வைக்குது. இதுக்கு என்ன கொடுக்கப் போறோம். அரே ராமா. மேக்வாலாக்கே சுபிட்சம் எப்போ?” அவர் கண்கள் கலங்கிவிட்டன.

“எந்த அரண்மனையில இப்போ ராஜா இருக்கார் ஸவர்ணா? நூறு வருஷ ஒப்பந்தக் கணக்கப் போய் யாருகிட்ட கேக்கணும்? எதுக்கு நாமலே வெளியே சொல்லிக்கணும். அப்பறம் ஒப்பந்தம் முடியுதுனு தெரிஞ்சு விரட்டிட்டாங்கனா என்ன செய்றது?”

ஷேகர் சொன்னதற்கு பினாய் “அப்படியலாம் இல்ல சாமி” என்று சிரித்தார். “எத்தனை வருஷம் ஆனாலும் ராஜா ஒப்பந்த உத்தரவ அவங்க வாரிசும் குடும்பமும் மறக்க மாட்டாங்க, ஒரு விசயம். சும்மா கொடுத்தாலும் அதுக்கு ஒரு கணக்கு உண்டு. நாம சொல்லாம இருந்தா அரண்மனையில யாரும் நம்ம கேக்காம இருக்கப் போறாங்களா, ஒரு விசயம். முனிசிபாலிட்டில இதுக்குக் கெடு இருக்கு. அவங்களுக்கு இதைவிட வேற என்ன காரியம் வேணும் சொல்லு?”

“சரி இப்ப நாம என்ன செய்யணும்?”

பங்கராயின் மனைவி லக்ஷ்மி எழுந்து “ராதாபாயிக்கு இனி எங்கால சேதி சொல்ல முடியாது மகாஜன்” ஆனால், மகாஜன் அவள் சொல்வதைக் கேட்கவில்லை. பக்கத்திலிருப்பவர் அவரது தோளைத் தொட்டுக் காட்டியதும் திரும்பினார். “எல்லாம் பன்வாரி மகாஜன் சாரிப் உத்தரவால் நாங்க இத்தனை வருஷம் இருந்துட்டோம். இனி எத்தன வருஷம் இருக்கனுனாலும் இருப்போம். ஆனா ராதாபாயிக்கு என்ன பதில் சொல்ல? வீட்டுக்குள்ள ஆமை வந்தமாதிரி சத்திரத்துக்குள்ள ராதாபாயி வருஷக் கணக்கா இப்படி வெச்சுக்கிட்டு… ஒரு நல்லதும் இத்தனை வருஷத்துல பகவான் எங்களுக்குக் கண்ணுல காட்டுலயே மகாஜன்.” முடிக்கும்போது லக்ஷ்மியின் குரல் உடைந்துவிட்டிருந்தது. அவள் அழுகிறாள். பங்கராய் அவளது தோளைப் பிடித்து ஆசுவாசப்படுத்தினார். உடனே அடுத்தடுத்து சில பெண்கள் “மகாஜன்” என அழுகையை அடக்கிப் பெருமூச்சைக் காட்டினர். நந்தகோஷ் உணர்ச்சியைப் பொறுக்க முடியாமல் மீசையை நீவிக்கொள்கிறார்.

பினாயிக்கு இந்தப் பந்தியம் இப்படி நடப்பதே எரிச்சலாக இருந்தது. அரண்மனை தர்பார் மாதிரியான தோற்றமும் பேச்சும். இந்தப் பாணியை மாற்றத்தான் அவரது வீட்டில் (மகாஜனுக்கு நாற்காலி, ஆண்களுக்குத் திண்ணை, பெண்களும் குழந்தைகளும் அமர வெளிவாசல் இதெல்லாம் கிடையாது) கூட்டினார். இருந்தும், அது அதன் பாரம்பரிய போக்கை வெளிக்கொணர ஒருத்தியின் அழுகை போதுமானதாக இருந்தது.

ஸவர்ணா மணியை அடித்து (ஒரு கையால் அசைத்தவாறே இன்னொரு கைகளில் தாளம் மாதிரியான சிறிய சப்பை மூடியை அசைப்பது) பொழுது மூன்றாவது ஜாமத்தை நெருங்குவதை அறிவித்தது அந்தக் கணத்தைச் சாந்தப்படுத்திற்று. மணிச் சத்தம் ராதாபாயை உசுப்பியிருக்க வேண்டும். நடப்பது உறக்கத்திற்கு வெளியேதான் என்பதை உறுதி செய்ய ஆந்தைகளின் கீச்சொலிகள் உதவின. ராதாபாய் ஜாமத்தில் கண் விழிக்கையில் எப்போதும் வாய் கொப்பளிப்பார். எழ முடியாது, படுத்த இடத்திலேயே உடம்பை ஜன்னல் வரை வளைத்துத் தூர துப்புவார். இங்கிருந்து பினாய் சத்திரம் நன்றாகவே தெரிகிறது. டியூப் லைட் வெளிச்சத்தில் மேக்வாலாக்கள் விளக்கி வைத்த விக்ரகங்கள் போன்ற அழகு. ஒவ்வொருமுறையும் பந்தியத்தின் மணிச் சத்தம், கோயில்களில் கச்சேரி தொடக்கத்தில் அமைக்கும் மேளப்ராப்தியை நினைவூட்டும். அந்தக் கட்டியத்தை ரங்கசாமி பிள்ளைதான் செய்வார். ராதாபாய் உச் கொட்டினார். அந்தச் சுழிப்பும் ஒலியும் காலத்தை ஒதுக்கப் போதுமானதாக இருந்ததே ஆச்சர்யம்தான். ராதாபாய் மறுபடியும் கொசுவலைக்குள் படுத்துக்கொண்டார்.

ராதாபாய் இறப்பு மட்டுமே மேக்வாலாக்களின் விதியை விலக்கும் ஒரேவழி என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அதுதான் உசிதம். ஆனால், அந்த இறப்பைத் தன்னிடம் கையளித்ததைத்தான் மகாஜன் நந்தகோஷால் ஏற்க முடியவில்லை. பினாய்தான் இந்தப் பந்தியத்தைக் கூட்டியது. உண்மையில் பினாய்க்கு யாரையும் கொல்லும் எண்ணம் கிடையாது. மகாஜனைக் குற்றவாளியாக்க உருவாக்கிய வாதத்தில் பந்தியம் சம்பம் இந்த முடிவுக்கு வர வேண்டியதாகிற்று. பினாய் எதையும் சொல்லவில்லை. ஆனால், மகாஜனின் விதியை மற்றவர்கள் உச்சரித்தார்கள்.

பங்கராய் பேசியதற்குப் பிறகு பந்தியத்தை பினாய் தன்வசம் திருப்பினார். சத்திரத்திற்குள் மின்சார வசதி வேண்டாமென வீம்பாக வைத்திருக்கும் பழைய பாரம்பரியத்தைக் கைவிட வேண்டும் என்று மகாஜனிடம் கேட்டார்.

“உஸ்தத் மகான் அக்னிக்கு மட்டும்தான் சமைவார்” என்றார் நந்தகோஷ்.

சமீபமாகச் சத்திரங்களில் ஆந்தையின் அலறலுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் சீக்கும் நோவும் குழந்தைகளைத் தேடிப் போவதாகக் கூட்டத்தில் சொல்லப்பட்டதற்குப் பதில்தான் மேலே பினாய் கூறியது. ஆனால், மேக்வாலாப் பெண்கள் அத்தனை பேரும் நந்தகோஷின் வார்த்தையை ஒப்புக்கொண்டனர், பினாய் மறுத்தார். அவர் எவ்வளவு சொல்லியும் யாரும் கேட்கவில்லை. “அத்தனைக்கும் காரணம் ராதாபாய்தான்” என்று விசயத்தைத் திருப்பினார்கள். அதோடு சத்திரத்துக்குள் வேறு எந்தப் பறவையும் அமராமல் ஆந்தைகள் மட்டும் தங்குவதை இத்தனை வருடத்தில் யாரும் அவதானிக்காமல் இல்லை. ஆந்தைகளின் ‘சத்திரத்துத் தங்கல்’ சொத்து பறிபோவதற்கான அறிகுறி. ஆந்தைகளைக் கொன்று பட்சி தோஷத்தைத் தலையில் போட்டுக்கொள்ள வேண்டாம், பதிலாக ராதாபாயை அப்புறப்படுத்துவதுதான் ஒரே வழி. பினாயின் இந்தப் பேச்சுடன் பந்தியம் முடிந்தது.

நான்காம் ஜாமம் தொடங்கும்போது கூட்டம் களைய ஆரம்பித்தது. இன்னும் விடியவில்லை, விச்சுளி ஒன்றின் ‘க்லீலீல்லில்லி’ என்கிற சத்தம் சத்திரத்தைக் கடந்தது. மகாஜன் அண்ணார்வதற்குள் அது மறைந்துவிட்டது.

பந்திய சம்பத்தின் நிறைவு எப்போதும் விதியோடு முடியும் என்பது சொலவடை. ஆயிரத்துத் தொல்லாயிரத்து நாற்பத்தி எட்டில் இதே போன்ற பந்திய சம்பம் ராதாபாயைத் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்கிற விதியை அறிவித்தது. அப்போது மன்னர் ராஜகோபால தொண்டைமான் சுதந்திர இந்தியாவுக்காகத் தனது சமஸ்தானத்தை அளித்த சமயம். கூடவே கஜானாவிலிருந்து தங்கமும் தானமாகின. இனி சமஸ்தானம் மன்னரின் ஆட்சிக்குள் வராதென முடிவானதற்குப் பிறகு சத்திரங்கள் என்னவாகும் என்கிற பயம் தலையில் இடியாக விழுந்தது. சமஸ்தானத்திலிருந்து மேக்வாலாக்களுக்கு வந்துகொண்டிருந்த தறிக்கூட நிதியைத் திவான் நிறுத்தச் சொன்னார். அப்படியென்றால், மைசூர் சாம்ராஜ நகரிலிருந்து இத்தனை காலமும் இறக்குமதியான பட்டுக்கூடுகள் நின்றுபோகும். பிழைப்பு நிதியாக வருகிற சொச்ச பணமும் நிற்கும்.

அன்றைக்குச் சத்திரத்தில் யார் வீட்டிலும் அடுப்பு எரியவில்லை. அரண்மனைக்கு அளிக்க வேண்டிய, கிளிப்பச்சை நிறத்திலான பட்டுச் சேலை ஒன்று இரண்டு மாதங்களாகத் தறியில் ஓடுகிறது. நந்தகோஷ், பினாய், பங்கராய் என எல்லோரும் பட்டுச் சேலைக்குப் பூ வேலைப்பாட்டுக்கான வண்ண நூற்கள் கோத்துக்கொண்டிருந்தனர். மகிழம் பூக்கள் சிதறிய வேலைப்பாடு. பூக்களை யாரோ உலுக்க, காற்றில் சரியும் இதழ்களில் வண்டுகள் தேன் எடுக்கப் பாய்கிற சித்திரம். பட்டு சேலைக்குச் சந்தன நிறத்தில் மகிழம் பூக்கள் அவ்வளவு எடுப்பாக இல்லை. பறக்கும் வண்டுகளை – பினாயின் யோசனை – வரைந்த பிறகுதான் சேலைக்கு அழகே வந்தது. ஆனால், அந்த மகிழம் மலர் சேலையைக் கடைசிவரை அவர்கள் அரண்மனைக்குக் கையளிக்கவே இல்லை.

அடுத்தநாள் மூத்த மகாஜன் பன்வாரி ஷாரிப் தனது சகாக்களுடன் அரண்மனைக்குப் போய்விட்டு வெறுங்கையுடன் திரும்பினார். அவர் யாரையும் சந்திக்கவில்லை. கையில் இருந்த ஒப்பந்தப் பத்திரம் காத்திருப்பிலும் தயக்கத்திலும் கசங்கிவிட்டிருந்தது. அரண்மனையை, இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு, இரண்டாவது முறையாகப் பார்க்கிறார்கள். பொலிவிழந்து வயதான யானை அமர்ந்திருப்பதுபோல தெரிகிறது. ஆனால், அதன் விஸ்தாரமும் ஜனப்புழக்கமும் அப்படியேதான் இருக்கிறது. திவானும் அமைச்சர்களும் பிராமணர்களும் காத்திருப்பு அறையில் அமர்ந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சமஸ்தானம் கையளித்த விவகாரம். யாரைச் சந்திப்பது என்று தெரியாமல் மேக்வாலாக்கள் நிற்கிறார்கள். அவர்களை வரச் சொல்லிய மன்னரும் நெடுநேரம் காத்திருந்துவிட்டு அவ்விசயத்தை மறந்தே போனார்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு தறிக்கூடம் தொடங்கிய கெட்டநேரமே மன்னர் பைரவ தொண்டைமான் வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துபோக நேர்ந்ததென்கிற பேச்சு ராணியின் நெருங்கிய வட்டத்திலிருந்ததும் உண்மைதான். இப்போது சமஸ்தானமும் தாரை வார்க்கப்பட்டுவிட்டது (அதில் பாதி பேருக்கு விருப்பம் இல்லை). ‘இந்தச் சமயத்தில் சத்திரம் சம்பந்தமாக எதுவும் பேசுவது சரியாக இருக்காது; அதோடு இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை, இது ஏற்கெனவே முடிவானது’ இந்த இரட்டை எண்ணங்களைத் தவிர வேறு எந்த நம்பிக்கையைக் கொண்டும் அவர்களால் அரண்மனைக்குள் நுழைய முடியவில்லை.

தஞ்சாவூர் சரபோஜி மன்னரைப் போய்ப் பார்க்கலாம் என்கிற யோசனையை மூத்த மேக்வாலா ஒருவர் தெரிவித்தார். அதுவும் நல்ல யோசனையாகப் பட்டது. சரபோஜியின் அதிகாரம் கிட்டத்தட்ட இங்குள்ள நிலைமைக்கும் குறைவு என்றாலும் மன்னருக்கு மன்னர் விசயத்தைத் தெரியப்படுத்துவதில் சில கௌரவ நிமித்தங்கள் உண்டு. தட்ட முடியாத தருணம் வரலாம். “ஆமா இங்க கால புடிக்கதுக்கு அங்க புடிக்கலாம். பூரா ஸுக்ரியா சக் ஹே” என்று அடுத்தநாள் ஒரு குதிரைவண்டிப் பிடித்துக்கொண்டு தஞ்சாவூர் கிளம்பினர்.

சரபோஜியின் மகன் மதராஸில் படித்துவிட்டுத் திரும்பிய சமயம் அது. அவனுக்காக தர்பார் மண்டபத்தில் ஏற்பாடான நாட்டிய நிகழ்ச்சியில் மொத்த அரசக் குடும்பத்தினரும் இருந்தனர். முதன்முதலாக அங்குதான் மேக்வாலாக்கள் ராதாபாயைச் சந்திக்கின்றனர். இளைஞன் நந்தகோஷ் உண்மையில் அன்று அவ்வளவாக சிறுமி ராதாவை கவனிக்கவில்லை. தெற்கு ராஜவீதியிலிருந்து நாலுகால் மண்டபம் வரை புதிரான தஞ்சாவூரின் தெருக்களைச் சுற்றிக்கொண்டு, தர்பார் மஹாலின் சின்னஞ்சிறியச் சட்டகங்களாலான கூரை வேலைப்பாடையும் சுவர் ஓவியங்களையும் வெறித்துக்கொண்டிருந்தான். மேற்கூரை வேலைப்பாடு அவனுக்குச் சேலைக்கான புதிய பாணி யோசனையைக் கொடுத்தது. மன்னர் ஓவியத்துக்கு மேலே நிற்கும் பறக்கும் தேவதைகளின் நிர்வாணச் சித்திரங்கள் அவனது கண்ணை அகலவிடவில்லை. சேலையின் பட்டிக்கு அவற்றை வரைந்து மைசூர் உடையார் வம்சத்துக்கு அளிக்க வேண்டும் என்று தன் நண்பனிடம் தெரிவித்தான்.

