எங்கள் மீதேறி வளர்ந்ததிந்த மரம் பூத்துக்கொண்டிருந்தது…
காலத்தைச் சாக்கிட்டுக் காத்துக்கொண்டிருக்கும்படி சொன்னேன்…
தலைகள் துண்டிக்காத கதைகளை
முடிந்தளவு நிகழ்த்தத்தான் காத்திருந்திருக்கிறோம்…
இணைந்திடாத தண்டவாளங்களில் சிதறுவதற்கு
உடல்களும் போதவில்லை…
அலைகளுக்கென்று அனுமதியெல்லாம் தேவையில்லை…
காதலிடம் மட்டுமே பிரியம் வைத்துக்கொண்டு
உங்கள் ஒழுங்குகளைத் தட்டி வளர்கின்றன ஆயிரமாயிரம் வானவில்கள்…
உரசுவதை வீசியெறிந்தாலும்
மேலே வந்து விழுகின்றன நட்சத்திரங்கள்
மிக இயல்பாக…
ஒருபோதும் கைவிடாதபடி
காதல் எங்களைப் பிணைத்து வைத்திருந்தது…
சிரிப்பும் அழுகையும் நிஜமுமிருக்கின்றன…
இந்தக் காதலை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது…
கற்பூரப் புகையோடு
வார்த்தைகள் நெஞ்சிலடைக்கின்றன…
காதலுக்கு வீட்டில் சம்மதித்தால்
“பொங்கல் வைக்கலாம் என வேண்டிக்கொண்டோம்”
அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த இசக்கி
அன்பு செய்தே அலுத்துப் போய்க் கடவாய்ப் பல் தெரிய
மிகத் தீவிரமாய்ச் சிரித்துக்கொண்டிருந்தாள் சிலைவடிவில்…