ஊருக்குள் அடங்காமல் சற்றே தூரத்தில்
எமது சஞ்சரித்தல்
மூர்க்கமாய்ப் பேரன்பைப் பிரசவிக்கும்
அவ்வாதி பெரும்புலத்தில்
அடர்வன நிழலாய்ப் படர்ந்திருக்கிறேன்
எங்கள் மூதாதைகள் கையளித்த கதைகளை
அறச்சீற்றத்தோடு பண்ணிசைக்கிறேன்
கிழத்திகளும் கிழவன்களும்
பறையை வாட்டியவாறு ஒத்திசைக்கிறார்கள்
சலங்கை கழன்டோட சடை விரித்தாடுகிறேன்
புழுதி வெளியெங்கும் நிறைகிறது
முதும்பறையின் பேரதிர்வில்
எதிரிகளைக் குலை நடுங்கச் செய்வது குறித்து
சந்ததிகளுக்கு ஓதுகிறேன்
உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்த அவர்கள்
எல்லாம் சரி நமக்கேன் முகமில்லையென வினவுகிறார்கள்
முண்டமான சிலையுடன் காடுமேடெல்லாம் ஓடுகிறேன்
உடைபட்ட புத்தன் முகத்தைத் தேடி.