இரண்டு நட்சத்திரங்களைத் தோள்களில் அணிந்தவராக
என் தந்தை இருந்தார்.
குதிரைப் படையை வழிநடத்திய ஜெமதாரை விடவும்
அதிகாரத்தில் மூத்தவரான அவர்
தன் இடுப்பு வாரில்
இரண்டு வாள்களை அணியக் கூடியவராகவும் இருந்தார்.
இராணுவம்
எங்கள் குடும்ப மரபாக இருந்ததால்
என் பரம்பரைத் தொழில் பற்றி
நான் அறிய விரும்பியதில்லை.
எங்கள் முன்னோர்கள்
எப்போதோ அதை மறந்துவிட்டிருந்தனர்.
நான் புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது
அதிகாரமும் மதிப்பும்
என் தந்தையிடம் இருந்தது.
மேலுக்குக் கோட்டும் இடுப்புக்குப் பட்டும் என
நன்றாக உடுத்தக் கூடியவர்கள் நாங்கள்.
எமது பேச்சிலும் நடத்தையிலும்
நனி வெளிப்படும்.
நிமிர்ந்து நடக்கக் கூடியவர்
எங்கள் தந்தை
அவரது தலைப்பாகை
எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதிலிருக்கும் ஒரு கம்பீரம்
என்னிடம் ஒட்டிக்கொண்டது.
வகுப்பறையில் எனக்கென்று
சாக்குப்பை கொடுத்து
தனியே உட்கார வைக்கப்பட்டபோதும்
என் தந்தையின் தலைப்பாகையைப் போல்
நிமிர்ந்தே உட்கார்ந்திருப்பேன்.
பெருங்குற்றம் செய்வது குறித்து
உறுத்தலின்றிக் கற்பித்த ஆசிரியர்கள்
என் அறிவை மட்டுமல்ல
தாகத்தையும் வளர்த்தார்கள்.
கொட்டித் தீர்க்கும்
மழையைத் தொட முடிந்த என்னால்
என் பள்ளியில் இருந்த
ஒரு குடிநீர்க் குழாயைத்
தொட முடிந்ததில்லை.
உண்மையில்
நானொரு சமூகச் சிந்தனையாளனாய்
மாறுவதற்குத்
தண்ணீர்தான் காரணமாக இருந்தது.
ஆம்,
ஒரு மாலைப்பொழுதில்
கைவிடப்பட்டவர்களைப் போல்
நாங்கள் நின்றிருந்த
இரயில் நிலையத்தின் அதிகாரியும்
எங்களைத்
தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் செல்லத் தயங்கிய
வண்டியோட்டியும்
எங்கள் தோற்றம், உடை, பேச்சு
எல்லாம் மேம்பட்டதாக இருந்தும்
குடிக்கத் தண்ணீர் தராத
சுங்கம் வசூலிப்பவனும்
அந்தச் சிறு வயதில்
என்னைச் சிந்திக்க வைத்தார்கள்.
இருப்பில் உணவிருந்தும்
பசியோடு படுத்திருந்த அந்த இரவில்
எனக்குள் ஒரு குரல் கேட்டது.
அந்தக் குரல்
என் பள்ளிக்கூடம் தொடங்கி
அந்தக் காட்டுவழி வரை
ஓங்கி ஒலித்தது.
“எனக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை”
m
யார் என்னை அரவணைத்துக்கொள்வார்கள்?
என்ற கேள்வியோடு ஒருவன்
தன் சொந்த நாட்டில்
தனித்து நிற்பதை
ஆகப்பெரிய அவலமாகப் பார்க்கிறேன்.
அப்படியொரு வினா
நியூயார்க் நகரத்தின் வீதிகளில்
நான் நடந்தபோது எழுந்திருக்க வேண்டும்
ஆனால், எனக்கு
பரோடா இரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது எழுந்தது.
தன் சொந்த மண்
ஒருவனை நிராதரவான நிலையில்
கைவிட்டுவிடும் என்பதை
என் அறிவு ஏற்கவில்லை
ஆனால்,
என் மனம் உணர்ந்திருந்தது.
ஒரு தீண்டப்படாதவனுக்கு
அந்த அனுபவம் இயல்பானது.