இவர்களின் சிந்தனைகளுக்கு நடுவே கரிச்சான் குருவி பறந்தமர்வதாட்டம் கருகருவென ராதா அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள் (தாயார் இலக்குமிபாய் அவளைக் குண்டு கரிச்சான் என்றுதான் அழைக்கிற செல்லம்). எண்ணெய் தடவி, சீவி அலங்கரித்த கூந்தலில் மல்லிகைச் சரத்துடன் நெற்றியில் ஓரணா அளவுக்குக் குங்குமப் பொட்டும் புதியவர்களை அசத்தும் வெட்கச் சிரிப்பும் மகாஜன் பன்வாரி ஷாரிப்பை ஒருகணம் உயிரைப் பிடுங்கி நட்டுவிட்டது. மகாஜன் அதுவரை இத்தனை கரிய வண்ணத்தில் ரசிப்பைத் திருப்பிப் போடும் அழகைக் கண்டதில்லை. ராஜஸ்தானின் முக்காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் சிகப்பு மேனியழகு, ரசனையைக் கூட்டும் பச்சை வண்ண மூக்கு வளையம் என அத்தனையையும் தனது அபிநயத்தில் குளிக்கும் விழிகளாலும் கரையில் கிடக்கும் சேலைக் குவியலைப் போன்ற செம்பொட்டாலும் தூர எறிந்துவிட்டாள் சிறுமி ராதா. திடுமென நெஞ்சைக் கசக்கிய அக்கணத்தில் உறைந்துவிட்ட ஆவியை, பலமாக உலுக்கித்தான் நிலைசேர்க்க வேண்டியிருந்தது. ஆனால், பின்பு எப்போதுமே ராதாவின் தனிமை தரும் குற்றவுணர்வுக்கும் தாபத்தின் மீறலுக்கும் இடையில் மாட்டிக்கொள்வோமென்று மகாஜனுக்கு அப்போது தெரியாது.

ராதாபாயின் தாயார் இலக்குமிபாய் தன் கலை வாழ்வின் இறுதி அரங்கேற்றம் என முடிவெடுத்திருந்த நிகழ்ச்சி. அந்த எண்ணம் எண்ணெய் ஊற்றப்பட்டு ஊற்றப்பட்டுத் தீப்பிடித்து அவளது நெஞ்சில் எரிந்துகொண்டிருந்த நாட்கள். பாரம்பரியக் கலை அவர்களது மரபுக்கும் புனரமைப்புக்கும் நடுவில் தீ நாக்குகளின் சொற்களுக்குள் வெந்து சாவது இனிமேல் போதும் என்று அவள் முடிவெடுத்திருந்தாள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் அரங்கேறி முடிகையில் உயிரின் ஆவியைப் பிடித்துச் சென்று பிரபஞ்சத்தின் உச்சியில் வைத்துக்கொள்ளும் அளவு பேரானந்தத்தை அக்கலை அவளுக்கு அளித்தாலும், அடுத்த சில நாட்களில் அவர்களது அடவையும் சிருங்காரத்தையும் சுத்தப்படுத்த எங்கோ ஓரிடத்தில் அக்னி மூண்டு, ஆடும் நாகங்களை அதில் அள்ளிப்போடும் சாங்கியம் நடப்பது ஓய்ந்தபாடில்லை. இலக்குமிபாய்க்குத் தோழி ஜெயம்மாளைப் போன்று (அவளுக்கு அக்னி மீதே நடனமாடும் மகள் இருக்கிறாள்) மனத் திடம் போதாது. இத்தனைக்கும் மகள் ராதாபாய் ஜவாளிகளையும் பதங்களையும் ஷண்முகம் நட்டுவனாரிடம் கற்றுத் தேர்ந்திருக்கிறாள். பதிமூன்று வயதுதான். அடவுகளில் அவ்வளவு அழகாக நளினம் பிடிக்கத் தெரியும்.

ராதாவுக்குக் கற்றுத் தருவதில் இலக்குமிக்கு விருப்பமில்லை. ராதா, அரண்மனைக்குப் பின்புறம் உள்ள சண்முக வித்யாசாலாவுக்குப் போகிறாள். வீடு இருக்கும் நாலுகால் மண்டபத்தில் விழும் அடவுகளின் சத்தத்திலிருந்து அவளால் செவியை எடுக்கவே முடியாது. தெருக்களில் ஆடியபடியே நடப்பாள். ஒவ்வொருநாளும் தெருவின் ஒவ்வொரு சந்துக்குள் நுழைந்து வெளியேறுவது பிடிக்கும்.

அப்போது இலக்குமிபாய் அறுபது வயதின் அண்மையிலிருந்தாள். குழந்தைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமே கிடைக்காத அளவுக்கு நடனம் பிடித்து வைத்திருந்தது. பாலா, பானுமதி போன்றவர்களோடு ஒப்பிடுமளவு அபிநயத்தில் நிருத்தமரபு சற்றுக் குறைவுதான் என்றாலும் இலக்குமியால் நடனமாடிக்கொண்டே பாடவும் முடியும். அன்றைக்கு இலக்குமியின் சின்ன மேளத்தை “வயதான கோஷ்டி” என்று கலாரசிகர்கள் விமர்சிப்பார்கள். போதாததற்கு மகள் ராதாவும் தாயார் இலக்குமியைப் போன்று மாநிறம் இல்லை. ராதா நாட்டியத்தில் சோபிக்க முடியாது என்று தெரியும். அந்த நிறம் முகபாவத்தைப் பிரதிபலிக்கப் போதாது. அதோடு இனி பதங்களையும் நிருத்தங்களையும் கற்றுத்தரும் கடமை இருந்தாலும், செயலூக்கத்தில் உடல் இல்லை. ஷண்முகத்திற்கு அடுத்து யார் நட்டுவனார்? வெளியே நடக்கும் கலைமீதான ஏகபோக உரிமைக்கு என்ன பதில்? சாத்தியங்கள், ராதாவுக்குத் திருமணத்தைத் தவிர மற்ற எல்லா வழிகளையும் அடைத்தன. இந்தச் சமயத்தில்தான் பன்வாரியின் கைகளிலிருந்த நில ஒப்பந்த விசயம் சின்ன மேளத்தை நன்கு அறிந்த அரண்மனை காரியதரிசி வெங்கோராவ் மூலம் தெரியவந்தது.

சதிராட்டத்தைக் கண்டுவிட்டுத் திரும்பியதிலிருந்து மகாஜன் பன்வாரி நிலையிழந்து போயிருந்தார். கண்களை மூடினால் பரிச்சயமில்லா ஸ்வரங்களும், விரல்கள் நெளிந்து உள்ளங்கை குவியும் சிறுமி ராதாவின் அபிநயங்களும் உதிர்கின்றன. இத்தனைக்கும் அவள் ஆடவே இல்லை. அம்மாவைப் பார்த்து நகல் எடுத்தாள். அதையும் இலக்குமியின் வேகத்திற்குச் செய்ய முடியவில்லை. மேடைச் சுவரில் கிறுக்கிய ஓவியம் ஒன்றுக்கு அபிநயம் பிடித்தாள். அந்த உரையாடல் கடவுளோடு நடக்கிறது. பறவை இறகை விரித்து உடல் முறிப்பதுபோல கைகள் தலைக்கு மேல் வில் ஆகிறது. விழிகளை விரல்களில் குவித்து நாண் அவிழ்க்கிறாள். அது ஒரு செய்தி, அம்பு விடும் செய்தி. பன்வாரியால் அம்மொழியை அறிய முடிகிறது. நளினமும் பாவங்களும் பெரும் கதையைக் கூறுகின்றன. ராதை கிருஷ்ணனின் ஊடல் பதங்கள் அவை. சிறுமி, ராதையாக மாறாமல் ராதையின் மொழியை மட்டும் இலக்குமியைப் பார்த்துக்கொண்டு கிருஷ்ணனிடம் சேர்க்கிறாள். பன்வாரி ஷாரிப்புக்கு அன்றைக்கு மட்டுமல்ல, அதன்பிறகு பல இரவுகளில் அவளது அடவுகள் விகசித்தன.

