அவன் முகம் கண்டு ஒவ்வொரு முகமும் அகோரமாகிறது
ஒவ்வொரு கண்ணிலும் குரோதம்
அந்த நிலத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்கூட மீசை முளைக்கிறது
ஆணவத்தோடு முறுக்கிக்கொள்கிறார்கள்
அனைவருக்கும் வேட்டை மிருகத்தின் பற்களும் நகங்களும் முளைக்கின்றன
நடுக்கமுறுகிறான் அவர்கள் கொக்கரிக்கிறார்கள்
கொடிய ஆயுதங்களுடன் கூட்டமாக அவனை நெருங்குகிறார்கள்
பூங்கொத்துகளை அவர்களிடம் நீட்டுகிறான்
கொடுவாள் வீசி அவனை நிலைகுலையச் செய்கிறார்கள்
திடீரென ஒருவன் உயிர் நிலையில் எட்டி உதைக்கிறான்
ஆணும் பெண்ணுமாக அவன் காதில் விசத்தை ஊற்றுகிறார்கள்
ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்
பிறகொரு நாள் இடுப்பளவு நீர் நிலையில் உப்பி மிதக்கிறான்
ஒருநாள் ஆளுயர மரத்தில் சுருக்கிட்டுக் கிடக்கிறான்
ஒருநாள் கருகிய நிலையில் ‘தண்ணீர் தண்ணீரென’ நாக்கை நீட்டுகிறான்
மற்றொருநாள் ரயிலொன்று அவனை முண்டமாக்கிக் கடக்கிறது
சிதறிக்கிடக்கும் அவன் சதைகளைக்
காகமும் கழுகும் கொத்திக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்
ஆனாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து
எல்லோருக்கும் கொடுப்பதற்காக ஏராளமான பூங்கொத்துகளுடன்
வாஞ்சையோடு அந்த நிலத்திற்குள் நுழைவதை அவன் நிறுத்தவில்லை
வழக்கம்போல் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமும் அகோரமாகிறது
ஒவ்வொரு முறையும் யாரோ ஒருத்தி அந்த நிலத்தில் ரகசியமாய் அழுகிறாள்
வன்ம நிலம் – விடுதலை சிகப்பி
ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்