தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு வானம் கலை இலக்கிய நிகழ்வின் ‘வேர்ச்சொல்’ தலித் இலக்கியக் கூடுகை ஏப்ரல் 12, 13 ஆகிய இரு தினங்கள் சென்னை அடையாறில் உள்ள ராஜரத்தினம் முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. இந்தக் கூடுகையில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வெவ்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினர். நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக நீலம் பண்பாட்டு மையம் இந்நிகழ்வை ஒருங்கிணைத்துவருகிறது.
ராமச்சந்திர குஹா
நிகழ்வின் தொடக்கமாக வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா ‘பாபாசாகேப் அம்பேத்கரைக் கொண்டாட வேண்டிய தேவை’ எனும் தலைப்பில் நோக்க உரை நிகழ்த்தினார். அதில் “பாபாசாகேப் அம்பேத்கர் பன்முக ஆளுமை கொண்டவர். அவரைப் பற்றி மட்டுமே பேச நினைத்திருந்தேன். ஆனால், இங்கு இயக்குநர் பா.இரஞ்சித் பேசும்போது கிரிக்கெட் வீரர் பல்வங்கர் பாலு குறித்து நினைவுபடுத்தியதால், பாலு குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். விரைவில் பல்வங்கர் பாலு குறித்து இயக்குநர் இரஞ்சித் திரைப்படமாக எடுப்பார் என நம்புகிறேன். இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர் பல்வங்கர் பாலு. ஆனால், அவர் குறித்த வரலாறு இன்னும் எழுதப்படாமலேயே உள்ளது. 1930களில் இந்தியாவில் பிரபலமான விளையாட்டாக கிரிக்கெட் மாறியது. தொடக்கத்தில் கிரிக்கெட் அணிகள் மதரீதியாகவே பிரிக்கப்பட்டிருந்தன. அப்போது மும்பையில் ஐரோப்பியர், இந்து, முஸ்லிம், பார்ஸி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் பாலு மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்தார். அவர் மிகச்சிறந்த ஸ்பின் பௌலர். அப்போதெல்லாம் பிராமணர்கள் பேட்ஸ்மேன்களாகவும் தலித்துகள் பௌலர்களாகவுமே இருந்தனர். இந்து அணியில் விளையாடிய பாலு 1911இல் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன்னை மிகச் சிறந்த வீரர் என நிரூபித்தார். இவ்வளவு பெரிய வீரராக, இலட்சோப லட்ச ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவராக இருந்தும் அவருக்கான குடிநீர் மண் குடுவையில் விளையாட்டு மைதான ஓய்வறையில் இல்லாமல் வெளியே வைக்கப்பட்டிருந்தது.
அப்போது பம்பாய் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த பாபாசாகேப் அம்பேத்கர், பல்வங்கர் பாலுவை வாழ்த்தி செய்தித்தாளில் அறிக்கை வெளியிட்டார். ஆய்வாளர் எலீனர் ஸெலியத்தின் கூற்றின்படி, இந்த அறிக்கையே பாபாசாகேப் அம்பேத்கரின் முதல் சமூகச் செயல்பாடாக இருந்தது. 1930களில் நான்கு முனை கிரிக்கெட் போட்டி தொடங்கவிருந்த நேரத்தில் இந்து அணியின் கேப்டன் யார் என்று செய்தித்தாள்களில் விவாதிக்கப்பட்டது. பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த எம்.டி.பாய் என்பவர் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சார்ந்த கௌடா சரஸ்வத் பிராமணர் சங்கம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்தியது. இதில் கலந்துகொண்ட எம்.டி.பாய், “எனக்குப் பாராட்டு விழா எடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம் இந்தப் பாராட்டிற்குத் தகுதியானவர், திறமையானவர் பல்வங்கர் பாலுதான்” என்று பேசினார். கிரிக்கெட் அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரே தன்னைவிட தகுதியான வேறொருவர் இருக்கிறார் என்று பேசியது அதுவே முதன்முறை. 1937இல் நடந்த தேர்தலில் பாபாசாகேப் அம்பேத்கர் போட்டியிட்டார். அம்பேத்கரைத் தோற்கடிக்க வேண்டும் என்று சர்தார் வல்லபாய் பட்டேல் அவருக்கு எதிராக பல்வங்கர் பாலுவை நிறுத்தினார். வேட்பாளராகப் போட்டியிட்ட பாலு பேசும்போது, “அம்பேத்கர் அவர்கள் மிகப்பெரிய அறிவாளி. வெளிநாட்டில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்” என்று பாராட்டினார்.
1994ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 125ஆவது ஆண்டுக் கருத்தரங்கம் பெங்களூரில் நடைபெற்றது. ஆஷிஷ் நந்தி, யூ.ஆர்.அனந்த மூர்த்தி போன்ற அறிவுஜீவிகள் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றினர். கருத்தரங்கின் இறுதி நாளில் பேசிய தலித் கன்னட எழுத்தாளர் தேவலூர் மகாதேவா, “இங்கே காந்தியின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் அவர் எளிமையான ஆடை அணிந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. பணக்கார திவான் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், லண்டனில் பட்டம் பெற்றவர், தனது வாழ்வைத் தியாகம் செய்தார் என்று பார்க்கப்படுகிறது. காந்தியின் உடை மாற்றம் தியாகம் எனப் போற்றப்படுகிறது. ஆனால், அம்பேத்கரின் சிலைகள் கோட்டு சூட்டுடன் வடிவமைக்கப்படுகின்றன. வரலாற்றில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட கௌரவமான உடைகளை அணிந்திருப்பதுதான் அம்பேத்கரின் சிறப்பு. பண்பாடு, அரசியல், சமூக ரீதியாக ஒரு சமூகத்திற்கு மறுக்கப்பட்ட ஒரு விஷயத்தைச் செய்து காட்டுவதன் மூலம் ஒரு கலகக்காரராக அம்பேத்கர் கோட்டு சூட்டுடன் இருக்கிறார்”, என்று குறிப்பிட்டார். “அதுவரை எனது குடும்பப் பின்னணி காரணமாக காந்தி, நேரு ஆகியோரின் பங்களிப்புகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்திவந்த நான், தேவலூர் மகாதேவாவின் பேச்சைக் கேட்ட பின்பு அம்பேத்கர் குறித்து வாசிக்க ஆரம்பித்தேன். அம்பேத்கர் எழுத்துகளிலேயே நான் இங்கு குறிப்பிட விரும்புவது ‘சாதி ஒழிப்பு’ எனும் நூல்தான். இந்து சீர்திருத்தவாதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் நிகழ்த்தப்படாத ஓர் உரைதான் ‘சாதி ஒழிப்பு’ எனும் பனுவல். அந்நூலில் சாதி மறுப்பு திருமணங்களின் மூலமே கலப்புச் சமூகத்தை உருவாக்க முடியும். இதன் வழியாக சாதியை ஒழிக்க முடியும் என்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். ஆனால், 70 ஆண்டுகளுக்குப் பின்பும் அது சாத்தியப்படாமல் போகிறது. இந்தியாவில் நடக்கக்கூடிய 95 சதவீத திருமணங்கள் சொந்த சாதிக்குள்ளேயே நடைபெறுகின்றன. அந்த நூலில் அம்பேத்கர் சொல்கிறார் “நீங்கள் இந்துக்களிடம் போய் சொல்லுங்கள், மதம்தான் சாதி குறித்த புனிதத்தை உருவாக்கியிருக்கிறது. ஆகவே, அவர்கள் பின்பற்றக்கூடிய மதம்தான் பிரச்சினை என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். மதத்தைப் பின்பற்றுகிற மக்கள் பிரச்சினை அல்ல, சாதியை நியாயப்படுத்துகிற மதம்தான் நாம் அழிக்க வேண்டியதாக இருக்க வேண்டும். இந்து சாஸ்திரத்தின் அடிநாதமே சாதி அமைப்புதான். ஆகவே இந்து சாஸ்திரங்களை ஒழிக்காமல், இந்து மதத்தை ஒழிக்காமல், சாதியை ஒழிக்க முடியாது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்”. அந்நூலில் உள்ள இன்னொரு முக்கியமான கருத்து என்னவென்றால், 1936இல் பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு எதிராக காங்கிரஸில் சேர மறுத்த பாபாசாகேப் அம்பேத்கர், “அரசியல் கொடுங்கோன்மையை விட சாதியக் கொடுங்கோன்மையே மோசமானது. அரசியல் சீர்திருத்தம் பேசுவதை விட சமூகச் சீர்திருத்தம் பேசுவதற்கே அதிக தைரியமும் நெஞ்சுரமும் தேவைப்படுகிறது” என்றார்.
m
‘புதிய உள்ளீடு நவீன மொழி’ எனும் தலைப்பில் அழகிய பெரியவன் பேசினார். பி.பாலசுப்பிரமணியன் நெறியாள்கை செய்தார். அழகிய பெரியவனின் ‘எட்டாம் வகுப்பு அ பிரிவில் ஒரு தமிழாசிரியர்’, ‘நினைவுப் பாதை’ ஆகிய சிறுகதைகளைச் சொல்லி உரையாடலைத் தொடங்கினார். அழகிய பெரியவன் பேசும்போது, “‘நினைவுப் பாதை’ நீலம் இதழில் வெளியானது. அது எனக்கு மிகவும் பிடித்த கதையாகும். தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. ஆனால், பாதிக்கப்படும் பெண்ணை எதிராகச் சித்திரிப்பது, கொல்லப்படும் தலித் ஆணை பரிதாபத்திற்குரியவனாகக் காட்டுவது என்ற போக்கு இங்கு நிலவுகிறது. உதாரணமாக இளவரசன், திவ்யா விஷயத்தில் அவர்கள் நீதிமன்றத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் விஷயம் இந்தியாவின் கொடூரமான சாதிய வன்மத்தைக் காட்டுவதாகவே இருந்தது. ஆனால், இயல்பாகவே அவர்கள் ஒருவரையொருவர் காதலித்து வாழவே விரும்பினர். இன்று இளைஞர்கள் மத்தியில் சாதி கடந்த காதல் திருமணம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவும், இயல்பான ஒன்றாகவும் மாறியிருக்கிறது. இதை மனதில் கொண்டுதான், ஒரு பெண் ரிவெஞ்ச் எடுத்தால் என்னவாகும் என்று இந்தக் கதையை எழுதினேன். மேலும் தலித்துகள் இந்தச் சாதிய விஷயங்கள் குறித்து எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைவிட தலித் அல்லாதவர்கள் பார்வையில் இந்தச் சமூகம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்றொரு புனைவை எழுத வேண்டும் என்பது முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது” என்றார். கல்விப்புலத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து ஏன் பேச வேண்டும் என்ற கேள்விக்கு, “இன்று பள்ளிக்கூடங்கள் ஆகட்டும், பல்கலைக்கழகங்கள் ஆகட்டும் ஆசிரியர்கள் மத்தியில் வாசிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஓர் ஆசிரியர் ஏன் வாசிக்க வேண்டும் என்று கூட அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஒரு கல்லூரி பேராசிரியருக்குச் சிறுகதைக்கும் குறுநாவலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இவர்கள் எப்படி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பார்கள் என்பதே நமக்கு ஐயமாக உள்ளது. இந்துத்துவக் கருத்தியல் எவ்வாறு பொதுமக்களிடையே பரவியுள்ளதோ, அதே அளவிற்கு ஆசிரியர்களிடமும் ஊடுருவியுள்ளது. பாகுபாடு கொண்ட அந்தக் கருத்தியலைத்தான் மாணவர்களிடமும் அவர்கள் போதிக்கிறார்கள். இந்தச் சூழலில், அம்பேத்கரையே வாசிக்காத ஒரு தலித்தல்லாத ஆசிரியர் அம்பேத்கர் குறித்துப் பாடம் எடுத்தால் எவ்வாறு எடுப்பார் என்ற கற்பனையிலிருந்தே இந்தச் சிறுகதையை நான் எழுதினேன்.” என்றார்.
m
‘மலையாள இலக்கியத்தில் தலித் – பழங்குடியினர் குரல்’ என்னும் தலைப்பில் வினில் பால், ரேணுகுமார், சுகுமாரன் சாலிகத்தா ஆகியோர் கலந்துரையாடினர். ரீனா ஷாலினி ஒருங்கிணைத்தார். “சமீபத்தில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் காட்சிப்படுத்தப்பட்டதற்காகப் பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து நடிகர் மோகன் லால் சமூக ஊடகங்களில் மன்னிப்பு கேட்டிருந்தார். 1973ஆம் ஆண்டு வெளியான ‘நிர்மல்யம்’ எனும் எம்.டி.வாசுதேவ நாயரின் திரைப்படத்தில், கருவறையில் தேவியைப் பார்த்து எச்சில் உமிழும் ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும். அந்த மரபிலிருந்து இன்று சமூக ஊடகங்களில் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு வந்து நிற்கிறோம். இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வியை ஷாலினி முன்வைத்தார். இதற்குப் பதில் அளித்த ரேணுகுமார், “முற்போக்கான, கல்வி அறிவு பெற்ற சமூகம் என்றும் சொல்லப்படுகிற மலையாள சமூகத்தில் படைப்புச் சுதந்திரம் என்பது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. வலதுசாரிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்றார்.
பழங்குடிகளின் படைப்புகள் குறித்து சுகுமாரன் சாலிகத்தாவிடம் விவாதித்தபோது, கேரளாவில் 32 பழங்குடி மொழிகளில் எழுத்தின் மூலம் பதிவு செய்யும் வழக்கம் இருக்கிறது. அதில் ஒன்றான ராவுலா மொழியில்தான் சுகுமாரன் எழுதுகிறார்.
இலக்கியத்திற்குப் பெயர்போன மலையாள உலகில் தலித் குரலுக்கான இடம் தாமதமாகவே கிடைத்தது என்றும், இன்றளவும் தலித் பழங்குடி இலக்கிய வகைகளுக்கு பங்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலில் முழு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதையும் தெரிவித்தனர். இடதுசாரி சித்தாந்தம் மேலோங்கியிருக்கும் கேரள மாநிலத்தில் வர்க்க வேறுபாடுகளைக் களைவதன் மூலம் சாதி வேறுபாடுகளையும் நீர்த்துப்போகச் செய்துவிட முடியும் என்று இடதுசாரிகள் நம்பிவருகின்றனர் என்று தெரிவித்தனர்.
m
‘நவீன ஊடக யுகத்தில் தலித்துகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஆய்வாளர் அ.தெய்வேந்திரக் குமார் ஆகியோர் உரையாடினர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெகுஜன ஊடகங்களில் தலித்துகளுக்கான இடம் குறித்த விவாதம் நடைபெற்றுவருகிறது. வெகுஜன ஊடகங்களில் தலித்துகளின் பிரதிநிதித்துவமின்மை காரணமாக அவர்கள் குறித்த செய்திகள் குறைபாடு உடையதாக இருக்கின்றன என்று எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்தன. இந்தியச் செய்தி அறைகளில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் தலித்துகள் இல்லை என்பதைப் பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இதனால் தலித்துகள் மீதான வன்முறை, அவர்கள் வாழ்வியல் குறித்தான செய்திகள் போன்றவை வெகுஜன ஊடகங்களில் இடம்பெறுவதில்லை. இதுகுறித்துப் பல ஆய்வுக் கட்டுரைகளும் விவாதங்களும் நடைபெற்றுவந்தன. இந்தச் சூழலில் தலித்துகள் குறித்த செய்திக்கான வெற்றிடத்தைக் கடந்த பத்தாண்டுகளாக சமூக ஊடகங்கள் நிரப்பிவருகின்றன. சமூக ஊடகங்களின் மூலம் தலித் மக்களுக்கான பிரச்சினைகள் பொதுக் கவனம் பெற்றன. வெகுஜன ஊடகங்களுக்கு மாற்றாக சமூக ஊடகங்களைத் தலித் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். ‘சமூக ஊடகத் தளங்கள் வழங்கியிருக்கக்கூடிய எழுத்து, பேச்சு சுதந்திரம் உண்மையான சுதந்திரம்தானா?’ என்ற கேள்வியில் இந்த உரையாடல் தொடங்கியது. “சமூக ஊடகங்கள் மூலம் பெரும் திரளான மக்களைச் சாமானியர்கள் தொடர்புகொள்ள முடிகிறது. சிலநேரம் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவதன் மூலமாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடிகிறது. சமூக ஊடகங்களில் கவனம் பெற்றதாலேயே வெகுஜன ஊடகங்கள் வேறு வழியில்லாமல் அது குறித்துச் செய்திகளை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றன. இதுபோன்ற நன்மைகள் சமூக ஊடகங்களால் நிகழ்ந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இது முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுத் தரும் என்பது ஐயமே. தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களைக் கண்காணிப்பது அரசுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் எளிதாகிறது. அல்கோரிதம் எனும் படிமுறை தீர்வு நம்மை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே வைத்திருக்கிறது. முன்பெல்லாம் ஊடக நிறுவனங்களின் முதலாளிகளை எதிர்த்துப் போராடிய நாம், இனி சமூக வலைதளங்களின் தொழிற்நுட்பத்திற்கு எதிராகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்று விவாதித்தனர்.
m
‘சிறார் படைப்புகளில் இலக்கியக் கூருணர்வு’ எனும் தலைப்பில் எழுத்தாளர் வ.கீதா, கல்விச் செயல்பாட்டாளர் சாலை செல்வம் ஆகியோர் உரையாடினர். சிறார் எழுத்துகள் குறித்து வெளியான நூல்கள், அவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சித்திரங்கள், எழுத்துகள் போன்றவை குறித்து உரையாடினர். தமிழில் குழந்தை எழுத்து எனும் வகைக்குத் தங்களது பதிப்பகம் மூலம் செய்த பங்களிப்புகளைக் குறிப்பிட்டுப் பேசினர்.
m
‘சமூக அரசு வன்முறையும் ஊடகங்கள் எதிர்கொள்ளும் விதமும்’ எனும் தலைப்பில் பத்திரிகையாளர் பொன் வசந்த், சமூகச் செயல்பாட்டாளர் இரா.முருகப்பன் ஆகியோர் உரையாடினர். நீலம் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கர் ஒருங்கிணைத்தார். “சாதிய வன்முறைகள் எங்கு நடந்தாலும் அது முறையாக வழக்கு பதிவு செய்யப்படுகிறதா, அந்த வழக்கின் விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது போன்ற விஷயங்களைத் தொடர்ச்சியாகக் கவனித்துவரக்கூடியவர் நீங்கள். சாதிய வன்கொடுமைகள் குறித்துச் செய்தித்தாள்களில் வெளிவருவதை விட அதிகமான தகவல்களை நீங்கள் வைத்திருப்பீர்கள். ஆனால், ஊடகங்களில் தலித், பழங்குடி மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் குறித்து தங்களது பார்வை என்ன?” என்ற கேள்வியை வாசுகி பாஸ்கர்
இரா.முருகப்பனிடம் முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த இரா.முருகப்பன், “ஊடகத்தின் முக்கியத்துவம் எல்லோருக்கும் தெரியும். சில நேரம் இந்தச் செய்தியாளர் இந்தச் செய்தியைப் போட மாட்டார் என்று எங்களுக்குத் தெரியும். இருந்தாலும், அவருக்குச் செய்தியைக் கொடுத்துக்கொண்டே இருப்போம். தலித், பழங்குடி மக்கள் மீதான வன்முறை சம்பவங்களில் எவ்வாறு காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் நடந்துகொள்கிறது என்பதை விளக்கி எழுதி அனுப்புவோம். ஏன் இதைத் தொடர்ந்து செய்கிறோம் என்றால், ஊடகத்தில் ஒரு செய்தி வரும்போதுதான் அது அரசின் கவனத்தைப் பெறுகிறது. ஒருசிலர் சில விஷயங்களுக்குப் பயப்படுவர். ஒருசிலர் சில விஷயங்களுக்குப் பயப்பட மாட்டார்கள். ஆனால், எல்லோருமே பயப்படும் ஒரு விஷயம் என்றால் அது நம் மீது யாரும் புகார் சொல்லிவிடுவார்கள் என்பதுதான். குறிப்பாக, அரசு அதிகாரிகளுக்கு இந்தப் பயம் இருக்கும். இதைத்தான் நாம் ஊடக செய்திகளின் மூலம் பயன்படுத்திக்கொள்கிறோம். எந்த ஓர் அரசு அதிகாரியும் மாட்டிக்கொள்ளாத வரையில், புகாராகச் சொல்லாத வரையில் அவர் தொடர்ந்து தவறு செய்துகொண்டேதான் இருப்பார். ஆனால், ஒருமுறை அவர் மீது புகார் அனுப்பப்பட்டால் நிச்சயம் அவர் பயப்படுவார். ஒருமுறை ஆங்கில இந்து நாளிதழில் 25 தலித் குடும்பங்கள் வழிப்பாதையைப் பயன்படுத்த முடியவில்லை என்பது குறித்துச் சிறியதாக ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அது அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் கவனத்திற்குச் சென்று, அவர் நேரடியாகத் தலையிட்டு அந்தப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டு 25 தலித் குடும்பங்கள் பயன்பெற்றன. அதேபோல ஒருமுறை காலில் சங்கிலி கட்டப்பட்டுக் கொத்தடிமையாக வைக்கப்பட்ட பழங்குடி ஒருவர் குறித்த செய்தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டது. விளைவாக, கொத்தடிமையிலிருந்து அவர் மீட்கப்பட்டார். இப்போது எந்தச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததோ அது செய்தியாக வருவதில்லை. எவை செய்தி இல்லையோ அவை செய்தியாக வந்துகொண்டிருக்கின்றன. இன்று ஊடகங்களில் மூன்று விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒன்று பாலியல் சம்பந்தப்பட்ட செய்திகள், இரண்டு சாமியார், மூன்றாவது யார் மீதும் எந்தக் குற்றமும் சொல்லாமல் உள்ள செய்தி” என்றார். அடுத்ததாக 2013ஆம் ஆண்டு மரக்காணத்தில் நடந்த கலவரம் குறித்து அவர் பேசியபோது, “தலித் மக்களின் குடியிருப்புகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் 32 சாதி இந்துக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் எதிர் வழக்காக இரண்டு தலித் இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாதி இந்துக்கள் மீதான வழக்கு 2013ஆம் ஆண்டில் பதியப்பட்டாலும் 2016ஆம் ஆண்டில்தான் விசாரணைக்கு வந்தது. தலித் இளைஞர்கள் மீதான வழக்கில் 2016இல் அவர்களுக்குத் தண்டனையே வழங்கப்பட்டுவிட்டது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டின் சிபிசிஐடி போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இப்போது உச்ச நீதிமன்றத்தில் அந்த இளைஞர்களுக்குத் தண்டனை கிடைக்கலாம் அல்லது விடுவிக்கப்படலாம் என்ற நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்ட தலித்துகள் மீது போடப்பட்ட வழக்கில் அரசு இவ்வளவு வேகமாகச் செயல்படுகிறது. ஆனால் தலித்துகள் தாக்கப்பட்டனர், அவர்களின் குடியிருப்புகள் எரிக்கப்பட்டன, பேருந்துகள் எரிக்கப்பட்டன. இவையெல்லாம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்திய சாதி இந்துக்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கடந்த மார்ச் 28ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சுமத்தப்பட்ட 32 சாதி இந்துக்களும் மரக்காணம் கலவரம் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை அரசும் நீதிமன்றமும் எவ்வாறு கையாளுகின்றன என்பதை இந்த வழக்கிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.” என்றார் இரா.முருகப்பன். இதில் பேசிய ஊடகவியலாளர் பொன் வசந்த், “இதுபோன்ற செய்திகள் ஊடகங்களில் இடம்பெறுவதில் ஒரு வெற்றிடம் இருப்பதை நாம் காண முடிகிறது. ஆங்கில ஊடகங்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் இடையிலான வித்தியாசங்களும் இருக்கின்றன. ஆனால், நிறுவன ரீதியாக இதுபோன்ற செய்திகள் இடம்பெறக் கூடாது என்று திட்டமிட்டு யாரும் வேலை செய்வதாகத் தெரிவதில்லை. இதற்கு அமைப்பு ரீதியான சில காரணங்களும், சில நடைமுறைக் காரணங்களும் இருக்கின்றன” என்றார்.
m
‘தலித் கிச்சன்ஸ் ஆஃப் மராத்வாடா’ என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் சாஹு பட்டோல் உணவுப் பழக்கமும் சாதிய அமைப்பும் குறித்து உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து கவிதை வாசிப்பு அரங்கில் மௌனன் யாத்ரிகா, அரச. முருகபாண்டியன், தீபிகா நடராஜன், உதயபாலா, தே.தியாகு ஆகியோர் கவிதை வாசித்தனர்.
m
‘நவீன இலக்கியத்தில் நாட்டாரியலின் தாக்கம்’ எனும் தலைப்பில் கவிஞர் வெய்யில் உரையாற்றினார். கவிஞர் வினையன் நெறியாள்கை செய்தார். “நாட்டாரியல் என்கிற கோட்பாடு உருவாகி ஒன்றரை நூற்றாண்டு ஆகிவிட்டது. காலனிய ஆதிக்கத்திற்குக் கீழிருந்த நாடுகள் விடுதலை அடைந்த பின்பு தங்களுடைய அடையாளங்களைத் தேட முனைந்தபோதுதான் இந்த நாட்டாரியல் தொடங்கியது” என்றார் வெய்யில். மேலும், “சங்க இலக்கியம் என்பதுகூட அதற்கு முந்தைய பழங்குடி சமூகத்தின் வாழ்க்கையை, இயக்கத்தை, காதலைச் செவ்வியல்படுத்தியது அல்லது செவ்வியல் மொழிக்கு மொழிபெயர்த்தது என்று சொல்லலாம். அதில் இருக்கக்கூடிய அழகியல், அனுபவங்கள், உணர்ச்சிகள் நாட்டார் தன்மையுடையது. கபிலரின் பல பாடல்களில் நாட்டார் சொற்கள் உள்ளன. சின்னச் சின்ன நாட்டாரியல் நம்பிக்கைகள் கூட சங்க இலக்கியத்தில் உள்ளன. புறநானூற்றுப் பாடல்களில் யாகமும் உள்ளது, நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு வழிபாடு இல்லை என்பதும் உள்ளது.” என்று தனது உரையை நிகழ்த்திச் சென்றார் வெய்யில்.
m
இரண்டாவது நாள் நிகழ்வின் முதல் அமர்வாக ‘நெருப்பருந்தும் வேர்கள் – சாதியெதிர்ப்பு இலக்கியத்தில் பெண்கள்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் ஜெயராணி, எழுத்தாளர் சாரு ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வைப் பத்திரிகையாளர் கிருத்திகா சீனிவாசன் ஒருங்கிணைத்தார். எழுத்தாளர் ஜெயராணி, “எனது கதைகளில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் நான் அன்றாட வாழ்வில் சந்தித்த, உரையாடிய நபர்களாகவே இருக்கின்றனர். நிஜ வாழ்விலிருந்துதான் இந்தப் புனைவைப் பெற்றுக் கொள்கிறேன்.” என்றார். சாரு பேசும்போது, “இன்று கல்வியில் மிகப்பெரிய வேறுபாடு நிலவுகிறது. அரசுப் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் கல்விக்கும், முதல் தரப் பள்ளிக்கூடங்கள் என்று சொல்லப்படும் பள்ளிக்கூடங்களில் சொல்லித் தரப்படும் கல்விக்கும் இடையே பாரதூரமான வேறுபாடு உள்ளது. சாதி குறித்து இந்தப் பெண்கள் பேசும் விஷயங்களுக்கும் நான் உணர்ந்த விஷயங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் எனக்குத் தெரிய வந்தது. ஆகவேதான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆங்கிலத்தில் எழுதும்போது எனது நிலம், சமூக அடையாளம் போன்றவற்றை நான் வெளிப்படுத்துவதில்லை” என்றார்.
m
‘தெலுங்கின் தலித், ராயலசீமா, குயர் இலக்கியப் போக்குகள்’ குறித்து சொலோமோன் விஜயகுமார், பண்டி நாராயண ஸ்வாமி ஆகியோர் உரையாற்றினர். இந்த அமர்வை ஒருங்கிணைத்தும் மொழிபெயர்த்தும் வழங்கினார் சண்முக. விமல் குமார் (றாம் சந்தோஷ் வடார்க்காடு). அமர்வை அறிமுகப்படுத்திப் பேசிய விமல் குமார், ராயலசீமா என்னும் நிலவியலுக்கான முக்கியத்துவத்தை விளக்கினார். “தெலங்கானா போன்று ராயலசீமாவையும் மையமாகக் கொண்டு தனி மாநிலக் கோரிக்கை அங்கு இருந்துவருகிறது. அதில் பண்டி நாராயண ஸ்வாமி முக்கியமானவர். சொலோமோன் விஜயகுமார், பண்டி நாராயண ஸ்வாமி ஆகிய இருவரின் எழுத்துகளிலும் ராயலசீமா நிலவமைப்பு குறித்த பதிவுகளை அதிகமாக நாம் காண முடியும். இந்த வட்டாரத்தின் வெக்கை, அனல், வறட்சி போன்ற சொல்லாடல்கள் இவர்களது எழுத்தில் அதிகமாக இடம்பெற்றிருக்கும். இவர்களது எழுத்துகளில் இந்த வட்டார வழக்குகள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். பண்டி நாராயண ஸ்வாமி ‘சப்த பூமி’ எனும் நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர். ராயலசீமாவின் வரலாற்றை எழுத முனைந்த பண்டி நாராயண ஸ்வாமிக்கு அது தலித் வரலாறாகதான் இருந்தது” என்றார் விமல் குமார். எழுத்தாளர்கள் இருவரும் பேசும்போது, மூல திராவிட மொழியின் பெரும்பாலான பண்புகளைக் கொண்ட தமிழ் மொழியின் நிலத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், சமஸ்கிருத கலப்பை எதிர்த்துவந்த மொழி என்பதில் தமிழ் முக்கியமானது. திராவிட மொழிகளில் தெலுங்கும் மலையாளமும் அதிகமாக சமஸ்கிருத சொற்கள் கலந்தவை. ஆனால், “தெலுங்கு மொழியில் சமஸ்கிருதம் கலக்காத வழக்கைப் பேசுபவர்கள் தலித்துகளே. ஆகவே, தெலுங்கின் சமஸ்கிருதம் கலக்காத வழக்கு என்பது தலித் வழக்காகும்” என்று பண்டி நாராயண சுவாமி குறிப்பிட்டார்.
ராயலசீமா எனும் தனி மாநிலக் கோரிக்கை ஏன் எழுந்தது என்ற கேள்விக்கு ஸ்வாமி, “இதை வரலாற்று ரீதியாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆந்திரா என்பது முதலில் சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்தது. மொழிவழி மாநிலக் கோரிக்கை ஆந்திராவிலேயே முதன்முதலாகத் தோன்றியது. இந்த மொழிவழி மாநிலக் கோரிக்கையை எழுப்பியவர்கள் சென்னை மாகாணத்திற்கு அருகிலுள்ள ராயலசீமாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அக்கோரிக்கை மத்திய ஆந்திரா பகுதியில் உள்ளவர்களால் எழுப்பப்பட்டது. மத்திய ஆந்திராவில் உள்ளவர்களால்தான் கல்வி நிறுவனங்கள், பத்திரிகைகள், தொழிற்சாலைகள் போன்றவை நடத்தப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தில் மத்திய ஆந்திராவைச் சேர்ந்தவர்களே செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகவே இவர்களிடமிருந்து எங்களுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ளவும், எங்களது நலன்களைப் பெற்றுக்கொள்ளவும் ராயலசீமா கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்தபோது ராயலசீமா எவ்வாறு இருந்ததோ அதிலிருந்து பெரிய முன்னேற்றம் எதையும் காணவில்லை. ஆகவே ஆந்திராவோடு இல்லாமல் ராயலசீமாவைத் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்” என்றார்.
இதே கேள்விக்கு சொலோமோன் விஜயகுமார், “மத்திய ஆந்திராவில் உள்ள பிராமணர்கள், உயர் ஜாதியினர் ராயலசீமாவின் வழக்கை நீசபாசை என்றும் ராயலசீமா மக்கள் உண்ணும் உணவை அவர்கள் சிறுதானியம் உண்பவர்கள் என்றும் இழிவாகச் சித்திரித்துவந்தனர். தெலுங்கின் ஒரு பிரபல கவிஞரே இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இதை எதிர்த்தே நான் சமஸ்கிருதம் கலந்த உங்கள் தெலுங்கு மொழியில் எழுத மாட்டேன், சமஸ்கிருதம் கலக்காத எனது ராயலசீமா வழக்கில் மட்டுமே எழுதுவேன் என்றேன்” என்றார்.
m
‘பிரதியாகும் நிலமும் மனிதர்களும்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா நெறியாள்கை செய்ய இயக்குநர் மாரி செல்வராஜ் உரையாற்றினார். “உங்களைச் சார்ந்து உங்களைச் சுற்றி நடக்கக்கூடிய சம்பவங்களையே நீங்கள் படைப்பாகத் தருகிறீர்கள். இந்த நிகழ்வை அல்லது சம்பவத்தைக் கதையாக மாற்ற வேண்டும் என்கிற புள்ளி எங்கிருந்து தொடங்குகிறது என்று கூற முடியுமா?” எனத் தொடங்கி வைத்தார் தமிழ்ப்பிரபா. “என்னுடைய பாயிண்ட் ஆஃப் வியூ கேட்கப்படவில்லை என்று நான் உணர்கிறேன். சிறுவயதிலிருந்தே எனக்குத் தோன்றுவதைச் செய்தேன். ஏன் இதைச் செய்கிறாய் என யாரும் என்னிடம் கேள்வி கேட்டது கிடையாது. நான் கலை இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்ததே எனக்கு நானே சொல்லிக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஏனென்றால் எனது கதையை, எனது கோணத்தை யாரும் இதுவரை கேட்கவில்லை. நான் ஆட்டத்தைத் தேர்ந்தெடுத்தபோது அதைப் பார்ப்பவர்கள் என்னுடன் பேசத் தொடங்கினர். இதற்காகத்தான் நான் படைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.” என்றார்.
“நான் உங்களது ‘மறக்கவே நினைக்கிறேன்’, ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ ஆகிய நூல்களைப் படித்தபோது அந்தக் கதைகள் குற்றவுணர்வை ஏற்படுத்துபவையாக இருந்தன. மேலும், இழப்பும் துயரமும்தான் உங்களது எழுத்துக்கான உந்துசக்தியாக இருக்கிறதா?” என்ற தமிழ்ப்பிரபாவின் கேள்விக்கு, “இதுபோன்ற துயரங்கள் எல்லாவற்றையும் எனக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு நான் சென்னை வந்து வாசிப்பைத் தொடங்கிய பின்புதான் நான் எதை ஒளித்துவைத்திருக்கிறேனோ அதைப் பிறருக்குக் கடத்த வேண்டிய தேவை எழுந்தது. ஏனென்றால், மற்றவர்களும் அதைத்தான் செய்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டேன். அடுத்ததாக, எனக்குள் இருக்கக்கூடிய வலிகளையும் வேதனைகளையும் எழுதும்போது அது என்றாவது, எங்காவது ஒருநாள் வாசிக்கப்படும் கவனிக்கப்படும் என்பதை புரிந்துவைத்திருந்தேன். நான் சினிமாவிற்கு வராமல் போயிருந்தால் கூட எனது எழுத்துகள் இதுபோன்ற நிகழ்வுகளில் வாசிக்கப்பட்டிருக்கும். எனது எழுத்துகளை வாசித்துவிட்டு எனது இயக்குநர் ராம், ‘நான் இதுவரை வாசித்த எழுத்துகளில் இல்லாத ஒரு திருநெல்வேலியை உனது எழுத்துகளில் காண்கிறேன்’ என்று சொன்னபோதுதான் நான் எழுதுவது சரி என்ற நம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டது.” என்றார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
m
‘பண்பாட்டைப் பற்றுதல் மறு விளக்கம் செய்தல்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உரையாற்றினர். இந்த அமர்வை ஆய்வாளர் பொய்யாமொழி முருகன் ஒருங்கிணைத்தார். “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இனம், மொழி, தேசியம், பாலினம் போன்ற வெவ்வேறு அடையாளங்கள் இருக்கும். தலித் ஒருவர் எந்த அடையாளத்தைத் தனக்கானதாக முன்னிறுத்த வேண்டும்?” என்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார் பொய்யாமொழி முருகன். “நாம் இப்போது வந்தடைந்திருக்கக் கூடிய இந்த அரசியல் அடையாளங்கள் காலங்காலமாக இருந்த ஒன்று அல்ல. கடந்த 100 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த மாற்றங்களேயாகும். இந்தப் பின்னணியில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு சுயமானப் பார்வையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தச் சமூகத்தில் உருவான பல முன்னோடிகள் பல புதிய விஷயங்களைப் பேசியும் விவாதித்தும் வந்துள்ளனர். அந்த அனுபவத்தின் வழியாக சில நேரங்களில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள், சில நேரங்களில் தேங்கி நின்றிருக்கிறார்கள் என்பதை எல்லாம் காணமுடிகிறது. தமிழகச் சூழலில் மத அடையாளம் வென்றவுடன் அதை ஒரு பிற்போக்குத்தனமாகப் பார்க்கக்கூடிய நிலை உள்ளது. 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சமூக, அரசியல் மாற்றங்கள் நம்மை அவ்வாறு சிந்திக்க வைக்கிறது. மதம் எனும் அடையாளத்தை விடுதலைக்கான கருவியாகக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது. ஆனால், தலித் முன்னோடிகள் மிகச் சரியாகவே இதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் சிதறிக் கிடக்கும் தலித் மக்களை ஒருங்கிணைப்பதற்கு பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்தம் எனும் அடையாளத்தை முன்னிறுத்தினார்” என்றார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
m
கவிதை வாசிப்பு அமர்வில் வினையன், இந்துமதி, விடுதலை சிகப்பி, அருள் வைரா ஆகியோர் கவிதை வாசித்தனர்.
‘அறிவியல் புனைவெழுத்தில் அரசியல்மைய எழுத்துக்கான சாத்தியங்கள்’ எனும் தலைப்பில் எழுத்தாளர்கள் பாலசுப்ரமணியம் பொன்ராஜ், விஜய ராவணன் ஆகியோர் உரையாடினர். இந்நிகழ்வை எழுத்தாளர் வயலட் நெறியாள்கை செய்தார். தமிழில் அறிவியல் புனைவெழுத்து என்பது இன்னும் முழுமையாகச் சாத்தியப்படாத ஒன்றாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டும், ரோஹித் வெமுலாவின் கடிதத்தை வாசித்தும் உரையாடலைத் தொடங்கி வைத்தார் வயலட். பாலசுப்ரமணியம் பொன்ராஜ் பேசும்போது “இடாலோ கல்வினோவின் எழுத்துகளே என்னை அறிவியல் புனைவை நோக்கி நகர்த்தியது. அறிவியல் புனைவை மூன்று காலகட்டமாகப் பிரிக்கலாம். முதலாவது, செவ்வியல் காலகட்டம். அதாவது, 1680 முதல் 1900 வரை. இந்தக் காலகட்ட கதைகளில் ஐரோப்பியர்கள் வேறு தேசம், கடலுக்கடியில் ஆய்வுப் பயணம் செல்வது போன்று இருக்கும். இரண்டாவது காலகட்டம், 1890 முதல் 1950 வரை ஆகும். இந்தக் காலகட்டத்தில் மொத்த மனித கூட்டத்தையும் அறிவியலின் துணைகொண்டு கட்டுப்படுத்திவிட முடியும் என்று நம்பினர். அறிவியல் தொழிற்நுட்பங்களின் வழியாகப் பேரரசுகளை உருவாக்க முனைந்தனர். மூன்றாவது காலகட்டமாக கணிப்பொறி, இணைய காலகட்டத்தைக் கருதுகிறேன்.” என்றார்.
m
நிகழ்வின் இறுதியாக ‘வேர்ச்சொல் விருது’ எழுத்தாளர் சிவகாமிக்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் சிவகாமி குறித்த ‘அறத்தீ’ எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.