பனி இருள் நெருப்பு

பிரேம்

“அக்னெஸ் வார்தாவுடைய ‘சான் துவா நீ லுவா’ பார்த்திருக்க இல்லையா?” தாராமதி கேட்டாள். “நீயும் நானும்தானே பார்த்தோம் தாரா,” நான் சொன்னேன். “அப்போ நீ எங்கூட இருந்தியா ஜோதி?” தாரா கேட்டாள். “பாரு, என் பேரு ஜோதி இல்ல, ஜோதிமணி. அது எனக்கு புத்தர் இட்ட பெயர். நீ என்ன ஜோதின்னு பாதி பெயரில கூப்பிட்டா நானும் உன்ன தாரான்னு பாதி பெயரிலதான் கூப்பிடுவேன்.” “அப்ப நீ என்ன மதின்னு பாதி பெயரில கூப்பிடலாமில்ல?” “அப்படித்தான் உன்ன முன்னெல்லாம் அதிகம் கூப்பிட்டிருக்கேன். நாம முன்னமாதிரி இல்ல, வயசு ஆயிடுச்சி.” அவளுக்கு முகம் மாறிவிட்டது. “எனக்கு ஒன்னும் வயசாகல.” “அப்ப எனக்கு?” “உனக்கா நீ இன்னும் வளரணும். ரொம்ப சின்னப் பெண்ணாவே இருக்க. நல்லா சாப்பிடணும், இப்படி இருந்தா எப்படி நீ வளர்ரது?” தாராமதி சொல்லிவிட்டுப் புன்னகைத்தாள். “கூரையும் இல்லை, சட்டமும் இல்லை” “அதற்கு என்ன இப்போ?” மனம் தடுமாறியது. “சாப்பிட வேணும்.” “ஆமாம் நீ சாப்பிட வேணும், அப்பத்தான் நானும் சாப்பிடுவேன்.”

“நான் எப்படிச் சாப்பிட முடியும் சொல்லு? அக்னெஸ் வார்தா படத்தில வர்ற மோனா செத்து உறைஞ்சி கிடப்பாளே அப்படித்தானே நான் ஒரு வாரமோ, ஒரு மாசமோ உறைஞ்சி போய் இருந்தேன். கோணலாகிக் கைகள் ஒரு பக்கம் கால் மறுப்பக்கம், அப்படித்தான் நான் உறைஞ்சி போய், இந்த அறையில் கிடந்தேன். நீ வந்து பாக்கவே இல்லையே ஜோதி, ஆமாம் ஜோதிமணி. நீ என்ன வந்து பாக்கவே இல்லையே. நான் எப்படிச் சாப்பிடறது சொல்லு.”

தாராவைப் பார்க்க மனது உள்ளுக்குள் புகைந்து கருகியது, கண்ணீரை அடக்கிக்கொண்டேன். “தாரா நான் எங்கேயும் போகல, பக்கத்து அறையிலதான் இருந்தேன்.” “இல்ல ஜோதி நீ பொய் சொல்ற.” “நான் உன்னிடம் பொய் சொல்லியிருக்கனா சொல்லு?” “நீயா, நீ என்கிட்ட பொய் சொல்ல மாட்ட. ஆனா சில உண்மைகள மறைப்ப, அது எனக்குத் தெரியும்.” “நீ என்ன நம்பல, அப்படித்தானே? சரி அப்படியே இருக்கட்டும்.”

“அந்தப் படத்தில் நடிச்ச பெண் யாரு சொல்லேன்?” “அவ பேரு சார்தின் போனெர், எனக்குத் தெரியும். ஆனால் நீதான் எனக்கு மறதி அதிமாயிடுச்சின்னு சொல்லற.” “அப்படியில்ல. சரி நீ சொல்லேன், வார்தா அந்தப் படத்த எடுத்த வருடம் என்ன?” ”சொல்லவா?” “சொல்லு.” “1985ஆம் வருஷம்.” “மக்கு உனக்கு எல்லாம் மறந்து போச்சி. வார்தா அத 1983, 1984 எடுத்தாங்க. அவங்களே சினிமோடோகிராபி, எடிட்டிங் எல்லாம். உனக்குத்தான் மறதி, முழு மறதி.” அவள் என் கையைப்பிடித்துத் திருகினாள். “நான் அது வெளிவந்த வருஷத்த சொன்னேன்.” “அதுவா நான் கேட்டேன். எடுத்த வருடம் பத்திக் கேட்டேன். நீ வெளிவந்த வருஷத்தைச் சொல்ற. அதனாலதான் சொல்றேன் உனக்கு எல்லாம் மறந்து போச்சி. அப்படித்தான் நீ இதயும் மறந்து போயிட்ட.”

அவளுக்கு எதுவும் மறக்கவில்லை, எதுவும் ஞாபகமும் இல்லை. அதிக ஞாபகம், ஆனால் அது எப்போது எந்த இடத்தில் வருவது என்பதில்தான் குழப்பம். அவளிடம் கேட்டேன், “எத நான் மறந்து போயிட்டேன். பத்து இருபது நாளா நான் அந்த மோனா போல செத்து உறைஞ்சி போயி இந்த அறையில் கிடந்தேன், நீ என்னத் தனியே விட்டுட்டு வெளியே போயிட்ட. ஆனா அது எல்லாத்தையும் மறந்து போயி பக்கத்து அறையில இருந்ததா சொல்ற. உனக்கு அது உண்மைன்னு தோணுது. இதுதான் மனக்கோளாறு, நீ மருந்து எடுக்க வேண்டும்.”

“ஜோதி, நான் சொல்லறன் உனக்கு மருந்து தேவை, சிகிச்சை தேவை. ஆனால் இந்த டாக்டர்கள், உளநோய் மருத்துவம் எதையும் நம்பாதே. ஆமாம் நான் உனக்கு மருந்து கொடுக்கிறேன். நிறைய படம் பாரு ஆமாம், அப்புறம் உன்னக் காட்டுக்குக் கூட்டிப்போறேன். அங்க இருக்கிற சில மூலிகைகள், வேர்கள் உன்னக் குணப்படுத்திடும். நீ குணமானா நானும் குணமாயிடுவேன். பிறகு நீயும் சாப்பிடுவ, நானும் சாப்பிடுவேன். இரண்டு பேரும் ஒன்னா சாப்பிடலாம். ஆனா நான் சொல்வத கேக்கணும்.” தாரா பேசிக்கொண்டே சென்றாள். கண்ணீரை அடக்கிக்கொண்டு, “வா பல் விளக்கு, முகம் கழுவு, நானும் நீயும் சாப்பிடலாம்” என நகர்ந்தேன்.

எழுந்து வந்தவளிடம் பேஸ்ட், பிரஷ் கொடுத்து துண்டை வைத்துக்கொண்டு குளியல் அறைபக்கம் நின்றுகொண்டேன். ‘தாராமதி, தாரா உனக்கு ஒன்னும் ஆகல,’ எனக்குள் சொல்லிக்கொண்டேன். தாரா உள்ளே இருந்து வாய் நிறைய நுரையுடன் “என்ன சொன்ன ஜோதி, ‘உனக்கு ஒன்னும் ஆகாது’ அப்படித்தானே. நானும் அதையே சொல்லுகிறேன். நீதான் அத நம்ப மாட்டிங்கிற. உனக்கு ஒன்னும் இல்ல.”

எனக்கு மனதில் ஒரு வீறல் விழுந்தது, நான் உள்ளுக்குள் சொல்லிக்கொள்வது இவளுக்குக் கேட்கிறதா, அல்லது நான்தான் உரக்கப் பேசிவிடுகிறேனா? எத்தனை மாதமாகிறது அவள் இப்படி மாறி. அவள் முன்பே இப்படித்தான். அவள் பேசுவது பலருக்குத் தொடர்பற்றதாக, துண்டு துண்டாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், எனக்கும் அவளுக்கும் அது மிக இயல்பாக இருக்கும். அவள் பேசுவதைப் புரிந்துகொள்ள அவள் படித்தவைகளை, பார்த்தவைகளை, அறிந்தவைகளை, உணர்ந்தவைகளை, எழுதியவைகளை, புலம்பியவைகளைத் தெரிந்திருக்க வேண்டும். எனக்கும் அவளுக்கும் மட்டுமே ஆனது அது. எங்களுக்குள்ளான பேச்சு, இயல்பாக இருக்கும். ஆனால், இது ஒன்றும் எங்களுக்கு மட்டுமுள்ள தன்மை இல்லை. ஒவ்வொருவருக்குமே அப்படித்தானே.

இரண்டு நண்பர்கள், இரண்டு எதிரிகள் தொடங்கி குடும்பம், வேலையிடம், பொது இடம், தனியறை, கட்சிக் கூட்டம், சிறைச்சாலை அத்தனையிடங்களிலும் அத்தனை பேரும் பேசுவது அங்கங்குள்ள இருவருக்கோ மூவருக்கோதான் புரியும். “நான் சொன்னது புரியுதா” என்று ஒருவர் கேட்கும்போது “புரியுது” என இன்னொருவர் சொல்லுவது இந்த அர்த்தத்தில்தானே. ஒரே மொழியில் இருவர் பேசிவிடுவதால் அது அவர்களுக்குப் புரிந்துவிடுமா? மொழி ஒன்றுபோல அனைவருக்குமானதா என்ன?

எனக்கு என்ன ஆனது, நான் ஏன் இப்போது சிறைச்சாலை பற்றிப் பேசுகிறேன்? தாரா, தாராமதி கேட்டால் வருத்தப்படுவாள். என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, ‘பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டு வருவேன்’ என்று புலம்பத் தொடங்கிவிடுவாள். எனக்கு என்ன ஆனது. தாராவை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். எனக்கு ஒன்று ஆகிவிட்டால் அவள் கதி?

“ஜோதிமணி, நாம இப்போ சாப்பிட்டுவிட்டு வெளியே போகணும்” முகத்தைத் துடைத்தபடி வந்தாள் தாரா. “சரி போகலாம், ஆனால் மூன்று தோழர்கள் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் வரலாம்.” “தோழர்களா? அவர்களைப் பற்றி இப்போது ஏன் நினைவுபடுத்துகிறாய், அவர்கள்தான் சிறையில் இருக்கிறார்களே.”