இலக்குமிபாய் தனது சின்ன மேளத்துடன் சத்திரத்திற்கு வந்தபோது மகாஜனைத் தவிர மேக்வாலாக்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மகாஜனுக்கு, கனவுக்குள்ளிருந்து ஒரு காட்சி மட்டும் சட்டென இப்படி நிலத்திற்கு வந்து விழுந்ததில் ஆச்சர்யம். வந்தவர்கள் சமஸ்தான குடும்பத்தார்கள் அனுப்பியதாக விசயத்தைச் சொன்னார்கள். இலக்குமிபாய் வண்டியைவிட்டு இறங்கவில்லை. அவரது உடல் பலவீனமாகத் தெரிந்தது. பன்வாரியைப் பார்த்து மௌனமாக நமஸ்காரம் வைத்தாள். முகத்தில் நல்ல வீக்கம். நீர் கோத்திருக்க வேண்டும். அன்றைக்கு ஆடிய சரீரமா என்று அடையாளம் தெரியாத அளவு மாறியிருந்தது. மகாஜன் அவளது நடனத்தைப் பார்க்கவில்லை, ராதாதான் கண்ணாடியாகக் காட்டினாள். மகாஜன் அவளைத் தேடினார். குதிரை வண்டிக்குள் ராதாவின் அசைவுகள் ஆடின. சுக்லா, மகாஜனிடம் அவர்கள் வந்த விசயத்தைப் பற்றி அழுத்துகிறான். மகாஜன் அசைவே இல்லாமல் இருக்கிறார். கிழக்குச் சத்திரத்திற்குள் அழைத்து வரவேற்றான். மேக்வாலா பெண்கள் அவர்களையும், சின்ன மேளம் குழு இந்த நிலத்தையும் வியந்துகொண்டார்கள். சின்ன மேளத்திற்கு இந்தச் சத்திரங்கள் சரஸ்வதி மஹால் ஓவியங்களை நினைவுபடுத்தியிருக்க வேண்டும். தங்களுக்குள் பேசிக்கொள்வதும் எட்டி நோக்குவதுமாக அலமலந்துகொண்டனர்.

இலக்குமிக்குச் சத்திரங்களைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. மகள் ராதா ஒரே போல மூன்றும் அமைந்திருப்பதை அதிசயமாகப் பார்க்கிறாள். மூன்றுக்குப் பின்னால் சின்னஞ்சிறியதாக இன்னும் மூன்று. துளியும் வித்தியாசம் இல்லை. சற்றைக்கெல்லாம் ஒவ்வொரு சத்திரத்திற்குள்ளும் ஓடி ஒளிந்து நட்டுவனார் ஷண்முகத்தைக் கண்டுபிடிக்க அழைக்கிறாள். இலக்குமிக்கு மேக்வாலாக்களிடம் நிலத்தின் ஒப்பந்தம் பற்றிப் பேசும் எண்ணமே வரவில்லை. செம்மண் நிலத்திற்குக் கருங்கற்களால் ஆன சத்திரங்களின் தோற்றம், அரைவட்ட வடிவில் லாடத்தைப் போன்ற வாசல், வாசல்கள் ஒவ்வொன்றும் மற்றதுக்கு முகத்தைக் காட்டும் நெருக்கம், நடுவில் சிறிய பொதுக்கூடம். அங்கு நின்று ஆடினால் மூன்று சத்திரத்திலிருந்தும் அமர்ந்துகொண்டே பார்க்கலாம். திரிகோண மேடை அது. கைலாய வடிவம். அல்லது ஆலகாலச் சுழல். அவர்களிடம் சேலை நெய்து உடுத்திக்கொண்டு இந்தக் கூடத்தில் ஆடுவதைவிட வேறு என்ன வேண்டும்! என்ன அழகு அது!

சின்னமேளக் குழு அன்றைக்கு ஒன்றுமே பேசாமல் கிளம்பிற்று. பட்டாம்பூச்சியாய் சத்திரங்களுக்குத் திரிகிற ராதாவை நிறுத்த முடியவில்லை. இரண்டாவது நாள் பன்வாரியும் சுக்லாவும் ஒப்பந்தப் பத்திரத்துடன் நாலுகால் மண்டம் வந்து சேர்ந்ததும் அவர்கள் சொல்லவந்தது, நிலத்தைக் கைப்பற்ற, மகாஜனின் புத்திரன் நந்தகோஷிற்கு ராதாவைப் பிடித்திருக்கிறதென்கிற பொய். ஆனால், அதற்கு முன்பு இலக்குமிபாய் அவர்களிடம் வேறொரு விருப்பத்தைத் தெரியப்படுத்தினார். அன்றைக்குத்தான் இலக்குமிபாயை இவர்கள் நேருக்கு நேராகப் பார்க்கிறார்கள். இலக்குமி இரண்டொரு நாளில் ஐந்தாறு வருடங்கள் தாண்டிவிட்டிருந்தாள். அவளது தயக்கமும் அச்சமும் சில கணங்கள் தடுமாறின. பன்வாரி நிச்சயம் ஊகித்திருப்பார். அபூர்வமாக வாழ்வில் சில தருணங்கள் இப்படி மலரும், வெள்ளத்தில் ஓடும் அழகான தாமரையாக. காலம் குழந்தையின் கையிலிருக்கும் பொம்மையைப் பிடுங்குவதை பன்வாரி அன்றைக்குப் பார்க்கிறார்.

நட்டுவனார் ஷண்முகம் இலக்குமியின் சார்பாகக் கேட்டார். “நீங்கள் ராதாவைத் திருமணம் செய்துகொள்வீர்களா?”

மகாஜன் மெல்ல புன்னகைத்தார். சுக்லா திடுக்கிட்டுப் போனான். ஷண்முகத்தைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. சிறிய அறை, அதற்கப்பால் ஒரு பெரிய கூடம், ஜன்னலுக்குப் பின்னால் யாரோ முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். அருட்டுவதும் நடப்பதும் அசைவுகளை வெளிப்படுத்துகிறது. சுக்லா உடனே இல்லை இல்லையெனப் பலமாகத் தலையசைத்துவிட்டுத் தலைப்பாகையைத் தொட்டுத் தலை வணங்கி அவர்களது அபிலாஷைக்குப் பாரம்பரியத்தில் நன்றி என்றான். “நாங்க மகாஜனின் மகன் நந்தகோஷின் சாதிக் விசயமாக வந்தோம். அவனுக்கு உங்க மகளைப் பிடித்திருக்கு. இஷ்டமானா விஷயத்தைச் சொல்லி விடுங்க” என்று கிளம்புவதற்குத் தயாரானான். பன்வாரியும் அவனுடனே வந்துவிட்டார். அவர்களது விருப்பத்தை மேக்வாலாக்களிடம் இருவரும் சொல்லவில்லை. மேக்வாலா குழுக்களின் முடிவு, காரியத்தை முதலில் யார் நினைக்கிறார்களோ அதுவே இறுதி. சரஸ்வதி மஹாலில் சின்னமேளத்தைச் சந்தித்துவிட்டு வரும் வழியில் இந்தப் பந்தியம் முடிவாகிற்று. அப்படியானால், நிச்சயம் அதற்குமுன் இலக்குமி நினைத்திருக்க வாய்ப்பில்லை.

இலக்குமி அவர்களது விசயத்தைக் கேட்டு முதலில் ஆடிப்போய்விட்டாள். தான் தவறான எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டோமே என்கிற அச்சம். உடனே நட்டுவனாரிடம் தெரியப்படுத்தினார்.

“இதுமாதிரி சங்கடங்கள் வர்றது சகஜம்தான் லட்சுமி. அதுக்காக நீ மனச புரட்டாத. ராதா ஜாதகத்துல அவளுக்கு ராணி ஆகுற இலட்சணம் உண்டுனு இருக்கே, மறந்துட்டியா?” ஷண்முகம் சொன்னதற்குப் பிறகு சற்று நிதானமானாள்.

இலக்குமிபாய் நந்தகோஷைப் பார்த்ததில்லை. நிச்சயம் அழகாக, நல்ல நிறத்துடன் ஆஜானுபாகுவாக ராஜாவைப் போலவே இருப்பான் என்று தெரியும். அவளது விருப்பப்படி, சமுதாயத்தில் அவர்களைப் போல கலையோடு போராடுகிற, ஏதோவகையில் அடையாளத்தை ஸ்தூலமாக வைத்திருக்கிறவர்களுடனான துவந்தம் இது. உடனே சம்மதத்தைத் தெரியப்படுத்திவிட்டாள். சத்திரத்துக்குத் திரும்பியதும் பதில் அனுப்புவதாக இவர்களும் கிளம்பிவிட்டனர்.

