பௌத்த பெருந்தாதா : எக்ஸ்ரே பி.மாணிக்கம்

ஸ்டாலின் ராஜாங்கம்

கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலத்தில் நண்பர் தமிழ்முரசிடமிருந்து அழைப்பு வந்தது. “எக்ஸ்ரே மாணிக்கம் அய்யா நம்மைப் பார்க்க மதுரை வருகிறாராம். நான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கே அவரை வரச் சொல்லிவிட்டேன். நீங்கள் வந்துவிட முடியுமா?” என்று கேட்டார். நான் பெரிதும் மதிக்கக்கூடிய ஆளுமைகளில் ஒருவர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும் இயல்பாகவே எனக்கு மகிழ்ச்சி வந்திருக்க வேண்டும். ஆனால், எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல கூடவே வருத்தமும் அச்சமும் வந்தன. எக்ஸ்ரேவுடைய வயோதிகமும் உடல் உபாதையும் கொரோனாவும்தான் அதற்குக் காரணம். முதுமை காரணமாக முற்றிலும் நடமாடும் நிலையையே இழந்திருந்த அவர் எப்படி வருவார் என்ற குழப்பம்.

அதேவேளையில் இவ்வாறு வெளியே வருவதால் அவருக்குக் கிடைக்கப் போகும் ஆசுவாசத்தையும் நினைக்க வேண்டியிருந்தது. நண்பர் ராஜேஷ்குமாரை அழைத்துக்கொண்டு புறப்பட்டேன். எங்களுக்கு முன்பே உறவினர் ஒருவர் துணையுடன் வந்து காரில் காத்திருந்தார் எக்ஸ்ரே. அவரைக் காருக்குள்ளே இருக்கச் செய்து உள்ளே சென்று அவரிடம் பேசினோம். அந்த அளவிற்குத்தான் அப்போது முடிந்தது. கையில் பிரிக்கப்படாத உறையிட்ட கடிதம் ஒன்றைத் தந்தார். எனக்கும் தமிழ் முரசுக்கும் அதனைத் தர வேண்டும் என்பதற்காகவே வந்ததாகக் குறிப்பிட்டார். எங்களிருவர் பெயர்களையும் எழுதி ‘சாதி இந்துக்களுக்கு இடுகாட்டு வேலை செய்வதிலிருந்து ஷெட்யூல்டு மக்களை விடுவிக்கும் முறை’ என்ற தலைப்பில் எழுதியிருந்த நான்கு பக்கக் கட்டுரை அதிலிருந்தது. அவர் சொல்ல விட்டனேரி முருகேசன் என்பவர் எழுதியது என்ற அடிக்குறிப்புடன் அதனைத் தந்தார்.

இந்த நிலையில் சந்தித்த எக்ஸ்ரே மாணிக்கம் அவர்கள், கடந்த 09.06.2023 அன்று அவருடைய சொந்தக் கிராமமான சிவகங்கை அருகிலிருந்த குருகாடிபட்டியில் காலமானார். மேற்கண்ட கடிதம் போலவே தன்னுடைய இறுதியடக்கம் பற்றி மரண சாசனம் ஒன்றையும் எழுதிக் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஏற்கெனவே கொடுத்திருந்தார். தன்னுடைய இறுதியடக்கம் சடங்குகள் இல்லாது நடக்க வேண்டுமென்று அவர் கோரியிருந்தபடியும் பௌத்த முறைப்படியும் அடக்கம் நடந்திருக்கிறது.

இறுதிக்காலம் நெருங்குவது தெரிந்ததும் அவர் மேற்கொண்ட முயற்சிகளே எங்களைப் போன்றோரைச் சந்தித்ததெல்லாம். அவர் தந்த கடிதத்தில் கூறியிருந்தது போல இழிதொழில்களுக்கு எதிராகச் சிந்திப்பதை ஒரு தவம் போல இயற்றிவந்தவர். தனக்குச் சிந்திக்கத் தெரியும் என்பதற்காகவோ பிழைப்பு என்ற விதத்திலோ சமூகச் செயற்பாட்டிற்கு வந்தவர் அல்ல. எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதால் அதை விட்டு விலகியவரும் அல்லர். அதனால்தான் துணைக்கு யாருமில்லாவிட்டாலும் தொடர்ந்து பணிகளைச் செய்துகொண்டிருந்தார்; தன்னுடைய அரசியல் நம்பிக்கைகளைப் பற்றித் தொடர்ந்து பேசிக்

கொண்டிருந்தார். தான் ஒன்றை நம்பினோம் என்பதைத் தாண்டி அவற்றைத் தொடர்ந்து பேசிவந்ததற்கு வேறெந்த நோக்கமும் கொண்டிராதவர். அவர் பெரிய தலைவரோ, மக்கள்திரள் கொண்டவரோ அல்ல. தன்னுடைய முதுமை நெருங்க நெருங்க அதுவரை தான் செய்துவந்தவற்றை / நம்பியவற்றைக் கடைசிச் செய்தி போல கையளிக்க முற்பட்டார். தன்னுடைய செயல்பாடுகள் தன்னோடு முடிந்து போய்விடுகிற விசயமாக இருக்க முடியும் என்று அவர் நம்பவில்லை. அவரைப் பொறுத்தவரை அவர் ஏற்றிருந்த / நம்பிய விசயங்கள் தொடர வேண்டியவை.

