பாபாசாகேப் அம்பேத்கரின் உரையை மொழிபெயர்த்த வீ.வே.முருகேச பாகவதரின் ‘மதுரகவிஞன்’

ஜெ.பாலசுப்பிரமணியம்

8

துரகவி வீ.வே.முருகேச பாகவதர் 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரகவிஞன் மாத இதழைத் தொடங்கினார். 114, திருவள்ளுவர் நெடுஞ்சாலை, வில்லிவாக்கம், சென்னை எனும் அவரது இல்ல முகவரியில் இருந்து வெளியாகியது. இவ்விதழ் முழுக்க இலக்கியம், சமூகம் குறித்த கவிதைகள், கட்டுரைகள் வெளியாகின. இரா.அரங்கசாமி சரவணா அச்சகம், 18 அரங்கநாதன் செட்டி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை எனும் முகவரியில் அச்சாகியது. இதழின் விலை 40 பைசா. ஆண்டுச் சந்தா ரூ. 05. ஏப்ரல் 1974 முதல் ஆண்டுச் சந்தா ரூ. 08 என்றும் தனி இதழ் 65 காசு என்றும் நிர்ணயிக்கப்பட்டது. பாகவதர் வில்லிவாக்கம் பஞ்சாயத்துப் போர்டின் உறுப்பினராகவும், ஹரிஜன சேவா சங்கத்தின் பிரச்சாரகராகவும் பணியாற்றினார். வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களையும் தலித் கிராமங்களில் நிறுவினார். அங்கம்பாக்கம் குப்புசாமியின் நீதிமன்ற வழக்கிற்காகப் பொதுக்கூட்டம் கூட்டி மக்களுக்கு விசயத்தை விளக்கிக் கூறி நிதி திரட்டினார். முன்னாள் இராணுவ வீரரான அங்கம்பாக்கம் குப்புசாமி சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிவந்தார். இதனால் அவர் மீது வன்மம் கொண்ட சாதி இந்துக்கள் அவரது குடிசைக்குத் தீ வைத்தனர். தன்னையும் குடும்பத்தையும் கொலை செய்ய வந்த நான்கு சாதி வெறியர்களைத் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.

வீ.வே.முருகேச பாகவதர் கா.நெ.செ.எல்லப்பதாஸ் என்பவரிடம் இலக்கணம் பயின்றார். கா.நெ.செ.எல்லப்பதாஸ் பூலோக வியாஸன் இதழின் ஆசிரியரான பூஞ்சோலை முத்துவீர நாவலரிடம் இலக்கியம் பயின்றவர். வீ.வே.முருகேச பாகவதரிடமும் அமுதகவி திருவீதி, பிரபல சினிமா நடிகரும் கதாகலாட்சேபங்கள் நடத்துபவருமான புரசை பி.எம்.வேணுகோபால், தணிகாச்சலம், கங்காதரன் போன்றோர் இலக்கியம் பயின்றனர். இவ்வாறு பூஞ்சோலை முத்துவீர நாவலர், கா.நெ.செ.எல்லப்பதாஸ், வீ.வே.முருகேச பாகவதர் என்று ஆதிதிராவிட புலவர் பாரம்பரியம் தொடர்ந்து வந்துள்ளதைக் காண முடிகிறது. பாகவதருக்குச் சென்னை விக்டோரியா மெமொரியல் ஹாலில் மதுரகவி என்ற பட்டம் வழங்கப்பட்டது. பாகவதர் தனது மேடைப்பேச்சில் சமஸ்கிருத மேற்கோள்களைக் காட்டி அதற்கு தமிழ் விளக்கம் கொடுப்பதில் தேர்ந்தவர்.