ஒரே தாய் மொழியைப் பேசக்கூடியவர்கள்
ஒரே காற்றைச் சுவாசிப்பவர்கள்
ஒரே நிலத்தில் வாழக்கூடியவர்கள்
அந்த அனுபவத்தைத் தருவார்கள்.
சக மனிதனின் இருப்பால்
ஒருவன்
அவமானத்தை அடைவதும்
வெறிச்செயலில் ஈடுபடுவதும்
கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிப்பதும்
கொலைக்கருவிகளைத் தூக்குவதும்
இந்தியாவின் இயல்பு என்பதை
அறிந்திருந்த நான்,
அந்த நகரத்திலிருந்த சாதி இந்துக்களின்
விடுதிகளைத் தேர்வு செய்யாமல்
தங்குவதற்கு ஒரு முகாம் கிடைக்குமா என்று யோசித்தேன்.
தீண்டாமையை அங்கீகரிக்காத
ஒரு மதம் நடத்திய விடுதியில்
எனக்கு அடைக்கலம் கிடைத்தது.
பேச்சுத்துணைக்கு யாருமற்ற,
வௌவால்கள் குடிகொண்ட,
தனிமையும் இருளும் நிறைந்த,
உடைந்த நாற்காலிகள் குவிக்கப்பட்டிருந்த,
குப்பைக் கூளங்களாலான
அந்த விடுதியில்
ஒரு சிறைக்கைதியின் அறையைப் போலோர் அறை எனக்குக் கிடைத்தது.
அந்த அறையை அச்சூழலில்
ஒரு பொக்கிஷமாகக் கருதினேன்.
சில அங்குலங்கள் மட்டுமே
வெளிச்சம் பரப்பும் ஹரிக்கேன் விளக்கு ஒளியில்
அங்கிருந்த பதினொரு நாட்களின் இரவுகளிலும்
நான் படித்த புத்தகங்கள் ஏராளம்.
என் ஞானத்தின் ஒளி
அந்த இருளை அழித்தது.
அது உலகப் போர்க் காலம்.
என் அறிவைப்
பயன்படுத்திக்கொள்ள
எத்தனையோ நாடுகள் விழைந்தன.
ஆனால்,
நான் நன்றிக்கு வித்தானேன்.
அதன் பயனாய்
இந்த வானத்துக்குக் கீழே
எனக்கென்று ஓரிடமும் இல்லாத மண்ணில்
கையறு நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
எப்போது நினைத்தாலும்
கண்களில்
கண்ணீரை வரவழைத்துவிடுகிற
அந்த நாளை நான் மறப்பேனில்லை.
இரக்கமற்றவர்களுக்கு முன்
கருணைக்கு இறைஞ்சும் ஒருவனது இதயத்தில் உருவாகும் துடிப்புகளில்
வாழ்நாள் முழுக்க
பறையொலி அதிரும் என்பதை உணர்ந்த நாள் அது.
ஒரு சாதி இந்துக்கு
தீண்டப்படாதவனாகத் தெரியும் ஒருவன்
ஒரு பார்சிக்கும் அவ்வாறே தெரிவான்
என்னும் உண்மையை
அன்றுதான் நான் கண்டுகொண்டேன்.
m
பனியன் லுங்கியோடு இருக்கும் டோங்கா ஓட்டும் கூலி
கோட்டு சூட்டுப் போட்ட
ஒரு வழக்குரைஞரைத்
தன் குதிரை வண்டியில் ஏற்றினால்
தீட்டுப்பட்டுவிடுவான் என்பதால்
அவன் தூய்மை கெட்டுப்போகாமல் இருக்க
நான் ஆற்றுப் பாலத்தில்
பல்டி அடித்தேன்.
கற்பாதையில் விழுந்தேன்
கால் முறிந்து கிடந்தேன்.
அந்த நாட்களில்
நான் இரண்டு விதமான
வலிகளை அனுபவித்தேன்.
காயங்களால் நேர்ந்த
உடம்பு வலியால்
பெருந்துன்பம் இல்லை;
மனம் கொண்ட வலிதான்
எந்த மருந்துக்கும் கட்டுப்பட மறுத்தது.
ஒரு பாரிஸ்டர் பட்டம்,
ஒரு கூலித் தொழிலை விடவும்
மேலானது இல்லை
என்கிற உறுத்தல்
வலியைக் கூட்டியது.
ஒன்று மட்டும் தெரிந்துகொண்டேன்.
நீ அமெரிக்கா சென்று படித்தாலும்
அதிக நூல்களைக் கற்றுத் தேர்ந்தாலும்
கோட்டு சூட்டுப் போட்டாலும்
பொருளாதார ஏற்றம் பெற்றாலும்
உனக்கு
முடி வெட்டத் தெரிந்திருக்க வேண்டும்
குதிரை வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
அந்தர் பல்டி கூட
அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஏனென்றால்,
இந்தியாவில்
ஒரு சாதி இந்துவைத்
தீட்டுப் படாமல் பாதுகாக்கும் பொறுப்பு
தீண்டப்படாதவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஒன்றையும் தெரிந்துகொண்டேன்:
இவர்களைத் திருத்தும் பொறுப்பும் என்னிடமே உள்ளது.
அதற்கு,
கசை கூடாது
பிரம்புதான் தேவை.
ஏனெனில்,
முதுகில் விழும் கசையடிகளை விடவும்
உள்ளங்கையில் படும்
பிரம்படிகள்
மனிதப் பண்பை வளர்க்கும்.
அதனால், தீண்டப்படாதோருக்குச் சொன்னேன்:
“கற்பி”
m
பூமியில் விழும் பருந்தின் நிழல்கூட
கோழிக் குஞ்சிகளைத் தூக்கும் அளவுக்குக்
கடுமையான வெயிலடிக்கும்
கோடைக்காலத்தில்
பௌத்தக் குகைகளைப் பார்க்கச் சென்றேன்.
பயணத்தின் இயல்புகளில் ஒன்று
திட்டத்தில் இல்லாத
புதிய இடங்களைக் கண்டடைவது.
அப்படியொன்றாக
தௌலதாபாத் கோட்டை அமைந்தது.
பழம்பெருமைகள்
எங்கு குடி கொண்டிருந்தாலும்
காணும் ஆவலுறுபவன் நான்.
உள்ளே சென்றேன்.
என்னுடன் சகாக்கள் இருந்தனர்.
கோட்டையின் நுழைவாயில் அருகே
நீர் நிரம்பிய குளம் இருந்தது.
வேனிலின் கண்களுக்குப் படாமல்
எப்படியோ அது தப்பித்துக் கிடந்தது.
வெக்கையால் சோர்ந்து போயிருந்த நாங்கள்
படித்துறையில் இறங்கினோம்.
கை நிறைய அள்ளி
முகங்களில் ஊற்றிக்கொண்டபோது
கோட்டையின்
உயரமான மதில் சுவர்கள்
மேலும் அழகாகக் காட்சியளித்தன.
கோட்டைக்கு உள்ளே வாருங்கள் என்று
கோபுர உச்சியிலிருந்து
அழைப்பு வந்தது.
எங்களின் கால்கள் முன்னகர்ந்தன.
கோட்டைக்குள் செல்ல எத்தனிக்கையில்
பின்னிருந்து ஒரு குரல் கேட்டது:
“அந்த டேட்கள்
குளத்தை அசுத்தமாக்கிட்டாங்க”
அடுத்த சில நிமிடங்கள்
எங்கள் குணம், பண்பு, ஊர், உறவுகள்
அனைத்தும் அசிங்கப்படுத்தப்பட்டன.
அங்கு ஒலித்த வசைபாடல்
எங்களிடம் துப்பாக்கி இல்லாததால்
குருதிக் கறை படியாமல் தப்பித்தது.
பொறுமையை இழந்தபோதும்
அறிவை இழக்காத நான்
அவர்களை நோக்கி,
அவர்தம் மனசாட்சியை நோக்கி
ஒரு கேள்வியை எழுப்பினேன்.
“இதைத்தான் உங்கள் மதம் கற்பிக்கிறதா?”
அவர்கள் பதில் கூறாமல்
அமைதியாக நின்றார்கள்.
சாதி
என் காலடியில்
நசுங்கிக்கொண்டிருந்தது.
(கடந்த ஏப்ரல் தலித் வரலாற்று மாத ‘வேர்ச்சொல்’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை)