எல்லா இரவுகளிலும் கனவுகள் வருகின்றன.
தலைகோதியபடி நெடுந்தூரம் பயணிக்கிறது
என் கனவிற்கென்று
ஒரு தூக்கம் வைத்திருக்கிறேன்…
அவை என் இரவுகளின் பிரக்ஞையைக் கொன்று வளர்கிறது…
மதுதிரவங்களின்றி உடல்களை அதிமெல்லிய கிறக்கங்களுடன் மிதக்கச் செய்கிறது.
பல நேரங்களில் எனை எனக்குச் சுமையாகவும் இழுத்துப் போர்த்துகிறது.
பசித்திருக்கும் அத்தனை நினைவுகளையும்
தீயிட்டுக் கொளுத்தி விரிந்திருக்கும்
என் கனவுக் கடல்…
நீந்தத் தவிக்கும் சிறுமீன்களின் குவியலாய் நான்…
எனதுடலையே இரையாக்கித் தருகிறேன்…
கடலெங்கும் நிரப்பியிருக்கும் எனதுடல்…
கொடுக்க மறந்த அத்தனை முத்தங்களாலும் பொங்கி வழிகிறது..
வாழ்வெங்குமான ஒழுங்குகள் கனவுகளையும் அச்சுறுத்துகின்றன…
மூர்க்கமான ஒரு யானையைப் போல்
நீண்ட ஒலியை நோக்கி நெடுந்தூரம் தூரப் பறக்கிறேன்.
சாயம் பூசிய பூக்களென அறியாது
தேன் தேடி அலைந்து திரிகிறேன் கானகமெங்கும்…
என்கனவில் வலம் வரும்
ஆயிரம் பட்டாம்பூச்சிகளில் நானும் ஒருத்தியாய்..!
கனவுகள் – மீனுமீனா
Credits: Liubov Kuptsova