கடல் வாணிகம் செழித்து விளங்கிய கொற்கை மாநகரில் மிகப்பழங்காலத்தில் மன்னன் ஒருவர் ஆட்சிபுரிந்துவந்துள்ளார். அவருக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் எனும் மூவேந்தராவர். மூவரின் வழி உரிமைச் செல்வங்களும் ஒருசேரத் தொகுத்து வைத்த இடமே ‘முக்காணி’ (மூன்று காணி – உரிமை செல்வம்) என்று சொல்லப்பட்டது. கொற்கை மாநகரிலிருந்து விரிந்து பரவிய நிலப்பரப்பைக் கவனிப்பது சிரமமாக இருப்பதை உணர்ந்து மூவரும் தங்களுக்குள் எல்லைகளை வகுத்துக்கொண்டு இயற்கை அரணான மலைத்தொடர்க்கு மேற்கே சென்று சேரன் ஆண்டான், கிழக்கு வடக்கில் சோழனும், தெற்கில் பாண்டியனும் ஆண்டனர். அல்லது இம்மூவரும் பிரியும் நிலை உருவாகியிருக்கலாம். (கால்டுவெல், 1881).
கொற்கையில் புத்தர்
தமிழ்மொழிக்குத் தொண்டாற்றிய மேலைநாட்டு அறிஞர் கால்டுவெல், கொற்கைப் பகுதியில் கி.பி.1880இல் ஆய்வுகள் நடத்தியதில் பல தொல்பொருள்களுடன் இரண்டு புத்தர் சிலைகளைக் கண்டார். அவற்றில் ஒன்று ஊருக்குள்ளும், மற்றொன்று வயல்வெளியிலும் இருந்துள்ளது. அமர்ந்த நிலையிலுள்ள புத்தரது சிலை இன்றும் அங்குள்ள வன்னிமரத்தினருகில் காணப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வு:
தாமிரபரணி ஆற்றின் வடக்கே சுமார் 3கி.மீ. தொலைவில் இவ்வூர் அமையப் பெற்றுள்ளது. பண்டைய காலத்தில் தாமிரபரணி ஆறு இப்பகுதி வழியாகச் சென்றுள்ளது என்பது ஆதாரங்கள் மூலம் அறியப்படுகிறது. சங்க காலத்தில் பாண்டியர்களின் மிகச் சிறந்த துறைமுகப் பட்டினமாகக் கொற்கை விளங்கியது. கொற்கைப் பாண்டியர்கள் என்போர் ஐந்து பாண்டியருள் ஒருவராவர். கபாடபுரத்தையடுத்து கொற்கையே பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அக்காலத்தில் கொற்கை முக்கிய முத்துக் குளிக்கும் துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்துள்ளதைச் சங்க இலக்கியங்களும் வெளிநாட்டவர் பயணக்
குறிப்புகளும் குறிப்பிடுகின்றன. கிரேக்க, ரோமானிய வணிகர்கள் இப்பகுதிக்கு வந்து முத்துகள் வாங்கிச் சென்றதை அந்நாட்டவரின் பயணக்குறிப்புகளிலிருந்து அறியமுடிகிறது. கொற்கையில் நடைபெற்ற அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் ஒன்பது அடுக்குகளுடன் கூடிய செங்கற் கட்டடப் பகுதி ஆறு வரிசைகளில் இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டடப் பகுதிக்குக் கீழே மூன்று பெரிய சுடுமண் வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. கி.பி. 200 – 300 நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடுகளும், அடுப்புக் கரித்துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலத்தை அறியும் பொருட்டு மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பியதில், கி.மு.785 என்று கணக்கிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (நாகசாமி குழுவினர் அறிக்கை – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1968 – 69).
கொற்கையில் தொல்லியல் ஆய்வாளராக 1982 முதல் 1988 வரை பணியாற்றிய திரு.சந்திரவாணன், கொற்கை அகழ்வாய்வு மற்றும் வரலாற்று நிகழ்வுகளிலும் புத்தர் சிலை குறித்துக் குறிப்பிடவில்லை.
