சாதி ஒழிப்புப் போரின் முதல்வர் புத்தர்: விடுதலை முரசு

ஜெ.பாலசுப்பிரமணியம்

5

விடுதலை முரசு ‘தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்ற இதழ்’ என்ற துணைத் தலைப்புடன் 1.9.1956இல் திருச்சி தேவதானத்திலிருந்து (பதிவு எண்.5532) வெளியானது.  இவ்விதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷனின் திருச்சி ஜில்லாத் தலைவரான எம்.சிங்காரம் ஆவார். டி.சீனிவாசனுக்குச் சொந்தமான 43 அல்லிமால் தெரு, திருச்சி – 1 என்ற முகவரியில் செயல்பட்ட வாசன் அச்சகத்தில் இவ்விதழ் அச்சானது.

12 பக்கங்களில் வெளியான விடுதலை முரசின் சந்தா விவரம்:

உள்நாடு

ஆண்டு சந்தா ரூ. 4-0-0
அரை ஆண்டு சந்தா ரூ. 2-0-0
தனி இதழ் அணா 0-2-0

வெளிநாடு

ஆண்டு சந்தா ரூ. 5-0-0
அரை ஆண்டு சந்தா ரூ. 2-8 அணா-0
தனி இதழ் 0-2 அணா – 6 பைசா

விடுதலை முரசுக்கான நன்கொடையாளர்களின் பட்டியலில் (1.10.1956) கண்டியூர், சேந்தமாங்குடி, கரூர், மணத்தட்டை, ஐநூத்திமங்கலம், மகாதனபுரம், திம்மாச்சிபுரம், வீரவல்லி, திருவேங்கிடமலை, முசிரி, சித்தூர், மனப்பாளையம், வளையப்பட்டி, அரியனாம் பேட்டை, எசனக்கோரை (லால்குடி), கம்பரசம்பேட்டை (திருச்சி) ஆகிய ஊரைச் சேர்ந்தவர்களின் பெயர்களைக் காண முடிகிறது. பெரும்பாலானவர்கள் செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷனின் நிர்வாகிகளாகவும் தொண்டர்களாகவும் இருந்துள்ளனர்.

இரண்டாவது இதழில் ஆசிரியர் ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கோர் அறிவிப்பு’ என்ற தலைப்பில் ஓர் அறிவிப்பைச் செய்துள்ளார். அதில் “திருச்சி மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருக்களுக்குத் தேவையான வழிநடை பாதை, குடிதண்ணீர், வாசகசாலை, பள்ளி, குடியிருப்பு மனைகள், தற்காசு நிலங்கள் போன்ற ஞாயமான குறைகளையும் மற்றும் ஜாதியின் பெயரால் ஏற்படும் கொடுமைகள் இருந்தால் அவைகளில் உண்மையானவைகளை ஆதாரப்பூர்வமாக எழுதி கையெழுத்திட்டு விடுதலை முரசு காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கும் படி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றோர் அறிவிப்பில் “கவிதை, கட்டுரை, இலக்கியம், சிறுகதை, நாடகம் முதலிய பகுதிகளில் எழுதும் அன்பர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான மார்க்கங்களையே குறியாக வைத்து அதற்கேற்ற கருத்துகளுடன் விளக்கமாக எளிய நடையில் இரு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கட்டுரைகள் மட்டுமல்லாமல் புனைவுகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசுபவையாக இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்தியுள்ளனர்.

இதழ் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து பலர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

வாழ்த்துகிறேன்

“விடுதலை முரசு” கேட்டேன். வரப்பெற்றேன். கலா மகிழ்ந்தேன் “விடுதலை முரசு” தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்ற வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபடும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. காரணம் இதன் ஆசிரியரான திரு. வி.சிங்காரம் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்ற ஆக்க வேலைகளில் நாணயமாக நேர்மையான உள்ளத்துடன் முனைந்து வேலை செய்து வருபவர். தென்னாட்டைப் பொறுத்தவரையில் நம் இனத்திற்காக வேண்டி தன்னால் இயன்ற நன்மையான காரியங்களை எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது செய்துவரும் ஒரு பழங்குடி மகன் திரு. வி. சிங்காரம் அவர்கள் என்பதை இனத்தவன் என்ற முறையிலே வெளிப்படையாகக் கூறுகிறேன். சிங்காரத்தின் தயவு வேண்டுமென்பதற்காகவோ அல்லது அவரால் ஏதாவது லாபம் தேடிக்கொள்ளலாம் என்ற சுயநல எண்ணத்தினாலேயோ நான் இதைக் கூறவில்லை. உண்மையை உள்ளபடி மறைக்காமல் கூறுகிறேன். அவரைவிட பதின்மடங்கு சேவை செய்து வருவதாக சொல்பவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையின் வசதிக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்குமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிலே, சமூகத் தொண்டு செய்ய இந்தப் பாழாய்ப்போன இனத்தில் உண்மையான நேர்மையாளன் ஒருவன்கூட இல்லையா என்ற சந்தேகக் கணக்குப் போடும் இந்தச் சந்தர்ப்பத்திலே திரு. சிங்காரம் அவர்கள் “விடுதலை முரசு” என்ற இன உணர்ச்சித்தாளை வெளியிடுவதன் மூலம் இனத்தொண்டு புரிவதென முன்வந்துள்ளார். வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்! விடுதலை முரசு வீரத்துடன் முழங்கட்டும்! பழங்குடி இனமக்களின் செவிகளில் ஒலித்து அவர்கள் விழித்தெழட்டும்!

வாழ்க பழங்குடி இனம்! வளர்க நம் இனத்தொண்டு!!

அன்பன்.
க.நடராஜ்,
கிராம துணைத் தலைவர்,
குழுமித் தெரு, வரகனேரி, திருச்சி,
5-9-56.