ஆடி மாதம் முடிய இரு தரப்பும் காத்திருக்கிற சமயம், திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் நோய்மையிலிருந்த இலக்குமிபாய் இறந்துபோனார். சின்ன மேளம் அதை முன்பே எதிர்பார்த்தது என்றாலும் துக்கம் அவ்வளவு சீக்கிரம் தீரவில்லை. பக்கவாத்தியங்கள் ஒவ்வொன்றாக வயிற்றுப் பிழைப்புக்காக அடுத்த குழுவைத் தேடத் தொடங்கிற்று. நட்டுவனார் இலக்குமிபாயின் விருப்பத்தின்படி, ராதாவை நந்தகோஷூக்குத் திருமணம் செய்துவைத்தார். ராதாவுக்கு அங்கு நடப்பது எதுவும் விளங்கவில்லை. அம்மா இறந்ததால் எல்லாம் மாறியதாகவே நினைத்துக்கொள்கிறாள். புதிய இடம் இழப்பைச் சற்று ஆறுதலாக்கியது. நட்டுவனார் மட்டும் தஞ்சாவூரிலிருந்து அடிக்கடி வந்து பார்ப்பார். நந்தகோஷூக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. கருகருவென ஒருத்தியை அவன் வாழ்க்கையில் அதுவரை பார்த்ததே இல்லை. அவளது சிரிப்பும் தயக்கமும் குழந்தைத்தனமும் எரிச்சலூட்டின. கொதிக்கிற தாபத்தை அமர்த்த அவளிடம் ஒன்றுமில்லை. வெறும் கண்களால் ரசிக்கவும் உள்ளுக்குள் விகசிக்கும் காதல் அந்தச் சமயத்திற்குப் போதாது. ராதாவைத் திருமணம் செய்த கையோடு பொம்மை தயாரிப்புக்கான உருப்படிகள் வாங்க பீக்கானர் கிளம்பிவிட்டான்.

ஒருமாதம் கழித்துத் திரும்பும்போது அவனது கண்களுக்கு ராதா இன்னும் வளரவே இல்லை. வயது மேலும் இரண்டு குறைந்துள்ளது. குழந்தையாக ஓடிவந்து நிற்கிறாள். மேல் சட்டையும் சிவப்புப் பாவாடையும் தலையில் முக்காடும் மேக்வாலாக்களைப் போல். ஆனால், நந்தகோஷ் அவளிடம் நெருங்கவே இல்லை. புதிய அடையாளம் இன்னும் அவனை விலக்கிற்று. சத்திரத்தில் இருக்கிறபோதெல்லாம் தனது சனங்களுடன் தறிக்கூடத்தில் இருப்பான். நண்பர்கள் “நீல நிற ராதை”, “ஷிவ லிங்கம்” என்று அவனுக்கு வெறுப்பை மூட்டுவார்கள். நாளாக, நந்தகோஷின் மனதில் கரிய உருவம் மொழு மொழுவென அவயங்களில்லாமல் மொன்னையாக மாறியது.

Illustration : Aarav SwatiManish

உருப்படிகள் வாங்க பயணத்திற்கு முதல் ஆளாக நந்தகோஷ் கிளம்பிவிடுவான். எத்தனைமுறையென்றாலும் அலுப்பூட்டாது. அவர்களுக்கும் புதிய முதலீடு என்பதால் அவனுடைய கவனத்தில் விடுவதுதான் சரி. ஒவ்வொருமுறையும் நந்தகோஷ் திரும்புகிற நாள் தள்ளிப் போகும். போன முறையைவிட இந்த முறை ஒரு மடங்கு, அடுத்த முறை இரண்டு, அடுத்தது மூன்று மடங்கு என ஆனது. முந்தையப் பயணத்தை வைத்து அதோடு இன்னொரு மடங்கு சேர்த்தால் கணவரின் தற்போதைய வருகை துல்லியமாகக் கிடைக்கும். ராதாவின் கணக்கு எப்போதும் சரியாகக் காட்டியது. அது ஏன் என்று அவளுக்கும் தெரியாது. அவளது இருபத்தியாறு வயதில் நந்தகோஷ் பதினெட்டு வருடங்கள் கழித்துத் திரும்புகிற தேதியையும் அவள் இப்படித்தான் அறிவித்தாள்.

சத்திரத்தில் தங்குவதே வெறுமையாக இருந்தது. வெறுமனே எதையாவது யோசிப்பது எரிச்சல். யாரிடமாவது பேச வேண்டும். பன்வாரி தவிர எல்லோரும் மொழியை விடமாட்டார்கள். நட்டுவனார் ஷண்முகம் மாதத்திற்கு ஒருமுறைதான் வருவார். வந்தால் இரண்டு நாட்கள்கூட தங்க மாட்டார். ஒருகணம்கூட விடாமல் புதிய மேளக்குழுக்களைப் பற்றி விசாரிப்பாள். கச்சேரிகளில் பாலா – ருக்மிணி சண்டை ஓய்ந்தபாடில்லை. புலியிடம் சிக்கிய மான் என ஷண்முகம் சாடினார்.

ராதாவுக்குச் சும்மா இருப்பது பல சமயங்கள் பயத்தையும் அழுகையையும் மூட்டும். காரணமில்லாமல் அழ வேண்டும்போல் தோன்றும். சமயங்களில் கை கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். ஷண்முகத்திடம் சொல்லி அழுதாள். “எல்லாம் கல்யாணம் ஆன காரியம்தான். ஒன்னும் பயப்பட வேண்டாம், சரியாகிடும்.” ஆனால், நடுக்கம் விடவில்லை. ஏதோவொன்றை வெறித்தால் உடனே வந்துவிடும். கூடவே அம்மா இலக்குமியின் ஞாபகமும். குளிரில் தொடைகள் ஆடுவதுமாதிரி. எறும்புபோல ஏதோ ஊறும்ஞ் ஆடைகளை விலக்கிப் பார்ப்பாள், ஒன்றுமே இருக்காது. சம்பந்தமில்லாமல் ஏதோவொரு நிருத்தத்தை நினைத்துக்கொள்வாள். ஜாவளியின் படிமம் ஒன்றுக்கு உடலை வளைத்துப் பார்ப்பாள். அப்போதும் தொடைகள் நடுங்குவது நிற்காது. ஈரம் உலர்ந்த உதடுகளாட்டம் இரண்டு தொடைகளும் ஒட்டி விலகியதும் சத்தமிடும். மறுபடியும் அப்படி ஒட்டிவிட்டுப் பிரிப்பதும் நடுக்கம் அதிகமாவதும் தொடரும். சரீரத்தில் சத்தமிடும் துளைகள் இருப்பதாக எண்ணிக்கொள்வாள். ஷண்முகத்திடம் அதற்குமேல் எதையும் சொல்ல முடியவில்லை. ஆத்மா ஊசிமுனையில் ஆடியது. அதைச் சரீரத்திற்குள் நிறுத்த வேண்டும். நடனத்தால் மட்டுமே முடியும்.

சில நாட்களில் அவளுக்குச் சத்திரத்திலேயே சதிராட்டங்களைக் கற்றுக்கொடுத்தார். பறவை அலகால் இரை பிடிப்பதுபோல ராதா ஒவ்வோர் அடவுகளையும் எடுப்பாள். அவளது அபிநயங்களைப் பார்ப்பதற்கு மகாஜன் ஷாரிப் தவிர வேறு யாரும் சத்திரத்தில் இல்லை. அடவுகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இந்த உடலும் சதையும் புத்தியும் அக்கணத்திலிருந்து வழுக்கிவிடும். நாட்டியத்தைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் அதன் ரசங்களும் நிலைகளும், ராதாவின் கார்வையும் கணீரென வெண்கலச் சத்தமாக செவிக்கும் மனவெளிக்கும் ஆடும். அவளது விரல்கள் அநாயசமாக வளைந்தும் குழைந்தும் சொல்லும் கதையின் கற்பனைக்குள் நுழைந்த ஷாரிப், பின் திரும்பவே இல்லை. ராதா ஆடத் தொடங்கிய சில கணத்திலேயே ஸ்தனங்களைத் தனித்தனியாக ஆட வைக்கும் பாவையாக்கிவிடுவாள். அந்த பாவங்கள் காற்றில் சஞ்சரிப்பதைத் தினமும் போகமிழந்து பார்த்துக்கொண்டிருப்பார் ஷாரிப்.

ராதா ஜாவளிகளில் புதிய கற்பனைகளைச் செய்து பார்க்க ஆரம்பித்தாள். ஆனால், எதுவும் ஆன்மாவை நிறுத்தப் போதுமானதாக இல்லை. சத்திரத்தில் இனி தன்னால் நாட்டிய சரீரத்தை வைக்க முடியாது. அது எப்போதும் தன் போதத்தை ஊசி முனையில் வைத்திருக்கிறது என்றாள் ஷண்முகத்திடம். அவருக்கு அது விளங்கியதா என்று தெரியவில்லை. ஆனால், ராதாவுக்கு நிருத்த மரபுகள் கைவரத் தொடங்கிற்று என்றே அவர் கணித்தார். அவளை பாலாவின் நாட்டியப் பள்ளியில் சேர்த்துவிட்டார். பாலா அவளுக்கு ஆன்மாவை நிறுத்தச் சொல்லித்தரவில்லை. மாறாக அபிநயத்தால் நிருத்தத்தை உருவாக்குகிற தற்கணத்தால் ஆத்மாவைச் சரீரத்திற்கப்பால் நிறுத்திக் காட்டினாள். ராதாவின் தனிமைகளுக்குள் வந்து சத்தம் போட்ட போதத்துடன் உரையாட ஒரு வழி கிடைத்தது. இரு வேறு அரங்கமும் மனதாலும் ஸ்தூலத்தாலும் நிறையத் துவங்கின.

அதன்பிறகு பதினெட்டு வருடங்கள் ராதாபாய் கச்சேரிகளில் பருந்துபோல வட்டமிட்டுக்கொண்டிருந்தாள். பன்வாரி ஷாரிப்பின் நினைவுகளில் ஆடிய அந்தச் சிறுமி இன்னும் அப்படியேதான் இருக்கிறாள். தேர்ச் சக்கரத்துப் பல்லியாட்டம் பன்வாரியின் காலம் மேலும் கீழுமாய்ச் சுழன்றன. சத்திரத்து நடுக்கூடத்தில் இருக்கும் ராதாவின் வீட்டைப் பார்த்தவாறே மகாஜன் இருப்பது மேக்வாலாக்களை வேதனையில் ஆழ்த்தியது. பாழ்பட்டுப்போன மகனின் வாழ்க்கையென அவர்களும் அதில் பங்குகொண்டனர். நந்தகோஷிற்கு எழுதிய கடிதங்கள் போய்ச் சேர்ந்ததாகத் தெரியவில்லை.

ஒருநாள் மகாஜன் பன்வாரி, முடிக்கப்படாத சமஸ்தானத்துச் சேலையை (மகிழம் மலர் வேலைப்பாடுடையதை) ராதாவுக்குக் கையளிப்பதாகச் சொன்னார். மேக்வாலாக்களுக்கு அதில் உடன்பாடில்லை.

“ஷாகீ பரிவார்க்கு மாத்திரம் மேக்வாலா சேலை செய்யணும். அதுதான் மேக்வாலா பரம்பரா. அத நாம விட முடியாது மகாஜன் ஷாரிப். ப்ராத்தானஸ மாத்துறது நமக்குப் பெரிய சாபம்” மிஸ்ரா விசயத்தைக் கேட்டார்.

அதற்கு பன்வாரி ஷாரிப், “ஒப்பந்தத்த ஒத்துக்கிட்டுதான் நாம இங்க வந்தோம். அதிலே சேலை கொடுக்கனும்னு ஆதேஷ் இருக்கே?” எனத் திருப்பினார்.

“ஆதேஷ் உண்மைதான் மகாஜன். அது ராஜா எழுதினது. ஆனா ப்ராத்தானஸ் நமக்குக் கிஸ்மத். உங்களுக்குத் தரணும்னு ஆசை இருந்தா வேற தறியில சுத்தி சாடியான் வேணா செய்யலாம்”

உடனே மற்றவர்களும் “சுத்தி சாடியான்… சுத்தி சாடியான்” என்று கூச்சலிட்டனர்.

அவர்களைப் பொறுத்தவரை மன்னர் குடும்பத்திற்கானதை மற்றவர்கள் அணியும் தகுதியை முடிவு செய்வது மட்டுமல்ல, அதை நெய்வதே தொழில் தர்மத்திற்குக் கீழானது. மேக்வாலாப் பெண்களுக்கோ ராணி அணியும் சேலையைத் தருவது கிட்டத்தட்ட அவளை ராணியாக ஏற்றுக்கொள்வதற்குச் சமம். அதிலும் மேக்வாலாக்களின் வேலைப்பாடும் ஆடையின் மென்மையும் கட்டுகிற உடலின் மதுரந்தமைக் கூட்டும், தனங்களின்மேல் கொடியாக விழுந்துகிடக்கும், நழுவி நழுவி அணையும். ஒவ்வொரு பக்குவமான சலவையிலும் அதன் நயம் கூடிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சேலையை ஒருத்தி அணிந்தால், பின்பு ஆசையை அவளால் நிறுத்தவே முடியாது என்பது நம்பிக்கை.

இதெல்லாம் தெரிந்துதான் ராதாவை தர்பார் மண்டபத்தில் சிறுமியாகப் பார்த்தபோதே அந்தச் சின்ன தேகத்திற்கொரு சேலை நெய்ய வேண்டுமென்கிற எண்ணம் பன்வாரிக்கு ஏற்பட்டது. பல சந்தர்ப்பங்களில் அது கை நழுவிப் போயிற்று. ராதா ருதுவெய்தியபோது சின்னமேளத்தின் முன்பு கேட்க முடியவில்லை. அவள் நாட்டியம் கற்ற சமயத்தில் கச்சேரிக்கு அணியலாமே என ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டுவிட்டார். சட்டென அவளது முகம் விகசித்தது. அழகிய பாவம் அது. கருஞ்சிலை உதடுகளில் மெல்லிய கீற்றைக் காட்டியது போல. ராதாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. குப்பென உடல் வியர்த்திற்று. உள்ளூர நடுக்கம். ராணிகளுக்கான பட்டுச் சேலையின்மீதா, கேட்ட குரலின் கார்வையிலா என்று தெரியாது. வெகுநாளுக்குப் பிறகு ‘உச்செ’ன உதடுகள் சத்தமிடும் ஓசை உடலிலிருந்து. அவள் எதுவும் பேசவில்லை. மகாஜன் ஷாரிப் அந்த மௌனத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தறிக்கூடத்துக்குப் போனார். ஆனால், ராதா அன்றைக்கே தன்னைக் கச்சேரிகளின் நெருக்கடிக்குள் மறைத்துக்கொண்டாள்.

மகாஜன் அன்றைக்கே தன்னுடைய கிழக்குச் சத்திரத் தறிக்கூடத்திற்குப் போய்விட்டார். துருவேறி கூடுகள், விசை வார்கள் அறுந்துவிட்டிருந்தன. நூற்கண்டுகள் குழவிக்கூடுகளில் இருக்கின்றன. தையல் போட்டு அறுந்தவற்றைச் சேர்த்துக்கட்டி, வண்ண நூற்கண்டுகளைக் குவியில் செறுகி ஓட்டத் தொடங்கினார். இரயில் கிளம்புவதுமாதிரி பெரும் சத்தத்தை எழுப்பிற்று. மற்ற சத்திரத்திலிருந்து மேக்வாலாக்கள் வந்துவிட்டனர். “ருக்கோ மகாஜன் ருக்கோ” என்று கூப்பாடு போட்டனர். ஷாரிப் நிறுத்தாமல் உடலின் செயலூக்கத்தைத் திரட்டி வேகமாக இயக்கினார். நான்கு வரிதான் சேலையில் சேர்ந்திருக்கும் அதற்குள் தறி நின்றது. வார் அறுந்து, கீழ் அச்சிலிருந்து விலகி, பற்சக்கரங்கள் கழன்றன. மொத்தத் தறியும் யானை நிலத்தில் அமர்வதுமாதிரி புஸ்ஸென இறங்கியது.

பன்வாரி ஷாரிப்புக்கு முகமெல்லாம் வியர்த்து, விழிகள் வெருண்டன. அவருக்குப் பார்வையும் துல்லியம் இல்லை. என்ன, ஏது என்று தேடினார். வந்தவர்கள் அப்படியே நின்றனர். அறுந்து விழுந்தத் தறிக்கூடைப் பூட்ட முடியவில்லை. அங்கிருந்து கிளம்பியவர் உடனே யாரிடமும் எதுவும் கேட்காமல் சமஸ்தானத்திற்கு ஒப்படைக்காமல் தறியில் கிடக்கும் மகிழம் மலர்ச்சேலையை ராதாவுக்கு நெய்துகொடுக்கும்படி பந்தியத்தில் எழுதி வைத்தார்.