கொற்கையைப் பற்றி தமிழ் அறிஞர்களின் கருத்து
இன்றைய கொற்கையில் பழைமையான வரலாற்றுச் சின்னங்கள் எதுவுமில்லை. அங்கிருப்பது ஒரேயொரு வன்னிமரம், இரண்டாயிரம் வருடப் பழைமையானது என்கிறார்கள். அதுவும் முறிந்து தரையில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. அதன் முன்பாக நடுகல் சிற்பம் ஒன்றும் அதையொட்டிச் சமணச் சிற்பம் ஒன்றும் இருந்ததாகக் கூறுகிறார்கள். அது ‘சமணப் பிரதிமையில்லை, புத்தரின் சிற்பம் என்று கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன். உண்மை எதுவெனத் தெரியவில்லை’ என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
‘கொற்கை, பாண்டியர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தந்த துறைமுகமாகும். கொற்கையின் பழைமையை அறிந்துகொள்வதற்காகத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பன்னிரண்டு இடங்களில் அகழ்வாய்வுப் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். இங்கே கண்டறியப்பட்ட பானையோட்டில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துகள் கி.மு.785 முதல் 95 ஆண்டுகள் கூடவோ குறைவாகவோ இருக்கக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய கண்டுபிடிப்பாகும். கொற்கையில் கடல் இல்லை. இந்தப் பயணக்கட்டுரை எழுதும்போது உடன் பயணித்தவர் சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்.’ எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பதில் நாம் கவனிக்க வேண்டியது கொற்கையில் புத்தர் சிலை இருந்தது என்ற கால்டுவெல்லின் கூற்று மெய் என்பதைத்தான்.
கொற்கை பாண்டியர்களின் நாணயங்கள்
R.P.JACKSON, T H E DOMINIONS, EMBLEMS, AND COINS OF THE SOUTH INDIAN DYNASTIES என்ற நூலில் பக்கம் 330இல் பாண்டியர்களின் ஆரம்பகால நாணயங்கள் துளையிடப்பட்ட நாணயங்களாக இருந்தன. இது அகழாய்வில் கண்டெடுத்த புதைந்த செப்பு நாணயங்கள் மூலம் கண்டறிய முடிகிறது. அவை விளக்குவதாவது,
- முன்புறம் – யானை; பின்புறம் – எதுவுமில்லைமுன்புறம் – எண் 1இல் உள்ளது போல்; பின்புறம் – பௌத்தச் சக்கரம்
- முன்புறம் – இரண்டாம் நிலை சின்னங்களைக் கொண்ட யானை முதன்மைக் குறி, மேலே சந்திரன் மற்றும் முன்னால் போர்க் கோடாரி; பின்புறம் – எண் 2இல் உள்ளது போல்.
இந்த ஹெரால்டிக் குறிகள் சந்தேகத்திற்கு இடமின்றிச் சில முக்கியமான வரலாற்று நிகழ்வைக் குறிக்கின்றன. இந்த நாணயங்கள் மதுராவில் காணப்பட்டதை விட சிறியதாகவும் மெல்லியதாகவும், மாறுபட்ட இரண்டாம் நிலை குறிகளைக் கொண்டுள்ளன. இரண்டு தொடர்களும் சமகாலமாக இருந்ததால், திரு.லோவெந்தல் கொற்கையிலும் மதுராவிலும் இரண்டு பாண்டிய வம்சங்கள் இருந்ததாகக் கருதுகிறார். - முன்புறம் – முன்னால் பூந்தொட்டியுடன் கூடிய காளை; பின்புறம் – எண் 2இல் உள்ளது போல்.
- யானை மற்றும் இரண்டாம் நிலை அடையாளங்களுக்குப் பதிலாக நட்சத்திரங்கள், சக்கரங்கள், கோடுகள், சுருள்கள், இருபுறமும் உள்ள மற்ற உருவங்கள் உள்ளிட்ட சின்னங்கள் பயன்படுத்தப்பட்டன.
- வம்ச சின்னங்கள் பிராமணிய அடையாளங்களுடன் கிடைக்கின்றன. எண் 5,6 ஆகியவை தென்னிந்தியா முழுதும் பொதுவாக உள்ளதென்றும், அவை பௌத்தமும் பிராமணியமும் மோதிக்கொண்ட கி.பி நான்கு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததென்றும் கூறப்படுகிறது.
