பாபாசாகேபின் இதழியல் பணிகள்

ஜெ.பாலசுப்பிரமணியம்

9

பாபாசாகேப் அம்பேத்கர் தனது அரசியல் செயல்பாடுகளுக்குப் பத்திரிகை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார். காங்கிரஸ்காரர்கள் நடத்தும் பத்திரிகைகள்தான் அந்த அமைப்பிற்கு வலுசேர்க்கிறது என்பதைப் புரிந்து வைத்திருந்தார். அப்போது வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா, பாம்பாய் கிரோனிக்கல், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃப்ரீ பிரஸ் ஜர்னல், தி சண்டே ஸ்டாண்டர்ட் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் பாபாசாகேப் முன்னெடுத்த போராட்டங்களுக்குப் போதிய இடம் கிடைக்கவில்லை. இயக்கத்தை முன்னெடுக்கவும், தலித் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பத்திரிகைகளை நடத்துவது அவசியம் என்பதை உணர்ந்தார். இதன் விளைவாகவே மூக்நாயக் எனும் பத்திரிகையை ஆரம்பித்தார்.

மூக்நாயக் பத்திரிகையை மராத்திய மொழியில் மாதமிருமுறை இதழாக 31 ஜனவரி 1920இல் தொடங்கினார். ஆரம்பத்தில் 700 பிரதிகளாக இருந்த விற்பனை பின்பு 1000 பிரதிகளாக அதிகரித்தது. பத்திரிகை நடத்துவதற்காக கோலாப்பூர் சாஹு மஹாராஜா 2500 ரூபாய் நன்கொடை வழங்கினார். மூக்நாயக் பத்திரிகையை அம்பேத்கர் தொடங்கினாலும், முதல் ஆசிரியராக பாண்டுரங் நந்த்ராம் பட்கர் பொறுப்பேற்றார். ஆனால், இவர் ஜூலை மாதம்வரை மட்டுமே பணியாற்றினார். இரண்டாவது ஆசிரியராக துருவந்த் கோலப் பொறுப்பேற்றார். இவர் மஹாராஷ்டிரா மாகாண கவுன்சிலின் முதல் தாழ்த்தப்பட்டோர் நியமனப் பிரதிநிதியாவார். இவரும் 1923ஆம் ஆண்டுவரை மட்டுமே ஆசிரியராக இருந்தார். பத்திரிகையை இவர் சரியாக நடத்தவில்லை என்ற வருத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. இந்த உறவு கசப்பால் மூக்நாயக்கும் முடிவுக்கு வந்தது.

அம்பேத்கர் மூக்நாயக்கில் கிட்டத்தட்ட நாற்பது கட்டுரைகளையும் பத்திற்கும் மேற்பட்ட தலையங்கங்களையும் எழுதினார். முதல் தலையங்கத்தில் சாதிய சமத்துவமற்ற இந்தியா குறித்து எழுதுகிறார். 2010இல் பி.ஆர்.காம்ப்ளே இந்தத் தலையங்கத்தை மராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார்.

“சாதாரணமாக எவரும் இந்தியப் புற உலகையும் சமூகத்தையும் மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த நாடு அசமத்துவத்தின் இருப்பிடமாக இருப்பது தெரியும். இந்தத் தேசத்தில் அபரிமிதமான வளங்களும் உற்பத்தியும் இருந்தாலும் மக்கள் மத்தியில் வறுமை பெருகிக்கொண்டேதான் போகிறது என்பது சாதாரணமாக எவருக்கும் புலப்படும். மக்கள் மத்தியில் வறுமையைக் கண்டுணரும் எவரும் சமூக அசமத்துவத்தையும் காணத் தவற முடியாது. இந்தியர்கள் மத்தியில் சமத்துவமின்மை பல வடிவங்களில் செயல்படுகிறது. உடல் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டும், இனத்தை அடிப்படையாகக் கொண்டும் பாகுபாடுகள் காட்டப்படுவது நீக்கமற நிறைந்திருக்கின்றன. உயரம் ஜ் குள்ளம், கருப்பு ஜ் வெள்ளை, நீள மூக்கு ஜ் சப்பை மூக்கு, ஆரியர் ஜ் ஆரியரல்லாதார், அரபி, ஈரானி போன்ற வேறுபாடுகள் சில இடங்களில் வெளிப்படையாக, ஆனால், அவை வரையறுக்கப்படாமலும் பல இடங்களில் மறைவான வடிவமாகவும் இன்னும் பல இடங்களில் நிலைத்த வடிவமாகவும் இருக்கின்றன. மதச் சமத்துவமின்மை இன, நிற வேற்றுமைகளைவிட மிக மோசமாக இருக்கின்றன; அதனால் இரத்தக் காவு வாங்கும் அளவுக்குப் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்து, பார்ஸி, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று மதங்களின் பெயராலும் பாகுபாடுகள் நிலவுகின்றன. ஆனால், இந்து மதத்திற்குள்ளிருக்கும் பாகுபாடு அல்லது சமத்துவமின்மையைச் சற்று நோக்குவோமானால் நமது கற்பனைக்கு எட்ட முடியாத அளவுக்கு அதன் வடிவமிருக்கும். அது கண்டனத்திற்குரியது என்பதையும் உணர்வோம். இந்து மதத்தில் மாங்க், பிராமணர், சென்வி, மராத்தா, மகர், சம்பார், காயஸ்த்தா, பார்ஸி, கோரி, வைஸ்யர் போன்ற பல சாதிகள் இருக்கின்றன. இவை இன்னின்ன சாதிகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. இந்துக்களின் மனதில் மத ஒற்றுமையைவிட சாதிய உணர்வே ஆழமாக உள்ளது என்பதை ஒருவர் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஓர் ஐரோப்பியனைப் பார்த்து நீ யார்? என்று கேட்டால் நான் ஓர் ஆங்கிலேயன், ஜெர்மானியன், இத்தாலியன், பிரெஞ்சுக்காரன் என்று கூறுவதில் நாம் திருப்தியடைந்துவிடுவோம். அது நமக்கு முழுமையான பதிலாக இருக்கும். ஆனால், இந்துக்கள் விசயத்தில் இது சாத்தியமில்லை. ஒருவன் நான் ஓர் இந்து என்று கூறினால் அது முழுமையான பதிலாக இருக்காது. அவன் தான் என்ன சாதி என்பதைச் சொல்லியாக வேண்டும். தங்களது மனிதாபிமானத்தைக் காட்டுவதற்கு இந்துக்கள் ஒவ்வொரு நிலையிலும் தங்களின் சமத்துவமின்மையைக் காட்ட வேண்டியிருக்கிறது. சாதிகளுக்கிடையிலான அசமத்துவ உணர்வு என்பது தனிநபரின் திறமை சார்ந்ததாக இல்லை, அது பிறப்புச் சார்ந்ததாக இருக்கிறது. ஒருவர் உயர் சாதியில் பிறந்துவிட்டால் அவர் எந்தத் திறமையும் இல்லாவிட்டாலும் உயர்வாக மதிக்கப்படுவார். ஆனால், ஒருவர் கீழ் சாதியாகப் பிறந்துவிட்டால் அவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் குறைவாகவே மதிப்பிடப்படுவார்” (31 ஜனவரி 1920).

மூக்நாயக் பத்திரிகை தொடங்குவது குறித்துப் பால கங்காதர திலகர் நடத்திவந்த கேசரி பத்திரிகையில் ஒரு விளம்பரம் வெளியிடக் கேட்டுக்கொண்டபோது மறுக்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக்கொண்டு ஒரு விளம்பரமாகக்கூட வெளியிடத் தயாராக இல்லை என்பதை அம்பேத்கர் பின்னாட்களில் தனது பகிஸ்கிரித் பாரத் பத்திரிகையில் எழுதுகிறார். (ஆனால், திலகரின் மகன் எஸ்.பி.திலக் அம்பேத்கரின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அவர் தொடர்ந்து அம்பேத்கருக்குக் கடிதங்கள் எழுதிவந்தார் என்பது சுவாரஸியமான செய்தி.) தேசியவாதிகள் எவ்வாறு அம்பேத்கரின் அரசியல் மீது ஒவ்வாமை கொண்டிருந்தனர் என்பதை இது காட்டுகிறது. “பிரிட்டிஷாரின் ஒடுக்குதலை எதிர்க்கும் தேசியவாதிகளே உங்களால் ஏன் இத்தேசத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் குறித்துப் பேச முடிவதில்லை” என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது பிரபலமாக இருந்த பத்திரிகைகளும் சாதி குறித்துப் பெரும் மௌனத்தையே கடைபிடித்தன. இந்தியாவில் அரசியல் விடுதலைக்கு முன்பாகச் சமூக விடுதலை நடக்க வேண்டும் என்றார் அம்பேத்கர். அப்போது சாதி எதிர்ப்பு அரசியலில் செயல்பட்டுவந்த தலைவர்கள் அனைவருமே இதே நிலைப்பாட்டில் இருந்தனர். சாதிய வேறுபாடு பார்க்கும் இந்தியர்களை விட சாதிப் பார்க்காத பிரிட்டிஷாரே மேல் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். இதைப் பிரச்சாரமாக மக்களிடம் எடுத்துச் சென்றனர். இது தேசிய விடுதலையைக் கொள்கையாகக் கொண்ட காங்கிரஸிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

மூக்நாயக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள், தலையங்கங்கள் எல்லாமே காத்திரமாக இருந்தன. சுயாட்சிக் குறித்த கேள்விகள் கடுமையாக முன்வைக்கப்பட்டன. யாருக்குச் சுதந்திரம்? யாரிடமிருந்து சுதந்திரம்? இந்தச் சுதந்திரம் தீண்டப்படாதவர்களை விடுதலை செய்யுமா? இல்லை, இந்தச் சுயராஜ்ஜியம் தீண்டப்படாதவர்களை இழிவாக நடத்தும் உயர் சாதியினருக்கு மட்டும் விடுதலையைப் பெற்றுத் தருமா? என்ற அடிப்படையான கேள்விகளை முன்வைத்தார். சுயராஜ்ஜியம் என்ற சொல்லாடல் காந்தியின் வருகைக்குப் பின் மக்கள்மயப்பட்டது. ஆனால், அம்பேத்கரின் விமர்சனம் சுயராஜ்ஜிய அரசியலுக்குப் பெரும் அதிர்ச்சியையும் நெருக்கடியையும் கொடுத்தது. “பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவைவிட்டுச் செல்லும்முன் சுயாட்சி கேட்பவர்கள் இங்குள்ள தீண்டப்படாதவர்களைச் சமமாக நடத்தத் தயாராக இருக்க வேண்டும், தீண்டப்படாதவர்கள் தங்கள் உரிமையைப் பெறுவதற்கான ஒரே வழி தனித்தொகுதி முறையே. இதைச் சுயராஜ்ஜியக்காரர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரா?” என்று எழுத்துப் போர் நடத்தினார் அம்பேத்கர். சுயராஜ்ஜியக்காரர்கள் சற்று ஆடித்தான் போனார்கள். ஒருசிலர் அம்பேத்கரைத் தேச விரோதி என்றெல்லாம் எழுதினர். அவர் எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை, தனது கொள்கைப் பாதையில் சமரசமில்லாமல் செல்ல ஆரம்பித்தார்.

அடுத்ததாக 1927இல் பகிஷ்கிரித் பாரத் (புறக்கணிக்கப்பட்ட இந்தியா) எனும் மாதமிருமுறை பத்திரிகையைத் தொடங்கினார். இதன் ஆசிரியராக சங்கரதாஸ் நாராயணதாஸ் பார்வே நியமிக்கப்பட்டார். இவர் இந்தப் பணிநிமித்தமாக மாநிலம் முழுவதும் பயணம் செய்ய தேவையிருப்பதால் அதற்கு பாபாசாகேப் உறுதிச் சான்று கடிதம் 04.07.1927 தேதியிட்டு வழங்கியிருக்கிறார். அதில்:

“சங்கரதாஸ் நாராயணதாஸ் பார்வே எனும் இவர் ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுக்காகச் செயல்படும் பகிஷ்கிரித் பாரத் பத்திரிகையின் பிரச்சாரகரும் ஆவார் என இதன் மூலம் சான்றளிக்கப்படுகிறது. இந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து ஒடுக்கப்பட்டோர் நலன் குறித்து உரையாற்றவும் ஊக்கமளிக்கவும் அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லாப் பொது அமைப்புகளும் அன்னாருக்கு வேண்டிய உதவிகள் செய்யுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.”

பத்திரிகைக்கு மாகாணம் முழுவதும் பயணம் செய்து செய்திகளைச் சேகரிக்கவும், சந்தாதாரர்கள், ஏஜெண்டுகள், நன்கொடையாளர்கள் போன்றவர்களை அணுகுவதற்கு இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து பாபாசாகேப் தத்தோபாவிற்கு எழுதிய கடிதத்தில், “அடுத்ததாக அச்சகம் தொடங்குவது குறித்து நான் வெகுதீவிரமாகவும் உன்னிப்பாகவும் அதைக் கவனித்து முயன்று வருகிறேன். மாட்சிமை பொருந்திய கோலாப்பூர் மஹாராஜாவிடம் இதுகுறித்து உதவிகேட்க நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி; நானும் இதே யோசனையில்தான் இருக்கிறேன். அவர் கோலாப்பூர் வரும்வரை காத்திருக்காமல் பம்பாயில் பார்த்துவிட நினைக்கிறேன். எனவே நீங்கள் பம்பாய் சென்று நேர்காணலுக்கு உதவ முடியுமா? எப்படியும் அவரிடம் ஒரு நேர்காணல் வேண்டி அவருக்கு எழுதுகிறேன்”

