நாங்கள் பாபாசாகேபின் பிள்ளைகள்

பா.இரஞ்சித்

ருத்தியல் ரீதியாக நம்முடன் பயணிப்பவர்கள் உட்பட பலரும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு இங்கே ஒன்றிணைந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்கள் இல்லையென்றால் இந்நிகழ்வு வெற்றியடைந்திருக்காது. நாங்கள் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். சில நேரம் கூட்டம் வரும், சில நேரம் வராது. அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டதே கிடையாது. நீலம் பண்பாட்டு மைய ஆதரவாளர்கள் பத்துப் பேராவது பங்கேற்பார்கள். தலித் என்ற வட்டத்தைக் கடந்து சமூக நோக்கோடு நம்மோடு இணைந்து பணியாற்றுபவர்கள், அம்பேத்கரியத்தைப் பின்பற்றுபவர்கள் என சாதி கடந்து பலர் நம் நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், அண்ணனின் படுகொலைக்கு நீதி கேட்கும் இந்நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன, விவாதிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது, ‘கலவரம் வரும்’. பல முற்போக்காளர்கள் ‘அக்கறை’யோடு எழுதினார்கள், “திமுக அரசு மீது குற்றம்சாட்டுவதற்கு இந்நிகழ்வு காரணமாக அமைந்துவிடக் கூடாது. இந்நிகழ்வில் கலவரம் உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் எச்சரிக்கையாய் இருங்கள்.” இப்படி ஏன் எழுத வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. இந்நிகழ்வில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதா என்ற சந்தேகமே எழுந்தது.

இந்நிலையில்தான் இந்நிகழ்வில் மக்கள் பெருமளவில் அணிதிரள வேண்டும் என்று தோன்றியது. அது நடந்தால்தான் இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு, நிர்வாகிகளுக்கு, காவல்துறையினருக்கு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குச் சரியான நீதியைப் பெற்றுத் தரும் வரை இம்மக்கள் ஓய மாட்டார்கள் என்ற பயம் உருவாகும். தலித் குரல்களின் தனித்துவத்தை இவர்கள் உணர்ந்துகொள்வதே இல்லை. ஒரு தலித் முன்னேறினால், அவர் தன் திறமையினால்தான் முன்னேறினார் என்று இவர்கள் ஒத்துக்கொள்வதே இல்லை. ‘கோட்டாவில் வந்துவிட்டார்’ என்றோ, ‘இவர்களுக்குப் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். அவர்கள்தான் இவர்களை இயக்குகிறார்கள், நிதி கொடுக்கிறார்கள்.’ என்றோதான் சொல்வார்கள். இது அயோக்கியத்தனமல்லவா? என் உண்மைக்கு எதிராக இன்னோர் உண்மையை வைக்க முடியாததால் இத்தகைய பொய்களைக் கட்டமைக்கிறார்கள். எங்களுடைய பிரச்சினைகளை, கோரிக்கைககளை, எங்களுக்கான விடுதலையை, நீதிக்கட்சி காலத்திலிருந்து எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, இதுநாள்வரையிலும் மறுக்கப்பட்ட எங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறித்துப் பேசினால், “இவர்களுக்குப் பின்னே யாரோ இருக்கிறார்கள். இவர்கள் பி டீம்.” என்றெல்லாம் சொல்கிறீர்கள். நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன், நாங்கள் அறிவாசான் அம்பேத்கரின் பிள்ளைகள். உங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத கருத்துருகளை உருவாக்கிய பண்டிதர் அயோத்திதாசர், தாத்தா ரெட்டமலை சீனிவாசன், ஜான் ரத்தினம், அன்னை மீனாம்பாள், பெருந்தலைவர் எம்.சி.ராஜா ஆகியோரின் பிள்ளைகள் நாங்கள். விடுதலைக்கான வேட்கை என்பது எங்களுக்குக் காலங்காலமாக இருக்கிறது. அதனால் யார் பின்னும் போய் நிற்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. யாரைப் பார்த்தும் நாங்கள் பயப்படவும் மாட்டோம். நீங்கள் எங்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள், வேலை கொடுத்திருக்கிறீர்களா, உணவளித்திருக்கிறீர்களா? பிறகேன் நாங்கள் உங்களுக்குப் பயப்பட வேண்டும்? ஓட்டுதான் எங்கள் ஆயுதம். ‘One Vote, One Value’ என்று பாபாசாகேப் சொன்ன கருத்தியலின்படி எங்கள் மக்கள் ஒன்றுதிரளும் நாள் வரும். அன்று எங்களிடம் உதவி கேட்டு வருவீர்கள்.