- முன்புறம் – யானை; மேலே தமிழ் எழுத்து (சா – சந்த்ர – சந்திரன்); பின்புறம் – சண்டையிடும் மனிதனின் உருவம், போர்க் கோடாரி, சந்திரன். இந்த உருவம் ‘சிலோன் வகை’ என்றும் ‘ரிக்சாஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது, ஆனால், திரு.லோவெந்தல் இது ராஜா என்றே குறிப்பிடுகிறார். மேலும், தங்கள் நாணயங்களின் முகப்புக்குக் கருடன் உருவத்தைத் தேர்வு செய்யும் விஷ்ணு வழிபாட்டாளர்கள் தம் கடவுள்களின் எதிரியான ‘ரிக்ஷாக்களைப்’ பின்பக்கத்தில் குறிக்க வாய்ப்பில்லை என்றும் வலியுறுத்துகிறார். இந்த உருவம் பின்னாட்களில் இலங்கைச் சோழர்களாலும் பிற சோழர்களாலும் அவர்களின் நாணயத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இங்கு கடவுள்களின் எதிரி எனப் பௌத்தர்களைக் குறிப்பிடுவதை அறியலாம். ரிக்சாஸ் என்பதை ராக்ஷசர் என்று பொருள் கொள்ள இடம் இருக்கிறது. அவைதீகச் சமயத்தவரை எதிரியாகவே பொருள் கொண்டு உருவகிக்கின்றனர். - முன்புறம் – கருடன்; பின்புறம் – ராஜா, போர்க் கோடாரி,
- சந்திரனின் உருவம்.
- எண்கள் 7,8 இரண்டும் கி.பி ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது.
- முன்புறம் – ராஜா நிற்கும் உருவம்; பின்புறம் – அரசன் அமர்ந்திருக்கும் உருவம், கோடாரி, சந்திரன்.
- முன்புறம் – சிவன், பார்வதி; பின்புறம் – சூரியன், சந்திரன், போர்க் கோடாரி.
- முன்புறம் – கருடன்; பின்புறம் – சங்கு சக்கரத்துடன் நாமம்.
இந்த நாணயம் அனைத்து விஷ்ணு அடையாளங்களையும் கொண்டுள்ளதால், பழைய வம்சம் ஒழிக்கப்பட்டதாகவோ அல்லது அரச மதம் சைவத்திலிருந்து வைஷ்ணவ மதத்திற்கு மாற்றப்பட்டதாகவோ தோற்றமளிக்கிறது. ஒருவேளை ராஜாவின் வம்சாவளியை வெளிப்படுத்தும், போர்க் கோடாரி மற்றும் சந்திரனைக் கொண்ட முந்தைய வடிவம் விரும்பத்தக்கதாக இருக்கலாம்.
சங்க காலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்ததற்கான சான்று கொற்கை பாண்டியரின் நாணயத்தில் உள்ளது. நாணயத்தின் முன்புறத்தில், எருது ஒன்று இடப்பக்கம் நோக்கி நிற்கிறது. மாட்டின் கொம்பிற்கு அருகில், முழுமையாக அச்சாகாத, மௌரிய பிராமி வகையைச் சேர்ந்த ‘மா’ என்ற எழுத்தும், எருதின் மேல்புறம் தமிழ் – பிராமி வகையைச் சேர்ந்த ‘ற’ என்ற எழுத்தும், இடமிருந்து வலப்பக்கம் படுத்திருக்கும் நிலையில் உள்ளது. இது, இடப்பற்றாக்குறையால் படுத்த நிலையில் அச்சிடப்பட்டுள்ளது. கடைசி எழுத்தான ‘ன்’ தமிழ் – பிராமி எழுத்து முறையில் உள்ளது. இந்த மூன்று எழுத்துகளையும் சேர்த்தால், ‘மாறன்’ என்ற பெயர் வரும். நாணயத்தின் பின்புறத்தை, மிக நுட்பமாக ஆய்வு செய்தால், ஒரு வீரன் எருதை அடக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. இதன்மூலம் தொன்மைக் காலத்திலேயே ஜல்லிக்கட்டு விளையாட்டு இருந்ததை அறிய முடிகிறது. (தினமலர், ஜன 20, 2017).
அசோகப் பேரரசர் தன் கல்வெட்டில் கூறியுள்ள ‘தம்பிரபருணி’ நாடு, கொற்கை பாண்டியர்களது நாடுதான் என்பதை உறுதி செய்யும் காலம் வருகிறதோ எனக் கருதுகிறேன் என்கிறார், இரா.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகம், சென்னை: அக் 12, 2016.