வாழ்த்தி வரவேற்கிறோம்

திருச்சி ஜில்லா தாழ்த்தப்பட்டோர் பெடரேஷன் தலைவர் திரு. எம்.சிங்காரம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “விடுதலை முரசு” பத்திரிகை வெளிவருவதைச் சமூகத்தொண்டு செய்யும் ஊழியர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்களோ அவர்களைப்போல் பொதுநலத் தொண்டு செய்யும் கீழ தேவதானம் தாழ்த்தப்பட்டோர் நல உரிமைச் சங்கத்தாராகிய நாங்களும் மிக மகிழ்ச்சி அடைகிறோம். நமது தலைவர் பொறுப்பிலே ஒரு பத்திரிகை இருக்கவேண்டும். அவர்களுடைய கருத்துகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நம் சமூக நலன் கருதும் நண்பர்கள், படித்தவர்கள், பட்டாதாரிகள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்துதான் விடுதலை முரசை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆசிரியர் அவர்கள் கடந்த 25 வருடங்களாகப் பொதுத் தொண்டு செய்கிறார்கள். நமது சமூகத்தில் அதிகம் படித்தவர்களில்லாத 1929-ல் S.S.L.C வரை படித்தவர். படித்துவிட்டுப் பதவிக்குப் போகாமல் சமூகத்திற்காகவே பலியானவர். அவரின் எண்ணம், முயற்சிகளெல்லாம் நம் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திலேதான் செலவிடுகிறார்கள். தன்னை விளம்பரம் செய்துகொள்ளவோ, அறிமுகப் படுத்திக்கொள்ளவோ விரும்பாதவர். தன்வாழ்நாள் முழுவதையும் பொதுப்பணிக்கே அர்ப்பணித்தவர். ஒரு உத்தமர், சமூக உழைப்பாளி, சமூகப் பணிக்கே தன்னை பரம ஏழையாக்கிக் கொண்டவர், ஆனால் பண்பு குன்றாதவர். பல பெரியோர்களின் நன் மதிப்பைப் பெற்றவர். சுயமரியாதைக்காரர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒரு பொக்கிஷம் சேர்த்து வைத்திருக்கிறார். அவர் பெட்டியைத் திறந்தால் வெறுங் காகிதக் குப்பைகள்தான். ‘காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பதுபோல நம் சமூகத்திற்கு அவைகள் இணையில்லாப் பொருள்களுக்கு ஈடான கருத்துகள் நிறைந்த கதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், பழமொழிகள் இப்படியாகத்தான் காட்சியளிக்கும் அப்பெட்டி. அவைகளிலே முக்கியத்துவம் வாய்ந்தது ஒரு நாடகம். பெயர் ‘என் இரத்தம்’. நல்ல கருத்துகள் அந்த நாடகத்திலே! இந்த நாட்டிற்கு நாம்தான் சொந்தக்காரர்கள். தமிழகத்தின் தலைசிறந்த கொள்கைகளைத் தலைமேற் கொண்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தானென்று ஆதாரப் பூர்வமாக எடுத்துச் சொல்கிறார். இம்மாதிரியான பல நாடகங்கள் உண்டு ஆசிரியரிடத்தில். அவைகளை எல்லாம் ‘விடுதலை முரசு’ மூலியமாக நமக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயம் தரணியிலே தழைத்து ஓங்க ‘விடுதலை முரசு’ நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆதலால் பத்திரிகையின் வளர்ச்சி, நம் இனத்தின் வளர்ச்சி எனக் கருதி ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட மகனும் இதற்கு ஆவன செய்யவேண்டும். நம் இனத்தின் முன்னேற்றத்தைக் கருதி சேவை செய்யும் சங்கங்கள், சம்மேளனங்கள் அதிகமான சந்தாதாரர்களைச் சேர்த்து ‘விடுதலை முரசை’ வளரச் செய்யவேண்டியது நம்போன்றோரின் கடமை. நம்போன்ற பொதுநல மன்றத்தார்கள் தலையிட்டால் இத்தரணியிலே தழைக்காதது எதுவும் கிடையாது. ‘விடுதலை முரசே’ நீ வாழ்க! வளர்க!! உன் முரசொலி கடல் கடந்து முழங்க வாழ்த்தி வரவேற்கிறோம்.

ஷெடியூல்டு வகுப்பு நல உரிமைச் சங்கத்தார்,
கீழ தேவதானம், திருச்சி.

விடுதலை முரசின் பார்வையில் சாதி ஒழிப்பு – பௌத்தம் – காந்தி.

‘தேசாபிமானம்’ எனும் தலைப்பில் பழந்தமிழன் என்பவரால் ஒரு கட்டுரை (15.9.1956) எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் புராண காலத்தில் இத்தேசம் சாதி வேற்றுமை இல்லாமல் சிறப்புடனே இருந்தது என்றும் அதற்குப் பின்புதான் சாதி வேறுபாடுகளும் தீண்டாமையும் தலைதூக்கின என்றும் கூறப்படுகிறது. அன்பே கடவுள், ஒருவரோடு ஒருவர் அன்பு கொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்வதே வழிபாடாகவும், தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்த பெரும் பேறு பெற்ற அன்புநாடு நம்நாடு. ஆண்டான் அடிமை இல்லை, கீழ் – மேல் என்ற ஜாதிய ஏற்றத்தாழ்வு இல்லாமல் தன்மானமே நன்மானம் என்று மனிதாபிமானத்துடன் எல்லோரும் ஓரினமாய், ஓர் தாய் மக்களாய் ஒன்றுபட்டு வாழ்ந்த ஒற்றுமை நாடு நம்நாடு. ஆனால், இந்த நற்பண்புகளைக் கொண்ட இந்நாட்டு மக்களின் உள்ளத்தில் வேறு தேசத்திலிருந்து வந்தவர்கள் பல கடவுள்களை உண்டாக்கி, அதற்கேற்ற தத்துவங்களைப் புகுத்தி மக்களின் எண்ணங்களையும் கவனத்தையும் வேறு வழிகளில் திருப்பி மவுடீகத்தில் வீழ்த்தி விட்டார்கள் என்று வாதிடுகிறது. தீண்டாமைப் பேயை உருவாக்கிய மனுதர்மம் ஊழ்வினை, முன் ஜென்மம், பின் ஜென்மம், மோட்சம், நரகம், புராணம், இதிகாசம் இவைகளை உருவாக்கி தேசபிமானிகளின் சிந்தனைகளைப் பாழ்படுத்திவிட்டனர். இதை இப்படியே வளர விட்டுக் கொண்டிருந்தால் அதன் விளைவு ஒன்று பத்தாகும், பத்து நூறாகும், நூறு ஆயிரமாகும். இத்தீமை பூத்துக் காய்த்து, பழுத்துக் கனிந்து, அழுகி நாற்றம் எடுத்து அகிலமெல்லாம் வீசுகிறது. எனவே ஒருவர் தேசாபிமானமோ, மனிதாபிமானமோ, கடவுள் அபிமானமோ வேறு எந்தவிதமான அபிமானத்தையும் விரும்புவாராகையில் அவர்களின் சேவை, மொழி, எண்ணம், முழுச்செய்கைகள் யாவும் இந்நாட்டில் அநியாயமாக அடக்கி ஒடுக்கித் தாழ்த்தப்பட்டு அல்லல்படும் பழங்குடி பாட்டாளி மக்களுக்குச் சேவை செய்வதைத் தவிர வேறு சேவை நாட்டில் இல்லவே இல்லை என்றும் தேசத்திற்கு ஆற்ற வேண்டிய அடிப்படை பணி சாதி ஒழிப்பே என்றும் சுட்டிக் காட்டுகிறது.