யாரும் ஒப்புக்கொள்ளவில்லையென்றாலும் பந்தியம் எழுதியது எழுதியதுதான். இதேதான் சமஸ்தானத்து அரண்மனை ஆட்களும் சொன்னார்கள். “நிலம் யாருக்குனு முடிவு செய்றது நீங்க கிடையாது. கல்யாணம் பண்ணிட்டா உரிமை உங்களுக்கு வந்திடாது. இது மன்னர் ஒப்பந்தம். அப்படியெல்லாம் செல்லாது. எழுதினது எழுதினதுதான்.”

மகாஜனாக இருக்கிறவரின் கடைசி ஆசை என்கிற உரிமை பந்தியத்திற்கு உண்டு. ஆனால், மகாஜனின் ஆணையை யாரும் ஏற்கக்கூடாதென இருந்தனர். அவருக்காக ஒருத்தரும் தறி ஓட்டவில்லை. மகாஜனும் யாரிடமும் பேசவில்லை. சுக்லா மட்டும் சாப்பிட எதையாவது செய்துகொடுப்பான். அதுவும் ஒருவேளைக்கு மட்டும். பெரும்பாலும் பொறியும் வெல்லமும் கையால் மண்சட்டியில் புரட்டி அவரே செய்துகொள்வார். தீயிட்டு எரித்ததில் மிச்சமான நூற்கண்டுகள் அவரிடமிருந்தன. பதினெட்டு வருடங்கள் தறிக்கூடத்திலேயே இருந்தார். அழுக்கு மணமே இல்லாமல் சேலை இரும்புப் பொட்டிக்குள் பத்திரமாக இருந்தது. உடைந்துபோன தறியைத் தயார் செய்ய முடியாவிட்டாலும் கையாலேயே நூல் கோத்துச் சேலையைப் பூட்டினார். கிட்டத்தட்ட சேலையின் கொசுவம் முடிய பத்து வரிகள் இருக்கையில் மகாஜன் பன்வாரி தனது எழுபத்தி எட்டில் இறந்துபோனார். அவருடைய சாவுச் செய்தி நந்தகோஷைவிட ராதாபாயைத்தான் துக்கப்பட வைத்தது.

சத்திரத்தில் அவளுடன் உரையாடிய ஒரே ஆன்மா அவர் மட்டும்தான். இத்தனை வருடங்கள் அது அல்லோலப்பட்டு, ஊசி முனையில் ஆடிய வேதனை அனைத்தும் அவளுக்குத் தெரியும். கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, மீன்கள் அசைவன்றி இருப்பதுபோல மகாஜனின் உடலும் சத்திரங்களும் அப்படிக் கிடக்கின்றன. ராதாபாய் அதன்பிறகு இரண்டு வருஷத்திற்கு முடிக்க வேண்டிய கச்சேரிகளுக்காக வெளியே இருந்தவள், தனது குரு பாலாவின் மரணத்திற்குப் பிறகு சத்திரத்திற்கே திரும்பியதுடன் நிரந்தரமாய் தங்கிவிட்டாள். மகாஜன் எழுதிய இறுதி பந்தியத்தின்படி அவளுக்கு மகிழம் மலர்ச் சேலை வேண்டும். அல்லது ஒப்பந்தப்படி சோற்றுப்பாளைச் சத்திரம் அவளுக்குப் பாத்தியப்படுவதுதான் நியாயம். இந்த இரண்டில் ஒன்று நடந்திருந்தால் சத்திரத்துக் கதை யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். பின்னாளில் புறம்போக்கு நிலமாக மாறப்போவதை நிறுத்தியிருக்கலாம். மேக்வாலாக்கள் ஊரைக் காலிசெய்வதையாவது தடுத்திருக்க முடியும்.

இத்தனை வருடங்கள் தான் செய்த தவறுக்கெல்லாம் பிராயச்சித்தமாகத்தான் நேற்றைப் பந்தியம் முடிவானதென மகாஜன் நந்தகோஷ் எண்ணினார். வன்னிமர நிழலில் கட்டப்பட்டிருந்த குல்சியின் தீவனத்தை எடுத்துக்கொண்டு அணில் ஒன்று சத்திரத்தைத் தாண்டி ஓடிற்று. சூன்யத்தை வெறித்தவாறு நந்தகோஷ் அமர்ந்திருந்தார். எல்லோரும் வழக்கம்போல இருக்கின்றனர். பொம்மைகளுக்குப் பாலித்தீன் உரை சுற்றப்படுகிறது. பினாய் தண்ணீர் ஊராத கிணற்றுக்குக் கிளம்புகிறார். ராதாபாய் யாரிடமோ சேலையைப் பற்றி விசாரிக்க, வழக்கமான பதிலுடன் ஒருத்தி தெருவைக் கடக்கிறாள். பந்தியத்தை எப்படி நிறைவேற்றுவது? விதியைக் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது? மகாஜனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இனி ராதாபாயின் ஜாதகம் எதற்கு? குல்சியின் கழுத்திலிருந்து எறிந்துவிட்டார். தனது சாவுக்கு முன் சத்திரத்தை எப்படியாவது தனது மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும். இனி மீறுவதற்கு ஒன்றும் இல்லை.

பகல் முழுக்க குல்சியுடன் சத்திரத்தைச் சுற்றித் திரிந்தவர், இரவு ராதாபாய் வீட்டின் முன் போய் நின்றார். ராதாபாயிக்கு அது கனவு மாதிரி இருந்திருக்க வேண்டும். பிரக்ஞையின்றி வெறித்தார். இருளில் முகம்கூட சரியாகப் புலப்படவில்லை. சில கணங்கள் ஆயிற்று தெளிய. குல்சி அண்ணாந்தவாறு மெல்கிறது. நந்தகோஷ் குரலைச் செருமியதும் “வாங்க மகாஜன்” எனத் திடுக்கிட்டுக் கட்டிலிலிருந்து எழ முடியாமல், எக்கி ஒயர் நாற்காலியை எடுத்துப் போட்டார். இப்போதும் வந்திருப்பது நந்தகோஷா எனத் தெரியவில்லை, சிறுத்துவிட்டிருக்கிறார். இத்தனை வருடம் தூரத்தில் தெரிந்த மகாஜன் நந்தகோஷ், உயரமாகவும் ஆஜானுபாகுவாகவும் இருந்தார். தலைப்பாகை எடுத்துக் குனிந்தவாறு நாற்காலியில் அமர்ந்தார். தலையில் முடி இல்லை. தோளில் புரளும் வெண் மயிர் பின்னந்தலையினுடையது.

“போட்டுக்கோங்க” ராதாபாய் சொன்னதும் மறுபடியும் வைத்துக்கொண்டார். ஒன்றும் பேசவில்லை. அமைதியாகச் சில கணங்கள். இன்னும்கூட இருக்கலாம். பிறகு, எழுந்துவிடலாம் என்றுதான் நினைத்தார். ஆனால், ராதாபாய் “ஏன் ஒருமாதிரி இருக்கீங்க மகாஜன்?” என்று திரும்பத் திரும்பக் கேட்பதற்கு என்ன சொல்வதெனக் குழப்பம். ராதாபாய் மெல்ல எழுந்து சொம்பில் நீர் மொண்டு கையில் வைத்தார். அருகில் வருவது மகாஜனுக்கு விருப்பமில்லை. ராதாவின்மீது ஒருவித கசப்பு மணம். முதிய தேகத்தில் வீசும் புளித்த வாடை. தன்மீதும் இருக்கலாம். இன்னும்கூட அதிகமாக. இரண்டும் பசை போன சரீரங்கள்.

“பந்தியம் என்ன ஆச்சு?”