சாத்தன்குளம் அ.ராகவன் ஆய்வில் கொற்கை
கொற்கையிலிருந்து கடல் நான்கு மைல் தொலைவிற்கு உள்வாங்கப்பட்ட பின் பாண்டியர்கள் தங்களுடைய மாநகரை மதுரைக்கு மாற்றினர். கொற்கையிலிருந்து மக்கள் பல்வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சென்றனர். குளத்தின் நடுவே வெற்றிவேல் செழியன் அம்மன் கோயில் உள்ளது. ஆதியில் கண்ணகியின் சிலை இருந்ததாகவும் அது காணாமற் போனபின் துர்க்கையின் சிலை வைக்கப்பட்டுள்ளதாக அ.ராகவன் (பக்கம் 81இல்) கூறுகிறார். அஃக சாலை விநாயகர் கோயில், பாண்டியர் காலத்துக் கொற்கையில் காசுகள் அச்சடிக்கப் பயன்படுத்திய இடம் என்கிறார். அஃக சாலை கோயிலின் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன.
கொற்கையில் பல நூற்றாண்டுகளாக நிற்கும் வன்னிமரம் ஒன்றுண்டு. அது தரையை ஒட்டிச் சாய்ந்து மேலே நிமிர்ந்து நிற்கிறது. அம்மரத்தின் அடியிலுள்ள பொந்திற்கு நேரெதிரே சாலை நடுவே சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று காணப்படுகிறது என்றும் அது இடுப்பளவு மண்ணிற்குள் புதைந்துள்ளது என்றும் இன்னுமொரு தீர்த்தங்கரர் சிலை ஊரையடுத்த தோட்டம் ஒன்றில் இருக்கிறது என்றும் கூறுகிறார். அதேவேளை கால்டுவெல்லின் குறிப்பை அ.ராகவன் மறுக்கவுமில்லை.
நெல்லை துறைமுகங்கள் நூலில் கொற்கை
‘நெல்லை துறைமுகங்கள்’ பனுவலில் (பக்.51) வன்னி மரத்தினடியில் ஆஞ்சநேயர் கழுத்தில் தண்ணீர்க் காவடி எடுத்துச்செல்வது போல் உள்ளது என்று முத்தாலங்குறிச்சி காமராசு குறிப்பிடுகிறார்.
பாண்டிய மன்னர்கள் ஆதிகாலத்தில் சைவர்களாக இருந்தனர். அதன் பிறகு பௌத்தர்களாகவும் சமணர்களாகவும் மாறியிருக்கின்றனர். அவர்கள் பிற்காலத்தில் வைணவர்களாயும் பிறகு பார்ப்பனிய மதத்தைத் தழுவியும் சோமாசிப் பட்டம், தேவதீட்சிதர் பட்டம் முதலியன பெற்றும் வாழ்ந்துள்ளார்கள். வைணவத் தாக்கத்தால் அதிவீரராமன், வரதுங்கராமன், வரகுணராமன் முதலிய பெயர்களைத் தாங்கியதோடு தங்கள் காசுகளில் வைணவச் சின்னங்களையும் பொறித்துள்ளார்கள். பல காசுகளில் கருடாழ்வார் உருவம் உள்ளது. அ.ராகவனும் இக்கருத்தைப் பதிவு செய்துள்ளார். இப்பகுதியைச் சுற்றிலும் நவதிருப்பதி உள்ளிட்ட வைணவக் கோயில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘சமண / பௌத்தச் சின்னங்களைப் பெருமளவில் வைணவம் ஆக்கிரமிப்புச் செய்துள்ளதை அறிகிறோம். கிடைக்கின்ற சான்றுகளை மையமாகக் கொண்டு, இப்பகுதியில் வைணவத் தலங்களைப் பிரசித்தி பெற்றதாக்கிட இவ்வேலை நடந்திருக்கலாம் என்று கருதலாம்.
கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சிலைகளும் அரசியலும்
வன்னிமரத்தின் அருகிலிருந்து தன்மம் போதித்ததால் வன்னியராஜா என்ற பெயர் கொண்டுள்ளார். வன்னி என்பது பிரமசரியத்தைக் குறிக்கிறது (சூடாமணி நிகண்டு). தற்போது, புத்தர் சிலைகள் கொற்கையிலிருந்து திருடு போய்விட்டன.
கண்ணகி கோயிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. அதனருகில் பெரிய அரசமரம் ஒன்றின் கீழ் ஐந்து தலை நாக வடிவில் சமண/பௌத்தச் சமயத்தைச் சார்ந்த பழங்கால சிலை இருக்கிறது. அதனருகே ஒரு சிலை இருந்ததாக மக்கள் கூறுகிறார்கள். அதாவது, திருட்டுப் பிள்ளையார் சிலைக்குச் சக்தி அதிகம் என்ற நோக்கில் யாரோ திருடிச் சென்றனர் என்கிறார்கள். கோயில் சிலைகளைத் திருடினால் அவை திருட்டுக் கணக்கில் சேர்க்கப்படுவது இல்லை என்பதுபோலும் உள்ளது.
