சக்கிலியர்கள் யார்? – ‘சிந்திக்கும் வாயில்’ நூலில் விடுபட்டவைகளின் நீட்சி

அன்பு சாக்கியன்

வரலாறு தரவுகள் சார்ந்தது மட்டுமல்ல, தரவுகளை எப்படிப் பொருள் கொள்கிறோம் என்பதையும் சார்ந்ததுதான்.

– ஸ்டாலின் இராஜாங்கம்

தர்க்கம், விவாதம் ஆகியவற்றின் மூலம் உண்மையையும் நீதியையும் உணர்ந்தும், உணரச் செய்வதும் அவற்றின் வழி ஒழுகுவதும் பௌத்த வாழ்வியல் நெறி.

– ம.மதிவண்ணன்

நீலம் பதிப்பகம் வெளியிட்டு ஆய்வாளர் ஸ்டாலின் இராஜாங்கத்தால் தொகுக்கப்பட்ட ‘சிந்திக்கும் வாயில்: இன்றைய ஆய்வுகளில் அயோத்திதாசர்’ நூல் பண்டிதர் அயோத்திதாசரின் மாற்றுக்கதையாடல் என்னும் சட்டகத்தைக் கொண்டு, சொல்லப்பட்ட வரலாற்றை மறுகட்டமைத்தல் அல்லது மாற்று வரலாற்றைக் கூறுதல் என்கிற அடிப்படையிலான மிக அவசியமான உள்ளடக்கத்தினைக் கொண்ட படைப்பாக வெளிவந்திருக்கிறது.

ஒடுக்கப்பட்ட தலித் மக்களில் பெரும்பான்மையாக உள்ள பறையர்கள் குறித்தும், தேவேந்திர குல வேளாளர்கள் குறித்தும் அவர்களின் வாழ்வு, பழக்க வழக்கங்களில் உள்ள பௌத்த எச்சங்கள் குறித்தும் மிக நுட்பமான ஆய்வுகளாக அவை இருந்தன. ஆய்வாளர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் கவனம் சிதறாமல் மிகச்சிறப்பாக பண்டிதர் அயோத்திதாசரின் மாற்றுக்கதையாடல் சட்டகத்தை விதிமுறையாகக் கொண்டு ஆய்வுகளை முன்வைத்திருக்கிறார்கள்.

இவற்றின் நீட்சியாக ஒடுக்கப்பட்ட தலித் மக்களில் சக்கிலியர்களுக்கும் (அருந்ததியர்கள்) பௌத்தத்திற்கும் உள்ள தொடர்பு, மரபார்ந்த உறவு, பழக்கவழக்கங்களில் மறைந்திருக்கும் பௌத்தப் பண்பாட்டுக் கூறுகள், பெயர்கள், இலக்கியத் தரவுகள் போன்றவற்றில் பண்டிதர் அயோத்திதாசர் முன்வைக்கும் மாற்றுக்கதையாடல் சட்டகம் அல்லது மாற்று வரலாற்றைக் கட்டமைத்தல் என்கிற அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் ‘சிந்திக்கும் வாயில்’ நூல் சக்கிலியர்களின் பௌத்தப் பண்பாட்டின் நீட்சியை மறுதலித்திருக்கிறது என்பதல்ல. மாறாக, அவை தொட்டுவிட்ட இடங்களிலிருந்து ஆய்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறோம். நூல் வெளியீட்டு விழாவில் ஆய்வாளர் ஸ்டாலின் இராஜாங்கம் “இந்நூல் மிக குறுகிய காலத்திற்குள் தொகுக்கப்பட்டது” என்றிருந்தார். அதுவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆகவே, விடுபட்ட பகுதிகளை ஆராய்ந்து இந்திய / தமிழக பௌத்தப் பண்பாட்டு வரலாற்றில் சக்கிலியர்களுக்கான வரலாற்றுத் தொடர்ச்சியையும், இலக்கியப் புனைவுகளில் தென்படும் சக்கிலியர்களின் பெயர்கள், அவர்தம் பௌத்த அடையாளங்களையும் இனங்காண்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.

காப்பியங்களில் வரும் ‘மாதரி’ யார்?

‘சிந்திக்கும் வாயில்’ நூலில் ஆய்வாளர் ஸ்டாலின் இராஜாங்கம் எழுதியுள்ள ‘உள்மெய் புறமெய்யாக எஞ்சும் தருணம்: ஔவை மீதான வாசிப்பு’ என்கிற கட்டுரையில் ஔவை குறித்தான மிக நுட்பமான ஆய்வுகளை முன்வைத்திருக்கிறார். இடைக்கால ஔவை, குறளிலும் காப்பியங்களிலும் ஔவை, ‘ஔவை’ என்னும் நிலை, பொதுப்பெயர்களில் வழங்கப்படும் தெய்வங்கள், அந்தணர் / புத்தர் / சித்தர், சமண இயக்கியும் ஔவையும், ஔவையாகிய பெண் துறவி, போலச் செய்தல், வழக்காற்று ஔவையில் எஞ்சியிருக்கும் சிரமண மரபுகள், காலத்தைக் கலைத்துப் பார்க்கும் நிலைப்பாடு, சங்க ஔவை மீதான இடைக்கால ஔவைகளின் சாயல், உள்மெய்யும் புறமெய்யும், மூத்தவள் முதியவளான கதை, ஆய்வாளர்களின் மாறுபட்ட முடிவுகள் போன்ற உபதலைப்புகளில் ஔவை யார், ஔவை என்கிற பௌத்த நிலை குறித்து நிறுவப்பட்டிருக்கும்.

