நக்னமுனி கவிதைகள்

தமிழில்: ஸ்ரீநிவாஸ் தெப்பல

காகிதங்களில் எழுத்துகளைப்
புதைக்கிற வெட்டியான்

கவிஞனிலிருந்து வெளியேறிய ஒவ்வொரு எழுத்தும்
அதன் உணர்வைக் ‘கருச்சிதைவு’ செய்துதான்
வெளிப்படும்
ஒரு கவிஞனை
அது கொலையாளியாகச்
சித்திரிக்கிறது.

எழுத்துகளை எப்பொழுதும்
ஐயத்துடன் பயன்படுத்துபவன்தான்
உண்மைக் கவிஞன்

மனிதனின்
அனைத்து உறுப்புகளும்
தன் வாழ்நாள் முழுவதும்
மிருகமாக உருமாறவே
முயல்கிறது.

இயற்கையில் பூமியின் மீது வினையாற்றவே
அண்டவெளியில்
கிரகங்கள் சுற்றிச் சுழல்கின்றன

இறுதியில் எஞ்சுவது
காயமும்,
ரத்தக் கறையுமில்லாத
‘கொலை’ மட்டும்தான்

m

ரே பாடலைத்தான்
நான் பெரும்பாலும்
பாடுகிறேன்.

எனது வாழ்நாள் முழுவதும்
நான் ஒரே பாடலைத்தான்
பாடுவேன்.

எனது வயிற்றிலிருந்து
ஒரு குடலை உருவி
வெளியே பிடுங்கி எடுத்து
அதைத் துந்தனாவாக
மீட்டிக்கொண்டு
தெருத் தெருவாகப்
பாடிக்கொண்டு திரிவேன்

உண்மையைக் கேட்கக் கூடிய
காதுகளுக்காக
உலகம் முழுக்கக்
காற்றின் விசையாய்த் தேடுவேன்

m

திகாலை
குத்தி எழுப்புவதற்கு முன்பாகவே
மெலிந்த காளைகள் பின்தொடர
தோளில் ஏரைச் சுமந்து
வயலுக்குச் செல்லும் ஒவ்வொரு விவசாயியும்
சிலுவையைச் சுமந்து செல்லும் யேசுவைப் போல்
தோன்றுவான்.

ஆம்
நான் கொலையைப்
பற்றித்தான் கூறுகிறேன்

இறுதி விருந்தில்
தன்னைக் காட்டிக்கொடுப்பது
யாரென்று
இயேசுவுக்குத் தெரியும்.

கொலைகாரர்கள் யாரென்று
எனக்குத் தெரியும்
பழியைச் சற்று நேரம்
கடலின் மீது சுமத்துகிறேன்.

நாட்காட்டிக்கு ரத்தமும்,
சதையும் இல்லை
காலமென்பது
வெறும் நாய் கவ்விய எலும்புத் துண்டு
பல்லியாய் சுவரில் ஒட்டிக் கிடக்கும்
ஒரு வெத்துக் காகிதத் துண்டு
தேதிகள் குற்றவாளியாகக்
கூண்டில் நிற்கும்
அது எந்தத் தேதியாகவும் இருக்கலாம்
அது நவம்பர் பத்தொன்பது என்றானது தற்செயலாக இருக்கலாம்.

பேரழிவுகள்,
பரிகாசங்கள் தவிர
நாட்காட்டியில்
கண்ணீரின் தடங்கள் இருக்காது
வாரங்கள் நோயாளிகளைப் போல்
போர்வையில் காலை விரித்து உறங்கும்.
போர்வை போர்த்திய
முனங்கல்களின் மீது
வெள்ளையடிக்கும்
வெள்ளைக் காகிதம்.
காலத்தை நாட்கள்,
வாரங்களெனத் தகர்த்தெறிகையில்
பீறிடும் வெள்ளைக் குருதி.
வெள்ளைக் குருதிக்குப் பின்னால்
போர்வையை அகற்றி முனகல்களைக் கேட்க முடிந்தால்
அது எந்த நாள் ஆகட்டும்,
எந்த வாரமாகட்டும்
காலத்தின் கண் மட்டும்
சனிக்கிழமை தூண்டில் முள்ளில் சிக்கித்
துடித்துக்கொண்டே நின்றுவிட்டது.

செய்யுள் வழக்கானாலும்,
பேச்சு வழக்கானாலும்,
எப்போதும்
அசுரத்தனத்தின் ‘அந்தகாரம்’தான்
மனிதர்களை ஆளுகின்ற உண்மை

மனிதம் மட்டும்தான்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியும்
பிறந்து மடியும் ஒளிக்கீற்று

m

Illustration: Camilla Falsini

ள்ளிரவில்
அந்தப்புரத்தை விட்டு
பெற்றோர்களை விட்டு
மனைவி, பிள்ளையின் மீது பின்னிகொண்ட
தொப்புள் கொடியை அறுத்தெறிந்து
சகல செல்வங்களையும்
விட்டு விலகிய சித்தார்த்தனை
ராஜ்ஜியத்தின் எல்லைவரை
விட்டுத் திரும்பிய குதிரை
கண்களில் கண்ணீருடன்
நாகார்ஜுன மலையில்
இன்னும் நின்றுகொண்டேதான் இருக்கிறது
மனிதனின் மனதில் மட்டும்
‘மகாபோதி’ என்றோ விழுந்து சரிந்தது.

m

றுதி விருந்தில்
தன்னைக் காட்டிக்கொடுப்பது
யாரென்று இயேசுவுக்குத் தெரியும்.
கடற்கரை முழுக்க மீனவர்களின் குடிசைகள் உள்ளதென்று தெரியும்
குடிசைகளின் முன்பு புற்றுகளால் நிறைந்ததென்று தெரியும்
புற்றுகளில் கொடிய நாகங்கள் உள்ளதென்று தெரியும்
படங்களில் விஷமிருப்பது தெரியும்
பாலை ஊற்றும் கைகளையே
நேரம் பார்த்துப்
படமெடுக்கும் அலைகளின் நச்சுப்பல்
கொத்துமெனத் தெரியும்.
‘கொலைகாரர்கள்’ யாரென்று
எனக்குத் தெரியும்
பழியைச் சற்று நேரம்
கடலின் மீது சுமத்துகிறேன்.

உறங்கினால் கனவுகள்
கண்களைக் கொட்டும்.
உலுக்கினால் தேனீக்கள்
உடலைத் துரத்திக் கொட்டும்.
தீண்டாதபோதிலும்,
பேசாதபோதிலும்
கொடிய அரசியல்
வாழ வேண்டிய
வாழ்க்கையையும் கொட்டும்

மனிதனை மனிதன் செய்யும் மோசடி காலத்திற்குத் தெரியும்
காரணங்கள் மட்டும்
கார்ல் மார்க்ஸ்க்குத் தெரியும்

‘ரோடின்’
அருங்காட்சியகத்தில் சிற்பமாக உருமாறி
கன்னத்தில் கைவைத்தபடி
சிந்தித்துக்கொண்டே இருப்பான்.

சிந்தனைக்கும்,
மனிதனுக்கும் தொடர்பென்ன?
மொழிக்கும்,
உணர்வுக்கும் தொடர்பென்ன?
வேதனைக்கும்,
உடலுக்கும் தொடர்பென்ன?
நிலத்துக்கும்,
நீருக்கும் தொடர்பென்ன?

m

றுதி விருந்தில்
தன்னைக் காட்டிக்கொடுப்பது
யாரென்று இயேசுவுக்குத் தெரியும்.

கொலைகாரர்கள் யாரென்று
எனக்குத் தெரியும்
பழியை என் மீதே சுமத்திக்கொள்கிறேன்

எனக்கு ஏவுகணைகள் வேண்டாம்
சந்திர மண்டலம் வேண்டாம்
விமானப் பயணம் வேண்டாம்.

காலத்தையும் வாழ்க்கையையும்
மாசுபடுத்தும்
அரசியல் நடவடிக்கைகள் வேண்டாம்
இரயில்கள் வேண்டாம்
பேருந்துகள் வேண்டாம்
இந்த நாகரிக நெரிசல் வேண்டாம்

கற்கால யுகத்தின் கருவிகளை எடுத்துக்கொண்டு
வரலாற்றின் இருண்ட குகைக்குள் பயணம் போகிறேன்
இந்தப் பிணங்களை, விலங்குகளின் சடலங்களை
எனக்குள்ளேயே நான் புதைக்கப் போகிறேன்
மரக்குதிரையை எரிக்கிற எரிதழலைக்
கண்டுபிடிக்கப் போகிறேன்

புதிய கனவுகளால்
புதிய மதிப்பீடுகளால்
புதிய நம்பிக்கைகளால்
பிரபஞ்சத்திற்கு ஆடை நெய்து
திரும்பி வந்து
நிர்வாணத்துடன்
திசைகளின் நடுவே
திக்கற்ற
‘மனிதனின் மீது அதைப் போர்த்துவேன்.’

l

நக்னமுனி

1940இல் மசிலிப்பட்டினத்தில் பிறந்த நக்னமுனியின் இயற்பெயர் மானேபள்ளி ஹ்ருஷி கேசவராவ். இவரது முதல் நூல் ‘உதயிஞ்சனி உதயாலு’.

‘தூர்ப்பு காலி’, ‘நக்னமுனி கதைகள்’, ‘விலோம கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். ஐந்து கவிஞர்களுடன் இணைந்து ‘திகம்பர கவுலு’ என்ற பெயரில் அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு கவிஞர் இயக்கத்தை உருவாக்கினார். 1965இல் ஆந்திராவில் எழுத்தாளர்களிடையே இது மிகுந்த கவனத்தைப் பெற்றது. இவரது ‘கொய்யகுர்ரம்‘ தெலுங்கு இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பு. கே.பாலசந்தர் இயக்கிய ‘மரோசரித்திரா’ (ஏக் தூஜே கேலியே) படத்திற்கும், ‘விலிகி ஏடு கொண்டலு’, ‘திரிஷூலம்’, ‘உதயம்’ போன்ற பிற தெலுங்கு திரைப்படங்களுக்கும் மூலக்கதைகளை எழுதியுள்ளார்.

m

ஸ்ரீநிவாஸ் தெப்பல

1989இல் பிறந்த இவர், ஆந்திரப் பிரதேசம், விசாகா மாவட்டத்தில், ‘துனி’ என்னும் ஊரைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்து சென்னையில் வசித்துவருகிறார். கணினி அறிவியல் படித்த இவர், வரைகலை வடிவமைப்பாளராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து, தற்போது திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார். ‘இவன்தான் பாலா’, ‘மாயப்பொன்’ ஆகிய நூல்களைத் தமிழிலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்துள்ளார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு ‘முக்குளிப்பான்’, ‘கரடி’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் மொழிபெயர்த்துவருகிறார்.

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger