நாம் நினைத்த இடத்திற்கெல்லாம் இளையராஜா வரமாட்டார்.
இளையராஜா எங்கு கூட்டிப் போகிறாரோ அங்கேதான்
நாம் போகவேண்டும்.
அவருக்கு அப்படியென்ன செருக்கு
அதனால்தான் அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்க முடிவெடுத்தேன்.
அப்பொழுது இளையராஜா பான் பராக் மென்று கொண்டிருந்தார்
என்ன அவசரம்… துப்பிவிட்டு வருகிறேன் என்றார்.
அவரது ரசிக கோடிகள் இளையராஜா ஹிட்ஸ் லயிப்பில் கிடந்தனர்
நான் கூறியது தெரிந்திருந்தால் என்னை வெட்டிக் கூறு போட்டிருப்பர்.
எப்படியாவது இதை மறைக்க வேண்டும்
வாய் கழுவுவதற்கு வேகவேகமாக ஒரு குவளை மொண்டு வர
என்னைக் கோபமாகப் பார்த்துப் பித்தளைக் குவளையைப் புறங்கையால்
தட்டிவிட்டார்.
அவர் இளையராஜா எது வேண்டுமானாலும் செய்வார்.
இப்பொழுது உருகுகிற மனநிலையில் இல்லை என்றால் கூட
வைத்து உருக்காமல் விடமாட்டார் .
விபத்திற்குள்ளாகிக் கிடக்கும் பேருந்து அங்கும் ஒருவரைப்
பிசைந்து கொண்டிருப்பார்
கொஞ்சங் கூட இங்கிதம் தெரியாத மனிதர்
இங்குதானே கார்த்திக் வசீகரித்துக் கொண்டிருந்தார்.
இங்குதானே ரேவதி குத்தலாகப் பேசினார்.
இங்கெல்லாம்தானே மௌன ராகத்தின் ஹைலைட்டான பிஜிஎம் என
மணிரத்னம் படத்தில் வரும் காஸ்மோபாலிடன் நகர வீதிகளில்
என்னை ஏமாற்றியவர்தானே இந்த இளையராஜா
மனுஷன் என்னையே பார்த்தபடி இருந்தார்.
இப்படித்தான் அவரைப் பக்கத்திலிருந்து பார்க்க வேண்டுமென்ற ஆசை
வேறென்ன பெரிய மயிரு காரணங்கள்
அவரது வாயில் இன்னும் பான் பராக் மணம் அடித்தது.
இப்பொழுது இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை
மன்னித்துவிடுங்கள் ராஜா
பான் பராக் சுகம் இளையராஜாவை என்ன செய்ய முடியும்
இப்படிச் சில்லரைச் சங்காத்தங்களை அடித்து காலி செய்யும்
ஒன்றுக்காகத்தான்
நாற்பது ஆண்டுகளாக நம்மை இப்படிப் பிழிந்துகொண்டிருக்கிறார்
வேறு எதற்காக அவர் இப்படி இசைக்க வேண்டும்.
நன்றி: கனலி இணைய இதழ்
lselvasankarand@gmail.com