மற்றொரு கட்டுரை, (15.9.1956) ‘புத்தரும் நாமும்’ எனும் தலைப்பில் மணி என்பவர் எழுதியுள்ளார். இதில் அம்பேத்கர் தனது ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் எடுத்துரைக்கக்கூடிய கருத்துகளே வழிமொழியப்பட்டுள்ளன. ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூல் 1956இல் எழுதி முடிக்கப்பட்டாலும் பாபாசாகேப்பின் இறப்பிற்குப் பின்னால் 1957இல்தான் வெளியிடப்பட்டது. ஆனால், இக்கட்டுரையில் பாபாசாகேப்பின் கருத்துகளான, “பட்டினி கிடந்தும், விரதம் அனுஷ்டித்தும், உடலை வருத்தியும், மெய் தவம் புரிவதாலும் ஏற்படுவது ஒன்றுமில்லை. மனிதன் ஆத்மா, பிரம்மம் பற்றி வாதாடுவதை விட ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதால் அநேக நன்மைகள் பயக்கும். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மையானவனே உத்தமன். பிறர் உன்னிடம் வெறுப்புக் காட்டினால் நீ அன்பாக நடந்துகொள். தானம் கொடுத்தும் தர்மம் செய்தும் பூஜை நடத்தியும் யாகங்களைச் செய்வித்தும், யாத்திரைகளை மேற்கொண்டாலும் மனிதன் அடைவது ஒன்றுமில்லை; ஒரு கணம் மனதை அன்பின் வழியில் செலுத்துதலே மேலானது” என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கௌதம சித்தார்த்தர் வீட்டைவிட்டுச் சென்றதற்கான காரணம் ரோகிணி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை என்பது குறிப்பிடப்படாமல் வழக்கம்போல பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவற்றை வெற்றிகொள்ளவும், தீவிர சிந்தனை செய்வதற்காகவும், கடும் தவம் இயற்றும் பொருட்டு நள்ளிரவில் வீட்டைத் துறந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், வேறொரு கட்டுரையில் புத்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஒருவரை ஒருவர் அடக்கி ஆள்வதற்கு ஆசையே காரணமாதலால் ஆசையை அகற்ற வேண்டும் என்று மக்களின் மீது அன்பு கொண்டு அந்தவகையில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதும் இரக்கம் காட்டிப் பேசிய முதல்வர் புத்தபிரானேயாவார்” என்று புத்தரை முதல் சாதி ஒழிப்புப் போராளி என்று பிரகடனப்படுத்துகிறது.

‘விடுதலை முரசு’ அம்பேத்கரிய இதழாக இருந்தாலும் காந்தியை புனா ஒப்பந்த நினைவைக் கொண்டு விமர்சிக்காமல் அவரின் படத்தை அட்டைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் காந்தி பயன்படுத்திய ஹரிஜன் என்ற சொல்லைப் பெரும்பாலான அம்பேத்கரியர்கள் கடுமையாக விமர்சித்தபோதும், ‘விடுதலை முரசு’ ஹரிஜன் என்ற சொல்லுக்கு அடைப்புக்குறிக்குள் கடவுளின் பிள்ளைகள் என்று விளக்கமும் கொடுத்துள்ளது. காந்தி குறித்து, “அந்நிய ஆதிக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்க சுதந்திர வேட்கையில் முழுமூச்சுடன் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நமது தேசத்தந்தை காந்தியடிகள் பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்து நடத்தியவர். நாடு சுதந்திரம் அடைந்ததும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திலேயே தன் முழு நேரத்தையும் கழித்தார். தாழ்த்தப்பட்ட மக்களோடு தானும் ஒரு தாழ்த்தப்பட்டவராகவே வாழ்ந்து தன் மூச்சு, உடல், உயிர், எண்ணம், சொல், செயல் யாவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனவே பயன்படுத்தி நாட்டு மக்கள் எல்லோரும் ஹரிஜனங்களாக (கடவுளின் மக்களாக) ஒன்றுபட்டு வாழ பாடுபட்டு வந்த உத்தமரின் ஆசை நிறைவேறி உள்ளம் மகிழ்ச்சி அடைவதற்குள் வெண்ணெய் திரண்டு வரும்போது தாளி உடைந்தது போல் பாழான ஜாதி அடிகளின் அரிய உயிரை கொள்ளை கொண்டதால் தாழ்த்தப்பட்ட மக்களின் துன்ப எல்லைக்கோடு இன்னும் வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளிப் போடப்பட்டு விட்டது. ஏங்குகிறோம்! எதிர்பார்க்கிறோம்! இன்ப எல்லையைக் காண” என்று காந்தி குறித்துப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.

 விடுதலை முரசு, 15.09.1956

தீண்டாமை குறித்துப் பழந்தமிழன் எழுதிய கட்டுரையில் (1.10.1956) தீண்டாமையின் தோற்றத்திற்கு இந்து மதமே காரணம் என்றும் தீண்டாமை யாருக்கும் நன்மை செய்யாது, அது ஒடுக்குபவரையும் ஒடுக்கப்படுபவரையும் ஒருசேர பாதிக்கிறது என்று வாதிடப்படுகிறது. அதில், “தீண்டாமை போன்ற கொடுஞ்சொல் நாட்டில் வேறு இல்லவே இல்லை. கொடுஞ்சொல்! கொடுஞ்சொல்!! வறுமை எனும் சொல்லினும் மிகவும் கொடுஞ்சொல்!!! இரக்கமே இன்னதென்றறியாத ஈனச்சொல்! பழிபாவத்திற்கஞ்சாத இழிகுணம் படைத்த படுபாதகச் சொல்லாகிய தீண்டாமையே நம் நாட்டின் சர்வாதிகாரி. இந்து மதத்தின் செல்லக்குழந்தை. வருணாச்சிரமத்தின் வாயிற்படி. ஜாதிப்பிரிவின் தந்தை. தன்னலத்தின் தாய்” என்று தீண்டாமையின் தோற்றத்தை விவரிக்கிறது. மேலும், சமத்துவ தேசத்தைக் காண தீண்டாமை ஒழிந்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற உயரியப் பண்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று இக்கட்டுரை முடிகிறது.

பெரியார் குறித்து விடுதலை முரசு

பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்திற்கும் அம்பேத்கர் தொடங்கிய பெடரேஷனுக்கும் நெருங்கிய உறவு இருந்தது. கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆ.இரத்தினம் நடத்திய உரிமை இதழில் கழகத்தாருக்கும் பெடரேஷனுக்குமிடையில் கருத்து மோதல்கள் நடந்தன. உதாரணமாக ‘சிறந்த வாழ்வு எய்த’ எனும் தலைப்பில் எஸ்.துரைமாணிக்கம் என்பவர் உரிமை, இதழில் (15.3.1949) எழுதிய கட்டுரையில் “ஆதிதிராவிடர்கள் ஏன் திராவிடர் கழகத்தில் சேர்ந்து தங்கள் உழைப்பை வீணாக்குகிறார்கள். ஆதிதிராவிடர்கள் திராவிடக் கழகப் பத்திரிகைகளை வாங்குகின்றனர், அவர்களின் கூட்டங்களுக்குச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் யாரும் நமது பத்திரிகைகளைச் சீண்டிப்பார்ப்பது கூட கிடையாது, நமது இயக்கத்தின் கூட்டங்களுக்கும் வருவது கிடையாது” என்றும் இதன் தொடர்ச்சியாக “ஆதிதிராவிடர்களின் உழைப்பில் வளர்ந்த சுயமரியாதை இயக்கம் இன்று திராவிடர் கழகமாகி வளர்ந்த பின்பு பிற்படுத்தப்பட்டோரின் கைகளுக்குச் சென்றுவிட்டது எனவும், ஆகவே இனி திராவிடர் கழகத்திற்கு ஆதிதிராவிடர்கள் தேவையில்லை எனவும் ‘உரிமை’ தனது கட்டுரையில் விமர்சிக்கிறது.” ஆனால், அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு பெடரேஷனின் பத்திரிகையான ‘விடுதலை முரசு’வில் பெரியாரையும் அவரது இயக்கத்தையும் ஆதரித்தும் புகழ்ந்தும் அம்பேத்கரியர்கள் எழுதியுள்ளனர். மேலும், 1.10.56 இதழ் பெரியார் பிறந்தநாள் சிறப்பிதழாக பெரியாரின் அட்டைப் படத்துடன் வெளியாகியுள்ளது. ‘வாழ்க பெரியார்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

பெரியார் ஈ.வெ.ரா., அவர்களின் பிறந்த தினம் நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதையொட்டிப் பெரியோர் பலர் பெரியார் நீண்ட நாள் வாழ வேண்டுமென நல்வாழ்த்துகள் வழங்கினர். அந்த வழியில் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பில் நாமும் நமது வாழ்த்தை மற்றவர்களை விட உள்ளன்போடும் உரிமையோடும் வாழ்த்துகிறோம். பெரியார் வாழ்க! வாழ்க!! பல்லாண்டு வாழ்க!!! வென்று.

நாட்டில் ஒருவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்களென்றால் அவரின் பெற்றோர், பிறந்தார், உற்றார், உறவினர்கள்தான் கொண்டாடுவது வழக்கம். அப்படியில்லாமல் வேறு ஒருவரின் பிறந்த தினத்தைப் பலதரப்பட்ட பொதுமக்கள் பெருவாரியாகக் குதூகலத்துடன் கொண்டாடுவதற்கு யோக்கியதாம்சம் பெற்றவர்கள் உலகில் ஒரு சிலரேயாவார். அவர்களில் ஒருவர் நமது பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள்.

பெரியாரின் பிறந்த தினத்தைச் சிறப்புறக் கொண்டாடுவதற்கு எவை காரணங்களாய் இருக்கின்றனவோ அவைகளின் பயனை அடைந்த நாம் அவரின் பிறப்பை எண்ணி யெண்ணி மகிழ்வதிலும் அத்தகையார் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டுமென வாழ்த்துக் கூறுவதிலும், உரிமையுடையவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் அவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டுமெனத் தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்புவதிலும் ஆசைப்படுவதிலும் ஆச்சரியமில்லை. மறைந்த உள்ளத்தில் உறைந்து கிடக்கும் நல்லெண்ணமும் அதுவேயாகும். ஏதோ சில சந்தர்ப்பவசத்தாலும் பல்வேறு சூழ்நிலை காரணங்களாலும் அவரை வெளிப்படையாகக் கௌரவிக்க சிலரால் முடியாமல் அதற்கு எதிராகத் தூற்றியும், இழித்தும் பழித்தும் கூறுதல் யாவுங்கூட அதுவும் ஒரு நிந்தாங் துதியே (தூற்றித் துதிப்பது) யாகும். ஏனெனில் பெரியாரின் சேவை அந்த அளவுக்குப் பயனளித்ததாகும்.

நாட்டிற்கு நல்ல காரியங்கள் செய்யத் துணிந்து ஒருவர் முன் வரும்போது அவருக்கு எதிராகப் பலர் தோற்றித் தோன்றி, குறுக்கிட்டு, துன்பங்கள் பல விளைவித்து நிந்திப்பதும் உலகில் சர்வசாதாரணமாக இருந்திருக்கின்றன, இருக்கின்றன என்பதற்குச் சரித்திரம் சான்று கூறுகின்றன.

ஒருவரின் புறையோடிப் போன பெரும் பிளவையைக் குணப்படுத்த நல்லெண்ணம் கொண்ட வைத்தியர் பிளவையைக் கூரிய கத்தியால் கீறிவிட்டு அதில் சீழ் தங்காமல் வெளியிலெடுக்கப் பலமாக அமுக்கி அழுத்தி, சுத்தமாகத் துடைத்துக் காரமான மருந்துகள் போடும்போது நோயாளிக்கு உபத்திரவமாகத்தான் இருக்கும். ஆனால், வைத்தியரின் மீதும் கோபமும், வெறுப்பும் கொள்ளத்தான் செய்யும். மெதுவாகச் சிகிச்சை செய்யும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் தன் காரியத்தையே செய்வதைக் கண்டாலே சபிக்க வேண்டியதாகவேதான் இருக்கும்.

நோய் குணங்காண வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன்தான் வைத்தியர் ரண சிகிச்சை செய்தாரே தவிர நோயாளிக்குத் துன்பத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் செய்யவில்லை. நோய் குணமானதும் வைத்தியரை எப்படிப் போற்றிப் புகழ வேண்டி இருக்கிறதோ அதுபோல்தான் பெரியார் அவர்கள் புறையோடிக் கிடக்கும் நம் சமுதாயத்தைச் சீர்படுத்தும்போது ஒருபுறம் மக்களின் தூற்றலுக்கும் மறுபுறம் புகழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களைப் பொருத்தவரையில் பெரியார் அவர்கள் காங்கிரஸில் இருந்த காலத்திலும் தீண்டாமை விலக்கையே முக்கியக் கொள்கையாகக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தி வந்தார். மலையாளப் பகுதியில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என தடை செய்திருந்த இடத்தில் தானும் தன் மனைவி, தங்கையுடன் சத்தியாகிரகம் செய்து எல்லோரும் நடக்கலாம் என்ற உரிமையை வாங்கித் தந்தார். அதனால் “வைக்கம் வீரர்” என்ற புகழ் பெயரையும் பெற்றார்.

ஜாதி வித்தியாசத்தையும் தீண்டாமையையும் ஒழிக்க சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். ஜாதி வித்தியாசத்திற்கும் தீண்டாமைக்கும் காரணமாக இருந்தவைகள் அத்தனையையும் எதிர்த்தார். ஜாதிகள் ஒழிய கலப்பு மணங்கள், சமபந்தி சாப்பாடுகள் ஆங்காங்கு நடத்தச் செய்தார். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் உள்ளத்தைச் சுயமரியாதை இயக்கம் பெரிதும் கவர்ந்தது. வாலிபர்களுக்கும் வயோதிகர்களுக்கும் ஆர்வத்தை மூட்டி சமூக சேவை செய்ய திடமான பற்றையும் மூட்டி எண்ணற்ற வாலிபர்களை இழுத்து வந்தது. அந்த வகையில் இழுத்து வந்து சமூகச் சேவை செய்ய ஊக்கமும் உற்சாகமும் நம்பிக்கையும் தைரியத்தையும் கொடுத்து நம்மையும் இந்த வகைக்குக் கொண்டு வந்து நிறுத்தியப் பெருமை பெரியாரையைச் சாரும் என்பதைத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்றைய அரசியல் அலுவல்களுக்கே 55 வயதுதான் என வயதின் அளவை எல்லைகட்டி அதற்கு மேல் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். நம் பெரியார் அவர்களோ 78 வயதாகியும் உற்சாகத்துடன், நித்தம் நித்தம் பல நூறு மைல்கள் பிரயாணம் செய்து சந்து, பொந்து, பட்டித் தொட்டிகள் தோறும் 3 மணி 4 மணி நேரங்கள் வரை தொடர்ந்து கொஞ்சமும் களைக்காமல் கேட்போர் மனம் சலிக்காமலும் மக்களிடத்தில் பகுத்தறிவு பிரச்சாரம் செய்து பக்குவப்படுத்தி வருகிறார். உலக சரித்திரத்திலேயே இதுபோன்ற ஒருவர் ஓய்வில்லாமல் பாடுபட்டதாகத் தெரியவில்லை.

பெரியார் அவர்களின் பேச்சை பெருவாரியான மக்கள் கேட்கவும் அவர் கட்டளைப்படி நடக்கவும் தயாராயிருக்கிறார்கள் என்ற உள்ள மகிழ்ச்சியே அவரை இன்னும் பல ஆண்டுகள் சேவை செய்ய இயற்கையே வழி வகுத்துக் கொடுக்கும் என்பது நமது துணிபு.

ஒருவரின் உதவியை மற்றவர் அனுபவித்து அதனால் அவர் மகிழ்ச்சி அடைவதைக் கண்டதும் உதவி செய்தவரின் உள்ளம் பூரிப்படையும். அப்பூரிப்பு உள்ளத்தை விரிவடையச் செய்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்த ஓட்டத்தைக் கொடுத்து நோய்கள் இல்லாமல் ஆயுளையும் விருத்தியடைய வைக்கும் என்பது இயற்கை வல்லுனர்களின் கருத்தாகும். அந்த மகிழ்ச்சிக்குக் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து பெரியார் நீடு வாழ்க! வாழ்க பெரியார்!! வாழ்க!!! வாழ்க!!!! என வாழ்த்துகிறோம்.

பாபாசாகேப் குறித்த பதிவுகள்

பார்வைக்குக் கிடைத்த ஐந்து இதழ்களில் கடைசி இதழ் ஜனவரி 1, 1957இல் வெளியான இதழாகும். இது அம்பேத்கரின் இறப்பிற்குப் பின்பு வெளியான இதழ் என்பதால் அம்பேத்கரின் இறப்புக் குறித்த பதிவுகளே இதழ் முழுவதும் உள்ளன. முகப்புப் பக்கத்தில் ‘தாழ்த்தப்பட்ட மக்களின் தந்தை’ என்ற தலைப்பிட்டு அம்பேத்கரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் நேரு, பெரியார் ஈ.வெ.ரா., ராஜாஜி, அறிஞர் அண்ணா ஆகியோரின் இரங்கல் குறிப்புகள் முதல் பக்கத்தில் சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ளன. பி.கருணாகரன் என்பவர் ‘வாழ்க டாக்டர் அம்பேத்கர் புகழ்’ என்னும் தலைப்பில் அம்பேத்கரின் வரலாற்றை எழுதியுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த சி.பாலசுந்தரம் என்பவர் ‘நம்பிக்கை நட்சத்திரம் மறைந்துவிட்டது’ என்ற தலைப்பில் அம்பேத்கர் குறித்த கட்டுரையை எழுதியுள்ளார். மருதன் எழுதிய ‘சிதறுண்ட மக்களின் சீரியத் தலைவர்’ எனும் கட்டுரையும் கரண்ட் இதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு ‘அம்பேத்கரின் இறுதி நாள் காட்சி! தாழ்த்தப்பட்டோரின் விடுதலை வீரருக்கு மக்கள் காட்டிய மரியாதை’ எனும் தலைப்பிலும், ‘அண்ணலைப் பறிகொடுத்துவிட்டோம்’ என்ற தலையங்கத்தை இரண்டு பக்கத்திலும் ஆசிரியர் எழுதியுள்ளார். அந்தத் தலையங்கத்தை வாசிக்கும்போது அண்ணல் அம்பேத்கர் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த பற்றும் பாசமும் விளங்கும்.

அண்ணலைப் பறிகொடுத்துவிட்டோம்

நமது அருமைத் தலைவர் அரசியல் மேதை அண்ணல் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் அவர்களைப் பறிகொடுத்துவிட்டோம். 8 கோடி மக்களின் ஈடு இணையிலா ஏகத் தலைவரை இழந்துவிட்டோம்! அவர் இறந்து விட்டார்.

பல்லாயிரக்கணக்கான வருடங்களாகக் காரிருள் கௌவிக் கிடந்த நமது தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் வானத்தின் இருட்படரை பிளந்து உதித்தெழுந்த புத்தொளி, அகில உலகெல்லாம் ஒளி வீசிய அறிவின் சுடரொளி, அந்தோ! மறைந்து விட்டது! கார்முகில் மீண்டும் கௌவிக்கொண்டது! எதிர்கால வானமே இருண்டு விட்டது!

தீண்டாமை, ஜாதியம் என்னும் பயங்கரக் கடலில் கிடந்து திக்குத் திசை தெரியாமல் திண்டாடிக் கிடந்த நமக்குக் கரையேற வழிகாட்டியாக ஒளி வீசிய கலங்கரைத் திருவிளக்கு அணைந்துவிட்டது.

தன்னயமும் ஜாதிவெறியும் குடிபுகுந்த இந்த நாட்டில் தன்மானத்தை இழந்து எம்மவரை இனியும் வாழ விடமாட்டேன்; அதற்கு எதிராக வேதம், புராணம், இதிகாசம், முன் ஜென்மம், பின் ஜென்மம், விதி, மனுதர்மம், மதம், கடவுள் போன்றவைகள் குறுக்கிடினும் அவைகள் அத்தனையையும் எதிர்ப்பேன்; சமுதாயத்தை மாற்றி அமைப்பேன்; ஆவணம் காப்பேன்; இழந்த வாழ்வை மீண்டும் பெறுவேன்; இன்னும் சில நாளில் இந்நாட்டையும் ஆள்வேன் என எக்காளமிட்டு, அதற்கான வழிவகைகளை வகுத்து ஆறுதல் கூறி அரவணைத்து வழிகாட்டி அழைத்துச் சென்ற நம் வீரத்தளபதியை எங்கிருந்தோ எப்படியோ எதிர்பாராது திடீரென திசை மாறித் தோன்றிய காலச்சூறாவளி எட்டுக் கோடி மக்களின் இதய ஒளியை வேராய் பிரித்தெடுத்து வாரிச்சுருட்டி மூடி மறைத்துக்கொண்டு போய்விட்டது. நம் எண்ணத்தில் இடி விழுந்து விட்டது.

பரமபத விளையாட்டில் ஏணி கிடைத்ததும் எடுத்த எடுப்பில் அதன் உச்சிக்கே ஒரே அடியாக ஏறியதும் பக்கத்துக் கட்டத்தில் பாம்பிருந்து கடித்ததும் சட்டென அதன் வால் நுனியாகிய கடைசிக் கட்டத்திற்கே வந்துவிடுவதுபோல் வளர்ந்து வந்த நம் வாழ்வு அடியோடு சரிந்து விட்டது. எண்ணி யெண்ணி ஏங்குகிறோம்! இதயம் புண்ணாகி இன்னது செய்வதென தோன்றாது தவிக்கிறோம்! தத்தளிக்கிறோம்!! தாயை இழந்த சேய்கள் போலவும், கணவனை இழந்த துணைவியைப் போலவும், மேய்ப்பனை இழந்த ஆட்டு மந்தையைப் போலவும், மாலுமியை இழந்த மரக்கலம் போலவும், நாதத்தை இழந்த வீணை போலவும், மணத்தை இழந்த மலர் போலவும், வாளை இழந்த வீரனைப் போலவும், ஒளியை இழந்த கண்கள் போலவும், தளபதியை இழந்த படையைப் போலவும் பழங்குடி மக்களாகிய நாம் நமது பாதுகாவலரை இழந்துவிட்டோம்! இதுபோன்ற உவமைகள் ஆயிரம் ஆயிரம் அடுக்கிக் கொண்டே போனாலும் அத்தனையும் பொருந்தும் அண்ணலின் பெருந்தகைக்கு.

நம்மைப் பெற்றத் தாய் தந்தையர் நம்மை அடிமைகளாகவே பெற்று, அடிமைகளாகவே வளர்த்து, அடிமைகளாகவே வாழ்வித்து, அடிமைகளாகவே இறக்க வைத்தனர். அத்தகைய அடிமைகளாக வாழ்ந்த மக்களைத் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து மற்ற மக்களுடன் சரி நிகர் சமமாய் வாழ வழி வகுத்துக் கொடுத்த நமது சமூகத் தாய், அரசியல் தந்தை, வாழ்வை வளமாக்கிய குலதெய்வம் நம்மையெல்லாம் ஆராத் துயரத்திற்கு உள்ளாக்கி விட்டு யாரிடமும் எதையும் சொல்லாமல் எதிர்காலம் உண்டா? இல்லையா? என்பதும் தெரியாமல் எப்படியோ விட்டுவிட்டு ஆருயிர் அண்ணல் மறைந்துவிட்டார்! அரசியல் அனாதைகளாகிவிட்டோம்.

மறைந்த நம் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு சாதாரணமானவர் அல்ல. இன்றைய நாட்டில் மதத்துறையிலோ, சமூகத்துறையிலோ, பொருளாதாரத்துறையிலோ, அரசியல் துறையிலோ அல்லது அறிவியல் துறையிலோ வேறு மற்றெந்தத் துறைகளிலும் சிறந்து விளங்கும் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் பாராட்டுதலுக்குரியவர். மற்றவர்களின் உள்ளத்தில் அச்சத்திற்குமுரியவர். அகில உலக அரசியல் மேதைகளும் கௌரவிக்கத்தக்க ஒப்புயர்விலாப் பேரறிஞரை நாம் தலைவராகப் பெற்றிருந்தோம்.

படிப்பு என்றால் படி எவ்வளவு என்று கேட்கும் அளவுக்கு விவேக சூனியங்களாக ஆக்கி வைத்திருந்த நமது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்விக்கே ஓர் எடுத்துக்காட்டாக M.A.Phd, D.Sc., D.Litt., J.P. Bar-at-Law போன்ற உயரிய பட்டங்களைப் பெற்றவர்.

அண்ணல் அவர்கள் படித்த படிப்பு, பல்வேறு நாடுகளில் அவர் பெற்ற பட்டங்கள், அத்தோடு நில்லாது பல துறைகளில் பல பேரறிஞர்கள் எழுதிய ஆராய்ச்சி நிரம்பிய அரிய பெரிய நூல்கள் பலவற்றையும் துருவித் துருவி ஆராய்ந்து கண்டு தெளிந்த அந்நூல்கள் தன் வீட்டில் அழகுற இடம் பெற்றிருக்கும் நூல் நிலையத்தை ஒருவர் பார்த்ததில் திகைக்கவும், அதே நேரத்தில் தன்னைக்கண்டு உள்ளத்தில் ஒரு பயத்தையும் கொடுக்கக் கூடிய அளவிற்குத் தன்னை ஒரு முழுத்தகுதி வாய்ந்தவராக்கிக்கொண்டார். தனது தகுதி, திறமை, அறிவு, ஆற்றல், அனுபவம், அத்துடன் அன்பு, நீதி, நேர்மை, பட்டம், பதவி, உடல், பொருள், ஆவி அத்தனையும் தான் பிறந்த சமூகத்திற்கே பயன்படுத்திய தன்னலமற்ற ஒரு தலைவரை சரித்திர வரலாற்றில் எங்கும் காண முடியாத விந்தைக்குரிய செய்தியேயாகும். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கைச் சரித்திர வரலாறு ஏட்டில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் தன் சமூக நலனுக்கான கருத்துகள், செய்கைகள் இடம்பெறாமலிருக்காது. அதனால் சில பெரியவர்களின் விரோதத்தையும், மனக்கசப்பையும் ஏற்றுக்கொண்டு சமூக முன்னேற்றமே தன் முன்னேற்றம் என்ற ஒரு குறிக்கோளின் மீது வாழ்ந்து மறைந்த செயற்கரிய செய்த பெரியார். கேட்பாரற்றுக் கிடந்த சமூகத்தில் தப்பிப் பிறந்த தனி மகன்!

நாட்டிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் தங்களை ஆதரிக்கப் பெரும் மக்கள் கூட்டம் இருக்கிறது. அக்கூட்டத்திற்குத் தான் தலைவர் என்றெண்ணித் தலைவர்கள் மகிழ்கின்றனர். ஆனால், அண்ணல் அம்பேத்கர் அவர்களோ நம்மையெல்லாம் எதிர்பாராமல் அவர் தன்னந்தனியாகவே நின்று நமக்கான நன்மைகள் அத்தனையும் செய்து கொடுத்த ஒரு ஒப்பற்ற தலைவரைப் பெற்றிருக்கிறோம் என்ற இன்பத்தில் நாம் இறுமாந்திருந்தோம். தலைவர்களின் உயர்விற்கு மக்களை ஏணிப்படியாக உபயோகிக்கின்றனர். நம் தலைவரோ தம் இனத்தவரின் உயர்விற்கு மாறுபட்ட கருத்துடைய தம் இன தேசியப் பிரமுகர்களுக்கும் தானே ஏணிப்படியாக இருந்தார். அந்த விதத்தில் எட்டுக் கோடி மக்களின் ஏகத்தலைவராகிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மறைவினால் தாழ்த்தப்பட்ட இனமே இன்று சிறகிழந்த பறவை போலாகிவிட்டது.

அண்ணல் அவர்கள் தனக்கிருக்கும் தகுதி திறமைகளுடன் கிடைத்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி தான் வாழ வேண்டும், புகழப்பட வேண்டும் என்று எண்ணி காந்தியடிகளுக்கும், காங்கிரஸிற்கும் கொஞ்சம் நல்ல பிள்ளையாக நடந்திருந்தால் அல்லது ஜாடையாவது காட்டியிருந்தால் இன்று தேசியம் அவரைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு ஆடியிருக்கும். அந்த வகைக்கு அண்ணல் போயிருந்தால் அதிகாரப் பீடத்திலிருக்கும் இந்து மதமும் தேசியமும் இன்று இந்த அளவிற்கு இறங்கி வந்திருக்காது.

அண்ணலின் மறைவிற்கும் பிறகு நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நினைக்கும் பொழுது பயங்கரமாக இருக்கிறது. அவர் முன் தலை கவிழ்ந்த இந்துமத நச்சரவம் பயங்கர படத்தை விரித்தாட்டி சீறியெழுந்து பயமுறுத்தும், வாய் திறந்து வட்டமிட்டலையும் வைதீக வல்லூறு வாட்டி வதைக்கும்; கூறிய கொடுக்கினால் கொட்டிக்கொட்டி நஞ்சையூட்டும் ஜாதி செந்தேள் இனி மணியம் பெற்று நிமிடத்திற்கு நிமிடம் நம்மவரை கொட்டி வாட்டி வதைக்கும்; அண்ணலால் பிடுங்கப்பட்ட கோரப் பற்களையிழந்த தீண்டாமைக் கொடும்பேய் சினந்தெழுந்து தீப்பிழம்பைக் கக்கி சித்தரவதைச் செய்யும்; தேசியம் மாற்றாந்தாய் மனப்பான்மை கொள்ளும்; ஆண்டைகளின் கோபம் அத்துமீறும்; ஆட்டிப்படைக்கும்; முதுகெலும்பொடிந்த முதலாளித்துவம் இனி மிடுக்காய் நடக்கும்; இத்தனையும் ஒன்று சேர்ந்து ஏககாலத்தில் வாட்டி வதைக்க ஆரம்பித்தால் என் செய்வோம்! எவ்வாறு உய்வோம்! தட்டிக் கேட்க நமக்கினித் தகுதி வாய்ந்த தலைவரில்லையே என்ற ஏக்கம் சிந்தையைப் பிடித்தாட்டுகிறது! சித்தப் பிரமமைக்குள்ளாக்குகின்றது!

அன்று எழுதிய எழுத்தின்படிதான் இன்று கீழான ஜாதியில் பிறந்து தாழ்த்தப்பட்டவன், தீண்டப்படாதவன் என்று பலர் இழித்தும் பழித்தும் கூறுவதுடன் ஓய்வில்லாமல் உழைத்தும் உழைத்த பலன் கைக்குக் கிட்டினும் வாய்க்கு எட்டாமல் துன்பப்பட வேண்டுமென்பன யாவும் கடவுள் எழுதிய எழுத்தெனச் சொல்லும் அந்த எழுத்தை அழித்துவிட்டு எல்லோருக்கும் இன்பம் துன்பம் இரண்டினும் சமம் என்று பொதுமறை எழுதிய புத்துலக சிற்பியல்லவா நமது அண்ணல்!

அண்ணலின் கடந்த கால அரசியல் வாழ்வில் பிரசித்தி பெற்றது வட்டமேஜை மாநாடு. அம்மாநாட்டில்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலை இப்படிப்பட்டதென்று ஆங்கிலேய சர்க்கார் நன்றாய் புரிந்து கொள்ளும்படி பல ஆதாரங்களை அடுக்கடுக்காக ஆங்கு எடுத்துக்காட்டினார். தனித்தொகுதி முறை வேண்டினார். காந்தியார் அதை எதிர்த்தார். தன்னை எதிர்க்கும் “காந்தியார் ஒரு வர்ணாசிரமதர்மி, தாழ்த்தப்பட்ட மக்களின் பெரிய விரோதி” என்றெல்லாம் முழங்கினார். அன்று முழங்கிய அந்த விடுதலை முழக்கம் இந்திய நாட்டையே கிடுகிடுக்கச் செய்தன.

ஆங்கிலேயப் பிரமுகர்களான சர்ச்சில், அட்லி, சைமன் கமிஷன் போன்ற அரசியல் தலைவர்கள் அண்ணலின் ஞாயமான கோரிக்கைகளையும், மேதைத் தன்மையையும் கண்டு வியந்தனர். அண்ணலின் பிரதிநிதித்துவத்தையே ஏற்றுக்கொள்ள முடியாதென்று முழுவதும் எதிர்த்த காந்தியடிகளும் உணர்ந்தார். ஆங்கெழுந்த வாதத்தில் தன் எண்ணம் நிறைவேறாது போனதும் “அம்பேத்கரிடம் நான் தோற்றேன்” என்றார் காந்தியார்.

அதையொட்டி எழுந்த உண்ணாவிரதத்தில் “என் உயிர் அம்பேத்கர் கையில்தானிருக்கிறது” என்று காந்தியடிகள் கூறியதையும் அன்னாரின் உயிரைக் காக்க பூனாவில் நடந்த ஒப்பந்தத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டே அண்ணல் கையெழுத்திட்டத்தையும், அன்று விதைத்த விதையிலிருந்து ஹரிஜன இயக்கம் எழுந்ததையும், ஆங்கிலேய சர்க்காரின் வைஸ்ராய் கவுன்சிலில் அங்கம் வகித்ததையும், அதில் “என் சமூக மக்களின் நன்மைக்கு நான் பாடுபடுவதை அரசாங்கம் தடுத்தால் அன்றே பதவியை ராஜினாமா செய்து விடுவேன்” என்று ஆங்கிலேய அரசினரிடம் கூறியதையும், நேரு சர்க்காரில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்ததையும் இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கும் பொறுப்பை அண்ணலிடம் ஒப்படைத்ததையும், அதில் அண்ணல் காட்டிய அறிவின் திறனையும் பொறுப்பையும் கண்டு அரசியல் மேதைகள் வியந்து கூறியதையும் அண்ணலுடன் துணைக்கு நியமித்த நிபுணர் குழுவினர் எழுப்பிய சந்தேகங்களுக்கெல்லாம் அளித்த ஆணித்தரமான பதில்களையும், அரசியல் சட்டத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டு அதன் மீது அன்று அந்தப் பாராளுமன்றத்தில், காங்கிரஸ் கோட்டையில், அதிகார பீடத்தில் நின்று உருவாகி நிறைவேறிய சட்டங்களைச் செயலில் ஈடுபடுத்த தேசிய சர்க்கார் உடனே முன்வருமா? அல்லது தட்டிக் கழித்துக் கொண்டிருக்குமா? என்ற சந்தேகக் குறியுடன் முழங்கிய வீர முழக்கம், அம்முழக்கத்தின் எதிரொலி எதிர்பார்த்து, ஏமாந்து, மணமுடைந்து “நான் உள்ள பொழுதே எந்த வகையிலும் என் மக்களை மானத்துடன் மனிதர்களாக வாழ வழி கண்டு விடுவேன்” என்றெழுந்த சூளுரை. அதுனின்று நாம் வாழ்வை பாழாக்கிய இந்துமதப் பிடிப்பிலிருந்து மக்களை விடிவித்து ஜாதி பிரிவினைக்கு இடமில்லாத புத்த மதத்திற்கு அழைத்துச் சென்றதையும், அதனால் இந்து மதம் கொதிதெழுந்ததையும் நினைத்தால் நமது நலன்கள் அண்ணல் அவர்களின் உள்ளத்தில் எவ்வளவு ஆழத்தில் பதிந்து கிடக்கின்றன என்பதற்குக் கடந்த கால சம்பவங்கள் இன்று ஒன்றன்பின் ஒன்றாய் நம் கண்கள் முன் தோன்றி உள்ளத்தை அனலாய் சுட்டெரிக்கின்றன.

அண்ணலின் மறைவைக் கேட்டதும் நாடே நடுநடுங்கி விட்டது. பல்வேறு பகுதியிலுள்ள பெருந் தலைவர்களெல்லாம் மனம் பதறிவிட்டனர். உண்மையிலே நாட்டுப்பற்றும், சமூகப் பற்றும் கொண்ட ஏனைய தலைவர்களின் உள்ளத்தைத் துடிதுடிக்கச் செய்துவிட்டது. பிரதமர் நேரு அவர்கள் நேரில் சென்று மனங்கலங்கி இறுதி வணக்கம் செலுத்தினார். பெரியார் தன் உற்ற துணைவரை இழந்துவிட்டேன் என்று பெரிதும் வருந்தினார். அண்ணல் அவர்களைப் பற்றி அன்று வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் மூடு திரையிட்டு மறைத்தவர்களெல்லாம் கூட “அம்பேத்கார் ஓர் பேரறிஞர், அரசியல் மேதை, நாட்டின் அரசியல் சிற்பி, பொருளாதார நிபுணர், எதிர்கால தீர்க்கதரிசி, அஞ்சா நெஞ்சர், ஒழுக்க சீலர், தான் பிறந்த சமூகத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒப்பற்றத் தலைவர், காணக் கிடைக்காத அபூர்வ மனிதர், பகுத்தறிவுவாதி, புரட்சிவீரர்” என்றெல்லாம் புகழும் புகழுரைகளைக் கேட்க கேட்க உள்ளம் வெடித்துவிடும் போலிருக்கிறது. அந்தோ அன்று முடியாட்சிக்கேற்ற சட்டத்தை எழுதிய அந்த மனு இன்று உயிரோடிருந்தால் தான் எழுதிய மனுநீதியைச் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்து விட்டுக் குடியாட்சிக்கேற்ற சமதர்ம சட்டத்தை எழுதிய இந்தப் புத்துலக சிற்பியை உண்மையில் புகழாமல்கூட புகழ்ந்திருப்பான்.

இத்தகைய அண்ணலின் எழில்மிகும் அத்திரு உருவை இனி நாம் காண்போமா? அவரின் அரிய பெரிய உரைகளைக் கேட்போமா? எம்மதத்தவரும், எத்தேயத்தவரும் ஏற்றிப் போற்றிப் புகழும் எழுத்தோவியத்தைப் பார்ப்போமா? இதுபோன்ற ஒரு மாபெரும் தலைவர் இனி கிடைக்க பெறுவோமா? எது! தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இதற்கு முன் ஒருவர் தோன்றியதுமில்லை இனித் தோன்றப்போவதுமில்லை. அவர் வகித்த இடத்தைச் சரி கட்டுவதற்கு ஏற்ற ஒருவரை நாம் அடைவதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் அத்தகைய தகுதி வாய்ந்த ஒருவரை இந்தப் பாழாய்ப் போன சமூகம் இனிப் பெறவே முடியாது. எனவே அண்ணனின் மறைவு நமக்கு எல்லாவிதத்திலும் ஈடுகட்ட முடியாத மாபெரும் நட்டமாகும்.

இவ்வளவு பெரிய நட்டத்திற்கும் ஆளாகி தீரா மன வேதனையுடனிருக்கும் அண்ணலின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், எட்டுக் கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் இதய கோயிலில் குலதெய்வமாய்க் குடிபுகுந்த அண்ணலுக்கு நம் கண்ணீரைக் கைமாறாக வைத்து, அவர் காட்டிச் சென்ற வழியினைப் பின்பற்றி, அவர் விட்டுச் சென்ற காரியங்களை நிறைவேற்றி, அவர் சொல்லிச் சென்ற புனித மார்க்கமாம் புத்த மார்க்கத்தின் நன்னெறிகளின்படி கொலை செய்யாமல், கொள்ளையிடாமல், பொய் சொல்லாமல், பிறர் மனைவியை இச்சியாமல், குடிக்காமல், எல்லா உயிரிடத்திலும் அன்பாய் இருந்து சமூகப்பற்றும், நாட்டுப் பற்றுங்கொண்டு நல்லவர்களாக ஒன்றுபட்டு வாழ்வோம் என உறுதி கூறுவதே அண்ணலுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

(தொடரும்)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!