கால்டுவெல், அ.ராகவன் இருவரும் குறிப்பிட்ட இரண்டு சிலைகளுடன் அரசமரத்தடியில் இருந்த சிலையையும் சேர்த்துக் கொற்கையில் மூன்று சிலைகள் மாயமாகியுள்ளன. அவற்றுள் ஒரு சிலையை நாகசாமி குழுவினர் 1968 – 1969இல் சென்னைக்கு எடுத்துச் சென்றதாக முத்தாலங்குறிச்சி காமராசு பதிவு செய்துள்ளார். ஆனால், நாகசாமி குழுவினரோ தமது அறிக்கையில் சிலைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
1981ஆம் ஆண்டு வெளிவந்த ‘தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும்’ நூலில் (பக்.361) வன்னிமரத்தடியில் புத்தர் சிலை ஒன்று அமர்ந்த நிலையில் உள்ளது என்று வி.கந்தசாமி குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘கோநகர் கொற்கை’ நூலில் அவை சமண தீர்த்தங்கரர் என்று அ.ராகவனால் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு சிலைகளுள் ஒன்று கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மர்ம நபர்களால் திருடப்பட்டதாகக் கூறுகின்றனர். வன்னி மரத்தடியில் அமர்ந்த நிலையில் இருந்த சிலையை 2009 – 2010ஆம் ஆண்டில் திருடிச் சென்றனர் என்கின்றனர் கொற்கை மக்கள். அப்படியானால் நாகசாமி குழுவினர் எடுத்துச் சென்ற சிலை வயல்வெளியில் கண்டெடுத்ததாக இருக்க வேண்டும்.
பௌத்த/சமண சிலைகள் எதுவும் தற்போது இல்லை. இந்த விவகாரத்தில் தொல்லியல் துறை மற்றும் அரசின் கவனக்குறைவு வெட்ட வெளிச்சமாகிறது. மேலும், கால்டுவெல் குறிப்பிட்டது புத்தர் சிலைதான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. சமண தீர்த்தங்கரர் சிலை இங்கு கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சிலை கடத்தல் – இடமாற்றம் போன்ற பல கொள்ளை சம்பவங்கள் நடந்தேறுவதைச் செய்தியாகத் தொடர்ந்து பார்த்துவருகிறோம்.
மேலும், கால்டுவெல், அ.ராகவன் ஆகிய இருவரும் ஆஞ்சநேயர் சிலை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக, முத்தாலங்குறிச்சி காமராசு கள ஆய்விற்குச் செல்கையில் ஆஞ்சநேயர் சிலை இருந்துள்ளது. தற்போதும் அச் சிலை இருக்கிறது. ஏனென்றால், சமீப காலத்தில்தான் சிலை திருடு போயிருக்கிறது. அதன் பிறகே ஆஞ்சநேயர் சிலையை இங்கு வைத்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
ஆனால், தற்போது தினந்தோறும் பூசை செய்யும் சைவ வேளாளர் குடும்பத்தினர் ஆஞ்சநேயர் சிலை என்கின்றனர். இந்துத்துவத்தின் ஆதிக்கம் மூலம் ஆஞ்சநேயர் சிலை மாற்றப்பட்டிருக்கலாம். மேலும், ராமரோடு தொடர்புபடுத்தலாம் என்ற நோக்கோடு கடற்கரையோடும் பொதிகை மலையோடும் தொடர்புபடுத்திட இத்தகைய சூழ்ச்சியைச் செய்திருக்கலாம். ஆஞ்சநேயர் சிலை இராமாயண காலத்தைச் சேர்ந்தது என்பதற்குச் சான்று சேர்ப்பதற்காகவும் பழங்காலம் முதலே இங்கு வைதீகச் சமயம் இருந்தது எனக் கூறுவதற்கும் இச்சம்பவம் அரங்கேறியிருக்க இடமிருக்கிறது எனலாம்.
