எம்பாதம் படும் நிலமெங்கும் குருதி படர்ந்திருக்க
எம்முன்னே
கொலைக்கருவிகளோடு ஓராயிரம் வீரர்கள்
பாலைவன மணல் புயல் வீசும் திசைநோக்கி
எப்போதும் எனையே ஒடுக்கி நடக்கப் பழக்கலானேன்
ஊர்கூடி ஊர்செழிக்க வளர்க்கும் யாகத்தில்
இன்றும் தீக்குரமாகிறது எம்முடல்
வீச்சலைத் தாண்டிக் கடல்சேரும் ஆவலெழ
அலைமோதி உடல் தேய்ந்து கரைகடத்தலானேன்
மனமுழுதும் வானமாய் விரிந்து பறத்தலாசையெழ
நிலமுழுதும் சிறகு விழுங்கக் காத்திருக்கின்றன பாம்புகள்
தடைகளே எம்பாதைகளாக நீள்கின்றன
இருந்தும் ஒருபோதும் மண்டியிட்டு
மெசியா வருவானென வேண்டுபவனல்ல நான்
புத்தன் கையில் புதையுண்டு
நானே ஒளியாய்ப் பிரபஞ்சமெங்கும் மிளிர்வேன்