ஒன்றும் புதிசு இல்லையென்பதாக உதட்டைச் சுளித்தார். தண்ணீர் குடித்ததும் முகமெல்லாம் வியர்த்தது. வெளியே இருளை வெறித்தவாறு அமர்ந்திருக்கிறார். பற்கலில்லாத தாடைகள் ஆடின. ராதாபாய் அவரையே பார்த்தார். தனது வீடு சட்டெனப் புழுக்கமாவதை அவதானிக்க முடிகிறது. பிறிதொருவரின் வருகையால் அல்ல, பேசாச் சொற்களின் அழுத்தம்தான் காரணம். வாட்டும் வாதையிலிருந்து நந்தகோஷை விடுவிக்க அவளும் எதையோ பேசத் துழாவுகிறாள், ஒன்றும் கிடைக்கவில்லை. அந்தக் கணம் முன்னரே முடிவானது. எந்த இடையீட்டையும் நுழைய அனுமதிக்காமல் வீம்பாக அக்கணம் அமர்ந்திருக்கிறது. தொண்டையில் எச்சில் உயிர் போவதுபோல இறங்குகிறது. தன் வாழ்வின் தொலைதூரப் பயணம் இப்படித்தான் முடியுமென்பது முன்பே தெரியும். அந்தச் சேலையை ராதாபாய் கேட்டதுதான் தாமதம், புறங்கழுத்தைத் தள்ளியதுபோல உடலில் ஓர் ஆட்டம். காதில் சரியாகவும் விழவில்லை. இல்லை எனக்குத்தான் அப்படி விழுந்ததா? இதெல்லாம் நடக்குமென்கிற கற்பனையின் எதிரொலியா? பல வருடங்களாக மனம் இதற்குத்தான் புழுங்கியதா? நந்தகோஷ் தனக்குத்தானே பேசிக்கொண்டே கிளம்பினார்.

அங்கிருந்து விறுவிறுவெனக் கிளம்பி வந்தவர் தறிக்கூடத்தில் பத்திரப்படுத்தியிருந்த மகிழம் மலர்ச் சேலையை எடுத்தார். கிளிப்பச்சை நிறம், இரண்டு விரற்கட்டை அளவுக்கு மஞ்சள் பட்டி, உள்ளங்கை அளவு வெண்முத்து வரிசை, நடுவில் நீலக்கல் இந்த வடிமைப்பு முந்தி வரை வருகிறது. கொசுவத்திலும் கால் மடிப்பிலும் மகிழம் மலர்களும் வண்டுகளும் மொய்ப்பது தெரியும். நந்தகோஷ் விரல் இடுக்கில் சேலையின் விளிம்பைப் பிடித்து, மடிப்பு மாறாமல் விரித்தார். அதனை வடிவமைத்த மனதின் ரசனை இப்போது இல்லை. அதேசமயம் மடிப்புகள் அடுக்கடுக்காக இளமைக்கால நினைவுகளைக் கிளர்த்தவே செய்தன. இளம் மேக்வாலாக்களைப் பொறுத்தமட்டில் செய்நேர்த்தி, கலைக்கான வஸ்து அல்ல. சேலைகள் ஷாகீ பரிவார்களுக்கே என்றாலும் நெய்கிறவர்களின் நினைவில் ராணி தனக்கானவராக மாற வேண்டுமென்கிற ஆசை அவசியம். இது மேக்வாலாக்களின் பழமொழி. ரசனைகளின் செயலூக்கத்தின் சொற்கள் அவை. ஆனாலும் எப்போதோ அவ்வாறு நிகழ்ந்த கதையும் உண்டு. ஒவ்வொரு சேலையும் அந்த உட்கிடையில்தான் உருவாகும்.

சேலையின் விளிம்பு நூல் விட்டு இத்திருக்கிறது. மரப்பெட்டியைத் திறந்து என்ன வண்ணமோ எதையும் பார்க்காமல் கிழிந்ததை மட்டும் முடிச்சிட்டுத் தைத்தார். நாணயத்தை வைத்து முடிவது மாதிரியான வடிவம். அழகாக இருந்தது. விரல்களிலும் வேகம் கூடிற்று. முகம் தெரியாத ராணியொருத்தியின் நினைவுகள் ஆடின. மூப்பின் மணம் போய்விட்டதாகத் தோளையும் புறங்கையையும் முகர்ந்தார். கைமயிர்கள் நாசியை வருடின. மறுபடியும் சேலையின் மடிப்பை உதறிவிட்டு முன்னதுபோலவே அந்த விளிம்பு பூராவையும் முடிச்சிட்டுப் பிண்ணினார். அது புது பாணியாக மாறிற்று.

குல்சியின் கழுத்தில் தொங்கும் தோல்பைக்குள் போட்டு மறுபடியும் ராதாபாய் வீட்டுக்கே திரும்பினார். நல்ல வேலையாக யாரும் பார்க்கவில்லை. வானத்தை அண்ணாந்தார், இரண்டாம் ஜாமம் முடிகிறது. எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும். முட்டை விளக்கு மட்டும் ராதாபாயின் வீட்டில் எரிகிறது. கிழக்குச் சத்திரத் தறிக்கூடத்திற்கும் ராதாவின் வீட்டுக்கும் வெகு தூரம். ஆனால், மழைப்புழையில் ஓடுவதுபோல உடலை, விசை தள்ளிக்கொண்டு போய்ச் சேர்த்தது.

மகாஜன் வருவதற்குள் நூறு முறை அந்தச் சேலை நினைவில் வந்து சேர்ந்ததாக ராதாபாய் சொன்னாள். கையில் வாங்கிய மறுகணம் முகத்தில் விகசிப்பு. அழகான பாவம் ஒன்று முகிழ, விரல்கள் அபிநயத்தடன் சேலையை விரிக்கிறது. சேலையின் விளிம்பு தரையில் பாவாமல் நேர்த்தியான விரிப்பு. தனக்காக ஓர் உதவி மட்டும் செய்ய முடியுமா என்று கேட்டபோது அதைப் புரிந்துகொண்ட நந்தகோஷ், கதவைச் சாத்திவிட்டு நகர்ந்தார். அவளுக்காகக் கொடுக்க வேண்டிய தனது நாற்பது வருடக் கடன் இத்துடன் முடிகிறதென மனம் சாந்தியாகிற்று. ஜன்னல் வழியே ராதாபாய் சேலையுடன் நிற்பது தெரிந்தது. ஜன்னல் முழுவதும் சாத்தவில்லை. இரண்டு ஜன்னல் கதவுகளும் கொண்டியில் மோதுகிற நடுவில் உள்காட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது.

சற்றைக்கெல்லாம் கட்டியிருந்த ஆடையை அவிழ்த்துவிடுகிறாள். அவிழ்க்க எந்தச் சிரமும் படவில்லை. உடலை ஓர் உதறல் அவ்வளவுதான். சுருங்கிய தோல், சூம்பிய முலைகள், நரைத்த யோனிஞ் அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ராதாபாய் விறுவிறுவெனச் சேலையைக் கட்டத் தொடங்குகிறாள். அடுத்த கணம் கண்ணுக்கு முன்னால் நடப்பதை மகாஜனால் நம்ப முடியவில்லை. விழித்திருக்கையிலேயே மறையச் செய்யும் செப்படி வித்தையாக ராதாபாயின் கிழ உருவம் பொலிவாகிறது, கூன் உடல் கூம்பிய மலர்த்தண்டு நிமிர்வதாட்டம் எழுகிறது. அல்லது சேலைக்கட்ட நிமிர்வதால் அப்படித் தோன்றுகிறதா? இதெல்லாம் உண்மையில் இயல்பானதா? ஒவ்வொரு பெண்ணுக்கும் சேலையில் இத்தனை பாங்கு உண்டா? இதுவரைக்கும் தான் நெய்த சேலை எந்தத் தேகத்திலும் பற்றியேறுவதை அவர் பார்த்ததில்லை. ஆமாம், இரண்டு சர்ப்பங்கள் ஒன்றையொன்று பிண்ணிப் புணர்வதாகத்தான் அந்தக் கருந்தேகத்தில் சேலைச் சுற்றுகிறது. நந்தகோஷ் அங்கு பார்ப்பது பதினாறு வயது ராதாவை. ஸ்தனங்கள் துடிப்புடன் நெளிகின்றன. மழைமேகமாக அது சேலைக்குள் மறைகிறது. அந்த இடமே மெல்ல அசைகிறது. ஏதோ கேட்காத வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. “மகாஜன்” என அவள் அழைப்பது கேட்கிறது. நந்தகோஷ் திரும்பிப் பார்க்கிறார். ஆனால், ராதாபாயின் முகம் கண்ணாடிப் பக்கம் திருப்பியுள்ளது. மறுபடியும் அக்குரல் சன்னமாக “மகாஜன் ஷாரீப்” என்றது. நந்தகோஷின் கண்களில் சட்டெனக் கண்ணீர் தோன்றியது. கால்கள் நிலத்தில் பாவவில்லை. தடுமாற்றத்துடன் விறுவறுவென நடந்து சத்திரத்துக்கு வந்துவிட்டார்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!