வால்மீகியின் இராமாயணத்தில் அனுமார் இலங்கைக்குச் சென்று சீதையைத் தேடுங்கால் ஒரு கோபுரத்தின் உச்சியில் உக்கார்ந்து ‘இஃது பௌத்தர்களது விஹாரம்’ என்று கூறுவார். அத்தகைய யுத்த காலத்திலேயே பௌத்தர்கள் விஹாரம் இருந்திருக்க, புத்தருக்குப் பின்பே இராமர் தோன்றியுள்ளார் என்பதை இராமாயண கதை மூலமே தெளிவுறலாம். வசிஷ்டர் இராமருக்கு ஞான சாதனம் போதிக்கும் இடத்தில், “அப்பா இராமா, உன்னுடைய பாட்டன் உத்தாலகன் என்போன் ‘புத்தரைப் போல் உத்திரமுகம் நோக்கி தாமரைப் புட்மமாம் பதுமாதனத்தில் உட்கார்ந்து ஞானசாதனஞ் செய்துள்ளான். அதுபோல நீயுஞ் செய்யக்கடவாய்” என்று கூறியுள்ள மொழியாலேனும் இராமருக்குப் புத்தர் முந்தியவர் என்று விளங்கவில்லையோ! இங்கு அயோத்திதாசர் குறிப்பிட்டுள்ள சான்றுகள் அவர்களுடைய சூழ்ச்சியை வழிமறித்திட உதவுகிறது.
நடுகல் வழிபாட்டில் ஆஞ்சநேயர்
வன்னிமரத்தின் அருகில் ஒரு நடுகல், ‘பொற்கை பாண்டியன் வணங்கிய ஆஞ்சநேய மூர்த்தி’ எனும் நாமத்தோடு உள்ளது. ஆஞ்சநேயர் நடுகல்லின் பின்புறம் திரிசூலக் குறி உள்ளது. பொற்கை பாண்டியனின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு. சூலக்குறி கற்களின் காலம் மிகப் பிந்தையது. அதனால் ஆஞ்சநேய மூர்த்தி நடுகல்லின் காலக்கணிப்பில் ஐயம் ஏற்படுகிறது. தமிழகத்தில் தனி நடுகல் ஆஞ்சநேயர் வழிபாடு என்பது விஜயநகரப் பேரரசு காலத்தில்தான் தொடங்கியது. குறிப்பாக, கிருஷ்ண தேவராயரின் (1509 – 1529) தலைமைக் குருவாகிய வியாசராயர்தான் இதுபோன்ற சிற்பங்களைத் தமிழகத்தில் அறிமுகம் செய்தார். இவர் இந்தியா முழுவதும் 732 சிற்பங்களை வைத்ததாகக் கூறுவர்.
‘தலைக்குமேல் உயர்ந்த அனுமனின் வால், ஆசி வழங்குவதற்காக உயர்ந்த வலது கரம், தொடையின்மேல் இடது கரம், அதில் சௌகந்தி மலர், உயர்ந்து நிற்கும் வாலில் கட்டப்பட்ட ஒரு மணி’ இவையே வியாசராயர் செய்துவைத்த அனுமர் அமைப்பு. அறிஞர்கள் மேலாய்வு செய்து விளக்கமளித்திட வேண்டிய தேவையுள்ளது என்கிறார் நெல்லை சித்திக்.
வன்னிமரத்தடி சாஸ்தா
கால்டுவெல் குறிப்பிட்ட இரண்டு சிலைகளுள் ஒன்று வன்னிசாஸ்தாவாக வழிபடப்பட்டது. 2000ஆம் ஆண்டு பழைமையான வன்னிமரத்தையும் வன்னிசாஸ்தாவையும் வணங்கிச் செல்ல ஆண்டுதோறும் மக்கள் வருவது மரபு. வன்னிசாஸ்தா என்று மரத்தினடியில் இருக்கின்ற சிலையை மக்கள் வழிபடுவர். அங்கிருந்தது புத்தரின் சிலையாகும். ஆனால், தற்போது அந்தச் சிலை காணாமல் போய்விட்டது. அதற்கு மாற்றாக நடுகல் ஒன்று உள்ளது. அதில் இருக்கின்ற உருவம் ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறது. வன்னிசாஸ்தாவை வழிபட ஒவ்வோர் ஆண்டும் பௌர்ணமி நாளான பங்குனி உத்திரத்தன்று மக்கள் வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். அங்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டுச் செல்வது வழக்கம். மதுரை, சாத்தன்குளம், நட்டாத்தி, நாகர்கோவில், கன்னியாகுமரி, வள்ளியூர், நாங்குநேரி, ஏர்வாடி, திருநெல்வேலி போன்ற ஊர்களிலிருந்து வருவதாகக் கொற்கை மக்கள் சொல்கின்றனர்.
டாக்டர் கால்டுவெல் குறிப்பிட்ட இரண்டு புத்தர் சிலைகள் குறித்து எந்த அறிக்கையிலும் தொல்லியல் துறையினர் குறிப்பிடவில்லை. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கு புத்தர் சிலைகள் இருந்ததாகக் கொற்கை மாரியப்பன் குறிப்பிடுகிறார். அவர் அவற்றைப் பித்தர் சிலைகள் என்று கூறினார். திட்டமிட்டுத் தொல்லியல் துறையினர் மறைத்துள்ளதை அறியலாம்.
கொற்கையில் கிடைத்த காசுகளில் தாமரை, யானை, திரிசூலம், பிறை, நண்டு, மயில், சங்கு போன்றவை காணப்படுகின்றன. இவை யாவும் மகாயான பௌத்த அடையாளங்கள்.
அஃக சாலை விநாயகர் கோயில் முன்பொரு காலத்தில் புத்த விஹாரமாக இருந்திருக்கலாம். கால்டுவெல் வயல்வெளியில் கண்டதாக ஒரு புத்தர் சிலையைக் குறிப்பிடுகிறார். அது மேற்சொன்ன கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம். தற்போதுள்ள விநாயகர் கோயிலில் நந்தி சிலை உள்ளதால் சிவன் கோயிலாகக் கட்டமைத்திருக்கலாம். அது தற்போது ஈஸ்வரமுடையார் விநாயகர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நந்தி சிலைக்கு முன்னதாக ஒரு பீடம் இருக்கிறது. நந்தி சிலைக்கும் பீடத்திற்கும் இடையேயான காலங்கள் வேறுபாடு கொண்டதைக் காண முடிகிறது. புத்த விஹாரே கால மாற்றத்தால் சிவன் கோயிலாகவும் விநாயகர் கோயிலாகவும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கலாம்.
கொற்கையில் கண்ணகி கோயிலானது வெற்றிவேல் செழியன் நங்கை அம்மன் என்ற பெயரில் தற்போது வழிபடப்படுகிறது. மக்களால் கண்ணகி கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கண்ணகி வழிபாடு பகவதி வழிபாடு என்றும், பத்தினி தெய்வ வழிபாடு என்றும் உள்ளது. கேரளாவில் புத்தர் சிலை எங்கெல்லாம் கிடைத்ததோ அங்கு பகவதியின் பெயரில் வழிபடப்படுகிறது. பௌத்த விஹாரங்கள் இருக்கிற இடங்களுக்கு அருகில் கண்ணகி/பகவதி தெய்வ வழிபாடு உள்ளது. பௌத்தம் வீழ்ச்சியுற்ற பிறகு பகவதி வழிபாடு பரவலானதற்குச் சாத்தியம் உள்ளதாக பி.சி.அலெக்ஸாண்டர் (பக்.88) குறிப்பிடுகிறார். இவையனைத்தும் கொற்கையில் பௌத்தம் செறிவாக மக்களோடு கலந்திருப்பதை வெளிக்கொணருகிறது.
இவ்வாறான தொன்மைமிகு நாகரிகத்தின் தொட்டிலாம் திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழி எழுத்துகளுடன் மண்பானை ஓடுகளுடன், செம்பு மோதிரம், இரும்பிலான பொருட்கள், சுடுமண் விளையாட்டுப் பொருள்கள் (சதுரங்க காய்கள்), தக்களி, கார்னிலியன் (சூதுபவளம்) மணிகள், கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் போன்ற முக்கிய தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. நம்பியாற்றங்கரையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வந்ததற்கு இவையே சான்றாகும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் வசந்தகுமார், காளீஸ்வரன் குறிப்பிடுகின்றனர். தமிழ் எழுத்துகளான ‘திஈய’, ‘திச’, ‘குவிர(ன்)’ பொறிப்புகள் பானை ஓடுகளில் கிடைக்கப்பெற்றன. இதன் மூலம் ஆற்றங்கரை ஓரங்களில் மிகவும் அறிவார்ந்த நாகரிகத்தோடு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை அறியமுடிகிறது. (தினமணி, ஜூலை 4,2023).
மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் கி.மு. 3 – 2 நூற்றாண்டுக் கால கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவை அக்காலத்தில் பௌத்த/சமண சமயங்கள் தமிழ்நாட்டில் பரவியதற்குச் சான்று பகர்கின்றன (கே.கே.பிள்ளை (2002:68)).