அம்பேத்கரிய பெரியவர்கள்:

எக்ஸ்ரே மாணிக்கம் ஒரு முழுமையான அம்பேத்கரியவாதி. அதாவது இறுதிவரை அம்பேத்கரின் அரசியல் கொள்கைகளைத் தம் பார்வையாக ஏற்றிருந்தார்; பௌத்தம் தழுவியிருந்தார். இங்கு ‘அம்பேத்கரிய பெரியவர்கள்’ என்னும் வகைப்பாட்டினர் உண்டு. டாக்டர் அம்பேத்கர் ஒரே நேரத்தில் இவர்களுக்கு வழிப்படுத்தும் பிம்பமாகவும் கருத்தியல் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். அம்பேத்கரை நேரில் பார்த்தவர்கள் அல்லது அம்பேத்கர் காலத்திலிருந்து செயற்பட்டவர்களின் குடும்பத்தினர் அல்லது அம்பேத்கர் தொடங்கிய இயக்கங்களின் தொடர்ச்சியில் உருவானவர்கள் என்ற வழியில் உருவாகிவந்தவர்களாக இருந்தனர். பெரும்பாலும் படித்தவர்கள் – அரசு ஊழியர்கள். அதனால் பொருளாதார தற்சார்புப் பெற்றவர்களாக இருந்தனர். தலித் அரசியலில் எப்போதும் படித்த – பொருளாதார நிலையில் உயர்ந்திருந்தவர்களே மேம்பாட்டுப் பணிகளைச் செய்துவந்திருக்கிறார்கள். அயோத்திதாசர் தொடங்கி 1950 வரையில் இதனைப் பார்க்கலாம். சுதந்திரத்திற்குப் பிந்தைய அம்பேத்கர் அமைப்புகளிலேதான் கீழிருந்து வந்தார்கள்.

அம்பேத்கரிய பெரியவர்கள் அம்பேத்கரின் கருத்துகளை இலட்சியமாகக் கொண்டு இயங்கினார்கள். இயக்கங்களோடும், அவற்றிற்கு அப்பாலும் தங்கள் பணிகளை அமைத்துக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் அறிவுசார் பணிகளோடு தொடர்பு கொண்டிருந்தார்கள். பணிகள் சிறிதாக இருக்கலாம்; ஆனால் அவற்றில் தொடர்ச்சியைக் கொண்டிருந்தார்கள். அதேவேளையில் இவை அதிகார நலன்களோடு தொடர்பு கொண்டிருக்கவில்லை.

சட்டரீதியான உரிமைகள், இழிவுகளைக் கைவிட்டு நவீனமான வாழ்க்கை முறை / ஒழுங்கு அடைதல், பௌத்த சமயம், தனிமனித ஒழுங்கு என்று இயங்கியவர்களாவர். அம்பேத்கரிடமிருந்து பெற்ற இம்மதிப்பீடுகளை அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் ஏற்றிருந்தனர். அரசியல் ரீதியாக வெல்ல இயலாவிட்டாலும் தனிப்பட்ட வாழ்க்கையிலாவது பல போராட்டங்களுக்கு இடையே உறுதி மாறாமல் இருந்தவர்கள். எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் தாங்கள் ஏற்றிருந்த நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே இயங்கியவர்கள். தேவையேற்பட்டபோது தங்கள் வயதை / உணர்வை ஒத்தவர்களோடு சிறு குழுவாக இயங்கியவர்கள். நேர்த்தியான உடை, வெண்ணிற ஆடை, ஷூ, சூட்கேஸ், ஆங்கிலம் என்கிற ஒழுங்கை இவர்களிடம் பார்க்க முடியும். இந்த வகையில் வட்டாரத்திற்கு வட்டாரம் பலர் இருந்தனர்.

சென்னையை மையமாகக் கொண்டு ‘அம்பேத்கரிய பெரியவர்கள்’ என்று நாமறிந்து அன்பு பொன்னோவியம், தி.பெ.கமலநாதன், மெயில் முனுசாமி, பௌர்ணமி குப்புச்சாமி, எரிமலை ரத்தினம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களுள் கடைசி கண்ணியாகத் திகழ்ந்தவர் எக்ஸ்ரே மாணிக்கம். அம்பேத்கரிய பெரியவர்களுக்கான பண்போடு இன்னும் ஓரிருவர் மட்டும் இருக்கின்றனர்.

எக்ஸ்ரே என்கிற பெயரை எதையும் ஊடுருவிப் பார்க்க வேண்டுமென்ற பண்புக்காக அவரே சூட்டிக்கொண்டதாகத் தெரிகிறது. மாணிக்கம் என்பது அவருடைய இயற்பெயர். பௌத்தராக இருந்த அவர் வெள்ளை ஆடையையே அணிந்தார். தனிமனித ஒழுங்குகள் பிறழாமல் வாழ்ந்தார்.

சிவகங்கை வட்டாரச் சமூக அரசியல் சூழல் :

எக்ஸ்ரே மாணிக்கம், சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடிக்கு அருகிலுள்ள குருகாடி பட்டியில் 1937ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவரின் பால்ய வயது குறித்து அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே அவரின் சமூக உணர்வு தொடங்கியதற்கான குறிப்பான புள்ளிகளை அறிய முடியவில்லை. ஆனால், இவர் பிறந்து வளர்ந்த வட்டாரத்தில் அன்றைக்கு நிலவிய அரசியல் சமூகச் சூழல் முக்கியமானவை. அவை எக்ஸ்ரே மீதும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன.

இயல்பாகவே இறந்த ஒருவரைச் சாமியாக வணங்கும் வழக்கம் குருகாடிபட்டியில் இருந்திருக்கிறது. சித்தராக வாழ்ந்து மறைந்த மொட்டைய சாமிகள் என்பவரைப் புதைத்த இடத்தில் சிறிய கோயில் எழுப்பி வணங்கிவந்தனர். சித்தர் ஆதிதிராவிட மரபினர். பெருங்கோயில் மரபோடு சேராத வழிபாட்டு வாய்ப்பு அவர் ஊரிலேயே இருந்திருக்கிறது.

பௌத்தராக மாறிய பின்பும் மொட்டைய சாமிகள் மீது எக்ஸ்ரே மதிப்புக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் 15 ஆண்டுகளுக்கு முன் அவர் ஊருக்குச் சென்றிருந்தபோது சித்தர் நினைவிடத்தைக் காட்டினார். பின்னாட்களில் சித்தர் பற்றிச் சிறு நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

அடுத்ததாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இலங்கை தோட்டத் தொழிலாளர்களாக இப்பகுதி தலித்துகள் சென்றிருந்தனர் என்பதைக் கூற வேண்டும். அதையொட்டி உருவான பொருளாதார மேம்பாடு சமூக விழிப்புணர்ச்சிக்கும் உதவியது. அவை அதிகாரச் சாதியினரிடம் செய்துவந்த இழிதொழில்களிலிருந்து விடுபடும் விழிப்புணர்வாக மாறியது. நிலம், கல்வி என்று தலித்துகளால் முன்னகர முடிந்திருந்தது. குறிப்பாக, இப்பகுதியில் நிலவிய நாடு என்கிற கட்டமைப்புக்கும் சாதிரீதியான கட்டளைகளுக்கும் எதிரான செயற்பாடுகளும் எழுந்திருக்கின்றன. 1931ஆம் ஆண்டு செம்பனூர் என்கிற ஊர், சமூகக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக்கொண்டமை ஒரு தொடக்கம் என்று கொண்டால் பின்னர் நாடு அமைப்புக்கெதிராகத் தொடங்கப்பட்ட அம்பேத்கர் ஐக்கிய நாட்டுச் சங்கம் முக்கியமான நிகழ்வு எனலாம்.

அடுத்து இப்பகுதியில் காந்தியின் அரிஜன சேவா சங்கத்தின் தீண்டாமை எதிர்ப்புச் செயற்பாடுகளும் இருந்திருக்கின்றன. கொல்லங்குடியில் இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து சேவா சங்கப் பொறுப்பாளர் ஆனந்த தீர்த்தர் போராடியதை எக்ஸ்ரே பலமுறை நினைவுகூர்ந்திருக்கிறார். அம்பேத்கரியர் ஆன பின்பும் காந்தியரான ஆனந்த தீர்த்தர் மீதான மதிப்பு எக்ஸ்ரேவுக்கு மாறியதில்லை.

சென்னையில் இரட்டையர்கள்:

எக்ஸ்ரே எங்கு படித்தார்? எவ்வளவு படித்தார்? என்று தெரியாவிட்டாலும் இரயில்வே துறையில் பணியில் சேருமளவுக்குப் படித்திருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அவருடைய சமூகப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணி உகந்ததாக இருந்தது. இந்தியாவில் எஸ்சி/எஸ்டி பணியாளர்கள் பெருந்தொகையினராக உள்ள துறை இரயில்வே துறை. பணியாளர் சங்கமும் இயங்கியது. இந்தச் சூழல் சமூகப் பணிகளுக்குச் சுதந்திரத்தை வழங்கியது. 1975 – 76ஆம் ஆண்டு வாக்கில் திருச்சியிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டதிலிருந்தே அவருடைய பணிகள் அதிகமாகியதாகத் தெரிகிறது. இன்றுவரையில் அவர் பற்றிக் கிடைக்கும் தரவுகள் சென்னையில் பணியாற்றியதிலிருந்தே கிடைக்கின்றன.

சென்னை சென்ற எக்ஸ்ரே, டாக்டர் அ.சேப்பன் நடத்திவந்த அம்பேத்கர் திருச்சபைக் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினார். அங்கு பலரைச் சந்திக்க முடிந்தது. அவ்வாறு சந்தித்து நண்பரானவர்தான் எரிமலை ரத்தினம். எரிமலை கோலாரில் பிறந்து வட ஆற்காடு பகுதியில் படித்தவர். அன்றைக்கு இவ்விரண்டு பகுதிகளில்தான் அம்பேத்கர் அரசியல் செல்வாக்கோடு இருந்தது. எனவே எரிமலை இயல்பாகவே பல தலைவர்களையும் செயல்பாடுகளையும் அறிந்தவராக இருந்தார். எக்ஸ்ரே மரணிக்கும் வரையிலும் இரட்டையர்கள் என்று சொல்லத்தக்க அளவில் இணைந்து இயங்கினர். இவர்களில் ஒருவர் ஒரு பணியைச் செய்கிறார் என்றால் மற்றொருவரது பெயர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரும் இருக்கிறார் என்று இயல்பாகவே புரிந்துகொள்ள வேண்டும் என்ற அளவில் பிணைந்திருந்தனர். தென் தமிழகத்திலிருந்து சென்று வட தமிழகத்தின் தாக்கத்திற்குட்பட்ட அம்பேத்கரிய அரசியலை ஏற்றவர் என்று எக்ஸ்ரேவைக் கூறலாம்.

1960களில் மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பவரை எக்ஸ்ரே திருமணம் புரிந்தார். சிவபாக்கியம் என்பதுதான் பெயர் என்றாலும் எக்ஸ்ரே உந்துதலால் பாக்கியம் என்றே தன் பெயரை இருத்திக்கொண்டார். பாக்கியம் 1950களிலேயே பத்தாம் வகுப்பு பயின்றவர். மேலூர் பெண்கள் விடுதியில் தங்கிப் பயின்றபோது ஆனந்த தீர்த்தர் மடியில் விளையாடியவர். எக்ஸ்ரேவின் பொதுவாழ்க்கை பாக்கியம் அம்மாள் இல்லாவிட்டால் சாத்தியமில்லை. அவருடன் சளைக்காது பயணித்தவர். மரணிக்கும் வரையிலும் பராமரித்தவர்.

எக்ஸ்ரே பணி நிமித்தம் 1970களின் மத்தியிலிருந்து சென்னையில் இருந்துவிட்டாலும் பணி ஓய்வுக்குப் பின் சொந்த ஊரான குருகாடிபட்டிக்கு வந்துவிட்டார். 2000த்திற்குப் பிறகு தென் மாவட்டங்களில் நடக்கும் கூட்டங்களுக்குச் செல்வது, தலையீடுகள் செய்வது என்று அவர் பயணம் தொடர்ந்தது. இதன்படி 1990களுக்குப் பிந்தைய தலித் அமைப்புகள் – பொதுவுடைமை – திராவிட அமைப்புகள் எனப் பல இயக்கத்தவருடனும் பரவலாகத் தொடர்பு இருந்தது. கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் எல்லோராலும் மதிக்கப்படுபவராக இருந்தார். எக்ஸ்ரேவின் பணிகளைப் பின்வரும் வகைகளில் புரிந்துகொள்ளலாம். போராட்டங்கள், பௌத்தம், இதழ்கள் – நூல்கள் – மொழிபெயர்ப்புகள் என்று ஒரு வசதிக்காகத் தொகுத்துக்கொள்ளலாம்.

 

Art by Amuthan

 

இழிதொழில் மறுப்பும் சிவில் உரிமைகளும்:

எக்ஸ்ரேவின் போராட்டங்களை இரண்டு வகைகளாகக் கூறலாம். முதலாவதாக சிவில் உரிமைகளுக்கான போராட்டங்கள். கூடுதலாக இடஒதுக்கீட்டு முறை. பொதுவாக அம்பேத்கரிய பெரியவர்கள் சட்டவாதத்தின்படி செயற்பட்டவர்கள். இந்திய அரசியல் சட்டம் அம்பேத்கரால் இயற்றப்பட்டது. அதில் பட்டியல் வகுப்பினர்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியதே ஆட்சியாளர்களின் வேலை. ஆனால், நடைமுறைப்படுத்தப் போராட வேண்டியிருக்கிறது என்பதே இவர்களின் நிலையாக இருந்தது.

அரசு ஊழியராக இருந்துகொண்டு சென்னையிலிருந்த கருத்தொத்த இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்கள் ஆகியவற்றோடு இணைந்தும் தனித்தும் போராட்டங்களை மேற்கொண்டுவந்தவர் எக்ஸ்ரே. முதலாவது, அரசியலமைப்பை வலியுறுத்தும் போராட்டங்கள் என்றால் இரண்டாவது வகை, சமூக அமைப்புக்கு எதிரான போராட்டங்களாகும். பெரும்பாலானவை இழிதொழில் மறுப்புப் போராட்டங்கள்தாம். இழிதொழில் மறுப்பு என்பதும் அம்பேத்கரிய அரசியல்தான். கிராமங்களிலிருந்து வெளியேறிப் படித்து, வேலை பெற்று மதிப்புமிக்க நிலையை அடைவதை முக்கியப் பணியாகக் கருதி அதற்கு முதற் தடையாகக் கூறப்படும் இழிதொழிலை மறுத்துச் செயற்பட்டனர். முன்னோடிகளைப் பார்த்தும் முதல் தலைமுறையிலிருந்தும் உருவாகிவந்த அம்பேத்கரியப் பெரியவர்கள் கடைசிவரை இதில் உறுதியாக இருந்தனர். மேளம் அடித்தல், செத்த மாடுகளை அகற்றுதல், பிணக்குழி தோண்டுதல் போன்ற பணிகளிலிருந்து வெளியேறுவதை வலியுறுத்திப் போராட்டங்கள் – பிரச்சாரம் என்றிருந்தார் எக்ஸ்ரே. தான் நடத்திய இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்தார். பொதுவாகத் தான் திட்டமிட – பங்கெடுக்க வாய்ப்புள்ள போராட்டங்களைக் கவனத்தை ஈர்க்கும்படியாக நடத்தியவர் எக்ஸ்ரே. அவருடைய எல்லாப் போராட்டங்களும் இத்தகையதே.

மலமள்ளுவதற்கு எதிரான போராட்டம் :

1980களில் கையால் மலம் அள்ளும் முறையை ஒழித்திடவும், அதற்கு மாற்றாக செப்டிக் டேங்க் முறையை வலியுறுத்தியும் கோட்டையை நோக்கி மு.சுந்தரராஜனார் தலைமையில் மலச்சட்டிகளுடன் ஒரு பெரிய ஊர்வலம் நடத்தினர். இப்போராட்டத்தில் எக்ஸ்ரே முக்கியப் பங்காற்றினர். கோட்டையை நோக்கிய பேரணியைக் காவல்துறையினர் தடுத்தபோது மலச்சட்டியை நடுரோட்டிலேயே போட்டுக் கைதானார்கள். பிறகு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியும் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தபோது சென்னையில் கையால் மலம் அள்ளுவோரில் பெரும்பான்மையோர் ஆந்திர ஷெட்யூல்ட் இன மக்களாக இருப்பதைக் குறிப்பிட்டு எரிமலையும் எக்ஸ்ரேயும் விண்ணப்பம் அளிக்கச் சென்றனர். காவல்துறை தடுத்திட கூச்சல் குழப்பத்திற்கு இடையே விண்ணப்பம் அளிக்கப்பட்டது. பிறகு, என்.டி.ராமராவ் ஆந்திராவில் செப்டிக் டேங்க் முறையை நடைமுறைப்படுத்தினார். அவரைப் பாராட்டிச் சென்னை முழுவதும் சுவரொட்டி ஒட்டினர் எக்ஸ்ரே குழுவினர். தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்ப்பதே இப்பாராட்டுச் சுவரொட்டிகளின் நோக்கம்.

தனித் தம்ளர் முறை:

கிராமப்புறங்களிலிருந்த தனித் தம்ளர் முறையை ஒழிக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகக் கோட்டைக்குள் பெண்கள் மடியில் தம்ளரை மறைத்துச் சென்று கோசம் எழுப்பி ஒரே நேரத்தில் தம்ளர்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தனர். அதோடு தனித் தம்ளர் முறை இருக்கும் வரையிலும் எம்எல்ஏக்களும் எம்பிக்களும் தனித் தம்ளர்களிலேயே காபி குடிக்க வேண்டும் என்கிற கோஷத்தையும் எழுப்பினர். பெண்கள் பங்கேற்றப் போராட்டம் என்பதனால் வெளியேற்றப்பட்டதோடு நின்றது. ஆனால், அந்தப் போராட்டம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது.

இந்தி ஏற்போர் மாநாடு :

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் இறந்தவர் தலித் வகுப்பைச் சேர்ந்த நடராசன். ஆனால், இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் இரண்டாவதாக இறந்த தாளமுத்து பெயர் முன்னே வரும் வகையில் தாளமுத்து – நடராசன் என்ற வரிசை உருவாக்கப்பட்டது. அவற்றை மாற்றுவதற்கான கோரிக்கை தலித்துகளிடம் நீண்ட காலமாக இருந்துவருகிறது. இதற்கான மாநாடு ஒன்று சென்னையில் கூட்டப்பட்டது. கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘இந்தி ஏற்போர் மாநாடு’ என்று மாநாட்டின் பெயர் சூட்டப்பட்டது. தலைமை எக்ஸ்ரே மாணிக்கம். கூட்டத்தில் நடராசன் – தாளமுத்து என்கிற வரிசையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அவற்றைக் கூட்டத்தினர் மூன்றுமுறை திரும்பச் சொல்லினர்.

‘ஒரே ஒரு கிராமத்திலே’ படம் :

1987ஆம் ஆண்டு தமிழில் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற படம் வெளியானது. ஜோதிபாண்டியன் என்பவர் இயக்கிய இப்படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை வாலி எழுதியிருந்தார். படத்தின் தயாரிப்பிற்குப் பின்னால் இந்து என்.ராம் இருந்ததாகச் சொல்லப்பட்டது. படம் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறுத்து வெளியாகியிருந்ததால் அம்பேத்கரிய இயக்கங்கள் பலவும் எதிர்த்துப் போராடின. தனியே எழுதும் அளவிற்கு இப்போராட்டங்கள் விரிவானவை. இப்போராட்டக் குழுவினரில் எக்ஸ்ரே நண்பர்கள் குழுவும் அடக்கம். எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை ரத்தினம், தமிழ் மறையான், ‘திராவிட சமயம்’ இதழ் ஆசிரியர் டாக்டர் மு.தெய்வநாயகம் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். படத்தின் வசனங்களை ரெக்கார்டரில் பதிவுசெய்து இவர்களே வெளியே பரப்பினர். பிறகே படத்திற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அன்றைய தொழிற்சங்கத் தலைவராக இருந்த, பின்னாட்களில் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆன திரு.தனபால் உச்சநீதிமன்றத்தில் இப்படத்திற்கு எதிராக வழக்காடினார். பிறகு இப்பிரச்சினை பெரியவர்களின் முயற்சியால் கன்ஷிராம், ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. மிகப்பெரிய ஜனத்திரளோடு ஜனாதிபதி மாளிகை சென்று மனு கொடுத்தார் கன்ஷிராம். இப்பிரச்சனையில் படத்திற்கு ஆதரவாக நடந்துகொள்வதாகக் கூறி இந்து பத்திரிகை அலுவலகம் முன் மிகப்பெரிய போராட்டத்தை எஸ்சி/எஸ்டி சங்கத்தினர் நடத்தினர். அப்போது எரிமலை ரத்தினம், பிரபாகரராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிறகு படத்தின் இறுதிக் காட்சிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியானது.

தீக்க்ஷா பூமி கலாச்சாரம் :

1956ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நாக்பூரில் பௌத்தம் தழுவிவிட்டுக் காலமான பிறகு நாக்பூர், அம்பேத்கரியர்களால் தீக்ஷா பூமி என்றழைக்கப்பட்டது. பிறகு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் தீக்க்ஷா பூமி செல்லும் வழக்கம் உருவானது. தமிழகத்தில் அம்பேத்கரிய பெரியவர்களாலும் இந்தியக் குடியரசுக் கட்சி போன்ற இயக்கங்களாலும் இவ்வழக்கம் கடைபிடிக்கப்பட்டது. பெரும்பாலான பெரியவர்கள் குடும்பத்துடன்தான் செல்வர். 1970களிலிருந்து தீக்ஷா பூமிக்குத் தவறாமல் குடும்பத்தோடு சென்றவர் எக்ஸ்ரே. அதோடு இந்தியாவெங்குமிருந்த பௌத்தத் தலங்கள் அனைத்திற்கும் சென்று வந்தவர். இன்றைக்குத் தீக்ஷா பூமிக்குத் தமிழகத்திலிருந்து பெருவாரியானோர் செல்லும் பண்பாடு உருவாகியிருக்கிறது. இதற்கெல்லாம் முன்னோடிகள் இப்பெரியவர்களே.

நூல்களும் இதழ்களும்:

அடுத்ததாக எக்ஸ்ரேவின் நூல்களைப் பார்க்கலாம். பத்திரிகைகளை நடத்தியும் எழுதியும் வந்த எக்ஸ்ரேவின் முதல் நூலாக ‘மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு’ என்ற நூலைக் கூறலாம். அம்பேத்கர் நூல் தொகுதிகளில் ‘தீண்டப்படாதவர் யார்?’ என்கிற தலைப்பில் இருக்கக்கூடிய நூலைத்தான் இத்தலைப்பில் மொழிபெயர்த்தனர். எக்ஸ்ரே மாணிக்கம், தலித் எழில்மலை, வி.எம்.முருகேசன் ஆகியோர் மொழிபெயர்ப்பில் 1985ஆம் ஆண்டு தலித் சாகித்ய அகாதமி சார்பாக எழில்மலை வெளியிட்டார். நேரடியாக மொழிபெயர்க்காமல் கருத்தினையொத்துத் தலைப்பு வைத்தோம் என்று கூறியிருக்கிறார் எக்ஸ்ரே.

புத்தரும் அவர் தம்மமும் :

பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூல் பேராசிரியர் பெரியார்தாசன் மொழிபெயர்ப்பில் 1994ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூல் வெளியாவதற்கும் மொழிபெயர்க்கப்படுவதற்கும் எக்ஸ்ரேவும் எரிமலையும்தான் காரணம். நூல் மொழிபெயர்க்கப்படுவதற்கான முதல் விதையை 1985இல் விதைத்தவர் எக்ஸ்ரே மாணிக்கம்தான் என்கிற தகவலை நூலின் முன்னுரையிலேயே பெரியார்தாசன் கூறியிருப்பதைப் பார்க்கலாம். மேலும் ‘பாபாசாகேப் அம்பேத்கரின் இறுதி நூல் பற்றிய தனிச் சிறப்புகளை அவர் அடுக்கிக்கொண்டே போனார். “பேராசிரியரான நான் மாணவன் ஆனேன். எக்ஸ்ரே மாணிக்கம் ஆசிரியர் ஆனார்” என்று பெரியார்தாசன் கூறியிருக்கிறார். பெரியார்தாசன் மொழிபெயர்த்த இந்நூலை எக்ஸ்ரேவும் எரிமலையும் முழுமையாகப் பரிசோதித்த பின்னரே வெளியிட்டனர். மேலும் “இந்த அரிய நூலின் தமிழாக்கம் என்னால் செய்யப்பட்டு, எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை ரத்தினம் இருவராலும் இரவுப் பகலாய் பரிசீலிக்கப்பட்டது. எங்கள் பரிசீலனை முறை இதுதான்…..

– ஆங்கில மூலத்தை ஒவ்வொரு வசனமாய் எரிமலை ரத்தினம் படிப்பார்.

– உடனே அதற்குரிய என் தமிழாக்கத்தை நான் படிப்பேன்.

– இரண்டையும் கூர்ந்து கவனிப்பார் எக்ஸ்ரே மாணிக்கம்.

– பின்னர் கருத்து மயக்கமோ மொழியாக்கத் தடுமாற்றமோ இல்லாமல் தமிழாக்கம் சிறப்பாய் உள்ளதா என அவர்களிருவரும் மிகக் கூர்மையாகக் கவனிப்பார்கள். செழுமைப்படுத்தப்பட வேண்டியதிருப்பின் சுட்டிக்காட்டுவார்கள். விவாதம் மேற்கொள்ளப்பட்டுத் தேவையிருப்பின் திருத்தம் செய்வோம்.

சில நேரங்களில் ஒரு வசனத்தைச் சரிபார்க்க ஒருமணி நேரம் கூட ஆகும்” என்று தன்னுடைய அனுபவத்தை பெரியார்தாசன் விவரித்திருக்கிறார்.

எக்ஸ்ரே மாணிக்கம் அடிப்படையில் சமூகச் செயல்பாட்டாளர். சமூகச் செயல்பாடு சார்ந்த கருத்துகளைப் பரப்புவதற்கான பிரச்சார வாகனமாகவே இதழ்களையும் நூல்களையும் கையாண்டார். அந்த வகையில் மொழிபெயர்ப்பு நூல்கள் என இவ்விரண்டையும் குறிப்பிடலாம்.

எரிமலையும் எக்ஸ்ரேவும் இணைந்து 1984ஆம் ஆண்டு ‘எரிமலை’ என்னும் மாத இதழ் ஒன்றை வெளியிட்டனர். 1988 வரை வெளியாகி நின்றது. பிறகு அதே ஆண்டு தனிச்சுற்றாக ‘சிவில் உரிமை’ என்னும் மாத இதழ் வெளியானது (வெளியிடுபவர்கள் : எக்ஸ்ரே, எரிமலை ஆகியோர் பெயரோடு ணி.ஜீவரத்தினம், கி.துரை, ணி.செல்லத்துரை, ஙி.பிரபாகர்ராவ்). 1990இல் பதிவு பெற்று மாத இதழாக மாறிய பின் எக்ஸ்ரே பெயர் மட்டும் ஆசிரியர் பெயராக இடம்பெற்றுவந்தது. சில மாதங்களுக்குப் பின் சிறப்பாசிரியர் என்று எரிமலை பெயரும் சேர்ந்து இடம்பெற்றது. இதழில் தலையங்கம், கட்டுரைகள், அறிவிப்புகள், கவிதைகள், சிந்தனைச் சிதறல்கள் போன்றவை இடம்பெற்றன. இதழ்தோறும் எக்ஸ்ரே கட்டுரைகள் இடம்பெற்றுவந்தன. மேலும் அன்பு பொன்னோவியம், ஐ.உலகநாதன், டாக்டர் கோ.தங்கவேலு, பள்ளிகொண்டா கிருஷ்ணகுமார் போன்றோரும் கட்டுரைகள் எழுதினர். சிவில் உரிமை என்கிற பெயரே இவர்கள் முன்வைக்க விரும்பிய அரசியலை நமக்குச் சுட்டுகிறது.

கிராமத்திற்குத் திரும்பிவிட்ட பிறகு 2010க்குப் பின்னால் ஆலம்பட்டு உலகநாதனோடு சேர்ந்து காரைக்குடியிலிருந்து கி4 தாளில் ‘சிந்தனை புதிது’ எனும் நான்கு பக்க இதழொன்றை நடத்தினார் எக்ஸ்ரே.

எக்ஸ்ரே நடத்திவந்த இதழ்களில் அவர் சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும் நிறையக் கட்டுரைகளை எழுதிவந்தார். அதோடு சில சமூக விழிப்புணர்வு கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இவை அனைத்தும் காலவரிசையாகத் தொகுக்கப்படவில்லை. ஆனால், அவர் இறப்பதற்கு முன்பு கோவி.பார்த்திபன் தொகுப்பில் ‘எக்ஸ்ரே மாணிக்கம் – எரிமலை ரத்தினம் சமூகச் சிந்தனைகள்’ (2021) என்கிற நூல் வெளியானது. இவை சிவில் உரிமையில் இருவரும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். தொடர்ந்து எக்ஸ்ரே பெயரிலேயே இரண்டு நூல்கள் வெளியாயின. ஒன்று ‘வரலாற்று பௌத்த இடங்களில் வலம் வந்த பயணம்’ (2022) ஆகும். இது சிவில் உரிமை இதழில் 16 அத்தியாயங்கள் வரை அவர் எழுதிவந்த தொடரின் தொகுப்பாகும். இரண்டு, ‘புதிய சிந்தனை மலர்கள்’ (2022). ‘சிந்தனை புதிது’ இதழில் எழுதிய சிறிதும் பெரிதுமான கட்டுரைகளின் தொகுப்பாகும். இதைத் தவிர அவர் நிறையக் கடிதங்கள், கட்டுரைகள், விண்ணப்பங்கள் எழுதியிருக்கிறார். பறைமேளத்தை மறுத்துத் தலித் முரசுக்கு அவர் எழுதிய நீண்ட கடிதம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து என்னிடம் தந்திருந்தார். நானும் பூவிழியனும் தொகுத்த ‘பறையொலியால் பரவும் இழிவு’ என்கிற சிறு நூலில் ‘நீரோவின் பிடில்’ என்ற தலைப்பிட்டு அவர் விண்ணப்பத்தைக் கட்டுரையாக மாற்றி இணைத்தேன். ‘எனது கடைசி முயற்சி வெல்லட்டும்‘ என்கிற சிறு நூல் கடந்த ஆண்டு வெளியானது. இவையே நூல் வடிவில் வெளிவந்த அவருடைய எழுத்துகள் ஆகும்.

கவனம் ஈர்க்கத்தக்கப் போராட்ட வடிவங்களைத் திட்டமிட்டதைப் போலவே இதழ்கள், நூல்கள் வெளியீடுகளும் அவரால் சிறப்பாகத் திட்டமிடப்பட்டன. ‘சிவில் உரிமை’ பெரம்பூர் பௌத்த சங்கத்தில் கருப்பன் ஐஏஎஸ், முன்னாள் நீதிபதி ராமகிருஷ்ணன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு வெளியிடப்பட்டது. ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூல் 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் வைசாகப் பௌர்ணமி நாளில் அன்பு பொன்னோவியம், செ.கு.தமிழரசன், கருப்பன் ஐஏஸ் ஆகியோர் கலந்துகொள்ள வெளியீடு சிறப்பாக நடத்தப்பட்டது. இதேவேளையில் இந்தக் கவன ஈர்ப்புத் தொடர்புடைய போராட்டங்கள், நூல் – இதழ் வெளியீடுகளுக்காக நடந்ததே ஒழிய ஒருபோதும் இப்பெரியவர்கள் தங்களை முன்னிறுத்திக்கொள்வதற்காக நடத்தியதில்லை.