கோலாப்பூர் மஹாராஜாவிடமிருந்து நிதியுதவி கிடைத்ததா எனத் தெரியவில்லை. ஆனால், பரோடா மன்னரிடமிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது. பரோடா மன்னரின் செயலர் 5 ஜனவரி 1931 அன்று பாபாசாகேப்பிற்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,

“அன்புக்குரிய டாக்டர் அம்பேத்கர், மாட்சிமை தாங்கிய மஹாராஜா சாஹேப்பிடம் ஒடுக்கப்பட்டோருக்கான ஒரு பத்திரிகை தொடங்க உதவி கேட்டிருந்தீர்கள். மஹா கனம் பொருந்திய மஹாராஜா அவர்கள் 150/-பவுண்டுகள் அளிக்க இசைந்துள்ளார்கள். இத்துடன் மஹாராஜா சாஹேப் கையெழுத்திட்டுள்ள அந்தத் தொகைக்கான காசோலையை இணைத்துள்ளேன். தயைகூர்ந்து பெற்றுக்கொண்டதை உறுதி செய்யவும். உண்மையுள்ள ஆர்.எஸ்.பாட்டீல், செயலாளர்.”

1928இல் சமதா (பின்பு ஜனதா என்று பெயர் மாற்றப்பட்டது) பத்திரிகையைத் தொடங்கினார் பாபாசாகேப். இதன் ஆசிரியராக பாஸ்கர் ராவ் ஆர்.கட்ரேகா செயல்பட்டுவந்தார். ஜனதா, தம்மயான், பிரபுத்தபாரத் ஆகிய பத்திரிகைகளுக்கும் ஆசிரியராக இருந்தார். அவருக்கு பாபாசாகேப் எழுதிய, 15 ஜனவரி 1931 தேதியிட்ட கடிதத்தில்:

“அன்பான பா, டிசம்பர் 25ஆம் தேதியிட்ட தங்கள் கடிதமும் ‘ஜனதா’வின் கடைசி இரண்டு இதழ்களும் கிடைக்கப்பெற்றேன். எந்தவித நிதி ஆதாரமும் இல்லாமல் உங்களால் எப்படிப் பத்திரிகையையும் செய்தித்தாளையும் நடத்த முடிகிறது என வியக்கிறேன். ஜனதாவிற்கு நான் ஒரு கருத்துரை எழுத நீங்கள் விரும்புகிறீர்கள். மாநாடு முடிந்ததும் நானே நேரில் வந்துவிடுவேன். அப்போது தங்களுக்குத் தேவையான பணம் மட்டுமல்ல அதைவிட மதிப்பு வாய்ந்த வேறு சில விஷயங்களும் கிடைக்கும் என்று சொல்வதில் மகிழ்வு கொள்கிறேன். தங்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள் என்பதைத் தவிர சொல்ல இப்போது ஒன்றுமில்லை.”

பத்திரிகை நடத்துவதற்கான நிதி நெருக்கடி இருந்துள்ளது பாபாசாகேப்பின் கடிதத்தில் தெளிவாகிறது.

பிற பத்திரிகைகளிலும் பாபாசாகேப் பேட்டிகள், கட்டுரைகள் வழங்கிவந்தார். பால கங்காதர திலகரின் மகன் எஸ்.பி.திலக் ஒருமுறை பாபாசாகேப்பிற்கு எழுதிய கடிதத்தில் (6 மே 1928) மஹாராஷ்டிர மாகாண மாநாட்டில் தீண்டாமைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை ஞான் பிரகாஷ், விவித விருத்தா பத்திரிகைகள் மூலம் தெரிந்துகொண்டு ஆதங்கப்படுகிறார். இதுபோன்ற இழிவான கொள்கைகளைக் கண்டித்து மஹாராஷ்டிரம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். மேலும், பாபாசாகேப்பை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கோ அல்லது பொதுவான பத்திரிகைகளுக்கோ கண்டனக் கடிதம் அல்லது திறந்த மடல் ஒன்றை எழுதுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கடிதம் எழுதிய பத்தொன்பதாவது நாளில் அவர் தற்கொலை செய்துகொண்டார். சனாதனத்தைத் தீவிரமாகப் பின்பற்றிய பால கங்காதர திலகரின் மகன் அம்பேத்கரின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டது பாபாசாகேப்பின் ஆளுமையைக் காட்டுகிறது.

(முற்றும்)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!