இன்று எளிதாக எங்களைப் பிரித்தாளுகிறீர்கள். எங்களுக்கு எதிராக எங்கள் வீட்டிலிருந்தே ஒருவரை நிறுத்தி, “இவரது குரல்தான் சமூகத்திற்குத் தேவையானது. மற்ற குரல்கள் பிரிவினையைத் தூண்டுகின்றன” என்கிறீர்கள். இந்தச் சமூகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது. அதைக் கண்டறிந்து, குணப்படுத்த சரியான மருத்துவர்கள் தேவை. நோயைச் சுட்டிக்காட்டுபவரையே “நோயைப் பரப்புகிறார், பிரிவினையைத் தூண்டுகிறார்” என்று குற்றம் சுமத்துகிறீர்கள். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன அய்யன் வள்ளுவன் காலத்திலிருந்தே இச்சமூகத்தைக் குணப்படுத்த நாங்கள் முயன்றுகொண்டிருக்கிறோம். ஆனால் நீங்களோ, அண்ணன் ஆம்ஸ்ட்ராங் இறந்ததும் “அவர் ரெளடி” என்றெழுதுகிறீர்கள். ‘முற்போக்கு’ வேடந்தரித்துக்கொண்டு இவ்வாறு எழுதுகிறீர்கள். முதலில் பாஜக, பிறகு திமுக தொழிற்நுட்பப் பிரிவு என அண்ணன் ஆம்ஸ்ட்ராங் குறித்து மிக மோசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதிகாரத்திற்கு எதிராகத் திரண்டால் ரெளடிகள் என்பீர்களா? அப்படியானால் நாங்கள் ரெளடிகள்தாம்.

காவல்துறைக்கு எச்சரிக்கையாகவே சொல்கிறேன், இந்தப் படுகொலையை மேம்போக்காகக் கையாளும் எண்ணத்தை விட்டுவிடுங்கள். அண்ணல் அம்பேத்கர் கற்றுக்கொடுத்த சட்டத்தின் வழி நடப்பவர்கள் நாங்கள். பத்து இலட்சம் மக்களைத் திரட்டி வன்முறை நோக்கி நகர்த்தாமல், பௌத்தம் என்ற அறத்தை நோக்கி வழிகாட்டியவர் பாபாசாகேப். அண்ணன் படுகொலையின் உண்மைக் குற்றவாளிகளை நீங்கள் கண்டுபிடிக்கும்வரை சட்டவழியில் நாங்கள் போராடிக்கொண்டேயிருப்போம். அரசு மருத்துவமனையில் எங்களை நீங்கள் அணுகிய விதம் மோசமானது. ஆனாலும், நாங்கள் அன்றும் இன்றும் கட்டுக்கோப்பாக, வன்முறையை நாடாமல் அறவழியில் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களை வகைமைப்படுத்தாதீர்கள், அச்சுறுத்தாதீர்கள். இது எச்சரிக்கைதான். ஆனாலும் உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. உங்கள் விசாரணையைக் கவனித்துக்கொண்டிருக்கிறோம். அப்படி அதில் நம்பிக்கை இல்லாதபட்சத்தில் எங்கள் கோரிக்கைகள் மாறும். அவற்றை நிறைவேற்றித் தர வேண்டிய கட்டாயத்தையும் நாங்கள் உருவாக்குவோம்.

அண்ணன் ஆம்ஸ்ட்ராங் ஆளுமை மிக்கத் தலைவர். மெட்ராஸையே கட்டியாண்டவர். அந்த ஆளுமையைச் சிதைக்கப் பெரும் சூழ்ச்சியே நடந்திருக்கிறது. மெட்ராஸில் அண்ணன் கவனத்திற்கு வராமல் எதுவும் நடந்துவிடாது. அவர் யாரையும் வன்முறை நோக்கி நகர்த்தியதில்லை. நான் கோபமாகப் பேசினால் கூட “உங்க வேலை படம் இயக்குவது. அதை மட்டும் செய்யுங்கள்” என்பார். பல ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறார். இன்று அவர் இல்லை என்று யாரும் மகிழ்ச்சியடைய வேண்டாம். இந்த மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது. கிட்டத்தட்ட நாற்பது சதவீதத்திற்கும் மேல் தலித் மக்கள் இங்குள்ளனர். நாங்கள் அரசியல்மயப்படாமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் விழிப்புணர்வடையும்போது எங்களுக்குச் செவிசாய்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உங்களுக்கு வரும். நிச்சயமாக இது நடக்கும்.

அண்ணன் இறப்பில் எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. அவர் இந்து மதத்தைத் தீவிரமாக எதிர்த்தவர். பௌத்தத்தைத் தன்னுடைய வாழ்க்கை நெறியாக்கிக்கொண்டவர். பௌத்த விகாரைகளைக் கட்டி, பலரை பௌத்தமேற்கச் செய்தவர். அதனால், இதில் வேறு சூழ்ச்சிகள் இருக்கின்றனவா என்று இயல்பாகவே சில சந்தேகங்கள் எழுகின்றன. அண்ணன் படுகொலைக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், பௌத்த அரசியலைக் கையிலெடுத்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இறப்பதற்குச் சில காலம் முன்பாக, அதாவது குழந்தை பிறந்ததற்குப் பின்பு, முழுக்கப் பௌத்த நெறிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டார். பல நபர்களை உடன் வைத்துக்கொள்வதையும் தவிர்த்துவிட்டார். அந்த அளவிற்குப் பௌத்த நெறி அவரை அறவழிப்படுத்தியுள்ளது. அதுதான் படுகொலை வரையும் இட்டுச் சென்றுள்ளது. காவல்துறை இந்தக் கோணத்திலும் வழக்கை விசாரிக்க வேண்டுமென்பது எங்களுடைய கோரிக்கை.

புகைப்படம் : கபிலன் சௌந்தரராஜன்

இந்தக் கூட்டம் இதோடு கலைந்துவிடும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கட்சிகளில் இணைந்து தேர்தலில் வென்ற அடிமைகள் அல்லர் நாங்கள். கட்சிகளில் இருப்பதாலேயே யாரும் மேயராகவோ, அமைச்சராகவோ ஆகிவிட முடியாது. பாபாசாகேப் இயற்றிய சட்டத்தால், இடஒதுக்கீட்டால்தான் சிலருக்கு அப்பதவிகள் கிடைத்திருக்கின்றன. இத்தனை தனித்தொகுதி சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஏன் ஒருவர் கூட ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. கட்சி உங்களைக் கட்டுப்படுத்துகிறதா? தலித்துகளுக்கு ஆதரவாகப் பேச, போராட முடியவில்லையென்றால் எதற்காகத் தனித்தொகுதியில் நிற்கிறீர்கள்? “தனித்தொகுதிகள் அரசியல் அடிமைகளைத்தான் உருவாக்கப் போகின்றன” என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். இன்னும் எத்தனை காலத்திற்கு அடிமையாக இருப்பீர்கள்? தலித் மக்களுக்கு எதிராக எவ்வளவோ பிரச்சினைகள் நிகழ்கின்றன, எதற்காவது குரல் கொடுத்திருக்கிறீர்களா? ஆட்சிகள் மாறினாலும் இந்த அவலங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. எந்த வாய்ப்பின் அடிப்படையில், எந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இப்பதவி கிடைத்தது என்று யோசித்திருந்தால் நிச்சயம் இம்மக்களுக்காகப் பேசியிருப்பீர்கள். ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்? எப்போது பேசுவீர்கள்? முடியாதபட்சத்தில் தனித்தொகுதியில் வென்ற பதவியிலிருந்து விலகிவிடுங்கள்.

இப்படியெல்லாம் நாங்கள் பேசினால், ஏதாவது பொய்யைக் கட்டமைத்து, எங்கள் அண்ணன்களையே எங்களுக்கு எதிராக நிறுத்துவது மிகவும் கவலையளிக்கிறது. அண்ணன் திருமாவளவனுக்குச் சொல்லிக்கொள்கிறேன், நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு எதிராக இருக்க மாட்டோம். எங்களின் குரல் நீங்கள். உங்களை ஒருபோதும் விட்டுவிட மாட்டோம், உங்களுடனே நிற்போம். அனைத்து அண்ணன்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். நமக்கு நிறைய அமைப்புகள், தலைமைகள் தேவைப்படுகின்றன. செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. பல குரல்கள் சேர்ந்துதான் நாம். நமக்குள் கட்சி வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால், நம் மக்கள் பாதிக்கப்படும்போது நாம் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது. நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சி இங்கு தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே பட்டியல் பிரிவில் உள்ள மூன்று பெரும்பான்மை சமூகங்களைப் பிரித்துவிட்டார்கள். 80களில், 90களில் தொடங்கப்பட்ட கட்சிகளில் எல்லாப் பிரிவினரும் இருந்தனர், இன்று ஏன் இல்லை? 25 – 30 சதவீதம் உள்ள மக்களைத் தனித்தனியாக, எதிரெதிராகப் பிரித்துவிட்டனர். குறைந்தபட்சம், பிரச்சினைகளின் அடிப்படையிலாவது நாம் ஒன்றிணைய வேண்டும்.

நம் ஒற்றுமையைச் சிதைப்பதற்கு அவர்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனாலும், பாஜகவையே முன்னிறுத்துகிறார்கள். நான் சொல்கிறேன், பாஜகவுக்கு முற்றிலும் எதிரானவர்கள் நாங்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையிடமான நாக்பூரிலேயே அவர்களை எதிர்த்துக் களம் கண்டவர் பாபாசாகேப். எனவே, எங்கள் பகுதிகளில் பாஜக நுழையாது, நுழைய விடவும் மாட்டோம். மீண்டும் பாஜகவைச் சொல்லி எங்கள் பிரதிநிதித்துவத்தைப் பறிக்காதீர்கள். எங்களைப் பற்றியும் எங்கள் பிரச்சினைகள் பற்றியும் புரிந்துகொள்ளாமல் செயற்படாதீர்கள். இவ்வளவு ஆணவக்கொலைகள் நடந்த பின்பும் ஆணவக்கொலைகளுக்குத் தனிச்சட்டம் தேவையில்லையென்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை. ஒற்றைக் கட்சிக்கு எதிராக அல்ல, அனைத்து அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். காங்கிரஸிலிருந்து அதிமுக வரை எல்லாக் கட்சிகளும் எங்களை ஏமாற்றியிருக்கின்றன. தமிழகத்தில் அறுபது ஆண்டுகளாக இரண்டு கட்சிகளுக்குத்தான் ஓட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தக் கட்சியிலும் மக்கள்தொகைக்கேற்ப எங்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை. உங்கள் கட்சிகள் சார்பாகத் தனித்தொகுதியில் வெற்றிபெற்ற சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் எம்மக்களுக்காகப் பேசவில்லை. அதனால் அவர்களைப் பதவிநீக்கம் செய்துவிடுங்கள் என்பதைக் கோரிக்கையாகவே முன்வைக்கிறோம். இனியும் தலித் பிரச்சினைகளில் இடஒதுக்கீட்டின் மூலம் வென்றவர்கள் குரல் கொடுக்கவில்லையென்றால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

பல காலமாக நாங்கள் எதிர்பார்த்திருந்த மாற்றம் நிகழவே இல்லை. மற்ற சாதிப் பிரச்சினைகளையும் தலித் மக்கள் பிரச்சினைகளையும் ஒரே தன்மையில் நீங்கள் அணுகுவதுதான் இங்கிருக்கும் சிக்கல். இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இந்த அறியாமையைச் சரி செய்வதற்கான வேலையை நீலம் பண்பாட்டு மையமும் தோழமை அமைப்புகளும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். ஆம்ஸ்ட்ராங் அண்ணன் படுகொலைக்கு நீதி வேண்டி தன்னார்வத்தோடு பெரும் மக்கள் திரள் கூடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதையே மிகப்பெரிய அறைகூவலாகவும் வெற்றியாகவும் கருதுகிறேன். இந்த எழுச்சியையும் சாதிய மனநிலையில் பார்த்தீர்களானால், உங்களைவிட பிற்போக்கானவர்கள் யாரும் கிடையாது.

நாம் இப்படியே கலைந்து சென்றுவிடக் கூடாது. நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை யார் முன்னெடுத்துச் செல்வது என்ற கவலையும் இருக்கிறது. நீலம் பண்பாட்டு மையம் தலித் மக்களின் பிரச்சினைக்காக எந்தச் சமரசமுமின்றிப் போராடும். அம்பேத்கரியத்தை ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து களம் காண வேண்டிய தேவை இருக்கிறது. நம்முடைய பலத்தை முன்வைத்து அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் சமூகமாக (Demanding Community) மாற வேண்டும். அதுதான் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கிற்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்.

தமிழ்நாடு அரசிடம் முறையாகக் கோரிக்கை வைக்கிறோம். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலையையொட்டி நடந்த சம்பவங்களை மறக்கவும் தயாராக இருக்கிறோம். அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கிற்குச் சென்னையில் மணிமண்டபம் கட்டித் தர வேண்டும். உங்களை எதிர்மறையில் வைக்க எங்களுக்கு விருப்பமில்லை. எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம். அதை நீங்கள் செயல்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.

பெருந்திரளாகக் கலந்துகொண்ட அத்துணை நல்உள்ளங்களுக்கும் ஜெய்பீம் கலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சமத்துவத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி கடந்த ஜூலை 20 அன்று நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த நினைவேந்தல் பேரணியில் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

எழுத்தாக்கம்: சிவராஜ் பாரதி

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger