காய்ந்த விறகிலிருந்து சடசடத்து எரிகிறது கொள்ளி
ஆடாது அசையாது ஆழ்ந்து எரிகிறது அகலின் சுடர்
ஊறிய திரியிலிருந்து கங்கின் தணலுக்கும்
பின் கங்கிலிருந்து திரிக்குமாய்
மதர்த்து ஒளிர்கிறது காமம்.
♦
உலுப்புவதற்கு ஆளில்லாமல் காயும் புளியம்பழம்
இழுத்துச் செல்ல மனமின்றி விளையாடும் அலை
குறுக்கே வந்த நாய்க்குட்டிக்கு வாய்த்திருக்கிறது காலம்
தண்டவாளப் பூவில் தேனுறிஞ்சி லயித்திருக்கும் பட்டாம்பூச்சி
இவ்வளவு வைராக்கியம் கூடாதுதான்
பட்டாம்பூச்சிக்கும் எனக்கும் மரணத்திற்கும்
♦
முடை நாற்றம் வீசுவதற்குள்
ஏதாவது செய்தாக வேண்டும் நினைவுகளை
நெகிழ்ந்த தருணங்கள்கொண்டு
நினைவுகளின் உடலை இறுக்கித் தூர எறியலாம்தான்
அலையாக உருமாறி வந்து வந்து நனைத்துத் தொலையும்
நிதர்சனமெனும் குழி பறித்து ஒரேயடியாகப் புதைக்கலாம்தான்
முட்டிமோதித் துளிர் நீண்டு பனங்கள்ளாய் வழிந்து கொல்லும்
நினைவுகளை ஏதாவது செய்தாக வேண்டும்
தினமும் பிரசவித்துத் தள்ளுகின்றன அழகான குட்டிகளை
நாளின் குறுக்கும் நெடுக்குமாகத் தவழ்ந்து திரியும் நினைவின் சிசுக்கள்
கணங்கள்தோறும் சுமத்துகின்றன அன்பின் சிலுவைகளை.
♦
கத்திக்கொண்டிருந்த நினைவுகளையும் பொறுப்புகளையும்
வேரோடு பிடுங்கிக் கீழே எறிந்தேன்
ஒன்றுக்கு வாழவும் இன்னொன்றிற்கு சாகவும் பிடிக்கவில்லை.
வாக்குவாதம் முற்றி நினைவுகள் ஓங்கிக் குத்தியதில்
பொறுப்புகளின் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது
பதிலுக்குப் பொறுப்புகள் உதைத்ததில்
நினைவுகளின் உயிர் ஸ்தலம் உள்வாங்கிப் புடைத்தது
இரண்டையும் ஓர் அறைக்குள் அடைத்து
யாரும் கேட்காதவாறு காவலுக்கு நின்றேன்
வாழச் சொன்னது இப்போது சாகச் சொல்கிறது
சாகச் சொன்னது உடனே வாழ் வாழ் என்றது
இரைச்சல் மட்டும் குறைந்தபாடில்லை
சற்று நேரத்தில் கூச்சல் நின்றிருந்த அந்த அறைக்கு
எப்படியோ வந்திருந்தது ராஜகளை
ஒருவித பதற்றத்துடன் அறையின் கதவை
அர்ஜுனோடு வடிவேலு திறப்பது போல திறக்கிறேன்
இந்நொடி
அவ்வளவு மகோன்னதமாய் ஒலிக்கிறது.
♦