‘குறளிலும் காப்பியங்களிலும் ஔவை’ என்கிற உபதலைப்பில் சிலப்பதிகாரத்தில் ‘ஐயை’ என்ற பெயரில் வரும் பாத்திரம் எவ்வாறு ‘ஔவை’யுடன் ஒத்துப்போகிறது என்பது பற்றி விளக்கியிருப்பார். ஐயை என்கிற பாத்திரத்தின் தாயார் பெயர்தான் ‘மாதரி’. இதையும் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். ஆனால், கட்டுரையின் நோக்கம் ஔவை பற்றியாதலால் ‘மாதரி’ குறித்தோ, ‘மாதரி’ என்கிற பெயரின் வேர் குறித்தோ ஆராய வேண்டிய அவசியமேற்படவில்லை. நம்முடைய ஆய்வை இங்கிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்குமென்ற பட்சத்தில் ‘மாதரி’ குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பௌத்த மரபில் மாதாரி அல்லது மாதரி

சிலப்பதிகாரத்தின் அடைக்கலக் காதையில் இளங்கோவடிகள் மாதரி என்கிற பெண்ணை அறிமுகப்படுத்துகிறார். அவள் புறஞ்சேரியில் வசிப்பதாகவும், திருமால் – சிறுதெய்வ வழிபாட்டைக் கடைபிடிப்பவளாகவும் காட்டப்படுகிறாள். அவளுக்கு ஐயை என்னும் மகள் உண்டு.

கோவலனும் கண்ணகியும் மதுரையின் புறஞ்சேரிப் பகுதியில் தங்கியிருந்தபோது, மாதரி அப்பக்கம் உள்ள இயக்கி என்னும் சிறு தெய்வத்திற்குப் பால் படையல் செய்துவிட்டுத் திரும்புகிற வழியில் கவுந்தியடிகள் அவளைக் கண்டு,

‘இவள் ஆயர் குலத்தவராகத் தெரிகிறாள். ஆகாத்து ஆப்பயனைப் பிறர்க்கு அளிக்கும் ஆயரின் வாழ்க்கையில் எந்தக் குற்றச் செயலும் இல்லை. எனவே, இவளும் ஒரு தீமையும் செய்யாள். அகவை முதிர்ந்த பட்டறிவாளி. அனுபவசாலி. இவளைப் பார்க்கையில் நேர்மையும் இரக்கமும் உடையவளாகத் தோன்றுகிறாள். எனவே, கண்ணகியை இவளிடம் அடைக்கலமாக விடுவதுதான் சரியாகும்.’ என்றெண்ணுகிறார்.

இவ்வாறு போகும் கதையின் இறுதியில், கோவலனைக் காக்க முடியவில்லை என்றும், கோவலனை இழந்த கண்ணகியின் துயர் கண்டும் தீக்குளித்து, தன்னைத் தானே மாய்த்துக்கொள்வதாக மாதரியின் கதை நிறைவுறுகிறது.

இதன் மூலம் மாதரி என்பவள் சேரியில் வசிப்பவள், அவளுக்கு ஐயை என்கிற மகளுண்டு, நேர்மையானவள், பட்டறிவு உடையவள், எவருக்கும் எதற்கும் தீங்கு செய்யாதவள், இரக்கக் குணம் கொண்டவள், மாடுகளை வளர்ப்பவள், செல்வமும் செல்வாக்கும் உடையவள் என்பதாகப் பல்வேறு தகவல்கள் நமக்குக் கிடைக்கிறது.

சக்கிலியர், மாகதர், மாதியர், மாதிகா, மாதாரி அல்லது மாதரி, மாலா, பகடை, தோட்டி, செம்மான், பறம்பன், பகடு, வானர், கோசங்கி, பாணர் போன்ற பெயர்கள் அருந்ததியர்களைக் குறிக்கும் வேறு பெயர்கள் ஆகும்.

மாதாரி என்பது மஹா (மகா) + தாரி = மாதாரி ஆகும். தாரி என்றால் வழி, மார்க்கம், பாதை, சாலை என்று அர்த்தம் (‘ஜலதாரி’ என்றால் ‘நீர் செல்லும் வழி’ என்ற பொருள் உள்ளதைப் போன்று). மகாயான பௌத்தம் என்னும் பெரும் பிரிவைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்தான் மாதாரி. அதேபோல், மாதரி என்பதும் மஹா (மகா) + தரி = மாதரி ஆகும். மிகப்பெரும் மார்க்கமான மகாயான பௌத்தத்தைத் தரித்துக்கொண்டவர்கள் அல்லது ஏற்றுக்கொண்டவர்கள் என்று பொருள். இதுவே மற்ற மொழிகளில் திரிந்தும் மருவியும் மாதிகா (மா + கதி (கா)), மாகதிகா, மாகதிகர் என்றானது.

ஐயை என்பது ‘ஔவை என்கிற பௌத்த நிலை’ அல்லது பௌத்தத்தில் ‘வழிகாட்டும் தலைமை’யைக் குறிப்பதாக அக்கட்டுரையில் விளக்கியிருப்பார் ஸ்டாலின் இராஜாங்கம். ஆக, சக்கிலியர்களின் ஒரு பிரிவான மாதரி என்பவர்கள் பௌத்த மரபினர்தான் என்கிற பொருளோடு பொருத்திப் பார்க்கையில் இக்கருதுகோள் ஒத்துப்போகிறது. சக்கிலிய (பௌத்த) மாதரி என்கிற தாயின் மகள்தான் (பௌத்த) ஐயை என்பதுடன் இணைத்துப் பார்க்கையில் மேலும் புரிந்துகொள்ள முடிகிறது.

மாதரியும் அவள் மகள் ஐயையும் வசிக்கும் பகுதி சேரி என்று சொல்லப்படுகிறது. சேரி என்றால் ‘கூடி வாழும் இடம்’ என்று பொருள். சங்க இலக்கியம் பலவற்றிலும் சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேர்மை, இரக்கக் குணம், தீங்கிழைக்காமை, பட்டறிவு ஆகியவை பொதுவாகப் பௌத்தத்தில் தனிமனிதர்கள் கடைபிடிக்கக் கூடிய சீலங்களாகப் போற்றப்படுபவை. ஆகவே, பௌத்த வழிவந்த சக்கிலியர்களின் பிரிவில் உள்ள மாதரியின் குணங்களாக இயல்பாகவே இவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

மாதரி திருமால் என்கிற தெய்வத்தை வணங்குபவளாகக் காட்டப்படுகிறாள். பண்டிதர் அயோத்திதாசர் திருமால் என்பது புத்தர்தான் எனக் குறிப்பிடுவதோடு இதனை இணைத்துப் பார்க்க வேண்டும். புத்தரை மற்ற கடவுளர்களாக மாற்றம் செய்த வைணவத்தோடு (திருமாலோடு) பொருத்திப் பார்க்கக் கூடாது. ஏனெனில், மாதரி ‘இயக்கி’ என்கிற நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கொண்டவளாகவும் சொல்லப்படுகிறது.

‘இயக்கி’ என்கிற தெய்வம் குறித்து ஆய்வளார் ஸ்டாலின் இராஜாங்கம் இவ்வாறு கூறுகிறார்:

“இயக்கி என்பது வடமொழியில் யட்ஷி என்றழைக்கப்பட்டு ‘காமக்கோட்ட யட்ஷி’ காமயட்சி (காமாட்சி) என்றும், ‘மீன் கோட்ட யட்ஷி’ (மீனாட்சி) என்றும் செவ்வியல் தெய்வங்கள் ஆக்கப்பட்டனர். யட்ஷி என்பதன் வழக்குச் சொல்தான் இசக்கி. தென்பாண்டி தமிழகத்தில் இசக்கி வழிபாடு பிரபலம். கேரளா வரை பரவியிருக்கும் பகவதி வழிபாடு இத்தகைய இசக்கிகளே ஆவர். சங்கப் பாடல்களில் ஔவை பெயரில் பாடல்கள் இருந்தாலும், ஔவைக்கு உருவமும் வழிபாட்டுப் பண்பும் உருவாவது இடைக்கால சமண சமய இயக்கி மரபில்தான். உண்மையில் இன்றைக்கு நாம் அறியும் ஔவைக்கான சித்திரத்தை சிரமண மரபுதான் தந்திருக்கிறது. மக்களுக்கு ஏதோவொரு வகையில் உதவியவர், வழிகாட்டியவர் இறந்த பின்னால் அவரை வழிபடுவதிலிருந்துதான் (நீத்தார் வழிபாடு) வழிபாடுகள் கிளைத்திருக்கின்றன. மக்களிடையே அறநெறியைப் பரப்புவதன் மூலம் வழிகாட்டும் நிலையைப் பெற்றிருந்த ஔவைகள், உயிரோடு இருந்தபோது மட்டுமல்லாமல் இறந்த பின்பும் வணங்கப்பட்டனர். சில இடங்களில் தனித்தும் பல இடங்களில் ஏற்கெனவே இருந்த பெண் தெய்வங்களோடு இணைத்தும் வழிபடப்பட்டனர்.”

எனவே, பௌத்தர்களான சக்கிலிய மாதரிகள் சிரமண மரபு அறநெறிகளைப் போதித்த தங்களது முன்னோர்களில் ஒருவராக (சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று) ‘இயக்கி’யை வழிபட்டிருப்பது இயல்பான ஒன்றுதான்.

அடுத்து, மாதரி செல்வமும் செல்வாக்கும் மிகுந்தவளாக சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறார். இங்கு செல்வம் என்பதை ‘மாடு’ என்று பொருள் கொள்ளலாம். கோவலன் மாதரியின் வீட்டிலிருந்து மதுரைக் கடைத்தெருவிற்குப் புறப்பட்ட செய்தியை, கொலைக்களக் காதை – 98இல், ‘பல்லான் கோவலர் இல்லம் நீங்கி’ என்பதாக இளங்கோவடிகள் எழுதுகிறார். பல் + ஆன் = பல்லான், பல ஆநிரைகளை (மாடுகளை) உடையவர் என்று பொருள். வெறுமனே மாடுகளை வளர்த்து செல்வச்செழிப்புடன் சக்கலியர்களான மாதரிகள் வாழ்ந்தார்கள் என்பது இதன் பொருளல்ல. மாறாக, மாடுகளுக்கும் சக்கிலியர்களுக்கும் இடையே உள்ள பௌத்தத் தொடர்பை விளங்கிக்கொள்வதன் மூலமே இதனைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு, பௌத்த ‘கோசங்கி’கள் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

சக்கிலியர்களே பௌத்த கோசங்கிகள்

எழுத்தாளர் ம.மதிவண்ணனின் மானுடவியல் ஆய்வான ‘சக்கிலியர் வரலாறு’ நூலில் கோசங்கிகள் பற்றி மிக விரிவான ஆய்வுகளைக் கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றின் ஆதாரம் கொண்டு முன்வைக்கிறார். அதில் சக்கிலியர்கள் எவ்வாறு பௌத்தத்தையும், பௌத்தம் முன்வைத்த தத்துவங்களையும் கடைபிடித்தார்கள் என்று விளக்கியிருக்கிறார். அந்நூலின் சில பகுதிகள்:

‘கொங்கு சமுதாய ஆவணங்கள்’ நூலில் பேரூர் அணை கட்டின பட்டயம் என்ற பெயரில் 1499ஆம் ஆண்டை ஒட்டிய ஓர் ஆவணம் உள்ளது. அதில் உள்ள சில வரிகளைப் பார்ப்போம்.

“தொட்டிய சக்கிலியற், மதுரைச் சக்கிலியற், அனுப்பச் சக்கிலியற், கானக்காட்டுச் சக்கிலியற் யிந்த நாலு சாதி சக்கிலியற் மேலே கந்தாயம் வரி கொடுக்கும் படியாயி கோசங்கிகளை சர்க்காறர் தெண்டித்த படியினாலேஞ்”

“சுவாமி கல்லுங் காவேரியும் உண்டான நாள் முதல் சந்திற சூரியர் வுள்ள நாள் முதலாயில்லாத கந்தாய வரி மாதாரிகளே குடுங்கள் என்று தெண்டிக்கிற படியினாலே தேவரீர் சமூகத்துக்கு வந்தேன். இனிமேல் இந்த நாலு சாதி கோசங்கி வம்முசம் உள்ள வரைக்கி பட்டரை வரி ரெண்டு பொன்தவிர மற்றவரி சரி மாப்பு யென்கிறதாக உத்தரவு கொடுத்து…” (கொங்கு நாட்டு சமுதாய ஆவணங்கள், பக். 282, 283, செ.ராசு)

மேற்சொன்ன ஆவணம் மட்டுமல்லாமல் அதே நூலிலுள்ள திருமுருகன் பூண்டி கிரைய சாசனம், மல்லி குந்தம் பட்டான் ஆகிய ஆவணங்களும் சக்கிலியரைக் கோசங்கி வம்சத்தினர் என்று குறிப்பிடுகிறது.

பண்டிதர் அயோத்திதாசரும் சக்கிலியர்களைக் குறிக்க கோசங்கிகள் என்கிற சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார். ஜனவரி 31, 1912 தேதியிட்ட தமிழன் பத்திரிகையில் பண்டிதர் அயோத்திதாசரிடம் சி.முத்துக்குமாரசுவாமி, நாதமுனி, தீர்த்தகிரி, உபாத்தியாயர் என்பவர்கள் கேட்கும் கேள்வியின் ஒருபகுதி:

“கோசங்கிகள் என்றழைக்கப்படும் சக்கிலியரை பறையரென்போர் மாமன் மைத்துனன் உறவாய் முறை கொண்டாடி, உண்பன, கொள்வன, கொடுப்பனவைகளிற் சம்பந்தப்படாமனிற்பதோ ஒருவருக்கொருவர் வீதிகளில் ஒருவருக்கொருவர் பாதரட்சை அணிந்து ஏகாது உறுதி செய்து கொண்டு…”

– அயோத்திதாசர் சிந்தனைகள், தொகுதி 1, பக். 694.

‘கோ’ என்கிற பாலி மொழிச் சொல்லுக்குக் காளை அல்லது மாடு என்று பொருள். ‘சங்கி’ என்கிற சொல்லிற்குப் புத்தரின் சங்கத்தைச் சேர்ந்தவன் என்று பொருள். ‘கோசங்கி’ என்ற சொல்லுக்குக் காளை மாடுகளைப் பாதுகாக்கும் புத்தரின் சங்கத்தைச் சேர்ந்தவன் என்று பொருள்.

காளை மாடுகளைக் கொல்வதற்கு எதிரான சங்கம் ஏன் தோன்ற வேண்டும் என்கிற கேள்வியையும் கேட்டு அதற்கான பதில்களையும் தருகிறார் ம.மதிவண்ணன்.

‘இந்து மதத்தின் புதிர்கள்’ நூலில் அண்ணல் அம்பேத்கர் உயிர்களைப் பலியிடுவது தொடர்பான காளி புராணத்தின் பகுதிகளை மேற்கோள் காட்டுகிறார். அதில் ஒரு பகுதி: “விலங்கினங்களிலும், பறவையினங்களிலும் பெட்டைகளை பலியிடக் கூடாது. மனித இனத்திலும் பெண்ணைப் பலியிடக் கூடாது. பெண்பாலைப் பலியிடுபவன் நரகத்தில் விழுவான்’’

– அம்பேத்கர் நூ.தொ. 8, தமிழ், பக். 163.

அதேபோல அவருடைய நூல் தொகுப்பு 14இல் (தமிழில்), கீழ்க்கண்ட பகுதி காணப்படுகிறது. பிராமணர்கள் நடத்தும் வேள்விகளில் விலங்குகள் எவ்வளவு குரூரமரகவும், பெரும் எண்ணிக்கையிலும் பலியிடப்படுகின்றன என்பதை விவரித்த பிறகு குததாந்தா கூறுகிறார்:

“…ஓ! கௌதமரே நான் 700 காளைகளையும், 700 விதையடிக்கப்பட்ட எருதுகளையும், பசுக்களையும், 700 இளம்வெள்ளாடுகளையும், 700 செம்மறியாடுகளையும் விடுவிப்பேன். அவற்றுக்கு உயிர்ப்பிச்சை அளிப்பேன்’’

– அம்பேத்கர் நூ.தொ. 14, தமிழ், பக். 140.

இப்படியாக, பார்ப்பனர்களால் யாகம் என்கிற பெயரில் பலியிடப்படும் விலங்குகளைக் காக்கும் விதத்தில் புத்தரால் உருவாக்கப்பட்டதே கோசங்கம். அதன் உறுப்பினர்களே கோசங்கிகள். சக்கிலியர்கள் கோசங்கிகள் எனக் குறிப்பிடப்படுவதால் அவர்கள் பௌத்தர்கள் என்பது மேலும் உறுதியாகிறது.

‘கோசங்கி’ என்ற சொல் பௌத்தத்தோடு தொடர்புடைய வார்த்தைதான் என்பதை நிறுவும் பொருட்டு கி.மு இரண்டாம் நூற்றாண்டு பௌத்தக் கல்வெட்டு ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

அயாரியாச புத்திலா நக்ரராச பிக்கு
ச சர்வஸ்திவத்ஸ பக்ர
ந மகாசங்கியன ப்ர
ம நாவி தவே கலுலுச

(Ε.Ι. 9 to 146)

மேலே உள்ளது பிராகிருத மொழியில் அமைந்த ஒரு கல்வெட்டு. அதன் மொழிபெயர்ப்பு:

“இயற்கை குறித்த அறிவுக்கான பயிற்சிக்களமாகவும், மகாசங்கிகளின் முன்னணிப் படைக்கு எதிரானவரும் நகரா என்ற ஊரைச் சேர்ந்த பிக்குவுமான சர்வாஸ்திவாதின் ஆசார்ய புத்திலருக்கு”

இக்கல்வெட்டு கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பௌத்தத்தில் தேரவாதப் பிரிவில் மகா சங்கிகள் என்னும் பௌத்தப் பிரிவினர் இருந்ததற்கான சான்றினைப் பகிர்கிறது. இது, கோசங்கிகள் என்பவர்கள் கால்நடைகளைப் பலியிடுவதைத் தடுப்பதற்கான பௌத்தர்களின் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

ஆகவே, சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் சக்கிலியர்களின் ஒரு பிரிவினரான மாதரிகள் கால்நடைகளை வளர்ப்பவர்கள் என்பது முன்னரே குறிப்பிட்டதைப் போன்று வெறுமனே செல்வத்தைப் பெருக்குவதற்காக மட்டுமல்ல. அவர்கள் தங்களின் பௌத்தக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனையே இளங்கோவடிகள் மாதரியின் குணம், பழக்கவழக்கம், பட்டறிவு, நாட்டார் தெய்வ வழிபாடு போன்ற குறிப்புணர்த்தும் தன்மையில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

சிலப்பதிகார தோலின் துன்னரும், ஊர்க்காவல் முறையில் மாதாரிகளும்

சிலப்பதிகாரத்தில், இந்திர விழவு ஊர் எடுத்தக் காதையில் 32ஆம் வரியில், “தோலின் துன்னர்” என இளங்கோவடிகள் கூறுவதற்கு, 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரும்பத உரைக்காரர் “செம்மான்” எனப் பொருள் கூறுகிறார். செம்மான்கள் என்பவர்கள் சக்கிலியர்களில் ஒரு பிரிவினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் “பறம்பர்” எனப் பொருள் கூறுகிறார். “பறம்பர்கள்” என்போர் சக்கிலியர்கள்தான் எனக் கடந்த நூற்றாண்டில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுவதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். பறம்புமலையை உடையவன் பறம்பன். பறம்புமலைத் தலைவன் வேள்பாரி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, சிலப்பதிகாரத்தில் ‘மாதரி’ மட்டுமல்ல, ‘தோலின் துன்னர்’ என்பதும் கூட சக்கிலியர்களைக் குறிக்கக் கூடிய சொல்லாகவே இருந்திருக்கிறது.

இவையல்லாமல், மாதாரி என்பதற்கு வேறு சில அர்த்தங்களும் இடைக்காலத்தில் கொடுக்கப்பட்டுப் புழக்கத்திலும் அவ்வார்த்தை இருந்துள்ளது. அது ‘ஊர்க்காவல்’ என்கிற முறையோடு தொடர்புடையது. தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கிராமக் காவல் புரியும் காவற்படையைச் சேர்ந்தவர்கள் ‘அகம்படியர்’ என்றழைக்கப்பட்டனர் என ம.மதிவண்ணன் குறிப்பிடுகிறார். பின்னர், விஜயநகர பேரரசின் ஆட்சியில் இந்த ஊர்க்காவல் முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. விஜயநகர அரசர்களை அகம்படியர்கள் ஏற்றுக்கொள்ளாமையால் கிராமங்களில் வழிப்பறிகளும், கொள்ளைகளும், கலவரங்களும் தொடர்ந்து தீவிரம் அடைந்திருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து தலையாரி, மாதாரி ஆகியோர் ஊர்க்காவல் பணிக்குப் பொறுப்பாளர்களாக ஆக்கப்படுகின்றனர். தலையாரி முறை தமிழகம் முழுவதிற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மாதாரி முறை வடதமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ‘மதுரை நாயக்கர் வரலாறு’ என்கிற நூலில் நாயக்கர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகளில் ஒன்றாக தலையாரிக்கம் என்ற வரியும், மாதாரிக்கம் என்ற வரியும் இருந்துள்ளதாகப் பல்வேறு கல்வெட்டுகளைக் கொண்டு நிறுவியுள்ளார் ம.மதிவண்ணன்.

இதன் நீட்சியாக, 17ஆம் நூற்றாண்டில் சக்கிலிய குலத்தில் மாதிகச் சின்னானுக்கும் செல்லிக்கும் பிறந்த முத்துவீரன் (மதுரைவீரன்) எவ்வாறு காவல் படைக்குப் பணியமர்த்தப்பட்டார் என்பதையும், பின்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் எவ்வாறு படைத்தளபதி ஆனார் என்பதையும் இணைத்துப் புரிந்துகொள்ளலாம். குதிரையேற்றத்தில் வல்லவர்களாகச் சக்கிலியர்கள் மாறிப்போன இந்தக் காலகட்டத்தில்தான் அவர்களைக் குதிரை வீரர்கள் என்கிற பெயரிட்டும் அழைத்திருக்கின்றனர். அதன்பின், மாதாரி என்ற சொல்லே குதிரை வீரர்களைக் குறிப்பதற்கான சொல்லாகவும் சில வரலாற்றாசிரியர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

அயோத்திதாசர் குறிப்படும் பின்கலை நிகண்டில் சக்கிலியர்கள்

‘சிந்திக்கும் வாயில்’ நூலின் கடைசிக் கட்டுரையாக இடம்பெற்றிருக்கும் ச.பால்ராஜ் எழுதிய ‘அயோத்திதாசர் குறிப்பிடும் பின்கலை நிகண்டு’ கட்டுரையில் சூடாமணி நிகண்டு, நிகண்டு சூடாமணி, சூடாமணி என்று அழைக்கப்படும் பெயர்களைத் தவிர்த்து வேறேதேனும் பெயர்கள் அந்நூலிற்கு இருந்திருக்கிறதா என்று அயோத்திதாச பண்டிதரின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்திருக்கிறார்.

பௌத்தம் சார்ந்து தமது அரசியலைக் கட்டமைத்த அயோத்திதாசப் பண்டிதர் பௌத்தமும் சமணமும் ஒன்றெனக் கருதியே அதைக் கையாண்டுள்ளார் என ஆய்வாளர் கூறுகிறார். ஆகவே, அயோத்திதாசப் பண்டிதரின் எண்ணவோட்டம் நம் ஆய்வுக்கும் பொருந்தும் என்கிற அடிப்படையில் மேற்கொண்டு செல்வோம்.

சக்கிலியர்கள் ‘அதியர்’ என்றும், ‘பகடை’ என்றும் அவர்களது வீரத்தின்பால் பெயரிட்டு அழைக்கப்பட்டிருக்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் பொருட்டு, பகடை என்போர் போர் வீரர்கள் என்றும், போரில் முன்வரிசையில் நின்று சண்டையிடுபவர்கள் என்றும் பின்கலை நிகண்டுகள் பதிவு செய்துள்ளதாக முனைவர் ப.தேவராஜ் தன்னுடைய ‘அருந்ததியர்கள் வரலாறும் பண்பாடும்’ என்கிற ஆய்வுக் கட்டுரையில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

“பகடுபுறந்தருநர் பாரம் ஓம்பிஞ்” (புறம் – 35), “பகட்டினானும் மாவினானும்…” (தொல் பொ – 76), “பகடுதெழி தெள்விளி…” (அகநானூறு 17), “பெருமை பகட்டா வின்றகொடுநடைக்குழி…” (பெரும்பாண் 243), “பரப்பு பசுட்டெழின் மார்பின்…” (புறம் 13), “வலிமை நுண்பூணம்பகட்டு மார்பின்…” (புறம் – 88), “பைங்கட்பணைத்தாட் பகட்டுழவன்…” (புறப்பொருள் வெண்பாமாலை), “பகட்டினொடித்து” (தக்கயாகப்பரணி), “மடுத்தவாய் எல்லாம் பகடன்னான்…” (குறள் – 624), “பகடு மருங்கு ஒற்றியும்…” (சிந்தாமணி) இவையனைத்தும் பகடை என்னும் சக்கிலியர்களைக் குறித்து வரும் சொற்களாகும்.

‘மாகதர்’ என்ற சொல் பழங்காலத்தொட்டே தமிழகத்தில் வழக்கில் இருந்துவரும் பெயராகும். இப்பெயரினைத் திவாகர நிகண்டு (செய்யுள் – 49, 51, 54) குறிப்பிடுகிறது. இது சக்கிலியர் குறித்த சொற்கள் என முன்னரே பார்த்தோம். மாதாரி, மாதரி, மாதிகா போன்ற பெயர்களைக் குறிக்கும் உரிச்சொல் ‘மதங்கி’ என்பதாகும். மதங்கி என்றால் பாண்மகள் என்று பொருள் எனத் திவாகர நிகண்டு (செய்யுள் – 127) குறிப்பிடுகிறது.

இந்த மாதங்கி என்ற பெண் தெய்வத்தை வணங்குபவர்களே மாதிகர்களாக இருந்திருக்க வேண்டும். இதனைத் திவாகர நிகண்டிலும் (செய்யுள் -107) காண முடிகிறது. ‘அபிராமி அந்தாதி’யில் “வாயல், மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி, ஆயகி, ஆதி, உடையாள் சரணம் நமக்கே…” (பாடல் 50) எனப் பாடுவதில் ‘மாதங்கி’ என்ற பெண் தெய்வத்தைச் சுட்டிக்காட்டுகிறார் அபிராமி பட்டர். இந்த மாதங்கியைக் குல தெய்வமாக வணங்குபவர்களே ‘மாதங்கி’ என்போராவர் என முனைவர் ப.தேவராஜ் குறிப்பிடுகிறார்.

‘மாகதர்’ என்ற சொல்லாடலைக் கலிங்கத்துப்பரணி – காளிக்குக் கூளி கூறியதில் காண முடிகிறது (பாடல் வரி – 333). இந்தக் கலிங்கத்துப்பரணி ‘மாகதர்’ என்போர் சிற்றரசர் எனக் குறிக்கிறது. ஆகவே, (சக்கிலிய) மாதகர் என்போர் பழங்காலந்தொட்டே தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தொல்பழங்குடியினர் என்பதும், பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிடுவதைப் போல சமண பௌத்த மரபிலமைந்த நூற்களில் இவை பதிவாகியுள்ளதன் மூலம் அது உறுதியாகியுள்ளதையும் காண முடிகிறது.

மாகதர் என்ற பெயரே மருவி மாஅதிரர் எனவும், மாதியர் எனவும் திரிந்ததாகவும், மள்ளர் – பள்ளர், கோசர் – கோளர், புறநகர் – நகர்புறம், இல்முன் – முன்றில், மருதை – மதுரை போன்ற திரிபு பெயர்களோடு இதனை ஒப்பிட்டுக் காட்டி நிறுவியிருக்கிறார் ஆய்வாளர் ப.தேவராஜ்.

சேந்தன் திவாகர நிகண்டு, தெய்வப்பெயர்த் தொகுதியில் காளியின் பெயரைக் குறிப்பிடும்போது ‘மாதரிவீர்’ என்னும் பெயரினைச் சுட்டுகிறது. மாதரிவீர் என்னும் பெண் தெய்வத்தை வணங்குபவர்களாக ‘மாதரிகள்’ இருந்திருக்க வேண்டும். எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய பின்கலை நிகண்டில் (நூற்பா எண் 114) மாகாளி என்னும் பெண் தெய்வத்தின் பெயரினைக் “குமரி, சண்டிகை, குண்டலி, நீலி, வலவை, பைரலி கௌமாரி, மாதரி, மாயை, வீரி, மதங்கி, யாமளை…” எனக் கூறுவதால், மாதரி என்னும் பெயர் மாதாரி என்பதோடு தொடர்புடையதாகும் எனவும் அறுதியிட்டுக் கூறலாம்.

அகராதி நிகண்டில் (பக்கம் 71) ‘செம்மான்’ எனக் குறிக்கப்படும் பெயர் சக்கிலியர் இனத்தின் வேறொரு பெயர் என உறுதிப்படச் சொல்லலாம். ‘செம்மான் மகளைத் திருடும் திருடன்’ (கந்தர் அநுபூதி), ‘மானின் தோலினை அணிந்தவனின் மகளைத் திருடியவன்’ என்று அருணகிரிநாதர் பாடும் இப்பாடலில் மான் தோல் உரித்துப் பதப்படுத்தும் பண்டைக் கால வேட்டைச் சமூக மக்களின் வாழ்வியலைக் கூறுகிறார்.

தொன்மைச் சமூகத்தின் தொடர்ச்சியில் தோல் ஆடைகள் செய்பவர்களே செம்மான்கள் ஆவர். அதியர் என்ற சொல்லைத் திவாகர நிகண்டில் (செய்யுள் 61) காண முடிகிறது. பகடை என்றால் பகடு + ஐ. பகடு என்றால் காளை மாடு, எருமை மாடு, பெருமை, பரப்பு, வலிமை, ஏர், யானை என்று பொருள். காட்டு மாடு, காட்டெருமை, யானை போன்றவற்றைக் காட்டிலிருந்து பிடித்துவந்து பழக்கியவர்களாக இருந்ததினால் அவர்கள் பகடைகள் என்றழைக்கப்பட்டனர் என அவர்களின் வீரத்தைக் குறிப்பிடுகிறது.

பகடைகள் என்றால் போர் வீரர்கள் என்று முன்னரே பார்த்தோம். எனவே, பகடை, செம்மான், துன்னர், பறம்பர், சக்கிலி போன்ற பெயர்களைப் பல்வேறு நிலைகளில் இதனோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

சக்கலி என்கிற பௌத்த பாலி வேர்ச்சொல்லும் களப்பிரர்களும்

சக்கிலி, சக்கிலியர் என்கிற வேர்ச்சொல்லை எடுத்து ஆராய்பவர்கள் பெரும்பாலும் எட்கர் தர்ஸ்டன் தொகுத்த ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ நூலின் மூலத்தை ஆதாரமாகக் கொண்டே அது இழிவான சொல் என்ற முடிவுக்கு வருகின்றனர். ‘அருந்ததியர் வரலாறு’ என்கிற மிக முக்கியமான ஆய்வுகளைத் தொகுத்து வழங்கிய எழில் இளங்கோவனும் மேற்கூறிய முடிவுகளை வைத்துதான் அப்பெயரைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். சஷ்குலி – செத்த மாட்டை உண்பவன், சக்கு + கிலி – அடிக்குப் பயந்தவன் அல்லது கோழை என்பன போன்று சமஸ்கிருத துணை கொண்டு விளக்கி, அதுவே தொடர்ந்து சொல்லப்பட்டு, உண்மையான வரலாறாகவும் நீடித்துவிட்டது.

உண்மையில் அச்சொல்லின் வேர் என்ன என்பதை வெகுசிலரே மிகநுட்பமாக ஆராய்ந்து விளக்கியுள்ளனர். ம.மதிவண்ணன் ‘சக்கிலியர் வரலாறு’ நூலில் இதற்கான விடைகளைத் தொகுத்துள்ளார். அவரின் எழுத்துகளை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்:

சக்கிலியர் என்பதிலுள்ள ‘கலி’ என்ற சொல் பாலிச் சொல்லாகவே இருக்க வேண்டும். ஜேம்ஸ் டி.ஆல்விஸ் என்பார் தொகுத்த Buddhist Nirvana நூலில் கலி என்ற வார்த்தைக்குச் ‘சாவு’, ‘கெடுவாய்ப்பான சாவு’ என்று பொருள் காணப்படுகிறது. அவ்வாறே ச (sணீ) என்ற முன்னொட்டு உடையவர், உரிமையுள்ளவர் என்ற பொருள் தருவதாகப் பாலி மொழி அகராதி குறிப்பிடுகிறது.

Sa: A prefix much used as the first part of compound Subjectives and adverbs and generally conveying the idea of possession or similarity

– A dictionary of Pali language, R.C. Childers.

சில எடுத்துக்காட்டுகளையும் அந்நூல் வழங்குகிறது. லஜ்ஜோ – வெட்கம், சலஜ்ஜோ – வெட்கம் கொண்ட, சேனோ – படை, சசேனோ – படை உடைய, ஹத்தி – யானை, சஹத்தி – யானை கொண்ட, பாரியோ – மனைவி, சபாரியோ – தனது மனைவியுடன்.

இந்த அடிப்படையில் ச + கலி = சக்கிலி என்ற வார்த்தைக்கு, சாவினை உடைமையாய்க் கொண்டவன் என்று பொருள். இவ்வார்த்தைத் தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது கூற்றன், கூற்றுவன் என்று வழங்கப்படும். இவ்வார்த்தைகள் களப்பிரரைக் குறிப்பிடுவதாக நாம் அறிவோம். (ம.மதிவண்ணன் ‘சக்கிலியர் வரலாறு’ நூலில், ‘சக்கிலியர்கள் யார்?’ (பக்.115) என்கிற பகுதியில் களப்பிரர்கள் குறித்து விளக்கியிருக்கிறார்.)

“சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில், ‘ஆர் கொண்ட வேர் கூற்றன் களந்தைக் கோன் அடியேன்’ எனக் கூறுகிறார். நம்பியாண்டார் நம்பி தமது திருத்தொண்டர் திருவந்தாதியில், ‘கோதை நெடுவேற் கூற்றுவனே’ என்கிறார்.

– புதிய தோக்கில் களப்பிரர் வரலாறு, பக். 13, ஆ. பத்மாவதி.

“பூலாங்குறிச்சி கல்வெட்டிலும் மன்னன் பெயர் சேந்தங் கூற்றன் என்றும், கூற்றஞ்சேந்தன் என்றும் கூறப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. எனவே, கூற்றன் என்ற பெயர் களப்பிர மன்னர்களால் சூடிக்கொள்ளப்பட்ட பெயர் என்று தெரிகிறது.”

– மேலது, பக். 94.

ஆக, சக்கலி என்கிற பெயர் கூற்றுவன் என்ற பெயருடைய பாலி வடிவம் என்பது புலனாகிறது. கத்தரி என்கிற சொல் நம் பயன்பாட்டில் கத்திரி என்று மாற்றமடைவது போல், சக்கலி என்பது சக்கிலி என்று மாறியிருக்கிறது. சக்கலி என்பதும் சக்கிலியர்களைக் களப்பிரர்களுடன் தொடர்புபடுத்துகிறது. அதோடு, கலி என்பது குலப்பெயர் அன்று. அதுவும் ஒரு பட்டமே. பாண்டி குலாசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், பட்டத்தன் என்பவை சோழர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள்.

தெலுங்கு குலகாலன், ராஷ்ட்ரகூட குலகாலன் என்பவையும் பட்டங்களே. அரசர்கள் இப்படித் தங்களை இயமனுக்கு இணையானவர்கள் என்று கூறிக்கொள்ளும், பட்டங்கள் சூடிக்கொள்ளும் வழக்கம் இங்கு உண்டு. அந்த அடிப்படையில்தான் சாவின் உரிமையாளன், எதிரிகளுக்குச் சாவை விரும்பும் நேரத்தில் அளிப்பவன் என்கிற விதமாய்க் களப்பிரர்கள் சூடிக்கொண்ட பட்டமே சக்கலி என்பதும் புலனாகிறது.

சக்கிலியர்கள் களப்பிரர்கள்தான் என்று நிறுவக் கூடிய வேறு சான்றுகளைப் பார்ப்போம்.

‘சக்கிலிய ஆட்சியாளர்கள்’ என்ற கட்டுரையில் (சக்கிலியர் வரலாறு, பக். 75) சேலம் மாவட்டம் கேத்தநாயக்கன் புதூரில் உள்ள பெரிய சக்கிலிச்சி ஏரியில் உள்ள மதகுக் கல்வெட்டுகள் குறித்துப் பார்த்தோம். அக்கல்வெட்டுகளை முதலில் படியெடுத்த முனைவர் கொடுமுடி ச.சண்முகன் அவை ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கிறார். தேனோலை இதழில் சக்கிலிய சாதியைச் சேர்ந்த அரசனால் வெட்டப்பட்டது அவ்வேரி, கல்வெட்டுக் குறிப்பிடும் அரசனும் சக்கிலிய சாதியைச் சேர்ந்தவன் எனக் குறிப்பிடுகிறார். கல்வெட்டு வாசகம் கீழ்க்கண்டவாறு:

“ஸ்ரீ கிடங்கில்
புலியார் மதன் நல்லி
ஓட்டை கண்டது”

கல்வெட்டு ஏரியின் தூம்பினை அமைத்தவன் பெயர் நல்லி என்றும்; அவனது தந்தையின் பெயர் பு(ல்)லி என்றும் குறிப்பிடுகிறது. ஆறாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் ஆட்சியில் இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படி ஆட்சியில் இருந்த களப்பிர அரசனின் தந்தை பெயர் புல்லி எனக் கல்வெட்டுக் குறிப்பிடுவதும், பெரிய சக்கிலிச்சியின் பெயரில் அவ்வேரி வெட்டப்பட்டிருப்பதும் புல்லியின் வழிவந்த களப்பிரர்கள் சக்கிலியரே என்ற செய்தியை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன.

ஆய்வாளர் நடன.காசிநாதன் களப்பிரர்கள் பௌத்தர்கள் என்று கூறுகிறார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து ஆட்சி செய்த களப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் ஆட்சிக் காலத்தில் பௌத்த நூல்கள் எழுதப்பட்டதற்கு அவ்வரசன் உதவியாய் இருந்தான். கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை காஞ்சிபுரம் பௌத்த மதத்தின் தலைமைப் பீடமாகத் தமிழ்நாட்டில் விளங்கியிருக்கிறது. அங்கிருந்து சீனா போன்ற கிழக்காசிய நாடுகளுக்குப் புத்த பிக்குகள் சென்று பௌத்தத்தைப் பரப்பியிருக்கின்றனர்.

அண்மையிலுள்ள நாகப்பட்டினத்திலும் புத்த ஸ்தூபம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கிறது. திருவாரூரிலும் பௌத்த மடங்கள் இருந்தன, அங்கு பல பௌத்த பிக்குகள் வாழ்ந்தனர் என சாக்கிய நாயனார் புராணம் தெரிவிக்கிறது. மேற்கூறிய காரணங்களை முன்னிட்டு, களப்பிரர்கள் பௌத்தர்களே என்று நடன.காசிநாதன் நிறுவுகிறார். சக்கிலியர்கள் களப்பிரர்கள் என்றால் அவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறுகிறார்.

ஆக, சக்கலி என்கிற பௌத்த பாலிச் சொல்லே சக்கிலி என்பதாகத் திரிந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சக்கிலி என்பதன் தமிழ் மொழிப்படுத்துதலே கூற்றன், கூற்றுவன் என்பதாக வழங்கப் பெற்றிருக்கிறது என்பதை முடிவுகளாக் கொண்டு ஆராய்கையில், அவை பௌத்த அரசர்களான களப்பிரர்களோடு தொடர்புடையது என்பதை அறிய முடிகிறது. இதன் மூலம் சக்கிலியர்கள் பௌத்தர்களே என்பதும், சக்கிலியர்களுக்குள் உள்ள பல்வேறு பிரிவுகளும் எவ்வாறு சமண, பௌத்தத்தின் நெடிய சிந்தனை மரபோடு உறவாடுகிறது என்பதும் நிறுவப்பட்டிருக்கிறது.

சான்றாதார நூல்கள்:

  • ஸ்டாலின் இராஜாங்கம் (தொ.ஆ), மே 2024, சிந்திக்கும் வாயில்: இன்றைய ஆய்வுகளில் அயோத்திதாசர், நீலம் பதிப்பகம்.
  • மதிவண்ணன்.ம (ஆ), செப் 2023, சக்கிலியர் வரலாறு, கருப்பு பிரதிகள் வெள்ளைக்குதிரை வெளியீடு.
  • சீனிவாசன்.ச (ஆ), 2021, தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும், பாலாஜி இண்டர்நேசனல் பதிப்பகம்.
  • இளங்கோவன்.எழில் (ஆ), 1998, அருந்ததியர் வரலாறு, ஆதித்தமிழர் பேரவை.
  • மாற்கு (ஆ), செப் 2008, அருந்ததியர் வாழும் வரலாறு, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி, பாளையங்கோட்டை.
  • அலாய்சியஸ்.ஞான (தொ.ஆ), 1999, அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதிகள் மி, மிமி, மிமிமி, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை
  • தேவராஜ்.ப (ஆ), டிச 2023, அருந்ததியர் வரலாறும் பண்பாடும், புதிய அவையம் எ பீர் ரிவீவ்டு ஜர்னல் & பைலிங்குவள் ஜர்னல் ஃபார் ஆர்ட்ஸ் அண்டு ஹிமானிட்டிவ்ஸ்.
  • ஸ்டாலின் இராஜாங்கம் (ஆ), 2020, பெயரழிந்த வரலாறு, காலச்சுவடு
  • எட்கர் தர்ஸ்டன் (தொ.ஆ), 2003, தென்னிந்திய குலங்களும் குடிகளும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்.
  • அருணன் (ஆ), 2010, கொலைக்களங்களின் வாக்குமூலம், வசந்தம் வெளியீட்டகம்.
  • டாக்டர் அம்பேத்கர் (ஆ), டிச 1993, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுதிகள், டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன், நல அமைச்சகம், இந்திய அரசு.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!