ஒரு கட்டுரையில் எக்ஸ்ரே போன்றோரின் முழுச் செயற்பாடுகளைச் சொல்லிவிட முடியாது. வாழ்க்கை முழுவதும் சமூகப் பணியே என்று வாழ்ந்த இவர் போன்றோர்களுக்கு இவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு நாளிலும் சொல்லுவதற்கான செயற்பாடுகள் இருந்திருக்க முடியும். எத்தனை கூட்டங்களுக்குப் போயிருப்பார்கள் / எவ்வளவு தூரம் பயணித்திருப்பார்கள்/ எத்தனை கூட்டங்களை நடத்தியிருப்பார்கள் / எவ்வளவு பேசியிருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தால் மலைப்பு வருகிறது. நூல்கள், இதழ்கள், செலவு, உழைப்பு, நேரம், இதற்கிடையில் சொந்த வேலை, குடும்பம் என்கிற எத்தனையெத்தனை விசயங்கள் உண்டு. ஒவ்வொரு வேலைக்கும் எத்தனை இழையிழையாகப் பிணைக்கப்பட்ட ஏற்பாடுகள். இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் தாங்கிக்கொண்டே எந்தப் பிரதிபலனும் இல்லாமல் உழைத்துச் சென்ற பெரியவர்களில் ஒருவரே எக்ஸ்ரே மாணிக்கம்.

எக்ஸ்ரே அரசியல் சார்ந்து மட்டுமல்ல வாழ்க்கைச் சார்ந்தும் கடைசிவரை ஒழுங்குகளைப் பராமரித்துவந்தார். குடும்பச் சொத்துகளைத் தன் மரணத்திற்கு முன்பே மகன்களுக்கு முறையாகப் பகுத்துத் தந்துவிட்ட அவர் யாரையும் சாராமல் மனைவியோடு தனித்து வாழ்ந்து மரணித்தார். இதன் மொத்தச் சுமையையும் மனைவி பாக்கியம் தாங்கினார் என்பது வேறு விசயம்.

பௌத்தம் அரசியல் நிலைப்பாடா?

வாழ்வில் நெறியோடு இருப்பது பௌத்தம்தான் என்று இப்பெரியவர்கள் கருதியிருந்தனர். இவ்விடத்தில்தான் பௌத்தத்தை அரசியல் நிலைப்பாடாக மட்டுமின்றிப் பண்பாட்டு நிலைப்பாடாகவும் இவர் போன்றோர் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம்.

எக்ஸ்ரே கொரோனா காலத்தில் வந்திருந்தபோது அவருக்குக் கொடுப்பதற்காக அப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்த காஞ்சா அய்லய்யாவின் புத்தர் நூலை எடுத்துச் சென்றிருந்தேன். அவர் படிப்பார் என்று அதை எடுத்துச் செல்லவில்லை. கையில் ஏதாவது கொடுக்க வேண்டுமென்ற ‘சம்பிரதாயத்திற்காக’ எடுத்துச் சென்றிருந்தேன். ஆனால், அவர் பின்னட்டைக் குறிப்பைக் கூர்ந்து படித்தார். முதல் வரி “பௌத்தம் ஒரு மதமல்ல” என்பதாக இருந்தது. அதை அவர் உடனே மறுத்துப் பேசத் தொடங்கினார். “பௌத்தம் ஒரு மதம்தான்; அம்பேத்கர் அப்படிப் புரிந்துகொண்டுதான் தேர்ந்தெடுத்தார். மக்களிடம் அவ்வாறுதான் செல்ல முடியும், செல்ல வேண்டும்” என்றார். இந்தக் கருத்து எனக்கு முக்கியமானதாகத் தெரிந்தது. ஏனெனில், அம்பேத்கர் பௌத்தத்தில் அதன் அறிவியல் தன்மை வலியுறுத்தப்படுவதால் அதனைப் பண்பாட்டு நிலைப்பாட்டுக்கு எதிர்நிலையில் வைப்பவர்களே இங்கு அதிகம். இந்த நிலையில் அம்பேத்கரின் பௌத்தத்தில் மதிப்புக் கொண்ட ஒருவரின் அனுபவப் பதிவாக இதனைப் புரிந்துகொண்டேன். மக்களிடம் செல்லும்போது கடவுள் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு செல்லக்கூடாது. மக்களுக்கான பண்பாட்டின் வழியேதான் செல்ல வேண்டும் என்றார். இந்த நிலையிலும் தன் பார்வையைத் தெளிவாகச் சொல்லிவிடத் துடிக்கிறார் என்கிற வியப்பு ஒருபுறம். பௌத்தம் பற்றிய இத்தகைய புரிதல் என்கிற மதிப்பு மறுபுறம். மேலும், அவராகவே ஆனந்த் டெல்டும்டேவின் அம்பேத்கர் பற்றிய கருத்துகள் மீதும் தன் கருத்தை வெளிப்படுத்தினார். “ஆனந்த் குழப்புகிறார். அவருக்குக் கம்யூனிசம் பிடித்திருக்கிறது. அதனால் இதன் முக்கியத்துவத்தைக் குறைக்கிறார்” என்றார். இதுவே எங்களின் கடைசி உரையாடல். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நண்பர்களோடு எக்ஸ்ரேவைப் பார்க்கச் சென்றிருந்தேன். இயலாத நிலையிலும் வழக்கம் போல உபசரித்தார் பாக்கியம் அம்மாள். அய்யாவால் ஒரு வார்த்தைக் கூட பேச முடியவில்லை. அச்சிட்டு வெளியாகியிருந்த நூல்களை மட்டும் பெற்றுக்கொண்டு திரும்பினோம். மூன்று மாதம் கழித்து மரணச் செய்தி வந்திருக்கிறது. கருத்துகளை மட்டுமல்ல, தன் வாழ்க்கை முறையையே ஒரு செய்தியாக விட்டுச்சென்றிருப்பதுதான் அவரின் சிறப்பு.

 

l stalinrajangam@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger