லண்டன் தெருக்கள் ஒன்றும் தங்கத்தால் செதுக்கப்படவில்லை.
அவை தோல்விகளாலும் நிரம்பியுள்ளன;
டப்ளினில் இருந்ததைப் போலவே,
இவர்களும் பானம் நிரம்பியவுடன் எழுந்து நகர்கிறார்கள்.
நேற்று ஃப்ளீட் தெருவில் மதுவிடுதியில் ஒருவரைச் சந்தித்தேன்.
என் கண்களை நோக்கி என்னோடு கைகுலுக்கியவர்
விசமத்தனமுள்ள ஆனாலும்
நல்ல சகவாசம் நிறைந்தவராக இருந்தார்:
நான் இரட்டை விஸ்கியைப் பருகியபடி,
இந்தப் பூமியின் மிக அற்புதமான இடமான
டப்ளினில் இருந்து வந்தவன் என்றேன்.
ஹாரி கெல்லி, ஜாக் சல்லிவன், பிராடி போன்றோர்
எப்படி இருந்தவர்கள்…
மற்றும் கல்லிகன், ஒரு சிறந்த டப்ளினர் அல்லவா…?
மேலும்,
இங்கு வாழும் மிகப் பெரிய கவிஞரின் பெயரை
நான் உங்களுக்குச் சொல்கிறேன் என முணுமுணுத்தார்,
அத்துடன் தன்னை
மான்செஸ்டருக்கு அருகில் வசிப்பதாகவும்,
சற்றுப் பிரபலமானவர் என்றும் கூறிக்கொண்டார்,
நான் குறுக்கிட்டேன். ஆடன் பற்றி தெரியுமோ?
அவர் என்னைப் புறக்கணித்தார் –
*யீட்ஸ் ஒரு இரண்டாம் தரமான கவிஞர்,
ஹிக்கின்ஸிடம் ஒட்டுதலே இல்லை –
நான் கேட்டுக்கொண்டே டப்ளின் பக்கம் திரும்பினேன்.
உங்களுக்கு நிச்சயம் மற்றொரு இரட்டை விஸ்கி
வேண்டும் என்றவர்,
தன் கண்களில் தேசபக்தியின் கண்ணீருடன் விம்மினார்,
மீண்டுமொருமுறை என் கையைத்
தனது கையால் பிடித்துக்கொண்டு
‘டப்ளின் போன்றதொரு இடம் எங்கும் இல்லை’ என்றார்.
அவரது நட்பு காயப்படுத்தப்பட்டது,
ஆனாலும் நான் புகார் செய்யத் துணியவில்லை,
ஏனென்றால், அது அநாகரிகமான ஒன்றாகிவிடும்.
இன்னும் இந்த நேர்மையற்ற நல்ல குணம்தான்
டப்ளினிலும் என்னைக் காயப்படுத்தியது.
அது தூக்கிலிடப்படவிருக்கும் ஒரு மனிதனின்
கேலிக்குரிய நகைச்சுவை.
ஆனால், லண்டன் அவரைத் தூக்கிலிடவில்லை;
தான் எழுதிய புத்தகங்களைக் கனவு காண
மது அவரைக்
கிடைமட்டமாகப் படுக்க வைத்தது.
மீண்டும் அவர் டப்ளினுக்குத் திரும்புவார்,
நேற்றைய புத்திசாலித்தனங்களையும்
ஜார்ஜ் மூரின் மேற்கோள்களைப் பற்றிப் பேசுவதிலும்
மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பார்.
தான் தோல்வியடைந்ததைச் சற்றும் பொருட்படுத்தாமல்.
குறிப்பு
இந்தக் கவிதையில் ஹாரி கெல்லி, ஜாக் சுல்லிவன், பிராடி போன்ற பெயர்கள் சுருக்கப்பட்ட பெயராகப் பயன்படுத்தியிருந்தாலும், அவர்களின் திருத்தமான பெயர்களை ஹாரி கெர்னாஃப், சீமஸ் ஓ சுல்லிவன், ராபர்ட் மைர் ஸ்மைலி என்று குறிப்பிடுகிறார் அண்டோனெட் குயின்.
ஆசிரியர் குறிப்பு
ஐரிஷ் கவிஞரான பேட்ரிக் கவனாஹ், ஐரிஷ் மாகாணமான உல்ஸ்டரில் உள்ள வடக்கு மாவட்டமான கவுண்டி மோனகனின் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்தவராவார். 12 வயதிலேயே பள்ளியைவிட்டு வெளியேறிய காவனாஹ், தனது எழுத்து வாழ்க்கையை ‘ஐரிஷ் இலக்கிய மறுமலர்ச்சி’யின் கடைசி ஆண்டுகளில் தொடங்கி கவிதை, புனைகதை, சுயசரிதை ஆகியவற்றோடு ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். ஐரிஷின் மூத்த கவியான வில்லியம் பட்லர் ஈட்ஸ்க்குப் பின்னே, கவிதையின் போக்கினை மடைமாற்றியவர்களில் பேட்ரிக் கவனாஹ் குறிப்பிடத்தகுந்தவர். மரபை மீறுதல், எளிமையான வாழ்வினைக் கவிதைப்படுத்துதல் போன்றவை இவரது கவிதைகளுக்கேயான சிறப்பம்சங்களாகும். மேற்கண்ட இந்தக் கவிதைகள் யாவும் பெங்குவின் வெளியீடான ‘Collected Poems of Patrick Kavanagh, edited by Antoinette Quinn’ என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும்.