மதுரகவிஞன் இதழ் முதலாமாண்டு நிறைவு பெற்றதையடுத்து கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அமைதி’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் முதல் பரிசு ரூ.50, இரண்டாவது பரிசு ரூ.25 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரைநடையைவிட கவிதை நடை மக்களிடம் அதிக தாக்கத்தைச் செலுத்தவல்லது என்ற கருத்தைக் கொண்டிருந்தார் முருகேச பாகவதர். ஆகவே, இதழ் முழுக்கக் கவிதை நடையிலேயே விசயங்களை எழுதிவந்தார். இதழில் எழுதிய பிறரும் பெரும்பாலும் கவிதை நடையையே பின்பற்றினர். ஆகவேதான் இவ்விதழை மதுரகவிஞர் ‘பாட்டேடு’ என்றும் ‘தேம்பாவனி’ என்றும் அழைத்தார். பாகவதரின் படைப்புகளை நூலாகத் தொகுத்துள்ளார் பேராசிரியர் க.ஜெயபாலன்1. ‘ஆதிதிராவிடர் சமூகச் சீர்திருத்த கீதங்கள்’, ‘மதுவிலக்கு கீர்த்தனம்’, ‘அறிவானந்த கீதம்’, ‘தமிழ்ச் சோலை’ ஆகிய தலைப்புகளில் பாகவதர் இயற்றிய பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

கவிஞர் முருகேச பாகவதர் தனது இளம் வயதில் தமிழ்த் தென்றல் திரு.வி.க.வுடன் தொடர்பு கொண்டிருந்தார். பண்டிதர் அயோத்திதாசர் குறித்த பாகவதரின் பாடல்.

புத்தரருள் வேதத்தைத்
தமிழில் அன்றே
பொருள் செய்தான்; புன்மை
மத, சாதிப் பேத
பித்தத்தை தெளிய வைத்த
மருத்துவன் காண்!
பேசுமுதல் எழுத்தாளன்
ஈடில் லாத
புத்தமுதச் சொல் வழியும்
பேச்சால் நெஞ்சி
புரட்சியனல் மூட்டிவைத்த
புனிதத் தொண்டன்
சித்தர்வள்ளு வன்மரபில்
வந்த அன்னோன்,
சிரித்த முகந்தனை நினைக்கச்
சிலிர்க்கும் உள்ளம்!

திராவிடமணி என்று திரு.வி.க. பெரியாரால் பட்டம் சூட்டப்பெற்ற இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவம் கீழ்க்காணும் பாகவதரின் பாடலில் திகழ்கிறது:

பிரம்பிருக்கும் வலக்கையில்;
மற்றோர் கையில்
பெருஞ்சுருட்டு புகைந்திருக்கும்;
இனப்பற்றில்லா உரம்மிழந்த கோழையர்க்கும்
வீரம் தன்னை
உள்ளபடி அள்ளி அள்ளி
வழங்கும் மீசைத்தரமிருக்கும்;
இதழோரம் புன்னகையோ தவழ்ந்திருக்கும்;
அஞ்சாத நெஞ்சங் காட்டும்;
வரமிருக்கும்! ஒளி வீசும்
சிங்கப்பார்வை வடித்த
உயிர் ஓவியந்தான் சீனிவாசன்!

இந்திய நாட்டில் அரசியல் சட்டம் வகுத்த இணையற்ற மேதை டாக்டர் அம்பேத்கர் அவரைப் பற்றிய பாகவதரின் புகழ் மாலை இது;

ஒடுக்குற்ற எண்கோடி மக்கள் உள்ளத்(து)
ஒளிர் கின்ற திருவிளக்கு
பேதத்தாலே தடுக்கப்பட் டுழகின்ற
வழக்கந் தன்னைத் தகர்த்தெறியும் அணுகுண்டு
தாழ்நிலத்தில் எடுத்துற்ற பெரும் புதையல்;
அறிவின் ஊற்றாம்!
இயற்கையன்னை ஈன்றெடுத்த நம்பாலின்
கொடுத்துற்ற குடியரசின் தலைமைச் சிற்பி
கொள்கையிலே மாறாத வைர நெஞ்சன்!

மதுரகவிஞனில் அன்னை சத்தியவாணிமுத்து குறித்து பல பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மதுரகவிஞர் முருகேச பாகவதர் இயற்றிய வாழ்த்துரை.

சமுதாயத் தலைவி சத்தியவாணிமுத்து

சித்தார்த்தர் அறநெறியில் திளைத்த மேதை!
சீர்திருத்த இயக்கத்தின் நாகைநாதர்,
உத்தமியாம் ஜானகிதம் அருமைச் செல்வி!
உலக ஒளி வள்ளுவனார், அவ்வை மூதாய்!
நத்து முது குடிமரபிற் பூத்துக் காய்த்து
நனி பழுத்த கணியானீர்! நல்லோர் வாழ்த்த
முத்தைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. கையால்
முறைமையோடு திருமணமே முடிக்க பெற்றீர்!
எங்களுடன் சமூகப்பணி ஆற்றி வந்த
எழில் முத்துக் கருமருந்தாய் வாய்த்தீர்! அந்நாள்
சங்கத்தமிழப் புலவர்களைச் சமூகம் காத்த
தலைவர்களைத் தொண்டர்களை உபசரித்தர்!
தங்கநிகர் பெத்து நாயக்கன் பேட்டை இல்லில்
தண்கமல மலர் மொய்க்கும் சுரும்பாய் நாளும்
எங்கிருந்தும் சமூக மக்கள் மொய்க்கும் காட்சி
என்றன் மனத்திரையின் நிழலாடு தின்றும்!
தமிழகத்தின் ஆபிரகாம் லிங்கன் ஆன
தன்மான தந்தைதருப் பெரியார் கண்ணின்
இமையனைய பேரறிஞர் அண்ணா! கண்ட
ஈடிணையில்லா அமைச்சர் அவையிலன்று,
நமக்கெல்லாம் உணவீய உயிரும் ஈய
நாளெல்லாம் செந்நீரே சிந்தி நாட்டில்
அமைதியிலார் கருணையிலார் நெஞ்சம் போன்ற
அருநிலத்தைக் கரம்சிவக்க உழுவார்க் கான,
நல்லமைச்சராகத் திகழ்ந்திட்டீர்! அண்ணார்
நலனுக்கே நெஞ்சமெனும் கழனி தன்னில்
சொல்லரிய பசுமைவாழ் காலம் மாரி
சொரிந்திட்டீர், பசிப்பிணிகளகண்டா தோட்டி;
எல்லையிலாத் திருப்பணியே ஆற்றுகின்றீர்!
இன்றைய நம் முதல்வர் உயர் கலைஞரான
கல்லக்குடி கொண்டாரும் கண்டு மெச்சும்
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டின் தலைவி வாழ்க.
அம்மட்டோ! தமிழ் மணக்கும் மதுரை நாட்டை
ஆட்சி செய்தார் மங்கம்மாள் ராணி அன்றே!
அம்புவியும் வியக்க சிவகங்கையாண்டார்,
அகிலாண்டேஸ்வரி நாச்சியம்மை! பாயும்
சிம்மமெனப் பறங்கியர்தம் தலையைச் சீவி
சிறப்புற்றார், வடநாட்டு ஜான்சி ராணி!
நம்முயிராம் தமிழ் காக்க சிறை கடன் பட்டார்
ஆகாச வாணிதனை மேலே தூக்கி
ஆகாசம் அனுப்பி வைத்தீர் காலமெல்லாம்
ஆகாச வாணி என்றே முழங்கி வந்த
ஆயிரமாயிரங் குரலை மாற்றிக் கேட்க
வாகான வானொலியென் றுரைக்குச் செய்தீர்!
மகத்தான வெற்றி கண்டீர் பண்டை நாளில்
ஆகம்மனம் மொழியினிக்கக் கணவனுக்கே
அருமங்கையர்க்கரசி அமைச்சரானார்!
சீறிவந்த கொடும்புலியை முறத்தால் தாக்கும்
திரு வீராங்கனை மரபில் உதித்து, நீதி
கூறிவந்த கலைவாணி அவ்வையார் தம்
குல சத்தியவாணி முத்து தங்கட்கின்று
பேறு நிறை ஓர் நாற்பத் தொன்பான் ஆண்டு
பிறந்த விழாக் கண்டு மனம் பூரிக்கின்றோம்!
ஏறுகின்றார் ஏற்றத்தில்; வாழ்வில் இன்றும்
ஏறாமற் குமுறுகின்றார், நமது மக்கள்!
வறட்சி நிலை கண்டு மனம் துடித்து, மக்கள்
வடிகின்ற கண்ணீரைத் துடைத்தீர்! மிக்க
புரட்சி மனப்பான்மையில் சர் காணுகின்றீர்!
பொல்லாத்தீ, வெள்ளத்தால் வீடிழந்து
குரலெடுத்துக் கதறுகின்ற ஏழை மக்கள்
குறை நீக்க ஆவன செய்கின்றீர் தேடி!
அரிசன அமைச்சரென கலைஞர் “டாக்டர்”
அவையிலிடம் பெற்றிலங்கும் அம்ம! வாழ்க!
மருத்துவத்தில் “டாக்டர்” பட்டம் பெற்றீர் மாந்தர்
மனப்பிணியை உடற்பிணியைத் தவிர்க்கின்றீர்!
சீர்திருத்த மருத்தளிக்கின்றீர்! பண்புமிக்க
தென்னகத்து மாதர்க்குளோர் மணியே! நீவிர்!
கருத்து நிறை சொற்பொழிவால் அவையுள்ளோரைக்
காந்தம் போல் ஈர்க்கின்றீர்! தமிழகத்தின்
சரித்திரத்தில் நிலையான இடமே பெற்றீர்
சமூக நலத் தலைவிநினை
இமிழ் கடலைக் கடந்து பிற மேல்நாடேகி
ஈங்குற்ற ஆங்குற்ற நிலையைக் கண்டீர்!
சமூக அரசியல் பொருளாதாரம் மற்றும்
சார்ந்த கல்வி, உண்டி, உடை உறையுள் நல்கித்
தமரரெனக் கருதி இன்னார் வாழ்வில் மாற்றம்
தழைக்கச் செய்வீர் என நம்புகின்றோம்.

பாபாசாகேபின் உரையைத் தமிழாக்கம் செய்த பாகவதர்

பாபாசாகேப் அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டை முடித்து 1932இல் சென்னை வந்தார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள நேப்பியர் பார்க்கில் அம்பேத்கரின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அவரது பேச்சை மொழிபெயர்க்க எம்.ஏ.பட்டதாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். பேச்சை இடையிடையே நிறுத்தி மொழிபெயர்ப்பதைத் தவிர்த்துப் பேசி முடித்ததும் கடைசியில் பேச்சின் சாராம்சத்தைச் சுருக்கமாகச் சொல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. பாபாசாகேப் சுமார் ஒருமணி நேரம் பேசினார். பிறகு, பேச்சின் சாராம்சத்தைத் தமிழில் சுருக்கமாகச் சொல்ல எம்.ஏ. பட்டதாரி உட்பட எவரும் முன்வரவில்லை. இதைக் கண்ட பாகவதர் மேடையேறி “நான் எம்.ஏ.வும் அல்ல, ஆங்கிலம் படித்தவனும் அல்ல” என்ற பீடிகையுடன் அம்பேத்கரது பேச்சின் சாராம்சத்தை எளிமையாக விளக்கினார். அதைக் கூடியிருந்த திரளான மக்கள் ஆர்ப்பரித்து வார்த்தைக்கு வார்த்தை, நிமிசத்திற்கு நிமிசம் கரவொலி எழுப்பினர். பாகவதர் தனது உரையை நிறுத்தும்வரை மக்கள் ஆர்ப்பரித்து தீர்த்துவிட்டனர். இதைக் கண்டு மலைத்துப் போன பாபாசாகேப் அம்பேத்கர், பாகவதரின் பேச்சுத் திறனை வெகுவாகப் பாராட்டி புகழாரம் சூட்டினார் என்று லோகநாத் தீநதயாள் என்பவர் பாகவதரின் பிறந்தநாள் பாராட்டாகத் தனது நினைவைப் பகிர்ந்துள்ளார் (மதுரகவிஞன், அக்டோபர், 1973).

இரங்கல் பாக்கள்

வரலாற்றில் முக்கியமான இரங்கல் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பட்டினத்தடிகள் தனது தாய்க்குப் பாடியது, கம்பர் தம்மை ஆதரித்த திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளலுக்குப் பாடிய இரங்கல், படிக்காசு புலவர் வள்ளல் சீதக்காதி மறைந்தபோது 1723இல் பாடியது, மாயூரம் வேதநாயகம் பிள்ளை தம் மூன்றாம் மனைவி மாணிக்கத் தம்மையார் 1889இல் மறைந்தபோது பாடியது, வி.கோ.பரிதிமாற்கலைஞர் தம் ஆசிரியர் சபாபதி முதலியார் மறைந்தபோது பாடிய இரங்கல், தேசிகவிநாயகம் பிள்ளை காந்தியடிகள் மறைந்தபோது பாடிய இரங்கல், கயத்தாற்றரசன் அந்தகக் கவி வீரராகவ முதலியார் மறைந்தபோது பாடியது, திரு.வி.க. பன்னூல் புலவர் கவிராஜ பண்டிதர் க.அயோத்திதாசர் மறைந்தபோது 07.05.1914 அன்று பாடியது, மதுரகவிஞர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. மறைந்தபோது 1951இல் பாடிய இரங்கல் ஆகிய இரங்கல் பாக்கள் வெளியாகியுள்ளன.

திரு.வி.க., பண்டிதர் அயோத்திதாசருக்குப் பாடிய இரங்கல்

ஒன்பதா மாண்டிலெனை யுற்ற உடற்பிணியாற்றி
துன்பொழித்த தேசிகனே தொல்லுலகில் அன்ப நின
தின்னுரையும் நன்மருந்தும் ஏற்றிருந்த என்கிளைஞர்க் (கு)
என்னுரைக்கேன் நின்பிரிவை ஈங்கு

மதுரகவிஞர் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வுக்கு பாடிய இரங்கல்

வானிடிந்து வீழ்ந்ததுவோ? பொதிகை மலை சாய்ந்ததுவோ
வாரி வற்றிப்போனதுவோ எனமகனைப் பறிகொடுத்துத்
தமிழன்னை புலம்புகின்றாள்
தீனர்களின் ரட்சகரே கலியக்காக வாழ்ந்தவரே
திரு.வி.க.வே
ஆனிழந்தகன்றெனவே அருந்தமிழர் கதறுகின்றார்
அந்தோ! அந்தோ!!

பிறந்தநாள் சிறப்பிதழ்

மதுரகவிஞர் முருகேச பாகவதரின் 77ஆவது பிறந்தநாள் சிறப்பிதழாக அக்டோபர் 1973 இதழ் வெளியானது. இவ்விதழில் பாகவதருக்கு சி.என்.அண்ணாதுரை (சில ஆண்டுகளுக்கு முன்பு பாகவதரின் நூலுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி), சத்தியவாணி முத்து, நெ.து.சுந்தரவடிவேலு (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்), ஏ.எஸ்.கே.அய்யங்கார் போன்றோர் வாழ்த்துக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். அதில் ‘வாழும் வள்ளுவர்’ எனும் தலைப்பில் பேராசிரியர் இரா.சு.இளங்கண்ணன் என்பவர் கட்டுரை எழுதியுள்ளார்.

வாழும் வள்ளுவர்

மகா மதுரகவிஞர் முருகேசனார் தொல்குடி தோன்றல்களில் இறுதிக் காவலராவார். ஆதித்தமிழர் வழிவந்த வள்ளுவர், ஔவை மரபு தோன்றலே மதுரகவிஞர்! கொடுத்த பொருளிலே கவிதை மலர் தொடுக்கும் வரகவி! பாரில் உள்ளார் நேரிலே காண பொ(மெ)ய்ப் பொருளை மதுவுண்டு, மங்கை சுகங்கண்டு தத்துவப் பாடலாகப் பாப்புனையும் பாவேந்தரல்ல நம் நாவேந்தர். கண்ணீரையும் காளியையும் காவலரையும் காமுகரையும் கவிதைக்குச் சேர்க்காது சமதர்மத்தை, சன்மார்க்கத்தை, பௌத்தத்தை, பகுத்தறிவை, மாதருரிமையை, மதுவிலக்கை இலக்கிய விருந்தாக வாரி வாரி வழங்கிய வள்ளல். அறிவானந்தமும் ஆதிதிராவிடர் சீர்திருத்தமும் சென்னை சிங்காரம், தாராவி (பம்பாய்) தோல்பதனிடும் சீராளர் இவர்களைப் போன்றோர்தான் மதுரகவிஞரின் காவியப் படைப்புகளில் கதாநாயகர்கள்.

இன்று மதுரகவிஞரின் 77ஆவது அகவை அக்டோபர் 21ஆம் நாள் பிறக்கிறது. ஆதியர் வழி வந்த அறிஞர், கவிஞர். தம் வாழ்க்கையில் கொண்ட கொள்கை கண்ட கடமை, வீதியில் நாதியற்ற நடைபிணமாய் இந்திய அரசியலில் எடுப்பார் கைப்பிள்ளையாய், சாதித் தொழுநோய்காரர்களாய் அஞ்சி அஞ்சி சாகும் சமுதாயத்திற்கு நீதி கேட்டார்! தமிழ் நெஞ்சமுள்ளோர் சிந்தனைக்குச் சமூக சீர்திருத்தத்தை தமிழமுதமாகத் தந்தார்! ஊருக்கு வாழ்ந்து நாட்டுக்கும் நன்றி கொன்ற சமுதாயத்திற்கும் வாழ்ந்து வீட்டிற்கு வாழாத புத்தரின் பக்தன்!! ஆதி பகவன் தாள்பணிந்து வள்ளுவம் படைத்த தமிழ் தந்தை வள்ளுவன் வழியிலே பௌத்த நெறியிலே வாழும் வள்ளுவர் மதுரகவிஞரன்றோ!

இந்தியா என்பதற்கு மறுபொருள் இந்து மதமா? இல்லை பாரதமென்பதற்குத்தான் இன்னொரு பெயர் பார்ப்பனியமா? அதனால்தான் என்னவோ நம் பாவேந்தரை இன்னமும் தமிழகம் பாராமுகமாயிருக்கிறது! கலைக்கும் கவிதைக்கும்கூட சாதி பேதமுண்டா? ஆதியர் குடியில் பிறந்தோன் ஆஸ்த்தான கவியாகலாமா? போலி சமூகச் சீர்திருத்தவாதிகளும் கவிஞரானாலும் உயர் சாதியில் பிறந்தோர்க்கல்லவா பாராட்டும் சீராட்டும் செய்கிறார்கள்! குறுக்கு வழியும் கோணல் மதியும் கொண்டோரே இந்திய அரசியலில் கோலோச்சுவதா? ஞானதேவன், போதி மாதவன் அருளியதே மேலெனக் கொண்டார் ஏழைக்கவிஞர். சீர்திருத்தப் புரட்சிக் கருத்துகளை வேலென எறிந்தார். சாதி வெறியர்களின் விலாவில் வாரா வினை வந்தாலும் சோறாத வீரக்கவிஞர் புத்தரின் சத்திய சேவையே சமூகச் சேவையெனக் கொண்டோர் பாரதமென்றால் அதன் பொருள் பௌத்தமாகத்தான் இருக்க முடியும் என்று அண்ணல் அம்பேத்கர் வழி நின்றார்! அதனால் தான் இன்றும் வறுமையிலேயே வாழ்கிறார். பாரதம் பௌத்தமயமானால் அங்கே சாதி இருக்காது, அதைக் காக்கும் இந்து மதமும் இருக்காது. வெறுங்கல்லும் கடவுளும் ஆலயமுமிருக்காது! பெரும் கல்வி ஆலயங்கள்தான் இருக்கும்! அறமிருக்கும்! அன்பிருக்கும்! அதனால் மாண்பிருக்கும் மனிதப் பண்பிருக்கும். அங்கே ஆண்டான், ஆண்டை இருக்க மாட்டான், மனித முதலையாம் முதலாளி இருக்க மாட்டான், எல்லாம் தொழிலாளியும் மக்கள் தொண்டருமே இருப்பர். கோடாலிக்கம்புகள் இரார், பாட்டாளிகளும் கூட்டாளிகளாகவே இருப்பர். இதுதான் மதுரகவிஞர் காணத் துடிக்கும் பாரதம்! சமத்துவ சமதர்ம சமுதாயம்!

“கைவருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம்” என்பர். அதனால்தான் 77ஆவது அகவையிலும் அல்லும் பகலும் சமூகச் சேவையே அவர் தொண்டு. இதை எண்ணியே ஏழை கவிஞரை இன்னும் பல்லாண்டு வாழ வைக்க நிதி பல்லாயிரம் தந்தனர். நெறியுடைய நல்ல நண்பர் பலர் சிறு துளி பெருவெள்ளமாய்ச் சேர்ந்த பெரும் நிதியை, ஆண்டு மூன்றாகியும் அருங்கவிஞரிடம் சேர்க்காது அதில் தன் பெண்டு பிள்ளைக்குச் சொத்து வாங்கி விட்டார்களா நயவஞ்சக கயவர்கள்? இவர்கள்தான் சமுதாயத்தில் இன்றைய அரசியலில் பெரும்புள்ளிகளா? கவிஞர் பெருமானுக்குக் கைமாறு செய்த மெய்யன்பர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

கொடியவர்கள் எடுத்த நிதிப் பணத்தைக் கொடுப்பார்களா? எடுத்தாலும் ஓடும் இறைத்தாலும் ஊரும் இடைநடுவே தடுத்தாலும் தடைபடுமோ மணற்கேணி! அதுபோல் மதுரகவிஞரின் கவிவெள்ளம் கருத்தோவியமாகப் புதிய சமுதாயம் படைக்கத் தடத்தொளைத் தட்டி நிற்கும் இளைஞர் படைக்குப் போர்ப் பரணியன்றோ! “நடமாடி இனியொரு நாள் நாய் வாழ்வு வாழோம்.”

தத்துவ புத்தன் சத்திய நெறியில் நித்தமும் திளைக்கும் உத்தமக் கவிஞர்! அஞ்ஞான இருளைப் போக்கி அகில பல்லுயிரைக் காக்க மெய்ஞ்ஞான ஒளியை இந்த மேதினிக் கருளிய பகவன் புத்தர் இயல் நெறி போற்றி வாழும் வள்ளுவர்! உலகோர் சித்தம் கவர்ந்த வலம்புரி முத்தாம் பீமராவ் திருநாமம் நித்தம் நத்தும் உத்தமப் புலவர்! இன்னும் பல்லாண்டு வாழ்ந்து வீழ்ந்த சமுதாயத்திற்கோர் விடிவெள்ளியாய், கதிரவனாய், காவலனாய், அறிவுச்சுடராய் வாழ்க! வாழ்க! என வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!

பேராசிரியர் இரா.சு.இளங்கண்ணன் எம்.ஏ.எல்.எல்.எம்.
பம்பாய்

குறிப்பு

  1. மகா மதுரகவிஞர் வீ.வே. முருகேச பாகவதர் படைப்புகள் – தொகுதி – 1, நிலா சூரியன் பதிப்பகம், சென்னை.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!