திருடர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு தேசம் இருந்தது.
இரவில் எல்லோரும் தங்கள் வீடுகளிலிருந்து கள்ளச்சாவிகளையும், மங்கலான விளக்குகளையும் எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களைக் கொள்ளையடிக்கப் புறப்படுவார்கள். விடியற்காலையில், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் வீடு திரும்பினால், தங்கள் வீடும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் காண்பார்கள்.
எனவே, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். யாருக்கும் நஷ்டமில்லை. ஏனெனில், ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து திருடினார்கள். ஒருவர் வேறொருவரிடமிருந்து திருட, அப்படியே அவர் மற்றவரிடமிருந்து திருடி கடைசியாக முதலில் திருடியவரிடமே மீண்டும் வந்து சேரும் வரை இது தொடர்ந்தது. இங்கே வணிகம் என்பது தவிர்க்க முடியாமல் வாங்குபவர், விற்பவர் இருவரின் ஏமாற்றுதலுடன் நடந்தது. அரசாங்கமும் குடிமக்களைச் சுரண்டும் குற்றவியல் அமைப்பாக இருந்தது. குடிமக்களும் தங்கள் பங்கிற்கு அரசை ஏமாற்றுவதில் மட்டுமே ஆர்வம் காட்டினர். வாழ்க்கை இவ்வாறு சுமுகமாகச் சென்றது. யாரும் பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை.
எப்படி நடந்தது என்று தெரியவில்லை, ஒருநாள் நேர்மையான மனிதர் ஒருவர் அங்கு வந்து வசிக்கத் துவங்கினார். இரவு நேரத்தில், மற்றவர்களைப் போல் கோணிப் பையுடனும் விளக்குடனும் வெளியே செல்லாமல், வீட்டிலேயே தங்கி சிகரெட் புகைத்துக்கொண்டும், நாவல் படித்துக்கொண்டும் இருந்தார்.
திருட வந்தவர்கள், விளக்கு எரிவதைப் பார்த்த பின் உள்ளே நுழையாமல் சென்றுவிட்டனர்.
இப்படியே சில நாட்கள் தொடர்ந்தன. பிறகு வேறு வழியில்லாமல் திருடர்கள் நேர்மையானவரிடம், “நீங்கள் தவறேதும் செய்யாமல் வாழ நினைக்கலாம். ஆனால், அதற்காக மற்றவர்களும் அப்படியிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு இரவும் நீங்கள் வீட்டில் இருந்தால், அடுத்த நாள் ஒரு குடும்பம் பட்டினியால் வாட வேண்டியிருக்கும்” என்று விஷயத்தைப் புரிய வைக்க வேண்டியதாயிற்று.
நேர்மையான மனிதரால் அவர்களின் நியாயமான வாதத்தை மறுக்க முடியவில்லை. எனவே, அவரும் மற்றவர்களைப் போல மாலையில் வெளியே சென்று மறுநாள் காலையில் வீடு திரும்ப ஆரம்பித்தார். ஆனால், அவர் யாரிடமும் திருடவில்லை. அவர் நேர்மையான மனிதர், அதை மாற்ற யாராலும் முடியாது. அவர் பாலத்திற்குச் சென்று, அதன் அடியில் ஆற்றின் நீரோட்டத்தைப் பார்த்துக்கொண்டு பின்னர் வீடு திரும்புவார். அவருடைய வீடு கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்.
ஒரு வாரத்திற்குள், அவருடைய செல்வம் மொத்தமும் பறிபோனது. அவரிடம் உண்ண ஏதுமில்லை, அவருடைய வீடும் காலியாக இருந்தது. எனினும், இது அவருடைய தனிப்பட்ட தவறு என்பதால், அவருக்கு அதொன்றும் பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. உண்மையான பிரச்சினை என்னவென்றால், அவருடைய செயல்பாடு அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. ஏனெனில், அவர் யாரிடமிருந்தும் எதையும் திருடாமல், தன்னிடம் இருந்த அனைத்தையும் மற்றவர்கள் திருட அனுமதித்தார். அதனால் யாரோ ஒருவர் அதிகாலையில் வீடு திரும்பும்போது, நேர்மையானவர் கொள்ளையடித்திருக்க வேண்டிய தன்னுடைய வீடு, திருடப்படாமல் அப்படியே இருப்பதைக் கண்டார். எப்படியிருப்பினும், சிறிது நாட்களுக்குப் பிறகு, கொள்ளையடிக்கப்படாதவர்கள் மற்றவர்களை விட பணக்காரர்களாகிவிட்டார்கள். இதனால் அவர்கள் அதற்கு மேல் திருட விரும்பவில்லை. இதில் சிக்கல் என்னவென்றால், நேர்மையான மனிதரின் வீட்டிற்குக் கொள்ளையடிக்க வந்தவர்கள், வீடு எப்போதும் காலியாகவே இருப்பதால், அவர்கள் ஏழைகளாகிப் போனார்கள்.
Illustration: Alan Rogerson
இதற்கிடையில், இரவில் பாலத்திற்குச் சென்று, பாலத்தின் அடியில் நீரோட்டத்தைக் காணும் நேர்மையான மனிதரின் பழக்கத்தை, பணக்காரர்களாக மாறியவர்களும் பின்பற்றினார்கள். இது குழப்பத்தை இன்னும் அதிகரித்தது. ஏனெனில், பலர் இதனால் பணக்காரர்களாகவும், மற்றவர்கள் ஏழைகளாகவும் மாறினர்.
இப்போது பணக்காரர்கள், தாங்கள் ஒவ்வோர் இரவும் பாலத்திற்குச் சென்றால் விரைவில் ஏழைகளாகிவிடுவோம் என்பதை உணர்ந்தார்கள். இதனால், அவர்கள் ‘நமக்காகத் திருட ஏழைகளில் சிலருக்குப் பணம் கொடுக்கலாம்’ என முடிவு செய்தார்கள். ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டனர், சம்பளங்களையும் சதவிகிதங்களையும் பேசி நிர்ணயம் செய்தனர். அவர்கள் இன்னமும் திருடர்கள்தாம், அத்தோடு அவர்கள் இன்னமும் ஒருவரையொருவர் ஏமாற்றவே முயன்றார்கள். ஆனால், வழக்கம் போல, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறினர்.
பணக்காரர்களில் சிலர் பெரிய பணக்காரர்களாகிவிட்டதால், அவர்கள் திருட வேண்டிய அவசியம் இல்லை, அல்லது தங்களுக்காக மற்றவர்களைத் திருடச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், திருடுவதை நிறுத்திவிட்டால், அவர்களிடம் ஏழைகள் திருடத் தொடங்குவார்கள், இதனால் அவர்கள் ஏழைகளாகிவிடுவார்கள். எனவே, தங்களது சொத்துகளை மற்ற ஏழைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, ஏழைகளில் மிகவும் ஏழ்மையானவர்களுக்கு அவர்கள் பணம் கொடுத்தனர். அதுதான் காவல் படை அமைப்பதற்கும், சிறைச்சாலைகள் கட்டுவதற்கும் காரணமாக அமைந்தது.
எனவே, அந்த நேர்மையான மனிதர் இங்கு வந்த சில வருடங்களிலேயே, மக்கள் திருடுவது பற்றியும் திருடு போவது பற்றியும் பேசுவதை விட்டுவிட்டு, பணக்காரர்களைப் பற்றியும், ஏழைகளைப் பற்றியும் பேசத் தொடங்கினர். ஆனால், இன்னமும் அவர்கள் திருடர்களே.
துவக்கத்தில் நேர்மையாக இருந்த அந்த மனிதர், வெகு விரைவில் பசியால் இறந்துபோனார்.