படையல்

வினையன்

“நாலு மாசமா படுத்தப் படுக்கயா கெடந்தேன். ஒரு நாயி வந்து சீண்டுல. இன்னக்கி பொணச்சிட்டுக் கெடக்குறாளுவோ… ஓப்புடியாளுந் தானும். திங்க சோறத்து… குடிக்கத் தண்ணியத்துதான்டீ போவீங்க சக்காள்த்திவோளா… ஒரு டீ தண்ணிக்கு வழியுண்டா? ஒரு மாத்துர மருந்துக்கு வழியுண்டா? இதே எடத்துலதான்… அந்தப் பெரிய குச்சிக்கரி மல்லாந்து கெடக்குறாள அந்த எடத்துலதான் பெரலக்கொட தெம்பில்லாம படுக்கைல மூத்துரம் போய்ட்டுக் கெடந்தேன். முடியாத பொம்பளயாச்சேன்னு ஒருத்தி வந்து என்னான்னு எட்டிப் பாத்துருப்பாளுவோளாஞ் வந்ததெல்லாம் வச்சிக்கிட்டு வக்கனையா திங்கிறாளுவோ… யாரு ஆயி அப்பன் சம்பாரிச்சிது. பொழுதுக்குள்ள ஆளா பாதியா கௌம்பி பூடுலண்ணா, கள்ளிமட்ட வச்சி கட்டிடமாட்டன் ரெண்டு செறுக்கிவொளயும்… வாய கொண்டாந்தவ வூட்டு உள்ளப் போனாளாம், வாழப்பழம் கொண்டாந்தவ வாசல்ல நின்னாளாம்… யாங் ஒழையல்ல திண்ணு, யாங் புருசன் ஒழையல்ல திண்ணு நொட்டிப்புட்டு… ஒரு மொரடு நீராரத்துக்கு வழியில்ல, இன்னக்கி எனுத்த பாரு என் மொவள்த்த பாருன்னு நல்லா விரிச்சிட்டுத் தூங்குறாளுவோ…”

“யாங்… ஓம் மொவளுவோளுக்குதான வச்சி வச்சி அழுத்துன. அவுளோல அள்ளச் சொன்னா என்னா பீ மூத்தரத்த… அவுளோல்ட்ட திங்க வேண்டிதான கறியும் மீனும்… இங்க என்னா நொட்டுது…”

நள்ளிரவைக் கடந்த நேரமது. தூரத்தில் நாயொன்று நரியைப் போல் ஊளையிடுகிறது.

“அட்டியேய், அட்டியேய்… தூக்கப்பத்தில யார்ட்ட பேசுற” என்றான் கொளஞ்சி.

“ஓத்தா தூக்கத்துலயுந்தான் வந்து உசுற வாங்குறா… ஒண்ணம் பொண்டாட்டி தூங்குத எதாச்சும் கேக்க வேண்டிதான… நான்னா ஓத்தாளுக்கு எளக்காரந்தான்” என அரைத் தூக்கத்தில் முனகினாள் வளர்மதி.

“பெணாத்தாமாப் பட்றீ…”

“நான் பெணாத்துற மேறிதான் இருக்கும். முப்பது படச்சி முடிஞ்சிதும் பெரியாண்டங் கோயிலுக்குப் போய்ட்டு வாங்க தம்பியும் நீனும்”

“தல தெவசம் குடுக்காம கோயிலுக்கு எப்புடி போவுறது”

“வயசுக்கு வந்த புள்ளிய எத்தன நாளு பூட்டி வச்சிருப்ப… மூணு மைலு தொலவு நடந்துபோயி தறிப் போடப்போறா… ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆவுதுன்னா… அப்புறம் அம்மான்னா வருமா, அய்யான்னா வருமா”

“மாப்ள கீப்ள அமஞ்சா ஒரேடியா போய்ட்டு வந்துர்லாம்” எனக் கையை மேலே போட்டார்.

“ந்த ச்சீ… ஒண்ணம் பொண்டாட்டி படுத்துருக்க தெர்ல” சட்டெனக் கையைத் தள்ளினாள்.

“அதப்போயி என்னா செய்யச் சொல்ற”

“மதமா ஒனக்கு… முழிச்சிட கிழிச்சிட போவுதுன்னு சொல்றன். இவரு பெரிய மைனரு ரெண்டு மூணு கேக்குது”

“…………”

m

“மாப்ள கூலி வேலக்கிதான் போவாப்ல… ஓஞ்சி ஒக்காரமாட்டான். இத்தன வருசமா அந்த ஊர்ல நாட்டும வேல பாத்துருக்கன். சும்மால்லாம் சொல்லக்கூடாது, தண்ணி கிண்ணின்னு எங்கியும் பாத்ததில்ல… ரோட்டு வேல வுட்டா கரும்பு வெட்டப் போவான். அது முடிஞ்சா ரோட்டு வேலக்கிப் போவான்” எனப் பெண் பார்க்க வந்தவர்களில் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

“எங்கூட்டுப் புள்ளயும் அப்புடி இப்புடின்னு இருக்குற புள்ள இல்ல. ஆரன்னாலும் விசாரிங்க… தம்பிக்காரன் பள்ளிக்கொடம் போறான்னு சோறு தண்ணிக்கு ஆவுமேன்னு உக்கோட்டக்கித் தறிப்போட போவும். அதும் இங்கேர்ந்து ஏழெட்டு புள்ளிவோ போவுது… கண்ணாலம் காசின்னு ஆச்சின்னா அதும் இல்ல”

“பள்ளிக்கொடம் இல்ல தாத்தா, காலேஜீ போறேன்” என சபையில் நுழைந்து சிரிப்புண்டாக்கினேன்.

வைகாசியில் திருமணம் எனப் பேசி முடிவாயிற்று.

“தலச்சம் புள்ளக்கிக் கல்யாணம்… வூட்லயும் மொத காரியம். ஒரு வார்த்த ஒம் பங்கும் பங்காளிக்குச் சொல்லிட்டுக் கொல தெய்வத்துக்குக் கார்ரூவா சூடம் வாங்கிக் கொளுத்திட்டு வா” என ஊர் முக்கியஸ்தர் நாராயணன் ஆலோசனை கூறினார்.

“ஆமா, இம்மோந் நாளு கொடுக்காத கடவுளுதான் இப்ப பொலந்துட்டுக் கொடுக்கப்போவுது… யாம் பெரியாளு நீ வேற நேரங் காலந் தெரியாம சூடங் கொளுத்து, சாம்புராணி போடுன்னு” என அலுத்துக்கொண்டார் கொளஞ்சி.

“இருக்கு இல்ல, செய்யிது செய்யிலஞ் அதுலாம் ஒரு மொறடா. நாளக்கி அதுவே ஒரு கொறயா இருக்கக்கூடாது. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆவுதுன்னு வையி, இதாம் போச்சு அதாம் போச்சும்பானுவோ” நாராயணன் பயத்தை உண்டாக்கினார்.

m

Illustration : shalini-karn

அப்பாவின் பூர்வீகம் அந்த மாவட்டத்துலயே சாராயத்திற்குப் பேர் போன ஒரு பகுதி. வங்குடி எனும் ஊர். காடி வெல்லம், கடுக்காய் கொட்டைகளின் வாசம் நிரம்பிய வீடாகவே இருக்கும் எப்போதும். காய்ச்சும் வேலையாயிற்றுக் காலணாவுக்கும் ஒப்பில்லாத உழைப்பு. வேலக்கிப் போயி என்ன ப்ரயோசனம், அடுக்குப் பானைகளில் காடி வெல்லம் நிரம்பியது மட்டுமே கண்ட பலன். பனை மட்டைகளையும் குச்சிகளையும் வீசிவிட்டு வெல்லத்தை வழித்து வழித்து நக்கிய நான் வயிற்றில் பூச்சிப் பிடித்துத் துடித்துக்கொண்டிருப்பேன். வயிற்றுப்பாட்டுக்கு அம்மாவோடு சீவு ஒடிக்கப் போய்விடுவாள் அக்கா… இங்கே அம்மா ஊருக்கு வந்த பிறகுதான் தறிப்போட போச்சு. அப்பாவால் போலீசுக்குப் பதிலு சொல்லியே தாவு தீர்ந்துவிடும்.

“சம்பாரிச்சு நொட்டுன வரைக்கும் போதும், கௌம்பு யம்மா வூட்டுக்குப் போவோம். கஞ்சோ கூழோ அங்கயிருந்து கௌரவமா திம்போம்” என்ற அம்மாவின் கோபம்தான் அப்பாவின் பூர்வீகத்திலிருந்து புறப்பட்டு அம்மாவின் பூர்வீக ஊரில் குடியமர்த்தியது. கடைசியாய் வங்குடியிலிருந்து கிளம்பும்போது பெரியாண்டவன் கோயிலுக்கு அப்பா அழைத்துச் சென்றிருந்தார். முன்னதாகக் காக்காபிள்ளைக் கடையில் ஓம ரொட்டி, சுருட்டு, அவுலு கல்ல சக்கர, சூடம், பத்தி, சாம்பிராணி, சந்தனம் குங்குமம் விவூதி என வாங்கி வைத்துவிட்டு, கிழக்கே தங்கமணி மாமா வீட்டுக்குப் போய் வருவதாகச் சென்றார்.

“போனமா வாங்குனமா வந்தம்மான்னு இருக்கனும். அவன் வாங்கிக் குடுத்தான் இவன் வாங்கிக் குடுத்தான்னு எவ சாண்டையாவது வாங்கிக் குடிச்சிட்டு வந்த… எம் புள்ளிவோல இழுத்துட்டுப் பூட்றன், நீ எம்மோங் குடிக்கினுமோ குடி” என்ற கண்டிப்புடந்தான் அனுப்பி வைத்தாள் அம்மா.

3 பாக்கெட் சாராயத்தோடு அப்பா வந்தார். படையல் சாமான்களோடு சாராயத்தையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். வீட்டிலிருந்து 500 மீட்டர் இருக்கும் பெரியாண்டவன் கோயில். மயானத்திற்குச் செல்லும் வழி என்பதால் தனியாகச் சென்றதில்லை. முதல் முறை அப்பாவோடு அன்றுதான் செல்கிறேன்.

“யப்போவ்… யப்பாடி, வெய்யிலு மண்டய பொலக்குது. யாம்புள்ள கொடைய எடுத்துட்டு வர்ற”

பதிலேதும் பேசாமல் செருப்புக்கான எல்லையைக் கண்டதுபோல் ஆரெஸ்பதி தோப்பில் ஓரமாகக் கழற்றி வைத்தார்.

குடையை விரித்து நுனியைத் தரையில் குத்தி படையல் பொருட்களை அதில் போட்டுவிட்டு விளா மரத்தடியில் தேங்கியிருந்த நீரைத் தேங்காய் ஓட்டில் சிறிது சிறிதாகக் கொண்டுவந்து மண்டைகளற்ற சுடுமண் குதிரைகளையும், காலுடைந்த காவல் சிலைகளையும், கை முறிந்த பெரியாண்டவனையும் தேய்த்துக் கழுவினார். முகம் சிதைந்த புத்தர் சிலை எப்போது வந்ததெனத் தெரியவில்லை. நீளமான செவ்வந்தி மாலையை மாட்டிவிட்டிருந்தார் அப்பா புத்தருக்கு. படையல் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துத் தரையில் வைத்து, பின் சந்தனங் குழைத்து, திருநீற்றுக் குங்குமம் வைத்துப் பூசைக்குத் தயாரானார். இடுப்பில் கட்டியிருந்த துண்டை வாய்க்குக் கட்டி, சாராயத்தை அவல் பொரியோடு அருகில் வைத்து, கற்பூர வில்லையொன்றைக் கொளுத்தி கண் மூடி தாம்பூலம் நீட்டினார் பெரியாண்டவன் முன்.

“காட்ட கட்டுல, மலைய கட்டுல, அடுப்படில கெடந்த ஒடம்பு… ஊரு பயலுவோலுக்கு ஒழச்சிக் கொட்டி ஒண்ணுத்துக்கும் ஆவுல. கெட்டழிஞ்ச வரைக்கும் போதும்னு வூட்டுக்காரி பொழப்பப் பாக்குலாம்னு ஊரப்பக்கம் கூப்புட்றா. போவுறது ஆவுற சோலியா இருக்குமா? ஓம் புள்ளயா நெனச்சி சொல்லு. போற எடம் பொழங்கி, குடும்பம் வௌங்குனா குறுக்குரோட்டுச் சந்தைல கெடா ஒண்ணு புடிச்சியாந்து வுட்டுட்றேன். ஆடி கட வெள்ளில வெட்டிப் படையல போட்டுட்றேன்” எனப் பல்லைக் கடித்துக்கொண்டு சுடுமண் சிலைகளைப் பார்த்து அப்பா பேசிக்கொண்டிருந்தார்.

யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்கிற ஆச்சர்யமும் பதற்றமும் கலந்து நின்றிருந்தேன். கள்ளியின் மீது படர்ந்திருந்த பிரண்டையின் இடுக்கிலிருந்து பல்லியொன்று கத்தியது. அப்பா விழுந்து வணங்கினார். கொண்டுவந்த மூணு பாக்கெட் சாராயத்தில் ஒரு பாக்கெட்டின் மூலையைக் கடித்துத் தெளித்துப் படையலை முடித்தார். வண்ண ஓம ரொட்டிகளை எனக்களித்துவிட்டு, சாராயத்தை மடக் மடக்கென இழுத்தார். ஓம ரொட்டியின் வாசமும் அப்பா குடித்த சாராய நெடியும் அந்த நாள் முழுக்க ஆயா வீடு வந்து சேரும் வரை வீசியபடியே இருந்தது. அதன்பிறகு அப்பா சாராயம் குடிப்பதில்லை. கொஞ்ச நாளிலேயே சாராயம் ஒழிக்கப்பட்டுவிட்டது.

m

அதே பெரியாண்டவன் கோயில், அதே நான், அதே அப்பா. இப்போது அக்காவின் திருமண ஏற்பாட்டால் முதலாகக் குல தெய்வத்துக்கு ஒரு சூடம் வாங்கி ஏற்றலாமென நாராயணன் தாத்தா சொன்னதால் வந்தோம். சுடுமண் குதிரைகளும், சுடுமண் கடவுள் சிலைகளும் சில்லுச் சில்லாய் உடைக்கப்பட்டு, கொல்லை ஓரத்தின் ஒரு மூலையில் முட்டுக்கட்டி வைக்கப்பட்டிருந்தன. வண்ணங்கள் பூசப்பட்ட சிமெண்ட் குதிரைகள் விறைப்பாய் நின்றிருந்தன. பெரியாண்டவன் உடலின் குறுக்கே ஒரு வெள்ளைக் கயிறு சிமெண்ட்டால் செய்து சாயம் பூசப்பட்டிருந்தது. முகம் சிதைந்திருந்த புத்தனை அங்கு காணவில்லை. படையலை முடித்துவிட்டுக் கிளம்பும்போது அப்பா சொன்னார்,

“வெராக்குடிக்கு வண்டிய வுடு… அம்மா வூட்டுக் கொல தெய்வம் அங்கதான். ஒரு எட்டுப் பாத்துட்டு சூடங் கொளுத்திட்டுப் போவோம்”

நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுவரை வெராக்குடி சென்றதில்லை. அன்று அப்பா சொல்லவும்தான் அம்மாவுக்குத் தனி குல தெய்வம் வேறோர் ஊரில் இருப்பதே தெரியும். முன்பு ஓர் ஆடி மாத கடைசி வெள்ளியில் கண்ணையன் தாத்தா வீட்டுப் பின்பக்கத் தோட்டத்தில் இருந்த வீரனுக்குப் பெரும் படையல் நடந்தது. அந்தக் கோயிலைத்தான் அம்மா அவங்க அப்பன்வழி கோயில் என்றார்.

“அந்த ஊர்ல கண்ணையந் தாத்தா வூட்டுக்குப் பின்னேடி இருக்கே அது என்னா சாமிப்பா…”

“வெராக்குடி வீரந்தான்… வந்து வந்து போவ முடியாதுன்னு இந்த ஊர்லர்ந்து கைப்புடி மண்ணும், சொம்பு தண்ணியும், ஒரு கல்லும் கொண்டாந்து அங்க நட்டுட்டாங்க. ஆனா வீரனுக்குப் பூர்வீகம் வெராக்குடிதான்”

அப்படிக் கொண்டுவந்த பிறகு ஒரு ஆடி வெள்ளியில் நடந்த பெரும்படையலோடு சரி. அதன் பிறகு கேட்பாரற்றுக் கிடக்கிறது அக்கோயில். தங்கலார் வீட்டுக் குடும்பமும் தாத்தா வீட்டுக் குடும்பமும் வெவ்வேறு வகையறாவாக இருந்தாலும், வகையறா சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தனியாக எடுக்கமாட்டார் தலைமை நாராயணன் தாத்தா. தங்கலார் கலியமூர்த்தி தாத்தா ஆலோசனையின் பேரில், சின்னக் கட்டையனைப் பூசாரியாக நியமித்தார் நாராயணன் தாத்தா.

பூமாலையோடு அரசமரத்து வேரிடுக்கில் படுத்துக் கிடந்தது கிடாப் பன்றியொன்று. சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் பாடை திருப்பும் முக்குட்டுத் தெருவில் யாருமற்ற விடியற்காலையில் பன்றியைப் பலியிட்டு இழுத்து ஓடி வருவார்கள். எதிரில் யாரும் வரக்கூடாதென்பது சாங்கியம். மறுநாள் உதிர வாய் துடைப்புச் சடங்கு முடிந்து வீடு திரும்பிய சின்னக் கட்டையன் வெள்ளி, செவ்வாய்க்குக் கூட ஒரு வில்லை சூடங் கொளுத்த மாட்றான் என வகையறா ஆட்கள் புலம்பியதுண்டு.

வெராக்குடியை வந்தடைந்தோம்.

ஆளுயர வீரன் சிலை, அரையாளுயர இரும்புக் கத்தி, அழிஞ்சி மர நிழல், ஆளகள்ளி ஆடும் சத்தம், காரக்காயும் காட்டு ஆமணக்கும் நிறைந்த சிற்றோடை, சவுக்கையின் மென்னிரைச்சல், நெடிதுயர்ந்த பனைமர நிழல், பெரியாண்டவனை விடவும் நெருக்கமாக உணர வைத்த வீரன்… தூரத்தில் ஆடு மாடுகளைக் குளத்தில் இறக்கித் தண்ணி காட்டிவிட்டு எங்களை நோக்கி ஒருவர் வந்துகொண்டிருந்தார்.

“ஆரது… எந்த ஊரு நமக்கு?”

“இங்கதாங்க கெங்கன்றம்”

“படைக்க வந்துட்டு ஒரு வாத்த ஊரு பூசாரிக்கிட்ட சொல்லலாம்ல… அதான மொற”

“புள்ளக்கிக் கல்யாணம் வச்சிருக்கேன்… நம்ம குடும்பத்துல நல்லதுன்னா கொல தெய்வத்துக்கு வந்து சூடமாச்சும் ஏத்துறது வழக்கம். அதாங்க”

“நல்லதோ கெட்டதோ ஊருல தங்கவேலு படாச்சினா கேளுங்க… ரெண்டு தலமொறயா எங்க குடும்பந்தான் பூசாரி வேல செய்யிது”

அப்பாவை அதிர்ச்சியோடு பார்த்தேன். அப்பா மிக இயல்பாக, வாங்கிவந்த படையல் சாமான்களைத் தந்தார். படையல் முடித்து அவல் பொறியைக் கையிலெடுத்த பூசாரி,

“கெங்கன்றத்துல வூடு எங்க இருக்குங்க”

“அழவர்கோயில் ரோடுங்க”

“மெயின் ரோட்லயா உள்ளயா…”

“உள்ளதாங்க, கால்னி தெரு…”

“…………..”

தண்ணீர் குடித்த ஆடுகள், கோயில் சூலத்தில் போட்டிருந்த செவ்வந்தி மாலையைத் தின்றுகொண்டிருந்தன. பூசாரி ஓடையில் விழுந்து தலை மூழ்கினார்.

ஆளுயர வீரனை விழுந்து வணங்கி அப்பாவும் நானும் கிளம்பினோம்.

புகையும் சுருட்டின் வாடையைக் கக்கிக்கொண்டே ஊர்ந்தது என் ஈருருளி.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!