அவைதீகச் சமயங்கள் மக்களின் உள்மெய்களைச் சார்ந்து இயங்கும் தன்மையுடையது. வட்டாரத்தைச் சார்ந்த மதமாக இருக்கையில் பல நூற்றாண்டுக் காலமாக ஒரே பகுதியில் மக்கள் வாழ்ந்துவருவதால் அவர்களுக்கென்று சமூக அசைவுகளான ஒரு பண்பாடு உருவாகியிருக்கும். பண்பாடு மண்/நிலம் சார்ந்தது. நிலப்பகுதியில் வாழ்கிற மக்கள், அவர்கள் பேசுகிற மொழி, உற்பத்திப் பொருள்கள், புழங்கு பொருள்கள், இசை, கலை இலக்கிய வெளிப்பாடுகள், வாய்மொழி மரபுகள் எல்லாம் சேர்ந்ததற்குப் பெயர் பண்பாடு. மதங்கள் உருவாவதற்குப் பல நூறாண்டுகளுக்கு முன்பே மக்கள் பண்பாடுடையவர்களாக இருந்தார்கள். மதங்கள் உருவாகி பண்பாட்டிலே இடைவெட்டாகப் பல செய்திகளை நிகழ்த்துகிறது. மதம் என்பது அதிகாரத்தை நோக்கிய நகர்வு என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன்.
கொற்கையில் வன்னிசாஸ்தா கோயில் உள்ளதைக் கண்டோம். இது, சித்தூரில் இருக்கின்ற வன்னியராஜாவோடு தொடர்பு கொண்டிருக்கலாம். சித்தூருக்கும் கொற்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கலாம். பௌத்த சமயம் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள ஊர்களில் அதிகமாக இருந்ததற்குச் சான்று உள்ளது. தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிற சித்தூர் தென்கரை மகாராஜா சாஸ்தா கோயிலானது நம்பியாற்றங்கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது. துலுக்கர்பட்டியிலிருந்து 6.1 கிமீ (3.7 மைல்) தூரத்தில் இருக்கிறது. ஆற்றின் தென்கரையில் நிலைகொண்டுள்ளதால் தென்கரை மகாராஜா என்ற பெயரோடு விளங்குகிறது. மேற்சொன்ன தகவலையும் கருத்தில் கொண்டு, துலுக்கர்பட்டியில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் மூலம் திருநெல்வேலியில் பௌத்த எச்சங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம். துலுக்கர்பட்டியைத் தொடர்ந்து சித்தூரிலும் அகழாய்வு செய்தால் அதிகப்படியான வரலாற்றுச் சுவடுகள் கிடைக்கலாம்.
பயன்பட்ட நூல்கள்
- Caldwell R.A Political and general history of the district of Tinnevelly, in the presidency of Madras: From the earliest period to its cession to the English government in AD 1801. E.Keys, at the Government Press; 1881.
- Caldwell, Explorations at Korkai and Kayal, Indian Antiquary, VI (Bombay, 1877), pp. 80-83.
- Pate, H.R., 1917. Madras District Gazetteers-Tinnevelly Volume I & II.
- Jackson RP. The Dominions, Emblems and Coins of the South Indian Dynasties. Harrison; 1913.
- சாத்தன்குளம் அ.ராகவன், கோநகர் கொற்கை, அமிழ்தம் வெளியீடு, 1971.
- S.R.Balasubrahmanyam, Middle Chola temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070, Publisher, Thomson Press (India)1975.
- கோ.வே.பெருமாள், பொருநை வளம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1977.
- ம.ராஜசேகர தங்கமணி, பாண்டியர் வரலாறு, தமிழ்நாடு பாடநூல் கழகம், 1978.
- தி.ஸ்ரீ.ஸ்ரீதர் இ.ஆ.ப., தமிழக அகழாய்வுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2008.
- வி.கந்தசாமி, தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும், பழனியப்பா பிரதர்ஸ். 2006.
- முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைத் துறைமுகங்கள், காவ்யா வெளியீடு, 2011.
- தொ.பரமசிவன், பரண், சந்தியா வெளியீடு, 2013.
- முனைவர் ஷூ ஹிகோசாகா, தமிழில் இ.ஜெயபிரகாஷ், Buddhism in Tamilnadu a new perspective: பொதிகை மலையும் அவலோகிதீஸ்வரர் வழிபாடும், மானுடம் இதழ் 8-9 பிப்ரவரி ஜூலை 2020.
- பூர்ணா, வரலாற்றில் திருநெல்வேலி (தொகுப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, பிப்ரவரி 2023.