எனக்குக் கைகளில் நடுக்கம் ஏற்பட்டது. எல்லோருமே சிறையில் இல்லை. சிலர் வெளியேதான் இருக்கிறார்கள். “சொல்லு ஜோதி, நான் வெளியேதானே இருக்கிறேன்,” “நீ வெளியே வந்துவிட்டாய்,” “அது தெரியும். நான்தானே உன்னை வெளியே போகச் சொன்னேன்.” அவள் கையைப் பற்றி, “நானும் வெளியேதான் இருக்கிறேன், நீயும் வெளியேதான் இருக்கிறாய். நாம் இருவருமே இந்த வீட்டில் இரண்டு அறைகளில் இருக்கிறோம்” எனச் சொன்னேன். அவள் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, “அதுதான் சொல்கிறேன், நீ பக்கத்து அறையில் இருந்துகொண்டே பல மாதங்களாக என்னைப் பார்க்க வரல. நான் தனியே கிடந்தேன்.”

என் கண்ணீரை மறைத்துக்கொண்டேன். தோளைப் பிடித்து வெளியே நடத்திவந்து உட்கார வைத்துவிட்டு அவளுக்குப் பிடித்த அடைகள் இரண்டைத் தட்டில் வைத்துக் கொடுத்தேன். “இது உங்க அம்மா செய்ததுதானே, உங்க அம்மா எவ்வளவு பாசம் தெரியுமா. நம்ம ரெண்டு பேரையும் ‘இங்க இருக்காதீங்க குழந்தைகளா, வேற எங்கயாவது போயிடுங்க. பெரிய நகரமா, யாருக்கும் தெரியாத நகரமா’ அப்படின்னு சொல்லி அனுப்பி வைச்சாங்க இல்ல. அந்தப் பதினேழு வயசுல யாரு அப்படி ரெண்டு பெண் பிள்ளைங்கள அனுப்பி வைப்பாங்க சொல்லு.” அடையை எனக்கு ஊட்டியபடி அவள் பேசிக்கொண்டிருந்தாள்.

கண்ணீர் கன்னங்களில் வழிந்துகொண்டிருந்தது. அது எனக்கா, இல்லை அவளுக்கா? “சரி சாப்பிடு, மருந்து சாப்பிடும் நேரமாகிவிட்டது.” “ஆமாம், நம்மள அனுப்பி வைச்சது உங்க அம்மாவா, என்னுடைய அம்மாவா, அல்லது உன்னோட அக்காவா? சரியா ஞாபகம் இல்லை. உங்க அம்மாதான் அது. அன்னிக்குக் கரகாட்டம் ஆடிக் களைச்சி, நள்ளிரவுக்குப் பின்னால அறைக்கு வந்தாங்க. நாம முழுச்சிருக்கிறது அவுங்களுக்குத் தெரியாது இல்லையா. ஒரு குவாட்டர் ரம்ம எடுத்துக் குடிச்சிட்டு, அலங்காரத்த எல்லாம் கலைச்சிட்டு ஒரு சின்னப் பிள்ளைய போலப் பாவாடை சட்டயோட படுத்துத் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க. நாம எவ்வளவு முட்டாளுங்க, அப்போ அப்படி நாம நடந்திருக்கக்கூடாது.

“மறுநாள் காலையில குளிக்கப் போகும்போது என்னத் தனியே கூப்பிட்டுச் சொன்னாங்க, ‘மல்லிகா உன்னப் பத்தியே பேசிக்கிட்டிருப்பா. அவள வீட்டுக்குக் கூட்டி வரட்டான்னு ரெண்டு வருஷமா சொல்லிக்கிட்டே இருப்பா. நம்ம ஊரு அதுக்குத் தயாராவல செல்லங்களா, ரெண்டு பேரும் படிக்கப் போறதா வெளியே எங்கயாவது போயிடுங்க.’ அம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சிதான் ஜோதி.

“அம்மா என்ன சொல்றிங்கன்னு பயத்தோட கேட்டேன். ‘பொண்ணு மனசு பொண்ணுக்குத் தெரியும், அதுவும் நான் ஆட்டக்காரி. எனக்கு எல்லாம் தெரியும்.’ தலையைத் தடவிக் கொடுத்து, ‘பயப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன் செவ்வந்தி கண்ணு. உன் பேரு மாதிரி நீயும் அழகுடி கண்ணு.’ அம்மாவ என்னால நம்ப முடியல ஜோதி. இன்னிக்கும் நம்ப முடியல.” அவள் பேசிக்கொண்டே இருந்தாள்.

மல்லிகா, செவ்வந்தி இரண்டு பேரும் தாராமதி, ஜோதிமணி ஆனது பெரிய கதையெல்லாம் இல்லை. சின்ன கதைதான், சின்னதான ஒரு கதை. கதை எழுத வைத்துக்கொண்ட புனைபெயர்கள். நாடகத்திற்காக, வெளியீடுகள் எழுத, மேடைகளில் பேச, பேசிக்கொண்டே இருக்க, நடித்துக்கொண்டே இருக்க எங்கள் பெயர்கள் அதுவாகவே ஆகிவிட்டன. “மல்லி சாப்பிடு” என்று தாரா பல வருஷங்களுக்குப் பிறகு சொன்னதும் முதலில் அதிர்ச்சிதான். ஆனால் திடீரெனக் கன்னம் சிவந்துவிட்டது. முறைத்தபடி “நீ சாப்பிடு செவ்வந்தி, நானும் சாப்பிடறேன்” என்றேன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “தோழர், யார் அது செவ்வந்தி” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

கன்னத்தின் சிவப்பு மறைந்து, கண்கள் மங்கின. அவளை மருந்து சாப்பிட வைக்க நானும் சில மருந்துகளைச் சாப்பிட வேண்டும். பல நிறத்திலான விட்டமின்கள். மருந்து சாப்பிட்ட சில நிமிடங்களில் அவள் தூக்கக் கலக்கத்தில் பேசத் தொடங்கினாள். “நீ கிம் கி டுக் இந்தியா வந்தப்போ சந்திச்ச இல்ல, கேட்கச் சொன்னேனே கேட்டியா? உன்னோட படங்கள்ல வர பெண்கள நீ எங்க சந்திச்ச? எல்லாப் பெண்களும் ஆண்களையே காதலிக்கறாங்க அல்லது கொல்றாங்களே ஏன்? பெண்கள் பத்தி உனக்குத் தெரியுமா?” நான் எதுவும் பேசிவில்லை. அதை அவள்தான் கேட்டாள், நான் அதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். தாரா நெற்றியைத் தடவிக்கொண்டே “அப்படி நான் கேட்டிருக்கக்கூடாது. அவனை அதுதான் தற்கொலைக்குத் தள்ளியிருக்கும், பாவம். இந்த ஆண்கள், பாவம்தான் ஜோதி.”

“இல்லை தாரா, கிம் தற்கொலை செய்துகொள்ளவில்லை.” “அப்படியென்றால் நான்தான் கொலை செய்தேன் என்கிறாயா? அல்லது தற்கொலை செய்துகொண்டது நான்தான் என்கிறாயா? சரி சொல்லு, ஏன் கொலை செய்யக்கூடாது? என்னுடைய அப்பா போன்ற ஆண்களை ஏன் கொலை செய்யக்கூடாது?”

“நீ ஒன்றும் தற்கொலை செய்துகொள்ளவில்லையே, சீச்சி, நான் என்ன பேசுகிறேன். நீதான் என்னோட இருக்கியே.” தூக்கம் சொக்க, “அந்தப் புத்தகத்த எடு” என்றாள் தாரா. “அப்புறம் படிக்கலாம் இப்ப கொஞ்சம் தூங்கு” என்றேன். அவளைத் தூங்க வைப்பது நல்லது.

நாள் முழுக்கத் தூங்குவது, அல்லது இரண்டு நாட்கள் சாப்பிடாமல் அறைக்குள் உலவிக்கொண்டே இருப்பது. அவளை மீட்டுக் கொண்டுவர நான் என்ன செய்ய வேண்டும். “ஜோதி ஜோதி இங்க வா. அந்த சன்னல் வழியா பாரு, பயப்படாம பாரு” என்றாள் தாரா. வெளியே தெருமுனையில் மூன்று தோழர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். எனக்கு எப்போதும் போல அதிசயம்தான், பார்க்காமலேயே இப்படி எதையாவது சொல்லுவாள், அது உண்மையாக இருந்துவிடுவதுண்டு. “ஆமாம் தாரா, தோழர்கள் வருவதாகச் சொன்னேன் இல்லையா. அவர்கள்தான், வரச் சொல்லவா.”

“முதலில் அவர்கள் தோழர்கள்தானா என்று சரியாகப் பார். யாரும் புலனாய்வுத் துறையாக இருக்கலாம், உளவு பார்க்க வரலாம்.” “அப்படியெல்லாம் இல்ல, மூவருமே தோழர்கள்தான்.” “எப்படிச் சொல்ற, அதில் ஒருவர் உளவுத் துறையாக இருந்தால் என்ன செய்வது. முன்னே அப்படித்தானே நடந்தது. எத்தனை பேர் சிறைக்குப் போக வேண்டியிருந்தது.”

அவள் என்னைப் பார்த்து மெல்லிய குரலில் “அவர்களில் யார் அதிகம் தோழமையுடன், அன்புடன், தீவிரத்துடன் பேசுகிறாரோ அவரே உளவாளி, பார்த்துக்கொள்”. “அப்படி இல்லை தாரா. இவர்களை எனக்கு நெடுநாட்களாகத் தெரியும், இப்போது அவர்கள் சிறையில் இருக்கும் தோழர்களை மீட்கும் குழுவில்தான் இணைந்து செயல்படுகிறார்கள்.” “மொபலைக் கொடு” என்று வாங்கியவளின் விரல்கள் நடுங்கின. “அதில் ஒருவருடைய எண்ணைச் சொல்” என்றபடி பொத்தான்களை அழுத்தினாள். “தோழர் நான் தாராமதி பேசுறேன், நீங்க சந்திக்க வர்றதா தோழர் ஜோதிமணி சொன்னாங்க. எப்ப வருவீங்க? இன்னும் இருபது நிமிடமா? இப்போ எங்க இருக்கீங்க? பாலத்தைத் தாண்டி வரீங்களா? சரி, வழி தெரியுமில்ல. வாங்க.” மொபைலை என்னிடம் தந்துவிட்டு “தோழர்கள் வர்றாங்க, பேசி அனுப்புங்க ஜோதிமணி தோழர்” என்றபடி அறைக்குள் சென்றுவிட்டாள்.

சன்னல் வழி பார்த்தேன். அவர்கள் வந்த வழியே போய்க்கொண்டிருந்தார்கள். நான் அவள் பக்கத்தில் படுத்துக் கை விரல்களை வருடியபடி, “உனக்காக மூன்று நாவல்கள் வாங்கி வைத்திருக்கிறேன். என்ன சொல்லு பார்க்கலாம்” என்றேன். “வேறு என்ன யோசே சரமாகோ, அலெஜான்ரோ ஸாம்ப்ரா எதாவது வாங்கி வைச்சிருப்ப. சராமாகோ, அந்தப் பைத்தியத்த படிக்கவே கூடாது தூக்கிப் போடு. பிளைண்ட்னஸாம் பிளைண்ட்னஸ் கொக்காள…” “என்னப்பா இது?” நான் வருத்தத்துடன் கேட்டபோது “கெட்ட வார்த்த பேசக் கூடாதில்ல. எல்லா கெட்ட வார்த்தையும் அம்மா, அக்கா இப்படித்தானே இருக்கு. போப்பா இது ஆண்களுக்கு. பெண்களுக்கு அப்பா, அண்ணன் அப்படித்தானே இருக்கு.” “நாம பள்ளிக்கூடம் படிக்கும்போது கெட்ட வார்த்தைகள பட்டியல் போட்டு ஆராய்ச்சியே பண்ணியிருக்கோம் இல்ல?”

“ஆமாம், நாம ஒன்பதாவதுல பண்ணத இப்போ பெரிய எழுத்தாளங்க உலக ஆராய்ச்சியா பண்ணிட்டு இருக்காங்க!” என் கண்கள் கலங்கின. “இப்படியே பேசிக்கிட்டு இருடி செல்லம், ஏன் அப்பப்போ இந்த நாசமா போன உலக அரசியல்லாம் பேசற?” “இப்ப என்ன சொல்லுற? பிராய்ட் பத்திதானே. அவன் அம்மா அப்பான்னுதானே எழுதியிருக்கான். இப்ப வரவங்க அம்மா இல்ல, அம்மா இல்லன்னு எழுதிக்கிட்டு இருக்காங்க. இப்படியே எழுதிக்கிட்டுக் கெடக்க வேண்டியதுதான். அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் தாய்ப்பாசம் எல்லாம் வெறும் சுயநலம், பிள்ளைகள் அம்மாவை நேசிப்பதெல்லாம் வெறும் சுயநலம். சுவையான உணவு, சுவையான முலைப்பால், அம்மாவின் உடம்பைத்தான் தின்கிறது ஒரு குழந்தை. தனது பெண்மையைப் பெரிதுபடுத்திக் காட்ட தாய்மைப் புலம்பல், பிள்ளைக்காகத் தியாகம் எல்லாம். ஆண்மைய நிரூபிக்க அப்பன் வேஷம். உயிரியல் உந்துதலுக்குக் காதல் வேஷம். நாசமாப் போக.” அவள் கைவிரல்களை நெரித்துக்கொண்டாள். “இதுதான் எல்லாம். எனக்கு என்ன தோணுதுண்ணா, கிட்ட வா சொல்லுறேன்.” காதில் கிசுகிசுத்தாள். “பிராய்டுதான் சொன்னான், அங்கதான் இருக்காம் எல்லாம்.”

மூக்கைப் பிடித்துத் திருகியபடி, “வயசானாலும் புத்தி போகுதா பாரு. ஆமாம் உன்னோட மார்க்ஸ் ரொம்ப யோக்கியன். அந்த ஏங்கல்ஸ் குடும்பம் தனிச் சொத்துன்னு எழுதிட்டு ஊருக்கொரு குடும்பம், நாட்டுக்கொரு காதலின்னு வாழ்ந்துக்கிட்டு இருந்தான். பேச வந்துட்டா, பெரிய இவ. இதுங்க எல்லாம் ஒன்னுதாண்டி, தனிச் சொத்து, தனி அரசு, தனி முத்தம், தனி உரசு.” அவள் தலையணையைத் தூக்கி அடித்தாள்.

“நீங்க ரொம்ப யோக்கியமா? மூடி வைக்கணும் அப்படிண்ணு ஒரு பத்து வருஷம், அப்புறம் தொறந்து போட்டு நடக்கணும்னு ஒரு பத்து வருஷம், உடன்பிறந்தவர்களா வாழனும்ணு ஒரு பத்து வருஷம், பிறகு உடன்படுக்க வேணும்னு ஒரு பத்து வருஷம். இப்படியே மாத்தி மாத்தி பேசிக்கிட்டே இருங்க, வாய்கிழிய.” அவள் மீண்டும் காதில் வந்து ஒரு வாக்கியம் சொன்னபோது அவளுக்குக் குணமாகிக்கொண்டுவருகிறதோ என்று மனதிலோர் ஆறுதல் வந்தது.

“உனக்கு ‘கிரைஸ் அண்ட் விஸ்பர்ஸ்’ படத்தில் வரும் பெண்கள் எத்தனை பேர் என்று ஞாபகம் இருக்கிறதா?” நான் ”மூன்று பேர்” என்றேன். “மக்கு, நான்கு பேர். உனக்கு அந்தப் பணிப்பெண் தோழிய நினைவில இல்லை, அதுதான் சாதி வர்க்க உணர்வின் நினைவிலி நிலை.” எனக்குக் கோபம் வரவில்லை. அவள் அப்படித்தான் பேச வேண்டும். எங்கள் சாதிகளை அவள் மாற்றிப் போட்டுதான் பேசுவாள். அவள் அப்படிப் பேசுவது எனக்குப் பிடிக்கும்.

நான் அவளுக்கு ஒரு போட்டி வைத்தேன் “‘டின் டிரம்’ படத்தில் வரும் அந்தச் சிறுவன் முதன்முதலில் அந்தப் பணிப் பெண்ணிடம் என்ன செய்வான்?” “அவனா… அவளுக்குக் கேக் வாங்கி ஊட்டிவிடுவான், சரிதானே.” நான் விழித்தேன். அவளோ “உனக்குத் தெரியாத மாதிரியே இரு, நல்லது” என்றபோது அழைப்பு மணி ஒலித்தது.

மூன்று தோழர்கள் உள்ளே வர, உட்கார வைத்துவிட்டு தாராவை வந்து கூப்பிட்டேன். “வரணுமா” என்றவள் ஒரு துணியைக் கழுத்தில் சுற்றிக்கொண்டு வெளியறைக்கு வந்தாள். அவர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க, பெண் தோழர் ஒருவரின் அருகில் அவள் தரையில் உட்கார்ந்தாள். “என்ன தோழர் எனக்கு விடுதலை கிடைத்துவிட்டதா?” என்று இவள் பேச்சை ஆரம்பித்தபோது அவர்கள் என்னைக் குழப்பத்துடன் பார்த்தார்கள். நான் ரகசியமாகத் தலையை அசைத்துச் சைகை செய்தேன். “விரைவில் எல்லோரும் விடுதலை ஆவார்கள். சட்ட நடவடிக்கை, வழக்கு செல்லும் போக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.”

அவள் தரையில் கிடந்த வேறு ஏதோ துண்டறிக்கையை எடுத்து அதில் இல்லாத ஒரு பத்தியைப் படித்துக் காட்டினாள். “சட்டப் பாதுகாப்பு இல்லை, முறையீடு செய்ய முடியாது, எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவை இல்லை, பிணையில் வெளிவர முடியாது, அவர்களுக்காக முறையீடு அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள், வாரண்ட் தேவையில்லை, காலவரையறை கிடையாது, சாட்சிகள், சான்றுகள் கேட்க முடியாது, காணாமல் போக வேண்டும். அவ்வளவுதான்.”

தோழர்கள் என்னைப் பார்த்தார்கள். தாரா என்னைப் பார்த்து “போ, போய் ஒரு படையைக் கட்டிச் சிறையை உடைத்துத் தோழர்களை மீட்டு வர வழியைப் பார்.” நான் அவளைக் கை காட்டி நிறுத்தினேன். ‘ஆமாம் சிறையை உடைத்து வெளியே கொண்டுவந்து என்ன செய்வது? எங்கே போவது? கடலில் நீந்தி வேறு ஒரு தீவுக்குத்தான் போக வேண்டும்’ அவள் தனக்குள் பேசிக்கொண்டாள்.

“அங்கேயும் அந்தக் கொடியேந்திய பேரணி ஒன்று நடக்காது என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா தோழர்.” அவர்கள் என்னைப் பார்த்தார்கள். தாரா என்னிடம் “கிரீன்டீ போட்டு எடுத்து வரேன், பேசிக்கொண்டிருங்கள்” என்று அடுத்த அறைக்குள் சென்றாள். “தோழர் கவலையாக இருக்கிறது, என்ன செய்வது? சிகிச்சை எந்த நிலையில் இருக்கிறது?” என்று அவர்கள் கேட்டார்கள்.

அவள் தட்டில் நான்கு கிரீன் டீயும் ஒரு ரெட் டீயும் எடுத்துவந்து வைத்துவிட்டு, “தோழர், கவலைப்பட ஒன்றும் இல்லை. ஜோதிக்கு நல்ல சிகிச்சை நடக்கிறது. ஆறு மாதமாகலாம்” என்றாள். நான் அவளைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தேன். அவள் மீண்டும் தரையில் உட்கார்ந்துகொண்டாள்.

“விடிகாலை இருட்டு விலகாத நேரத்தில்தான் அவர்கள் வருகிறார்கள், எங்கோ கொண்டுசெல்கிறார்கள். பிறகு, அவர்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள சில வாரங்கள் ஆகும். ஆண்கள் என்றால் வெளியே தெரியும், பெண்கள் என்றால் யாருக்கும் தெரியாது. அப்படி யாரும் இருந்ததாகக் கூட அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், புகார் அளிக்க வந்தவர்கள் மீதே சந்தேக வழக்குப் பதிவுசெய்து பெண் கொடுமை நடந்திருக்கலாம் என்று குற்றம் சுமத்துவார்கள்.”

அவள் யாரையும் பார்க்காமல் பேசிக்கொண்டே இருந்தாள். பிறகு அப்படியே படுத்துத் தூங்கிவிட்டாள். அவர்கள் மூவரும் வெளியே போய் நிற்க நானும் வெளியே போனேன். “நன்றி தோழர், நீங்க மூனுபேரும் தினம் ஒருவரா வந்து பார்க்கவில்லையென்றால் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.” “என்ன தோழர், இது! நாம செய்ய வேண்டியதுதானே. ஆனால் தோழரை இந்த நிலையில் பார்ப்பதுதான் மனதைப் படுத்தியெடுக்கிறது. முன்பு உடல்நிலை சரியில்லாத காலத்தில் உடல் அடையாளம் தெரியாத மெலிந்த போதுகூட அவர் எவ்வளவு திடமாக இருந்தார். அந்தக் காலத்தில்தானே நிறைய நாடகங்கள் செய்தார். நம்ப முடியாத அளவில் அவர் மீண்டும் குணமாகித் திரும்ப வந்தார். ஆனால் இது, மனசு கனக்குது.”

அவர்கள் போன பிறகு உள்ளே வந்த நான், அவளை ஒரு துணியால் கழுத்து வரை மூடினேன். அவள் கைகளைத் தொடைகளுக்குள் துழைத்துக்கொண்டு உடலைக் குறுக்கிக் கொண்டபோது துணி கலைந்தது. கல்லூரி விடுதியில் இரவு நான்கைந்து முறை அவளுக்குப் போர்வையை எடுத்துப் போர்த்திவிட வேண்டும். உடலைக் குறுக்கிக்கொண்டு தூங்கும் பழக்கம் இன்றுவரை போகவில்லை. அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

மறுநாள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். அவளை வெளியே அழைத்துச் செல்வதே படாதபாடாக இருந்தது. வெளியே போகக் கிளம்பிவிட்டு, “போ, போய் அந்தக் கொடி கட்டிய வண்டிகள் தெருவில் போகிறதா என்று பார்த்துவிட்டு போன் செய்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் உட்கார்ந்திருப்பாள். என்ன செய்ய முடியும். அந்தக் கொடியில்லாத சைக்கிளைக் கூட இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை. நான் ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்து அவளை அதில் உட்கார வைத்து வெளியே அவள் கவனம் போகாதபடி ஏதாவது பேசிக்கொண்டே செல்ல வேண்டும்.

அதற்காகவே நான் கண்டுபிடித்த ஒரு தந்திரம்தான், நாங்கள் அடுத்து செய்ய இருந்த நாடகம் பற்றிய பேச்சு. ஒவ்வொரு முறையும் ஒரு நாடகம் பற்றிய பேச்சு எனக்கு உதவியது. அப்போதுதான் அந்தத் தோழிகளுடைய உதவியும் கிடைத்தது. அவர்கள் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க இருப்பதாகவும், அதில் ஐந்து கதைகள் தனித்தனியே நிகழ்ந்து கடைசியில் ஓரிடத்தில் சந்திப்பது போல திரைக்கதை அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு தொடர்ந்து அவளைச் சந்திக்க வந்தார்கள்.

விரைவில் சிலர் வழியாக நிதியைத் திரட்டி படப்பிடிப்பைத் தொடங்கிவிடலாம் என்று அவர்கள் உண்மையாகவே நம்பியதுடன், அவளிடமும் அதற்கான உறுதியை அளித்திருந்தார்கள். தாராமதி தனக்கு வேறு ஒரு புனைப்பெயர் வேண்டும் என்று கேட்டபோது, நான் கிளாரா ஜென்னி என்று விளையாட்டாகச் சொன்னேன். மாயா ஜென்னி என அதை மாற்றிக்கொள்வதாகச் சொன்னாள்.

அவையெல்லாம் விரைவில் நடக்குமென்றால்! எனக்குள் அலையலையாக எண்ணங்கள் எழுந்து அடங்கின. ஒருமுறை கொடிகளின் பார்வையிலிருந்து தப்பி ஒரு மருத்துவரைச் சந்திக்க அவளைக் கூப்பிட்டுச் சென்றிருந்தேன். அவரோ இரண்டு கைகளிலும் கயிறுகளுடன் இருந்தார். அதில் அந்த நிறமே அதிகம் இருந்தது. தாரா அவரிடம், “சொல்லுங்கள் டாக்டர், எத்தனை நாளாக இந்தச் சிக்கல். என்னென்ன சிம்டெம் உள்ளது. வேத விஞ்ஞானத்தில் இதற்கு மருந்து இருக்கிறது, நாளை வாருங்கள் எழுதித் தருகிறேன்,” என்று பேசத் தொடங்கிவிட்டாள். எனக்கு அவள் மீது கோபம் இல்லை. அந்த மருத்துவரிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கித் தந்த தோழியின் மீதுதான் கோபமாக வந்தது.

அவளை வெளியே உட்கார வைத்துவிட்டு, “அவளுக்கு ஒன்றும் இல்லை டாக்டர். எனக்குத்தான்” எனச் சிலவற்றைச் சொல்லி மருந்து எழுதி வாங்கி வந்தேன். அதற்குப் பிறகு வேறு மருத்துவர், அதிகம் பேசாத பெண் மருத்துவர். அவர் மருந்துகள்தான் இப்போது. அவர் மிகவும் குழம்பிப் போனார், இருவரில் யாருக்குச் சிக்கல் என்பதில் ஒரு காம்ப்ளிகேஷன் இருப்பதாகச் சொல்லி இருவருக்குமே மருந்துகள் தந்திருந்தார். ‘தாராமதி, தாராமதி, தாரா தாரா, இதையெல்லாம் உன்னிடம் சொல்ல முடியுமா? மல்லிகா என்று கூப்பிட்டு என்னைக் கோபப்படுத்தத் தெரிந்த உனக்கு நான் படும் வேதனை புரியவில்லையா?’

‘ஜோதிமணி, ஜோதிமணி’ என்ற முணுமுணுப்பு என் காதில் ஒலித்தது. பிறகு தாராதான் என் நெற்றியில் கைவைத்து “இன்னும் உனக்குக் காய்ச்சல் விடவில்லை. தோழர்கள் வந்துவிட்டுப் போனார்கள்” என்றாள். “வந்துவிட்டுப் போயிருப்பார்கள் நான் ஏதும் தவறாகப் பேசியிருப்பேனோ?”

நாடகத்திற்கான கலந்துரையாடல் தொடங்கிய பிறகு தாரா முற்றிலும் மாறிப்போனாள். அறையில் இருக்கும்போது சொட்டும் பயமும் நடுக்கமும் நாடகப் பயிற்சியின்போது இல்லாமல் போனது. எனக்கு அது புதிராக இருந்தாலும் ஆறுதலாக இருந்து. ஆனால், என்ன நாடகம் செய்யலாம் என்ற ஆலோசனையின்போது அவள் சொன்ன இரண்டு நாடகங்களும் எனக்குக் கவலையை அளித்தன.

முதல் நாடகம் யுரிபிடிஸின் ‘மெடியா’, இரண்டாவது ஜியோர்ஜ் புஷ்னருடைய ‘வோய்ஸெக்’. இரண்டில் ஒன்றைத்தான் செய்ய முடியும் என்று அவள் உறுதியாக இருந்தாள். கார்ஸியா லோர்க்காவின் ‘ஹவுஸ் ஆப் பெர்னாதா அல்பா’வைச் செய்யலாம் என்று சிலர் சொன்னபோது, “அதில் பெண்கள்தான் அதிகம் நடிக்க வேண்டும். அத்துடன் அது பெண்களுக்கு எதிரான தந்திரமான நாடகம்” என்றும் கூறிவிட்டாள்.

நான் “சாப்போ பற்றிய ஒரு நாடகம் இருக்கிறது. அதைக் கொஞ்சம் மாற்றிச் செய்யலாம்” என்றபோது “நாம் அதைச் செய்ய வேண்டியதில்லை. வேறு யாராவது செய்யட்டும். எல்லோரும் நம்மை அப்படியே ஏற்றுக்கொண்டதாக நம்பி ஏமாறாதே” என்று சொல்லிவிட்டாள்.

மெடியா, வாய்ஸெக் இரண்டுமே செய்யலாம் என்ற கருத்து வந்தபோது, “முதலில் எது என்பதைச் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாம்” என நாங்கள் சொன்னோம். வழக்கப்படி அவளுக்கான சீட்டுதான் வந்தது.

மெடியாவுக்கான பயிற்சிப் பட்டறை தொடங்கியபின் அவளுடைய நேரம் முழுதும் அதில்தான் கழிந்தது. யுரிபிடிஸின் நாடகம் வேறு, தொன்மத்தில் உள்ள மெடியா வேறு. நான்கைந்து மெடியா கதைகள் உள்ளன. நம்மிடமும் இதுபோல சில கதைகள் உள்ளன. அதையெல்லாம் பிணைத்து ஒரு நாடகம் எழுத வேண்டும் என்று அவள் முடிவு செய்தபோது எனக்கு மறுபடியும் மனத்தடுமாற்றம் ஏற்பட்டது.

ஆனால், நாடகக் குழுவினரோ இளையவர்கள். அவள் மீது அதிக மதிப்பும் ஒருவித பயமும் கொண்டவர்கள். அவள் சொல்வதைச் செய்யத் தயாராக இருந்தார்கள். மெடியாவை முதலில் யுரிபிடிஸ் வடிவில் செய்து பார்ப்பதுதான் பயிற்சியின் தொடக்கம் என்றாள் இயக்குநர் மாயா ஜென்னி என்கிற தாராமதி என்கிற செவ்வந்தி. இதனை அவளிடம் சொன்னால் மூக்கைக் கடித்துக் காயமாக்கிவிடுவாள்.

Illustration : judybowman

மெடியா, வாய்ஸெக் இரண்டு நாடகங்களைப் பற்றியும் அந்த இளம் கலைஞர்களுக்குத் தெரிந்திருந்தாலும், தாராமதி அவற்றை விளக்கிய விதம் அவர்களில் சிலரை அதிர்ச்சியடையவே வைத்தது. மெடியா தன் தந்தையையும், தனயனையும், தன் மண்ணையும் விட்டு ஜேசனின் மீது கொண்ட காதலால் அவனுடன் வந்துவிடுகிறாள். அவள் வரும்போது சும்மா வரவில்லை. தன் அண்ணனைத் தன் காதலனுக்காகக் கொன்றுவிட்டுத்தான் வருகிறாள். ஜேசனுடன் சில வருஷங்கள் காதலின்பத்தில் திளைத்த அவளுக்கு, கிரியோன் என்ற அரசனின் மகள் குளேஸேவைத் தன் கணவன் மணம் செய்துகொள்ளும்போது அந்தத் துரோகத்தைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள். அத்துடன் கிரியோன் அவளையும் அவளுடைய பிள்ளைகள் இருவரையும் நாடு கடத்தி உத்தரவு பிறப்பிக்கும்போது, அவளுடைய கணவன் அதைத் தடுக்காததால் அவளுடைய கோபம் எல்லை மீற, தன் இரண்டு ஆண் பிள்ளைகளையும் அதாவது தன் இரண்டு பிள்ளைகளைக் கொன்று கணவனுக்கு அனுப்பி வைக்கிறாள்.

யுரிபிடிஸின் நாடகத்தில் மெடியா பேசும் முதல் வசனம் இது “ஓ, என்னவாகி நிற்கிறேன் நான். கொடுமைக்காளான பெண்ணாக, இந்தத் துயரத்திலிருந்து தப்பிக்க நான் செத்துப் போகவா?” கதையைச் சொல்லி ஒருசில வரிகளை நடித்துக் காட்டியபோது வட்டமாக அமர்ந்திருந்த பெண்களும் ஆண்களும் எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

அதில் ஒரு பெண் “இந்தக் கிரேக்க நாடகங்கள் எல்லாம் ஏன் இப்படியே இருக்கின்றன? இடிபஸ், ஆண்டிகனி இதுபோலச் சற்றுக் கொடுமையாக.” “கிரேக்கப் புராணங்கள் மட்டுமல்ல பெண்ணே, பாரதவர்ஷத்தின் தொன்மங்களும் அப்படித்தானே உள்ளன. பாரதமும் ராமகதையும் என்ன? கொலையும் துரோகங்களும்தானே? கங்கை தனக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் ஆற்றில் விடும் கதை தெரியும்தானே! ரத்தம் குடிக்கும் பீமனை நடித்துக் காட்டும் கூத்துக்காரர்களின் முகத்தை நீ பார்க்க வேண்டும். உபபாண்டவர்கள் எரிந்த இரவு பற்றி பாரதம் எப்படி விளக்குகிறது பாருங்கள். அஸ்வத்தமா என்ன செய்கிறான்? சிவன் சக்தியைச் சாம்பலாக்குகிறான். புராணங்களில் ஓடும் ரத்தமும் சீழும் புதியதல்ல பிள்ளைகளா.” அவள் பேசிக்கொண்டே சென்றாள்.

ஒரு சிங்கள அரசி தன் கணவன் வேறு பெண்ணை மணந்துகொண்டபோது தனது பிள்ளைகளின் தலைகளை உரலில் இடித்துச் சமைத்து விருந்தாக அனுப்பினாளாம். தமிழில் மூன்று நான்கு கதைகள் உள்ளன. தன் கணவன் வைப்பாட்டி வீட்டிலேயே கதியாய் கிடப்பதுடன் தன் மனைவியிடம் தினம் விருந்து சமைத்து எடுத்து வரச் சொல்கிறான். வைப்பாட்டியோ என்ன சமைத்தாலும் ருசியில்லை என்று சொல்கிறாள். கணவனிடம் தினம் அடிபட்ட மனைவி ஒருநாள் தன் ஒரே பிள்ளையை அறுத்துச் சமைத்து எடுத்துச் சென்று பரிமாறுகிறாள். வைப்பாட்டியோ ‘தினம் இதே போலச் சமைச்சா தின்ன ருசியா இருக்கும்’ என்கிறாளாம். மனைவியோ ‘எனக்கு இருந்தது ஒரே புள்ள. இன்னும் ஒன்னுக்கு நான் எங்க போவேன்’ அப்படின்னு சொல்லி ஒப்பாரி வைக்கிறாளாம். “அதற்கு மேல் பேச வேண்டாம், போதும்” என்று சொல்லி அவளை அன்று அழைத்து வந்துவிட்டேன்.

மறுநாள் அவள் வாய்ஸெக் கதையைச் சொன்னாள். பிரான்ஸ் வாய்ஸெக் என்ற ராணுவப் பணியாளன் மேரி என்கிற தன் மனைவியைக் கொலை செய்வதுதான் கதை என்று விரிவாக விளக்கி, வெர்னர் ஹெர்ஹாக்கின் படத்தையும் பார்க்க வைத்தாள். மெடியா, வாய்ஸெக் இரண்டு பாத்திரங்களையும் அனைவரும் பயிற்சி செய்து ஒவ்வொரு நாள் காட்சியிலும் மாறிமாறி நடிக்க வேண்டும் என்றும், முதலில் தானே மெடியாவாகவும் வாய்ஸெக்காகவும் நடிப்பேன் என்றும் சொன்னாள். பிறகு பெண்கள் அனைவரும் ஆண் பாத்திரங்களையும், ஆண்கள் பெண் பாத்திரங்களையும் ஏற்று நடிக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதனையும் மாற்றி, நாம் அனைவரும் அனைத்துப் பாத்திரங்களையும் முழுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும், நாம் அனைவரும் ஒவ்வொரு முறையாவது அந்தப் பாத்திரத்தில் நடித்துவிட வேண்டும் என்று தன் திட்டத்தை மாற்றினாள்.

“‘ஹெர்ஸாக்’ படத்தில் கிளாஸ் கின்ஸியின் நடிப்பு அதிரவைக்கும். அதுவும் கொலை செய்த கத்தியைத் தேடும் காட்சி, பார்த்தீர்கள் இல்லையா? நாம் அதனை அப்படிச் செய்யப் போவதில்லை. ஒத்தேல்லோ போலவும் செய்யப் போவதில்லை. அமைதியாக அப்பாவித்தனத்துடன் கொலைகள் செய்யப்படுகின்றன. நடிப்பு முழு அழகியலுடன் இருக்க வேண்டும். கனிவான அன்பான காதலுடன் நடக்கும் கொலைகள்.” அவள் அவற்றைப் பலவாறாக நடித்துக் காட்டினாள்.

ஒரு இளம் நடிகை அவளிடம், “ஆண்கள் பெண்கள் இருவருமே கொலை செய்கிறவர்கள்தானே, இதை எப்படி வேறுபடுத்துவது தாரா” அம்மா என்று கேட்டாள். தாரா சற்று யோசித்துவிட்டு “எங்கள் ஊரில் நடந்த கதை இது,” என்று சொல்லத் தொடங்கினாள்.

“ஒரு மரமேறி புதிதாகக் கல்யாணம் செய்து அழகான பெண்ணொருத்தியை வீட்டுக்கு அழைத்து வந்து சந்தோஷமாக வாழ்க்கையைத் தொடங்குகிறான். சில மாதங்கள் கழித்து மரமேறிவிட்டுத் தோப்பில் இருக்கும் தன் வீட்டுக்கு வந்தவன், திண்ணையில் ஒரு சொம்பில் பாதி தண்ணீர் இருப்பதைப் பார்த்து என்ன இது என்று குழப்பமடைகிறான். இரண்டாவது நாளும் பாதி சொம்பு தண்ணீர் திண்ணையில் இருக்கிறது.

ஒருநாள் விட்டு ஒருநாள் திண்ணையில் பாதி சொம்பு தண்ணீர் இருப்பதைப் பார்த்து, ‘சிறுக்கி மக சீரழஞ்சி போனா குடும்ப மானம் என்னாகிறது’ என்று கருவிக்கொண்டு ஒருநாள் மரமேறப் போவது போலப் போய் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தென்னையில் ஏறி உட்கார்ந்து கொள்கிறான். அவன் எதிர்பார்த்தது போலவே ஒரு ஆம்பிளை சைக்கிளில் வந்து திண்ணையில் உட்கார, அந்தப் பெண் சொம்பில் தண்ணீர் எடுத்துவந்து தருகிறாள். அவன் பையில் எடுத்துவந்த மாம்பழங்களைத் தருகிறான். இருவரும் வெளியே இருந்து சிறிது நேரம் சிரித்துப் பேசிய பின் அவன் போகிறான். மரத்தில் இருந்து இறங்கி வந்தவன், நேராக வீட்டுக்குள் நுழைந்து சில நிமிடங்கள் கழித்து வெளியே வருகிறான்.” இதனைச் சொல்லி நிறுத்திவிட்டு “அவன் எப்படி வந்திருப்பான் என யாராவது சொல்லுங்கள்” என்றாள்.

எனக்கு அவள் அதனைப் பலமுறை சொல்லியபோதும் இந்த இடத்தில்தான் நிறுத்துவாள். அன்று அவள் சொன்ன முறை எனக்கு முறுக்குக் கம்பி போல இறுக்கியது. ஒரு பெண் மட்டும் எழுந்து, “அவன் இடக்கையில் அவளுடைய தலை இருந்தது, வலக்கையில் ரத்தம் சொட்டும் பாளைக்கத்தி இருந்தது சரிதானே” என்றாள். அவளைப் பார்த்து புன்னகை செய்தவள், “பெண்ணாகப் பிறந்த யாருக்கும் இது புதிதாக இருக்காதுதான்” என்றபடி தொடர்ந்தாள்.

“அவன் தெரு வழியாக நடந்து சென்றான். எல்லோருக்கும் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது. குழந்தைகளின் கண்களை மூடி வீட்டுக்குள் கொண்டு சென்றார்கள் பெண்கள். போலீஸில் சரணடைந்தவனுக்குச் சில காலம் சிறை தண்டனை. ஊரில் உள்ள அனைவரும் அவனை மானஸ்தன் என்றனர். பல ஆண்கள் அவனைப் போல தாங்கள் இருக்க முடியவில்லையே என்று கள்ளுக்கடைகளில் புலம்பித் திரிந்தனர். சில கணவன்மார்கள் பெண்டாட்டிகளை மிரட்ட அந்த நிகழ்ச்சியைச் சொல்லிக் காட்டினர்.

காலம் காற்றில் சருகு போல ஓடிக் கழிந்தது. வெளியே வந்தவனுக்குச் சில மாதங்களில் திருமணம், பிறகு நடந்தவைகளை மறந்துவிட்டு ஐந்து பிள்ளைகளுடன் அவனும் வாழத் தொடங்கிவிட்டான். அந்தக் குடும்பத்தை நான் பார்த்திருக்கிறேன். அவன் அப்படிச் செய்த பின்னும் யார் அவனுக்குப் பெண் கொடுத்தது தெரியுமா? வேறு யார், அவனுடைய மாமனார்தான். தன் கடைசிப் பெண்ணை அவனுக்குத் தந்தார்.

எங்கள் ஊரில் ஒரு கிழவி மட்டும் அடிக்கடி புலம்பும். ‘பாவி மகன், அங்க வந்து போனது பக்கத்து ஊருக்கு வேலை செய்யப் போகும் அவளோட சித்தப்பா மகன்னு தெரிஞ்சிக்கலயே, மரத்து மேல இருந்தா எப்படித் தெரியும்.’” தாரா இதைச் சொல்லி முடித்து, “அந்தப் பாட்டி என்னிடம் இதனைப் பலமுறை சொல்லியிருக்கிறது” என்றாள்.

“ஆனால், முடிவுதான் இங்கு கவனிக்க வேண்டும். கிழவி சொல்லும் ‘பொண்ணுங்கதான் கவனமா இருக்கணும். அண்ணனா இருந்தாலும் ஆறு அடி தள்ளி நிக்கணும், அப்பனா இருந்தாலும் ஆம்படையான் இல்லாதப்போ அன்பா பேசக்கூடாது, சித்தப்பனா இருந்தாலும் சிரிச்சிப் பேசக்கூடாது. கட்டனவன தவிர யாரையும் கண்ணெடுத்துப் பார்க்கக் கூடாது, வெட்டன பின்ன யாருக்குத் தெரியும் வேசியா பத்தினியான்னு’” கிழவியைப் போலவே பேசி நடித்தவள், ஒரு லிட்டர் தண்ணீரை முழுசாகக் குடித்து முடித்தாள். கலைஞர்களிடம் நிலவிய அமைதியைக் கலைக்க அவளே தொடர்ந்தாள்.

“பாஞ்சாலியைத் தெய்வமாகக் கும்பிடும் சனங்கதான் நாம; கர்ணனையும் அவ நினைச்சி உருகினதா கண்கலங்கிக் கதை சொல்லும் கூட்டம்தான் நாம; அதனால ரொம்ப உருக வேணாம். விக்கிரமாதித்தன் கதையை விரிவா படிச்சுப் பாருங்க. பிரம்மமோகம் பத்திய புராணத்தை விளக்கமா பேசிப் பாருங்க.”

நாடகக் குழுவில் இருந்த பெண்ணொருத்தித் தனக்குக் குழந்தை இருப்பதை ஒருநாள் தயங்கிச் சொன்னபோது, அவளது குழந்தையை அடிக்கடிச் சென்று பார்த்துவந்தாள். தனித்த தாயாக இருந்தவளிடம் இவள் அதிக பாசம் காட்டியது ஒன்றும் எனக்கு வியப்பளிக்கவில்லை. தனது வீட்டிலிருந்து வெளியேறியவளுக்கு அவளுடைய காதலன் தன்னைக் கைவிட்டுப் பிரிந்து சென்றது பெரும் துயரமாக இருந்தது.

உதவியற்று நின்றவளுக்கு வேலை ஒன்று பார்த்துத் தந்தவள், படிப்பையும் தொடர வைத்தாள். குழந்தைக்கு மூன்று வயதானபோது திரும்ப அவளை வந்து சந்தித்த காதலன், இனி திருமணம் செய்துகொண்டு வாழலாம் எனச் சொல்வதாக அவள் ஒருநாள் வந்து தாராவிடம் சொன்னாள். தாரா அவளிடம் “நீ என்ன செய்யப் போகிறாய்?” என்றாள். அவள் “இனி அவனுடன் மட்டுமல்ல, யாருடனும் வாழப் போவதில்லை” என்று சொல்லிவிட்டு, ஆனால் அவன் தினம் வந்து அழுவதாகவும் சில சமயம் மிரட்டுவதாகவும் சொன்னாள்.

“நீ கர்ப்பிணியாக இருக்கும்போது அவனுக்குக் காதல் மறைந்துவிட்டது, தாயாக மாறியபோது உன் அழகு குறைந்துவிட்டது, இந்த மூன்று ஆண்டுகளில் நீ வேறு ஒருத்தி. காமத்தைத் தூண்டும் உடலுடன் இப்போது வேறு ஒருத்தியாக இருக்கிறாய். அவனுக்கு என்ன வேண்டும் என்று உனக்குத் தெரியும்தானே?” தாரா கேட்டதை அவள் ஒப்புக்கொண்டாள். அவனோ நாடக ஒத்திகை வரை வந்து தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டான்.

ஒரு ஒத்திகையின்போது தாரா அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அவன் வந்தான், தன் காதலியைத் தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று மிரட்டினான். தாரா அமைதியாகச் சொன்னாள். “உன் குழந்தையிடம் கேள், ‘நான் உனக்கு அப்பாவா’ என்று.” குழந்தையிடம் தாராவே கேட்டாள். “செல்லம்மா இது யார்?” “இவர் என் அம்மாவை மிரட்டும் போலீஸ்காரர்.” அவன் குழந்தையை அறைய, தாரா அவன் விதையில் ஒரு உதைவிட்டுக் கையை உடைத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம். போலீஸ் கேஸாகி, கொலைமுயற்சி எனப் பதிவாகி சில நாட்கள் ஒத்திகை நின்றது.

மெடியாவும் வாய்ஸெக்கும் இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னும் மேடையேறவில்லை. ஆனால், தினம் மாலை ஒத்திகை நடந்தது. ஒத்திகைக்குப் பின் சிறு உணவும் மதுவும். அந்தக் காலத்தில் அவள் புகைப்பதும் குறைந்தது. எனக்காகக் கொஞ்சம் எண்ணிக்கையைக் குறைத்த அவள், இந்த இளம் கலைஞர்களுக்காக இன்னும் குறைத்துக்கொண்டாள்.

மெடியா, வாய்ஸெக் ஒத்திகையின்போதே திரைப்படம் செய்வதாகச் சொன்ன தோழிகளும் சிறிய முதலீட்டுடன் படத்தைத் தொடங்கலாம் எனச் சொன்னபோது எனக்குப் பயமாகத்தான் இருந்தது. எந்தக் கதையை அவள் சொல்லப் போகிறாள். எதனை அவள் திரைக்கதையாக மாற்றப் போகிறாள்.

ஒவ்வொரு நாளும் ஒரு கதை வீதம் சொல்லத் தொடங்கியவளுக்கு உறக்கம் குறைந்தது. ஆனால், ஒரு கதை மட்டும் தோழிகளுக்குப் பிடித்திருந்தது. “முன்னைப் போல இல்லை இந்தியத் திரை” எனச் சொல்லி தோழிகள் அவளுக்கு ஊக்கம் அளித்தனர்.

அவளிடம் நெருங்கிப் பழகிய ஒரு பெண் “இனிய முடிவு கொண்ட பெண் தோழி காதலைச் சொல்லும் படம் எதுவும் இந்தியத் திரையில் வரவில்லை. அதனை நீ செய்யலாம்” என்றாள். “எனது காதல் இனிதாகவே உள்ளது, அதனைப் பிறகு செய்யலாம்” என்றாள் இவள். “ஏன் இப்போது செய்யக் கூடாதா” என்ற அவளிடம், “காதல் இனிதானதுதான். அதன் முடிவுதான் என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை” என ஏதோ பேசத் தொடங்கிபோது நான் அந்தப் பேச்சைத் திசைமாற்றினேன்.

ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் கரகாட்டக் கலைஞர் பற்றிய கதை தாராவுக்குத் தெரியும். “அதைப் பற்றி திரைக்கதை செய்யலாமே” என்றேன். “அந்தக் கலைஞரை மீண்டும் சந்தித்த பிறகே அவர் பற்றி எழுத முடியும்” என்று சொல்லி என்னைக் கீழ்க் கண்ணால் பார்த்தாள். முடிவாக ஐந்து கதைகள் இணையும் கதையைச் செய்வது என்று முடிவானது.

உறக்கம் குறைந்த நாட்களாக அவை மாறிப் போயின. எங்கள் தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டபோது நாங்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாகப் பதுங்க வேண்டியிருந்தது. அதற்குத்தான் அவள் நாடகத்தையும் திரைப்படத்தையும் செய்கிறாளோ என்று எனக்குத் தோன்றியது. அவளோ “யார் செத்தால் எனக்கென்ன, நான் எனது வேலையைச் செய்யப் போகிறேன்” என்றாள். “வேலை செய்ய முடியவில்லை என்றால்?” “நானும் சாகப் போகிறேன்.” “நீ செத்துப் போனால் நான் என்ன செய்வதாம்?” “நீயும் செத்துப் போ. யார்தான் சாகவில்லை சொல்?” “சாவது இனியது, ஆனால் நீ கொஞ்சம் கருணை செய்ய வேண்டும், என்னை அடக்கம் செய்த பின் சாக வேண்டும்.” “என்னை யார் அடக்கம் செய்வதாம். உனக்கு உன் அம்மா வருவாள், எனக்கு நீ மட்டும்தான்.”

அவளுடன் நான் மூன்று நாள் பேசவில்லை, அவள் சமைத்ததைச் சாப்பிடவும் இல்லை. மீண்டும் திரைக்கதை பற்றிப் பேசத் தோழிகள் வந்த அன்றுதான் அவள் தந்த காப்பியைக் குடித்தேன். அவள் அவர்களிடம் “அலென் ரெனேவின் ‘நைட் அன்ட் ஃபாக்’ பார்த்திருக்கிறீர்களா” என்று கேட்டாள். அப்படி அவள் பேச்சைத் தொடங்கியது எனக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் என்னைப் பார்த்தனர். நான் லேப்டாப்பை எடுத்து உட்கார்ந்தபோது, அவள் சுவரில் சாய்ந்துகொண்டு ஒரு திரைக்கான கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

இந்தக் கதையில் வரும் அவனுக்கு அவள் ஊக்கமும் அறிவும் தந்த ஒரு மூத்த தோழர். அவனோ அவளுக்கு 16 வயதான ஒரு சிறுவன். அரசியல் கற்க ஆர்வம் கொண்டவன். 15 வயதிலிருந்து அந்தத் தோழரின் பேச்சுகளையும் சிறு வெளியீடுகளையும் வாசித்துவருபவன்.

அவளது பேச்சுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் இருப்பதைக் கண்டு அவன் வியந்திருக்கிறான். அமைதி நிறைந்த பேச்சு, ஆத்திரம் கொப்பளிக்கும் பேச்சு, அழுகை வரவைக்கும் பேச்சு, அதிரச் சிரிக்க வைக்கும் பேச்சு, விரக்தியும் குழப்பமும் நிறைந்த பேச்சு. அவள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையில் உருமாறுவதை அவன் மதிப்புடனும் வியப்புடனும் பார்த்துவந்தான்.

அவள் எழுதிய சிறு வெளியீடுகளும் அப்படித்தான் இருந்தன. அதில் குறிப்பிடப்படும் நூல்களையும் சிந்தனையாளர்களையும் தேடிப் படித்துதான் தன்னை வேறு ஒருவனாக அவன் மாற்றிக்கொண்டான். முப்பத்தாறு வயதில் பலருக்குக் கிடைக்காத அரசியல் அனுபவங்களும் வாசிப்புகளும் கொண்ட அவளை அவன் ஒரு நாடகத்தின்போது நடந்த கலந்துரையாடலில் நேரில் சந்தித்துப் பேசினான்.

அதற்குப் பிறகு பலமுறை சந்திப்புகள், உரையாடல்கள் தொடர அது ஒரு தோழமையாக வளர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சில காலம் கழித்துதான் அவனுக்குத் தெரிந்தது, அவள் தனது தோழியுடன் வாழ்பவள் என்று. அது அவனுக்குள் ஒரு பாசத்தைப் படர வைத்தது. அவள் தனது தோழியைத் தனது இணைவி என்றே அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது அவன் இன்னும் நெகிழ்ந்து போனான்.

படிப்பைத் தொடர என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தனது ஊருக்குப் போனவன் கைதாகியிருப்பதை அறிந்து இருவருமே அங்கு சென்றனர். குடிசைகள் எரிந்த அந்தப் பகுதியில் அவனுடைய தாய் தகப்பனைச் சந்தித்தபோது, அவர்கள் நடந்ததைச் சொல்லி அழுதனர். ஊர்த் தெருக்காரர்கள் சேரியை எரித்த மறுநாள் இவனும் தோழர்களும் ஊரில் சில வீடுகளை எரித்தது உண்மைதான் என்று சொல்லித் தலையில் கைவைத்துக்கொண்டனர்.

யார் வந்து எதைக் கேட்டாலும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட வேண்டும் என்று அறிவுரை தந்தபின் அவனை வெளியில் கொண்டுவர இரண்டு மாதங்கள் ஆனது. அவன் வேறு ஒருவனாக மாறியிருந்தான். “வழக்குத் தொடரட்டும், அது போய்க் கொண்டே இருக்கும். நீ படிப்பைத் தொடர வா” என்று அவனை இருவரும் அழைத்துக்கொண்டு வந்தனர்.

எரிக்கிற துணிவும் தெளிவும் எப்படி வந்தது என்று கேட்டதற்கு, அவர்களிடம் கற்றதுதான் என்று தயக்கமின்றிக் கூறினான். அவனை முதல்முறையாகத் தலையைக் கோதி நெற்றியில் முத்தமிட்டாள் அவள். காலம் இப்படியே செல்லுமா என்ன? அவளுக்கு அந்த நோய் வந்து சேர்ந்தது. புகை பிடிப்பாளா என்று மருத்துவர்கள் கேட்க, இவளோ “டாக்டர் நீங்களும் ஒருநாளைக்கு ஒரு பாக்கெட் புகைக்கிறீர்கள். உங்களுக்கு நோய் வந்ததா” என்றாள். அவர் புன்னகையுடன் “வரலாம், வராமல் போகலாம் உறுதியில்லை. ஆனால், இனி நீங்கள் புகைப்பதை நிறுத்துங்கள்” என மருத்துவத்தைத் தொடங்கினார்.

நெடிய உடம்பு கொண்ட அவள் மெலிந்தபோது அதிகத் துயரமானதாக அது காட்சியளித்தது. ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தவள் இளைத்தபோது, அவளுடைய துணைவிக்குத் துயரம் பெருகியது. உடனிருந்தே கவனிக்க வேண்டிய நிலையும், அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய தேவையும் உண்டானபோது இருவரும் தடுமாறிவிட்டனர். துணைவி வேலைக்குச் செல்லவில்லை என்றால் உணவும் மருந்தும் சிகிச்சையும் கிடைக்காது. உடனிருக்கவில்லையென்றால் அவளால் எதுவும் செய்ய முடியாத இளைப்பு. அப்போதுதான் அவன் வந்தான், அழுத கண்களுடன் தன்னிடம் ஏதும் கூறாதது பற்றி வருத்தப்பட்டான்.

அன்று வந்தவன் அங்கேயே தங்கிச் சமைக்கவும், வீட்டைக் கவனிக்கவும் தொடங்கினான். “மருத்துவம் படிக்க வேண்டிய நீ இப்படி மருந்து வாங்கித் தரும் வேலையைச் செய்யணுமா” என்று அவளுடைய துணைவி கூறி வருத்தப்பட்டபோது “ஆறு மாதம் படிக்காவிட்டால் எல்லாம் முடிந்து விடுமா” என அவர்களுடனேயே இருந்தான்.

அவளுடைய துணைவி மறுபடியும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டாள். அவன் முழு நேரமும் அவளுடனே இருந்தான். பேச்சைத் தவிர அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை. அவன் அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தான். அவள் படித்தபடி உறங்கிவிடும்போது அந்த நூல்களை அவன் படிக்கத் தொடங்கினான்.

அவளுக்கான சிகிச்சை பற்றி அவன் படித்துத் தெரிந்துகொண்டு அச்சம் அடைந்தாலும், அவளுக்கு அடிக்கடி ஆறுதல் சொல்வான். சிகிச்சையோ ஆறு மாதம், ஆறு மாதம் எனத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. இனி அறுவைச் சிகிச்சை தேவை என்ற நிலையில் மீண்டும் சிகிச்சை, சிகிச்சைக்குப் பின் சிகிச்சை என நீண்டது. கடனும் கடினமும் நிறைந்த நான்கு ஆண்டுகள். அவன் அவர்களில் ஒருவனாக மாறியிருந்தான்.

தான் ஒரு ஆண் என்பதையே மறந்து போயிருந்தான். விடுதியில் இருக்கும்போது படித்த ஒருவகையான புத்தகங்களும் இப்போது அவனுக்குப் பிடிக்காமல் போயிருந்தன. அவர்கள் இருவரும் அணிந்த ஜீன்ஸும் சட்டைகளும் அவனுக்கும் பொருந்தின. வழக்கின் திசை மாறிமாறி இரண்டு பேர் மட்டும் தற்காப்புக்காக அதில் ஈடுபட்டதாகச் சொல்லி இவனை விடுவித்தபோது அவர்கள் விருந்துடன் கொண்டாடினர். நோயின் கடுமை குறைந்து குணமாகியபோதும், உடல் தெளிய நாட்கள் எடுத்தன. அதனால் பெரிய இடைவெளிக்குப் பின் அவன் படிப்பைத் தொடர வேண்டியிருந்தது.

விடுதியில் தங்க வேண்டியிருந்தாலும் வாரம்தோறும் அவர்களைச் சந்திக்க வந்துவிடுவான். அவர்களும் அவனுக்காகக் காத்திருக்கவே செய்தனர். ஒருநாள் அவன் அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். “என்ன” என்றபோது தடுமாறி, “முதன்முதலாகப் பார்த்தபோது இருந்த அதே முகம்” என்றான். அவள் புன்னகையுடன் “அப்போ நீ பேச்சைக் கேட்கவில்லை, முகத்தைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாயா” என்று கேலியாகக் கேட்டபோது கருத்த முகம் சிவக்க, “பேச்சையும் கேட்டேன். அத்துடன் முகத்தையும் பார்க்க வேண்டியிருந்தது, உங்கள் கையசைவுகளையும் நான் கவனிக்க வேண்டியிருந்தது. வேறு எதுவும் இல்லை” என்றான்.

“அப்படி இருந்தால்தான் என்ன? அதற்குப் பிறகு நீ எதைத்தான் பார்க்கவில்லை” என்று அவனுடைய தலையைக் கோதிவிட்டாள். “இப்படியே இருக்காதே விரைவில் ஒரு தோழியைத் தேடு” என்று அவன் மூக்கைத் திருகினாள். அவன் கண்களில் கண்ணீர் முட்டியது. “என்னடா, என்ன?” என்றபோது ஒன்றும் சொல்லாமல் புன்னகை புரிந்தான். அவளிடமிருந்து நிறைய நூல்களை எடுத்துச் செல்ல அடிக்கடி வந்தான்.

அவனைக் கவனித்த அவளுடைய துணைவியோ ஒருநாள் அவளிடம் சொன்னாள். “அவன் உன் மனதின் அத்தனைப் பகுதிகளையும் அறிந்துகொண்டிருக்கிறான். அத்துடன் உன் உடலும் அவனுக்குத் தெரியும், உன் உடலில் இல்லாத பகுதியும் தெரிகிறது. என்ன செய்யப் போகிறாய்?” என்றாள். “என்ன செய்வதாம்? எல்லாம் இப்படித்தான் தொடங்க வேண்டும் என்றோ, இப்படித்தான் முடிய வேண்டும் என்றோ இல்லை. இது முடிவும் இல்லைதானே” என்றபடி அவளுடைய தலையைக் கோதிவிட்டாள்.

“சிறுவனாகப் பார்த்தவன், இப்போது சிறுவனா என்ன? எத்தனை நாட்கள் உன் படுக்கைக்குக் கீழே படுத்து உறங்கியிருக்கிறான். நானே பயந்து போயிருக்கிறேன். இப்படிக் கூட இருக்க முடியுமா என்ன?” குழப்பத்துடன் பேசியபடி இருவரும் உறங்கிப் போனார்கள்.

சில நாட்கள் கழித்து அவனிடம் தோழி சொன்னாள் “நான் வெளியூர் செல்கிறேன். நீ வந்து வீட்டில் இரு.” அவனுக்கு எதுவும் புதிதில்லை. சமைக்கவும், இசை கேட்கவும், படிக்கவும் அமைந்த இடம். இரண்டு நாட்கள் கழித்து அவள் மது அருந்தியபடி, “புதிதாக யாருக்கும் மது அருந்தவோ புகைக்கவோ சொல்லித் தருவது இல்லை. உனக்கு வருத்தம் ஒன்றும் இல்லையே” என்றாள். அவன் “அதெல்லாம் இல்லை. நண்பர்களுடன் ஒருமுறை பியர் அருந்தியிருக்கிறேன். சுவை பிடிக்கவில்லை. அத்துடன் அன்று தூக்கமும் இல்லை, தலைவலி வேறு” எனக் குழந்தை போலச் சொன்னான்.

அவள் அவனை “இங்கே வா” என்று காதில் எதையோ கேட்க, அவன் வெட்கத்துடன் “அதெல்லாம் இல்லை” என்றான். “காதல் எதுவும்?” “படிக்கும்போது ஒரு நண்பன், அவனிடம் காதல் போல ஒன்று. ஆனால் ஒரு ஆணிடம் நான் என்ன சொல்வது, அது என்ன எனத் தெரியாமலேயே கரைந்து போனது.”

அவள் ஒரு இசையை ஒலிக்கவிட்டபடி “இனி ஒரு காதல் என்றால் அது ஆணுடனா பெண்ணுடனா” என்று கேட்டாள். அவன் “நீங்கள் ஆணாக இருந்தால் சற்றுச் சிக்கலாக இருக்கும்” என்று கேலி பேசினான். “சரி நீ இப்படியே சில காலம் குழப்பத்தில் இரு” என்றாள் அவள்.

சன்னலோரம் நின்றிருந்தவனின் தோளைத் தொட்டுத் திருப்பி “இந்த நேரத்தில் ஏதாவது மருந்துக் கடை இருக்குமா” என்றாள். “இரண்டாவது தெருவில் ஒரு மருந்துக் கடை இருக்கு.” “அப்போ இதில் எழுதியிருப்பவைகளை வாங்கிவா” என்று ஒரு தாளைக் கொடுத்தாள். “நீ பிரித்துப் படிக்கக்கூடாது. மருந்துக்கடையில் கொடு அவர்கள் கொடுப்பதை வாங்கி வா என்றாள்.” அவன் கீழே இறங்கி பைக்கை நகர்த்தி வெளியே செல்வதைப் புன்னகையுடன் பார்த்துத் தலை முடியைச் சரி செய்துகொண்டாள்.

தெருவின் திருப்பத்தில் அவனை மறித்து நின்ற ஒரு வேனின் முன் பிரேக் போட்டு நின்றவனை வெள்ளைச் சட்டை அணிந்திருந்த இரண்டு பேர் இழுத்துச் சென்று வேனின் பின்னால் அடைப்பதைப் பார்த்தாள். கீழே இறங்கி ஓடித் தெருமுனையை அடைந்தபோது பைக் சரிந்து கிடந்தது. அவனுடைய பர்ஸ் கீழே கிடந்தது.

அவள் பைக்கை எடுத்துக்கொண்டு நாலு பக்கமும் பதறி அலைந்து காவல் நிலையத்தை அடைந்தாள். புகார் எழுதிக் கொடுத்த அவளை ஏற்கெனவே அறிந்திருந்த போலீஸ்காரர், “இந்த நேரத்தில் அவனுக்கு உங்கள் வீட்டில் என்ன வேலை” என்றார். அவன்மீது உளவுத்துறைக்கு ஒரு கண் இருக்கிறது என்றார். “அதுபற்றிய விசாரணையை நீங்கள் பிறகு செய்யுங்கள். அந்தப் பிள்ளையை நாளைக்குள் கொண்டுவந்து என்னிடம் ஒப்படையுங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தவள், உடனே தன் தோழிக்குப் பேசினாள்.

நகரத்தின் வேறு பகுதியில் இருந்த தோழியின் வீட்டில் இருந்த துணைவி, முப்பது நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தாள். அவளைக் கட்டிக்கொண்டு அழுதவள், “எல்லாம் என்னால்தான்” என்று புலம்பத் தொடங்கினாள்.

அவன் பர்ஸை எடுத்துப் பார்த்த அவள், அதிலிருந்த தாளில் எழுதியிருந்த இரண்டு மருந்துகளையும் கீழே எழுதியிருந்த ஒரு பெயரையும் படித்துவிட்டு “இதற்கா அவனை அந்த நேரத்தில் அனுப்பி வைத்தாய்?” என்று உற்றுப் பார்த்தபடிக் கேட்டாள். “ஆமாம், ஒரு விளையாட்டாகச் செய்தேன். அவன் திரும்பி வந்திருந்தால் உன்னிடம் ஆண் உடல் பற்றிச் சொல்ல எனக்குச் சில இருந்திருக்கும்” என்றாள் இவள். “அவனுக்குத் தெரியுமா?” “இல்லை, அவன் அதைப் படிக்கவில்லை.” இருவரும் அதற்குப் பின் நெடுநேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தனர். தூக்கமற்ற இரவுகள், தொடர்ந்த கண்ணீர். இருவருக்குமே அதற்குப் பின் மருந்தும் சிகிச்சையும் தேவைப்பட்டன.

“அப்புறம் என்ன” என்றார்கள் தோழிகள். “அப்புறம் என்ன வேண்டும்? திரைக்கதை இத்துடன் முடியாது இல்லையா?” என்றார்கள் அவர்கள்.

“அவன் என்ன ஆனான்?” என்றாள் ஒரு தோழி. “தாளில் எழுதியிருந்ததை அவன் மட்டுமல்ல, பார்வையாளர்களும் அறியாதது போலவே அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்பதும் தெரியாது.” தாரா சொன்னபோது கலைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

ஒரு பெண் மட்டும், “அதில் என்ன எழுதியிருந்தது” என்று கேட்டாள். “அவனுக்கே தெரியாதபோது நீ தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறாய்” என்று சற்று எரிச்சலுடன் கேட்டாள் தாரா. “அவன் என்ன ஆனான்” என்று இன்னொரு பெண் கேட்டாள்.

“அது தெரிந்திருந்தால் ஏன் நான் இதைத் திரைக்கதையாக எழுதப் போகிறேன்” என்றாள் தாரா. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நான் அவர்களிடம் “பிறகு பார்க்கலாம், இப்போது கலையலாம்” என்றேன்.

தாரா அவர்களிடம் “அவன் என்ன ஆனான் என்று தெரிந்த பின் நான் இதைத் திரைக்கதையாக எழுதித் தருகிறேன். இப்போது இது வேண்டாம்” என்றாள். “நாளை வாருங்கள், வேறு ஒரு கதை சொல்கிறேன்” என்றபடி உள்ளே சென்றாள்.

நான் அவளைத் தொடர்ந்து சென்று “நாளை என்னக் கதை சொல்லப் போகிறாய்” என்றேன். தன் வீட்டுக்கு வந்த தோழியுடன் நெருக்கமாக இருந்த மகளையும் அவள் தோழியையும் கொல்லத் திட்டமிட்ட சாதிவெறிபிடித்த தகப்பனை, அவள் மகளே விஷம் வைத்துக் கொன்ற கதை, அதனைத் தாய் மறைத்துவிட்ட கதை அது என்றாள். எனக்கு நெஞ்சுக்குள் நெருப்பு பற்றிக்கொண்டது. எனக்குத் தெரியாத கதை ஒன்றை இத்தனை நாள் வைத்திருக்கிறாள் இவள்.

நாங்கள் இருவரும் மருந்து எடுத்துக்கொண்டபோதும் அன்று இரவு உறக்கம் வரவில்லை. அவள் அடிக்கடி எழுந்து போய் தண்ணீர் குடிப்பது போலத் தெருமுனையைப் பார்த்துவிட்டு வந்து படுத்தாள்.

“அமிஸ்டாட் படத்தில் அந்தப் பெண் தன் கைக்குழந்தையுடன் கடலில் சாய்வாளே அப்போது அவளுக்கு என்ன மனநிலை இருந்திருக்கும்” என்றேன் நான். “எரியும் குடிசைக்குள் இருந்து தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று வெளியே வீசிய தாய், அது மீண்டும் உள்ளே வீசப்பட்டபோது தாவிப் பிடித்தாளே. அப்போது அவளுக்குள் என்ன எண்ணம் ஓடியிருக்கும்” என்றாள் அவள். “நைட் அன்ட் ஃபாகில் நீ உன் பேச்சைத் தொடங்கியிருக்கக்கூடாது” என்றேன் நான். “அது முடியவே இல்லையே நான் என்ன செய்வது?”

“தரையில் செய்த ஒரு தொட்டியில் ஆடையில்லாத ஒரு கருப்புப் பெண்ணை உள்ளே போட்டு அடைத்து வைத்து இரும்புக் கம்பிக் கதவால் மூடி வைத்திருப்பார்கள். அது வெயில் நேரம். அவள் உடம்பில் ஒரு வெள்ளைக்காரன் வந்து தண்ணீரை ஊற்றுவான். அப்போது அவள் முகத்தில் தோன்றுமே ஒரு கறலும் அழுகையும் அது எனக்கு ஞாபகம் வருகிறது” என்றேன் நான். “எனக்கு இப்போது அந்த இரண்டு குதிரைகளின் நடனத்தைப் பற்றிச் சொல்லாமல் இதையேன் நினைவுபடுத்துகிறாய் பிசாசே” என்றாள் தாரா. “நெருப்பாக எரிகிறது உடம்பு, தொட்டுப்பார் ஜோதி. எரிகிறது உடம்பு. இருட்டில் என்னை அடைக்காதே. நான் நாளை ஒரு கதை சொல்ல வேண்டும், என்னைத் தூங்க வை.” தாரா என் கைகளைப் இறுகப் பற்றிக் கொண்டாள்.

“தாரா, தாரா, தாராமதி, புத்தன் வைத்த பெயர்தானே உனக்கும் எனக்கும். கொஞ்சம் புத்தனைத் தியானித்து உறங்கிவிடேன். நீ உறங்கும்போது புத்த முகத்துடன் இருப்பாய்.” அவள் காதில் சொன்னேன். ‘நீ உறங்கு, நான் பிறகு உறங்குகிறேன். வேனில் வந்து உன்னை யாராவது இழுத்துச் சென்றுவிட்டால் நான் என்ன செய்வேன் ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதிமணி…’ தாரா தனக்குள் சொல்லிக்கொண்டாள். எனக்கும் அது கேட்டது. ஓம் மணி பத்மயேகம், உறங்கா மனமே யுத்தகளம்.

(குறிப்பு: கதையில் வரும் திரைப்படங்கள், இயக்குநர்கள், கிரேக்க – ஜெர்மானிய நாடகக்காரர்கள் பற்றியெல்லாம் அறிய விரும்புகிறவர்கள் வலைதளத்தில் எளிதாக அறிந்துகொள்ளலாம். மற்ற சில உண்மைகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் வழி அறிந்துகொள்ளலாம்.)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!